Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 3

ஊடலுவகை – 03

 

திங்கட்கிழமை காலையில் பத்து மணி அளவில், அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எட்டாம் தளத்தில் இருக்கும் ஒரு மீட்டிங் ரூமில் இன்டெர்வியூவில் தேர்வாகியிருந்த மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். கிட்டத்தட்ட முன்னூறு பேர் கலந்து கொண்ட தேர்வில் இறுதியாக முப்பத்தி நான்கு பேர் தான் தேர்வாகி இருந்தனர். அவர்களுக்கான இறுதி இரண்டு சுற்று இன்று நடக்கவிருந்தது.

 

உமா சற்று பதற்றமாகத் தான் இருந்தாள். முதல் மூன்று சுற்றே மிகவும் கடினமாக இருந்தது. நல்லவேளையாக, கடைசி ஒரு வருடம் மேற்கொண்ட பயிற்சி அவர்களுக்கு பெரிதும் உதவியது. இனி வரும் இரண்டு சுற்றும் எப்படி இருக்குமோ என்னும் பதற்றம் அவளை பாடாய் படுத்த, ரிதன்யா சாவதானமாக அமர்ந்திருப்பதை பார்த்து அவளுக்கு கோபம் வந்தது.

 

“ஏன்டி! கொஞ்சம் கூட சீரியஸாவே இருக்க மாட்டியா? என்னத்த யோசுச்சுகிட்டு, பராக்கு பாத்துட்டு இருக்க?”

 

“இல்லைடி இந்த கம்பெனி, இந்த பில்டிங்ல ஆறு புளோர்ஸ்ல இருக்கு. இதுல அவனை எங்கடி தேடறது? இன்னைக்கு பாத்துடுவேன் தானே?” என்று கவலையோடு கூறியவளை, ஏற இறங்க பார்த்து விட்டு உமா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“ஏய்! சரி சரி விடு. இன்டெர்வியூவை கவனிப்போம். அவனா கண்ணுல பட்டா தான் பேசுவேன். நான் தேடி போகலை போதுமா!” என தன் முடிவிலிருந்து இறங்கி வந்து கேட்க, அவள் சொல்வதை செயல்படுத்துபவள் என்பதாலும், இந்த அளவு இறங்கி வந்ததே பெரியது என்பதாலும் உமா சமாதானம் ஆனாள்.

 

அதன்பிறகு, மேனேஜரல் ரௌண்ட் நடைபெற, அதில் சிரமமான கேள்விகளை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே! ஏனெனில், மிக மிக எளிமையான கேள்விகளை கேட்டு, ஒவ்வொருவரின் தனித்திறமை, ஈடுபாடு போன்றவற்றை மட்டுமே கேட்டு அனுப்பி வைத்தனர். அந்த சுற்று முடிந்தவுடன் மீண்டும் இரண்டு மணிக்கு வரும்படி உணவு இடைவேளைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நிறுவனங்கள் அமைந்திருந்த கட்டிடடங்களின் வெளிப்பகுதியில், அழகிற்காக சுற்றிலும் புல்வெளிகள், குட்டை மரங்கள், பலவிதமான பூச்செடிகளை வளர்த்திருந்தனர். அங்கே இருந்த நான்கு கட்டிடங்களுக்கும், ‘புட் கோர்ட்’ பொதுவாக, நடுவில் இருந்த ‘பி’ மற்றும் ‘சி’ பிளாக்கினை இணைத்த வண்ணம் கிரௌண்ட் புளோர் முழுவதும் இருந்தது.

 

‘ஏ’ மற்றும் ‘டி’ பிளாக்குகள் நீளமாக இருக்க, நடுவில் அமைந்திருந்த இரண்டு பிளாக்குகளும் சற்று உள்ளே தள்ளியபடி இருக்கவும் அந்த அமைப்பு பார்ப்பதற்கு ‘ப’ வடிவத்தில் இருந்தது. நடுவில் இருந்த இரண்டு பிளாக்குகளின் முன்புறம் சதுர வடிவில் உக்காருவதற்கு ஏற்ப கடப்பா கற்களினால் சுவர் எழுப்பி, அதன் நடுவில் உயரம் குறைவாக வளரும் ஒரு ‘ப்ளுமேரியா’ (plumeria) வகை பூ மரம் வைக்கப்பட்டிருந்தது.

 

‘ப்ளுமேரியா’ மரத்தின் மலர்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்க, வெயிலின் தாக்கத்தை தங்கள் முன்னே உயர்ந்து நின்ற கட்டிடங்கள் குறைத்திருக்க, மதிய உணவை முடித்துவிட்டு கட்டிடங்களை பார்த்த வண்ணம், மரத்தை சுற்றி அமைந்திருந்த கடப்பா சுவரின் ஒரு பகுதியில் தோழிகள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

 

“நான் கூட ரொம்ப கஷ்டமா இருக்கும் நினைச்சேன் ரிது. நல்லவேளை, இந்த ரௌண்ட்ல யாரையும் ஷார்ட்-லிஸ்ட் பண்ணலை” என்று கூறிய உமாவிற்கு, இன்னும் ஒரே ஒரு சுற்று தான், அதிலும் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அனால், ரிதுவிடமிருந்து அவளுக்கு எந்த பதிலும் இல்லை.

 

“என்ன ரிது எதுவும் பேச மாட்டீங்கற?” என்றபடி உமா ரிதுவைப் பார்க்க, அவளோ அவள் கையில் வைத்திருந்த மலரில் கவனம் பாதிக்காமல், உமா கூறுவதையும் காதில் வாங்காமல் இடது புறத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள். உமாவும் அங்கே பார்வையை விட,

 

“பாரு, நானா தேடி போகலை. அவனா தான் என் கண்ணுல படறான். நீ டைரக்டா மீட்டிங் ரூம் வந்துடு நானும் அவன்கிட்ட பேசிட்டு வந்துடறேன்” என்று கூறியவாறே, தனது வெள்ளை வண்ண துப்பட்டாவை தலையில் முக்காடிட்டு விழிகள் மட்டும் தெரியும்படி முகத்தை சுற்றி காட்டினாள் ரிதன்யா.

 

அவளிடம் பேசி எந்த உபயோகமும் இல்லை என்பதால், இருவருடைய பைல்களையும், தன்னுடைய ஹாண்ட் பேக்கையும் எடுத்துக் கொண்டு… யுகனை மட்டும் யாரென்று ரிது சொன்ன திசையில் பார்த்து தெரிந்து கொண்டு உமா சென்றுவிட, ரிது சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த யுகனை நோக்கி சென்றாள்.

 

யுகன், வெளிர் காக்கி வண்ணத்தில் பேண்டும், முழுக்கை காட்டன் வெள்ளை சட்டையும் அணிந்து தன் உயரத்திற்கேற்ப உடல்வாகுடன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். சிவா மற்றும் ராஜாவுடன் ஏதோ பேசியபடி தனது ஒரு கையை பேண்ட் பாக்கிட்டினுள் விட்டு, மற்றொரு கையை தேவைக்கேற்ப ஆட்டி பேசியபடி வந்தவனை, கோபத்தை விழிகளில் தேக்கி வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரிது.

 

அவன் முன்னே சென்று இவள் நின்றதும், அவன் கவனிப்பான் என இவள் எதிர்பார்த்தால்… அவனோ அவள் ஏதோ தெரியாமல் இடையில் நின்று விட்டதைப்போல நினைத்து, அவளை அசட்டை செய்து விட்டு கடந்து போக நினைக்கவும் அவளுடைய கோபம் அதிகரித்தது.

 

மீண்டும் அவன் முன்பு வர, சிவாவும் ராஜாவும் முதல் முறையே கவனித்து விட்டதால் அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருக்க, யுகன் அப்பொழுதுதான் பேசியதை நிறுத்திவிட்டு அவளை கவனித்தான். சிவா ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக, “எஸ்…” என்க,

 

அவனை வெட்டும் பார்வை பார்த்து விட்டு கோபமான விழிகளுடன் யுகனை நோக்கி, “நீங்க யுகே… யுகேந்திரன் தான?” அவன் பெயரை உச்சரிப்பதில் இதழ்கள் தாமாக தடுமாற, அவளுக்கு உள்ளுக்குள் படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது. ‘நினைத்ததை பேசி விட வேண்டும். இவ்வளவு பேர் இருக்கும் போது, அவனால் என்ன செய்து விட முடியும்?’ என்ற நம்பிக்கையை மனம் முழுதும் நிறைத்து, நிமிர்ந்து விறைப்பாக நின்றாள்.

 

பெயரை சொல்லும் பொழுது தடுமாறி விட்டு, இப்பொழுது கெத்தாக நிமிர்ந்து நிற்கும் இளம்பெண்ணை பார்க்கையில் யுகனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளை தலை முதல் கால் வரை அளவிடுவது போல பார்த்துவிட்டு, அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான். அவளின் உள்ளத்தில் இருப்பதை விழிவழி படித்தானோ!

 

‘இந்த ‘எம் ஸ்கொயர்’ ஏன் இப்படி பாக்கறான்? கண்டுபிடிச்சுடுவானோ…? கண்டுபிடிச்சா பிடிக்கட்டும். நமக்கென்ன வந்தது? விஷயம் அப்பா காதுக்கு மட்டும் போயிடக்கூடாது கடவுளே!… ஐயோ! இவன் கிட்ட நினைச்சதை பேசி முடிக்கறதுக்குள்ள எவ்வளவு டைம் மைண்ட் வாய்ஸ் ல பேசி என்னை நானே தேத்திக்கணுமோ தெரியலையே! ரிது ஸ்டெடி… ஸ்டெடி… தைரியமா பேசு… எத்தனை பேரை திட்டியிருப்ப? உனக்கு இவன் எல்லாம் சப்ப… ‘ மீண்டும் மீண்டும் தனக்கு தைரியம் சொல்லி மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

 

ரிது தன்னை சிரமப்படுத்தி தயார்படுத்த, யுகனோ அவளை அளவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான். ‘நான் தான் யுகேந்திரன்னு தெரிஞ்சு தானே பேச வந்து இருக்க, நீயே பேசு…’ என்பது போல அவன் தெனாவெட்டாய் நிற்க, அவன் அலட்சியம் இவளுக்குள் எரிச்சலாக இருந்தது.

 

‘திமிர் பிடிச்சவன்… நிக்கிற தோரணையை பாரு!’ மீண்டும் மனதிற்குள் அவனை அர்ச்சித்து விட்டு, “உங்ககிட்ட யாரும் நீங்க ரொம்ப அழகுன்னு சொல்லி இருக்காங்களா?” என மீண்டும் ஒரு கேள்வி கேட்க, அதற்கும் அவன் மௌனமே சாதித்தான். அவனுக்குள் இவளின் செய்கைகளைப் பார்த்து ஒரு சுவாரஸ்யம். கூடவே, ‘இவள் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாள்?’ என்ற ஆராய்ச்சி. ஆனால், முகமோ எந்த உணர்ச்சிகளும் இன்றி அவளை பார்த்துக் கொண்டிருந்தது.

 

‘இவ்வளவு கேக்கிறேன் வாயை திறக்கறானா பாரு! சரியான அழுத்தம்!’ என மனதிற்குள் அவனை ஓயாது வசை பாடியவள், இவன் கிட்ட பதிலை எதிர்பார்ப்பது வீண் என காலம் கடந்து ஒருவழியாக உணர்ந்து கொண்டாள். இனி பதிலை எதிர்பாராமல் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டு சென்று விடலாம் என தீர்மானித்து அருவி போல மனதிலிருப்பதை கொட்டத் தொடங்கினாள்.

 

“பாருங்க! உங்ககிட்ட யாரும் அப்படி சொல்லி இருந்தாங்கனா அதை எல்லாம் நம்பிடாதீங்க. யாராவது உங்க கூட இருக்க வெத்து வேட்டுங்க அப்படி உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க…” என சொல்லிவிட்டு பார்வையை ராஜா மீதும் சிவா மீதும் செலுத்த,

 

‘அடப்பாவி இவன் என்ன செஞ்சு தொலச்சானோ! எங்களையும் வறுத்து எடுக்கிறாளே!’ என்று மனதிற்குள் புலம்பிய சிவா, அதிர்ந்து நின்ற ராஜாவை இழுத்துக் கொண்டு, “மச்சான்! நீ பேசிட்டு வா டா நாங்க அங்கே நிக்கிறோம்!” என யுகனிடம் கூறிவிட்டு ராஜாவுடன் முன்னே நகர்ந்தான்.

 

எதற்குமே அசையாமல் பிடித்து வைத்த பிள்ளையாராய் யுகன் நிற்க, தனது மூடிய முகத்திற்குள் அவனை முடிந்த வரை முறைத்துவிட்டு ரிதுவே தொடர்ந்தாள். “அப்பறம் யாராவது காமெடிக்கு சொன்ன பொய்யை நம்பிட்டு நாம ரொம்ப அழகு, மன்மதன் அப்படின்னு நினைச்சுக்கிட்டு, பாக்கிற பொண்ணை எல்லாம் வேணாம் சொல்லிட்டு திரியறதை நிறுத்திக்கங்க. மோர் ஓவர் நீங்க அவ்வளவு அழகெல்லாம் இல்லை.

 

இந்த காலத்துல கல்யாணத்துக்கு பொண்ணுங்க கிடைக்கிறதே கஷ்டம், இதுல உங்கள மாதிரி இருக்கிறவங்களுக்கு…” என்று ஏற இறங்க அவனை பார்த்தவள், “ரொம்ம்ம்பப… கஷ்டம் தான்…” என இதழ் சுளித்து கூறினாள்.

 

யுகனின் பார்வை வினாடிக்கு குறைவான நொடி, வெண்ணிற துப்பட்டாவின் பின்னால் சுழலும் இதழ்களில் பதிந்து மீண்டும் அவள் விழிகளில் நிலைத்தது.

 

‘ஹய்யோ! பர்தா போட்டு இருக்கணும் போல, முகத்துல துணிய கட்டிட்டு, நாம முறைச்சா கூட உத்து பாக்கிறானே! ஆனா, என்ன ரியாக்ஷன் இது? முகத்துல ஒண்ணுமே கண்டுபிடிக்க முடிலயே! சரியான அழுத்தம். சரி இன்னும் கொஞ்சம் திட்டிட்டு கிளம்புவோம். இவன் என்ன நினச்சா நமக்கென்ன?’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், அவனிடம் தொடர்ந்து,

 

“அப்படி உங்களுக்கு சாமுத்திரிகா லக்ஷணத்தோட… தான் பொண்ணு வேணும்னா முதல்ல போட்டோ பாத்து உங்களுக்கு பிடிச்சு இருந்தா அதுக்கப்பறம் பொண்ணு வீட்ல பேசுங்க. அதைய விட்டுட்டு அந்த பொண்ணு வீட்ல போய் குழப்பம் பண்ணறது, வாலை ஆட்டறது இதெல்லாம் இத்தோட நிறுத்திக்கங்க” என கண்களாலே எச்சரித்தவள், அவனை திரும்பியும் பார்க்காது ‘டி’ பிளாக் நோக்கி இன்டெர்வியூ நடந்த தளத்திற்கு சென்றாள்.

 

ரிதுவிற்கு எதையோ சாதித்துவிட்ட திருப்தியோடு, ஒரு வித தடுமாற்றமும், பதற்றமும் சூழ்ந்து கொண்டது. அதற்கு காரணம் யுகனின் நேர்கொண்ட பார்வையா? அவனின் அழுத்தமா? அலட்சியமான தோரணையா? என்பதை அவளே அறியாள். ஆனால், மனம் அமைதி அடையும் என்று செய்ய நினைத்த செயல், அவள் மன அமைதியை இழக்கச் செய்தது போல இருந்தது. புதிதாய் ஒருவித பதற்றம், உடல் நடுங்காமலேயே நடுங்குவது போன்றதொரு பிரம்மை அவளுள் சூழ்ந்தது.

 

செல்லும் அவளை தலையை மட்டும் திருப்பி பார்த்த யுகன், யோசனையில் புருவத்தை சுருக்கினான். அவள் நிச்சயம் பொய் பேசவில்லை. அவள் கோபத்திலும், ஆத்திரத்தில் துளியும் பொய்யில்லை என புரிந்தவன், அவளின் கோபம் எதற்காக இருக்கும் என்று புரியாததால், அவள் பேசியதின் அர்த்தத்தை ஆராய்ந்தவனுக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது.

 

ரிதுவோ, ‘ஏன் அப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி பாத்தான்? உண்மையிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியலையோ!’ என சரியாக கணிக்க தொடங்கியவள், அதற்குள் அவனுடைய அலட்சியமும், உதாசீனமும், தோரணையும் நினைவில் எழ, ‘சரியான திமிரு! ஒருத்தி பேசறாளே அப்படின்னு எதும் ரியாக்ஷன் தரானா, இல்லை பதில் தான் பேசறானா? என்ன ஒரு அலட்சியம்! எவ்வளவு அழுத்தம்! அவனுக்கு சமயம் கிடைச்சா இன்னும் நல்லா நோஸ்கட் கொடுக்கணும்’ என தனது பதற்றத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து கோபத்தோடே மீட்டிங் ஹால் சென்றாள்.

 

“ஏய் என்னடி அந்த துப்பட்டாவை கழட்டிட்டு வர வேண்டியது தானே!” என உமா கடிந்து கொண்ட பிறகுதான், முகத்தில் இருக்கும் திரையையே உணர்ந்தவள், வேகமாக அதை களைந்தாள்.

 

கோபத்தில் உம்மென்று இருந்தவளைப் பார்த்த உமா, “என்னடி, அவங்களை திட்டுனா தான் மனசே ஆறும்ன்னு டைலாஃக் பேசிட்டு இப்படி இருக்க?”

 

“அவன் ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான் டி” என்று கோபத்தில் பொரிந்தவளை,

 

“என்ன ரிது, அவங்க கண்டிப்பா கொஞ்சம் பெரியவங்களா தான் இருப்பாங்க. நேத்து வரை கூட, அவங்களை பாத்ததில்லை இப்படி பேசுனப்ப எதுவும் பெரிசா தெரில. இன்னைக்கு பாத்துட்ட, அப்பறமும் மரியாதை தர மாட்டீங்கற. பொதுவா நீ இப்படி இருக்க மாட்டியே?” என்று கேட்டு, ‘தவறு செய்யும் பொழுது சுட்டிக் காட்டுவது தோழமையின் அழகு’ என்பதை நிரூபணம் செய்து கொண்டிருந்தாள் உமா.

 

“சாரி டி. நான்… ஐயோ! அவங்ககிட்ட பேசும்போது எப்படி பேசிட்டு வந்தேன்னு தெரியலையே!” என நெற்றியில் அடித்தவள், விழிகளை மூடி, நடந்ததை நினைவு கூர்ந்து சற்று யோசித்துவிட்டு முகம் மலர்ந்தாள். “அப்பாடா! அப்படி எதுவும் வா… போ… ன்னு பேசிடலை டி. இனி கவனமா இருக்கேன்” என்று புன்னகையுடன் கூறினாள்.

 

அதன்பிறகு அறையினுள் வந்திருந்த, ஹெட்ச். ஆர் யார் யார் எங்கே இன்டெர்வியூ அட்டென்ட் செய்ய வேண்டும் என்கிற விவரம் கூறி, ஒவ்வொருவரையும் அனுப்பி வைத்தார். உமாவும், ரிதன்யாவும் யுகேந்திரனின் டீம் வேலை செய்யும் பத்தாம் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: