Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30

அத்தியாயம் 30 – வஸந்த காலம்

மறு நாள் உச்சிப் போதில், ஜலம் வறண்ட ராஜன் வாய்க்காலின் மணலில், இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த புன்னை மரங்களின் நிழலில், முத்தையன் மேல் துணியை விரித்துக்கொண்டு படுத்திருந்தான். அப்போது இளவேனிற் காலம். சித்திரை பிறந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன. மரஞ் செடி கொடிகள் எல்லாம் தளதளவென்று பசும் இலைகள் தழைத்துக் கண்ணுக்கு குளிர்ச்சியளித்தன. அவற்றின் மேல் இளந்தென்றல் காற்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு வேப்பமரம் பூவும் பிஞ்சுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வந்த மனோகரமான வாசனையை முத்தையன் நுகர்ந்து கொண்டிருந்தான். அந்த மரத்தின் அடர்த்தியான கிளைகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டு ஒரு குயில் ‘கக்கூ’ ‘கக்கூ’ என்று கூவிக் கொண்டிருந்தது.

சென்ற சித்திரைக்கு இந்தச் சித்திரை ஏறக்குறைய ஒரு வருஷ காலம் முத்தையன், இந்தப் பிரதேசத்தில் திருடனாகப் பதுங்கி வாழ்ந்து காலங் கழித்தாகி விட்டது. அந்த நாட்களில் இரண்டு பெரிய தாலுக்காக்களிலுள்ள ஜனங்களெல்லாம் தன்னுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கதி கலங்கும்படியும் அவன் செய்திருந்தான். அத்தைகைய பிரதேசத்தை விட்டு இப்போது ஒரேயடியாகப் போய்விடப் போகிறோம் என்பதை எண்ணிய போது அவனுக்கு ஏக்கமாய்த் தானிருந்தது.

மேற்படி தீர்மானத்துக்கு அவன் வந்து சில தினங்கள் ஆகி விட்டன. திருடப் போன வீட்டில் எதிர்பாராதபடி கல்யாணியைச் சந்தித்து, அதனால் சொல்ல முடியாத அவமானமும் வெருட்சியும் அடைந்து, ஒரு வார்த்தை கூடப் பேசாமல், திரும்பி ஓடினான் என்று சொன்னோமல்லவா? போலீஸ் லாக் அப்பிலிருந்து தப்பிய அன்று எப்படி வழிதிசை தெரியாமல் ஓடினானோ அதே மாதிரி தான் இன்றும் ஓடினான். கடைசியாக எப்படியோ தன்னைச் சென்ற ஒரு வருஷமாக ஆதரித்துக் காப்பாற்றி வரும் கொள்ளிடக்கரை பிரதேசத்தை அடைந்தான். இரவுக்கிரவே ஆற்றைத் தாண்டி அக்கரைப் படுகைக்கும் வந்துவிட்டான். அந்த இரவிலேயே அவன் தன் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் தொடங்கினான். இனி வெகு காலம் இப்படியே காலந்தள்ள முடியாது என்று அவனுக்கு நிச்சயமாகி விட்டது. போலீஸ் பந்தோபஸ்துகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தன. எப்படியும் ஒரு நாள் பிடித்துவிடுவார்கள். அப்படிப் பிடிக்காவிட்டாலும் இவ்வாறு நிர்ப்பயமாய் வெகு காலம் நடமாட முடியாது என்று அவனுக்குத் தோன்றிவிட்டது. கல்யாணியைப் பார்க்கும் ஆசைதான் அவனை இத்தனை காலமும் அந்தப் பிரதேசத்தில் இருத்திக் கொண்டிருந்தது. அந்த ஆசை இவ்வளவு விபரீத முறையில் நிறைவேறவே, முத்தையன் மனங்கசந்து போனான்.

தான் இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு எங்கேயாவது அக்கரைச் சீமைக்குக் கப்பல் ஏறிப் போய்விடுவதென்று அவன் தீர்மானித்தான். அதற்கு முன்னால், சென்னைக்குப் போய் அபிராமியை எப்படியாவது ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. ஆனால் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?

இதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது தான் ராயவரம் உடையார் தன்னைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் தெரிவித்திருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவர் வரச் சொன்னது எதற்காக இருக்குமென்பதை அவன் ஒருவாறு ஊகித்திருந்தான். அவருடைய யோக்கியதையை முன்பே அறிவானாதலால், அவரால் அபாயம் ஏற்படும் என்று அவன் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் அந்தத் திருடனுக்குப் போய் உதவி செய்வதில் அவனுக்கு இஷ்டமில்லாமலிருந்தது. அதனால் தனக்கு முடிவில் நன்மை ஏற்படாதென்று அவனுடைய உள்ளத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று.

ஆனால் இப்போது கப்பலேறிப் போய்விட வேணுமென்ற ஆசை பிறந்ததும், உடையாருடைய ஒத்தாசையினால் தான் அது சாத்தியமாகக் கூடுமென்று அவன் தீர்மானித்தான். அதனால் தான் அவரை அவன் போய்ப் பார்த்ததும், அவருடைய ‘சுங்கத் திருட்டு’ வேலைக்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டதும், அதற்குப் புறப்பட வேண்டிய நாள் வரையில் கொள்ளிடக்கரைப் பிரதேசத்தில் இருப்பதே யுக்தமென்றும், அதுவரை எவ்வித சாகஸமான காரியத்திலும் இறங்குவதில்லையென்றும் முடிவு செய்து அந்தப்படியே நிறைவேற்றி வந்தான். ஆகவே கொஞ்ச நாளாக அவனுடைய சந்தடி அடங்கியிருந்தது.

*****
இன்று, ராஜன் வாய்க்கால் மணலில் படுத்துக் கிடந்த போது, அவனுக்கு மறுபடியும் கல்யாணியின் ஞாபகம் வந்தது. அவளுடைய நினைவைத் தன் மனத்தில் வளர்த்துக் கொண்டு வந்ததே பெரும் பிசகென்றும், அவளை மறந்துவிடத்தான் வேண்டுமென்றும் அவன் தீர்மானித்திருந்தானாயினும், அவனையறியாமலே அவனுடைய உள்ளம் அவள் பால் சென்றது. அன்று இரவு அவளைப் பார்த்தபோது, “முத்தையா! என் நகைகள் தானா உனக்கு வேண்டும்?” என்று அவள் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவனுடைய நினைவுக்கு வந்தன. அவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்று அறிய அவன் தாபங் கொண்டான். அவள் ஏன் அவ்வீட்டில் தன்னந்தனியாக ஒரு கிழவியுடன் மாத்திரம் இருந்தாள் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வியப்பாயிருந்தது. “ஐயோ! ஒரு நிமிஷம் அவள் முகத்தை நன்றாய்ப் பார்த்துவிட்டு, ‘சௌக்கியமாயிருக்கிறாயா?’ என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் வந்தோமா?” என்று அவன் மனது ஏங்கிற்று.
இப்படியெல்லாம் நினைக்க நினைக்க, அவனுடைய மனத்தில் திடீரென்று ஓர் ஆசை எழுந்தது. தானும் கல்யாணியும் குழந்தைப் பருவந் தொட்டு ஓடி விளையாடி எத்தனையோ நாள் ஆனந்தமாய்க் காலங்கழித்த அந்தப் பாழடைந்த கோவிலை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. கல்யாணியின் கல்யாணத்துக்கு முன்பு அவளைத் தான் கடைசியாகப் பார்த்த இடமும் அதுவேயல்லவா? அன்று அவல் ‘ஏன் வந்தேனென்றா கேட்கிறாய்? வேறு எதற்காக வருவேன்? உன்னைத் தேடிக் கொண்டுதான் வந்தேன்’ என்று கண்ணில் நீர் ததும்பக் கூறிய காட்சி இப்போது அவன் கண் முன்னால் நின்றது. இந்தப் பிரதேசத்தைவிட்டு தான் அடியோடு போவதற்கு முன்பு, அந்தக் கோவிலை இன்னொரு தடவை பார்த்துவிட வேண்டுமென்று எண்ணினான். இந்த எண்ணம் தோன்றிச் சிறிது நேரத்திற்கெல்லாம், தன்னை மீறிய ஏதோ ஒரு சக்தியினால் கவரப்பட்டவன் போல் அவன் பூங்குளத்தை நோக்கி விரைந்து நடக்கலானான். அந்தச் சக்தி இத்தகையது என்பது அன்று சாயங்காலம் மேற்படி பாழடைந்த கோவிலை நெருங்கியபோது அவனுக்கே தெரிந்து போயிற்று. ஆம்; அந்தச் சக்தி கல்யாணிதான்!

முத்தையன் கோவிலை அடைந்தபோது, அங்கே, தான் எத்தனையோ நாள் உட்கார்ந்து ஆனந்தமாய்ப் பாடிக் காலங்கழித்த அதே மேடையின் மீது, கல்யாணி உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவனுடைய நெஞ்சு ‘திக்திக்’கென்று அடித்துக் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10

அத்தியாயம் 10 – கார்வார் பிள்ளை      திருப்பரங்கோவில் மடம் மிகவும் புராதனமானது. மிக்கச் செல்வாக்குள்ளது. மடத்துக்குச் சொந்தமாக ஆயிரம் வேலி நிலமும், மடத்தின் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் வேலி நிலமும் இருந்தன. இப்போதுள்ள பண்டார சந்நிதிக்கு முந்தி

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1

3. இரண்டு குழந்தைகள்   இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது. “கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப்