Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 2

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 2

அத்தியாயம் – 2. இரண்டு சபதங்கள்

 

     இவ்விதமாக நடந்து கொண்டிருந்த கோலாகல வரவேற்பு நிகழ்ச்சிகளை அரசகுலப் பெண்டிர் அனைவரும் அரண்மனையின் கீழ்த் தளத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க, கன்னிப் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கடைசி அம்சம். மன்னர் இராசேந்திர தேவர் மட்டும் இப்பொழுது கிழக்கு நோக்கி நின்றார். அரச குடும்பத்து ஆண்கள் ஒவ்வொருவரும் வந்து அவர் முன் மண்டியிட்டு வணங்கி விடைபெற்றுச் சென்றனர். முதலில் அவருடன் போரில் பங்கு கொண்ட தம்பியர் இருவரும் விடை பெற்றுக் கொண்டு தங்கள் மாளிகையான முடிகொண்ட சோழன் அரண்மனைக்குக் குதிரையேறிச் சென்றனர். பின்னர் இராசேந்திர தேவரின் புதல்வர் அறுவரும் தந்தையை வணங்கிவிட்டு அவர் ஆசி பெற்று சோழகேரளன் அரண்மனைக்குள்ளே சென்றனர். பிறகு வீரராசேந்திரனின் மக்களான மதுராந்தகனும், கங்கை கொண்ட சோழனும் பெரிய தந்தையை வணங்கினர்.

இதுதான் அன்றைய நிகழ்ச்சிகளில் கடைசியானது என்பது மதுராந்தகிக்குத் தெரியும். எனவே, அவள் சற்றைக்கெல்லாம் அரண்மனைக்குள்ளே வரப்போகும் தந்தையை எதிர் கொள்ளும் பொருட்டு உப்பரிகையிலிருந்து புறப்பட்டாள்.

“வா, வானவி. நீயும் பெரியப்பாவைத் தரிசித்துவிட்டு உன் தந்தையைச் சந்திக்கச் செல்லலாம்,” என்று கூறியவாறு மேன்மாடச் சுவரிலிருந்து திரும்பிய மதுராந்தகியை, வானவியின் “அடடா!” என்ற அலறல் நிறுத்தியது.

“என்ன வானவி?”

“இங்கே ஓடிவா, அக்கா. வந்து இந்த வேடிக்கையைப் பார்.”

மதுராந்தகி மானைப்போல் மாடிச் சுவரண்டை ஓடி, கீழே நோக்கினாள். அங்கே குலோத்துங்கன் அப்பொழுது இராசேந்திர தேவரை வணங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்டுதானா வானவி, “அடடா!” என்று அலறினாள்? அதையா அவள் வேடிக்கை என்று குறிப்பிட்டாள்?

ஒன்றும் விளங்காத மதுராந்தகி, “என்ன வானவி, நீ எதை வேடிக்கை என்றாய்?” என்று வியப்புடன் வினவினாள்.

“உன் ஆசை அத்தானின் அசட்டுச் செயலைத்தான்!”

மதுராந்தகியின் தாமரை வதனம் சட்டென்று வாடியது. “வானவி, அவர் அப்படி ஒன்றும் நகைக்கும்படியான செயலைச் செய்யவில்லையே!” என்று கூறியவாறு அவள் தன் சகோதரியின் முகத்தைக் கூர்மையாக நோக்கினாள். பெண்களான மதுராந்தகியும், வானவியும் மட்டும் சற்று ஒதுக்கமாக அரண்மனை மேன்மாடத்திலிருந்து இவற்றைப் பார்த்தனர்.

வானவியிடமிருந்து ஓர் ஏளன நகைப்பு வெளிப்பட்டது. “ஒருவர் மீது அன்பைப் பொருத்தி விட்டால், அவர் செய்யும் செயல் எல்லாமே நல்லதாகத்தான் படும் போலிருக்கிறது!” என்று சொல்லி இன்னும் பெரிதாக நகைத்த அவள், பின்னர் தொடர்ந்து சொன்னாள்: “அக்கா, நீ நம் குலோத்துங்க அத்தானை நன்றாகக் காதலி. அவரையே மணந்துகொள். வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அவர் தம்மையும் ஒரு சோழ அரச குமாரனாகக் கருதி, இம்மாதிரி இழிவான காரியங்களைச் செய்கிறாரே, அதை மட்டும் என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. வெற்றி வாகை சூடித் திரும்பும் மன்னரை அம்மரபைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வணங்க வேண்டும்; அவருடைய வீரமும் வெற்றியும் வருங்காலத்தில் தங்களுக்கும் கிட்ட வேண்டுமென்று மனமாரப் பிரார்த்தித்து, அவரது ஆசியைப் பெறவேண்டும். பிற மரபைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும், இந்த தருணத்தில் மன்னரை வணங்கக் கூடாது என்பதெல்லாம் உனக்கு தெரியாதா?”

வானவியின் சொற்கள் மதுராந்தகியை மெத்த விசனத்தில் ஆழ்த்தின. அவள் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்: “அது சரிதான், வானவி. ஆனால், அத்தான் தமக்கென்று ஒரு நாடும், ஓர் அரியணையும் காத்திருந்தும், ‘இந்தச் சோழ நாடே என் தாய்நாடு; இந்தத் தவத்திரு நாட்டுக்குத் தொண்டு செய்யவே நான் பிறந்துள்ளேன்’ என்று பிறந்தது தொட்டு இங்கேயே இருந்து, போர்ப் பயிற்சி பெற்று, இந்நாட்டுக்காக வாளேந்தும் காலத்தை எதிர்நோக்கி இருப்பவர் அல்லவா? ஆதலால் அவர் இத்தருணத்தில் என் தந்தையை வணங்கி ஆசி பெறுவதில் தவறென்ன இருக்கிறது?”

வானவி, முகத்தில் அரும்பியிருந்த ஏளனக் குறியில் சிறிது வெறுப்பையும் கலந்துகொண்டு இப்பொழுது பேசினாள்: “இந்த வெளிப்பூச்செல்லாம் எதற்கு, அக்கா? குலோத்துங்க அத்தான் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்!”

“என்ன இருக்கிறதடி அம்மா? அத்தானோடு நெருங்கிப் பழகி, அவர் உள்ளத்தில் இடம் பெற்று, அதன் உள்ளும் புறமும் கண்டுள்ள நான் அறியாத எந்த ரகசியத்தையடி அம்மா, நீ அறிந்து விட்டாய்?” என்று மதுராந்தகி சிறிது கோபத்துடன் கேட்டாள்.

“ஒன்றுமே தெரியாதவள் போல் ஏன் இப்படிப் பேசுகிறாய், அக்கா? அவர்தான் ஏதோ அசட்டு நினைவோடு இந்தச் சோழ அரண்மனையை விடாப் பிடியாக பற்றிக் கொண்டிருகிறாரென்றால், நீயாவது அவருக்கு அறிவுரைகள் வழங்கித் தமது நாட்டுக்குப் போகச் செய்யாமல்…”

“வானவி!” என்று அடங்காச் சினத்துடன் கூவினாள் மதுராந்தகி. “அத்தான் என்னை மணக்க விரும்புவதையா அசட்டுத்தனம் என்கிறாய்? மீண்டும் ஒரு தடவை அப்படிச் சொன்னால் உன் நாவைத் துண்டித்து விடுவேன்…!”

“ஏது! அக்காளுக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கிறதே?” என்று மீண்டும் நகைத்தாள் வானவி. “ஆனால் அக்கா, நான் குறிப்பிட்டது உங்கள் திருமணத்தைப் பற்றியல்ல!”

“பின்?”

“அத்தான் பிறந்தபோது நமது பாட்டியார் அவரைத் தமது கரங்களில் எடுத்துக் கொண்டு ‘சந்திர குலத்தில் பிறந்த இக்குழந்தை சூரிய குலத்தை வளர்கத் தக்கவன் ஆவான்’ என்று கூறியதாகச் சொல்வார்களே, அதை நினைத்து இந்தச் சோழ அரியணை தமக்குக் கிட்டுமென்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார் அக்கா, உன் அருமை…”

(*அவனிபர்க்குப் புரந்தரனா மடையாளம் அவயத்தி னடைவே நோக்கி இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பார்க்கத் தகுவ னென்றே (கலிங்கத்துப் பரணி. 237-ஆம் தாழிசை) கீழைச் சளுக்கிய மரபைச் சந்திர குலமென்றும், சோழ மரபைச் சூரிய குலமென்றும் சொல்லுவார்கள்.)

“போதும், நிறுத்து!” என்று இரைந்தாள் மதுராந்தகி. “அவர் அப்படி நினைத்திருப்பதாக யார் உன்னிடம் கூறியது?”

“இதையெல்லாம் யாராவது கூறித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா, அக்கா? அவர் போக்கே இதற்கு அத்தாட்சி தந்து கொண்டிருக்கவில்லையா? நீயே நினைத்துப்பார்; இந்த எண்ணம் எத்துணை அசட்டுத்தனமானது! உன் தம்பிமார் அறுவரும் பட்டமகிஷியின் மக்களல்லவாதலால், நமது சோழ குல முறைப்படி தமது அடுத்த இளைய சகோதரர் இராச மகேந்திரருக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருக்கிறார் பெரியப்பா. ஆதலால் அவருக்குப் பிறகு இராச மகேந்திரரே இந்நாட்டை ஆளப் போகிறார். இன்று அவருக்கு மக்களில்லாதிருக்கலாம். ஆனால் நாளை ஒரு நாள் இளையபிராட்டி லோகமகா தேவியார் நம் நாட்டின் பட்டத்துகுரிய ஓர் ஆண் மகவைப் பெற்றெடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

 “ஒருகால் அவர்களுக்கு ஆண் குழந்தையே பிறக்காவிட்டாலுங்கூட, அடுத்த பட்டத்துரிமை என் தந்தைக்கல்லவா? அப்பொழுது என் தந்தை உயிரோடில்லையென்றால், என் இளைய சகோதரர்களில் ஒருவனல்லவா இந்தச் சோழ நாட்டின் அரியணை ஏற உரிமையுடையவன்? இப்படி நமது மரபிலே பலர் வரிசையாகக்காத்திருக்கையில், அத்தானின் பேராசையை நினைக்கும்போது நகைக்க மட்டுமா தோன்றுகிறது? ஆத்திரம் தீரச் சிறிது நேரம் அழலாம் என்றுகூடத் தோன்றுகிறது!

“இதோ பார், அக்கா… நான் இத்தனை காலமாக இதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டாமென்று தான் இருந்தேன். ஆனால் நிலைமை இப்பொழுது மிக மோசமாகி இருப்பதை நீயே அறிவாய். நேற்று நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார். வேங்கியில் அத்தானின் தந்தை நோய்வாய்ப்பட்டிருக்கிறாரென்றும், அத்தானின் சிறிய தந்தை விசயாதித்தன் குந்தள நாட்டாரின் உதவியுடன் அரியணையைக் கைப்பற்றத் தருணம் பார்த்திருக்கிறாரென்றும், ஆதலால் இச்சமயத்தில் அத்தான் அங்கிருக்க வேண்டியது அவசியமென்றும் அத்தை அவசர ஓலை அனுப்பியிருக்க, இவர், ‘வெற்றி கொண்ட படை திரும்புகிறது; அதை வரவேற்காமல் வேங்கிக்குப் போகமாட்டேன்’ என்று கூறிவிடவில்லையா?

“அசட்டுப் பிடிவாதங்களுக்கும், அர்த்தமற்ற நினைவுகளுக்கும் ஒரு வரையறை வேண்டும், அக்கா. ஒன்றும் இல்லாவிட்டாலும் சோழ நாட்டின் நலனுக்காகவாவது இவர் வேங்கிக்கு மன்னராக வேண்டியது அவசியமில்லையா? குந்தளத்தார் நம்மைப் பிரித்துவிடப் பன்னெடுங் காலமாகச் சதி செய்து வருகிறார்கள் என்பதும், அதற்காகவே அவர்கள் இவருடைய சிறிய தந்தையைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு அவரை வேங்கிக்கு அரசராக்கிவிட முயன்று வருகிறார்கள் என்பதும் நன்கு தெரிந்திருந்தும், இப்படி நடந்து கொண்டாரே? இதை என்னவென்று சொல்லுவது, அக்கா?

“என்னை நீ தவறாக நினைத்துக் கொண்டாலும் சரி; அவரைக் காதலித்து, அவரைத்தான் மணந்து கொள்ளுவேன் என்று உறுதி பூண்டிருக்கும் உன் நலனுக்காவே சொல்கிறேன். இந்தச் சோழ நாட்டின் மீதுள்ள பைத்தியத்தை உதறிவிட்டு, அவரை உடனே வேங்கிக்குப் புறப்பட்டுப் போகச் சொல். அவருடைய பேதைமையான ஆசைகளுக்கெல்லாம் நீயும் தலையசைத்துக் கொண்டிராதே!”

பெருமழையெனப் பொழிந்த வானவியின் இந்தச் சொல் மழையைச் சிலையாக நின்று செவி மடுத்தாள் மதுராந்தகி. ஆனால் அவளது உள்ளம், கோடை மழையின் போது குமுறும் வானம்போல் குமுறிக் கொண்டிருந்தது. ‘என்ன அபாண்டம்! என் அத்தானுக்கா இந்தச் சோழ நாட்டின் அரியணைமீது கண்?’

மதுராந்தகிக்கு, முன்னாள் மாலையில் குலோத்துங்கன் கூறிய மொழிகள் நினைவுக்கு வந்தன. அவன் பிறந்தது முதல் இந்த நாட்டிலேயே இருந்து வந்தமையால், தன்னை ஒரு சோழ அரச குமாரனாகவே கருதியிருக்கிறான் என்பதை யாவரும் அறிவர். ஆயினும் தந்தை நோய்வாய்ப் பட்டிருப்பதாகச் செய்தி வந்தபோது கூட வேங்கிக்குப் போக இணங்காத அவன் செயலை அரச குடும்பத்தினர் யாரும் ஒப்பவில்லை. மதுராந்தகியின் அன்னை கிழானடிகளும், சிற்றன்னை திரைலோக்கிய முடையாளும் மிக வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் அவன், மறுநாள் மாமா வந்ததும், அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட இணங்கினான்.

 

இது நிகழ்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் மதுராந்தகியும் அவனும் அரண்மனைக்குப் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீர் நிலையின் கரையில் வழக்கம்போல் சந்தித்தனர். அப்பொழுது மதுராந்தகியும் அவனது பிடிவாதம் அர்த்தமற்றது என்பதை எடுத்துக் கூறினாள். அதற்கு அவன் சொன்னான்: “மதுரா, இது என்ன, நீ கூட என்னை அந்நியனாக்கிப் பேசிவிட்டாயே? என் உடலில் ஓடுவது வேங்கி உதிரந்தான் என்றாலும், அதில் இரண்டு தலைமுறை சோழ உதிரக் கலப்பு இருக்கிறது, மதுரா. தவிர, நான் பிறந்தது, வளர்ந்தது, போர்க்கலை பயின்று வருவது எல்லாம் இங்கே தான் என்பதை நீ அறியாயா? எனவே, எனக்கு வேங்கி நாட்டைவிடச் சோழ நாட்டின் மீது அதிகமான பாசம் இருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது? இதோ பார், கண்ணே! என் சிறிய தந்தை வேங்கியை ஆள விரும்பினால் ஆண்டுவிட்டுப் போகட்டுமே! என்னைப் பற்றிய வரையில் எனக்கு இந்தச் சோழ நாட்டில் ஒரு சிறிய படைக்குத் தலைவனாகும் வாய்ப்புக் கிடைத்தாலே போதும்; அதை ஆயிரம் வேங்கிகளுக்கு இணையாகக் கருதுவேன். என் உள்ளம் கவர்ந்த உன்னிடம் மனம் விட்டுக் கூறுகிறேன். அறிவடைந்த நாளிலிருந்து நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தச் சோழவள நாட்டுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்று தீர்மானித்து விட்டேன்!”

‘இப்படித் தம்மை வளர்த்த நாட்டுக்காக, தமக்கு உரிமையுள்ள அரியணையையே உதறிவிட்டுத் தொண்டாற்ற விரும்பும் உத்தமரையா இந்த அறியாச் சிறுமி பேராசை பிடித்தவராக உருவகப் படுத்திப் பேசுகிறாள்!’ மதுராந்தகிக்கு இப்பொழுது வெறியே வந்து விட்டது. அவள் முகத்தில் அனல் பறக்கச் சொன்னாள்; “ஆமாம், அவர் அப்படித்தான் நினைத்திருக்கிறார்; அதில் என்ன தவறு?”

“தவறா? தவறில்லை அக்கா! அது பகல்கனவு!” என்று வெடித்தாள் வானவி.

“பகல் கனவும் பலிப்பதுண்டு, வானவி!”

“ஆனால் இது பலிக்காது; பலிக்க முடியாது!”

“பலிக்கச் செய்தால்…?”

“யார்? நீயா பலிக்கச் செய்யப் போகிறாய்?”

“ஆமாம்; நான்தான். முடியாதென்று நினைக்கிறாயா? பெண், மனம் வைத்தால், இந்தப் புவனத்தையே தலைகீழாகப் புரட்டிவிட முடியும், தெரியுமா?”

“இந்த உலகில் நீ ஒருத்தி மாத்திரமே பெண்ணல்ல, அக்கா. இதோ, நான் கூட ஒரு பெண்தான். உன்னால் புவனத்தைத் தலைகீழாகப் புரட்டிவிட முடியுமென்றால், என்னால் அதை நிமிர்த்துவிட முடியாதென்றா நினைத்தாய்? பார்க்கலாமா? வெண்டுமென்றால் சபதம் எடுத்துக் கொள்ளக் கூடத் தயாரக் இருக்கிறேன்…!”

“சபதமா?”

“ஆமாம்; நம் இருவர் திறமைக்கும் ஒரு பரிட்சை. துணிவிருந்தால் முன் வா. குலோத்துங்க அத்தானை இந்தச் சோழ அரியணையில் ஏற்றுவதாகச் சபதம் செய். நான் எதிர்ச் சபதம் செய்கிறேன்!”

“ஓ! அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா? அப்படியானால் இதோ கேள் என் சபதத்தை! – குலோத்துங்க அத்தானை மணந்து, அவருடன் இந்தச் சோழ அரியணையில் ஒரு நாளாவது அமராவிட்டால் என் பெயர் மதுராந்தகி இல்லை…!”

“கேட்டுக்கொள் என் சபதத்தை; குலோத்துங்க அத்தானுக்கு இந்தச் சோழ அரியணை மட்டுமில்லை; வேங்கி அரியணையும் கிட்டாமல் செய்யவில்லையென்றால், நான் வீரராசேந்திரரின் புதல்வி வானவன் மாதேவி இல்லை…!”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1

அத்தியாயம் – 1. வெற்றி வீரர்களுக்கு வரவேற்பு        அன்று கங்கை கொண்ட சோழபுரம் அல்லோல கல்லோலப்பட்டது. அதன் பல்வேறு பகுதிகளான *உட்கோட்டை, மளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோவில் ஆகியவை

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 29மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 29

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 7. அதிராசேந்திரன்        சோழ நாட்டின் சரித்திரத்திலே அந்த ஆண்டு மிகவும் குழப்பமான ஆண்டு. அரச மாளிகையில் வதிந்தவர்கள் முதல் சாதாரணக் குடிமக்கள் வரையில் அப்போது மிகவும் மனக் குழப்பமான நிலையில் இருந்தனர். அடுத்து

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 9. ஊழ்வினையின் ஊடாடல்        குந்தள மன்னன் ஆகவமல்லனின் சூளுரை தாங்கிய போர்த் திருமுகத்துடன் அந்நாட்டுத் தூதன் கங்காகேத்தன் என்பான் கங்கைகொண்ட சோழபுரத்தை வந்தடைந்த அன்று, உள்நாட்டு நடவடிக்கைகளை அறியும் பொருட்டு வீரராசேந்திர தேவர் தற்செயலாக