Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 08

அத்தியாயம் – 08

 

கிருஸ்மஸ் விடுமுறை அன்றோடு ஆரம்பிப்பதாக இருந்தது. பத்து நாட்கள் விடுமுறை. ஏற்கனவே நகரமே ஆங்காங்கே மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்மஸ் மரங்களாலும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

அன்று காலையில் வகுப்புக்கு செல்லும் போது, பனி கொட்டி எங்கு பார்த்தாலும் வெண்மையாக தெரிந்த நகரை அணுவணுவாய் ரசித்தவாறு சென்று கொண்டிருந்தாள் ஷானவி.

 

சத்தமின்றி அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் லீ. காலையிலேயே அவள் வீட்டின் முன்னிருந்த ரெஸ்டாரண்டில் இருந்து காத்துக் கொண்டிருந்தான். அவள் ஆத்விக்கோடு வெளியே வந்ததும் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தவன், ட்ராம் ஸ்டாப்பிலும் தூரமாய் நின்று கொண்டான். ஏனோ அவள் முகத்தில் பட்டு அவள் இதமான மனனிலையை கெடுக்க அவன் விரும்பவில்லை.

 

ஷானவிக்கோ முன்தினம் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மறந்து உற்சாகத்தில் பறந்து கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம். காரணம். இது தான் அவளுக்கு முதல் ஸ்னோ. டிசம்பர் முதல் நாளன்று ஸ்னோ கொட்டியிருந்தாலும் அன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இவளுக்கு வீட்டுக்கு வெளியே செல்லக் கிடைக்கவில்லை. அதனால் இந்த வெண்பனியைத் ஸ்பரிசித்து உணரும் இந்த சுகானுபவம் கிடைக்கப் பெறாதவள், இன்று இந்த முதல் அனுபவத்தில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

 

ட்ராமால் இறங்கியவள் துள்ளிக் குதிக்காத குறை தான். பூந்தூறலாய் விழுந்து கொண்டிருந்த பனிப்பூக்கள், அவள் மேனியை ஸ்பரிசித்து செல்ல அதன் சுகத்தில் சொக்கினாள் இவள். “புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது” என்று பாடி ஆடத் தோன்றிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தரையை மூடியிருந்த பனிக்குள் காலை வைத்து அது புதையும் அழகை ரசித்தவாறே இப்ராவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

காலையிலேயே வீதிகளுக்கு உப்பு தெளித்து பனியை வழித்து இடைஞ்சலற்று பயணிக்க கூடியவாறு  செய்திருந்தனர். ஆனாலும் சில இடங்களில் கரைய ஆரம்பித்த பனி வழுக்கிவிடும். மரங்கள், மலைகள், சூழவிருந்த கட்டிடங்கள் அனைத்துமே வெண்மயமாக காட்சியளித்த அழகில் மனதைப் பறி கொடுத்த ஷானவி, கீழே வீதியைக் கவனிக்காது பராக்கு பார்த்துக் கொண்டு சென்றாள்.

 

இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, இடையிடையே அவளைப் புகைப்படமும் பிடித்தபடி பின்தொடர்ந்து கொண்டிருந்த லீ, ஷானவி எதிரே பாதையை விட்டு விலகி நடப்பதை உணர்ந்து அவளை நோக்கி விரைந்தான். காரணம். அது சமதரையற்ற பகுதி. பனி போர்த்தி இருந்தமையால் பள்ளம், திட்டி தெரியவில்லை. மாறி எங்காயாவது காலை வைத்தால் விழுந்து எழுவது உறுதி.

 

லீ அவளை நெருங்குவதற்கிடையில் ஷானவி ஒரு பள்ளத்தில் காலை வைத்து விழுந்திருந்தாள். “ஷானு” என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்றவன் அவள் பிடித்துக்கொண்டு எழுவதற்கு இலகுவாய் கைகளை நீட்டினான். அவளோ அவனின் உதவியின்றி எழ முயற்சிக்க, முடியாமல் போன ஆத்திரத்தில் முகம் சிவக்க, ஏதோ அவனால் தான் விழுந்தது போல லீயை முறைத்தாள். அதற்குள் அங்கே வந்திருந்த அனார் அவள் தோள்களைப் பற்றித் தூக்கி விட்டான்.

 

“ஷானவி! கவனமா நடவுங்கோ… புதுப்பனி வழுக்கிடும்…”

 

அனார் இயல்பாய் கூறி விட்டு சென்று விட்டான். இவள் எழுந்து விட்டாளே தவிர நடக்க முடியவில்லை. வலது கால் சுளுக்கிக் கொண்டது. ஒரு அடி எடுத்து வைக்கவே வலி உயிர் போனது. தன்னை மீறி கண்கள் பனிக்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள். பிடிக்க எதுவும் இல்லாமல் விழப்போனவளை தன்மீது தாங்கிக் கொண்டான் லீ.

 

“ரிலாக்ஸ் ஷானு… காலில அடிபட்டிடுச்சா? நடக்க முடியலையா?”

 

வலியால் கலங்கிய கண்களை உள்ளிழுத்த படி மெதுவாய், “ஆமாம்” என்றாள். லீயின் தோளணைப்பு தந்த துணையோடு நடக்க முனைந்தும் வலி உயிர் போக அழத் தொடங்கினாள் ஷானவி.

 

“என்னால முடியல லீ… ரொம்ப வலிக்குது… கால் அசைக்க முடியலை…”

 

அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவன் இதயமோ, இரத்தக் கண்ணீர் வடித்தது. உடனடியாக அனுஷராவுக்கு அழைத்து ஷானவி விழுந்ததைச் சொன்னவன், தான் அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதால் இருவராலும் வகுப்புக்கு வர முடியாது என்பதை ஆதூரிடம் தெரிவிக்கச் சொன்னான். பேசி முடித்து தொலைபேசியை வைத்தவன் அதுவரை தன்னில் உடல் பலத்தை முட்டுக் கொடுத்து சாய்ந்து நின்ற ஷானவியை பார்த்தான். அவளோ வலியின் உச்சத்தில் வேறு எதையும் சிந்திக்கும் திராணியற்று லீயை பிடித்தவாறு நின்றிருந்தாள்.

 

அவளை அப்படியே தனது பின் முதுகில் உப்பு மூட்டை தூக்கினான். அவன் அவுக்கென்று அவ்வாறு தூக்கியதில், ஷானவி அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல்,

 

“டேய் மூஞ்சூறு! விடுடா… என்னை என்ன செய்யப் போகிறாய்?”

 

என்று கத்தினாள். இந்திய திரைப் படங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டவளுக்கு எப்படித் தெரியுமாம் இந்த கொரியன்கள் காதலியைக் கூட தூக்குவது உப்பு மூட்டை முறையில் தான் என்று. அவன் முதுகில் ஏற்றியதும் புரிந்து கொண்டு இறுக்கமாய் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

 

ஆனால் மனதுக்குள்ளோ வழக்கம் போல லீயை அர்ச்சிக்கத் தவறவில்லை.

 

“அடேய் பயித்தைங்காய்! உன்னை ஒல்லிப்பிச்சான் என்று நினைத்தால் என்னைத் தூக்கிற அளவு பலமிருக்கா உனக்கு? பரவாயில்லை. ஆனாலும் எதுக்குடா இப்படி உப்பு மூட்டை தூக்கியிருக்கிறாய்? உன்னை குரங்குன்னு திட்டிறதுக்கு கடைசியில் என்னைக் குரங்காக மாற்றி இப்படி உன் கழுத்தைக் கட்டித் தொங்க விட்டு விட்டாயேடா. இது உனக்கே அநியாயமாக தெரியேல்லையாடா…”

 

அவள்  மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, லீ அவளைத் தன் காரின் பின் சீட்டில் கொண்டு சென்று இருத்தி விட்டு லா த்ரோஞ்ச் வைத்தியசாலையை நோக்கி விரைந்தான். உண்மையில் பறந்தான் என்பது தான் சாலப் பொருத்தம்.

 

வைத்தியசாலையில் முதலில் நோயாளியின் பெயர் விபரங்களைப் பதிந்து விட்டு வரவேற்பில் இருக்கும் வைத்தியர் மேலோட்டமாக எந்தவிதமான நோய், எந்தப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்வார். ஷானவியின் காலைப் பரிசோதித்த வரவேற்பறையில் இருந்த வைத்தியர் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? இல்லை வெறும் நரம்பு பிறழ்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு எக்ஸ்ரே படம் எடுத்துக் கொண்டு  இதற்குரிய பிரத்யேக வைத்தியரிடம் செல்லுமாறு பணித்தார்.

 

அங்கே கொடுக்கப்பட்ட வீல்சேரில் ஷானவியை இருத்தி எக்ஸ்ரே எடுப்பதற்குத் தானே தள்ளிக் கொண்டு சென்றான் லீ. அவளின் வீங்கியிருந்த வலது கணுக்காலைக் கண்டு தனக்கே தான் அந்த வலியும் வேதனையும் என்பது போல இவன் துடித்துப் போனான். அதை வெளியேயும் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

 

எக்ஸ்ரே எடுத்ததும் வைத்தியருக்காக இரண்டரை மணிநேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த ஒவ்வொரு நிமிடமும் லீ ஷானவியை கண்ணை இமை காப்பது போலக் காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

வார்த்தைகளால் பேசினான் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் ஒவ்வொரு செயலும் அவன் இத்தனை நாட்களாய் ஷானவியை எந்தளவு தூரம் அவதானித்து வைத்திருக்கிறான் என்பதை அப்பட்டமாக ஷானவிக்கு உணர்த்தியது.

 

அவள் காலையில் உண்டு விட்டு வருவதில்லை என்பதை அறிந்திருந்தவன் அங்கிருந்த கஃபே மெஷினில் சாக்லேட் பாலும் பக்கத்தில் இருந்த மெஷினில் இருந்து கின்டர் சாக்லேட் கேக்கும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். தான் கஃபே அருந்துவதில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் வெறும் மெர்சி (நன்றி) உடன் வாங்கிக் கொண்டாள்.

 

ஒரே இடத்தில் அவள் அமர்ந்திருந்தால் போரடிக்கும் என சிறிது நேரம் தொலைக்காட்சிக்கு முன்னால் அவளது வீல் செயாரை நிறுத்தி வைத்தான். சிறிது நேரத்தில் அவள் தொலைக்காட்சியில் ஆர்வம் காட்டாது போகவே, அவள் யன்னலூடாகத் தெரிந்த மலைகள் சூழ்ந்த இயற்கை அழகை ரசிக்க கூடியவாறு யன்னல் ஓரமாக மாற்றி அமர்த்தினான்.

 

மறுபடியும் கஃபே மெஷினில் இருந்து சித்ரோன் தே (எலுமிச்சம்தேநீர்) எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். என்ன தான் ஹீட்டர் போட்டிருந்தாலும், குளிருக்கும் அவள் வலிக்கும் அந்த தேநீர் ஒரு இதத்தைக் கொடுத்தது என்பது என்னவோ உண்மைதான்.

 

ஆனால் அவனும் எதுவும் பேச முயலவில்லை. இவளும் எதுவும் கேட்டாளில்லை. ஷானவியின் மனதினுள்ளோ வீட்டை நினைத்து ஒரு சுழல் காற்று சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. சந்திரா மாமியிடம் விழுந்து தொலைத்ததுக்கு எவ்வளவு மண்டகப்படி வாங்க வேண்டுமோ யார் அறிவர். ஏதோ இவள் வேண்டும் என்றே விழுந்து வைத்தது போலவ்லவா பேசுவார். இவள் படுத்துக் கொண்டால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது என்ற கவலை அவருக்கு. அது ஷானவிக்கு புரிந்தாலும் வீட்டுக்கு செல்ல என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே உழன்று கொண்டிருந்தாள்.

 

இவள் முகபாவங்களையே அவதானித்துக் கொண்டிருந்த லீக்கு அவள் ஏதோ குழப்பத்தில் சிக்கித் தவிப்பது புரிந்தாலும் வாய் விட்டுக் கேட்க பயமாக இருந்தது. இவ்வளவு நேரமாக அவள் அவனை எதுவும் திட்டாமல்  இருப்பதே அவனுக்கு அதிசயமாகவும் அதே நேரம் ஆறுதலாகவும் இருந்தது.

 

இருந்தாலும் அவள் குழப்பத்தை தன்னால் தீர்க்க முனைந்தால் அது நன்றாக இருக்குமே என எண்ணியவன் என்ன பிரச்சினை என்று கேட்போம் என்று எத்தனித்த போது ஷானவியின் முறை வர அவளை உள்ளே அழைத்தார்கள். அரைகுறை பிரெஞ்சிலும் மீதியை ஆங்கிலத்திலுமாக அவள் விழுந்ததை லீ விவரிக்க வைத்தியர் இவள் காலைப் பரிசோதித்து விட்டு எக்ஸ்ரே படத்தையும் பார்த்தவர்,

 

“சிறு வெடிப்பு இருப்பதால் மாவுக்கட்டுப் போட வேண்டும். குறைந்தது ஒரு கிழைமையாவது காலைக் கண்டபடி அசைக்காது வைத்திருக்க வேண்டும்.இரண்டு கிழமையால் கட்டுப் பிரித்து பார்த்து மறுபடி இரு கிழமைக்கு கட்டுப் போட வேண்டும்” என்றார்.

 

இதைக் கேட்டதுமே ஷானவிக்கு கண்களில் மழுக்கென நீர் தளும்பியது. அவள் வீட்டில் ஒரு நிமிடமாவது ஓய்வெடுக்க முடியுமா என்ன? பராக்கு பார்த்து விழுந்த தன் மீது ஏற்பட்ட கோபத்திலும் தனக்கு முடியாத போது கவனிக்க யாருமில்லையே என்ற சுயபச்சாதாபத்திலும் பல்வேறு உணர்ச்சிக்கலவைகளால் ஆட்பட்டவளால் கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடிந்தது.

 

மாவுக்கட்டுப் போட்டு முடித்ததும் வைத்தியர் கொடுத்த ஊன்றுகோல்களை தன்னிடம் வாங்கிக் கொண்ட லீ வைத்தியசாலை வாயில் வரை அவளை வீல்சேரில் கொண்டு சென்று விட்டு காரை எடுத்து வருவதற்காக வீதிக்கரையில் காத்திருக்கச் சொன்னான்.

 

காரை இவளருகே கொண்டு வந்து நிறுத்தி விட்டு இவளைத் தூக்கி காரில் இருத்தியவன், நேராக சென்டர் வீலில் இருந்த ஒரு பிஸ்ஸரியா முன்பு காரை நிறுத்தினான். அவனின் நோக்கம் அறிந்த இவள்,

 

“வேண்டாம் லீ… நான் வரேல்ல. யாராவது தமிழ் ஆட்கள் பார்த்தால் பிரச்சினை ஆகி விடும்.”

 

நேரமோ மதியமாகி விட்டிருந்தது. இவள் முகத்தைப் பார்த்தால் வீட்டுக்கு போகவும் விரும்புவதாக தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த லீ இறுதியில் நேராக தனது வீட்டுக்கு சென்று காரை நிறுத்தினான்.

 

“என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போ…”

 

அவன் கூறியதும் தான் தாமதம், இதுவரையில் இருந்த இதமான சூழல் மாறி இவள் பழைய ஷானவி ஆனாள். கால் முறிந்ததுக்கு வீட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ என்று குழப்பிக் கொண்டிருந்தவள் தனது ஆற்றுமையை யார் மீது காட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் இந்த செய்கை ஒன்றே போதுமே.

 

“யாரைக் கேட்டு இப்போ உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாய்? நான் கேட்டேனா உன்னை சாப்பாடு தா என்று. இப்போ எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தாய்? ஒழுங்கு மரியாதையாக என்ர வீட்டில கொண்டு போய் விடு. கழுதை… கழுதை…  எனக்கு இருக்கிற பிரச்சினை காணாது என்று இப்ப புதுப் பிரச்சினை உண்டாக்கப் பாக்குறியாடா? இப்ப நான் உன்ர காரில வந்ததை எத்தினை பேர் கண்டாங்களோ? இப்போ இந்த இடத்தில வைச்சு எத்தினை பேர் கண்டாங்களோ? என்றே நான் தவிச்சிட்டு இருக்கிறேன். இதில வீட்டுக்கு வந்து சாப்பிட வேற வேணுமாடா உனக்கு?”

 

அவள் கண்களில் நீர் வழிய கத்தவும்,

 

“ரிலாக்ஸ் ஷானு! உன் முகத்தைப் பார்க்க வீட்டுக்குப் போவது உனக்கு பிடிக்கவில்லை போல இருந்துச்சு. அதுதான் என்ர வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உன் வீட்டிலேயே கொண்டு போய் விடுகிறேன். நீ கோபப்படாதே… ப்ளீஸ்! அழாமல் உட்காரு.”

 

அவளிடம் திரும்பி மொழிந்து விட்டு காரை எடுத்தவன் அவள் வீட்டுக்கருகில் கொண்டு போய் நிறுத்தினான். அவன் தூக்க வரவும் தீ விழி விழித்தவள் ஊன்று கோல் உதவியுடன் தானே விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தாள். இவன் எதுவும் செய்ய முடியாதவனாய், அவள் அருகிலே கூடவே போனான். அவள் அழைப்புமணியை ஒலித்து விட்டு கீழே காத்திருக்கவும் லீயும் உள்ளே நுழைந்து விட்டான். இவள் மாமா வீடு மூன்றாவது மாடி. ஆனால் லிப்ட் இல்லை. அதைப் பார்த்தவன் கதவு திறந்ததும் அவள் மறுக்க மறுக்க கேளாது, வீடு வரை கைகளில் ஏந்தி, தூக்கிச் சென்று விட்டு விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டான். அவன் தனது கைகளில் அவளை அணைத்து ஏந்தி வந்தது, இவளைப் படபடக்க வைக்க வீட்டுக் கதவு முன்னே சற்று நேரம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கதவைத் தட்டினாள்.

 

கதவைத் திறந்த சந்திராவோ காலில் கட்டுடன் நின்றவளைப் பார்த்துக் கொதித்து விட்டார்.

  

“என்னடி இது கோலம்? எங்க போய் விழுந்து தொலைச்சாய் சனியனே!”

 

“அது வந்து மாமி…. பனிக்க சறுக்கி விழுந்திட்டன்.”

 

வெளியே வராத குரலில் தயக்கமாய் உரைத்தாள்.

 

“கண்ணை என்ன பிடரிக்க வைச்சுக் கொண்டு நடந்தனியே… பட்டிக்காடுகளை இங்க கூப்பிட்டு விட்டால் வேற என்ன செய்யுங்கள்? எல்லாம் இந்த மனுசனைச் சொல்ல வேணும். சரி… சரி… வீட்டு வாசலில நின்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் உள்ள வா…”

 

தன்னை மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஊன்று கோல் உதவியுடன் உள்ளே சென்றாள். கால் வலியும் உடல் அயர்ச்சியும் சற்றே ஓய்வெடேன் என்றது. ஆனால் தான் விழுந்து படுப்பது சந்திராவின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அறிந்தவள் உடையை மாற்றிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

 

சந்திரா மதியச் சமையலுக்குரிய ஆயத்தத்தில் இருந்தார். வலியை மறைத்தவாறு அவரிடம் சென்றாள்.

 

“விடுங்கோ மாமி… நான் செய்யுறன்…”

 

“ஏன் பிறகு உன்ர மாமாவிடம் கோள் மூட்டி வைக்கவோ? கால் முறிஞ்ச பிள்ளையையும் வேலை வாங்கினான் என்று.”

 

“ஏன் மாமி அப்பிடிச் சொல்லுறியள்? நான் மாமாட்ட எப்பவாச்சும் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? மாமா பின்னேரம் தானே வருவார். அதனால நான் வேலை செய்தாலும் அவருக்குத் தெரியாது தானே. எனக்கு இருந்தபடி எதுவும் செய்யிறது தான் கஸ்டம். நான் நின்றபடியே அரை மணித்தியாலத்தில சமையல் முடிச்சிடுவேன். நீங்க ஹோலுக்குப் போங்கோ…”

 

ஷானவி என்றைக்குமே திருநாவுக்கரசிடம் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் புகார் செய்ததில்லை. அந்த உண்மை உறைக்க, அதற்கு மேல் எதுவும் பேசாது வரவேற்பறைக்குச் சென்று தொலைக்காட்சியில் மூழ்கினார் சந்திரா.

 

தான் செய்கிறேன் என்று வீராப்பாகச் சொல்லி விட்டாலும் ஷானவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். குளிர்சாதனப் பெட்டிக்கு சென்று பொருட்களை எடுக்கவும் மற்றைய வேலைகளைக் கவனிக்கவும் என விந்தி விந்தி நடந்ததில் கால் வலி உயிர் போனது. இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சமையல் முடித்தவள், பாத்திரங்களையும் கழுவி சமைதலறையை சுத்தம் படுத்தி விட்டு வரவேற்பறைக்குச் சென்றாள்.

 

“மாமி! எல்லாம் செய்திட்டேன். குசினி கூட்ட மட்டும் இல்லை.”

 

மெதுவாய் உரைக்கவும் சந்திராவும் பதிலுக்குத் திட்டாமல்,

 

“சரி… சரி… நான் வீடு கூட்டுறன். நீ போய் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு…”

 

என்று பணித்து விட்டு, சமையலறைக்குச் சென்றார்.

 

தனது அறைக்குச் சென்ற ஷானவியோ சாப்பிட மனமற்று, வைத்தியசாலையில் தந்திருந்த மருந்துகளை எடுத்து விழுங்கி விட்டு கட்டிலில் வீழ்ந்தாள். கண்கள் இரண்டாலும் நீர் வடிய, பல்வேறு சிந்தனைகள் மனதை அலைக் கழிக்க, உடலின் வலியோடு மனதின் வலியும் சேர, மருந்துகளின் தாக்கத்தோடு தூங்கிப் போனாள்.

 

அவள் கண் விழிக்கும் போது அவளின் கண்ணீரிற்கான பரிசை அந்த நல்லூர்க் கந்தன் தரக் காத்திருக்கிறான் என்பதை அறியாமலேயே சுயபச்சாதாபத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த பேதைப் பெண்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: