Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – முன்னுரை

முன்னுரை

 

     தெனாலி ராமன் கதையில் வரும் நிகழ்ச்சி இது. ஒரு சமயம், மன்னர் கிருஷ்ணதேவராயரின் தவறு ஒன்றை எடுத்துக் காட்டுவதற்காக, தான் தீட்டிய ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதாகவும், மன்னர் அவற்றைக் கண்டருள வேண்டுமென்றும் தெனாலிராமன் கேட்டார். அங்கே பல ஓவியங்கள் இருந்தன. ஆனால் ஒன்று கூட முழுமையாக இல்லை. ஓர் ஓவியத்தில் ஓர் ஆணின் கை; மற்றொன்றில் ஒரு பெண்ணின் கால்; இன்னொன்றில் ஒரு மாட்டின் கொம்பு; வேறொன்றில் ஒரு குதிரையில் வால்; இப்படி எல்லாமே குறை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.

வியப்படைந்த கிருஷ்ண தேவராயர் ஓர் ஓவியத்தைச் சுட்டிக் காட்டி, “ராமா! இது என்ன, குதிரையின் வாலை மட்டுமே தீட்டியிருக்கிறாய்? அதன் உறுப்புக்கள் எங்கே?” என்று கேட்டார்.

தெனாலிராமன் சிரித்துக் கொண்டே, “மன்னர் மன்னவா! இது குதிரையின் பின்பக்கம் ஆதலால் வால் மட்டுமே தெரிகிறது. இதன் இதர உறுப்புக்கள் ஓவியச் சீலைக்கு அப்பால் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். நீங்கள் கூட முன்பு ஒரு தடவை என்னிடம், ‘ஓவியங்களைக் கற்பனைக் கண் கொண்டுதான் பார்க்க வேண்டும்!’ என்று கூறியிருக்கவில்லையா?” என்றானாம்…!

சரித்திரப் புதினம் எழுதுவதற்குக் குறிப்புகளைச் சேகரிக்க முனைந்தபோது, எனக்கு இந்தக் கதை நினைவுக்கு வந்தது. சரித்திர நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக விளங்கும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழம் பாடல்கள், சரித்திர ஆராய்ச்சி நூல்கள் ஆகியவை அளிக்கும் குறிப்புக்கள் கிட்டதட்ட தெனாலிராமனின் ஓவியங்களைப் போலவே இருப்பதைக் கண்டேன்.

குறிப்பிட்ட மன்னர் ஒருவரின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அதில் நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமான குறிப்புக்களே கிட்டுகின்றன. அவற்றையும் ஒவ்வொன்று ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றன. ஒரு தனிப்பட்ட ஆதார நூலையோ, ஏட்டையோ எடுத்துக்கொண்டால், சில சமயம் அது ஒரே நபரைப் பற்றி முன்பின் முரணான தகவல்களைக் கொடுக்கிறது.

இவை போதாவென்று, நமது வேந்தர்களின் பெயர்கள் வேறு நம்மைக் குழப்புகின்றன. ஒரே பரம்பரையில் ஒரே பெயருடன் பல மன்னர்கள். அவர்கள் தங்களது முன்னோர்கள் சூடிக்கொண்ட சிறப்புப் பெயர்களையும் அப்படி அப்படியே சூடிக்கொண்டு விடுகிறார்கள்.

கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் அவர்கள் இத்தகைய சிறப்புப் பெயர்களாலேயே குறிப்பிடப் படுகிறார்கள். தவிர, சோழ நாட்டில் அதே பெயருடன் ஒரு வேந்தன் இருந்தால், வேங்கி நாட்டில் அதே பெயருடன், கிட்டத்தட்ட அதே காலத்தில் மற்றோரு வேந்தன் அரசனாயிருக்கிறான். இப்படிப்பட்ட குழப்பம் வேறு.

இத்தனைக்கும் இடையே தெளிவு கண்டு, சம்பவங்களைக் கோவையாக்கி, துண்டு துண்டாக நிற்கும் அந்தச் சம்பவங்களை முன்பின் முரணின்றி, கற்பனைக் கயிற்றால் இணைத்து, சுவையாகவும், உண்மைக்குப் புறம்பில்லாமலும் ஒரு புதினத்தை எழுதுவதென்றால், அது எத்துணை கடினமான பணி என்பதை வாசகர்களே ஊகிக்துக் கொள்ளலாம்.

ஓர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இப்படி உண்மைக்குப் புறம்பில்லாதபடி கற்பனையாக ஒரு புதினத்தை எழுதவேண்டும் என்று கேட்டிருந்தால் எந்த எழுத்தாளனும் சிறிது மலைத்தே இருப்பான். ஆனால் இன்றைக்கு நம் தமிழ் நாட்டில் சரித்திரப் புதினம் புனையாத எழுத்தாளன் ஓர் எழுத்தாளனாகக் கருதப்படாத நிலை வெகு விரைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, கற்பனையை உண்மையுடன் இணைக்குமளவு எழுத்துத் திறன் நம் தமிழகத்தில் உயர்ந்து வந்திருக்கிறது. இது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான்; எனினும், அந்தப் பெருமைக்கு விதை விதைத்துக் கொடுத்தவர் ஒருவரே – பேராசிரியர் கல்கி அவர்கள். பேச்சு நடையிலும் கதை எழுத முடியும் என்பதைத் தமிழ் நாட்டுக்குக் காட்டிக் கொடுத்த பெரியார்களில் ஒருவரான அவரே சரித்திரப் புதினம் எழுதும் துறையிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழி காட்டினார்.

‘கல்கி’ அவர்களின் ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய சரித்திரப் புதினங்கள் தமிழ் வாசக அன்பர்களிடையே வளர்த்துள்ள சுவை, இன்று சரித்திரப் புதினம் ஒன்றைத் தாங்கி வராத பத்திரிக்கையைச் சற்று ஏளனமாக நினைக்கும் அளவுக்கு ஓங்கி நிற்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு அத்தகையதொரு மறுமலர்ச்சியைத் தந்த அந்த எழுத்துலகப் பிரமனின் நூல்களை வழிகாட்டிகளாகக் கொண்டு என் கன்னி முயற்சியைத் தொடங்குகிறேன்.

நம் கதை மதுராந்தகியைப் பற்றியது. மதுராந்தகி என்றதும், சரித்திரத்தை ஆராய்ந்துள்ள வாசகர்களிடையே, ‘எந்த மதுராந்தகி?’ என்ற கேள்வி எழக்கூடும். “இரண்டாம் இராசேந்திர தேவரின் மகள் மதுராந்தகியா? அல்லது அவருடைய சகோதரி அம்மங்கை தேவியின் மகள் மதுராந்தகியா?”

அதை முதலில் தெளிவு செய்து விடுகிறேன். இக்கதை இரண்டாம் இராசேந்திர தேவரின் புதல்வி மதுராந்தகியைப் பற்றியதுதான். இவள் தன் அத்தை அம்மங்கை தேவியின் மகனும், பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ, வேங்கி நாடுகளை ஆண்ட கீழைச் சளுக்கிய மரபினனுமான இரண்டாம் இராசேந்திரனை காதலித்து மணந்து கொண்டாள். (மதுராந்தகியின் தந்தை பெயரும் இரண்டாம் இராசேந்திரனே. ஆதலால் வசகர்களுக்குக் குழப்பமேற்படுவதைத் தவிர்க்க, கீழைச் சளுக்கிய இரண்டாம் இராசேந்திரனைக் குலோத்துங்கன் என்றே குறிப்பிட்டு வருவேன். குலோத்துங்கனுக்கு விஷ்ணுவர்த்தனன் என்ற அபிடேகப் பெயரும் உண்டு.)

மதுராந்தகி குலோத்துங்கனை மணந்தது மட்டுமின்றி, அவனைச் சோழ நாட்டுக்கும், கீழைச் சளுக்கிய நாட்டுக்கும் வேந்தனாக்க மறைமுகமாக அடிகோலினாள். இவர்களின் காதல், திருமணம், இல்லறம் மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகியவற்றைச் சுற்றியே நம் கதை படருகிறது.

நேயர்களின் கவனத்தைக் கதையின் மீது திருப்புமுன், நம் கதையுடன் தொடர்புடைய சோழநாடு, கீழைச் சளுக்கிய நாடு, மேலைச் சளுக்கிய நாடு ஆகியவற்றின் அன்றைய அரசியல் நிலையையும். அரச குடும்பத்தினர் நிலையையும் சிறிது அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

நம் கதை கி.பி.1059-60ல் தொடங்குகிறது. அன்று கங்கை கொண்ட சோழபுரம் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது. (இவ்வூர் இப்பொழுது கும்பகோணத்துக்கு வடகிழக்கில் சுமார் பன்னிரண்டு மைல் தூரத்தில் ஒரு சிற்றூராக விளங்குகிறது.) சோழ நாட்டை அப்பொழுது மதுராந்தகியின் தந்தை இரண்டாம் இராசேந்திர தேவர் ஆண்டு வந்தார். இவர் கங்கை கொண்ட சோழன் எனப் புகழ்பெற்ற முதலாம் இராசேந்திர சோழனின் புதல்வர்.

கங்கை கொண்ட சோழனின் புதல்வர் மூவர் சோழ அரியணை ஏறினர். அவர்கள் முறையே இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திர தேவன், வீர ராசேந்திரன் ஆவார்கள். முதலாம் இராசேந்திரனுக்கு இரு புதல்விகளும் இருந்தனர். அவர்கள் அருள்மொழி நங்கை என்றும், அம்மங்கை தேவி என்றும் பெயருடையவர்கள். இந்த அம்மங்கை தேவியே குலோத்துங்கனின் தாய். குலோத்துங்கனின் தந்தை கீழைச் சளுக்கிய வேந்தனாகிய இராசராச நரேந்திரன்.

தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்தே சோழ அரச குடும்பதினருக்கும் கீழைச் சளுக்கிய அரச குடும்பதினருக்கும் இடையே திருமணத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. முதலாம் இராசராச சோழனின் மகள் இரண்டாம் குந்தவையைக் கீழைச் சளுக்கிய வேந்தன் விமலாதித்தன் மணந்தான். இத்தம்பதிகளின் மகனே குலோத்துங்கனின் தந்தையான இராசராச நரேந்திரன்.

குலோத்துங்கன் கீழைச் சளுக்கிய மரபினனேயாயினும், அவன் தாய் வழிப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனின் அரண்மனையிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து வந்தான். தவிர, அவன் தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பயின்று, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதோடு, தன்னை ஒரு சோழ அரச குமாரனாகவே கருதியிருந்தான்.

இனி, கீழைச் சளுக்கிய மரபைப் பார்க்கலாம். கீழைச் சளுக்கிய மன்னர்கள் வேங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். அதனால் இந்நாடு வேங்கி நாடு என்று குறிப்பிடப்படும். நமது கதையின் தொடக்க காலத்தில், கீழைச் சளுக்கிய மன்னனாக இருந்தவன் குலோத்துங்கனின் தந்தையான இராசராச நரேந்திரன். இராசராச நரேந்திரனுக்கு ஏழாம் விசயாதித்தன் என்றோர் இளைய சகோதரன் இருந்தான். ஆனால், இவர்கள் ஒரு தாய் வயிற்றுச் சேய்கள் அல்லர்.

இவர்கள் தந்தை விமலாதித்தனுக்குச் சோழ இளவரசி இரண்டாம் குந்தவையைத் தவிர, இன்னும் சில மனைவியர் உண்டு. அவர்களுள் ஒருத்திக்குப் பிறந்தவனே ஏழாம் விசயாதித்தன். மன்னர்குல மரபுப்படி பட்டமகிஷியான இரண்டாம் குந்தவையின் மகன் இராசராச நரேந்திரனுக்கே விமலாதித்தன் இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தான். ஆனால், அந்நாள் முதல் ஏழாம் விசயாதித்தன் வேங்கி அரியணையை எப்படியாவது தானே கைப்பற்றிக் கொள்ளவேண்டுமென்று முயன்று கொண்டிருந்தான்.

இப்பொழுது மேலைச் சளுக்கியர் பரம்பரையை காண்போம். மேலைச் சளுக்கியர்களின் தலைநகர் கல்யாணி. இது கல்யாணபுரம் என்றும் குறிப்பிடப்படும். மேலைச் சளுக்கிய நாட்டுக்குக் குந்தள நாடு என்ற பெயரும் உண்டு. நம் கதையின் துவக்க காலத்தில் மேலைச் சளுக்கிய வேந்தனாக இருந்தவன் ஆகவமல்லன். இவன் முதலாம் சோமேசுவரன் என்றும் அழைக்கப்படுவான்.

முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து சோழ நாட்டுக்கும் கீழைச் சளுக்கிய நாட்டுக்கும் திருமணத் தொடர்பு இருந்து வந்தமையால், அவ்விரு நாடுகளும் ஏறக்குறைய ஒரே சாம்ராஜ்யம் போல் இயங்கி வந்தன. சோழ மன்னர்கள் யார் மீது போர் தொடுத்தாலும், கீழைச் சளுக்கியர்கள் சோழர்களுக்கு உதவினர். சோழ நாடு இவ்வாறு வலுப்பெற்று இருந்ததை மேலைச் சளுக்கியர்கள் விரும்பவில்லை. கீழைச் சளுக்கிய நாடு அவர்களது அண்டை நாடு. ஆதலால், அதனை எப்படியாவது சோழர்களின் சேர்க்கையிலிருந்து பிரித்துவிட வேண்டுமென்று அவர்கள் பெரு முயற்சி செய்து வந்தனர்.

கீழைச் சளுக்கிய மன்னனாக இருந்த இராசராச நரேந்திரனை விரட்டிவிட்டு அரியணை ஏற முயன்று வந்த ஏழாம் விசயாதித்தனுக்கு மேலைச் சளுக்கியர்கள் உதவி புரிந்து வந்தனர். இவ்வாறு வேங்கி நாடு காரணமாக மேலைச் சளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் நடந்த போர்கள் பல. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல தக்கது, நம் கதை தொடங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன் கிருஷ்ணா நதிக்கரையில் கொப்பம் என்ற இடத்தில் நடந்த பெரும் போர். இப்போரில் இரண்டாம் இராசேந்திர தேவரின் மூத்த சகோதரரான இராசாதிராசன் உயிரிழந்தார். பின்னர் இரண்டாம் இராசேந்திர தேவர் அப்போர்க் களத்திலேயே சோழ வேந்தராக முடிசூடிக் கொண்டு, போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றிக் கொடி நாட்டினார்; மேலைச் சளுக்கியப் படைத் தலைவர்கள் பலரை வெட்டி வீழ்த்தி, அவர்களது யானை, குதிரை, ஒட்டகப் படைகளைக் கைப்பற்றி, அரச குடும்பத்தினர் உட்பட பல பெண்டிரையும் கைது செய்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினார்.

கொப்பம் போரில் தனக்கு ஏற்படுத்திய அவமானத்துக்குச் சோழர்களைப் பழி வாங்க மேலைச் சளுக்கிய மன்னன் ஆகவமல்லன் 1059-ல் ஒரு பெரும் படையுடன் புறப்பட்டு கிருஷ்ணா நதிக்கரையில் மீண்டும் சோழர்களைச் சந்தித்து கடும் போர் புரிந்தான். இதை முடக்காற்றுப் போர் என்று கூறுவர். இப்போரில் இரண்டாம் இராசேந்திர தேவருடன் அவரது இளைய சகோதரர்களான இராச மகேந்திரனும், வீரராசேந்திரனும் கலந்து கொண்டனர்; இப்போரிலும் சோழர்களே வெற்றி பெற்றனர்.

இந்த முடக்காற்றுப் போர் முடிந்த சூட்டுடன்தான் நம் கதை ஆரம்பமாகிறது.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: