Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 21

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 21

அத்தியாயம் 21 – சுமைதாங்கி

     தை மாதம். அறுவடைக் காலம். சென்ற மாதம் வரையில் பசுமை நிறம் பொருந்தி விளங்கிய வயல்கள் எல்லாம் இப்போது பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்றன. நெற்கதிர்களின் பாரத்தால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. காலை நேரத்தில் அவற்றின் மீது படிந்திருக்கும் பனித் துளிகளின் மீது சூரியக் கிரணம் படுங்கால் எண்ணிலடங்காத வெண் முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றிற்று. வயல் வரப்புகளில் நடந்து போனால், பசும் புல்லில் படிந்திருக்கும் பனித் துளிகள் காலில் படும்போது ஜிலு ஜிலுவென்று வெகு சுகமாயிருக்கிறது. சில வரப்புகளில் துவரஞ் செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. அந்தச் செடிகளில் சிலுசிலுவென்று பூத்திருக்கும் சின்னஞ்சிறு பூக்களுக்குத்தான் என்ன அழகு, எத்தகைய பசும்பொன் நிறம்!

இன்னும் சில வரப்புகளில் சேம்புச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இலைகளுக்கு என்ன மிருதுத் தன்மை? அந்த இலைகளின் மீது அப்படியும் இப்படியும் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித் துளிகளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது. ஆனால், அந்தத் துளிகள் தான் நேரம் ஆக ஆக, வெயில் ஏற ஏற, மாயமாய் மறைந்து போகின்றன.

கதிர்கள் நன்றாக முற்றிவிட்ட வயல்களில் அதிகாலையில் ஆட்கள் இறங்கி அறுக்கத் தொடங்குகிறார்கள். அப்படி அறுவடையாகும் வயல்களிலிருந்து கம்மென்று புது வைக்கோலின் மணம் வீசுகின்றது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டு, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழித்து விடலாம் போல் தோன்றுகிறது.

சூரியன் உச்சி வானத்தை அடையும் போது அறுப்பதை நிறுத்துகிறார்கள். அறுத்த பயிர்களைக் கட்டுக் கட்டாய்க் கட்டுகிறார்கள். பிறகு அக்கட்டுக்களைத் தலையில் சுமந்து கொண்டு போய்க் களத்தில் போடுகிறார்கள்.

திருமகள் செந்தாமரையில் வசிப்பதாகக் கேட்டிருக்கிறோம். வருஷத்திலே பத்து மாதத்துக்கு இது உண்மையாயிருக்கலாம். ஆனால், தை, மாசி மாதங்களில் மட்டும் நன்செய் நிலப் பிரதேசங்களிலுள்ள நெற்களங்களிலே தான் அவள் வசிக்க வேண்டும். அந்த மாதங்களில், நெற்களங்களின் காட்சி அவ்வளவு அழகாகவும் லக்ஷ்மி விலாசம் பொருந்தியும் இருக்கும். களத்தில் சில இடங்களில் டபார் டபார் என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தானியம் உதிர்ந்ததும், வைக்கோலைப் போர் போராய்ப் போடுகிறார்கள். நெல்லைக் குவித்துக் குவியல் குவியலாய்ச் செய்கிறார்கள்.

களத்துக்கு நடுவில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் விட்டு இறங்கி விஸ்தாரமாகப் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகளில் காக்கைகளும், குருவிகளும், இன்னும் பலவிதமான பட்சிகளும் அமர்ந்து கீதமிசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்; அவ்வேளையில் காக்கை கத்துவது கூட நல்ல சங்கீதமாகவே தோன்றுகிறது. புள்ளினங்கள் தங்களுடைய இறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் காதுக்கு இன்னிசையாய்த் தொனிக்கின்றது.

அந்த ஆலமரத்தின் அடியில் அங்கங்கே சில ஸ்திரீகள் எதிரில் கூடைகளுடன் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். இவர்களுக்கு அங்காடிக்காரிகள் என்று பெயர். இவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கூடையும் ஒரு சின்னக் கடை. அதில் வறுத்த கடலைக் கொட்டை, வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சுட்ட சோளக் கொண்டை, வெற்றிலைப் பாக்கு புகையிலை – இவையெல்லாம் இருக்கும். இவற்றை அவர்கள் நெல்லுக்கு விற்பார்கள். லாபம் தம்பிடிக்குத் தம்பிடிதான்! ஆனாலும் மொத்தத்தில் லாபம் ஒன்றும் பிரமாதமாயிராது. நாலணா சாமான்கள் கொண்டுவந்தால் எட்டணா நெல்லுடன் திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான்.

இம்மாதிரி அங்காடி விற்கும் பெண்பிள்ளை ஒருத்தியைத் தொடர்ந்து போகும் அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அவள் களத்தில் தனக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு அங்காடிக்காரியிடம் சண்டை போட்டுக் கொண்டு, “சீச்சி! உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம்? உன்னைப் படைச்சானே பிரம்மா அவனைச் சொல்லணும்!” என்று கடுமையாய்ப் பேசி விட்டு, அங்காடிக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, விருவிரு என்று நடக்கத் தொடங்கினாள். அவள் வயல் வரப்புகள் வழியாகவே நடந்து சென்று, கடைசியில் ஒரு வாய்க்காலின் கரையை அடைந்தாள். அந்த வாய்க்காலின் இருபுறமும் அடர்த்தியாகக் காடு மண்டியிருந்தது. கரையோடு ஓர் ஒற்றையடிப் பாதை போயிற்று. கூடைக்காரி அந்தப் பாதையோடு போனாள். கொஞ்சதூரம் நடந்த பிற்பாடு, அந்தப் பெரிய வாய்க்காலிலிருந்து இன்னொரு சின்ன வாய்க்கால் பிரியும் இடம் வந்தது. அப்படிப் பிரியும் இடத்தில் ஒரு மதகு இருந்தது. கூடைக்காரி அந்த மதகண்டை வந்ததும் ஆவலுடன் உற்றுப் பார்த்தாள். அந்த மதகின் மேல் ஒரு முழு ரூபாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கூடைக்காரி அந்த ரூபாயை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, “என் அப்பனே! மவராசா! நீ யாராயிருந்தாலும் சரி, தெய்வமாயிருந்தாலும் சரி, மனுஷனாயிருந்தாலும் சரி! நீ நன்றாயிருக்கணும். உன்னை நான் பார்த்து அறிய மாட்டேன். ஒரு நாளைக்கு நீ அசரீரி வாக்கு மாதிரி சொன்னாய். அதன்படியே நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை இங்கே வாரேன். நீயும் ஒவ்வொரு ரூபாய் படி அளக்கிறாய். சாமி! ஆண்டவனே! என் காலமெல்லாம் இப்படியே போயிண்டிருந்தா – நான் சாகிறதுக்குள்ளே முழுசா ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துடுவேன். அப்புறம் என்னை யார் என்ன கேட்கிறது?” என்று இவ்விதம் புலம்பிக் கொண்டே கூடையிலிருந்த நிலக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் எடுத்து மதகின்மேல் வைத்துவிட்டு, கடைசியாக ஒரு சோற்று மூட்டையும் எடுத்து வைத்தாள். பிறகு, “சாமி! ஆண்டவனே! காப்பாத்து!” என்று இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டு, வெறுங்கூடையுடன் கிளம்பிச் சென்றாள்.

அவள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் புதரை விலக்கிக் கொண்டு முத்தையன் வெளியில் வந்தான். மதகின் மேல் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாவகாசமாக நிலக்கடலையை உரித்துத் தின்னத் தொடங்கினான்.

அப்போது ஒரு மரத்தில் ஏதோ சலசலவென்று சத்தம் கேட்கவே, முத்தையன் பளிச்சென்று குதித்து எழுந்து இடுப்பில் செருகியிருந்த கத்தியைக் கையில் எடுத்தான். “சாமி! சாமி! நான் தான், சொக்கன்” என்று சொல்லிக் கொண்டே, குறவன் சொக்கன் முன்வந்தான்.

“அடே! முட்டாள்! கண்ட இடத்தில் எல்லாம் நீ என்னைத் தேடிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே? ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான் முத்தையன்.

“இல்லைங்க, சாமி! அந்த ஆளு சொன்னேனே, அது வந்திருக்கு, பணத்தோட வந்திருக்கு” என்றான் சொக்கன்.

“சரி, சாயங்காலம் கையெழுத்து மறைகிற சமயத்துக்கு சுமை தாங்கிக்கிட்ட அழைத்துக் கொண்டு வா. இப்போ இங்கே நிற்காதே, போ!” என்றதும் சொக்கன் “அப்படியே ஆகட்டும், சாமி!” என்று சொல்லிவிட்டுப் போனான்.

*****

அன்று சாயங்காலம், முன்னே ‘லாக்-அப்’பிலிருந்து முத்தையன் தப்பிச் சென்ற இரவில் அவன் படுத்துத் தூங்கிய அதே சுமைதாங்கி மேடையில் ஓர் ஆசாமி உட்கார்ந்து அப்புறம் இப்புறம் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான். பொழுது சாயச் சாய, அவனுடைய கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியில் சுமைதாங்கியின் பின் புறத்தில் ஏதோ சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கே முகமூடியணிந்த ஓர் உருவம் கையில் கத்தியுடன் நிற்கக் காணவும், உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான். நல்ல வேளையாக, அந்த உருவத்துக்குப் பின்னால், குறவன் சொக்கனும் தென்படவே அவனுடைய படபடப்பு ஒருவாறு அடங்கியது.

“என்ன, ஐயா, எங்கே வந்தே! சீக்கிரம் சொல்லு!” என்றான் முத்தையன்.

“ஒ ஒ ஒ ஒ – ஒண்ணுமில்லை… வ வ வ வ – வந்து…” என்றான் அந்த ஆசாமி.

“ந ந ந ந – நாசமாய்ப்… போ போ போ போச்சு!” என்றான் முத்தையன்.

“கொ கொ கொ கொஞ்சம்… நே நே நேக்கு… தே தே தே தெத்து…”

“கொஞ்சம் தெத்தா? ஜாஸ்தியாயிருந்தால் இன்னும் அது எப்படியிருக்குமோ? போகட்டும்; எங்கே வந்தே, சொல்லித் தொலை.”

“ஒ ஒ ஒ ஒ – ஒன்னை… ப ப ப ப – பாக்கத்தான் வந்தேன்.”

“சரி, பார்த்தாச்சா? போகலாமா?”

“பொ பொ பொ – பொறு அப்பா! பு பு பு – புலிப்பட்டி எஜமான் – ப ப ப – பணம் கொடுத்திருக்காரு…”

“சரி கொடுத்துத் தொலை.”

அந்த ஆசாமி மடியிலிருந்த பண நோட்டுக்களை எடுத்து முத்தையனிடம் கொடுத்தான்.

“வ வ வ வ – வந்து… கா கா கா கா – காரியத்தை மு மு மு மு – முடிச்சுட்டாக்க…”

இந்தச் சமயத்தில் குறவன் குறுக்கிட்டு, “இதோ பாருங்க, ஐயா! நீங்க சமாசாரம் சொல்றதுக்குள்ளே போது விடிஞ்சு போயிடும், எங்கிட்டதான் எல்லாச் சமாசாரமும் சொல்லிட்டீங்களே! நான் விவரமாய்ச் சொல்லிப்புடறேன். நீங்க போய் வாருங்க” என்றான்.

அந்த ஆசாமி, “அ அ அ – அப்படியானால் சரி” என்றான். பிறகு குறவனைச் சமிக்ஞை செய்து அருகில் அழைத்து, அவன் காதோடு, “அந்தப் பொ பொ பொ – பொம்பளையை… ப ப ப – பைஸல் பண்ணிவிடணும்” என்று கூறினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42

அத்தியாயம் 42 – தண்டோரா ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும்,

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14

அத்தியாயம் 14 – அபிராமியின் பிரார்த்தனை      அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி கலெக்டரின் காம்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உள்ளே மிகவும் இனிமையான பெண் குரலில் யாரோ உருக்கமாகப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு வியப்பு அடைந்தார்.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22

அத்தியாயம் 22 – நிலவும் இருளும்      முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே