Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 6

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 6

அத்தியாயம் – 6. தோல்வி மேல் தோல்வி

 

     சோழகேரளன் அரண்மனைக்குப் பின்னால் அமைந்திருந்தது அந்த அழகிய பூங்கா. பல்வேறு நறுமண மலர்ச்செடிகளும், பழ மரங்களும், பூத்தும் காய்த்தும் குலுங்கின, இனிமையான தென்றல் இந்நறுமணங்களைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்குப் பரப்பின. பூங்காவின் மையத்திலே ஒரு செயற்கை வாவி. காவிரி நீர் கால்வாய் மூலம் பாய்ந்து அந்தக் குளத்தை நிரப்பியது. நாற்புறமும் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்ட அந்தக் குளத்தின் கரையிலே, ஒரு மகிழ மரத்தைச் சுற்றிய மேடையில் அமர்ந்திருந்தாள் மதுராந்தகி. அரண்மனையிலிருந்து இக்குளத்துக்கு வரும் வழி மீது அவள் கண்கள் பாய்ந்திருந்தன. ஆம், தன் அன்புக்குரிய அத்தான் தனது தாய்மார்களிடம் விடைபெற்றுக் கொண்ட பிறகு தன்னிடம் விடைபெற இங்குதான் வருவார் என்பதை அவள் அறிவாள். ஆனால் அவளுடைய விழிகள் அவ்வழியில் நிலைத்திருந்த போதிலும் மனம் அங்கில்லை. தறிகெட்ட கன்றாக அது எங்கோ சுற்றிக் கொண்டிருந்தது.

அவளுடைய ஆணையின் போக்கு இப்பொழுது மாறிவிட்டது. இனி குலோத்துங்கன் தனது வீரம் ஒன்றில்தான் அவளுடைய ஆணையை நிறைவேற்றி வைக்க வேண்டும். அத்தானின் வீரத்திறனில் அவளுக்கு ஐயம் சிறிதுமில்லை. ஆனால் அவன் இந்நாட்டின் மீது கொண்டுள்ள பக்தி? தன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட நாட்டின் மீது யாவரும் நன்றி கொள்ள வேண்டியதுதான். அந்த நன்றி பக்திப் பெருக்காக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் அது கண்மூடித்தனமான பக்தியாக இருக்கக் கூடாதல்லவா? துரதிர்ஷ்டவசமாக, குலோத்துங்கன் சோழநாட்டின் மீது கொண்டிருந்த பற்று அத்தகைய மூடப்பற்று என்றே மதுராந்தகி கருதினாள்.

அவள் நினைத்தாள்: ‘அரசிளங் குமரர்களும், குமரிகளும் செவிலித் தாயின் அரவணைப்பில்தான் வளருகின்றனர். பெற்ற மகவுக்கு ஒப்பாகத் தங்களை மார்மேலும் தோள் மேலும் சுமந்து, தாலாட்டிச் சீராட்டி வளர்க்கும் அந்த செவிலித் தாயிடம் கொண்ட பாசம், பெற்ற தாயிடம் செலுத்த வேண்டிய பாசத்தை மறக்கடிக்கலாமா? அத்தான் இந்த நாட்டின் மீது கொண்டுள்ள பற்று அப்படித்தான் இருக்கிறது. தாய்நாட்டில் தனக்கெனக் காத்திருக்கும் அரியணையைவிட இந்தச் சோணாட்டின் படைத் தலைவர் பதவி உயர்ந்தது என்ற அவருடைய கருத்து தர்க்க முறையில் போற்றப்பட வேண்டியதுதான்; ஆயின் நடைமுறையில் அது ஏற்றதல்லவே?’

‘நல்லவேளையாக அந்தப் பித்து அவரிடம் நிலைப்பட்டு விடாமல் செய்து விட்டது சூழ்நிலை. இப்பொழுது அவர் வேங்கிக்குச் சென்றுதான் ஆக வேண்டும். நோயால் நலிந்துள்ள தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் இப்பொழுது நமது ஆணை நிலைமையை வேறோரு விதத்தில் சிக்கலடையச் செய்துள்ளதே! அந்தத் திமிர் கொண்ட வானவியின் கொட்டத்தை அடக்கி, அவள் முகத்தில் கரியைப் பூச, இவர் வீரத்தால் அல்லவா இந்நாட்டை வெல்ல வேண்டும்? பாசத்தின் ஊற்றாக விளங்கும் நம் தந்தையாரிடமிருந்து நாட்டைப் பறிக்க வேண்டும் என்பதோ, அல்லது அவருக்குப் பின் அரசுரிமை பெற்றுள்ள அன்புருவான சிறிய தந்தையார் வீரராசேந்திரருக்கு அவ்வுரிமை இல்லாமற் செய்துவிட வேண்டுமென்பதோ நமது நோக்கமல்ல. ஒருநாள், ஒரே ஒருநாள், அறுபது நாழிகைப் பொழுது மட்டும் அப்பொறாமைக் காரியின் கண்முன் இச்சோழ நாட்டினரசியாக இருந்து காட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்; அது நமது ஆணை. அதற்கு இந்நாட்டின் மீது போர் தொடுக்க அவரைத் தயார் செய்ய வேண்டுமே; அது இயலுமா?’

‘இயலுமா என்ற சிந்தனைக்கு இடமில்லை. இயலத்தான் வேண்டும்; இயலச் செய்யத்தான் வேண்டும். இல்லவிட்டால், நான் எங்கு எத்தகைய பெருமை பெற்று வாழ்ந்தாலும், அது நிறைந்த வாழ்வாகாது; வெற்றி வாழ்வாகாது; வீர வாழ்வாகாது. அது கோழை வாழ்வகிவிடும். வானவியின் வாய்ச் சொல்லுக்கும், ஏளனத்துக்கும் அஞ்சி வாழும் அவல வாழ்வாகிவிடும்; அவளுடைய ஆணை முன் நிற்க முடியாமல் தோற்று ஓடி ஒளிந்து வாழும் இழிவு வாழ்வாகிவிடும்.’

‘ஆதலால் அத்தானை இப்பொழுதே போருக்குத் தயார் செய்யும்படி போதித்து அனுப்பியாக வேண்டும். அதற்கு அவர் எளிதில் இணங்கி வரமாட்டார் என்பது தெளிவு. ஆனால் இங்குதான் நமது பெண்மையின் சக்தியைப் பிரயோகிக்க வேண்டும்; நமது காதலின் வலிமையைப் பரிசோதிக்க வேண்டும். நாம் அவர் மீது கொண்டுள்ள காதல் எத்தனை உறுதியானதோ, அத்தனை உறுதியான காதலை அவர் நம்மீது கொண்டிருந்தால், அக்காதலின் சக்தி அவருடைய அசட்டுத்தனமான செவிலித் தாய்ப் பாசத்தை விரட்டி அடித்துவிடும். ஆம், இன்று நாம் நிகழ்த்தப் போவது ஒரு பெரும் காதல் பரீட்சை. ஏன்? எங்கள் வருங்கால வாழ்க்கைக்குரிய பரீட்சைகூட அதுவேதான்…!”

திரண்ட இரண்டு கரங்கள் தன் தோள்மீது சாய்ந்து கண்களை மூடவே, மதுராந்தகி துள்ளி எழுந்தாள். அவள் காத்திருந்த கட்டம் வந்து விட்டது. அக்கரங்களுக்குரியவன் அவளுடைய ஆசை அத்தான்தான்.

“அத்தான்!” அவள் குலோத்துங்கனின் கரங்களை மெதுவாக விலக்கியவாறு முகத்தைப் பின் சாய்த்து மோகனப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள். “மதுரா!” குலோத்துங்கனின் குரலில்தான் எத்தனை குழைவு! அவன் அவளை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.

கணநேரம் இருவரும் உலகையே மறந்த இன்பநிலையில் இருந்தனர். பின்னர் மதுராந்தகி அவனது அணைப்பிலிருந்து விடுபட்டு, “உட்காருங்கள் அத்தான்,” என்று அவன் கைகள் இரண்டையும் பற்றி மேடையில் அமர்த்தினாள். பின்னர் தானும் மேடைமீது அமர்ந்து அவனது பரந்த மார்பின் மீது உடலைச் சாய்த்துக் கொண்டாள். “புறப்பட்டு விட்டீர்களா?” அவள் குரலில் ஏக்கம் கசிந்தது.

“ஆம் கண்ணே; கடமை அழைக்கிறது. ஆனால்…?”

“ஆனால் என்ன?”

“முன்பெல்லாம் எத்தனையோ தடவைகள் வேங்கி சென்றேன்; திரும்பினேன். ஆனால் இத்தடவை திரும்ப மாட்டேன்.”

“ஆம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபின் அங்கிருந்து அசைய முடியாதுதான். ஆனால் நான்…?”

“நீயும் அங்கே வருவாய், மதுரா. தந்தையாரின் உடல் நிலையைப் பொருத்து நம் திருமணம் விரைவில் வேங்கியில் நிகழும். வேங்கி அரியணையில் நீ இன்றி நான் அமருவேனா?”

“என்னுடைய காதல் லட்சியத்தின் ஒரு பகுதி பூர்த்தியாயிற்று,” என்று தன் குறு குறுக்கும் விழிகளால் புன்னகை புரிந்தாள் மதுராந்தகி.

அவள் எதற்கு அடிப்படையிடுகிறாள் என்பதைக் குலோத்துங்கன் உணர்ந்து கொண்டான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல், அவளுடைய மறுமொழியால், வியப்படந்தவன் போல், “என்ன? ஒரு பகுதியா?” என்று வினவினான்.

“ஆமாம்!” என்றவாறு அவன் மார்பில் சாய்திருந்த அவள் எழுந்து நிமிர்ந்து அமர்ந்தாள். “உங்கள் மதுராந்தகிக்கு இருண்டு அரியணைகளில் அமரும் வாய்ப்பை நீங்கள் அளிக்கவேண்டும்; அளிக்கவும் போகிறீர்கள்.”

குலோத்துங்கன் உள்ளூர நகைத்தான். “நீ என்ன சொல்கிறாய் கண்ணே?”

“உங்களுக்குத் தெரியாதா? யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? அம்மாகூடக் கூறவில்லையா அதை?” அவள் வியப்பு மிகுந்த முகத்தால் அவனை விழுங்கினாள்.

“எதை?”

“நான் வானவியின் முன் இட்டிருக்கும் ஆணையைப்பற்றி?”

“ஓ! அதுவா? அதை நான் வெறும் விளையாட்டுப் பேச்சு என்றல்லவா கருதினேன்!”

“விளையாட்டுப் பேச்சல்ல, அத்தான், உண்மை.”

குலோத்துங்கன் தீவிரமானான். “உண்மையானால், அது வெறும் பிதற்றல் மதுரா; மனத்தால் நினைப்பதற்குக்கூட வெட்கப்பட வேண்டிய பிதற்றல்.”

“அத்தான்…!”

“பின் என்ன, கண்ணே? இந்தச் சோழ நாட்டின் உரிமையைப் பற்றி நினைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது…?”

“உரிமையோடுதான் ஒருவர் நாட்டுக்கு மற்றொருவர் அரசராகிறார்களோ?”

குலோத்துங்கன் சொல்லொணாத வியப்போடு அவளை ஏறிட்டு நோக்கினான். “நீ என்ன சொல்கிறாய், மதுராந்தகி? உன் அசட்டு ஆணைக்காக, என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட நாட்டின் மீது போர்தொடுக்கச் சொல்கிறாயா?”

“அது அரச தர்மம். வீரம் செறிந்த மன்னர்களுக்கு எடுத்துக்காட்டு. ஒரு மன்னர் தமது நாட்டை விஸ்தரிக்கப் பிற நாட்டின் மீது போர் தொடுப்பது புதிய செயல் ஒன்றும் இல்லையே?”

“ஆனால் சோழவளநாடு எனக்கு இதுநாள் வரைச் சோறிட்டு வந்த நாடாயிற்றே, மதுரா? உண்ட வீட்டிலேயே கன்னம் வைக்கச் சொல்கிறாயா?”

“சோறிட்ட நாட்டிடம் சொந்தம் கொண்டாடுவது அரசர்க்குப் புதிதல்ல அத்தான். உண்ட வீட்டில் உரிமை கொண்டாடுவதும் அவர்கள் உலகில் புதிதல்ல. சரித்திரத்தை நினைவு கூர்ந்து பாருங்கள். எத்தனை மன்னர்கள் ஒண்டிய இடத்திடம் உரிமை கொண்டுள்ளார்கள்? எத்தனை மன்னர்கள் புகலளித்த நாட்டினை வஞ்சகத்தால் பிடுங்கிக் கொண்டுள்ளார்கள்? அரசியல் வாதம் வேறு; உலகியல் வாதம் வேறு, அத்தான். நீங்கள் ஒரு நாட்டின் அரசராகப் போகிறீர்கள். ஆதலால் நீங்கள் அரசியல் வாதத்தைத்தான் பின் பற்ற வேண்டுமேயன்றி, உலகியல் வாதத்தை அல்ல. தவிர, நான் என்ன, வஞ்சத்தால் இந்நாட்டைப் பெறுங்கள் என்று போதிக்கிறேனா? வீரத்தால் வெல்லுங்கள் என்று தானே வேண்டுகிறேன்?”

“அந்தோ மதுரா, நீ ஏன் இப்படிச் சிந்தனையின்றி அரற்றுகிறாய்? அரசியல் வாதத்தைப் பின்பற்ற வேண்டிய இடத்தில் பின்பற்ற வேண்டியதுதான். ஆனால் இதுகாறும் பல போர்கள் புரிந்து மேலைச்சளுக்கர்களிடமிருந்து எங்கள் நாட்டைப் பாதுகாத்துத் தந்து, என்னை அரசுக்கட்டில் ஏற்றி, அழகுருவான உன்னையும் எனக்கு அளிக்கப் போகும் உன் தந்தையிடமிருந்தும், அவருடைய சந்ததியாரிடமிருந்தும் நாட்டைப் பிடுங்கிக் கொள் என்று போதிக்கிறாயே, இது எந்த வாதத்துக்கும் பொருந்தாததாக இருக்கிறதே, மதுராந்தகி?”

மதுராந்தகி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நியாய வாதத்தின் மூலம் தன் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பது இப்பொழுது அவளுக்கு விளங்கிவிட்டது. முரட்டு வாதந்தான் இனி அவளைக் காரியசித்தி பெறச் செய்ய வேண்டும். முகத்திலே சொல்லில் அடங்காத வேதனையுடன் தன்னையே கண்கொட்டாது நோக்கிக் கொண்டிருந்த குலோத்துங்கனைத் தலைநிமிர்ந்து நோக்கி அவள் கேட்டாள்: “அத்தான், நீங்கள் என்னை உண்மையாவே காதலிக்கிறீர்களா? நான் உங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?”

 “இது என்ன கேள்வி, கண்ணே? ஏன் உனக்கு இந்தத் திடீர்ச் சந்தேகம்? என் உயிரே நீதான் என்பது உனக்கு தெரியாதா?” என்று வியப்புடன் கூறினான் குலோத்துங்கன்.

“அப்படியானால், என் ஆணையை நிறைவேற்றி வைப்பதாக நீங்கள் வாக்களிக்க வேண்டும். வேங்கி சென்று அரசுரிமையை ஏற்றதும் சோழநாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடி, இன்று என் தந்தை அமர்ந்து ஆட்சி செலுத்தி வரும் ‘இராசேந்திர சோழ மாவலி வாணராயன்’ அரியணையில் என்னுடன் ஒருநாளேனும் அமர்ந்து செங்கோல் ஏந்துவதாக நம் காதல் மீது ஆணையாக உறுதிகூற வேண்டும்!”

“இல்லாவிட்டால்…?” குலோத்துங்கன் உண்மையான தீவிரத்துடன் கேட்டான்.

“நம் காதல் நிறைவேறாக் காதலாகத்தான் முடியும். ஆம், என்று நான் அந்த ஆணையை இட்டேனோ, அன்றே என் காதலை அதனுடன் பிணைத்து விட்டேன். இனி அவை இரண்டையும் பிரிக்க முடியாது.”

“அப்படியானால் இந்தப் பிறவியில் நாம் ஒன்று சேரக் கொடுத்து வைக்கவில்லை, மதுராந்தகி. நான் வருகிறேன்.”

குலோத்துங்கன் சட்டென்று எழுந்தான். அவன் எழுவதற்கும், அரண்மனைப் பணிப்பெண் ஒருத்தி அங்கே விரைந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

“இளவரசே, மன்னர்பிரான் தங்களை உடனே அழைத்துவரச் சொன்னார்கள்,” என்றாள் அப்பணிப்பெண்.

“ஆம், நான் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. விடைபெற்றுக் கொள்கிறேன், மதுராந்தகி. சிந்தித்துப் பார். ஒருகால் உன் மனம் மாறினால், தந்தையாரிடம் தெரிவித்து எனக்கு ஓலை அனுப்பச் செய். என் அன்பும் காதலும் என்றும் உன்பால் இருக்கும்!” என்றான் குலோத்துங்கன்.

மதுராந்தகியும் எழுந்து நின்றாள், அவள் உதடுகள் துடித்தன. கண்களிலே கண்ணீர் கசியத் தொடங்கியது. ஆயினும் அவளது உள்ளத்தே உறைந்திருந்த உறுதி உருகவில்லை. “அதற்குத் தேவை ஏற்படாது. சிந்திக்க வேண்டியவர் நீங்கள்தாம். உங்கள் உள்ளம் மாறினால், என் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் உறுதியுடன் வேங்கி வீரன் ஒருவன் உங்கள் ஓலையைத் தாங்கி இங்கு வரட்டும்!” என்று திடமாக உரைத்தாள் அவள்.

குலோத்துங்கன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. பணிப்பெண் பின் தொடர அவன் சோழகேரளன் அரண்மனையை நோக்கி நடந்தான். மதுராந்தகியும் அதன் பிறகு அங்கு நிற்கவில்லை. அவளும் அவர்களைப் பின் பற்றினாள்.

சோழ கேரளன் அரண்மனையின் அரசாங்க மண்டபத்திலே இராசேந்திர தேவரும், புதிய பட்டத்திளவரசர் வீரராசேந்திரரும், மற்றும் படைத்தலைவர்களும் அரசியல் அதிகாரிகளும் கூடியிருந்தனர். எல்லோருடைய முகங்களிலும் ஒருபுறம் துயரமும், மறுபுறம் கொதிப்பும் காணப்பட்டன.

குலோத்துங்கன் அங்கு வந்ததும், சோழத்தேவர் அவனை அருகில் அழைத்து, “அபயா, உன் வேங்கிப் பயணத்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. இதோ வந்துள்ள உங்கள் நாட்டுத் தூதன் திடுக்கிடும் இரண்டு செய்திகளைக் கொணர்ந்துள்ளான். உன் தந்தையார் நான்கு நாட்களுக்கு முன் நோய்க்கு இரையாகி விட்டாராம். உடனேயே உன் சிற்றப்பன் விசயாதித்தன் அரசைக் கைப்பற்றிக் கொண்டு விட்டானாம். எனவே இந்நிலையில் நீ இங்கே வருவது உன் உயிருக்கே அபாயமாகுமென்று சகோதரி அம்மங்கை ஓலை அனுப்பியுள்ளாள்!” என்றார்.

தந்தையின் மரணச் செய்தி குலோத்துங்கனை ஓரளவு தாக்கிய தெனினும், நாட்டைத் தன் சிறிய தந்தை கைப்பற்றிக் கொண்ட செய்தியால் அவன் சிறிதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிக்கப் பட்டவள் அங்கே வேறொருத்தி இருந்தாள். ஆம், மதுராந்தகிதான்! பாவம். அவளுக்கு இது தோல்வி மேல் தோல்வியாக அல்லவா போய்விட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 4மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 4

அத்தியாயம் – 4. காதல் ஓலை        மேற்சொன்ன நிகழ்ச்சிகள் அன்று மாலையில் நடந்தன. அதாவது, மதுராந்தகி தன் ஆணையை நிறைவேற்றுவதற்கான செயல் முறைகளில் அன்று மாலையில்தான் முதன் முதலாக ஈடுபட்டாள். ஆனால் மதுராந்தகியிலும் ஒரு படி மேலே போய் இரண்டு

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 2மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 2

அத்தியாயம் – 2. இரண்டு சபதங்கள்        இவ்விதமாக நடந்து கொண்டிருந்த கோலாகல வரவேற்பு நிகழ்ச்சிகளை அரசகுலப் பெண்டிர் அனைவரும் அரண்மனையின் கீழ்த் தளத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க, கன்னிப் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கடைசி அம்சம். மன்னர் இராசேந்திர தேவர் மட்டும்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10

அத்தியாயம் – 10. ‘காலம் வரக் காத்திருப்பேன்!’        சோழதேவர் வேங்கி நாட்டிலிருந்து இரண்டாவதாக வந்த ஓலையைப் படித்துவிட்டு ஏதோ முணு முணுத்ததும், அருகில் அமர்ந்திருந்த இளையதேவர் வீரராசேந்திரர் எழுந்து அவரிடம் சென்று, “என்ன அண்ணா?” என்று வினவினார். “சூழ்ச்சி! குந்தளத்தானின்