Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 17

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 17

அத்தியாயம் 17 – தண்ணீர்க் கரையில்

     ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் அந்தத் தெரு வீதியில், மனுஷ்யர் யாரும் இல்லாமல் போயினர். காயம் பட்டுக் கீழே கிடந்தவன் கூட எழுந்து ஓடிப் போனான். நாய்கள் மட்டுந்தான் ஆங்காங்கு தூரதூரமாய் நின்று குரைத்துக் கொண்டு இருந்தன.

முத்தையன் சாவதானமாய் ஊரைவிட்டு நடந்து சென்றான். அவன் வந்த காரியம் நிறைவேறவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை; பசி தீரவில்லை. ஆனாலும் அவன் உள்ளத்திலே ஒரு பெரிய உற்சாகம் தோன்றியிருந்தது. அவனுடைய உடம்பிலிருந்த சோர்வெல்லாம் அந்த நேரம் எங்கேயோ போய்விட்டது. இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு கிளர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றியது போலவே உடம்பிலும் ஏற்பட்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், அவன் அப்போது வெற்றி வெறியில் முழுகியிருந்தான்.

உலகத்திலே கோழைகள் தான் அதிகம்; உயிருக்குத் துணிந்த ஒருவன் உயிர்ப்பற்றுள்ள நூறு பேருக்குச் சமானம் என்பதை அவன் அப்போது அநுபவத்தில் கண்டான். ஏற்கெனவே முரட்டுச் செயல்களில் பிரியமுள்ள அவனுக்கு இந்த அறிவு அளவிலாத உற்சாகத்தை உண்டு பண்ணியது.

நட்சத்திரங்களின் மங்கலான வெளிச்சத்தில் குருட்டாம் போக்காய் வழியைக் கவனியாமல் நடந்து கொண்டு போனவன், அறுவடையான ஒரு சோளக் கொல்லையை அடைந்தான். அதிலே குருவி ஓட்டுவதற்காகப் போட்டு இருந்த பரண் ஒன்று இருந்தது. அதில் ஒருவரும் இல்லையென்பதைக் கண்டு ஏறிப் படுத்துக் கொண்டான். வெகுநேரம் வரை தூக்கம் பிடிக்கவில்லை; புரண்டு கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக எத்தனயோ எண்ணங்கள் அலையெறிந்து வந்து கொண்டிருந்தன. அவற்றில் அபிராமியும், கல்யாணியும் அதிகமாக இடம் பெற்றிருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

*****

     முத்தையனுக்கு முன்னால் ஒரு பெரிய தலை வாழை இலை போட்டிருக்கிறது. அதில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வீட்டில் குசேலருக்குப் பரிமாறி இருந்தது போல் உணவு வகைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. சாதம், கறிவகைகள் பட்சணங்கள் எல்லாம் போர்போராய்க் குவிந்திருக்கின்றன. முத்தையன் அவற்றை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். சமையற்காரக் குண்டோ தரன் ஒருவன் தட்டில் சாதம் கொண்டு வருகிறான். அவன் சாதம் போடப் போட, முத்தையன் “இன்னும்போடு” என்று சொல்கிறான். பரிசாரகனுக்குக் கோபம் வந்து, “இனிமேல் உன் தலையிலே தான் போடவேணும்!” என்று தாம்பாளத்தை முத்தையன் தலையில் போடுகிறான்…

இச்சமயத்தில் முத்தையன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தான். பரணின் மேற்கூரையில் இருந்து சில சோளத் தட்டைகள் நழுவி அவன் தலையில் விழுந்திருந்தன. கொஞ்ச தூரத்தில் “மே” என்று ஆடு கத்திற்று. மேலே வெயில் சுளீரென்று அடித்தது.

‘இத்தனை நேரமா தூங்கிப் போய்விட்டோ ம்?’ என்று முத்தையன் எண்ணியதும், முதல் நாள் இராத்திரி சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தன. பக்கத்தில் கிடந்த கத்தி அவையெல்லாம் உண்மைதான் என்று ருசுப்படுத்திற்று.

பசியோ காதை அடைத்துக் கொண்டு போயிற்று. பரண் மீதிருந்தே நாலா பக்கமும் பார்த்தான் முத்தையன். கொஞ்ச தூரத்தில் கொள்ளிடம் தெரிந்தது. அதன் நீரோட்டத்திற்குச் சமீபமாய் ஒரு கட்டை வண்டி நின்றது. அதனுள்ளிருந்து ஒரு ஸ்திரீயும் புருஷனும் இறங்கினார்கள். அவர்கள் வண்டிக்குள்ளிருந்து ஒரு மூட்டையை எடுத்தார்கள். சரி, சரி அது கட்டுச் சாத மூட்டைதான் என்று முத்தையன் தீர்மானித்துக் கொண்டான். அவனுடைய பசி நூறு மடங்கு அதிகமாயிற்று.

ஒரு நிமிஷம் யோசனை செய்தான் முத்தையன். அந்த பரண்மேலே கிடந்த ஒரு பழைய கம்பளியின் மேல் அவனுடைய பார்வை தற்செயலாய் விழுந்தது. சினிமாக்களில் டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற திருடன் வேஷக்காரர்களை அவன் பார்த்ததுண்டு. அவர்களுடைய வேஷம் அவன் மனக்கண் எதிரே தோன்றவே, கத்தியினால் அந்தக் கம்பளியில் ஒரு துண்டு கிழித்துக் கொண்டான். அதன் நடுவில் இரண்டு கண்ணுக்கும் இரண்டு துவாரம் செய்து, அதை முகத்தில் கட்டிக் கொண்டான். மேற்படி கட்டை வண்டி நின்ற இடத்தை நோக்கி வேகமாக நடந்தான்.

*****

புருஷனும் பெண்சாதியும் சாவகாசமாய்ப் பல் துலக்கிவிட்டு, நீர்க்கரையில் மணல்மேல் சாவதானமாய் உட்கார்ந்து கட்டுச் சாத மூட்டையை அவிழ்த்தார்கள். முதல் நாள் இரவு பிசைந்த புளியஞ் சாதத்தின் வாசனை கமகமவென்று வந்தது. சாதத்தின்மேல் இருந்த இலைகளை எடுத்துத் தண்ணீரில் அலம்பிப் போட்டான் கணவன். “இதோ பார்! தினந்தான் நீ எனக்குச் சாதம் போடுகிறாயே! இன்றைக்கு நான் உனக்குப் போடுகிறேன்” என்றான் அவன்.

“என்னமோ, இன்னிக்கு மழைதான் வரப்போகுது. இல்லாட்டிப் போனா, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனாலும் போயிடும்!” என்றாள் மனைவி.

அந்தச் சமயம் “ஹா!” என்று ஒரு பயங்கரமான குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டார்கள். பக்கத்தில் இருந்த நாணற் காட்டிலிருந்து முகமூடியணிந்த ஒரு பயங்கர உருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது. உடனே இருவரும் கதிகலங்கிப் போய் எழுந்து, வண்டி கிடந்த கரையை நோக்கி ஒரே ஓட்டமாய் ஓடினார்கள். அந்த உருவம் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டும், இடையிடையே பயங்கரமாகக் கூவிக்கொண்டும் அவர்களை கொஞ்ச தூரம் துரத்திற்று. பிறகு திரும்பித் தண்ணீர்க் கரைக்குச் சென்று, கூடையிலிருந்த சாதத்தை எடுத்து ‘லபக்’ ‘லபக்’ என்று விழுங்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாதி கூடை காலியான பிறகு கை கழுவிற்று அந்த உருவம். மறுபடி அந்தக் கூடையைத் துணியைப் போட்டுச் சுற்றிக் கட்டி, அதைக் கையில் எடுத்துக் கொண்டு நாணற் காட்டிற்குள் புகுந்து மறைந்தது.

வண்டியின் அருகில் நின்று பிரமை கொண்டவர்கள் போல் இதைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பதிகள், அந்தப் பயங்கர உருவம் மறைந்ததும் வண்டியைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 30கல்கியின் பார்த்திபன் கனவு – 30

அத்தியாயம் 30 சக்கரவர்த்தி சந்நிதியில் மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று. மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம்

கல்கியின் பார்த்திபன் கனவு – 64கல்கியின் பார்த்திபன் கனவு – 64

அத்தியாயம் 64 புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்.

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 6திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை