Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 15

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 15

அத்தியாயம் 15 – பசியும் புகையும்

     வீட்டுக் கதவு பூட்டியிருப்பது கண்டு ஒரு கணம் திகைத்து நின்றான் முத்தையன். இதை அவன் எதிர் பார்க்கவேயில்லை. நின்று யோசிக்கவும் நேரமில்லை. கைகளை நெறித்துக் கொண்டான். உதட்டைக் கடித்துக் கொண்டான். கணத்துக்குக் கணம் போலீஸ்காரர்களின் ஆர்ப்பாட்டக் கூச்சல் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அவன் உள்ளத்தில் மற்ற எல்லா நினைவுகளையும் அமுக்கிக் கொண்டு ஒரு பேருணர்ச்சி எழுந்தது. அது என்னவெனில் போலீஸார் கையில் தான் மறுபடியும் அகப்படக்கூடாது என்பதுதான். கடவுளை நினைத்துக் கைகூப்பி, “ஸ்வாமி! ஸ்வாமி! ஒரு தடவை என் கண்ணால் அபிராமியைப் பார்த்துவிடுகிறேன். அப்புறம் எனக்கு என்ன வந்தாலும் வரட்டும். அதுவரையில் அவர்கள் கையில் அகப்படாமல் என்னைக் காப்பாற்று!” என வேண்டிக் கொண்டான்.

எங்கேயாவது ஒளிந்து கொள்ளலாம் என்று ஒரு கணம் தோன்றிற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்குள் ஏறிக் குதிக்கலாமென்றால், ஏறுவதற்குள்ளேயே வந்து பிடித்து விடுவார்கள். சமீபத்தில் எங்கேயும் ஒளிந்து கொள்ளுவது சாத்தியமில்லை. இப்போதைக்கு ஓட வேண்டியதுதான். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

முத்தையன் ஓடத் தொடங்கினான். வழி, திசை ஒன்றையும் கவனிக்காமல் கால் போன போக்கில் ஓடினான். ஊருக்கு அடுத்தாற்போல் ஒரு மைதானம். மைதானத்தில் மங்கலான நிலவு வீசிக்கொண்டிருந்தது. அந்த மைதானத்தைத் தாண்டும் வரையில் அபாயந்தான். அதற்கப்பால் இருபுறமும் மரங்களடர்ந்த சாலை. அதைப் பிடித்துவிட்டால் தப்பலாம்.

மைதானத்தில் முக்கால் பங்கு அவன் தாண்டிவிட்ட போது, பின்னால், போலீஸ்காரர்களின் ஆரவாரம் கேட்டது. இன்னும் விரைந்து ஓடிச் சாலையைப் பிடித்தான். பிறகு சாலையோரமாக, இருளடர்ந்த பக்கமாகவே பார்த்து ஓடிக்கொண்டிருந்தான். போலீஸ் ஆரவாரங்கள் நின்று வெகு நேரம் ஆன பிறகும் அவன் நிற்கவில்லை. ஏழெட்டு மைல் தூரத்துக்கப்பால் அந்தச் சாலையானது கொள்ளிடத்து லயன்கரைச் சாலையுடன் சேர்ந்தது. முத்தையன் அவ்விடம் வந்த போது சந்திரன் அஸ்தமித்து, நன்றாக இருளடர்ந்து விட்டது. அங்கே சாலை ஓரத்தில் ஒரு சுமைதாங்கி இருந்தது. அதில் சற்று உட்காரலாமென்று முத்தையன் உட்கார்ந்தான். அப்படியே தலையைச் சற்றுச் சாய்த்தான். அடுத்த நிமிஷம் நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.

*****

பலபலவென்று பொழுது புலர்ந்தது. நாலாவிதமான பட்சிகளின் கானம் கேட்டது. வயல்களின் மடைகளிலே பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் தம்புரா சுருதியைப் போல் இனிமையாக ஒலித்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு குடியானவன் தோளில் கலப்பையுடன் உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு தெம்மாங்கு பாடிக்கொண்டு வந்தான்.

“அபிராமி! உன் தொண்டை எப்போது இவ்வளவு லட்சணமாச்சு?” என்று சொல்லிக் கொண்டே முத்தையன் கண்களை விழித்தான். அந்தண்டையும் இந்தண்டையும் பார்த்து முழித்தான். உடனே நேற்றைய சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வந்தன. சட்டென்று கீழே குதித்து பக்கத்தில் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கி அவ்விடம் அடர்ந்து வளர்ந்திருந்த நாணற் காட்டில் மறைந்து கொண்டான்.

குடியானவன் அந்தச் சுமைதாங்கியின் அருகில் வந்த அதே சமயம், இன்னொரு பக்கத்திலிருந்து இரண்டு போலீஸ் சேவகர்கள் வந்தார்கள். பாவம்! அவர்கள் இராத்திரியெல்லாம் கண்ணை விழித்து அலைந்து ரொம்பவும் களைத்துப் போய்க் காணப்பட்டார்கள்.

“அடே! இங்கே எங்கேயாவது ஒரு ஆளைக் கீளைப் பார்த்தாயா?” என்று ஒரு போலீஸ்காரன் அந்தக் குடியானவனைப் பார்த்துக் கேட்டான்.

குடியானவன் திருதிருவென்று விழிக்கவே, இன்னொரு போலீஸ்காரன், “அடே! என்னடா முழிக்கிறாய்? ஆளு, தேளு எதையாவது பார்த்தாயா?” என்று அதட்டுங் குரலில் கேட்டான்.

குடியானவன் தன் கையில் வைத்திருந்த ஒரு காகிதப் பொட்டலத்தைச் சட்டென்று பின்புறமாக எறிந்து விட்டு, “சாமி! நான் பார்க்கலேங்க! நான் பார்க்கவே இல்லைங்க!” என்று அலறினான்.

அவள் பொட்டலத்தை எறிந்ததைப் போலீஸ்காரர்களில் ஒருவன் பார்த்துவிட்டான். அதை எடுத்துப் பிரிக்கத் தொடங்கினான். குடியானவன், “ஐயோ! சாமி நான் இல்லை! நான் போடவே இல்லை!” என்று இன்னும் அதிகமாய்க் கதறினான். பிரித்த பொட்டலத்திற்குள் ஒரு தேளைக் கண்டதும், போலீஸ்காரன் அலறி அடித்துக் கொண்டு அதைக் கீழே போட்டான். இரண்டு கான்ஸ்டபிள்களும் அந்தக் குடியானவனுடைய இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டார்கள்.

“என்னடா சமாசாரம், நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்…”

“சாமி, சாமி, சொல்லிடறேனுங்க – எங்க துரைச்சாமி இருக்கானுல்ல, துரைச்சாமி! – அவன் நேத்தி நான் தூங்கிட்டிருந்த போது என் காதிலே கட்டெறும்பைப் போட்டானுங்க – அதற்குப் பதிலாய் அவன் மேலே போடறதுக்காகத் தேளைப் பிடிச்சுட்டு வந்தேனுங்க – சாமி, அது உங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுக்கிடுத்தே! அதல்ல ஆச்சரியமாயிருக்கு?” என்று மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டான் குடியானவன். போலீஸ்காரர்கள் அவனைப் பிடரியைப் பிடித்து ஒரு நெட்டு நெட்டித் தள்ளிவிட்டு மேலே சென்றார்கள்.

*****

சற்றுத் தூரத்தில் மறைவிலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்தையன், நாணற் காட்டின் வழியாக மேலே நடக்கலானான். நடக்கும்போது யோசித்துக் கொண்டே போனான். இன்றெல்லாம் போலீஸ் நடமாட்டம் அதிகமாய்த்தானிருக்கும். ஆகையால், சாலைப் பக்கம் தலை காட்டக்கூடாது. ஒருவன் கொள்ளிடக்கரை நாணற் காட்டில் மட்டும் புகுந்து விட்டால் அவனைக் கண்டு பிடிக்க யாராலும் முடியாது என்று முத்தையன் கேள்விப்பட்டதுண்டு. அது உண்மையென்று இப்போது நன்றாய்த் தெரிந்தது. நாணலில் பத்து அடி தூரத்தில் உள்ளவனைக் கூடப் பார்க்க முடியாது. பல மைல் விஸ்தீரணம் படர்ந்திருக்கும் அக்காட்டில் மறைந்திருப்பவனை எங்கே என்று தேடுவது? எத்தனை பேர் தேடினால் தான் ஆகிற காரியமா?

ஆகவே, எவ்வளவு நாள் வேண்டுமானாலும் அங்கே நாணற் காட்டில் அவன் அகப்படாமல் இருக்கலாம். ஆனால் இருந்து என்ன செய்வது? எதற்காக இருக்க வேண்டும்? எத்தனை நாள் அப்படி இருப்பது? அபிராமியைப் பார்ப்பதற்கு வழி என்ன?

அபிராமியின் நினைவு வந்ததும் அவள் வீட்டை விட்டு எங்கே போயிருப்பாள் என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது நேற்று மத்தியானம் கான்ஸ்டபிள்கள் தன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகையில் வழியிலே செங்கமலத்தாச்சி வீதியின் மறுபக்கம் போய்க் கொண்டிருந்ததும், அவள் தன்னை வியப்புடனே பார்த்துவிட்டுச் சென்றதும் ஞாபகம் வந்தன. ‘ஐயோ! அந்தப் பாவிகள் என்னைக் கைது செய்து கொண்டு போகிறார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தால் ஆச்சியிடம் அபிராமியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருப்பேனே?’ என்று நினைத்தான். ஆனால் தான் சொல்லாது போனாலும் செங்கமலத்தாச்சியேதான் அபிராமி ஒண்டியாயிருக்கக் கூடாதென்று சொல்லி அவளைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபிராமி வேறு எங்கே போயிருப்பாள்?

ஒரு வேளை…ஒரு வேளை… கார்வார் பிள்ளைதான் மறுபடியும் வந்திருப்பானோ? அந்த நினைவே அவனுக்கு எல்லையில்லாத துன்பத்தையளித்தது. நூறு தேள்கள் சேர்ந்தாற்போல் கொட்டிவிட்ட மாதிரி இருந்தது. தலையை அதிவேகமாக ஆட்டி அசைத்து அந்த நினைவைப் போக்கிக் கொண்டான். அப்படி ஒரு நாளும் இராது. அவ்வளவு துணிச்சல் அவனுக்கு ஒரு நாளும் வராது. ஆனால் ஏற்கனவே அவன் தனக்குச் செய்த தீங்கு தான் கொஞ்சமா? பாவி, போலீஸில் பொய் கேஸ் எழுதி வைத்துத் தன்னைக் கைது செய்தானே? அடே கொலைபாதகா!

அப்போது முத்தையனுக்கு வந்த கோபத்தில் பக்கத்திலிருந்த நாணலையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கினான். நாணலின் கூரிய முனை அவன் உள்ளங்கையை அறுத்து, அதனால் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்போது ‘பட்’ என்று அவனுக்குச் சமீபத்தில் ஒரு கல் வந்து விழுந்தது. தூரத்தில் சாலையில் “சூ! சூ!” என்று சத்தம் கேட்டது. சாலையில் போகிறவன் யாரோ நாணல் அசைவதைக் கண்டு நரியாக்கும் என்று நினைத்துக் கல்லை விட்டு எறிந்திருக்க வேண்டும்.

நாணற் காட்டிற்குள்ளே கூட ஜாக்கிரதையாய்த் தானிருக்க வேண்டுமென்று முத்தையன் அப்போது அறிந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘பரிசல் துறை’-3கல்கியின் ‘பரிசல் துறை’-3

3 நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக்

கல்கியின் பார்த்திபன் கனவு – 46கல்கியின் பார்த்திபன் கனவு – 46

அத்தியாயம் 46 விபத்தின் காரணம் சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. “இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும். அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய