Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 6

ஊடலுவகை – 06

 

உமாவதியும், ரிதன்யாவும் இரண்டு வாரங்கள் கழித்து, வேலையில் சேர்ந்தனர். அந்த இரண்டு வாரத்திற்குள், யுகன் செய்த அலப்பறைகள் சற்று அதிகம் தான்.

 

“மச்சான்! நீ ஹெட்ச்.ஆர் டிபார்ட்மென்ட்ல ஒருத்தன் கிட்ட பேசுவியே, அவன்கிட்ட பிரெஷர்ஸ் பேட்ச் எப்போ ஜாயின் பண்ணறாங்கன்னு கேளு” என்று சிவாவிடம் கேட்டு அவனுக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான்.

 

அவர்களுடைய மேனேஜரிடம் சென்று, “ப்ராஜெக்ட் டூல்ஸ் ரிலவண்டா பிரெஷர்ஸ்க்கு செஷன் எடுப்போம் தானே, அதை இந்த முறை நம்ம டீம்ல எடுத்துக்கலாம். அண்ட் அதை நானே எடுத்துக்கிறேன்” என்று கூறி அவனுடைய மேனேஜருக்கும் மயக்கம் வரவழைத்தான்.

 

பின்னே, இதே விஷயத்தை அவர் பலமுறை கேட்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் வேலை அதிகம் என்று சொல்லி மறுத்து விடுபவன், இந்த முறை அவனாக வந்து கேட்டால்…? அதுவும் அவர்கள் கம்பெனியில் பிரெஷர்ஸ் டிரைனிங் மூன்று மாதங்கள் நடைபெறும். அதில் கடைசி ஒரு வாரம் நடக்கும் டிரைனிங் இது. இன்னும் பிரெஷர்ஸ் பேட்ச் ஜாயின் செய்யவே இல்லை, யுகனோ மூன்று மாதத்திற்கு முன்பே வந்து ‘நான் எடுக்கிறேன்’ என்று முன்பதிவு செய்தால்? அவரும் என்னவென்று நினைக்க முடியும்!

 

இது போதாதென்று ராஜாவிடம் அவனாகவே, “நீ எதும் கோச்சுக்காத மச்சான். உன்னையே வெத்து வேட்டுன்னு சொல்லிட்டா… அவளை நான் கவனிச்சுக்கிறேன். நீ இதெல்லாம் மனசுல வெச்சுக்காதா!” என சமாதானம் செய்ய, ராஜா பதறிப்போய் சுற்றிலும் நோட்டம் விட்டுவிட்டு, யாரும் தங்களை கவனிக்கவில்லை என அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

 

“டேய்! அந்த பொண்ணே ஒரு தடவை தான் டா அப்படி சொன்னா… நீ அதை பலமுறை சொல்லிக்காட்டிட்ட டா. அதோட உன்னை அழகுன்னு சொல்லறவங்க தானே டா வெத்து வேட்டு. நாங்க தான் இதுவரை மனசளவுல கூட அப்படி நினைச்சு பாத்தது இல்லையே!” என ராஜா புலம்ப, சிவாவிற்கு ராஜா கூறுவதன் உண்மை புரிந்து மனம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவன் மனமும் யுகன் அழகன் என்றவாறு எண்ணியதில்லையே!

 

ஆனால், சிவாவோ, “டேய்! டேய்! இப்போ யுகன் உன்னை தானே சமாதானம் பண்ணுனான். அப்போ நீ தானே வெத்து வேட்டு… நீ ஏன் டா ‘நாங்க’ன்னு சொல்லி என்னையும் கூட்டு சேக்கிற” என ராஜாவை சாடினான். அதற்கு ராஜாவோ, “ஏன்? அந்த பொண்ணு பேச வரும் போது நீயும் கூட தானே இருந்த, உன்னையும் பாத்துட்டு தானே அப்படி சொன்னா?” என்றான் சிடுசிடுவென.

 

அவர்கள் இருவருக்குள்ளும் கழகத்தை தொடங்கியவன் அவன் வேலையை பார்க்க சென்று விட்டான். அதை அறியாத இவர்களோ வெகு நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

 

இரண்டு வாரங்களாக ரிதன்யாவை எதிர்ப்பார்த்து, அவளை ஒரு வழி ஆக்கி விட வேண்டும் என்று காத்து இருந்தவன், அவள் சேர்ந்ததும் அதை செயல்படுத்த முடியவில்லை. அவளை எப்படி அணுக என தெரியவில்லை என்பதே நிஜம்.

 

யுகன் பொதுவாக யார் விருப்பத்திற்கும் ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டான். அவன் வாழ்வு! அவன் விருப்பம்! என்று வாழ்பவன். அதோடு அவனிடம் யாரும் கேள்வி கேட்கும் நிலைக்கு சென்றதில்லை. அவனை யாரும் கேள்வி கேட்பதும் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படிப்பட்ட ஒருவனை ஒரு சிறு பெண் நிற்க வைத்து கேள்வி கேட்பதா? அவன் எப்படி திருமணத்திற்கு பெண் தேட வேண்டும் என்று அவள் முடிவெடுப்பதா? அதெப்படி அவனால் சும்மா விட முடியும்? அவளை உண்டு, இல்லை என்று ஆக்கி விட வேண்டும் என்ற வேகம் அவனுக்குள். என்னதான் அவன் வீட்டினர் மீது குற்றம் இருந்தாலும், அந்த குற்றத்தில் இம்மி அளவு பங்கு கூட வகிக்காத அவனிடம் வந்து முழு குற்றமும் அவனே செய்தது போல பொரிந்து தள்ளிவிட்டு சென்று விட்டாளே! அவளை எப்படி சும்மா விடுவது?

 

யுகனின் மனம் அவள் மீது கோபமாக மட்டும் இல்லாமல் அவள் செய்கைகளை ரசிக்க வேறு செய்தது. அதை அவனே அறிந்திருக்கிறானோ? இல்லை அறிந்தும் ஒப்புக்கொள்ள மறுக்கிறானோ? என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

 

அவளை காண வேண்டும், அவளிடம் பேச வேண்டும் என்று யுகன் நினைத்தால், தடுப்பவர்கள் யார்? ஆனால், அவளைக் காணும் சூழல் இயல்பாகவே அமையவில்லை. அதை அமைத்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை. ஆனாலும் எதிர்பாராத விதமாக சந்தித்தால், அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்க மாட்டான். கூர் பார்வையை அவள் மீது செலுத்த, அவளுக்கு உள்ளுணர்வு உணர்ந்த்திவிடும் போல, முறைப்புடனேயே இவனைப் பார்த்து இதழ் சுளிப்பாள். அந்த இதழ் சுளிப்பிற்கு தானே அவன் காத்திருப்பது! மனதிற்குள் வெற்றி புன்னகை பூத்துவிடும். ஆனாலும், மனம் வெள்ளை துப்பட்டாவின் பின்புறம் சுளிக்கும் இதழ்களுக்கு ஏங்கத் தான் செய்தது. இந்த எண்ணம் எழும் போதெல்லாம் தலையை உலுக்கி, இடது கரங்களால் பின்னந்தலையை கோதி சமன் செய்ய முயற்சிப்பான். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த காட்சி மனக்கண்ணில் உதித்து, அவன் ஏக்கத்தை அதிகரித்து அவனை சோதித்து விடும்.

 

ஏனோ சில விஷயங்களை ஆராய, மனம் விளையாது. பூசி, மொழுகி தப்பர்த்தம் கண்டுபிடித்து அதையே உண்மை என நம்பி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும். யுகனின் மனநிலையும் அதுவே! அவளை எண்ணுகையில் மனதிற்குள் தோன்றும் உவகை ஊற்றை கவனியாதவன் போல புறம்தள்ளி, அவள் மேல் கொண்ட ஊடலை மட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டான்.

 

‘உண்மையிலேயே அவ மேல கோபமா இருக்கியா?’ என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப, ‘பின்னே?’ என்று பதில் கேள்வி கேட்பான்.

 

‘நம்பிட்டேன்… நம்பிட்டேன்…’ என தன் அவநம்பிக்கையை கேலியாக உணர்த்தினால், அந்த ரோசக்காரனோ, ‘அவளை எங்க, எப்போ, எப்படி கவனிக்கணும்ன்னு எனக்கு தெரியும். நீ உன் வேலையை பாரு!’ என விரைப்பாய் பதில் கொடுப்பான்.

 

யுகன் பதில் கொடுக்கிறானோ இல்லையோ, ரிதுவை பதில் கொடுக்க விடாமல் தடுப்பதே உமாவிற்கு பெரிய வேலையாய் இருந்தது.

 

“ஏய்! திட்டனும்ன்னு ஆசைப்பட்ட திட்டிட்ட. மறுபடியும் ஏன்டி முறைச்சுக்கிட்டு திரியற?” என பாவமாய் உமா கேட்டால்,

 

“போடி என்னத்த திட்டினேனோ, அன்னைக்கு அவன்கிட்ட…” என்னும் போது உமா முறைக்கவும், “ஹிஹி… அவங்க…! அவங்க…! போதுமா?!?! உமா இருந்தாலும் நீ ரொம்ப சின்சியர் டி…” என்று அசடு வழிந்து விட்டு, “அன்னைக்கு அவங்களை திட்டும்போது ஒரு ரியேக்சனும் இல்லை. அப்படியே உத்து உத்து பாத்துட்டே இருந்தாங்க. இன்னும் கொஞ்சம் போர்ஸா திட்டி இருக்கணும் போலடி” என்றாள் மெய்யான வருத்தத்துடன். உண்மையிலேயே ரிதுவிற்கு அந்த கவலை அரித்துக் கொண்டே இருந்தது. பொதுவாக நாம் ஒருவரை திட்டுவது அல்லது கோபிப்பது எதற்காக? அவர்களை வருந்த செய்ய வேண்டும் என்று தானே! குறைந்தபட்சம் ஒரு முக சுளிப்பையேனும் மனம் எதிர்பார்க்குமே. அதை எல்லாம் விடுத்து, திட்ட வந்தவளை ஒய்யாரமாய் அளவிட்டால்? அவனை திட்டியதில் அவள் திருப்தி படவில்லை என்பதோடு, அவள் மனம் முன்னிலும் அதிகமாய் சோர்ந்திருக்க அந்த நிலையை அறவே வெறுத்தாள். அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதிற்குள் கறுவினாள்.

 

‘சரியாய் பேரம் பேசாமல் பொருளை வாங்கி வந்து விட்டோமோ? இன்னும் கொஞ்சம் குறைச்சு பேசி இருக்கணுமோ’ என புலம்பி தவிக்கும் தாய்மார்களைப் போன்று புலம்பி தள்ளும் தோழியின் பாவனையில் உமாவிற்கு சிரிப்பு வர… “ஏன்டி உப்புமா இப்படி சும்மா சும்மா சிரிக்கிற?” என்று கடுப்பானாள் ரிதன்யா.

 

“இல்லை. நீ ஒரு தடவை திட்டுனதுக்கே, அந்த அண்ணன் எப்படி பாக்கிறாங்க? நானும் நோட் பண்ணிட்டேன்டி அவரு பார்வை எவ்வளவு ஷார்ப். எத்தனை பேர் இருந்தாலும் உடனே உன்னை கண்டுபிடுச்சுடரார். எப்படி தான் முடிதோ?

 

நீ பண்ணுன அட்டகாசத்துக்கு வேற யாராவதா இருந்தா, உன்னை எப்படி டிரீட் பண்ணி இருப்பாங்களோ! இவரு பாத்தாலே, கோபக்காரர்ன்னு தெரியுது. உன் விஷயத்துல என்ன பண்ணுவார்ன்னே தெரிலை! ஆனா, இதுவரை எதும் பண்ணாம இருக்கிறத பாத்தா நம்பிக்கை வருது. பட் அவரு முறைச்சு பாக்கிறதா பாத்தா கொஞ்சம் கலவரமா தான்டி இருக்கு” என்று உமா கவலையாக சொல்ல, ரிதுவோ ‘எதுவா இருந்தாலும் சாமளிப்பேன்’ என்ற பாவனையில் அமர்ந்திருந்தாள்.

 

கூடவே முகமும் தானாக சிவந்து விட்டது. உமா கூறிய, ‘எத்தனை பேர் இருந்தாலும் உடனே உன்னை கண்டுபிடுச்சுடரார்…!’ என்ற சொற்கள் அவள் மனதில் ரீங்காரமிட்டு சிவக்க வைக்க, ‘உன்னை வேண்டாம்ன்னு சொன்னவங்களை பத்தி ஏன் யோசிக்கிற?’ என புத்தி அதட்ட, முகமோ சிவப்பு வண்ணத்தில் இருந்து மாற மறுத்தது.

 

அவர்களோடே வேலையில் இணைந்த மேலும் சிலரும் அங்கிருக்க, அனைவரும் பல்வேறு மாநிலத்தவர்கள் என்பதால் பொதுவாக ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ரிதன்யாவின் முகம் சிவந்ததையும், இதழ்களில் மென்சிரிப்பு தவழ, பொன் தாரகையாய் தலை சரித்து அமர்ந்திருந்ததையும் பார்த்த ஒருவன், ‘ஹே ரிதன்யா! வாட் ஹேப்பண்ட்?” என கதை கேட்கும் ஆர்வத்தோடு கேட்க, அவளை கவனிக்காதவர்களும் அவளின் நிலையை கவனித்து விட்டு அதே கேள்வியால் அவளை திணறடிக்கத் தொடங்கி விட்டனர்.

 

சற்று தொலைவில் அவளை முறைத்துக் கொண்டிருந்த யுகனின் விழிகளிலும் அதே கேள்வி. ‘இந்த சில்வண்டு ஏன் இப்ப வெக்கப்படுது?’ என சுவாரஸ்யமாய் அவளை அளவிட, அவளோ தோழர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடினாள். இல்லையா பின்னே? அவள் தான் பொய்யுரைக்க மாட்டாளே! ‘ஒன்றும் இல்லை’ என்று எப்படி சொல்வாள்? அனைவரின் கேள்விக்கும் பதிலை மறுக்க அவள் தவிக்க, அறியாத இடத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் முகமாய் அவளின் செய்கை யுகனை கவர்ந்தது.

 

அவளை அறிந்து கொண்டவர்கள் அங்கே இருவர் மட்டுமே! ஒன்று உமா, மற்றொன்று யுகன். அவள் பொய்யுரைக்க மாட்டாள் என்று தெளிவுற தெரிந்தவர்கள் அவர்கள் தானே! இப்பொழுதைய அவளுடைய தடுமாற்றமும், இந்த கேள்வியை பதிலே கூறாமல் எப்படி தடுப்பது என்பது தான் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள் இருவரும். ‘அவள் வெளியில் சொல்ல முடியாதபடி எதை எண்ணி முகம் சிவந்தாள்?’ என்ற கேள்வியும், ‘இப்பொழுது நிலைமையை எப்படி சமாளிக்க போகிறாள்?’ என்ற சுவாரஸ்யமும் கூட, அவளிலேயே பார்வையை நிலைக்க விட்டான் யுகேந்திரன்.

 

ஆனால், உமாவோ தோழியை இக்கட்டில் இருந்து காக்கும் பொருட்டு வழக்கம் போல அவளுக்கும் சேர்த்து இவளே பொய் கூறினாள். “நத்திங் கைஸ். ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங் ஹெர்!” என நிலைமையை சமாளிக்க, அதை நம்பினார்களோ இல்லையோ, பிரேக் நேரம் முடிவடைந்ததால் ட்ரைனிங் ரூம் நோக்கி அனைவரும் நகர்ந்தனர். என்ன முயன்றும் தடுக்க மாட்டாமல் ரிதன்யாவின் பார்வை யுகனின் புறம் திரும்ப, அவனது கண்ணோர சிரிப்பும், சுவாரஸ்யமான பார்வையும் அவளுக்குள் எதையோ தடம்புரள வைத்தது. திரும்பிப்பார்த்த தன் மடத்தனத்தை தானே நொந்தபடி மீட்டிங் அறைக்குள் சென்றாள்.

 

என்ன பட்டும் திருந்த மறுக்கும் மனதை எண்ணி அவளுக்கு கோபமாய் வந்தது. தன்னை வேண்டாம் என்று சொன்னவனிடம் என்ன ஈடுபாடு? அப்படி என்ன அவன் உசத்தி? என்று கோபம் கோபமாய் வந்தது. அவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம். அவனை அவ்வப்பொழுது, சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளை அறவே வெறுத்தாள். ஆனால், அவன் கண்களில் தென்படாத நாட்களில் அவன் அருகில் எங்கேனும் இருப்பானோ என அலைபாயும் மனதிற்கு ஏற்ற கடிவாளத்தை அவள் எங்கே தேடுவாள்? பாவம்!!!

 

அவன்பால் செல்லும் மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அவன் மீதே கோபம் எழ, யுகனும் அதே போன்ற ஒரு மனநிலையில் அவள் மீது கோபமாக தான் இருந்தான். அவன் கோபத்தை காட்ட, அவன் பிரெஷர்களுக்கு எடுக்க விருக்கும் செஷன் நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அவன் காத்திருக்க, நல்ல சந்தர்ப்பத்திற்காக ரிதன்யாவும் காத்திருந்தாள். அவள் எதிர்பார்த்த நல்ல சந்தர்ப்பம் விரைவிலேயே அவளுக்கு அமைந்தது. ஆனால், லேசாக புகைந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றி நன்கு பற்றி வைக்கும் வாய்ப்பாய் அது அமைந்துவிட்டது.

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: