Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 05

அத்தியாயம் – 05

 

வழக்கமாக மாலை வகுப்பு முடிய எங்காவது வெளியே செல்வது லீ யூ வோன்னின் வழக்கம். கிளப்புக்கோ, பப்புக்கோ போவான். மனது சரியில்லை என்றால் ஹைவேயில் காரை மனம் போன போக்கில் செலுத்துவான். அவனாய் சுய நிலைக்கு வந்து எங்கே இருக்கிறோம் என்று பார்த்து பின்னர் வீடு திரும்புவான். இவ்வாறு ஒரு நாள் ஜெனிவா, இன்னொரு நாள் இத்தாலி கூட போயிருக்கிறான்.

 

ஆனால் இன்றோ எதற்கும் மனமில்லாமல் நேராக வீட்டுக்குச் சென்றவன் படுக்கையில் வீழ்ந்தான். மனம் முழுவதும் ஷானவியே ஆக்கிரமித்து நின்றாள். அவன் அவளை முத்தமிட முனைந்த போது அவளின் வேகமான இதயத் துடிப்பும், படபடத்த இமைகளும் ஏதோ ஒன்றை உணர்த்திய அவள் பார்வையும் மீண்டும் மீண்டும் மனக் கண் முன் வந்து மனதை அலைக் கழிக்க அவளைப் பார்க்க வேண்டும் என்று எழுந்த பேராவலில் தனது மொபைலில் இருந்த அவள் படங்களை ஒவ்வொன்றாகத் தட்ட ஆரம்பித்தான்.

 

பல புகைப்படங்கள் அவள் அறியாமல் எடுத்தவை. அவள் இதை பார்த்தால்,

 

“எப்படி என் அனுமதி இல்லாம என்னை போட்டோ எடுத்தாய்?”

 

என்று சண்டை போடுவதை  கற்பனை செய்தவன் இதழ்களில் அழகிய முறுவல்.

 

அனுஷராவின் பேஸ்புக்கில் இருந்து சுட்டிருந்த ஒரு புகைப்படத்தில் ஷானவியை மட்டும் குளோஸப்பாக குறப் பண்ணி  வைத்திருந்தான். அந்த போட்டோவில் அவள் முகத்தை வருடியவன்,

 

“உன் முகத்தில் இருக்கும் பரு கூட உனக்கு எவ்வளவு அழகாக இருக்கு ஷானு… யூ ஆர் மை ஸ்வீட் லிட்டில் இடியட்…  குமாவோ (gomawo நன்றி) மை டியர் ஸ்வீட் லிட்டில் பபோ(babo ஸ்டுப்பிட் இடியட்)… உன்னை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால் என்னுடயை வாழ்க்கையின் இந்த இருண்ட நாட்களை எப்படி கடந்திருப்பேனோ தெரியவில்லை. கிரான்….கிரான்… மெர்சி ம செர்ரி…

 

வகுப்பில் அவ்வளவு சண்டை போடுபவன்  அதற்கு நேரெதிராக இப்போது அவளை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான். இது காதலா? நட்பா? என்ன விதமான உறவு என்றால் அது அவனுக்கே தெரியாது. ஷானவியோடு சிறு பிள்ளையாய் சண்டை போடுவதில் அவளைக் கோபப்படுத்தி ரசிப்பதில் தன் கவலைகள் மறந்து கொண்டிருந்தான். அவள் கோபத்தில் ஒரு இதம் கண்டான். அவள் வெறுப்பில் ஒரு சுகம் கண்டான்.

 

ஷானவியை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் உந்த அவசரம் அவசரமாக ஜக்கெட்டை அணிந்து கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டான்.

 

அவன் வசிப்பது கிரினோபிள் சென்டர் வீலில் இருந்த ஒரு அப்பார்ட்மென்டில். ஷானவியின் மாமா வீடு கொஞ்சம் தள்ளி பதினைந்து நிமிடங்கள் நடை தூரத்தில் இருந்தது. முதல் நாளே அவளைப் பின் தொடர்ந்து அவள் வீட்டைப் பார்த்து வைத்திருந்தான். அவளைப் பார்க்கும் ஆவல் எழும் போதெல்லாம் அவள் வீட்டின் முன்பிருந்த ஃபாரில் போய் உட்கார்ந்து கொண்டு ஒரு பீரையோ வைனையோ உறிஞ்சிக் கொண்டு அவள் வெளியே வரும் நேரத்திற்காய் காத்திருப்பான்.

 

பல நாட்கள் ஏமாற்றமே மிஞ்சினாலும் சில நேரங்களில் ஷானவி பொருட்கள் வாங்கும் சில்லு வைத்த பையை உருட்டிக் கொண்டு சற்றுத் தள்ளி இருந்த சிம்பிளி சூப்பர் மார்க்கெட்டிற்குச் செல்வதுண்டு. வார விடுமுறை நாட்களில் ஆத்விக்குக்கு சைக்கிள் ஓட்டிப் பழக்குவதற்கு அவனோடு அருகிலிருந்த பூங்காவிற்குச் செல்வாள்.

 

ஆத்விக்கை பாஸ்கெட் பால் பயிற்சிக்கு கூடவே அழைத்துச் சென்று ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கூட்டி வருவதும் இவளே. இப்படியான காரணங்கள் ஏதாவதற்காக அவள் வெளியே வரும் போது தேவியின் தரிசனத்தை தூர இருந்தே தரிசித்துக் கொள்வான் லீ. வேலை வெட்டி எதுவுமில்லாமல் இருப்பவனுக்கு முழுநேர வேலையே இதுவாய் போய்விட்டது.

 

அன்று ஷானவியின் தாக்கத்தில் ரொம்பவே ஆட்பட்டிருந்தவனின் எண்ணங்கள் டெலிபதி மூலம் ஷானவியையும் எட்டியதோ, இவன் அவள் வீட்டை நெருங்குகின்ற சமயத்தில் சிம்பிளிக்கு செல்வதற்காக பையோடு வெளியே வந்து கொண்டிருந்தாள். அப்படியே நேராக அவளை பின் தொடர ஆரம்பித்தான் லீ. அவளின் ஒற்றை ஜடை அசையும் அழகில் மனதை பறி கொடுத்தவன் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை மெதுவாய் விசில் அடிக்கலானான்.

 

விசில் சத்தத்தில் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்த ஷானவி லீ யூ வோனைக் கண்டதும் தடுமாறிப் போனாள். இதயம் படபடக்க வேக எட்டு எடுத்து வைத்தவள் சிம்பிளி சூப்பர் மார்க்கெட் கார் பார்க்கிங்கில் நுழைந்தாள். அவள் பயத்தை போக்க வேண்டும் என்று நினைத்த லீ, அவளது வேகத்திலேயே அவளைப் பின் தொடர்ந்தான்.

 

கார்ப் பார்க்கிலிருந்து லிப்ட்டின் மூலமோ அல்லது படிகள் மூலமோ ஒரு மாடி மேலே செல்ல வேண்டும் கடைக்கு. லிப்ட்டை அமத்தி விட்டுக் காத்திருக்க பொறுமையற்றவளாய் படிகளில் தாவி  ஏறினாள் ஷானவி.

 

“ஷானு… ப்ளீஸ் நில்லு…! உன் கூட பேச வேண்டும்…”

 

அவன் சொன்னதே காதில் விழாதவளாய் தொடர்ந்து படியேறினாள். அவளை நிறுத்தும் வகை தெரியாது எட்டி அவள் கையைப் பிடித்தான். விதிர்விதித்து திரும்பியவள், கையை உதறினாள். ஆனால் அவன் பிடியோ இரும்பாய் கனத்தது.

 

“லீ….! ப்ளீஸ் கையை விடு…! தமிழ் ஆட்கள் நிறைய பேர் வாற இடம்… யாராவது பார்த்தா மாமிட்ட சொல்லி பிரச்சினை ஆகிடும்…”

 

“உன்னோடு பேச வேண்டும் என்று நிற்க சொன்னால் நிற்காமல் ஓடினால் நான் என்ன செய்வதாம்…?”

 

மியூசியத்தில் நடந்ததற்கு மன்னிப்பு கேட்போம் என்று எண்ணித்தான் அவளை மறித்ததே. ஆனால் அவன் பிறவிக் குணம் தலை தூக்கவே, அவளை நிறுத்திய காரணத்தை மறந்து அவள் பிடித்த கரத்தை விடாமல் தன்னை நோக்கி இழுத்தான். சூப்பர் மார்க்கெட்டின் வாயிலை அடைந்திருந்தனர் இருவரும். அங்கிருந்த ஒரு கதவைத் திறந்தால் சூப்பர் மார்க்கெட் என்ற இடத்தில் தான் இருவரும் நின்றிருந்தார்கள்.

 

லீ இழுத்த இழுப்பில் அவன் மீது விழப் போனவள் ஒரு மாதிரி காலை திடமாக ஊன்றித் தன்னை சமப்படுத்திக் கொண்டாள்.

 

“லீ…! நீ ரொம்ப லிமிட் தாண்டிப் போய்ட்டு இருக்கிறாய்… கிளாஸ்ல தான் ஏதோ ஃபன்னுக்கு என்னோடு விளையாடுகிறாய் என்று பார்த்தால் பொது இடங்களில் வைத்து என்ன வேலை இது… இப்போ கையை விடு… அல்லது சத்தம் போட்டு போலீசை கூப்பிடுவேன்… பதினேழுக்கு (பொலிஸ் தொலைபேசி இலக்கம்) கூப்பிடவா?”

 

அவனின் முகத்துக்கு மிக நெருக்கமாக நின்று முகம் சிவக்க அடிக்குரலில் சீறியவளைப் பார்த்தவனின் பார்வையில் சுவாரஸ்யம் வந்து ஒட்டிக் கொண்டது. கோபத்தால் துடித்த அவள் அதரங்களோ அவனை பாடாய்படுத்த தன்னை மறந்து அவளை நோக்கி குனிந்தான். ஷானவியோ அவன் செய்யப் போவதை உணர்ந்த அடுத்த நொடியே மறுகையில் இருந்த பையை கீழே போட்டு விட்டு அவன் கன்னதில் பளார் என்று ஒன்று கொடுத்தாள்.

 

இதை சற்றும் எதிர்பாராத லீ திகைத்துப் போய் அவள் கையை விட தனது பையை எடுத்துக் கொண்டு சிட்டாக உள்ளே பறந்து விட்டாள் ஷானவி. வாங்க வேண்டிய பொருட்களை வேக வேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பணத்தை செலுத்தி விட்டு லீ வருகிறானா என்று கூடத் திரும்பிப் பார்க்காது வீட்டை நோக்கி ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.இங்கே லீயோ அந்த இடத்திலேயே அமரந்திருந்தான். அவள் அடித்த அடி வலிக்கவில்லை என்றாலும் முதலில் ஏற்படுத்திய சினத்தையும் தாண்டி ஏன் தான் அவளோடு மட்டும் இப்படி நடந்து கொள்கிறோம்? அவளைக் கண்டதும் என் கட்டுப்பாட்டை மீறி அவளை அடையத் துடிப்பது ஏனோ? என்று சுய அலசலில் ஈடுபட்டவன் நெடுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தான்.

 

வீட்டுக்கு வந்து தான் ஒழுங்காக மூச்சு விட்ட ஷானவிக்கு பின்னர் லீயைப் பற்றி சிந்திக்க நேரமின்றி வீட்டு வேலைகள் பின்னி எடுத்தன. அனைத்தையும் முடித்துக்கொண்டு படுக்கையில் விழுந்தவளுக்கு ஒரு சொட்டுத் தூக்கம் வரமாட்டேன் என்றது. அவள் மனம், மூளை, நினைவுகள் முழுவதையும் லீயே ஆக்ரமித்துக் கொண்டான்.

 

அவன் இறுக்கிப் பிடித்திருந்த இடம் இப்போதும் வலிப்பது போல உணர்ந்தவள் மெதுவாய் கையை தடவி விட்டாள்.

 

“அடேய்… மூஞ்சூறு…! உனக்கு வரவர சேட்டை கூடிப் போச்சுடா… ஏதோ பெரிய ஆம்பிளை சிங்கம் மாதிரி மூஞ்சியைக் கிட்டக் கொண்டு வந்து பயம் காட்டுறது… அடேய் உன்ர வண்டவாளம் எல்லாம் முதல் நாளே தண்டவாளம் ஏறியாச்சுடா… உன்ர பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட செல்லாது… இன்றைக்கு தந்த அடியோட இனி வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பாய் என்று நம்பிறன்…

 

இருந்தாலும் நான் உன்னை அடிச்சிருக்கக் கூடாதுடா… உன்னாலதான் என்னை எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் நான் ஏன் டென்சனாகி உன்னை அடிச்சேன்னு தெரியேல்ல. ஆனால் நீ கிட்ட வந்தாலே நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுதேடா… ஹார்மோன் எல்லாம் பிழையான ஆளிட்ட வேலையை காட்டுது போல இருக்கே… அடேய் நல்லூர்க் கந்தா! நீ பார்க்கிற வேலை நல்லா இல்லை. சொல்லிப்போட்டன்…

 

அடேய் ஒல்லிப்பிச்சான்! கடையில வைச்சு என்ன பேச வந்தாய்? ஏதோ சொல்ல வந்தாய்… அப்புறம் தான் கிஸ் பண்ணப் போறது போல ஸீன் போட்டாய்… ஏன்டா இந்த கொலைவெறி என்னில உனக்கு? நான் என்பாட்டில தானே இருந்தேன்… நீ தான் என்ர தலைமயிரில பபிள்கத்தை ஒட்டி எல்லா பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டு வைச்சாய்…

 

வீட்டிலே மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என்றிருக்கும் எனக்கு உன் சேட்டைகள் மனதுக்கு ஒரு மாற்றமாய் உற்சாகத்தை தந்தது. உன்னோடு சண்டை போடுகையில் நான் ஊரில் சந்தோசமாக இருந்த காலத்துக்கு போன மாதிரி ஒரு உணர்வு.

 

உன் ஜக்கெட் பாழாகும் என்று உண்மையா நான் எதிர்பார்க்கவில்லைடா.  டிசோலேடா… (ஸாரி) உன் அம்மா தந்த கிப்ட் என்று சொன்னாயே. இதை நான் எப்படி உனக்கு திரும்ப தரப் போறனோ தெரியேல்ல. இனிமேல் இப்படி ஏதும் சேதம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்.

 

நாளைக்கு அடிச்சதுக்கு எப்படி பழி வாங்கப் போறானோ தெரியலையே… ஜக்கெட் விசயத்துக்கு நான் மன்னிப்பு கேட்க தான் வேண்டும். அதோட அவ்வளவு அவசரப்பட்டு அடிச்சிருக்கவும் கூடாது… ஆனால் நேரில போய்க் கேட்டா அந்த கொரியன் ரோபோ ஓவரா ஸீனைப் போடுமே… அப்போ எப்படி கேட்கலாம்… ஆ… ஐடியா…!”

 

விறு விறு என கட்டிலை விட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றவள், ஆத்விக் கேட்டான் என்று அன்று தான் தயாரித்திருந்த சாக்கிலேட் கேக்கில் செவ்வகமாய் ஒரு துண்டு வெட்டி ஒரு பாக்கிங் ஃபாக்ஸ்ஸில் வைத்தவள், கேக்கின் நடுவில் வெட்டி பூசி விட்டு மீந்திருந்த கிரீமை நொசில்லில் போட்டு 미안합니다 (mianhamnida, ஸாரி) என்று கூகிளாண்டவரின் உதவியுடன் கொரியன் பாசையில் அழகாய்  எழுதினாள். ஐசிங் கலையாதவாறு அழகாய் பாக் செய்து வைத்து விட்டு கட்டிலில் சென்று வீழ்ந்தவளுக்கு இப்போது தான் கொஞ்சம் மனசு சாந்தியடைந்தது.

 

தனது வீட்டில், கட்டிலில் அந்த நீண்ட உருளைத் தலையணையைக் கட்டி பிடித்த படி புரண்டு கொண்டிருந்த லீ யூ வோன்னும் தூக்கம் வராமல் ஷானவி ஜெபம் தான் ஓதிக் கொண்டிருந்தான்.“அவளுக்கும் எனக்கும் எதுவுமே எந்த விதத்திலும் எப்போதும் பொருந்தப் போவதில்லை என்று தெரிந்தும் என் மனம் ஏன் அவளையே நாடுகிறது. கொரியாவில இருந்து நிம்மதி தேடி இங்கு வந்தால் இன்னும் என் நிலையை மோசமாக்கிட்டியே மை டியர் ஸ்வீட்  பபோ…

 

இப்படி என்னை அவஸ்தை பட வைச்சு விட்டு எப்படி உன்னால நிம்மதியா சிரிச்சுப் பேச முடியுது ? நானும் ஸாரி கேட்க வந்திட்டு உன்னை கிஸ் பண்ண முயன்றிருக்க கூடாது… அது என் தப்பு  தான்… உன்னை நெருங்கினாலே என் சிந்தனை எல்லாம் மாறி விடுதே… நான் என்னடி செய்ய? என்னைப் பார்த்து உன்னை பயப்பிட வைச்சிட்டனே… உண்மையா ஸாரி ம செர்ரி… (மை டியர்) நாளைக்கு முகத்துக்கு நேரே ஸாரி கேட்கிறேன் பபோ…

 

இனிமேல் இன்றைக்கு நடந்தவை போல நடக்காமல் பார்த்து கொள்ளுறன் ஷானு… !”

 

பல மணி நேரங்கள் வெற்றுச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் தனது அலமாரியை திறந்து அதிலே ஒரு தந்தப் பெட்டியில் வைத்து இருந்து கொண்டை ஊசியை எடுத்தான். அதை ஒரு ஃபாக்சில் அழகாக பாக் பண்ணி, நாளை வகுப்பிற்கு கொண்டு செல்லத் தனது புத்தகப்பையில் எடுத்து வைத்துக் கொண்டான். இப்போது சிறிது ஆசுவாசமடைந்த நெஞ்சத்தோடு  நிம்மதியாய் தூங்க முயன்றான். ஆனால் மூடிய கண்களுக்கிடையில் தனது நீண்ட முடியை அழகிய கொண்டை ஒன்றைப் போட்டு, அவன் கொடுக்கப் போகும் அந்த கொண்டை ஊசியை அணிந்தவாறு ஷானவி வந்து நின்றாள்.

 

இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்க முடிவு செய்து கொண்டு அடுத்த நாளை எதிர் நோக்கி தூங்கிப் போயினர்.

 

காலையில் விடியப் போவது நட்பா? பகையா?2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: