Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 15

15 – மனதை மாற்றிவிட்டாய்

இரவு தூங்க செல்ல ஆதியின் அறைக்கு வந்த சந்திரா “ராஜா, தூங்கப்போறியா?” என வினவியபடி வந்தார்.

ஆதி “வாங்க மா, இல்லமா சும்மா பால்கனில நடந்திட்டு வந்தேன். ஏனோ தூக்கமே வரலை.”:

“ஆமாமா, தூக்கம் இப்போதைக்கு வரதுதான். ஆனா வேற வழி இல்லையே. கனவு வரணும்னா தூங்கித்தானே ஆகணும்.” என குறும்புடன் கேட்க ஆதி ஒரு நொடி தாயை பார்த்தவன்

“கனவா? அது யாருக்காக மா ?” என்றான் புரியாதமாதிரி ஆனால் தெரிந்துகொள்ளும் ஆவலில்.

“டேய், நான் உன்னோட அம்மாடா, எனக்கு புரியும் உன் மனசு என்னன்னு. உண்மைய சொல்லு நீ திவிய நினைக்கலைனு?” என வினவ இவனோ சிரித்தே விட்டான்.

“அம்மா, நீங்க செம ஷார்ப்.. உண்மை தான்மா அவளை தான் நினைச்சிட்டுஇருந்தேன். அவளை தான் லவ் பண்றேன்.” என அவன் வாய் வார்த்தையில் கேட்டதும் சந்திராவிற்கு சந்தோஷம் நிலைகொள்ளவில்லை.

தன் மகனை உச்சிமுகர்ந்து விட்டு “ரொம்ப சந்தோசம் ராஜா. எப்போப்பாரு உங்க சண்டையை பாத்து கடவுளேனு இருந்தது.. இப்போ நீயே அவளை பிடிச்சிருக்குனு சொன்னதும் தான் எனக்கு நிம்மதி ..எப்போ கல்யாணத்த வெச்சுக்கலாம் சொல்லு..”என அவனை அவசரப்படுத்த

ஆதி “அம்மா, வெயிட், வெயிட்,… நான் இன்னும் அவகிட்டேயே பேசல. எனக்கும் அவளுக்கு எப்போவும் சண்டைதான். அவளும் அந்த மாதிரி எல்லாம் நினைச்சிருக்கமாட்டா. கொஞ்ச நாள் போகட்டுமா, அவளுக்கா புரியனும் அவ மனசுல நான் இருக்கேனு. அதுக்கப்புறம் தான் கல்யாணம்…நானே சொல்றேன். ஆனா திவி தான் என் வெய்ப். அத நான் டிசைடு பண்ணிட்டேன்.” என அவன் கூற

“சரி ராஜா, பொண்ணு திவிதானு தெரிஞ்சிடிச்சு. எங்க எல்லாருக்கும் எப்போவுமே திவியை பிடிக்கும். அதனால பிரச்சனை இல்ல. நீ உன் விரும்பம் போல எப்போ கல்யாணம்னு சொல்லு. உடனே பண்ணிடலாம்.” என்றார்.

“கண்டிப்பாமா, ஆனா எப்படிமா கரெக்டா கண்டுபுடிச்சீங்க.. அர்ஜுனும் இன்னைக்கு இதேதான் கேட்டான். அவன்கிட்டேயும் இன்னைக்குதான் சொன்னேன்.” என அவன் கேள்வியெழுப்ப

“ஏன்னா, நீ அவ்வளோ அப்பட்டமா உன் முகத்துல, செய்கையிலே காட்டற. அவகூட சண்டைபோட்டாலும், அடிச்சாலும் எல்லாத்துலயும் ஒரு உரிமையும், அதீத அன்பும் தான் தெரியுது.” என விளக்க அவன் முறுவலித்து விட்டு

“ம்ம்ம். ..அது சரிம்மா, என்கிட்ட நீங்க, அர்ஜுன், வீட்ல யாருமே அவளை பத்தி இத்தனை வருசத்துல சொன்னதே இல்லையே ஏன்? நானும் அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்த போது அவள பாத்தமாதிரி இல்லையே?”என கேட்டான்.

சந்திராவும் “என்னனு சொல்றது, அபி கல்யாணத்தப்போ அவங்க தாத்தா இறந்துட்டதால ஊருக்கு போய்ட்டா. அவங்க வீட்ல இருந்து யாரும் வரமுடில. அவளுக்கு ஊரு, வயல், தாத்தா, பாட்டின்னா ரொம்ப புடிக்கும். தாத்தா இல்லேனதும் புள்ளை சோந்து போய்ட்டா.”

“உன்கிட்ட அவளை பத்தி என்னனு சொல்ல சொல்ற. ..நீ டெய்லியும் பேசுனாலும் என்ன ஏது, சாப்டாச்சு, தூங்கியாச்சு, வேலை இதப்பத்தி பேசிட்டு விட்ருவ. பொதுவா உன்கிட்ட சொந்தகாரங்கள பத்தி பேசுனாகூட காதுகொடுத்து கேக்கமாட்ட. இதுல திவி பத்தி என்ன சொல்ல சொல்ற.

உனக்கு அதிகமா பேசுனா பிடிக்காது. அவ பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்டா.

நீ பழக்கமில்லாதவங்ககிட்ட அனாவிசயமா பேசமாட்டா. அவ புதுசா யாராவது பாத்தக்கூட வருஷக்கணக்குல பழகுன மாதிரி பேசுவா.

உனக்கு விளையாட்டுக்கு கூட பொய் சொன்ன பிடிக்காது. அவ விளையாட்டுக்குனாலும் பொய் மூட்டையையே அவுத்துவிட்டு கதை சொல்லுவா.

நீ சட்டுன்னு கோபப்படுவ. அவ வம்பிழுப்பா, கொஞ்சநேரம் சண்டைபோடுவா, ஆனா கோபப்பட்டு கத்தி, பேசாம இருக்கறது எல்லாம் இதுவரைக்கும் பாத்ததேயில்லை.

உனக்கு ஒன்னு வேணும்னா எப்படியும் பிடிவாதமா இருந்து நேருக்கு நேர் சண்டை போட்டாவது அடைஞ்சிடுவ. அவ சாதாரணமான்னா விட்டுகுடுத்திடுவா, அதையும் மீறி வேணும்னா அத யாரையும் கஷ்டப்படுத்தாம, சண்டைபோடாம, அவங்கவங்களுக்கு தகுந்த மாதிரி பேசியோ, சொல்லியோ, சில உண்மையான விஷயத்தை மறைச்சோ அமைதியா அத செஞ்சிடுவா. அதுக்கப்புறம் நமக்கு உண்மை தெரியவந்தாலும் இவ மேல கோபப்பமுடியாது. கண்டிப்பா அந்த அளவுக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் அதுல இருந்திருக்கும். அவ பேச்சு, சொல்ற பொய்னால யாருக்கு இதுவரைக்கும் எந்த பாதிப்பும் இருந்ததில்லை.

இப்படி எல்லாமே உங்க 2 பேருக்கும் எதிரெதிரா இருக்கும் போது அவளை பத்தி உன்கிட்ட என்ன சொல்லமுடியும் சொல்லு.” என்க அவனும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

“ஆனா ராஜா, திவி எப்போவுமே சிரிச்ச முகம், அவ அழுது, புலம்பி நான் பாத்ததே இல்ல.. அவங்க அம்மா எல்லாருக்கும் அவ கல்யாணத்த நினச்சு கொஞ்சம் கவலைதான். அவளால இதுவரைக்கும் நாங்க தல குனியறமாதிரி ஏதும் நடந்ததில்ல. எப்போவும் பெருமைதான். அவளுக்கு ஜாதகம் பாத்தபோது கூட இவளை பத்தி எல்லாமே பெருமையா சொல்லிட்டு, எப்போவுமே அவ சிரிச்சிட்டே மத்தவங்கள சிரிக்க வெச்சுட்டேதான் இருப்பா. ஆனா அவளோட கல்யாண வாழ்க்கையில எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க, அதுக்கப்புறம் இவளோட இந்த சிரிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ஆண்டவனுக்கு தான் தெரியும்ன்னு சொல்லிட்டாங்களாம். அவளுக்கு அவளை புரிஞ்சுக்கிட்டமாதிரி பையன வரணும். .எல்லா சந்தோஷத்தையும் குடுத்த கடவுள் கல்யாண விசயத்துல எல்லா கஷ்டத்தையும் வெச்சுட்டாரோன்னு நானும், அப்பாவுமே அத நிறைய தடவ நினைச்சு கவலைப்பட்டிருக்கோம். ”

ஆதி “ஏன்மா , நான் அவளை பத்திரமா பாத்துக்கமாட்டேன்னா ? ஒருவேளை நான் அவளை அடிச்சதால, சண்டைபோடறதால அவளை நான் கஷ்டப்படுத்துடுவேன்னு நினைக்கிறீங்களா? என்னால அவ விசயத்துல நார்மலா இருக்கவோ, எந்த விஷயத்தையும் சாதாரணமா எடுத்துக்கவோ முடியலமா. அவளை யாரும் தப்பா ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதுனு நினைக்கிறேன். அவ கொஞ்சம் முகத்தை சுழிச்சாலும் என்னால தாங்கிக்க முடியல. சாய்ந்தரம் பாத்தீங்கள்ல, அசால்ட்டா வண்டி இடிச்சிருந்தா என்ன செத்திருப்பேன், நீங்க சந்தோசப்படுவீங்கன்னு சொல்றா. எனக்கு உண்மையாவே ஒரு நிமிஷம் அடிபோய்டிச்சு. அவ இல்லாம என்னால நினச்சு பாக்கமுடிலமா..அதான் அடிச்சிட்டேன். ஆனா அடிவாங்கிட்டு அவ நிக்கறது பாக்க என்னால முடியல. ஒருவேளை இருந்தா அடிச்ச நானே அவளுக்கு ஆறுதல் சொல்ல போய்டுவேன். அவ விளையாட்டுக்கு பேசுறேனு திரும்ப உளறுவா. அதனாலதான் அங்க இருந்து நான் வந்துட்டேன். இருந்தாலும் என்னால 5 நிமிஷம் கூட மேல இருக்கமுடியாமத்தான் கீழே வந்தேன். அந்த கொஞ்ச நேரத்துல நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்மா. அவ மேல எனக்கு எவ்வளோ காதல்னு. நான் எப்போவும் அவகூட இருக்கணும்னு. அவளை பிரியமா சந்தோசமா பாத்துக்கணும்னு. அவளை யாருக்கும் யாருக்காகவும் விடமாட்டேன்கிற எண்ணம் எல்லாம் எனக்கே புரிஞ்சது. கொஞ்ச நாள்மா, அவளுக்கு என்னோட காதல் புரிஞ்சிட்டா எல்லாமே சரி ஆய்டும்…” என அவன் தனக்கு அவள் மீதான நேசம் பற்றி கூற

சந்திராவும் “தெரியும் ராஜா… அவளை நீ பத்திரமா பாத்துக்குவ..உன் காதலையும், கோபத்தையும் அவ சரியா புரிஞ்சுக்கிட்டா போதும், எந்த பிரச்னையுமில்ல…அவளும் உன்ன விட்டு போகமாட்டா. நீயும் எடுத்த முடிவுல மாறமாட்ட.. நீங்க 2 பேரும் எனக்கு 2 கண்ணு மாதிரி. நீங்க சந்தோசமா வாழறத நான் கண் குளிர பாக்கணும். அவ்வளோதான் என் ஆசை…சீக்கிரம் கல்யாணத்த எப்போ வெக்கலாம்னு சொல்லு… நீ ரொம்ப நாள் அவளை விட்டிட்டு தாக்குப்புடிப்பேன்னு தோணல… பாப்போம் ” என அவர் சிரித்தபடி கூறி முடிக்க

அவன் பெருமூச்சுவிட்டு “என்னை எல்லாரும் கவனிச்சு அவளை நான் லவ் பண்றத கன்பார்ம் பண்ணிட்டீங்க. ஆனா அத தெரிஞ்சுக்கவேண்டியவ இன்னும் வளராம நண்டு சுண்டுகளோட விளையாடிட்டு, என்கிட்ட சண்டைபோடறது, பழிவாங்கிறதுன்னு சுத்திட்டுஇருக்கு..எப்போ அவளுக்கு என் லவ் புரிஞ்சு, கல்யாணம் பண்ணி… என இழுத்தவன் என் நிலைமைதான் பாவம். அந்த அறுந்த வாலு வெச்சுகிட்டு என்ன பண்ணப்போறேனோ?” என சொல்ல அவன் தாயோ சிரித்துவிட்டு அது உண்மைதான்…சரி நீ தூங்கு.. நானும் போறேன்.”என கூறிவிட்டு சென்றார்.

படுக்கையில் விழுந்த அவன் “அவளுக்கு என்ன, நல்லா தூங்கிருப்பா..நான்தான் இங்க அவளை பத்தி நினச்சு உருகிட்டுஇருக்கேன். ராட்சஸி, எப்போடி என்கிட்ட வரப்போற.” என்று அவளை நினைத்து கொண்டே உறங்கினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: