Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 12

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 12

அத்தியாயம் 12 – ஓட்டமும் வேட்டையும்

     இரவு நேரம், எங்கும் நிசப்தமாயிருந்தது. அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கடிகாரம் பத்து மணி அடித்தது.

முத்தையன் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் வெளிச்சம் கிடையாது. ஸ்டேஷன் தாழ்வாரத்தில், ஒரு லாந்தர் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.

கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கியபோது, முத்தையன் அந்த அறைக்குள், கூண்டில் அடைபட்ட புலியைப் போல் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான். கடிகாரத்தின் மணி ஓசை கேட்டதும் அவன் நின்று, “ஒண்ணு, ரெண்டு, மூணு…” என்று எண்ணிக் கொண்டு வந்தான்.

பத்து மணி அடித்து நிறுத்தியதும், மறுபடியும் அவன் பரபரப்பாக நடந்தான். “பத்து மணி, பத்து மணி; அபிராமி தனியாயிருப்பாள்; தனியாயிருப்பாள். அந்தக் கிராதகன் ஒரு வேளை வந்தால்?…” இப்படித் தனக்குள் தானே சொல்லிக் கொண்டு முன்னும் பின்னுமாக நடந்தான்.

“அப்போது, பாரா ‘டியூடி’யில் இருந்த போலீஸ் சேவகன் அந்தப் பக்கம் வரவே, முத்தையன் ஆவலுடன் கதவண்டை வந்து, தேம்பும் குரலில், “ஸார்! ஸார்!” என்றான்.

போலீஸ்காரன் அவனை உற்றுப் பார்த்து, “என்னடா அப்பா, ஸார், மோர்! என்ன சமாச்சாரம்?” என்று கேட்டான்.

“எனக்கு ஒரு உபகாரம் நீங்கள் செய்ய வேண்டும். அதை என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன். என் தோலை உங்களுக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேன்.”

இதற்குள் அந்தச் சேவகன், “வேண்டாமடா, அப்பா! வேண்டாம். எங்களுக்கெல்லாம் சர்க்காரிலேயே செருப்புத் தைத்துக் கொடுக்கிறார்கள். ஏதோ உபகாரம் என்றாயே, அது என்ன சொல்லு!” என்றான்.

“ஐயா, அரைமணி நேரத்துக்கு என்னை விடுதலை பண்ணுங்கள். வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒன்றும் கெடுதல் வராது. நீங்கள் வேணுமானாலும் என் பின்னோடு வாருங்கள்…”

போலீஸ்காரன் சிரித்தான். “ரொம்பப் பேஷான யோசனை! அப்படி என்னப்பா வீட்டிலே அவசரம்? என்னத்தையாவது வைத்துவிட்டு மறந்து போய் வந்து விட்டாயா?” என்று கேட்டான்.

“ஐயா நீங்களும் அக்கா தங்கைகளுடன் பிறந்திருப்பீர்கள். என்னுடைய தங்கை வீட்டிலே தனியாய் இருக்கிறாள். அதுவோ, தெருக்கோடி வீடு. அவளை யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறேன்…”

போலீஸ்காரன் இதற்கு இடிஇடியென்று சிரிக்கத் தொடங்கி விட்டான்.

“அண்ணே! அண்ணே! இங்கே வா!” என்று கூப்பிட்டுக்கொண்டே சிரித்தான்.

இதைக் கேட்டு, லாந்தரின் அடியில் டைரி எழுதிக் கொண்டிருந்த இன்னொரு போலீஸ்காரன் எழுந்து வந்தான்.

“அண்ணே! இந்தப் பையனுக்கு அவசரமாய் வீட்டுக்குப் போக வேணுமாம்!”

“ரொம்ப அவசரமாய்ப் போகவேணுமோ? அப்படி என்ன அவசரமாம்?”

“இந்தப் பையனுடைய தங்கை வீட்டில் தனியாயிருக்கிறாளாம். நீ வேணாத் துணைக்குப் போகிறாயா அண்ணே?”

இதைக் கேட்டதும் இரண்டாவது போலீஸ்காரனும் விழுந்து விழுந்து சிரித்தான். இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து போனார்கள்.

முத்தையன் முகத்தில் சொல்ல முடியாத கோபம் ஜொலித்தது. அவன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றான். இதுவரைக்கும் மூலையில் உட்கார்ந்திருந்த குறவன் அச்சமயம் எழுந்து வந்து, முத்தையனை முகத்துக்கு நேராக உற்றுப் பார்த்தான். “இப்போ என்ன சாமி சொல்றீங்க?” என்றான்.

முத்தையன் பேசாமலிருக்கவே, “நான் சொல்கிறபடி கேட்டீங்கன்னா, கட்டாயம் தப்பிச்சுக் கொள்ளலாம். சரிதானா?” என்றான்.

“சரி” என்றான் முத்தையன்.

கடிகாரத்தில், பத்தரை மணி ஆவதற்காக ‘டங்’ என்று ஒரு தடவை அடித்தது.

ஸ்டேஷன் தாழ்வாரத்தில் படுத்து ஒரு கான்ஸ்டபிள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன் உட்கார்ந்தபடி ஆடிவிழுந்து கொண்டிருந்தான்.

ஏதோ இரும்புக் கதவு ஓசைப்பட்ட சத்தம் கேட்கவே, உட்கார்ந்திருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்து, “என்ன அது?” என்றான். பேச்சு மூச்சு இல்லை. ஆனால் அவன் மன நிம்மதியடையாமல் , எழுந்திருந்து ‘லாக்-அப்’ அறையின் கதவண்டை சென்றான். அந்தக் கதவின் இரும்புக் கம்பிகள் இரண்டு மூன்று இடத்தில் சிறிது விலக்கப்பட்டிருப்பதை. அவன் கவனிக்கவில்லை. கதவுக்கப்பால் நின்று கொண்டிருந்த குறவனைப் பார்த்து “என்னடா, குறவா, என்ன சத்தம்?” என்று கேட்டான்.

குறவன் “என்ன சாமி, கேட்கறீங்க?” என்று கேட்டுக் கொண்டே கதவண்டை வந்தான். வந்தவன் பளிச்சென்று கைகளைக் கம்பிகளின் வழியாய் வெளியே நீட்டி அந்தப் போலீஸ் சேவகனின் கழுத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். போலீஸ்காரன் என்ன திமிறியும் அந்தப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவனுடைய விழிகள் பிதுங்கின.

இதற்குள் முத்தையன், கம்பி விலக்கப்பட்டிருந்த இடத்தின் வழியாய்க் கையை நீட்டி, போலீஸ்காரன் பையிலிருந்து சாவியினால் பூட்டைத் திறந்து தாழ்ப்பாளையும் விலக்கினான். உடனே வெளியில் வந்து, குறவன் சொன்னபடி போலீஸ்காரன் வாயில் துணியை வைத்து அடைத்தான். தன்னுடைய மேல் துணியினால் அவன் கைகளையும் இறுக்கிக் கட்டினான்.

குறவன் மின்னல் மின்னும் நேரத்தில் வெளியே வந்து அந்த போலீஸ்காரனுடைய கால்களையும் கட்டிக் கீழே உருட்டியதும், இரண்டு பேரும் ஓடிப்போய் வாசல் கதவைத் திறந்தார்கள். அந்தச் சப்தம் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். வாசல் கதவைத் திறந்து கொண்டு இரண்டு பேர் ஓடுவதைப் பார்த்ததும், “டேஞ்சர்! எஸ்கேப்! ஷுட்! ஷுட்!” என்று கத்திக் கொண்டே தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு, ஸ்டேஷன் கூரை மேல் போய்த் தாக்கி, கட்டிடம் கிடுகிடுக்கச் செய்தது.

வெளியில் வந்த முத்தையன், குறவன் என்ன ஆனான் என்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கோதண்டத்திலிருந்து கிளம்பிய ராமபாணம் என்பார்களே, அதுபோல அவன் நேரே தன்னுடைய வீட்டை நோக்கி ஓடினான். இரவு நேரமாகையால், வீதிகளில் ஜன நடமாட்டமில்லை. ஆனால் அவன் ஓடிய வழியில் தெருநாய்கள் எல்லாம் குரைத்தன. சில நாய்கள் அவனைத் தொடர்ந்து ஓடிவந்தன. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தாமல் சந்து பொந்துகள் வழியாகப் புகுந்து அதிவேகமாய் ஓடினான். கடைசியில் வீட்டை அடைந்தான். கதவு சாத்தியிருந்தது. வீட்டிற்குள் விளக்கு இல்லை. முதலில் கதவை மெதுவாக இடித்தான். பிறகு ஓங்கி இடித்தான். ‘அபிராமி! அபிராமி!’ என்று கம்மிய குரலில் அலறி அழைத்தான். பேச்சு மூச்சு இல்லை. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது. சட்டென்று கதவின் நாதாங்கி இருக்கும் இடத்தைப் பார்த்தான். கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.

ஐயோ! அபிராமி! அபிராமி! நீ என்ன ஆனாய்? எங்கே போனாய்?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதிகல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி

அத்தியாயம் 54 – கடவுளின் காதலி இத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது. முத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சரேலென்று, “அப்பச்சி!

தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்

1        ‘கூத்தப் பனையோலை குயிலணையும் பொன்னோலை! – இப்பக் கூந்தப் பனை சாஞ்சா குயில் போயி எங்கணையும்?’ வண்டிக்கார நாச்சப்பன் அவனனுக்கே சொந்தமான தனிப்பாணியில் ஆனந்தமாகப் பாடிக் கொண்டே தன்னுடைய ஒற்றை மாட்டு வண்டிச் செவலைக் காளையைத் தட்டி ஓட்டிக்