Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 09

அத்தியாயம் – 09

 

மாலை ஆறு மணி. இன்டர்போன் அழைக்கும் சத்தம் கேட்டது. தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சந்திராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது. ஷானவி இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து சந்திரா எந்த வேலையுமே செய்தது இல்லை. இப்போது இவள் காலை உடைத்துக் கொண்டு வந்து படுத்திருப்பதில் இவரல்லவா எல்லா வேலைகளும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் இப்போது நாகினி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தடங்கலில் எரிச்சல் பொங்க தனது பருத்த உடம்பை ஒருவாறு அசைத்தவாறு எழுந்து சென்று இன்டர்போனை எடுத்தார்.

 

“செக் கீ?” (யார் இது)

 

“நாங்க ஷானவியின் ப்ரெண்ட்ஸ். ஷானுவைப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

“நாயை வெளில விட்டால் ப்ரெண்ட்ஸ் வேற பிடிச்சு வைச்சிருக்கிறாவோ… எல்லாம் இந்த மனுசனைச் சொல்லோணும். தரித்திரத்தை ஊரில இருந்து இங்க கூப்பிட்டு வைச்சிருக்கிறார். இவளும் தன்ர குடும்பத்தோட மேல போய்ச் சேர்ந்து இருக்கலாம். வயசுப் பொடியன்கள் இருக்கிற வீட்டில யாராவது இப்படி வயசுப் பெட்டையை கொண்டு வந்து வைச்சிருப்பாங்களா? எல்லாம் என்ர மனுஷன் பாக்கிற விசர்க்கூத்துகள். என்ர தலைவிதி.”

 

வந்தவர்கள் மூன்று மாடி ஏறி வருவதற்குள் சந்திரா ஒரு சகஸ்ரநாம அர்ச்சனையே மனதுக்குள் நடத்தி முடித்திருந்தார். ஷானவியின் நண்பர்கள் யார் என்று பார்ப்பதிலும் ஆர்வம் மேலிட வாயிலிலேயே காத்திருந்தவர் அழைப்புமணி அழைக்கவும், ஆவலுடன் கதவைத் திறந்தவர் பேச்சு மூச்சற்று அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.

 

காரணம். சந்திரா அங்கே சத்தியமாக அவ்வளவு அழகான ஒரு பிரெஞ்சுக்காரனை எதிர் பார்க்கவில்லை. இன்டர்போனில் அனுஷராதான் பேசியிருந்ததால் யாரோ பெண்கள் தான் வருகிறார்கள் என்று எண்ணியிருந்தவருக்கு அடுத்த அதிர்ச்சியாய் ஆதூரின் பின் நின்றிருந்த லீ காட்சி கொடுத்தான். பிங்க் நிற ஜக்கெட்டும் தோள் வரை புரண்ட கூந்தலுமாய் நின்ற அவன் ஆணா? பெண்ணா? என்ற குழப்பம் அவரை வாட்டி எடுக்க, அப்போதுதான் மூச்சு வாங்க படியேறி வந்து நின்றாள் பார்பி டோல் போலிருந்த அனுஷரா.

 

“மோசுவா (மாலை வணக்கம்) ஆன்ட்டி…! ஷானவியைப் பார்க்கலாமா?”

 

தன் அதிர்ச்சிகளிலிருந்து தன்னை சமாளித்துக் கொண்டவர்,

 

“வியாங்லா…” (வாங்கோ) என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார். ஷானவியின் உடல்நிலை பற்றி ஆத்விக் தந்தைக்கு அறிவித்திருக்கவே திருநாவுக்கரசுவும் நேரத்தோடு வீடு வந்திருந்தார். தனது அறையில் ஓய்வாய் படுத்திருந்தவர் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்து வந்தவர்களை வரவேற்றார்.

 

சந்திராவுக்கு சில வார்த்தைகள் மட்டுமே பிரெஞ்சில் தெரியும். அதனால் வந்தவர்களோடு உரையாடவும் ஆள் தேவையே. அதனால் அவர் கணவரின் பிரசன்னத்தை ஏற்றுக் கொண்டார்.

 

“நான் ஆதூர். ஷானவியின் பிரெஞ்ச் புரபஷர். இது லீ… இது அனு… ஷானவியோடு கூடப் படிக்கிறவங்க.”

 

ஆதூர் இலகுவாய் அறிமுகத்தை முடிக்கவும் திருநாவுக்கரசுவும் தன்னையும் மனைவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

 

சந்திரா பற்றி ஷானவி மூலம் நன்கு அறிந்து இருந்த அனுஷரா,

 

“ஷானு உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறா ஆன்ட்டி.”

 

என்றதை திருநாவுக்கரசு சந்திராவுக்கு மொழி பெயர்க்க சந்திராவுக்கு, ஷானவி என்ன சொன்னாளோ என்று அறியும் ஆவல். கெட்ட விதமாக சொல்லி இருந்தால் ஷானவியை வீட்டை விட்டுத் துரத்த நல்ல சந்தர்ப்பம் தானே. அவர் என்ன என்பது போல் கேள்வியாய்ப் பார்க்கவும் அவர் குணம் நன்கு அறிந்த அனுஷராவும்,

 

“நீங்க இல்லை என்றால் தான் இப்ப உயிரோடயே இருக்க முடியாது  என்று சொன்னா” என்று சந்திராவின் திட்டத்தை முறியடித்தாள்.

 

“அப்படியெல்லாம் இல்லை… அநாதையாக நின்றாள். பொம்பிளைப் பிள்ளை வேற. அதுதான் நாங்கள் கூப்பிட்டு வைச்சுப் பார்க்கிறோம்…”

 

திருநாவுக்கரசு மொழி பெயர்க்கவும், லீயின் இதயத்தில் சுளீர் என ஒரு வலி. அதுவரைக்கும் அவனுக்கு ஷானவி ஒரு அனாதை என்பது தெரியாது. அவள் பெற்றோர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளித்தது.

 

திருநாவுக்கரசு பொதுவான விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, சந்திரா கேக்கும் குக்கிஸ்சும் கபேயும் கொண்டு வந்து விருந்தினர்களுக்குக் கொடுத்து விட்டு ஷானவியைச் சென்று எழுப்பினார்.

 

மருந்துகளின் தாக்கத்தினால் அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவள் ஆழ்மனதோ அங்கே நல்லூர்க் கந்தனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தது.

 

“ஏன் முருகா! என்னை இப்படி சோதிக்கிறாய்? அம்மா, அப்பா, தம்பியோடயே என்னையும் சாகடிச்சிருக்கலாமே… உனக்கு என்னை விட அவையைத்தான் கூடப் பிடிக்கும் போல… அதுதான் என்னை இங்க இப்படி கஸ்டப்பட விட்டிட்டு அவைய மட்டும் உன்னட்டக் கூப்பிட்டிட்டாய். சிலநேரத்தில பேசாமல் நானும் உன்னட்ட வந்திடவோ என்று யோசிக்கிறேன். ஆனால் சூசையிட் பண்ணினால் நரகத்துக்குத் தானே போவாங்களாம். அதுதான் அந்த ஐடியாவைக் கைய விட்டிட்டன்.

 

இன்றைக்கு எதுக்கு என்னை விழுத்தினாய்? இப்படி காலை வேற உடைச்சு வைக்கணுமா? ரொம்ப வலிக்குது கந்தா… கெந்திக் கொண்டே வேலை செய்ய ரொம்பக் கஸ்டமாக இருக்கு. ஆனால் வேலை செய்யல என்றால் மாமி ஏதாவது சொல்லித் திட்டிட்டு இருப்பா. அதுக்கு இந்த உடம்பு வலி பரவாயில்லை.

 

பாவம் லீ… இன்றைக்குத் தேவையில்லாமல் அவனைப் போட்டுக் காய்ஞ்சிட்டன். என்னை எவ்வளவு அன்பாக பார்த்துப் பார்த்து கவனிச்சான். என்ர முகத்தைப் பார்த்தே எனக்கு வீட்ட போக விருப்பமில்லை என்று புரிந்து கொண்டானே. நான் மாமி என்ன சொல்லப் போறாவோ என்ற கடுப்பில அவனோட கத்திட்டன். பாவம். எதுவுமே சொல்லலை. அவனும் ஏதோ கண் கலங்கின போல இருந்துச்சு.

 

ஆனால் பரவாயில்லை. ஒல்லிப்பிச்சான் என்று நினைச்சன். என்னை சிம்பிளாக மூன்று மாடி தூக்கிக் கொண்டு வந்திட்டானே. மூஞ்சூறு கொஞ்சம் நல்லவன் தான் போல. ஆஸ்பத்திரிலயும் பார்த்து பார்த்து கவனிச்சானே. அப்பா இருந்திருந்தா என்னை இப்படித்தானே பார்த்திருப்பார் என்ன கந்தா…? அம்மா இருந்திருந்தால் என்னை அசைய விடாமல் பார்த்திருப்பா என்ன? நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை. நான் பேசாமல் செத்துப் போயிடவா கந்தா?”

 

தேற்றுவாரற்ற சிறு குழந்தையாய் ஆழ் மனதுக்குள் புலம்பியபடி உறங்கிக் கொண்டிருந்தவளை உலுக்கி எழுப்பினார் சந்திரா.

 

“ஷானவி…! ஷானவி…! எழும்பு… உன் ப்ரெண்ட்ஸ் வந்திருக்கினம்…”

 

சந்திரா உலுக்கி எழுப்பியதில் துடித்துப் பதைத்து எழுந்தாள் ஷானவி. அவள் எழுந்ததும் சந்திரா அங்கிருந்து அகன்றார். சிறிது நேரம் கட்டிலில் அப்படியே உட்கார்ந்திருந்து தன்னைச் சமனிலைப் படுத்திக் கொண்டாள். குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவித் துடைத்தவள், ஊன்று கோல் உதவியுடன் வரவேற்பறைக்குச் சென்றாள்.

 

இவளைக் கண்டதுமே “ஷானு” என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் அனுஷரா. தன்னில் அன்பு செலுத்த யாருமில்லை என்ற உணர்வில் இவ்வளவு நேரமும் மருகிக் கொண்டிருந்தவளுக்கு இந்த இரண்டு மாதப் பழக்கத்திலேயே தன்னைப் பார்க்க வீடு தேடி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

 

கலைந்த கேசமும் சிவந்திருந்த விழிகளுமாய், அவளின் வழக்கமான குறும்புத்தனமோ உற்சாகமோ கொஞ்சமும் இல்லாமல் மாறாக சோகச் சித்திரமாய் வந்து நின்றவளைப் பார்த்து  ஆதூரும் கண் கலங்கினான். லீயோ அவள் கோலம் தந்த செய்தியில் அவளை தன் கண்ணின் மணி போலக் காக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

 

அனுஷராவும் ஆதூரும் ஷானவியை அணைத்தவாறு அழைத்து வந்து ஒரு ஸோபாவில் உட்கார வைத்து அவளின் இரு புறமும் தாங்கள் அமர்ந்து கொண்டார்கள். இங்கே ஆண், பெண் பேதமின்றி தொட்டுப் பழகுவது சகஜமே என்றாலும் ஆதூர் ஷானவியை அரவணைத்ததைக் காணப் பிடிக்காமல் முகம் சுளித்தார் சந்திரா.

 

ஷானவி அமர்ந்ததும் அனுஷரா தான் கொண்டு வந்திருந்த பூச்செண்டைக் கொடுத்து  விரைவில் குணமடைய வாழ்த்தினாள். அவளைத் தொடர்ந்து ஆதூர் தான் கொண்டு வந்திருந்த பல வண்ண லில்லி மலர்கள் நிறைந்த பூச்செண்டைக் கொடுத்தவன்,

 

“நீ விரைவில் குணமடைய வேண்டும் ஷானவி. இனியாவது உன் வாழ்வு இந்த பூச்செண்டு போல வண்ண மயமாக மாற வேண்டும் ம செர்ரி…”

 

என்று மனதார வாழ்த்தினான்.

 

லீயோ எதுவும் பேசவில்லை. தான் கொண்டு வந்திருந்த பல வண்ண ரோஜா மலர்கள் நிறைந்த பூச்செண்டை எழுந்து சென்று அவள் கைகளில் கொடுத்தவன், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவள் உச்சியில் இதழ் பதித்து,

 

“Be strong and be positive my dear little baboo”

 

என்றவன், தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து அவள் காலைச் சுற்றிப் போட்டிருந்த மாவுக் கட்டில், ‘சரங்கே ஷானு’ என்று கொரியன் மொழியில் எழுதினான்.

 

அவனின் இந்த எதிர்பாராத செயலில் ஷானவி அதிர்ந்து போய் வாயால் வார்த்தைகள் வராது உட்கார்ந்து இருந்தாள். திருநாவுக்கரசுவும் மற்றவர்களும் இது சகஜம் என்ற மனனிலையில் பார்த்திருக்க சந்திராவோ திறந்த வாய் மூடாது அதிர்ந்து போய் பார்த்திருந்தார்.

 

லீ யைத் தொடர்ந்து அனுஷரா, “ get well soon”, என்று ஆங்கிலத்திலும் ஆதூர், “bon rétablissement” என்று பிரெஞ்சிலும் அவள் மாவுக்கட்டில் எழுதி விட்டார்கள். லீயும் இதைத் தான் தனது மொழியில் எழுதி இருக்கிறான் என்று அனைவரும் தாங்களாகவே முடிவு செய்து கொண்டனர். அந்த கோடுகளும் கட்டங்களுமான எழுத்தில் என்ன தான் புரிந்து விடும்? ஆனால் லீ உண்மையில் என்ன எழுதி இருந்தான் என்று தெரிந்திருந்தால் ஷானவி எப்படி உணர்ந்திருப்பாளோ தெரியவில்லை.

 

கஃபேயை அருந்தியபடியே அனைவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, வாடி வதங்கிய கொடியாக இருந்த ஷானவியையே வைத்த விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் லீ. அவளின் அலுத்துக் களைத்துப் போன தோற்றம், அவள் சரியாக ஓய்வெடுக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே உணர்த்தியது. அது மட்டுமின்றி சந்திரா மதியம் ஷானவியைத் திட்டியதை இரண்டாம் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டு தானிருந்தான். மொழி புரியாவிட்டாலும் ஒருவர் பேசும் தொனியில் அது அன்பா, கோபமா என்பதை விளங்கிக் கொள்ள முடியும் தானே.

 

இங்கிருப்பது ஷானவியின் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பதை உணர்ந்தவன் மெதுவாய் அனுஷராவின் காதைக் கடித்தான். லீ சொன்னதைக் கேட்டவள்,

 

“நானும் இதையே தான்டா யோசித்துக் கொண்டிருந்தேன். பொறு… கேட்டுப் பார்க்கிறேன்…”

 

என்று மெதுவாய் லீயிடம் தெரிவித்து விட்டு திருநாவுக்கரசுவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.

 

“அங்கிள்…! பத்து நாளைக்கு வகுப்பு இல்லைத்தானே… எங்களுக்கு வலென்ஸ்ல ஒரு பார்ம் ஹவுஸ் இருக்கு. கிருஸ்மஸ்க்கு அங்க போகலாம் என்று இருக்கிறோம். உங்களுக்கு இஷ்டம் என்றால் நான் ஷானுவையும் கூட்டிட்டுப் போகிறேன். அது பெரிய வீடு. ஷானுவுக்கும் ஒரு சேஞ்ச்சாகவும் ரெஸ்ட் எடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.”

அனுஷரா ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமாய் கேட்டது சந்திராவுக்குப் புரியவில்லை. ஷானவி இங்கிருந்தால் ஓய்வெடுக்க மாட்டாள் என்பதை உணர்ந்த திருநாவுக்கரசுவும் சந்தோசமாக தனது சம்மதத்தை தெரிவித்தார். என்ன என்று வினவிய மனைவியிடம் விடயத்தைச் சொல்லி அவரை வயிறு புகைய வைத்தார்.

 

அனுஷராவின் கோரிக்கையையும் அதை மாமா ஏற்றுக்கொண்டதையும் பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் ஷானவி. இருந்தும் சந்திரா என்ன சொல்லுவாரோ என்ற பயத்தில் அவரைப் பார்க்க, அவரும் சம்மதமாய் தலையசைத்தார்.

 

கிருஸ்மஸ் விடுமுறைக்கு சுவிஸ்க்கு தன் தங்கையிடம் போக முடிவு செய்திருந்தார் சந்திரா. ஆனால் காலை முறித்த ஷானவியைத் தனியாக விட்டு விட்டு வர முடியாது என திருநாவுக்கரசு மறுத்திருந்தார். அப்படியிருக்க இப்போது அனுஷரா தன்னோடு அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டதே அவருக்கு வரமல்லவா? பிறகேன் மறுக்கப் போகிறாராம்?

 

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு ஷானவியை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி மூவரும் விடை பெற்றுக் கொண்டனர். ஷானவியும் முதல் இருந்த சோக மனனிலை மாறி சந்தோசம் கொப்பளிக்க விடை கொடுத்தாள்.

 

ஆதூர் தனது தாயைப் பார்க்க இத்தாலி செல்வதாகவும் மறுபடியும் வகுப்பு தொடங்கியதும் சந்திப்பதாகக் கூறி அவளை மெதுவாக அணைத்து பிரெஞ்சுக்காரர் முறைப்படி கன்னத்தில் கன்னம் வைத்து முத்தமிட்டு விடை பெற்றுச் சென்றான். அவனை பத்து நாட்கள் பார்க்க முடியாது என்பது வருத்தமளித்தாலும் அனுஷராவோடு கூட இருக்கப் போவது மகிழ்ச்சி அளிக்கவே உற்சாகமாகவே இருந்தாள் ஷானவி.

 

அவளின் மகிழ்ச்சி ததும்பிய முகமே லீக்கு போதுமானதாக இருக்க ஒரு சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டான்.

 

கட்டியணைத்த அனுஷராவிடம்,

 

“நான் பார்ம் ஹவுஸ் வாறது உனக்கும் மைக்கேலுக்கும் இடைஞ்சல் இல்லையா அனு?”

 

“சும்மா போடி… நாங்க என்ன ஹனிமூனா போறம்… அங்க வந்து பார்த்தால் உனக்கே தெரியும். மாறி மாறி ஒரே விஸிட்டர்ஸ் தான். நேரம் போறதே தெரியாமல் செம ஜாலியாக இருக்கும். ஒழுங்கா ட்ரெஸ் எல்லாம் பாக் பண்ணி வைச்சிட்டு காலையில ரெடியாக இரு. சரியா?”

 

அன்பும் உரிமையுமாய் கூறி விடைபெற்றுக் கொண்டாள் அந்த உயிர்த் தோழி.

 

ஷானவியும் மனதிலிருந்த நெருடல் விலக மகிழ்ச்சியாக தனது உடைகளை ஒரு பெட்டியில் அடுக்கத் தொடங்கினாள்.

 

அவள் மகிழ்ச்சி நிலைக்குமா?

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: