Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 18

 

மடாரென்று விழுந்த அடியில் கண்களில் பூச்சி பறந்தது அஞ்சலிக்கு… வாயில் பற்கள் பட்டுக் கிழிந்து ரத்தம் கொப்பளித்துத் தரையில் தெரித்தது. அடித்தவன் பீம்பாயைப் போன்று ஆஜானுபாகுவாய் இருந்தான். ஆனால் அவனது வீரத்தை மெல்லிடையாளிடமா காண்பிப்பது. அதற்குக் காரணமிருந்தது. கட்டிப் போட்ட பெண்ணின் உடலில் கை வைத்ததால் அவள் பலமெல்லாம் திரட்டி ஒரு உதை விட்டிருந்தாள் சிறிது நேரத்திற்கு முன்பு. அதற்குப் பழி வாங்குகிறான் போலும்.

 

“நோ… “ தடுத்தார் அவர்.

 

“அவளை இப்படி முரட்டுத்தனமா ஹேண்டில் பண்ணாதே”

 

“நண்பரோட பொண்ணு… அன்பு தடுக்குதோ…”

 

“ஆமாம்.. சொல்லப் போனா ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சில வேலைகளில் என்னோட பெயரையும் சேர்த்து அவர் தட்டிட்டு போய்ட்டார். நான் டம்மியாக்கப் பட்டேன். இருந்தாலும் அதுக்காக இவளை அடிக்கிறது எனக்கு நியாயமா தெரியல”

“அப்ப உண்மையை சொல்ல சொல்லுங்க”

 

ராஜேஷ்வரின் கைகளில் அஞ்சலியிடமிருந்த ஆதாரங்கள் அப்படியே கற்றையாய்.

 

“இதில் இருக்கும் நம்பர் வரிசைகளைக் கண்டு பிடிக்கணும். அல்மோஸ்ட்  நெருங்கிட்டேன். இருந்தாலும் சில எண்கள் இடையில் விட்டுப் போயிருக்கு. அது உனக்குத்தான் தெரியும். அதை சொல்லிடு அதுக்கப்பறம் உன் காதலன் கூட செட்டில் ஆக நானே ஏற்பாடு செய்றேன்”

 

மௌனமே பதிலாகக் கிடைத்தது. ‘பலவீனமானவர்கள் ஜெயிப்பதில்லை அஞ்சலி. வெற்றிக்கும் பயத்துக்கும் இடையில் எட்ட முடியாத தூரம்’ மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

 

“அஞ்சலி இங்க இருக்கவங்க எல்லாரும் இதயமே இல்லாதவங்க. எதை செய்யவும் தயங்க மாட்டாங்க. அதனால் உண்மையை சொல்றது உனக்குத்தான் நல்லது”

 

சில வினாடிகள் கழித்துத் தீர்மானமாய் சொன்னாள்

“முடியாது… என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ”

“உயிரோட இருக்கணும்னா உண்மையை சொல்லு”

 

“என்னை நீ கொல்ல மாட்ட… ஏன்னா இந்த கோட் பூர்த்தியாக என்னோட  உதவி தேவை”

 

வில்லத்தனமாய் சிரித்தார் ராஜேஷ்வர் “உன்னைக் கொல்லல ஆனால் உன்னைத் தேடி வெறிப் பிடிச்சு சுத்திட்டு இருக்கும் ஜெய்யைக் கொல்லலாமே”

 

“அவனுக்கு ஏதாவது ஆனால் உனக்கு ஒரு விவரமும் கிடைக்காது”

 

சில வினாடிகள் யோசித்தவர் அங்கிருந்தவனிடம் “ரத்தன் பேசாம அவனைத் தூக்கிட்டு வந்து சித்திரவதை பண்ணால்தான் உண்மையை வாங்க முடியும்”

அவளை இழுத்து சென்று அறையில் அடைக்க உத்தரவிட்டான்.

 

“அந்தக் கோட வச்சு என்ன கிழிக்கப் போறோம்” என்றான் ரத்தன் எரிச்சலுடன்.

 

“முட்டாள். இந்தியன் கவர்ன்மென்ட் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு இருக்கும்னு நினைச்சியா… அந்த கோட் இருக்கும் இடத்தில்தான் நம்ம பயோ வெப்பனின் விவரங்கள் இருக்கு”

 

“இருந்தால் என்ன…  ஒரு வருஷம் ஆச்சு அந்த வெப்பனைக் கண்டுபிடிக்க… அதோட மூலத்தை வச்சு என்ன செய்யப்போறாங்க. அவங்க அதிலிருக்குற பொருட்களைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இந்தியாவோட பாதி ஸ்டேட்டில் இதைப் பயன்படுத்திருப்போம்”

 

“இந்தியர்களைக் குறைச்சு எடை போடாதே… மின்னல் வேகத்தில் மாற்று மருந்து கண்டுபிடிப்பாங்க… சாப்ட்வேர்லேருந்து சாட்டிலைட் வரைக்கும் . லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருப்பாங்க. இவங்க மாத்து மருந்து கண்டுபிடிச்சுட்டா அப்பறம் இத்தனை வருடம் செலவழிச்சு உயிர்கொல்லி நோயைக் கண்டுபிடிச்சுப் பரப்பும் குரூப்ல இருக்குறவங்க எப்படி பணம் சம்பாதிப்பாங்க. உனக்கும் எனக்கும் கோடிக்கணக்கா எப்படிப் படியளப்பாங்க”

 

“இதெல்லாம் என் மூளைக்கு எட்டல… அதுக்குத்தான் உன்னை மாதிரி படிச்சவன் கூட இருக்கணும்னு சொல்றது”

 

“நம்ம எப்படியாவது அந்த பார்முலாவின் சோர்சை அழிச்சுடணும்னு உத்தரவு. அதை புரிஞ்சுகிட்டா இந்நேரம் மாற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கூட இறங்கிருக்கலாம்”

 

“அப்படி ஏதாவது நடந்திருந்தா இவ்வளவு பெரிய போஸ்டில் இருக்கும் உங்களுக்குத் தெரியாமையா இருக்கும்”

 

“அரசாங்கம் யாருக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் சொல்லும். எல்லாத்தையும் எனக்குத் தெரியப்படுத்தனும்னு அவசியமில்லை”

 

“அப்பறம் ஏன் தனசேகர் செத்து ஒரு வருஷமா பார்முலாவைக் கண்டுபிடிக்காம விட்டிங்க”

 

“அப்ப அவர் எந்த அளவுக்கு இந்த முயற்சியில் முன்னேறி இருக்கார்னு எங்களுக்கே தெரியாது. தகவல் கிடைச்சதும் தனசேகர் பார்முலாவைக் கண்டுபிடிச்சு மறைச்சு வச்சிருக்கார்னு நம்பவே முடியல. விவரத்தை வாங்குறதுக்குள்ள  அந்தாளைக்  கிஷோர் போட்டுத் தள்ளிட்டான். காரியமே கெட்டுருச்சு”

 

“கிஷோர் எதுக்குப் போட்டுத் தள்ளினான்”

 

“அஞ்சலியை அவனுக்குக் கல்யாணம் பண்ணி தனசேகரை செக் வைக்கலாம்னு ஒரு ப்ளான்ல தான் எல்லா திட்டமும் நடந்தது.  நம்ம கேங்கில் ஒருத்தரை சந்திக்கப் போயிருக்கான். இத்தனைக்கும் காடு மலைன்னு ரகசிய இடத்தில்தான் சந்திச்சான். ஆனால் நம்ம கெட்ட நேரம்  எதிர்பாராதவிதமா தனசேகர் அவனைப் பார்த்துட்டார். அதனால் கிஷோர் அவரைப் போட்டுத் தள்ள வேண்டியதா போயிருச்சு”

 

ஆதாரங்களை எடுத்துப் பார்த்த ராஜசேகர் “இதில் விட்டுப் போன க்ளூவை எப்படிக் கண்டுபிடிக்கிறது” தலையைப் பிய்த்துக் கொண்டார்.

 

தே சமயம் தனக்கு முன்பு இருந்த ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்தார் மணிவண்ணன். தெரியாத எண்ணிலிருந்து ஜெய்யை அழைத்தது அவர்தான். அவர் கேட்ட முதல் கேள்வி

 

“நீ என்னைப் பாத்து ஆதாரங்களை ஒப்படைக்காம எப்படி ராஜேஷ்வருக்கு நேரடியா தந்த”

 

“ராஜேஷ்வர் என் பாஸ். அவர் மூலமாய்த்தான் எனக்கு உத்தரவுகளைத் தந்திங்க. கிடைச்ச ஆதாரங்களை அவரிடம் தரச் சொல்லித்தான் சொன்னிங்க. அதை அப்படியே செய்தேன். ஆனால் தனசேகர் உங்களிடம் ஒப்படைக்க சொல்லி இறக்குறதுக்கு முன்னாடி தெரிவிச்சிருக்கார். அவர் இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆச்சு. இந்த ஒரு வருடத்தில் சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். அதனால் எனக்கு இடப்பட்ட கட்டளைப்படி செஞ்சேன்”

 

“ஓகே ஃபாஸ்ட் இஸ் ஃபாஸ்ட். இருந்தாலும் ஆதாரங்களை எல்லாம் போட்டோ எடுத்து வைக்கணும்னு தோணுச்சே அதைப் பாராட்டுறேன்”

 

அந்த மேஜையின் அளவிற்கே பெரிது படுத்தப்பட்ட ஆதாரத்தைப் பார்த்தவர், அந்தக் காரின் நம்பர் ப்ளேட்டின் கறுப்பு எண்களை நோக்கினார். அதில் அழுத்தமாய் சில கோடுகள் மிக லேசாகத் தெரிந்தது. ரோமன் எண்களைப் போன்று தெரிந்த அவற்றை விடுபட்ட இடங்களில் சேர்த்தார். இறுதியாக கிடைத்த எண்ணை வரிசைப்படி எழுதினார்.

 

“நான் போகட்டுமா… அஞ்சலியைக் காப்பாத்தணும் சார்” பரிதாபமாகக் கேட்டான்.

“ஏற்கனவே ஒரு டீம் போயாச்சு” ஜெயின் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் தனது லேப்டாப்பில் அந்த எண்களை தட்டியபடியே சொன்னார் மணிவண்ணன்.

“நான் அவளைப் பாக்கணும் சார்”

“நாம் வேலைக்கு இப்படிப் பொசுக் பொசுக்குன்னு உணர்ச்சி வசப்படக்கூடாது”

அமைதியாகத் தலை குனிந்தான்.

தனது கையிலிருந்த டோக்கனில் அந்த நொடியில் தெரிந்த நம்பர்களையும் அவரது லேப்டாப்பில் அழுத்தினார்.

“உங்களது சேப்டி லாக்கர் திறக்கப்பட்டது” என்ற அறிவிப்புடன் ஸ்க்ரீனில் ஒரு இரும்பு லாக்கர் ஒன்று கீறிச்சிட்டபடியே திறந்தது.

 

“வெர்ச்சுவல் லாக்கர்” முணுமுணுத்தான் ஜெய்.

 

“அந்த காலம் மாதிரி ஒரு இரும்புப் பெட்டகத்திலா சீக்ரெட்டைப் பூட்டி வைக்க முடியும்” கிண்டலாகக் கேட்டபடி அதிலிருந்த போல்டரைத் திறந்தார். அதில் முழு அலங்காரத்துடன் அஞ்சலி கிஷோருடன் நடந்த நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படம். தனியாக பச்சை நிற லேஹாங்காவில் ஜொலித்தவளைக் கண்டு திகைத்தான் ஜெய்.

 

“இது… என்க்ரிப்டெட் போட்டோவா… அஞ்சலியோட போட்டோல பார்முலாவை என்க்ரிப்ட் செய்திருக்கிங்க. கோட் இல்லாதவங்களுகுப் படம் கிடைத்தாலும் டிக்ரிப்ட் செய்ய முடியாது. ஒரு பலனும் இல்லை”

 

அந்த புகைப்படத்தை சில வேலைகள் செய்து மற்றொரு எண்ணிற்கு அனுப்பினார். அதன்பின் அந்த போல்டெரை அழித்தார்.

 

“யூ ஆர் ரைட். ஆனால் பார்முலா உயிர்கொல்லி நோயைப் பத்தி இல்லை. அதிலிருந்து மனிதர்களைக்  காக்கும் மருந்தைப் பத்தி. மருந்து கண்டுபிடிச்சாச்சு. அதன் ரகசியத்தை இந்த படத்தில் போட்டு தனசேகர் வச்சிருக்கார்”

 

“இன்னும் ஒரு சந்தேகம் சார்”

 

“என்னது”

 

“இந்த ஃபோல்டர் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டதா காட்டுது. அதாவது தனசேகர் இறந்த தேதிக்கு அப்பறம். அப்படின்னா யார் இதை ஓபன் பண்ணது. மருந்து கண்டுபிடிச்சிருக்காங்கன்னா அதுக்கான செட்டப் எப்படி செய்யப்பட்டது. இத்தனை முயற்சியும் மாற்று மருந்து கண்டு பிடிக்கத்தான்னு நினைக்கிறேன். ஆனால் எதிரிகள் அதை இன்னும் நம்ம நோயைப் பத்தித் தெரிஞ்சுக்கத்தான் முயற்சி பண்றதா நினைச்சுட்டு இருக்காங்க. அவங்களை திசை திருப்பி விடவே தனசேகர் கொல்லப்பட்டார்னு நினைக்கிறேன்”

 

“ரொம்ப கேள்வி கேட்குற உன் மாமனார் மாதிரியே… போய் உன் அஞ்சலியைப் பாரு… “ என்றபடி காரிலிருந்து இறக்கி விட்டார்.

 

“தூரத்தில் தெரிந்த ஷெட் ஒன்றை சுட்டிக் காட்டியவர். “அங்கதான் அவளை மறைச்சு வச்சிருக்காங்க. சீக்கிரம் வந்துடு. ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வெடி விபத்து நடக்கப் போறதா தகவல் கிடைச்சிருக்கு”

 

“சார் ஒரே ஒரு கேள்வி “

 

“சரி லாஸ்ட் கொஸ்டியன்…”

 

“கிஷோர் யாரு?”

 

“அவன் டபிள் ஏஜென்ட். எதிரி டீமிலிருந்து நமக்காக வேலை செய்றவன். அவனை வச்சுத்தான் அவங்களோட திட்டத்தைத் தவிடுபொடியாக்கிட்டு இருக்கோம்.  யூ ஹவ் ஒன்லி பிப்டீன் மினிட்ஸ் டு சேவ் யுவர் லவ்” என்றபடி காரைக் கிளப்பினார்.

 

அவன் சென்ற சமயம் அங்கு ஒரு ரணகளம் ஆரம்பமாகியிருந்தது. அங்கு ரவி அவனது டீமுடன் சரியாக நுழைய, ஜெய் அவர்களுடன் இணைந்து கொண்டான். அந்த கோடவுன் முழுவதும் சாக்கு பைகள் மற்றும் கால்நடைத் தீவனங்கள்  நிரம்பியிருப்பதைப் போலத் தோற்றத்தை உருவாக்கிவிட்டு பின்னணியில் சதி வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் அவர்களது டீம்.

அதில் அஞ்சலியைக் கடத்தியவனைக் கண்டுகொண்ட ஜெய் அவனது வாழ்நாளில் எழக் கூட முடியாத அளவுக்கு தனது வித்தைகளால் வீழ்த்தினான்.

 

“சொல்லுடா… அஞ்சலி எங்கிருக்கா” அவன் சுட்டிக்காட்டிய திசையை நோக்கி எதிர்பட்டவர்களைத் தூக்கி மிதித்த வண்ணம் சென்றான்.

 

“ரவி, இவனுங்களை கவனிச்சுக்கோ… நான் அஞ்சலியைக் கூட்டிட்டு வரேன்”

 

அஞ்சலி முகம் ரத்தம் கட்டி வீங்கியிருந்தது. கண்களை அவளால் திறக்கவே முடியவில்லை. அந்த தடியன் அடித்த அடியில் தலை வெடித்துவிடும் போல வலித்தது. காதிலிருந்த தோடு வேறு காதைக் கிழித்து தொங்கியது. ஒரு பக்கம் காது செவிடாகிவிட்டது போல ஒரு உணர்வு. கைகளை முறுக்கியதில் எலும்பு முறிந்ததைப் போலத் தெரிந்தது. அந்த இடம் அப்படியே புஸ்சென்று வீங்கியிருந்தது. விண் விண்னென்று தெறித்த வலியால் சுற்றுப் புறத்தில் நடப்பதை அவளால் கவனிக்கவே முடியவில்லை. அதையும் தாண்டி யாரோ  அங்கும் இங்கும் ஓடும் ஓசை. உருளும் சத்தம். எல்லாவற்றையும் கேட்டபடி மெதுவாக ஒரு மீள முடியா உறக்கத்துக்கு நழுவிச் சென்றாள்.

 

அவ்வளவு களேபரத்துக்கு நடுவே ஆதரவாய் அவளை வருடிய கைகள் அவளது மரத்து போன கைகளில் சூடாய் கண்ணீர்த் துளிகள் விழுந்தது.

 

“ஜெய்… வந்துட்டியா…” அவளது வாயிலிருந்து சிரமப்பட்டு வார்த்தைகள் உதிர்ந்தன.

சிரமப்பட்டு கண்களைப் பிரித்துப் பார்த்தாள். அதில் தெரிந்த நபர்

 

“டாடி… ஐ.. மிஸ்.. யூ… ஐ லவ் யூ… நா..னு..ம் உங்..க கூ..ட வ..ரே..ன்”

 

“மை ஸ்வீட்டி… “ அவரது இதழ்கள் அவளது நெற்றியில் பதிந்தது. அப்படியே அரை மயக்கத்தில் ஆழ்ந்தாள் அஞ்சலி.

 

அனைவரின் கண்களில் மண்ணைத் தூவி உள்ளே நுழைந்து எதிர்ப்பட்டவர்களை துவம்சம் செய்து அஞ்சலி இருக்கும் அறையை அடைந்திருந்த ஜெய் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தான்.

 

அவனது கண்கள் அடுத்த நொடி அஞ்சலியின் மேல் பாய்ந்தது

“அஞ்சலி…”

 

“யார் உன்னை இப்படி செஞ்சது. அவனை என்ன செய்றேன் பாரு”

 

“அவன் கைகாலைத்தான் உடைச்சுட்டியே”

 

“அஞ்சலி… டார்லிங்… முழிச்சுப் பாரேன்” அவன் கண்களிலிருந்து நிற்காமல் வழிந்த கண்ணீரைக் கண்டு தனசேகரின் உள்ளம் நெகிழ்ந்தது.

 

“ஜெய் க்விக் கிளம்பு… இன்னும் அஞ்சு நிமிஷத்தில் இந்தக் கட்டடம்  வெடிக்கப் போகுது. பாவம்… விஷமிகளைப் பிடிக்கும் முயற்சியில் நேரடியா இறங்கிய  உன்னோட  பாஸ் ராஜேஷ்வர் கூட இந்தத்  தீ விபத்தில் பலியாகப் போறார். மத்தவங்க எல்லாருக்கும் அது தெரியும். அவங்க கிளம்பி வந்துடுவாங்க. நீ அஞ்சலியை தூக்கிட்டு பின் வாசல் வழியா வா… நான் வேனைக் கிளப்பி வைக்கிறேன்”

 

ஜெய் அஞ்சலியைத் தூக்கிக் கொள்ள இருவரும் தனசேகருடன் கிளம்பினார்கள். அஞ்சலியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவள் பாதுகாப்பாய் இருக்கிறாள் என்று தெரிந்ததும்தான் அவனால் மூச்சு விடமுடிந்தது.

 

மருந்துகளின் உதவியால் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மகளைக் கண் நிறைய பார்த்தவண்ணம் நின்றிருந்தவரை அழைத்தான் ஜெய்.

 

“தனசேகர் சார்…”

 

“ஜெய் மை பாய்… இனிமே உன்னை அப்படி கூப்பிட முடியாதோ… மாப்பிள்ளை சார்”

 

“உங்களுக்கு எப்பவுமே நான் ஜெய்தான். இது என்னது சார்… நீங்க இறந்துட்டதா நினைச்சுட்டு இருந்தோம். ஒரு வருஷத்துக்கு மேல வனவாசம் போயிட்டிங்களே”

 

“மருந்து தயாரிக்க நேரமாகுமில்ல ஜெய். டைம் பை பண்ண வேண்டாமா… அதுக்கு இதைப் போல சில வேலைகள் அவசியமாச்சே”

 

“அப்ப நீங்க இறந்துட்டதா எதிரிகளை திசை திருப்பிவிட்டு கிடைச்ச கேப்பில் மாற்று மருந்தை புயல் வேகத்தில் கண்டுபிடிச்சுட்டிங்க”

 

தனது சிறிய புன்னகையில் அதை ஆமோதித்தார்.

 

“ரெண்டு தடவை உங்களை அஞ்சலி பார்த்தது”

 

“என்னைத்தான்… அதுக்கு முன்னாடியும் அவளைப் பார்த்திருக்கேன். பட் அந்த ரெண்டு தடவை மாட்டிக்கிட்டேன். அது பர்பஸாத்தான். அவளை மெட்ராஸ் வீட்டுக்குக் கிளப்பிக் கொண்டு போகணுமே. என் நினைவு வரணும். ஒரு நாடகமாடி பெங்களூருக்கு நானும் சந்தானமும் கொண்டு போனோம். அவளுக்கு ஹோட்டல் ஆரம்பிக்க ஐஞ்சு லட்சம் கொடுத்து அவளைக் கிளப்பி பெங்களூர் கொண்டு போறதுக்குள்ள நாங்க பட்ட பாடு. அதே மாதிரி அவளுக்கு என் நினைவைத் தூண்டி விட்டு இங்க அனுப்பினோம்”

 

“சந்தானம் அங்கிள்?”

 

“என்னோட கசின். ட்ரக் ரிசர்ச்ல ஹெட்டா இருந்தார். இப்ப ரிடயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறார்”

 

“ஓ மை காட்… இந்த மாற்று மருந்து கண்டுபிடிச்சதில் அவர் பங்கு”

 

“அவர் இல்லைன்னா அவ்வளவுதான்… இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு உங்க கூட செட்டில் ஆகப்போறேன்னு சொல்லிட்டான். அவனைப் பாத்துக்கோ ஜெய்”

 

“நீங்க உயிரோடு இருக்குறது தெரிஞ்சா அஞ்சலி ரொம்ப சந்தோஷப் படுவா… அவ உங்களை ரொம்ப மிஸ் பண்றா சார்”

 

“இப்ப தெரிய வேண்டாம் ஜெய். இந்த பிரச்சனையின் ரூட் காஸ் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கேன். இதில் எனக்கு ஏதாவது ஆனால் அவளால் தாங்க முடியாது. அதனால் இதில் உயிரோட திரும்பி வந்தால் அவளைப் பாக்குறேன்”

ஜெயின் முகம் சுண்டிவிட்டது.

 

“அஞ்சலி இஸ் மை ஏஞ்சல்…  நல்லபடியா பாத்துக்கோ…” மகளுக்கு ஒரு முத்தமிட்டுவிட்டு பிறந்ததிலிருந்து மனதில் சுமக்கும் மகளைப் பிரிய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றவரை தடுக்க வழியின்றி கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.

 

***

 

வில்லோடு அம்பு ரெண்டும் சேர்ந்து  தொடுத்த  காதல் பானத்தைத் தாங்க முடியாது அஞ்சலி நெளிந்தாள்.

 

“ஜெய்… போதும்… எல்லாரும் பாக்குறாங்க”

 

“அஞ்சலி நாங்க வேணும்னா அப்பறம் வர்றோம்… கிளம்பட்டுமா.. கிளம்பட்டுமா… “ என்று ரவி இழுக்க

 

“நீ இன்னம் கிளம்பல… “ திரும்பாமல் ஜெய் பதிலளித்தான்.

 

“நன்றி கெட்டவனே… அஞ்சலி ப்ராஜெக்ட் எனக்கு அலாட் பண்ணது, நீ கேட்டேன்னு விட்டுக் கொடுத்தேன் பாரு… இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ… “

 

“அஞ்சலியை ஏற்கனவே என் மாமனாரோட ரெண்டு மூணு தரம் பாத்திருக்கேன். இவ்வளவு அழகான பொண்ணை ஃபாலோ  பண்ணும் ஹல்வா ப்ராஜெக்ட்டை உன்கிட்ட ஒப்படைக்க நானென்ன முட்டாளா?”

 

“ஒரு பிளானோடதான் செஞ்சிருக்க… தியேட்டர்ல பங்கு கேட்டு மட்டும் வா… உன் காலை வெட்டுறேன்” உருமிவிட்டுப் போனான் ரவி.

 

“மாயா ஹோட்டல் போயிருந்தாளே… சாப்பாடு வாங்கிட்டு வந்தாளா” அவன் காதில் விழுமாறு சத்தமாக விசாரித்தாள்அஞ்சலி.

 

“தாங்க்ஸ் அஞ்சலி…  எனக்கு ‘வாலி’ அண்ணன் ‘வானத்தைப் போல’ அண்ணி “ என்று ரூமிற்கு வெளியிருந்து அவளைப் பார்த்துக் கத்தினான் ரவி.

 

“ரவியோட கேரக்டருக்கு மாயா நல்ல ஜோடி” வேகமாக உணவகத்துக்கு விரையும் ரவியைப் பார்த்தவாறு  கண்களில் புன்னகையுடன் சொன்னாள் அஞ்சலி.

 

படுக்கையிலிருந்து எழுந்து அன்றுதான் சாய்ந்து அமர்ந்திருந்தாள். முகத்தில் வீக்கம் வடிந்து ரத்தக் கட்டு குறைந்திருந்தது. கழுத்தில் பட்டை ஒன்று கட்டியிருந்தனர். அதையும் மீறி ஜெய்யின் காதலாலும், அவனது குடும்பத்தினர் அக்கறையாலும், சந்தானத்தின் அன்பாலும் தேறியிருந்தாள். மருத்துவமனையிலிருந்து நேரே சேலத்திலிருக்கும் தங்களது வீட்டிற்கே வந்துவிடுமாறு ஜெய்ஷங்கரின் அன்னை அன்புக் கட்டளையிட்டிருந்தார்.

 

“சொல்லுங்க ஜெய்”

 

“இத்தை விடத் தெளிவா எப்படி சொல்றது… என்ன சொல்றது?

 

முன்னால நிக்கிறேன், கண்ணால சொக்குறேன், பின்னால சுத்துறேன், உன்னால சாவுறேன்.

எனக்குக் கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி டேட் பண்ணவா, சாட் பண்ணவா… “

 

“ரவிக்குத்தான் என்னை ஃபாலோ பண்ணும் ப்ராஜெக்ட்டா… நீ அவன்கிட்டேருந்து வாங்கிட்டியா… பாக்குறதுக்கு சாதுப் பூனை மாதிரி இருந்துட்டு, கேசர்பாத் அவ்வளவு பெரிய கேடியா நீ”

 

“நான் எவ்வளவு பெரிய கேடின்னு உனக்குத் தெரியாதா… டூ யூ ரிமெம்பர் தி கிட்சன்… இப்ப சொல்லு நீ ரெடியா…”

 

“டூ யூ ரிமெம்பர் மை ஹவுஸ்… கடமையை செய்றேன்னு சொல்லிட்டு கிஸ்ஸடிக்கிற… அண்ணனும் தம்பியும் சரியான கேடிப்பையலுங்க. இன்னொரு தடவை வேற ஏதாவது பொண்ணு ப்ராஜெக்ட்டை எடு அப்பறம் தெரியும்… ”

 

“உன்னைப் பார்த்ததிலிருந்து நீதான் என் முதல் ப்ரையாரிட்டி. அதுதான் அடம் பிடிச்சு நானே வந்தேன். உன் அருகாமை உன் மேலிருக்கும் ஈர்ப்பைக் குறைக்கும்னு நினைச்சேன். பட்… என் கெஸ் ஒரு ஸ்வீட் தப்பாயிடுச்சு.

வேற எந்தப் பொண்ணும் நமக்கு வேண்டாம். மை லவ் நான் உன் கூட இறுதி மூச்சு வரை வாழணும்னு ஆசைப்படுறேன்”

 

“’நாலு குழந்தைகளைப்  பெத்து நாட்டு சேவைக்கு அனுப்பணும்’ அதை விட்டுட்டியே”

 

“அதுவும் தான்… வாட் ஆர் வீ வெய்டிங் ஃபார்?”

 

“கல்யாணம், தாலி, பெரியவங்க ஆசீர்வாதம். இந்த மாதிரி நெருக்கமா நீ இருக்குறது இந்நேரம் சந்தானம் அங்கிள் மூக்கில் வேர்த்திருக்கும். இப்ப வந்துடுவார் பாரு” அவள் சொல்லி முடிப்பதற்குள் வேக நடையுடன் சந்தானம் வந்துவிட்டார்.

 

“ஜெய், லேட்டாச்சு நீ கிளம்பு… “ என்று விரட்டியவரை முறைத்தவண்ணம் அவளைப் பார்த்தான்.

 

‘ப்ளீஸ்’ என்று கண்களாலேயே கெஞ்சினாள் அஞ்சலி. போகமாட்டேன் என்று கண்களால் மறுத்தான்.

 

“அஞ்சலி, பால் வாங்கிட்டு வந்திருக்கேன் பூஸ்ட் போட்டுக் கலக்கித் தரட்டுமா”

 

“சரி அங்கிள்”

 

எவ்வளவு பெரிய வேலையை அனாயாசமாய் முடித்தவர் அழுக்கு வேட்டி ஒன்றைக் கட்டியபடி கர்ம சிரத்தையாக அஞ்சலிக்கு பூஸ்ட் ஆற்றுகிறார் என்று எண்ணி வியந்தபடியே அவரைப் பார்க்க, அவனது கன்னத்தில் தாமரைப் பூவால் வருடியதைப் போல ஒரு உணர்வு.

 

“ப்ளீஸ்… அங்கிள் எனக்கு அப்பா மாதிரி”

அவளது கன்னங்களில் தட்டியவன். “எனக்கும் அப்படித்தான்… அவர் நமக்குக் கிடைச்ச பொக்கிஷம். அவரை பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு” என்று அவளிடம் வலியுறுத்தினான்.

 

தன் முதுகுக்குப் பின்னால் நடக்கும் நாடகத்தை அறியாமல்

“ஜெய்… கல்யாணத்துக்கு அப்பறம் அஞ்சலி கூட பேசிக்கோ… அவ உடம்பு தேறுற வரைக்கும் அவளை ப்ரீயா விடேன்.

நானும் பாக்குறேன் காலேலேருந்து நொச்சு பண்றது பத்தாதுன்னு வீட்டுக்கு போனதும் வேற போன் பண்ணி ராத்திரி பூரா அறுத்து அவளைத் தூங்க விட மாட்டிங்கிற… இதெல்லாம் நல்லால்ல பாத்துக்கோ” தான் ஒரு கட்டை பிரம்மச்சாரி என்பதை நிரூபித்தார்.

 

ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டபடி அவரைப் பார்த்தவன் அவர் கன்னங்களில் ஒரு முத்தமிட்டுவிட்டு அப்படியே அஞ்சலியின் கன்னத்திலும் ஒரு இச்சைப் பத்தித்துவிட்டு “குட் நைட் அஞ்சலி, அடுத்தவாரம் கல்யாணம் அதுவரை  கனவில் வரேன் பேசிக்கலாம்” என்றபடி புன்னகைத்தான்.

 

“கருமம்… என்னடா இது இப்படி கன்னத்தை எச்சில் பண்ணிட்டு” என்றவரிடம்

 

“அப்படித்தான் எனக்கு பிடிச்சவங்க, க்ளோஸ் ஆனவங்க கன்னத்தை எச்சில் பண்ணிடுவேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா முகம் கழுவிட்டு வாங்க… ஆனா வந்ததும் மறுபடியும் எச்சில் பண்ணுவேன்” என்றான் கள்ளச்சிரிப்புடன்.

 

அவனது புன்னகை அங்கிருந்த இருவரின் முகத்திலும் எதிரொலித்தது.

 

சுபம்

26 Comments »

  • நன்றி சமீரா. ஜெய் அஞ்சலியைப் பிடித்ததற்கு நன்றி.

  • நன்றி அமுதா. அடுத்த நாவல் பற்றி விரைவில் சொல்கிறேன்.

 1. Hello mam,

  I had been reading this story. Wanted to comment at the end. Like always a stupendous story with umpteen number of twists and turns. Loved it from beginning till end. Crispy dialouges…Very youthful ones i would say (can’t help but to say …..Felt like Mani sir movie) . Kudos and congratulations. Awaiting next

  • I agree totally with this review..wanted to write the same feelings i had for this story…even i felt that the sequences are very simillar to a suspense thriller movie with classy dialogues ….

   • நன்றி சென். இன்னொரு துப்பறியும் கதையை முயற்சிக்கலாம் போலிருக்கே.

  • நன்றி திஷி. உங்க கமெண்ட்ஸ் படித்து பறந்து கொண்டிருக்கிறேன்.

  • நன்றி தீபா. இந்தக் கதை சிறிதாக இருந்தால்தான் விறுவிறுப்பாக இருக்கும்.

 2. Nice ending mathura. Kesarbath nee remba sweet da analum enga ginger biscuit mathiri innum romance la valarala. Pickle company boss lam romance pinnuvarla. Konjam thupariyira velaya vittu pondatiya konjura velaya senja kathupa. Dhana sir thirumba vanthathu remba happy.

  • நன்றி செல்வா… ஜின்ஜர் பிஸ்கெட்டும், பந்காரமும் தான் உங்க மனசில் பதிஞ்சுட்டான்களேன்னு ப்ரிதிவி கோச்சுக்குறான் பாருங்க.

 3. நிறைவான முடிவு. துப்பறியும் கதையொன்றை உங்களிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை அக்கா. விறுவிறுவென அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். ஜெய் அஞ்சலி கல்யாணத்தில மீட் பண்ணுவோம். (ஒரு கிழமைல விரிவான பின்னூட்டத்தோட வாறன் என்றதைத்தான் சொன்னேன்)

  • நன்றி சத்யா. துப்பறியும் கதை ஒண்ணு எழுதுவேன்னு நானே எதிர்பார்க்கல. சீக்கிரம் கல்யாணத்தில் சந்திப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: