Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 16

அத்தியாயம் – 16

 

“பெரியம்மை பத்திக் கேள்விப் பட்டிருக்கியா அஞ்சலி” என்றான் ரவி.

 

“ஸ்மால் பாக்ஸா பயங்கரமான தொற்று நோய்ன்னு தெரியும். அதனால கோடிக்கணக்கான மக்கள் இறந்துட்டதா படிச்சிருக்கேன். தடுப்பூசி மூலமா உலகம் முழுக்கக் கட்டுப்படுத்தப்பட்ட நோய். அது பத்தி இப்ப என்ன?”

 

அறையில் இருவரின் உரையாடலையும் கேட்டபடி நுழைந்தான் ஜெய்.

 

“சரி,  ஆந்த்ராக்ஸ்”

 

“2001ல கூட கொஞ்சம் போஸ்டல்ல பவுடரை அனுப்பி பரவினதே அதுதானே”

 

“ப்ளேக்…”

 

“செத்த எலியினால் வர்றது தானே… தொற்று நோய்… ஏன் இதையெல்லாம் சொல்றிங்க… ஒரு வேளை இதுக்கும் எனக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா…”

 

ஜெய் பதிலளித்தான்

“1837 அமெரிக்காவில்  சோளமும், பீன்சும் நதிக் கரையோரத்தில் பயிர் பண்ணி, வேட்டையாடி வாழ்க்கை நடத்தின சிவப்பிந்திய கிராம மக்கள். அந்த வருஷ குளிர்காலத்துக்கு குளிரைத் தாங்கக் கம்பளிப் போர்வை தந்தாங்க ஒரு கும்பல். அது ஸ்மால்பாக்ஸ் வந்த நோயாளிகள் உபயோகப் படுத்தியது. கொஞ்சநாளில் அந்த கிராமத்தைப் பத்தி சொல்ல ஒருத்தர் கூட இல்லை. சுலபமா அந்த கிராமம் ஒரு எதிர்ப்பும் இல்லாமல் எதிரிகளின் ஆளுகைக்கு வந்தது”

 

“பயோ வார்… அதுதான் காரணமா… மை காட் அப்பா அந்த இன்வெஸ்டிகேஷன்லா இன்வால்வ் ஆயிருந்தார்”

 

அங்கே அமைதி நிலவியது… அதுவே அவள் ஊகித்தது உண்மை என்று பறைசாற்றியது.

 

“எபோலா, ஆந்த்ராக்ஸ்… எக்ஸ்டிரா எக்ஸ்டிரா எல்லாம் போட்டு இன்னசன்ட் மக்களைக் கொன்னுட்டு இருக்காங்களே இன்னமுமா இவங்க ரத்தவெறி அடங்கல”

“அப் கோர்ஸ் இந்த ஆப்ரேஷனைப் பத்தி முழு விவரமும் எங்க யாருக்கும் தெரியாது. ஆனால் ஒண்ணு மட்டும் தெரியும். முன்னாடி ஏதோ ஒரு ஆட்கொல்லி நோயைப் பரப்பிட்டிருந்தவங்க இப்ப ரெண்டு நோயை உருவாக்கும் நுண்ணுயிர்களை இணைச்சு புதுசா ஒரு நோயை பரப்ப முயற்சி நடக்குது. அவங்க முயற்சி மட்டும் பலிச்சுருச்சுன்னா உயிர் சேதம் தாங்க முடியாத அளவு இருக்கும்.

 

அதனால அந்த நோய்க்கான  மாற்று மருந்து கண்டுபிடிக்கிறது மிக மிக அவசியம். ஆனால் நோயைப் பற்றியே தெரியாம எப்படி மாத்துமருந்து கண்டுபிடிக்கிறது. அதனால அந்த கேங் பத்தின விஷயங்களையும் அவங்களோட கெமிக்கல் பார்முலாவையும் கண்டு பிடிச்சால்தானே நம்ம அரசாங்கம் ஆன்ட்டிடோட் கண்டுபிடிக்க முடியும்”

 

“இடியட் ஜெய்! எவ்வளவு முக்கியமான விஷயம் என்கிட்டே விஷயத்தை வாங்க இத்தனை காலமாவா வெயிட் பண்றது. உடனே வந்திருக்கக் கூடாது”

 

“அஞ்சலி எங்களுக்கே சமீபமாத்தான் விஷயங்கள் தெரிவிக்கப் பட்டது. அதுமட்டுமில்லாம உன்னைப் பாதுகாக்குறதும் உனக்குத் தெரிந்த விஷயங்களை வாங்குறதும் இந்த ஜிக்சாவில் ஒரு சிறு முக்கியமான பகுதிதான். அதனால்தான் கொஞ்சம் தாமதமானால் கூடப் பரவால்லன்னு எங்க மேலிடம் நினைச்சிருக்கலாம்”

 

மூவரும் அமைதியாய் யோசித்தனர். “நம்ம கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எந்த வகையில் உதவியா இருக்கும் ஜெய்”

 

“தெரியல… ஒரு நம்பர்… அது ஏதாவது நபரைக் குறிக்கிறதா இருக்கலாம், இல்லை ரகசிய செய்தியா இருக்கலாம், இல்லை லாக்கர் நம்பரா இருக்கலாம். எல்லாமே எங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்லையே” என்றான் ரவி.

 

“மணிவண்ணன் தான் இதுக்கு இன்சார்ஜ். ராஜேஷ்வர் மணியை சந்திக்க ஏற்பாடு பண்றதா சொல்லிருக்கார். ஆதாரங்களை நேரடியா கைமாத்த முடியாததால ஒரு இடத்தில் இதை வச்சுடச்  சொல்லி உத்தரவு”

 

“வேற யாராவது நீ வச்சதும் எடுத்துட்டா… “

 

“அது எனக்கும் ராஜேஷ்வர் சாருக்கும் மட்டுமே தெரிஞ்ச இடம். வேற யாரும் வர சந்தர்ப்பம் இல்லை. நீயே கூடக்  கண்டுபிடிக்க முடியாது”

 

“அஞ்சலி டாக்குமெண்ட்ஸ்…” என்று கேட்க, அவசர அவசரமாய் எடுத்துத் தந்தாள்.

 

“எனக்கு வேலை இருக்கு” என்றபடி அவள் தந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான் ஜெய்.

 

தனது மொபைலில் பயோ வெப்பனைப் பற்றி தேடி ஆழ்ந்து படிக்கத் தொடங்கினாள் அஞ்சலி. சுற்றுப் புறம் அனைத்தும் மறைந்து மனிதர்கள் படும் துன்பங்கள் காட்சிகளாய் விரிந்தன.

அவ்வளவு ஆபத்தான விளையாட்டு. இந்த விளையாட்டில் நாட்டின் ஒரு பகுதியை அழிக்க பெரிய குண்டெல்லாம் தேவையில்லை. ஒரு சிறு டெஸ்ட்டியூபில் அடைக்கப்பட்ட  சாம்பிள் போதும். இப்படி மனித இனத்தை துடி துடிக்க வைத்துக் கொல்ல நினைப்பவன் கண்டிப்பாய் சாத்தானின் மறுபிறவியாய்தான் இருக்க முடியும். இத்தகைய முயற்சியில் இருப்பவர்கள் தனது தந்தையைக் கொன்றது ஆச்சிரியமில்லை. அப்பாவிகளைக் கொல்பவர்களுக்கு தன் வழியில் குறுக்கிடுபவர்களை அகற்றுவது கஷ்டமா என்ன.

 

‘அப்பா அன்னைக்கு உங்க கூட கடைசி முறையா ட்ரக்கிங் போயிட்டு வந்ததும் ஏன் பேயடிச்ச மாதிரி இருந்திங்க. உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையானவங்க இந்த நாசவேலையில்  இறங்கியிருக்கலாம். ஒருவேளை அது எனக்கு நிச்சயம் பண்ண கிஷோரா கூட இருக்கலாம். உண்மையை நீங்க வெளிய சொல்லிடக் கூடாதுன்னு கிஷோர் உங்களைக் கொலை செஞ்சிருக்கலாம். காரணம் இருக்கவே இருக்கே பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டார் அந்தக் கோபத்தில் சுட்டுட்டேன்னு சொல்லிட்டான்.

 

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் படங்கள் அவள் மனதில் வந்து போயின. உடல் முழுவதும் வேனல் கட்டிகளைப் போன்ற சிறு சிறு கொப்பளங்கள் பரவி அணு அணுவாகச் சித்திரவதையை அனுபவித்து இறப்பார்கள். ஒரு சிலரின் தசைகளை அரித்து எலும்புகள் வெளியே தெரிய நின்றிருந்த கோலம். இந்த பயங்கரத்தை நிகழ்த்த எத்தனை குரூர மனம் வேண்டும். விலங்குகளுக்கும் கீழானவர்களுகுத் தான் இத்தகைய சிந்தனை தோன்றும்.

 

அப்பாவுக்குப் பின், இப்போது அந்த காரியத்தில் இறங்கியிருக்கும் ஜெய் என்னாவான்… உயிரை துச்சமாக மதிக்கும் அந்தக் கூட்டம் அவனை சும்மா விடுமா… ஏற்கனவே துப்பாக்கி சூடு நடந்ததே… ஜெய்க்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்…

 

அன்று கூட சொன்னானே பொய்மையும் சில சமயம் நல்ல காரியங்களுக்காக சொல்லலாம் என்று. என் தந்தையே என்னிடம் மறைத்த ஒன்றை ஜெய் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தது தவறு. அவன் உண்மையை மறைத்திருக்கலாம் ஆனால் அந்தக் கண்கள் அதில் தெரிந்த காதல் மின்னல்கள். அது உண்மையா பொய்யா…

அவள் மனது அது உண்மை என்றே அடித்துக் கூறியது. ஜெய்யை விட்டு விலகி இருக்க அவளால் முடியும் ஆனால் இந்த காரியத்தில் அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்… அவனை இழந்து அவளால் இருக்க முடியுமா…

 

அந்த உணர்வு தோன்றியதும் விருட்டென எழுந்து ஜெய் தங்கியிருந்த அறைக்கு செல்ல முயல, அதே சமயம் இருட்டிலிருந்து ஒரு மர்ம மனிதன் அழுக்கு சட்டையுடன் அவள் அறைக்கு பூனை நடையில் வந்தான். ‘வீல்’லென்று அஞ்சலி கத்த, நொடியில் வினோத்தும், ரவியும் அவர்கள் அறையிலிருந்து ஓடி வந்தார்கள்.

 

அந்த அழுக்கு மனிதன் “அஞ்சலி நான்தான்… ஜெய்” என்று சொன்னதும் படபடப்பு குறைந்து ஆசுவாசமடைந்தாள்.

 

வினோத் “என்னடா நீதானா… உன்னைப் பாத்துத்தான் இந்த கத்தலா… நான் பதறிப் போய் ஓடி வரேன்… நீங்க ரெண்டு பேரும் விஷயம் தெரியாம காமெடி பண்ணிட்டிருக்கிங்க…” என்று எரிச்சலோடு கத்தினான்.

 

“இல்ல இந்த ட்ரெஸ்ஸில் ஜெய்யைப் பாத்துட்டு பயந்துட்டேன்”

 

ஏனென்றால் அழுக்கு நாற்றமடிக்கும் உடைகளை அணிந்து கொண்டு கையில் கோணிப்பையுடன் குப்பைகளை பொறுக்கும் நபரைப் போல உரு மாறியிருந்தான் ஜெய்ஷங்கர்.

 

ரவி “அஞ்சலி… நீ ஏன் இந்த நேரத்தில் ஜெய் ரூம் பக்கம் போன” என்ற அதி முக்கியமான கேள்வியைக் கேட்டான்.

 

அஞ்சலி நெளிய, பக்கத்திலிருக்கும் ரவியைப் பார்த்து ஜெய் முறைத்தவுடன் “பழம் விட்டுட்டிங்களா… ஆனா வேலையை முடிச்சுட்டு வந்து டூயட் பாடு, என்ன…” என்று சீரியசாய் அண்ணனிடம் அறிவுரை சொன்னான்.

கையிலிருந்த கிழிசல் கோணிப்பையை ரவியின் மேல் ஜெய் தூக்கி ஏறிய…

“யப்பா… கப்பு தாங்கலடா சாமி… அஞ்சலி எப்படித்தான் உன் பக்கத்துல நிக்கிறாளோ  தெரியல…” என்றபடி அவ்விடத்தை விட்டு ஓடிப் போனான் ரவி.

 

பின்னால் மிக நெருக்கமாய் தன்னருகில் நிற்கும் அஞ்சலியை உணர்ந்தவன் தடாலென்று திரும்ப, அவன் மேல் மோதி நின்ற அஞ்சலியின் இடையினை வளைத்து கீழே விழாமல் தடுத்தான். அப்படியே அவனது கரங்கள் அவளை இறுக்கியது.

 

“அஞ்சலி என்னைப் பார்க்கவா வந்த… ஏதாவது முக்கியமான விஷயமா” அவளிடம் ப்ரோபஷனலாக பேசத் தயக்கமாகவே இருந்தது.

 

நேர் கண்ணால் அவனைப் பார்த்தபடி கேட்டாள் அஞ்சலி “ஜெய்… எனக்கு ஒரு உண்மையைத் தெளிவு படுத்து. ஆதாரங்களுக்காக மட்டும்தான் என்கிட்டே பழகுனியா… ஆனால் உன் கண்ணில் தெரிஞ்ச ஒரு அன்பு, அட்டாச்மென்ட், அக்கறை இது ப்ரோபஷனலைத் தாண்டி வேற என்னமோ என்கிட்டே சொல்லுச்சு. அதைப்  பொய்ன்னு மட்டும் சொல்லிடாதே…”

 

“ஐ அம் சாரி அஞ்சலி… உன் உணர்ச்சியோட விளையாட நினைக்கல… ஆனால் உன்னைப் பார்த்த வினாடியிலிருந்து நான் நானாவே இல்லை. ஆதாரங்களை வாங்க வந்தேன், ஆனால் உன் அன்பு கிடைச்சது நான் செஞ்ச பாக்கியம். அதை மட்டும் சந்தேகப் படாதே…”

 

தனது இதயத்தை சுட்டிக் காட்டியவன் “இங்க வலிக்குது அஞ்சலி” என்றபடி மறுபடி ஒருமுறை இறுக்கி அணைத்துவிட்டு விலகினான்.

 

அதே வேகத்தில் செல்ல எத்தனித்த ஜெய்யிடம், “இப்ப செய்யப் போற வேலை கொஞ்சம் ரிஸ்கி இல்லையா…”

 

இரவு நேரத்தில் வெளியே செல்வது அவளுக்கு அச்சமேற்படுத்துவதைக் கண்டு அவளின் காதலை உணர்ந்தவன்

“எதுதான் ரிஸ்க் இல்லை அஞ்சலி. ரோட்டில் நடக்குறது கூட பயம்தான். நம்ம ஊரில் சின்ன சின்ன குழந்தைகளுக்கு சொந்த அப்பார்ட்மென்ட்லயே ரிஸ்க்தான்”

 

“இருந்தாலும் உங்களைக் குறிவச்சுக் கொல்றதுக்கு ஒரு கூட்டமே சுத்திட்டு இருக்கே அப்ப ஒவ்வொரு நொடியும் மரண பயம்தானே…”

 

ஜன்னல் வழியே நகரை சுட்டிக் காட்டினான் ஜெய் “இவங்க எல்லாரும் இப்படி நிம்மதியா வீட்டில்  தூங்கணும்னா  சிலர் ரிஸ்க் எடுத்தே ஆகணும்”

 

இப்படித்தானே என் தந்தையும் இருந்திருப்பார். இவர்களது தியாகம் எங்கும் போற்றப்படாது, விளம்பரப் படுத்தப்படாது இருந்தும் பிற மனிதர் வாழ உயிரை விடும் அளவுக்கு நேசம் கொண்டவர்கள்.

 

“ஜெய்..” அவளது குரலில் கரகரப்பு

 

“அஞ்சலி…” அவளருகில் நெருங்க,

 

“ஜாக்கிரதையா போயிட்டு வாங்க… “

 

அவளது வலக்கையைப் பற்றி மென்மையாக உள்ளங்கையில் முத்தமிட்டான்

 

“என்னை மன்னிச்சதுக்கு நன்றி. ஆனால் எனக்கு ஒண்ணும் ஆகாது… உன் கூட குடும்பம் நடத்தி, நாலு பசங்களையாவது பெத்து, எல்லாரையும்  நாட்டு சேவைக்கு அனுப்பணும்” என்றான் கண்ணடித்தபடி.

 

“ச்சி…” என்றவாறே அவனருகில் வர,

 

“டிரஸ் ரொம்ப நாறும் அஞ்சலி… ஒரு பிச்சைக்காரன் துவைக்காம போட்டுட்டு இருந்த உடை… காசு கொடுத்து வாங்கினேன்”

 

“உவ்வே… நாத்தம் குடலைப் புரட்டுது… துவைச்சிருக்கலாமே….”

 

“நேட்டிவிட்டிம்மா… இந்த நாத்தம் இருந்தால்தான் யாரும் சந்தேகப் படமாட்டாங்க”

 

டாக்குமெண்ட்சை கோணிப்பையில் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைத்ததை உறுதிப் படுத்திக் கொண்டு கிளம்பினான்.

 

கிளம்புவதற்கு முன் “ஜெய்…” என்று மறுபடி அழைத்தவள் அவனை காற்று கூட புகாத வண்ணம் “என்னை விட்டுட்டுப் போய்ட மாட்டியே… எனக்கென்னமோ ரொம்ப பயம்மா இருக்கு”

 

“இப்படி இருந்தால் நான் எப்படி என் வேலையை செய்ய முடியும் அஞ்சலி. இந்த மக்கள் இப்படி தினமும் நிம்மதியா தூங்க வேண்டாமா”

 

“சரி போயிட்டு சீக்கிரம் வா…”

 

சில நிமிடங்களில் ஹோட்டலின் பின் பக்கத் தெரு வழியாக வந்த ஜெய் அசல் பேப்பர் பொறுக்குபவனாகவே தோற்றமளித்தான். இரண்டு தெரு தள்ளி குப்பைத் தொட்டி அருகே ஒரு ட்ரை சைக்கிள் பழைய பேப்பர்களுடன் அவனுக்காகக் காத்திருந்தது. அதில் கோணிப்பையை மாட்டிவிட்டு லாவகமாக ஏறி அமர்ந்தான்.

 

சற்று தூரத்தில் இருந்த காரின் உள்ளே சந்தேகப் படும்படி சிலர் இருந்ததும் அவர்கள் கையில் மது பாட்டிலும் கண்டு உன்னிப்பாகக் கூர்ந்து பார்த்தான்.

 

“என்னடா  பாக்குற” என்று முரடனில் ஒருவன் கேட்க,

 

“பாட்டில் முடிஞ்சிருச்சுன்னா தாண்ணா… உன் பேரை சொல்லிக் கடைல வித்துடுவேன்” என்று பேப்பர் பொறுக்கும் பையனாகவே குறுகி நின்று கெஞ்சிக் கேட்க,

 

“அங்கிருக்கு பாரு…” சுட்டிக் காட்டிய இடங்களில் சில பாட்டில்கள் இருந்தன. சில உடைந்தும் கிடந்தன.

 

பாட்டில்களைப் பொறுக்கியபடி  உள்ளே பார்க்க முயல, ஏதோ உணவகத்தின் பெயர் பொறித்த பிளாஸ்டிக் கவரில் அசைவ உணவின் பட்டை சோம்பு வாசனை கம கமவென அடித்தது.

 

“இன்னும் என்னடா” வேணும் என்று ஜெய்யின் தலையில் தட்டி ஒருவன் கேட்க,

 

“சாப்பாடு…” என்று இழுத்தான்.

 

“சல், சல்… இங்கெல்லாம் நிக்கக் கூடாது” என்றபடி அவனை விரட்டிவிட, மேலும் தாமதிக்காது அங்கிருந்து கிளம்பினான். அதற்கு முன் ராஜேஷ்வருக்கு அந்தக் காரின் எண்ணுடன் தகவல் கொடுத்தான். போலி எண்ணாகத்தான் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை.

 

அந்த பேப்பர் கடை அருகே வந்ததும் வெளியே நிறுத்தினான். வெளியே அமர்ந்திருந்தவர் அவனை ச்நேஹத்துடன் பார்த்தார். அவர் முன்னே பாட்டில்கள்  குவிந்திருக்க…

 

“என்ன இவ்வளவு லேட்டு”

 

“தூங்கிட்டேன் பாய்”

 

“வெளிய இடமில்லை, உன் பேப்பரை பின்னாடி வச்சுடு… கீழ இருக்குற பேப்பரையும் அடுக்கி வச்சுட்டுப் போ” என்று அதிகாரமாய் சொன்னார்.

 

“உனக்கும் வேலை செய்ய இப்படி ஒரு இளிச்சவாய் கிடைச்சுடுறான்” என்றபடி இவர்கள் விஷயம் தெரியாத  இன்னொருவர் புலம்ப… “உன் வேலையைப் பாரு… “ என்று அடக்கினார் பாய்.

 

பின்னாலிருந்த அறைக்கு சென்றவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி அங்கு தரையோடு தரையாக பதிந்திருந்த மரப்பலகையை விலக்கினான். உள்ளே கும்மிருட்டில் சில அடிகள் துழவி நடந்ததும் ஒரு சிறிய அறை ஒன்று தென்பட்டது. அதில் ரப்பர் டயர்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்க அதற்குப் பின்னிருந்த சுண்ணாம்பு பூசாத செங்கல்களில் ஒன்றை எடுத்து அதன் உள்ளே தென்பட்ட லாக்கரைத் தன்னிடமிருந்த சாவியால் திறந்து உள்ளே வைத்து பத்திரமாக மூடினான்.

 

அந்த கடைசி போட்டோவை வைப்பதற்கு முன் ஏதோ நினைவில் அதனை தனது கேமிராவில் இன்னொரு படம் பிடித்துக் கொண்டான்.

 

மெதுவாக வெளியே வந்தவன் அவர் தந்த பணம் பத்தவில்லை என்று  சண்டை போட்டு, அதிகப் பணம் வாங்கிக் கொண்டு  “வர்றேன் பாய்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டேன். அஞ்சலியும் என்னைப் புரிந்துக் கொண்டாள் இனி நமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான். என்றெண்ணியபடி வேக வேகமாய் வண்டியை மிதித்தவன் ஓரிடத்தில் தனது அழுக்கு உடைகளை களைந்து உடை மாற்றி விட்டு, ட்ரை சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஹோட்டலை வந்தடைந்தான்.

 

லிப்ட்டில் ஏறப் பொறுமையின்றி மாடிப்படியில் தாவி ஏறி அஞ்சலியின் அறைக்கு சென்றவனை திறந்திருந்த கதவுகள் வரவேற்றன. பக்கத்து அறையிலும் எதிர் அறையிலும் தங்கியிருந்த வினோத்தும் ரவியும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

3 Comments »

  1. Super ud.true bio war is the from if the third world war.hmm while growing knowledge man’s cruelty also increasing. Ipo anjali my enna achinu theriyala ye.pch payan evlo asaya vanthan our romance ku kooda chance ilama pavam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: