Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 31

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 31

அத்தியாயம் 31 – காதலர் ஒப்பந்தம்

     கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மாமரத்தில் பட்டுப் போல் சிவந்த இளம் இலைகளுக்கு மத்தியில் கொத்துக் கொத்தாக மாம் பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்கள் இருக்குமிடந் தெரியாதபடி வண்டுகளும், தேனிக்களும் மொய்த்தன. அவற்றின் ரீங்கார சப்தம் அந்த வனப்பிரதேசம் முழுவதிலும் பரவிப் பிரகிருதி தேவியை ஆனந்த பரவசமாக்கிக் கொண்டிருந்தது.

சற்றுத் தூரத்தில் ஒரு முட்புதரின் மேல் காட்டு மல்லிகைக் கொடி ஒன்று படர்ந்திருந்தது. அந்தக் கொடியில் குலுங்கிய பூக்களிலிருந்து இலேசாக வந்து கொண்டிருந்த நறுமணத்தினால் கவரப்பட்டுத்தான் போலும், அதன்மேல் அத்தனை பட்டுப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் இறகுகளுக்குத்தான் எத்தனை விதவிதமான நிறங்கள்! அவற்றில் எவ்வளவு விதவிதமான வர்ணப் பொட்டுக்கள்! நல்ல தூய வெள்ளை இறகுகளும், வெள்ளையில் கறுப்புப் பொட்டுக்களும், ஊதா நிற இறகுகளில் மஞ்சள் புள்ளிகளும், மஞ்சள் நிற இறகுகளில் சிவப்புக் கோலங்களும் – இப்படியாக ஒரே வர்ணக் காட்சிதான்! பிரம்ம தேவன் இந்தப் பட்டுப் பூச்சிகளைச் சிருஷ்டித்த காலத்தில் விதவிதமான வர்ணங்களைக் கலந்து வைத்துக் கொண்டு அவற்றை விசித்திரம் விசித்திரமாய்த் தீட்டி வேடிக்கை செய்திருக்க வேண்டும்.

பட்டுப் பூச்சிகள் ஒரு நிமிஷம் அந்தக் காட்டு மல்லிகைக் கொடியின் மீது உட்கார்ந்திருக்கும். அடுத்த நிமிஷம் ஒரு காரணமுமின்றி அவை கொல்லென்று கிளம்பி வானவெளியிலெல்லாம் பறக்கும். அவை பறக்கும் போது அவற்றின் இறகுகள் படபடவென்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால், “ஐயோ! இந்த அழகான பூச்சி இப்படித் துடிக்கின்றதே! அடுத்த கணத்தில் கீழே விழுந்து உயிரை விட்டுவிடும் போலிருக்கிறதே!” என்று நாம் தவித்துப் போவோம்.

பட்டுப் பூச்சியின் இறகுகள் எப்படித் துடித்தனவோ, அதைப் போலவே துடித்தது அந்த நேரத்தில் கல்யாணியின் இருதயம் என்று சொல்லலாம். பாழடைந்த கோவிலைச் சுற்றி அடர்த்தியாயிருந்த செடி கொடிகளை விலக்கிக் கொண்டு முத்தையன் வருவதை அவள் பார்த்தாள். பார்த்த கணத்தில் அவளுடைய உள்ளம் ஆனந்த பரவசம் அடைந்தது. ஆனால், அடுத்த கணம், முன் போல் அவன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டு ஓடிப்போகாமலிருக்க வேண்டுமே என்று எண்ணியபோது அவளுடைய இருதயம் மேற்சொன்னவாறு துடிதுடித்தது.

*****

     அன்றிரவு, முகமூடி தரித்த கள்வனாய் வந்த முத்தையன் அப்படி ஒரே நிமிஷத்தில் மாயமாய் மறைந்து போன பிறகு கல்யாணி அடைந்த ஏமாற்றத்துக்கும் ஏக்கத்திற்கும் அளவே கிடையாது. அவ்வாறு நேர்ந்து விட்டதற்குக் காரணம் தன்னுடைய புத்தியீனம் தான் என்று அவள் கருதினாள். இத்தனை நாளும் அவனைப் பார்க்கலாம், பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவாறு காலம் போய்விட்டது. இனிமேல் அந்த நம்பிக்கைக்குக் கூட இடமில்லையே? முத்தையன் இப்படியே திருடனாயிருந்து ஒரு நாள் போலீஸாரிடம் அகப்பட்டுக் கொண்டு தண்டனையடைய வேண்டியது; தான் இப்படியே தன்னந் தனியாக உலகத்தில் வாழ்ந்து காலந்தள்ள வேண்டியது என்பதை நினைக்க நினைக்க அவளால் சகிக்க முடியவில்லை. இதற்கு முன்னெல்லாம் அவள் சாதாரணமாய்க் கண்ணீர்விட்டு அழுவது கிடையாது. பஞ்சநதம் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் தன்னுடைய நெஞ்சை இரும்பாகச் செய்து கொண்டாள் என்று பார்த்தோமல்லவா? ஆனால் அன்றிரவு சம்பவத்திற்குப் பிறகு அவளுக்குத் தன்னையறியாமல் அழுகை அழுகையாய் வந்தது.

கல்யாணியின் அத்தை இதையெல்லாம் பார்த்துவிட்டுப் பயந்து போனாள். அன்று இராத்திரியே அவள் கூச்சல் போட்டுத் தட புடல் பண்ணித் திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேணுமென்று சொன்னாள். கல்யாணி அதெல்லாம் கூடவே கூடாதென்று பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டாள். அதற்குப் பிறகு கல்யாணி தானே அழுது கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் இரவு எல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டும் இருப்பதைப் பார்த்து அத்தை, “அடி பெண்ணே! உனக்கு என்னமோ தெரியவில்லை. அன்று இராத்திரி திருடன் வந்ததிலிருந்து பயந்து போயிருக்கிறாய். மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்ற வேண்டும். கொஞ்ச நாளைக்குப் பூங்குளத்துக்குப் போய் எல்லாருடனும் கலகலப்பாய் இருந்துவிட்டு வருவோம், வா! அப்போது தான் உனக்குப் பயம் தெளிந்து சித்தம் சரியாகும்” என்றாள்.

*****

பூங்குளத்துக்குப் போகலாம் என்றதும் அத்தை ஆச்சரியப்படும்படியாகக் கல்யாணி உடனே சம்மதித்தாள். அவளுக்கு என்னவெல்லாமோ பழைய ஞாபகங்கள் வந்தன. கொள்ளிடக்கரைக் காடும், பாழடைந்த கோயிலும் அவளைக் கவர்ந்து இழுத்தன. ஆகவே, தகப்பனாருக்குக் கடிதம் போட்டு வரவழைத்து எல்லாருமாகப் பூங்குளம் போய்ச் சேர்ந்தார்கள்.

கல்யாணி இரண்டொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருந்தாள். பிறகு, இடுப்பிலே குடத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஆற்றுக்குக் குளிக்கப் போகிறேன் என்று கிளம்பினாள். அவள் சிறு பெண்ணாயிருந்த காலத்திலேயே அவளை யாரும் எதுவும் சொல்ல முடியாதென்றால், இப்போது பெரிய பணக்காரியாய், சர்வ சுதந்திர எஜமானியாய் ஆகிவிட்டவளை யார் என்ன சொல்லமுடியும்?

*****

     முத்தையனை இப்போது பார்த்ததும் கல்யாணி எழுந்து நின்றாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் சற்று நேரம் பிரதிமைகளைப் போல் நின்றார்கள். கல்யாணிக்கு எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததனால் ஏற்பட்ட திகைப்பு ஒரு புறம், ஏதாவது தான் தவறாகச் சொல்லி அல்லது செய்து அதனால் மறுபடியும் முத்தையன் போய்விடப் போகிறானே என்ற பயம் இன்னொருபுறம்.

ஆனால் முத்தையன் இந்தத் தடவை அப்படியொன்றும் ஓடிப் போகிறவனாயில்லை. திகைப்பு சற்று நீங்கியதும், கல்யாணியின் சமீபமாக வந்தான்.

“கல்யாணி! நீதானா? அல்லது வெறும் மாயைத் தோற்றமா? என்னால் நம்ப முடியவில்லையே!” என்றான்.

“அம்மாதிரிச் சந்தேகம் உன்னைப் பற்றி எனக்கு உண்டாவதுதான் நியாயம். இந்த நிமிஷம் நீ என் முன் இருப்பாய்; அடுத்த நிமிஷம் மாயமாய் மறைந்து போவாய்!” என்று கல்யாணி சொல்லி, சட்டென்று அவன் ஓடிப் போகாமல் தடுப்பவள் போல் கைகளை விரித்துக் கொண்டு நின்றாள்.

முத்தையன் கலகலவென்று சிரித்தான். கல்யாணிக்கும் தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. இருவரும் சிரித்தார்கள். எத்தனையோ காலமாகச் சிரிக்காதவர்களாதலால், இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வைத்துக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு, நாவல் மரத்தின் மேல் கூட்டிற்குள் இருந்த குருவிக் குஞ்சுகள் வெளியே தலையை நீட்டி, பயம் நிறைந்த சின்னஞ்சிறு கண்களால் அவர்களைப் பார்த்து விழித்தன.

முத்தையன் சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, “கல்யாணி! என்னால் நம்ப முடியவில்லை தான். எதற்காக நீ இங்கு வந்தாய்? பழைய முத்தையனைத் தேடிக் கொண்டா? அந்த முத்தையன் இப்போது இல்லையே! கொள்ளைக்கார முத்தையன் அல்லவா இப்போது இருக்கிறான்? அவனுக்கும் உனக்கும் நடுவில் இப்போது இந்தக் கொள்ளிடத்தைவிட அகண்டமான பள்ளம் ஏற்பட்டிருக்கிறதே!” என்றான்.

“முத்தையா! நானும் இப்போது பழைய கல்யாணி அல்ல; காட்டில் குதூகலமாய்த் திரிந்து கொண்டிருந்த ‘வனதேவதை கல்யாணி’ செத்துப் போய் விட்டாள். இப்போது இருப்பவள் கைம்பெண் கல்யாணி.”

“ஐயோ! நிஜமாகவா! அந்தப் பாவி இதற்காகத்தானா உன்னைக் கல்யாணம் செய்து கொண்டான்?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் முத்தையன்.

“அவரை ஒன்றும் சொல்லாதே, முத்தையா! அவர் புண்ணிய புருஷர். அவரைப் போன்றவர்கள் சிலர் இந்த உலகத்தில் இருப்பதால் தான் இன்னும் மழைபெய்கிறது.”

“புருஷனிடம் அவ்வளவு பக்தியுள்ளவள் இங்கே ஏன் வந்தாய், இந்தத் திருடனைத் தேடிக்கொண்டு?” என்று முத்தையன் ஆங்காரமாய்க் கேட்டான்.

கல்யாணியின் கண்களில் கலகலவென்று ஜலம் வந்தது. முத்தையன் மனம் உருகிற்று. “கல்யாணி! நான் சுத்த முரடன். ‘முரட்டு முத்தையா’ என்ற பெயர் எனக்குத் தகும். உன்னைக் காணாத போது ஒவ்வொரு நிமிஷமும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ‘இந்த ஜன்மத்தில் காண்போமா?’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த பிறகு முரட்டுத் தனமாய்ப் பேசி உன் கண்களில் ஜலம் வரச்செய்கிறேன். என்னால் உலகத்தில் எல்லோருக்கும் கஷ்டந்தான். எதற்காக இந்த உலகில் பிறந்தோம் என்று சில சமயம் தோன்றுகிறது.

“எதற்காகப் பிறந்தாய்? இந்தத் தாயில்லாப் பெண் கல்யாணியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளத் தான் பிறந்தாய், முத்தையா! வாழ்க்கையில் ஒரு தடவை நாம் பெரிய பிசகு செய்துவிட்டோ ம். கடவுள் நம் இருவருடைய இருதயத்தையும் ஒன்றாகச் சேர்த்து வைத்தார். அதற்கு விரோதமாக இருவரும் ஆத்திரத்தினாலும் பிடிவாதத்தினாலும் காரியம் செய்தோம். மறுபடியும் அம்மாதிரி தப்பு செய்யவேண்டாம். நான் சொல்வதைக் கேள். இப்படி வெகுகாலம் உன்னால் காலங் கழிக்க முடியாது. கட்டாயம் போலீஸார் ஒரு நாள் பிடித்து விடுவார்கள். கொஞ்ச நாள் அடக்கமாய் இருந்துவிட்டு, கலவரம் அடங்கியதும் கப்பலில் ஏறி அக்கரைச் சீமைக்குப் போய் விடு. சிங்கப்பூர், பினாங்கு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய் சௌக்கியமாயிருக்கலாம்…”

முத்தையன் மறுபடியும் திடுக்கிட்டான். தன் மனத்திலிருந்ததையே அவளும் சொன்னதைக் கேட்டு அவன் வியப்படைந்தான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “கல்யாணி! என்னை ஊரைவிட்டு ஓட்டுவதில் தான் உனக்கு எவ்வளவு அக்கறை” என்றான்.

“இன்னும் என்னை நீ தெரிந்து கொள்ளவில்லையா, முத்தையா! உன்னை மட்டுமா போகச் சொல்கிறேன் என்று நினைக்கிறாய்? நீ முதல் கப்பலில் போனால் நான் அடுத்த கப்பலில் வருவேன்.”

“நிஜமாகவா, கல்யாணி! இன்னொரு தடவை சொல்லு. இவ்வளவு சொத்து சுதந்திரம், வீடு வாசல், ஆள்படை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இந்தத் திருடனுடன் கடல் கடந்து வருகிறேன் என்றா சொல்கிறாய்?”

“ஆமாம்; இவை எல்லாவற்றையும் விட நீதான் எனக்கு மேல். இந்தச் சொத்துக்களையெல்லாம் பண்ணியாரின் விருப்பத்தின்படி நல்ல தர்மங்களுக்கு எழுதி வைத்து விடுவேன். போகிற இடத்தில் நாம் உழைத்துப் பாடுபட்டு ஜீவனம் செய்வோம்.”

“மறுபடியும் நீதானே எனக்காகத் தியாகம் செய்கிறாய், கல்யாணி! நான் என்னவெல்லாமோ எண்ணியிருந்தேன்! கொள்ளையடித்த பணத்தையெல்லாம் ஒரு நாள் உன் காலடியில், போடவேணுமென்று நினைத்தேன். ஆனால் நீயோ குபேர சம்பத்தைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வருகிறேன் என்கிறாய். ஆனால் முன் தடவை மாதிரி இந்தத் தடவை நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். கப்பலேறிப் போய்விட நான் தயார். ஆனால், அதற்கு முன்னால் நான் ஒப்புக்கொண்ட காரியம் ஒன்றை மட்டும் செய்து விட வேண்டும். சென்னைப் பட்டணத்துக்குப் போய் அபிராமியை ஒரு தடவை பார்த்துவிட வேண்டும்! அதற்கு ஏற்பாடெல்லாம் செய்து விட்டேன். கல்யாணி! ஒரு மாதம், இரண்டு மாதம் பொறுத்துக் கொள்…”

“ஐயோ! அவ்வளவு நாளா? அதற்குள்ளே அபாயம் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?”

“இல்லை, கல்யாணி! ரொம்ப ஜாக்கிரதையாயிருப்பேன். நேற்றுவரை இந்த உயிர் எனக்கு இலட்சியமில்லாமலிருந்தது. சாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று உன்னைப் பார்த்த பிற்பாடு, இத்தனைக்குப் பிறகும் உன்னுடைய அன்பு மாறவில்லையென்று தெரிந்த பிறகு, இந்த உயிர் மேல் எனக்கு ஆசை பிறந்து விட்டது. வெகு ஜாக்கிரதையாயிருப்பேன்” என்றான் முத்தையன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3

அத்தியாயம் 3 – பாழடைந்த கோவில்      பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல்

கல்கியின் பார்த்திபன் கனவு – 51கல்கியின் பார்த்திபன் கனவு – 51

அத்தியாயம் 51 காளியின் தாகம் பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு

கல்கியின் பார்த்திபன் கனவு – 65கல்கியின் பார்த்திபன் கனவு – 65

அத்தியாயம் 65 குந்தவியின் நிபந்தனை பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள்.