Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 15

அத்தியாயம் – 15

“வருக… வருக… உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டிருக்கேன் அஞ்சலி. பயப்படாதிங்க எல்லாம் நல்ல விதமாத்தான்…

பாகமதியின் நகரம் அஞ்சலியைப் போன்ற ஒரு  அழகியின் வருகையால் சிறப்புற்றது ” என்று  கண்கவரும் ரோஜா மலர்களால் செய்த மலர்செண்டை நீட்டியபடி வரவேற்றான் கம்பீரமான இளைஞன் ஒருவன்.

 

அவன் கண் சிமிட்டி சிரித்ததில் ஜெய்ஷங்கரின் சாயல் தெரிய கேள்விக்குறியுடன் ஜெய்யைப் பார்த்தாள் அஞ்சலி.

 

“அவன் அனுமதி தந்தால்தான் வாங்குவிங்களா…” குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.

 

விரைப்புற நிமிர்ந்து நின்றவள் “அப்படி இல்லை. தெரியாதவங்ககிட்ட எதுவும் வாங்குறதில்லை” என்றாள் உறுதியாக.

 

“சரிடா அப்ப நீயே உன் கையால் தா” ஜெய்யின் கையில் திணித்தான். ஜெய் அவனை

“ரவி, அமைதியா இரு” என்று அடக்கினான்.

 

“அமைதியா இருந்தால் எப்படி அறிமுகப் படுத்திக்கிறது. நான் ரவிச்சந்திரன், ஜெய் என்னோட அண்ணன்”

 

‘சரிதான் உளவுதான் குடும்ப வேலை போலிருக்கு’ மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

“எங்க பாட்டன் முப்பாட்டங்க ‘உழவு’ செய்தாங்க நாங்க இப்ப ‘உளவு’ செய்றோம். ஆனால் இரண்டுமே நாடு நல்லபடியா நடக்க ரொம்ப முக்கியம்” என்று பதிலுரைத்தான் ஜெய் அவளை உணர்ந்தார் போல

 

வெடுக்கென வெட்டும் பார்வையால் அவனை விளாசியபடி ரவிச்சந்திரனிடம்

“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் சொன்னாள்.

 

“இப்பவாவது இந்த பூங்கொத்தை வாங்கிப்பிங்களா… கையெல்லாம் வலிக்குது” என்றதும் மறுக்க வழியின்றி வாங்கிக் கொள்ள நேரிட்டது.

 

“உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கேன் அஞ்சலி… பயப்படாதிங்க நல்ல விதமாத்தான்”

 

“கெட்டதா கேள்விப்பட்டாலும் நான் அதை நினைச்சுக் கவலைப்படும் ஆளில்லை”

அவளது ஒட்டாத பேச்சையும், ஜெய்யின் பார்வை வேறு திசையை நோக்கியதையும் கண்டு இருவருக்கும் நடுவே ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்து விட்டான். அதற்கு மேலும் தர்ம சங்கடத்தைத் தொடர விரும்பாமல்,

“ஒரு காபி குடிக்கலாமா” என்றான்.

“வேண்டாம்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேலதிகாரியை சந்திச்சுட்டு நான் பெங்களூர் கிளம்பணும். அதனால் உடனே புறப்படுறது நல்லதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அஞ்சலி.

 

“நம்ம போற வழியில் ஏதோ சாலை மறியல் நடக்குது. அதனால் உங்க பாதுகாப்பைக் கருதி கொஞ்ச நேரம் கழிச்சுக் கிளம்ப சொல்லி மேலிடத்திலிருந்து தகவல் வந்திருக்கு”

 

அது சிறிது நேரம் என்ற சொல் மட்டுமே அஞ்சலியின் வாயை அப்போதைக்கு மூட வைத்தது. அதன் பின் மீண்டும் நச்சரித்தவளின் தொல்லை பொறுக்காது சில பல போன் கால்களுக்குப் பின்

 

“சுத்திலும் ஆட்கள் நடமாட்டம் சரியில்லை. அதனால் இன்னைக்கு ஏர்போர்ட் பக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தக்க  பாதுகாப்போடு உங்களைத் தங்க வைக்க உத்தரவு வந்திருக்கு. எங்கள் ஆட்கள் மேற்கொண்டு சொல்லப் போகும் தகவல்களைக் கொண்டு உங்களை எங்க பாஸ் சந்திப்பார்”

 

எல்லா இடங்களிலும் மறுக்க முடியாது சூழ்நிலை கையைக் கட்டிப் போட்டு அடிக்கிறதே என்று மனதுக்குள் நொந்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் அஞ்சலியால் செய்ய முடியவில்லை.

 

முகத்தில் சுணக்கம் காட்டியபடி அருகிலிருந்த நட்சத்திர விடுதிக்கு அவர்களுடன் சென்றாள். அவளுக்கு சில அடி தூரம் முன்பு யாருக்கும் சந்தேகம் வராதபடி அவர்கள் துறையை சேர்ந்த வினோத் என்ற ஆபிசர் ஒருவன் செல்ல, அவளுக்கு இருபுறமும் அரணாக ஜெய்யும், ரவியும் சென்றார்கள்.

 

விடுதியிலும் பல அறைகள் அவர்கள் தாங்கும் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையையும் சுற்றிப் பார்த்த பின் ஒருவழியாக அவள் தங்கப் போகும் அறையைத் தேர்ந்தெடுத்தனர் இருவரும்.

 

“ஒரு வழியா முடிச்சுட்டிங்களா… இல்லை இன்னும் ஒரு தடவை மாத்துவிங்களா… “

 

“முடிச்சாச்சு அஞ்சலி. உங்க அறைக்கு வலப்பக்க அறையில் ஜெய்யும் இடப்பக்க அறையில் நானும் தங்குவோம். எதிர் அறையில் வினோத். நடுவில் அறை மாத்திப்போம். நீங்க என்ன உதவின்னாலும் எப்போதும் எங்களைக் கேட்கலாம்”

 

“நீங்க தூங்கும்போது நான் ஓடிடக் கூடாதுன்னு இவ்வளவு ஏற்பாடா”

 

“நாங்க தூங்கினாத்தானே… எத்தனை நாட்கள் நீங்க நிம்மதியா தூங்கணும்னு ஜெய் விடிய விடிய முழிச்சு உங்க வீட்டு மரக்கிளையில் உக்காந்து, எறும்பு, பூரான் கடி வாங்கிட்டுக்  காவல் காத்திருப்பான்னு உங்களுக்குத் தெரியாது”

 

அஞ்சலி விழித்தாள். என்ன நடக்கிறது இங்கே…

 

“ரவி… ஷட் அப்… கிளம்பு” அதட்டல் போட்டு ரவியை அடக்கினான்.

 

கிளம்பும் முன் “அஞ்சலி, பெங்களூர் நினைப்பில் பால்கனி கதவைத் திறந்து வச்சுட்டுத் தூங்காதே… சேப் இல்லை…” என்றபடி நழுவினான்.

 

பெங்களூரில் பாதி நாட்கள் பால்கனி கதவைத் திறந்து வைத்தவண்ணம் தூங்கியிருக்கிறாள். பக்கத்து வீட்டில் நடக்கும் திருட்டு கொள்ளை எதுவும் இவளது வீட்டில் நடந்ததில்லை என்று சொல்லி சிரிப்பார்கள் அவளும் மாயாவும். அப்படியென்றால் அவன் அவளது அறைக்கு அருகிலிருக்கும் மரக்கிளையில் தினமும் தூங்கியிருக்கிறான். பல சமயம் யாரோ தன்னைக் குறுகுறுவென பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வு தோன்றியது பொய்யில்லை.

 

அவள் திரும்பிப் பார்த்தபோது அவர்கள் அவளது அறையிலிருந்து வெளியேறி சென்றுக் கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் நடந்து செல்வது ஏதோ மார்ச் பாஸ்ட் செல்வதைப் போலத் தாள லயத்துடன் இருந்தது. அவர்களை உற்று கவனித்த போது  அவர்களது இடது கை மட்டும் வீசி வீசி நடக்க வலது கை அவ்வளவாக அசையாதது புலப்பட்டது. அவளது தந்தை கூட இதே போல்தான் நடப்பார். எதனால் அப்படி…

 

ஏதோ தோன்ற மேஜையிலிருந்த டிவி ரிமோட்டை சத்தமெழக் கீழே போட்டாள். விருட்டென திரும்பிய சகோதரர்கள் இருவரின் கைகளும் மின்னல் வேகத்தில் வலப்பக்க பேண்ட் பாக்கட்டிலிருந்து துப்பாக்கியை உருவியிருந்தது.

 

ஓ… எந்த கணத்திலும் துப்பாக்கியை எடுக்க வேண்டும் என்பதாலேயே வலக்கையை வீசி வீசி நடப்பதில்லையா இவர்கள். ஆக இந்த உணர்வு அவர்கள் ரத்தத்தோடு கலந்து விட்டது.

 

“சாரி… ரிமோட் கை தவறி கீழ விழுந்துடுச்சு”

 

“பரவால்ல… பத்திரமா இருந்துக்கோ. ஏதாவது வேணும்னா என்னைத் தயங்காம கூப்பிடு” குரலில் உணர்ச்சி இல்லாதிருந்தாலும் ஜெய்யின் கண்களில் அளவு கடந்த அன்பு வெளிப்பட்டது.

 

ஆனால் அஞ்சலியிடமிருந்து அதற்கு எதிரொலி இல்லை. ஒரு மரத்த முகத்தில் சாதாரண தலையசைப்பே பதிலாகக் கிடைத்தது.

 

“நீ ஒண்ணுமே சாப்பிடலையே… ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணட்டுமா”

 

“நான் தூங்கணும்” சுவற்றைப் பார்த்து சொன்னாள்.

 

பெருமூச்சோடு “அவ தூங்கட்டும் வாடா…” என்றவண்ணம் ரவியைத் தனது அறைக்கு அழைத்து சென்றான்.

 

நுழைந்ததும் நுழையாததுமாக

“என்னடா ஆச்சு லவ் பேர்ட்ஸ ரெண்டும் இப்படித் தனித் தனியா பிரிஞ்சிருக்கிங்க. உன்னைப் பாத்தா பிரிவுத் துயர்லயே  செத்துடுவ போலிருக்கு”

 

தனது முட்டாள்தனத்தை நினைத்து ஆத்திரமாகத் தன் தலையில் குட்டிக் கொண்டான் ஜெய்.

“என் வாய்தான் காரணம்”

 

பிரமிப்பாகத் தன் அண்ணனைப் பார்த்தான் ரவி “நிஜம்மாவா… சாமியார் மாதிரி இருந்துட்டு அதுக்குள்ளே கிஸ் வரைக்கும் போயிட்டியா… அதுதான் அஞ்சலி டூ வா?”

 

ஒரு வினாடி அந்த சம்பவத்தை நினைத்து ஜெய்யின் முகத்தில் சிறிது வெட்கச் சிவப்பின் சாயல் கண்ணிமைக்கும் நொடியில் சுதாரித்தவன்

“டேய்… டேய்…  என் வாயை வச்சுட்டு சும்மா இல்லாம கிஷோரைப் பத்திக் கேட்டுட்டேன்”

 

“மட வாத்தே… இது ஒண்ணு போதாதா நீ ஏதோ காரணத்துக்காகத்தான் வந்திருக்கேன்னு சொல்றதுக்கு… நீயெல்லாம்… இனி உன் லவ்வை எப்படி அவ நம்புவா…” தலையில் அடித்துக் கொண்டான் ரவி.

 

“இப்ப என்ன செய்றதுன்னே தெரியல. ஆதாரங்களை ஒப்படைச்ச உடனே பெங்களூருக்குப் போய்டுவா… என் முகத்தில் முழிக்கக் கூட அவளுக்கு விருப்பம் இல்லடா…” தழுதழுத்தான் ஜெய்.

 

“அப்படியெல்லாம் விட்டுட முடியுமா… நடந்தது எல்லாம் ஒண்ணு விடாம சொல்ற… குறிப்பா  சென்ஸார் கத்திரி இல்லாத வெர்ஷன்… அப்பறம் நான் ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்”

 

சில பல விஷயங்களை லேசாகக் கோடிட்டுக் காட்டி சொல்லி முடித்தான் ஜெய்.

 

“நீயே சொல்லுடா… நம்ம மாதிரி ஒரு வேலைல இருக்கவங்க உண்மையை மறைக்கிறது தப்பா… எத்தனை ஆபிசர்ஸ் குடும்பத்தை விட்டுட்டு பிச்சைக்காரனாவும், வீட்டு வேலைக்காரியாவும், பெட்டிக் கடைக்காரனாவும், ட்ரைவராவும் உருமாறிருகாங்க. இவ்வளவு ஏன் மிஸ்டர் தனசேகர் கூட ஒரு பிஸினஸ் பண்றதாத்தானே உலகத்தை நம்ப வச்சிட்டிருந்தார். அவ அப்பா சாகுற வரைக்கும் அவரைப் பத்தின உண்மையை மறைச்சது கூட அவளுக்கு உறைக்கல… ஆனால் அதே காரணத்துக்காக நான் மறைச்சது தப்பாம். என்னை விட்டுட்டு போயிடுவாளாம்…” பொரிந்துத் தள்ளி விட்டான்.

 

“ஒரு பொண்ணு பொறந்ததிலிருந்து உண்மையே தெரியாம வளர்ந்து, காரணமே தெரியாம கஷ்டத்தை அனுபவிக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம்.

செத்து போன தனசேகர் மேல அவ கோபப் பட முடியாது. அப்பாவா வேற போய்ட்டார்.

ஆனால் நீ அப்படியில்லையே… உன்னோட நெருக்கம் விஷயத்தை தெரிஞ்சுக்க நாடகமாடினதா பட்டிருக்கு. அவ காதல் உண்மையா இருந்ததால்தான் அவளோட எண்ணப்படி உன்னோட நாடகக் காதல் அவளால ஜீரணிக்க முடியல. நம்பிக்கை துரோகம் அவளைக் காயப் படுத்திருக்கு. அவளோட கோபம் மிக நியாயமானது”

 

சற்று நேரம் அவனது கூற்றினை அசை போட்டவன்  “உண்மைதான்… அப்பறம் அஞ்சலி ரொம்ப குழம்பியிருக்கா போல, ரெண்டு மூணு தடவை அவங்கப்பாவைப் பார்த்ததா சொல்றா…”

 

“என்ன இறந்து போன தனசேகரைப் பார்த்தாளா…” வியப்போடு கேட்டான் ரவி. இருவரும் அவள் கூறிய சம்பவங்களைப் பற்றி ஆலோசித்தனர்.

 

“ஜெய் அவ தொடர்ந்து நடக்குற அதிர்ச்சியான சம்பவங்களில் நிலை குலைஞ்சு போயிருக்கா… இப்ப அவளுக்குத் தேவை உண்மையும் சுய அலசல் செய்ய கொஞ்ச நேரம். புத்திசாலிப் பொண்ணு அந்த கேப்பில் தெளிஞ்சுடுவா”

 

“நாளைக்கு இந்த வேலையை முடிச்சுட்டு அடுத்த நாளே அம்மா அப்பாவோட அவளைப் பொண்ணு கேட்டா…”

 

“உதைப்பா… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டா”

 

“என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாது. எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வை…” சிறுபிள்ளைத்தனமாகப் பேசும் அண்ணனைத் திகைப்புடன் பார்த்தான் ரவி.

 

“அவ என் மேல கோபமா சாப்பிடவே இல்லைடா…”

 

“நீ சாப்பிட்டியா…”

 

“அவ சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுறது”

 

“ஜெய்… உனக்குக் காதல் பித்து தலைக்கேறி போயிருக்கு. இது நம்ம வேலைக்கு நல்லதில்லை”

 

“எனக்கு இந்த வேலை வேண்டாண்டா… அவளைக் கல்யாணம் பண்ணிட்டு நம்ம தியேட்டரைப் பாத்துக்குறேன். நீ சொத்துத் தகராறு பண்ண மாட்டியே”

 

“உன்னோட பெரிய தொல்லைடா… முதல்ல சாப்பிடு வா”

 

அஞ்சலியின் அறைக்கதவு தட்டப்பட, உணவுப் பதார்த்தங்களுடன் உள்ளே நுழைந்தான் ரவி. அவன் பின்னே ஜெய்.

 

“எனக்கு சாப்பாடு வேண்டாம்”

 

“அஞ்சலி, நாளைக்கு கோல்கொண்டாவில் ஒருத்தரை மீட் பண்ண வேண்டியிருக்கு. அதுக்குத் தெம்பு வேணும்னா இப்ப சாப்பிடு”

 

“அதுக்கெல்லாம் தெம்பிருக்கு”

 

“புரியாம பேசாத அஞ்சலி. யாரு கண்டா ஏர்போர்ட்லேருந்து நடந்தே போறோமோ இல்லை  ஓடிப் போறோமோ… அதுக்குத்தான் சொல்றேன்… சாப்பிடு” சீரியசாய் சொன்னான் ரவி.

 

தம்பி ஏற்படுத்தித் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எண்ணி

 

“ரவி, நம்பிக்கையான இடம்தான் இருந்தாலும் நமக்கு மனசில்  ஒரு சந்தேகம் ஓடிகிட்டே இருக்கணும்னு அஞ்சலி அப்பா நம்மகிட்ட அடிக்கடி சொல்வாரே”

 

“சரியா சொன்ன  ஜெய்… அஞ்சலியோட உணவை டெஸ்ட் பண்ணிட்டு அவளுக்கு சாப்பாடு தா…”

 

“வாட்… “ இதென்ன புதுசா என்பது போல பார்த்தாள் அஞ்சலி.

 

“அஞ்சலி இது கூட ஒரு பிரசிஜர் தான்… நீ இந்த கேசில் முக்கியமான நபர். அதனால உன் சாப்பாட்டில் விஷம் எதுவும் கலந்திருந்தா”

 

“இவ்வளவு நாளா கலக்காதவங்க இப்ப கலக்கப் போறாங்களா?”

 

“இவ்வளவு நாளா மறைஞ்சிருந்த, ஆதாரம் வேற இப்பத்தானே வெளிபட்டிருக்கு”

 

“இருக்கலாம்… ஆதாரம் தானே முக்கியம், எனக்கு எதுக்கு இத்தனை பாதுகாப்பு”

 

“உனக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சிருக்கலாம்னு எதிரிகள் நினைக்கலாமே… அதனால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்…”

 

“நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க… எனக்கு இப்ப பசிக்குது நான் சாப்பிடப் போறேன்” என்றபடி உணவில் பாய்ந்த வினோத் ஐந்து நிமிடத்தில் உணவை உண்டுவிட்டு வெளியே சென்றான்.

 

“அவனுக்கு சாப்பிட்டதும் ஒரு வெண்குழல் ஊதணும்” என்று அஞ்சலியிடம் விளக்கம் சொன்னான் ரவி.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜெய் உணவு வகைகளை ருசி பார்த்துவிட்டு அவளுக்கு தட்டில் எடுத்து வைத்தான்.

 

“ஜெய் ஏன் சாப்பிடனும், சாப்பாடு டெஸ்ட் நீ பண்ண மாட்டியா ரவி” என்றாள் அஞ்சலி.

 

“நான் சுத்தமான அசைவம்… மூச்.. சைவ சாப்பாட்டைத் தொட்டுக் கூடப் பாக்க மாட்டேன். வீட்ல சாம்பார் வச்சால் கூட நான் சாப்பிடணும்னா எங்கம்மா அதில் ஒரு சிக்கன் துண்டை போடணும். அதனால… சாரி இந்த இட்லி தோசை எல்லாம் எனக்கு தோஷம்.

 

ஆனால் ஜெய் சைவம் சாப்பிடுவான்…  ஜெய் நீ டெஸ்ட்டை ஸ்டார்ட் பண்ணு. அஞ்சலி  உன் கடை காராபாத்தை விட இந்த ஹோட்டல்  இட்லி  நல்லாவே இருக்கும்”

 

“என் கடை காராபாத்தைப் பத்தி என்ன தெரியும் உனக்கு”

 

“தாராள மனசோட அதை முழுங்க ஒரு பக்கெட் தயிர் தருவன்ற வரை தெரியும்”

 

வேகமாய் உண்டு முடித்து அஞ்சலி உண்பதைப் பார்த்து திருப்தி அடைந்த ஜெய்.

 

“ரவி, மேலிடத்தில் காண்டக்ட் பண்ணிட்டு வந்துடுறேன். அஞ்சலியை பத்திரமாய் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு ரவியின் முறைப்பை சட்டை செய்யாமல் வெளியேறினான்.

 

செல்லை அடித்தவுடன் மறுமுனையில் உடனே எடுக்கப்பட்டது “ஜெய் பொண்ணு பத்திரமா இருக்காளா”

 

“பத்திரம் சார். ஆதாரங்களும் பத்திரம். உங்களை எப்ப எங்க சந்திக்கிறதுன்னு சொல்லுங்க”

“மணிவண்ணன் முக்கியமான வேலையா இங்க வர்றார். அவர் வந்ததும் இதை ஒப்படைச்சுட்டா நான் நிம்மதியா மூச்சு விடுவேன்” என்றார் மறுமுனையிலிருந்த ராஜேஸ்வரன். விரைவில் ஓய்வு பெறப்போகும் இந்த நேரத்தில் அதி முக்கியமான இந்த கேஸில் தன்னை நுழைத்துவிட்டது தனக்கு மனத்தாங்கல் அளிப்பதாக அவனிடமே சொல்லியிருக்கிறார்.

 

“இத்தனை வருஷம் உழைச்சாச்சு. நிம்மதியா வீட்டில் உக்காரும் நேரத்தில் இந்த கேசைத் தந்து உயிரை வாங்குறாங்க. இதை ஒழுங்கா முடிக்கலைன்னா சர்வீஸில் கரும்புள்ளி விழுந்துடும்” என்று அவரது மனைவி கோசலாவும் கூட சலித்துக் கொண்டார்.

 

“பேசாம இரு கோசலா… தனசேகரும் நானும் நாலைஞ்சு தடவை ஒண்ணா வொர்க் பண்ணிருக்கோம். அவனுக்காகவாவது இந்தக் கடமையை முடிச்சாகணும். அவன் பொண்ணோட பாதுகாப்பை நீயே நேரடியா பாரு ஜெய். என்கிட்ட நேரடியா தகவல்களைப் பகிர்ந்துக்கோ. ஏதாவது வேணும்னா  தயங்கமா கேளு. என் அதிகாரத்துக்குட்பட்டு செய்யுறேன்”

 

“உங்க அதிகாரம்னு சொல்லாதிங்க. கவர்ன்மென்ட் ஆபிஸ்ல வேலை செய்றவங்க எல்லாம் எப்படி இருக்காங்க. என்னால உங்கப் பதவியாவது வெளிய சொல்லிப் பெருமைப் பட முடியுதா… இல்லையே… “ நொடித்துக் கொள்வார் கோசலா.

 

அவரது வீட்டில் நடந்த கடந்தகால சம்பவங்கள் அவன் கண்முன் நடமாடின.

 

இருவரும் சுருக்கமாக விவாதித்தனர். “இந்த கேசில் எதிரி எங்கிருக்கான்னே எனக்குத் தெரியல. சில நாளா என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரியே தோணுது. அதனால தனசேகர் சம்மந்தமா ஆபிஸ்ல பைல் வைக்கக் கூட பயம்மாருக்கு. என் சிக்னல் கிடைச்சதும் நீ ஆதாரங்களை எடுத்துட்டு நம்ம ரகசியமா சந்திக்கும் இடத்துக்கு வந்துடு. அங்க இருக்கும் லாக்கரில் வச்சுட்டு தகவல் தா. நான் சமயம் பாத்து அதை எடுத்துட்டு மணிகிட்ட ஒப்படைச்சுடுறேன்”

 

“மணி எப்ப வர்றார்”

 

“நாளைக்கு மத்தியானம் ஃப்ளைட். ராத்திரிக்குள்ள அவர்கிட்ட ஒப்படைச்சுடலாம். இந்த கேஸ் சம்பந்தமா நானும் சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. அதனால நைட்டே நம்ம வேலைகளை முடிச்சுடலாம்”

 

“சரி சார். அப்பறம் அஞ்சலி அவங்கப்பாவைப் பார்த்ததா சொல்லிட்டு இருக்காளே… அதைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா”

 

“நானும் அது விஷயமா விசாரிச்சுட்டேன். அதுக்கு வாய்ப்பே இல்லை. என்னைப் பொறுத்தவரை ரெண்டே ரெண்டு சாத்தியம்தான் இருக்கு. ஒண்ணு அவ மனசளவில் ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்திருக்கணும் அதனால் அவங்கப்பாவைப் பார்த்ததா கற்பனை பண்ணிருக்கணும் இல்லை சில சமயம் அவளோட எமோஷன்சை தூண்டிவிட நம்ம டிபார்ட்மென்ட்ல யாராவது அவங்கப்பாவின் வேஷம் போட்டிருக்கணும்”

 

“அப்படியெல்லாம் கூடவா செய்வாங்க”

 

“மனிதனோட எமோஷன்ஸ் தான் நமக்கு பெரும்பான்மையான சமயங்களில் உதவியா இருக்கும் கருவி. அஞ்சலி அழுத்தமான பெண்ணா இருக்கா உண்மையை வரவழைக்க அவளது வீக்கான பாய்ண்டை ட்ரிகர் பண்ணாத்தான் நல்லதுன்னு  நம்ம டிபார்ட்மென்ட் மேதாவிங்க நினைச்சிருக்கலாம். அதனால் தனாவைப் போலவே உருவ ஒற்றுமையோடு ஒருத்தரைப் பிடிச்சு அவளோட கண்முன்னே நடமாட விட்டிருக்கலாம். அவளது குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி உன்மூலமா விஷயத்தை வாங்க நம்ம பிக் பாஸ் நினைச்சிருக்கலாம். எதுவும் நடக்கலாம்”

 

“ஒருத்தங்களோட உணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடுறது  தப்பில்லையா சார்…”

 

“அடப்போடா என் சர்விஸ்ல பேய்க்கு பயந்த குற்றவாளிகிட்ட பேய் இருக்குறதா நாடகம் போட்டு உண்மையை வரவழைச்சிருக்கேன். நீ இவ்வளவு கேர் எடுத்துக்குறதைப் பாத்தா… அவளை லவ் பண்றியா ஜெய்”

 

அவர் இப்படி கேட்பார் என்று எதிர்பார்க்காததால் “சார்…” என்று திணறினான்.

“அது உன்னோட பெர்சனல். ஆனால் உன்னோட வேலையை அபெஃக்ட் ஆகாம பாத்துக்குறது நல்லது.

“ஓகே மை பாய்… சீக்கிரம் உன்னைப் பிக்கப் செய்ய ஏற்பாடுகளை செஞ்சுட்டுத் தகவல் சொல்றேன். எந்த நேரமும் கிளம்பத் தயாரா இரு”

 

மொபைலை வைத்தபோது நள்ளிரவைத் தொடவிருக்கிறேன் என்று கடிகாரம் சொன்னது.

4 Comments »

  1. hi madhura.. going strong and interesting. so atlast danasekar was in raw dept. ….ravi is justopp to jai. aiyo paavam thambikitta kenjavachitale

  2. Jai pavam ivlo love vachukittu atha vellipadutha mudiyala hmm anjali um pavam avanoda love nijama poiyanu purinjuka mudiyama. Hope Ravi will settle them.anthe mugamariya villain yarupa.appo anjali appa uyiroda iliya

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: