Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 02

அத்தியாயம் – 02

 

கூட வந்த பெண்மணி ஷானவியை அவளது வகுப்பறையில் விட்டு விட்டு,

 

“உங்கள் விரிவுரையாளர் வெளியே போயுள்ளார். நீங்கள் உங்கள் இடத்தில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள்.”

 

என்று காலியாய் இருந்த இருக்கையை சுட்டிக்காட்டி பிரெஞ்சில் கூறவும், இவளும் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வகுப்பறையை சுற்றி நோட்டமிட்டுக் கொண்டே காலியான இருக்கையை நோக்கிச் சென்றாள்.

 

“ப” வடிவில் எட்டு மேசைகள் போடப்பட்டிருக்க, பதினாறு பேர்கள் அமரக் கூடிய மாதிரி கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவள் தாமதமாகச் சென்றதனால் ஒரேயொரு இடம் தான் காலியாக இருந்தது. “ப” வின் வலது பக்க மூலையில் இருந்த காலியான இருக்கைக்குச் சென்று குளிரங்கியை கழட்டி இருக்கையில் கொழுவி விட்டு அமர்ந்து கொண்டாள்.

 

இதயமோ கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தது. அவள் வாழ்க்கையில் இனிமேல் அனுபவிக்காத வலிகள் இல்லை என்றளவில் பலதையும் கடந்து, இன்று நாடு கடந்து இந்த வேற்று நாட்டில் அந்நாட்டு மொழியைக் கற்க வந்திருக்கிறாள். இனி அவள் எதிர்காலத்திற்கு ஆதாரமாய், ஆரம்பமாய், அவள் புதிய வாழ்வின் முதல் படியாய் இருக்கப் போவது இந்த பிரெஞ்சு மொழி கற்கை.

 

இரண்டரை மாதங்கள் காலையில் இருந்து மாலை வரை கூடவே கழிக்கப் போகும் இந்த புது முகங்களோடு நட்பை சம்பாதித்துக் கொள்ள எண்ணி பார்வையைச் சுழட்டினாள். அவள் இடது புறம் இருந்த அந்த இளவயதுப் பெண் சினேகமாய் முறுவலித்து,

 

“ஆர் யூ ப்ரம் இந்தியா?” என்றாள்.

 

“நோ… நோ… நான் ஸ்ரீலங்கன்…”

 

“நான் தாய்லாந்து. எனது பெயர் அனுஷரா.”

 

இருவருக்கும் பொதுவான மொழியாய் ஆங்கிலத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஷானவிக்கு பார்த்த உடனேயே கலகலப்பாய் பேசிய அனுஷராவை மிகவும் பிடித்துக் கொண்டது. இவள் ஒத்த வயதாய் இருந்ததாலோ தெரியவில்லை. முதல் சந்திப்பிலேயே இருவரும் உற்ற தோழிகளாகி விட்டனர். கண்டதும் காதல் மட்டுமா? நட்பும் தான் வருமே.

 

“அனுஷரா…! எனக்கு ஸ்ரீலங்காவில அனுசியா என்று ஒரு ப்ரெண்ட் இருந்தா. அவ இப்ப உயிரோட இல்லை. எனக்கு ஏனோ உங்களைப் பார்த்தா அவ ஞாபகமாக இருக்கு. நான் உங்களை அனு என்று கூப்பிடட்டுமா?”

 

“அதுக்கென்ன ஷானவி… தாராளமாய் கூப்பிடுங்கோ…”

 

என்று அனுஷராவின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தனது அடுத்த பக்கத்தில் இருந்த நபரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள திரும்பியவள் சற்றே திகைத்து, அப்படியே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவ்விடமும் அதே தான் நடந்து கொண்டிருந்தது. இவள் வகுப்பில் நுழைந்த நேரம் இருந்து இவள் மீது வைத்த விழிகள் சிமிட்டினவா என்பது கூட சந்தேகமே.

 

நீல நிற டெனிம் ஜீன்ஸ்க்கு முழங்கால் வரை நீண்டிருந்த ஒரு முழு நீளக்கை வைத்த வெண்ணிற டாப்பை அணிந்து அதன் மீது ஒரு மெல்லிய நீல நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் ஷானவி.  திருத்தப்படாமலேயே வில்லாக வளைந்திருந்த நீண்ட புருவங்கள் இரண்டும் நடு நெற்றியில் இணைந்திருக்க, அதற்கு சற்றே மேலே கறுப்பிலே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். கண்களுக்கு மையோ, உதடுகளுக்கு சாயமோ இன்றி எதுவித ஒப்பனையும் இல்லாமல் இருந்தவள், வேற்றுக்கிரகவாசியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஒற்றைக் காதிலே சிறு வளையத்தை தவிர எந்த அணிகலனுமின்றி இருந்தவளின் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது அவள் இடையையும் தாண்டி வளர்ந்திருந்த அலை அலையான கருங் கூந்தல். மேவி இழுத்து ஒற்றை ஜடை போட்டிருந்தாள்.

 

இப்படி அவளுருவத்தை அணுவணுவாய் ரசித்துக் கொண்டிருந்த நபரிடம் அந்த ரசனையில் இருந்த உணர்வுதான் என்னவென்பது புரியாத புதிராய் இருந்தது. இங்கே மறுபுறம் ஷானவியோ திகைப்போடு இருந்தாள். தன் குழப்பத்திற்கு தீர்வு காணும் விதத்தில் அந்நபரின் இருக்கையில் கொழுவி இருந்த ஜக்கெட்டை ஒரு தடவை கவனமாகப் பார்த்தாள்.

 

ஹூம்! அதேதான். அவள் சற்று முன் வராந்தாவில் கண்டிருந்த அதே ரோஜா வண்ண பிங்க் நிற ஜக்கெட். அறிமுகம் செய்து கொள்ளும் எண்ணத்தையே கைவிட்டவளாய் சிந்தனை வயப்பட்டவளாய் நேராய் அமர்ந்து கொண்டாள்.

 

“அடேய் நல்லூர்க் கந்தா! என்னடா இது ஷானவிக்கு வந்த சோதினை… இப்ப எனக்கு பக்கத்தில உட்கார்ந்திருக்கிற சைனா பொம்மை முதல்ல ஆணா? பொண்ணாய்யா? இல்லை ரெண்டும் கலந்த கலவையா? முன்னால இருந்து ஆளைப் பார்த்தா ஆம்பிளை மாதிரித்தான் இருக்கு… ஆனால் மூஞ்சியைப் பார்த்தால் மளமளவென தாடி மீசை முளைச்ச அடையாளமே இல்லாமல் பொம்பிளை மாதிரி எல்லோ கிடக்கு…

 

அடேய் நல்லூர்க் கந்தா…! வாழ்க்கையில முதல் முறையா இந்தக் கலர்ல ஒரு ஜக்கெட் பார்க்கிறேன். எத்தினை தமிழ் படம் பார்த்திருப்பன்… ஏன் ஹிந்திப் படங்களில கூட ஒருத்தரும் இப்பிடி ஒரு பேபி பிங்க்ல ஜக்கெட் போட்டு பார்த்ததில்லையேடா சாமி…!

 

யாராவது இப்புடி பிங்க் கலர்ல ஜக்கெட்டும் அதுவும் டார்க் பிங்க்ல… இப்பிடி ஒரு பூப்போட்ட  ஒரு சேர்ட்டும் போடுவாங்களா…? அதுவும் நோர்மல் சேர்ட் மாதிரி இல்லையே… ஏதோ கேர்ள்ஸ்ஸிட பிளவுஸ் போல வித்தியாசமா கிடக்கு… அதென்னது இடுப்பில ஒரு நாய்ச் சங்கிலி…. கழுத்தில, கையில எல்லாம் என்னடா போட்டிருக்கு இந்த ஜென்மம்? வீட்டிலே ஒரு கயிறு, சங்கிலி விட்டு வைக்காமல் மாட்டிக் கொண்டு வந்திட்டுது போல… ஊரில இருந்து நல்ல இளைக்கயிறு (தேங்காய் நாரில் செய்த கயிறு) எடுப்பிச்சு கொடுக்க வேணும்…  

 

இதெல்லாம் பரவாயில்லை… உச்சியில இருக்கிற கொண்டையைக் கூட மன்னிச்சு விட்டிடலாம்… ஆனா கண்ணுக்கு ஐ டெக்ஸ் போட்டிருக்கிறதை என்ன சொல்லுற…? அதை விடக் கொடுமையா என்னடா கந்தா இது ஐ லைனர், லிப்ஸ்குளோஸ் எல்லாம் அடிச்சிருக்கு… ஐ ப்ரோ வேற நல்ல வடிவா ஃஸேப் பண்ணியிருக்கு…

 

ஐயோ…! என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்கே… இந்த ஜந்து எந்த கிரகத்தைச் சேர்ந்தது? எப்படிப் பட்டது என்று தெரியலைன்னா இன்றைக்கு எனக்கு தூக்கமே வராதே… எப்படி அறிஞ்சு கொள்ளுற…? அடச்சே…! இதை எப்படி மறந்தன்… நான் வரேக்க கிஸ் பண்ணிட்டு இருந்தது இந்த ஜந்துவும் இன்னொன்றும் தானே… முதல்ல அது யார் என்று கண்டு பிடிக்கணும்…”

 

என்று தனக்குத் தானே தன் மனசுக்குள்ளேயே புலம்பியபடி, அவன் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாக அவள் நினைத்த மறு ஜீவனைத் தேடி  வகுப்பறையில் பார்வையைச் சுழற்றினாள். அவள் தேடலை வீணாக்காது “ப” வின் இடது பக்கம் முதலாவது ஆளாய் இருந்த அவன் இவளைப் பார்த்து சினேகமாய் சிரித்தான்.

 

இவளும் பதிலுக்கு ஒரு சிறு முறுவலை உதிர்த்து விட்டு, மீளவும் தன் யோசனையை ஆரம்பித்தாள்.

 

“இவன் சுத்த ஆம்பிளை தான் என்று பார்த்தாலே தெரியுது. வெள்ளைக்காரன் மாதிரி நல்ல வெள்ளையா இருக்கிறான். ஒரு சராசரி ஆம்பிளைக்கேத்த உயரம். நிறைய மீசை, தாடி வைச்சிருக்கிறான். இவன் ஆம்பிளை தான் என்றதில கொஞ்சம் கூட டவுட் இல்லை.

 

அப்ப இந்த சைனா மெழுகு பொம்மை தான் பிரச்சினைக்குரிய கேஸ்… பொம்பிளை இல்லை என்று மட்டும் தோணுது… ஒருவேளை திருநங்கையாக இருக்குமோ… ஆ…! அப்பிடித்தான் இருக்கோணும்… ஆனால் பார்த்தால் என் மனசுக்கு  அப்பிடியும் தோணேல்லையே… அப்பிடி இல்லை என்றால்… இந்த ஜந்து என்னவாக இருக்கும்….? ஆ….! நான் கண்டுபிடிச்சிட்டேன்… கண்டுபிடிச்சிட்டேன்… இது கே யாக இருக்க வேணும்…. ஓமோம்… அப்பிடித்தான் இருக்கோணும்…”

 

பலவாறாய் யோசித்து தன் குழப்பங்களுக்கு தானே சில ஊர்ஜிதங்கள் பண்ணி அதை முடிவும் பண்ணிக் கொண்டாள் அந்தப் பேதைப் பெண்.

 

இந்த குழப்பத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு அடுத்து ஒரு பெரிய அதிர்ச்சி கண் முன்னே வந்து நின்றது. மிகவும் சங்கடப்பட்டுப் போனவள் தலையைக் குனிந்து கொண்டு அடக்க ஒடுக்கமே உருவாய் அமைதியின் திருவுருவாய் மாறிப் போய் அமரந்திருந்தாள். காரணம்! ‘நான் தான் உங்கள் விரிவுரையாளர்’ என்று கூறிக் கொண்டு வந்து நின்றது, வேறு யாருமில்லை. கீழே யாரோடு கதவு திறக்கையில் விழுந்து புரண்டாளோ அதே ஜீவன் தான்.

 

“அடேய்…! முருகா! நல்லூருக்கு இனி நான் வரேக்க உனக்கு உடைக்கிறதா சொன்ன அத்தனை தேங்காயும் கான்ஷல்… இப்பிடித்தான் என்னை தர்மசங்கடப் படுத்துவியா…? இவனைத் தானே நான் இனி இந்த ஜென்மத்திலயே பார்க்கக் கூடாது என்று நினைச்சிருக்க, இப்பிடி புரபஷர் என்று முன்னால கொண்டு வந்து நிப்பாட்டி வைச்சிருக்கியே முருகா… இது உனக்கே அநியாயமாகத் தெரியேல்லையா?”

 

என்று தன் கோபத்தையெல்வாம் அந்த ஆறுமுகனிடம் மனக் கண்ணிலேயே திட்டித் தீர்த்தவள், மனதைத் திடப்படுத்திக் கொண்டு வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்தாள். பின்னே… வேறு வழி?

 

“ஜ மப்பெல் ஆதூர் வில்லியம். (எனது பெயர் ஆதூர் வில்லியம்). இங்கே கடந்த ஒரு வருடமாக பிரெஞ்ச் புரபஷராக வேலை செய்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே இதே நகரத்தில் தான். இப்போதும் இங்கே தான் சிற்றியில் வசிக்கிறேன். முக்கியமான விடயம். நான் இன்னும் சிங்கிள் தான்…”

 

எனத் தனது அறிமுகத்தை பிரெஞ்சில் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் கல்யாணம் ஆகாதவன் என்று கூறும் போது அவன் பார்வை ஷானவியின் மீது ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் பட்டுத் திரும்பியது. ஆதூரை முகத்துக்கு நேரே பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டிருந்த ஷானவி அவன் பார்வை வீச்சைக் கவனிக்கவில்லை. ஆனால் அவள் அருகிலிருந்த நபரோ ஆதூரின் பார்வையை நன்றே அவதானித்து அது  சொன்ன சேதியையும் புரிந்து கொண்டாலும் அந்த விடயத்தின் உண்மையை ரசித்ததாகத் தெரியவில்லை.

 

ஒவ்வொரு மாணவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். வெள்ளை, கறுப்பு, பொது நிறத்தவர்கள், முக்காடிட்ட முஸ்லிம் பெண்கள் என்று பலதரப்பட்டவர்களைக் கொண்ட கலவையாக விளங்கியது அந்த வகுப்பறை.

 

முதலாவதாக இருந்தவன்,  ஷானவியால் முத்தக்காட்சியாய் எண்ணப்பட்டவரகளில் ஒருவன்தான். தனது பெயர் அனார் எனவும் தான் துர்க்மினிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அடுத்தவன் செயம். ஆபிரிக்க  சூடான் நாட்டைச் சேர்ந்தவன். இப்படியாக ஒவ்வொருவராய் தங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க ஷானவி ஆவலோடு அறியக் காத்திருந்த பக்கத்து இருக்கைக்காரனுடைய முறையும் வந்தது.

 

“எனது பெயர் லீ யூ வோன்… நான் தென் கொரியா நாட்டைச் சேர்ந்தவன். வயது இருபத்தேழு. நான் இன்னும் திருமணம் செய்யவில்லை. கொரியாவில் அக்கவுண்டனாக வேலை செய்தேன். இங்கே ஒரு மாறுதலுக்காக வந்திருக்கிறேன்.”

 

என்று சொன்னதை இவள் மனதுக்குள் குறித்துக் கொண்டாள். குரல் மிகவும் கம்பீரமாய் ஆண்களுக்கு உரியதாகவே இருந்தது.

 

“ஸோ….இவன் கதைப்பதைப் பார்க்க ஆம்பிளை போலதான் கிடக்கு… கதைக்கிற விதம் ஆக்சன் எல்லாம் பார்க்கவும் ஆம்பிளை போல தான் இருக்கு.  அப்ப இவன் ஆம்பிளை தான்… அடங்கொப்பிரானே… அப்போ மாட்டர் கன்பர்ம். அப்பு… ராசா… அவனா… நீ…?”

 

தனது முடிவை மீள் பரிசீலனை செய்து இறுதி முத்திரை குத்தி விட்டுத் தன்னை பற்றிய அறிமுகத்தை ஆரம்பித்தாள். இவள் அறிமுகத்தை தொடர்ந்து அனுஷராவும் பின்னர் மற்றவர்களும் என அறிமுகப்படலம் முடிவடைந்து பாடம் ஆரம்பமாகியது.

 

மதியம் பன்னிரெண்டு பதினைந்துக்கு  உணவு இடைவேளை. மறுபடியும் ஒரு மணி நாற்பத்தைந்துக்கு மாலை வகுப்புக்கள் ஆரம்பித்து ஐந்து பதினைந்துக்கு முடிவடையும். மதிய இடைவேளை ஆரம்பிக்கவும், ஷானவி என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தாள். காலையில் வீட்டில் நடந்த குழப்பத்தில் அவள் உணவு எதுவும் கொண்டு வரவில்லை. கையிலோ ஒரு சதம் யூரோவும் இல்லை.

 

“ஷானவி! நீ உணவு கொண்டு வந்தாயா?  நான் பஸ்தா கொண்டு வந்திருக்கிறேன். நீ கொண்டு வராட்டில் பரவாயில்லை. நாங்கள் ரெண்டு பேரும் இதை செயார் பண்ணிச் சாப்பிடுவோம்.”

 

“நான் சாப்பாடு கொண்டு வரேல்ல அனு! பக்கத்தில மக்டோனால்ட்ஸ் ஏதும் இருந்தா சாப்பிட்டிட்டு வாரன். நீர் இங்க இருந்து சாப்பிடும்…”

 

கூறிவிட்டு எழுந்து சென்றவளை முதல் நாளே அதிக உரிமை எடுத்துத் தடுக்கும் வழி தெரியாது மௌனமாய் அமர்ந்திருந்தாள் அனுஷரா.

 

வகுப்பறையை விட்டு இவள் வெளியே வரவும் இவளது மாமா திருநாவுக்கரசு வந்து கொண்டிருந்தார். இன்ப அதிர்ச்சியால் மனம் மகிழ்ந்தவள் அவரிடம் ஓடிச் சென்றாள்.

 

“காலையில உன்னட்ட காசு தந்து விட முடியல ஷானும்மா….நீ பசியோட இருப்பாய் என்றிட்டுத் தான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். ஸாரிடா… இந்தா..

இந்த காசையும் வைச்சுக் கொள். இனி நீயே இங்கே எங்காவது மதியம் வாங்கிச் சாப்பிட்டு விடு சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால். காசை மிச்சம் பிடிக்காமல் வடிவா வாங்கிச் சாப்பிடும்மா. காசு முடிஞ்சா ஆத்விக்கிட்ட சொல்லி விடு. உனக்கு கொப்பி  பேனை முடிஞ்சுது என்று. எனக்கு புரியும். சரியா?”

 

“ரொம்ப நன்றி மாமா… நான் உங்களை ரொம்ப கஸ்டப்படுத்திறன் என்ன?”

 

“ஏன் அப்பிடிச் சொல்லுறாய் ஷானு… நான்தான் உன்னைச் சரியா கவனிக்க முடியாமல் இருக்கிறேன். உனக்கு என்னை விட்டால் வேற யார் இருக்கினம்?”

 

“ஹூம்…! அதை விடுங்கோ மாமா… உண்மையா நான் இங்க சந்தோசமாத் தான் இருக்கிறேன்…”

 

“வகுப்பு எப்படி போகுதும்மா…? ப்ரெண்ட்ஸ் யாரும் கிடைச்சாங்களா?”

 

“ஓம் மாமா… முதல் நாள் தானே… வகுப்பு ஓகே… ஒரு தாய்லாந்து பிள்ளை அனு என்று ப்ரெண்டாகி இருக்கா.”

 

“ரொம்ப நல்லது ஷானும்மா… வீட்டில தான் உனக்கு நிம்மதி இல்லை… இங்கயாச்சும் சந்தோசமா ப்ரெண்ட்ஸ்ஸோட என்ஜாய் பண்ணு… வடிவாப் படிச்சு பாஸ் பண்ணினால்தான் தொடர்ந்து படிக்கலாம்…”

 

“ஓம்… மாமா… நான்  கவனமாக படிக்கிறேன்.”

 

“ஹூம்…! கொஞ்ச நாளைக்கு வீட்டு நிலைமையை சமாளிச்சுப் போ ஷானு. எல்லாக் கஸ்டமும் உனக்கொரு கலியாணம் ஆகிற வரைக்கும் தானே. அதுதான் நல்ல குணமான பொடியனா தேடிட்டு இருக்கிறேன். உன் அத்தையைப் பற்றித் தெரியும் தானேம்மா.

 

நான் ஆரம்பத்தில இருந்து விட்டுக் குடுத்துப் போனது இப்போ என்ர சொல்லுக்கு மதிப்பில்லாம போய்டுது. வளர்ந்த பிள்ளையளுக்கு முன்னால ஏன் வீண் ரசவாதம் என்று நானும் அமைதியாவே இருந்திடுறது. சந்திரா உன்னை எவ்வளவு கொடுமைப் படுத்திறாள் என்று தெரிந்தாலும் நான் அமைதியாக இருப்பதற்கு காரணம் வயசுப்பிள்ளை உனக்கு எங்கள் வீடு தான் பாதுகாப்பானது என்றதால தான். புரிஞ்சு கொள்ளுவாய் என்று நம்புறேம்மா…”

 

என்று கலங்கிய கண்களுடன முடித்தார் அந்த பாசக்கார தாய் மாமன்.

 

“நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க மாமா. அநாதையா இருக்கிற என்னை இங்கே கூப்பிட்டு பாதுகாப்பாக நல்லாத்தானே வைச்சிருக்கிறீங்க. சந்திரா மாமி பேசுறதையெல்லாம் நான் பெருசா எடுக்கிறேல்ல. என்ர அம்மா பேசினால் நான் கவலைப் படுவனா மாமா? உண்மைல என்னை இப்படி உரிமையா பேசுறதுக்கு கூட எனக்கு சொந்தம் என்று இருக்கினமே என்று ஒரு விதத்தில சந்தோசம் தான். அதனால நீங்கள் கவலைப் படாமல் இருங்கோ. காசுக்கு தாங்ஸ் மாமா…”

 

கூறியவளின் தலையை அன்பாய் வருடியவர், அவளிடம் மக்டோவில் இருந்து வாங்கி வந்திருந்த ஒரு மெனு பார்சலைக் கொடுத்து விட்டு அவளிடமிருந்து  விடை பெற்றார். இவளும் மகிழ்ச்சியுடன் திரும்பவும் வகுப்பறையை நோக்கிச் சென்றாள்.

 

டாய்லெட்டுக்குச் சென்று விட்டு வந்து கொண்டிருந்த லீ யூ வோன் வராண்டாவின் திருப்பத்தில் நின்று கொண்டு ஷானவியும் திருநாவுக்கரசுவும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மொழி புரியாது விடினும் அவர்கள் பேசுவதையும் அவர்கள் அங்க அசைவுகளையும் உற்றுக் கவனித்தான். ஏனோ தெரியவில்லை. ஷானவியைப் பார்த்த நொடியில் இருந்து என்னவென்றே இனம் பிரித்தறிய முடியாத ஒரு உணர்வால் ஆட்டிப்படைக்கப்பட்டவன் அவளையே விழிகளால் தொடர்ந்தான். அவள் கூடவே இருக்க வேண்டும் என்ற ஓர் உணர்வு.

 

ஆதூரும் ஷானவியும் வாசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்த போது அவர்களை தீப்பார்வை பார்த்தவர்களில் லீயும் ஒருவன். ஏனோ அவன் மனம் ஷானவியை வேறு யாரும் பார்வையால் தீண்டுவதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அவளைக் கண்டு மூன்றரை மணிநேரங்கள் மட்டுமே ஆகியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தவன், ‘வழக்கம்போல இதுவும் ஒரு பாஸிங் கிளவுட் தான்’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். உணவுண்ண வெளியே செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தனது வகுப்பறையை நோக்கிச் சென்றான்.

 

சாப்பிடுவதற்கு தனியாக இடம் இருந்தது அங்கு. ஆனால் பல நாட்டவர்களின் பலவித உணவுகளின் மணம் ஒரு சேர எழ, அந்த நெடியில் அங்கிருந்து உண்ண முடியாமல் வயிற்றைப் புரட்ட உடனேயே எழுந்து வெளியே வந்து விட்டாள் அனுஷரா. அங்கே கஃபே மெசினில் கஃபே எடுக்க வந்த ஆதூர் இவள் உண்ணாமல் உடனேயே எழுவதை உணர்ந்து,

 

“ஏன் அனுஷரா சாப்பிடாமல் போறீங்க?”

 

என்றான் பிரெஞ்சில். இவள் புரியாமல் விழிக்கவும் சிரித்து விட்டு, ஆங்கிலத்தில் கேட்கவும் அவளும் ஆங்கிலத்தில் அந்த உணவுகளின் மணத்துக்கு அங்கிருந்து உண்ண முடியவில்லை என்றாள். அவர்கள் வகுப்பறை திறப்பை கொடுத்தவன்,

 

“நீங்க வகுப்பில் போய் இருந்து சாப்பிடுங்கோ… ஆனா அப்புறம் வகுப்பில சாப்பாட்டு மணம் வராமல் பாக்கிறது உங்க பொறுப்பு…”

 

என்று கூறவும், உண்மையிலேயே மனமார நன்றி சொல்லி தனது வகுப்பறையில் சென்று அமர்ந்து இருந்தாள். வீடு அருகிலிருந்த மாணவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்க, ஏனையோர் சாப்பாட்டறையிலிருந்து சாப்பிட்டு விட்டு ஆங்காங்கே இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அனுஷரா வகுப்பறையில் இருப்பதை அறிந்த ஷானவி அங்கே சென்றாள். மக்டோ மெனுவோடு வந்திருந்த ப்ரீத்தையும் கொக்காவையும் எடுத்து அனுஷரா முன் வைத்தவள்,

 

“நான் கொக்கா குடிக்கிறேல்ல அனு. நீங்க குடியுங்கோ… ப்ரீத்தும் எடுத்துச் சாப்பிடுங்கோ…”

 

என்று விட்டு சலாட்டை எடுத்து உண்ணத் தொடங்கினாள். அனுஷரா தனது பஸ்தாவில் கொஞ்சம் எடுத்து தனது சாப்பாட்டு டப்பா மூடியில் வைத்து கொடுத்து,

 

“இதையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க ஷானவி…”

 

எனவும் இவளும் எந்த வித பிகுவும் இல்லாமல் எடுத்து உண்டு விட்டு, அதன் சுவை பிடிக்கவும் அதை வெளிப்படையாக பாராட்டினாள்.

 

அப்போது ஒரு இருக்கையை எடுத்து இவர்கள் முன் போட்டுக்கொண்டு அமர்ந்தான் ஆதூர். இயல்பாய் ஏதோ தானே வாங்கிக்கொண்டு வந்தது போல ப்ரீத்தை எடுத்து உண்டு கொண்டு கொக்காவில் ஸ்ட்ரோவைப் போட்டு உறிஞ்சினான். இவர்கள் இருவரும் அவனது எதிர்பாராத செயலில் திகைத்துப் போய் உண்பதை நிறுத்தி அவனை நிமிர்ந்து நோக்க, அவனோ இவர்களைப் பார்த்து இயல்பாய் புன்னகைத்தான்.

 

“என்ன ஷானவி… அனுஷரா… என்னை ப்ரெண்டா ஏத்துக்க மாட்டீங்களா?”

 

என்று பிரெஞ்சில் உரையாடத் தொடங்கினான்.

 

பாதி புரிந்தும் புரியாமலும் இவர்கள் விழிக்க, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவன், தான் கொண்டு வந்திருந்த பீட்ஸாவில் இருவருக்கும் கொடுத்துக் கொண்டே பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவர்களோடு பேச ஆரம்பித்தான். சற்று நேரத்தில் இவர்களும் புரபஷர் என்ற ஒதுக்கம் அகன்று இயல்பாய் பேசத் தொடங்கினார்கள்.

 

“அனுஷரா! நீர் ஏன் பிரான்ஸ் வந்தனீர்?”

 

“பெருசா சொல்ல எதுவும் இல்லை ஆதூர்… தாய்லாந்தில ஒரு ரெஸ்டாரண்டில வெய்டராக வேலை செய்திட்டு இருந்தேன். அங்கே தான் மைக்கேல மீட் பண்ணினேன். மூன்று வருஷம் ரிலேஷன்சிப்ல இருந்தோம். அவர் அடிக்கடி தாய்லாந்து வருவார். நானும் பிரான்ஸ் வருவேன். இனியும் இப்படி அங்கேயும் இங்கேயும் பிரிந்து இருக்க முடியாது என்று லாஸ்ட் இயர் மரி பண்ணிட்டோம். இது தான் நான் பிரான்ஸ் வந்த ஸ்டோரி…”

 

“சூப்பர் அனுஷரா… ஸோ நீர் ஏன் பிரான்ஸ் வந்தனீர் ஷானவி…?”

 

சில நொடிகள் மௌனம் காத்தவள், முதல் நாளே தன் கதையை சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ளப் பிடிக்காது,

 

“ஸ்ரீலங்காவில நாட்டு நிலை நல்லா இல்லை என்று இங்கே வந்தேன். இங்க மாமா ஃபமிலியோடு இருக்கிறேன்”

 

என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.

பேசியவாறே உண்டு முடித்ததும், மாலை வகுப்பிற்கு ஆயத்தம் செய்ய வேண்டும் என்று கூறி ஆதூர் தனது அறைக்குச் சென்று விட்டான்.

 

இங்கே நடந்த உரையாடல்கள் அனைத்தையும் வகுப்பறையின் வெளியே போட்டிருந்த ஸோபாவிலிருந்து ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த லீயோ என்ன விதமான உணர்வு என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான். ஆதூர் மேல் எழுந்த கண் மண் தெரியாத கோபத்தை அடக்கும் வழி தெரியாது ஒரு வகை எரிச்சலால் ஆளப் பெற்றவன், எழுந்து அந்த கட்டிடத்தின் வெளியே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

 

புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று என்று தென் கொரியாவிலும் சொல்லி வைத்திருப்பார்களோ?

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: