Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14

அத்தியாயம் 14 – அபிராமியின் பிரார்த்தனை

     அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி கலெக்டரின் காம்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உள்ளே மிகவும் இனிமையான பெண் குரலில் யாரோ உருக்கமாகப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு வியப்பு அடைந்தார். சற்று நேரம் வாசலிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்து விட்டு உள்ளே சென்றார். கூடத்தில் ஸ்வாமி படங்களின் முன்னால், குத்து விளக்கு ஏற்றி வைத்திருப்பதையும் ஓர் இளம் பெண் உட்கார்ந்து பாடுவதையும் தமது மனைவியும் குழந்தைகளும் அந்தப் பாட்டில் அமிழ்ந்து போயிருப்பதையும் கவனித்தார்.

சாஸ்திரி கொஞ்சம் தொண்டையைக் கனைத்து, இரண்டு தடவை தரையைத் தட்டிய பிறகுதான் அவர்களுக்கெல்லாம் இவர் வந்திருப்பது தெரிந்தது. அபிராமி சட்டென்று பாட்டை நிறுத்தினாள். இன்ஸ்பெக்டரின் மனைவி உடனே எழுந்திருந்து அவரிடம் வந்து, “இந்தப் பெண்ணுக்குப் பெரிய கஷ்டம் வந்திருக்கிறது. எல்லாம் உங்களுடைய அழகான போலீஸ் இலாகாவினால் தான். இந்தப் பாவம் எல்லாம் யாருடைய தலையில் விடியப் போகிறதோ, தெரியவில்லை…” என்று படபடப்புடன் பேசத் தொடங்கினாள்.

“முதலில் சமாசாரம் என்னவென்று சொன்னால் அப்புறம் பாவபுண்ணியத்தைப் பற்றி விசாரிக்கலாம்” என்றார் சாஸ்திரி.

“அதெல்லாம் சொல்ல முடியாது. முதலில் இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாக நீங்கள் பிரமாணம் செய்யுங்கள், அப்புறம் தான் சமாசாரம் சொல்வேன்.”

“இதென்ன, சித்திரசேனன் கதையாக அல்லவா இருக்கிறது? நான் என்ன கிருஷ்ணனா, அர்ச்சுனனா? யாருடைய தலையையாவது யாராவது நாளைச் சாயங்காலத்துக்குள் வாங்கி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்களா?”

“போதும், போதும்! அர்ச்சுனனாயிருங்கள், கிருஷ்ணனாயிருங்கள், மன்மதனாய் வேண்டுமானாலும் இருங்கள், இவளுடைய அண்ணனை உடனே ஜெயிலிலிருந்து விடுதலை பண்ணிக் கொடுத்தால் சரி” என்றாள்.

“இவளுடைய அண்ணனா? யார், மடத்துப் பணத்தைத் திருடிவிட்டதாகக் கார்வார் பிள்ளை வந்து ரிப்போர்ட் செய்தானே, அந்தப் பையனா?”

“ஆமாம் அந்தக் கார்வார் பிள்ளையைத் தூக்கிலே போட்டாலும் பாதகமில்லை. அவன் வந்து சொன்னான் என்று நீங்களும் அந்தப் பையனை அரஸ்ட் செய்யச் சொன்னீர்களே!”

பிறகு, மீனாட்சி அம்மாள், அபிராமியும் செங்கமலத்தாச்சியும் தெரிவித்தபடி எல்லா விவரங்களையும் ஸர்வோத்தம சாஸ்திரியிடம் சொன்னாள். சாஸ்திரி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “அந்தச் சங்குப்பிள்ளை பெரிய அயோக்கியன் என்று எனக்குத் தெரியும். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன். பொய் வாக்குமூலம் கொடுத்ததற்காகப் பிடித்துத் தண்டித்து விடுகிறேன். முத்தையன் ‘லாக்-அப்’ பில் இரண்டு மூன்றுநாள் இருந்தால் கூட மோசம் இல்லை. அப்படி இருந்தால் தான் அந்த அயோக்கியன் மேல் கேஸ் வலுப்படும். இந்தப் பெண்ணைச் சமாதனப்படுத்தி அனுப்பு” என்றார்.

அதற்கு மீனாட்சி அம்மாள், “ரொம்ப நன்றாயிருக்கிறது! இவள் எங்கே போவாள், இத்தனை நேரத்துக்குப் பிறகு? அண்ணனைத் தவிர வேறு நாதி கிடையாது, இந்தப் பெண்ணுக்கு. இட்டிலிக் கடை செங்கமலத்தாச்சி தற்செயலாகப் பார்த்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். இல்லாவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ தெரியாது. இராத்திரி இங்கே தான் இந்தப் பெண் இருக்க வேண்டும்” என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமிக்கு, முத்தையன் இப்போது உடனே விடுதலையடைந்து வரமாட்டான் என்பது மட்டுந்தான் மனத்தில்பட்டது. மீனாட்சியம்மாளின் ஆறுதல் மொழியினால் தேறுதலடைந்திருந்த அவளுக்கு இப்போது துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. எவ்வளவோ அடக்கிப் பார்த்தும் முடியாமல் விம்மினாள்.

*****

அந்தச் சமயம் வீட்டு வாசலில் ஆள் ஓடிவரும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் ஒரு போலீஸ்காரன் உள்ளே வந்து ஸப்-இன்ஸ்பெக்டருக்கு ஸலாம் வைத்து நின்றான். ஸப்-இன்ஸ்பெக்டர், “என்னடா இது தடபுடல்? போலீஸ் ஸ்டேஷனைத் திருடன் கொண்டு போய்விட்டானா?” என்றார்.

“இல்லை, எஜமான்!”

“என்னடா பின்னே?”

“ஒன்றுமில்லை, எஜமான்…!”

“ஒன்றுமில்லாததற்கா இவ்வளவு தடபுடல்?”

“இல்லை, எஜமான்!”

“என்னடா இல்லை, முட்டாள்!”

“தடபுடல் இல்லை, எஜமான்! இரண்டு கைதிகள் லாக்கப்பிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள், எஜமான்!”

“என்ன? என்ன? நிஜமாகவா?”

“ஆமாம்! எஜமான்; குறவன் சொக்கனும் இன்று சாயங்காலம் அரெஸ்ட் செய்த முத்தையனும் ஓடி விட்டார்கள், எஜமான்!”

இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர், அவருடைய மனைவி, அபிராமி மூன்று பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இந்தச் செய்தி வெவ்வேறு வித உணர்ச்சிகளை உண்டாக்கிற்று. ‘பாவிப் பயல்’ காரியத்தைக் கெடுத்து விட்டானே’ என்று நினைத்தார் இன்ஸ்பெக்டர். கான்ஸ்டபிளைப் பார்த்து, “போ ஓடு! உங்களையெல்லாம் முதலில் தொலைத்துவிட்டு, மறுகாரியம் பார்க்கிறேன்” என்று கூவினார். அவன் போனதும் உள் அறையில் இருந்த ரிவால்வரை எடுப்பதற்காக விரைந்து சென்றார்.

மீனாட்சி அம்மாளின் மனத்தில் பெருங்கலக்கம் உண்டாயிற்று. முத்தையன் ஓடிப் போனதன் விளைவுகளை நன்கு அறியவில்லையென்றாலும், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதென்று மட்டும் அவளுக்குத் தோன்றிற்று.

பேதைப் பெண் அபிராமியோ, அந்தச் செய்தியைக் கேட்டுப் பெரிதும் சந்தோஷமடைந்தாள். தன் அண்ணன் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் என்பது மட்டுமே அவளுக்குத் தெரிந்தது. அதனுடைய பலாபலன்களை அவள் என்ன கண்டாள்? இன்ஸ்பெக்டர் ரிவால்வரை எடுத்து வர உள்ளே போனபோது, அவர் மனைவியும் அவரைத் தொடர்ந்து போனாள். அப்போது அபிராமி கூடத்திலிருந்த படத்தின் முன்னால் கைகூப்பி நின்று, “ஸ்வாமி, பகவானே! என் அண்ணன் போலீஸ்காரர்கள் கையில் அகப்படக்கூடாது” என்று வாய்விட்டுப் பிரார்த்தித்தாள். உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டே வந்த ஸப்-இன்ஸ்பெக்டர், அபிராமியை இரக்கத்துடனே பார்த்துவிட்டு, “ஐயோ! துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணே!” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டு வெளியே சென்றார்.

1 thought on “கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3

அத்தியாயம் 3 – பாழடைந்த கோவில்      பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல்

சாவியின் ஆப்பிள் பசி – 8சாவியின் ஆப்பிள் பசி – 8

வாசலில் ஓட்டல்காரர் மகள் லல்லு நின்று கொண்டிருந்தாள். ‘அச்சச்சோ’ போல, கையால் முகத்தை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பிறகு தாவணி தடுக்காமலிருக்க ‘ததக் பிதக்’ என்று காலை வைத்து உள்ளே வந்தாள். வக்கீல் மாமி கோமளத்திற்குக் கதி கலங்கிற்று. அவள்