Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 01

வணக்கம் தோழமைகளே!

யாழ் சத்யா அவர்கள் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா!” எனும் புதிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

கதை பற்றி அவர் தந்த முன்னுரை. 

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

இலங்கையில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் நாயகி…!

அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிற்கு தீர்வாயும் மேலும் தொல்லையாயும் கிடைக்கும் ஒரு காதல்…! 

எல்லாவற்றையும் எப்படி வென்றெடுத்து தன் பாலைவனமாய் இருந்த வாழ்க்கையை பசுஞ்சோலை ஆக்கினாள் என்பது தான் கதை.

யாரைக் காண்பதற்கு யார் கண்கள் கொண்டனர் எனத் தெளிவுறத் தெரிய கதையை வாசியுங்கள். 

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் பதிவிடுவேன்.

வழக்கம்போல உங்கள் ஆதரவைத் தாருங்கள் மக்கா!

நன்றி.

என்றும் அன்புடன் 
யாழ் சத்யா. 

அத்தியாயம்  – 01

 

பிரான்ஸ் நாட்டிலிருக்கும் அழகான மலைகள் சூழ்ந்த நகரமான Grenoble அந்தக் காலை நேரத்துக்கே உரிய ஆரவாரத்தோடு விளங்கியது.

 

அவசரம் அவசரமாக தான் ஏற வேண்டிய ட்ராமைப் பிடிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள் ஷானவி. ட்ராம் நிறுத்தத்தில் மூச்சு வாங்க வந்து நின்றபடி அங்கிருந்த நேர அட்டவணை டிஜிட்டல் திரையில் நேரத்தைப் பார்த்தவள், அது காலை எட்டு இருபதைக் காட்டுவதை எண்ணி சிறிதே மனச் சுணக்கமடைந்தவாறு தான் வர வேண்டிய ட்ராம் ஏ வர இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதைப் பார்வையிட்டாள். இன்னும் இரண்டு நிமிடங்கள் தான் என்பதில் ஆசுவாசமடைந்தவள் அதுவரை ஓடி வந்ததில் தெரியாமல் இருந்த கார்த்திகை மாதக் குளிர், அவளது மெல்லிய குளிரங்கியை மீறி அவள் பட்டு மேனியை ஊடுருவி நலம் விசாரிக்க  சற்றே சிலிர்த்தவாறு கைகளை உரசி கன்னத்தில் வைத்து கன்னத்து குளிரை நீக்க முயன்றாள்.

 

ஐயோ! பாவம். ஐஸ்கட்டியாய் சில்லிட்டிருந்த அவள் உள்ளங்கைகளோ இவள் மெல்லிய உரசலிலா உஷ்ணம் அடைந்து விடப் போகின்றன? மேலும் குளிரச் செய்த கைகளை எடுத்து ஜாக்கெட் பாக்கெட்டுகளில் நுழைத்துக் கொண்டவள் தான் செல்ல வேண்டிய ட்ராம் ஏ வந்து நிற்க, காலியாக இருந்த யன்னலோர இருக்கை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவள் இறங்க வேண்டியது கடைசி நிறுத்தம் என்பதால் சாசுவதமாக யன்னலினூடாக வெளியே பார்வையை ஓட்டினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த இயற்கை காட்சிகளை மனசு ரசித்தாலும், உள்ளே மனது ‘குய்யோ, முறையோ’ என்று அழுது கொண்டிருந்தது.

 

காரணம்! காலையில் வழக்கம்போல வீட்டில் அரங்கேறிய ஒரு சம்பவமும் அதன் விளைவாக முதல் நாள் வகுப்பிற்கே அவள் தாமதமாகச் செல்வதும் தான். தன் எண்ண ஓட்டங்களை பின்னுக்குத் தள்ளி, முடிந்தவரை அந்த வெண்பனி மூடியிருந்த மலைத் தொடரில் பார்வையை பதித்து அந்த இயற்கை அழகில் தன்னை இழக்கலானாள்.

 

கடைசி நிறுத்தத்திற்கான அறிவிப்பு வர ட்ராமை விட்டு இறங்கியவள், தனது கைப்பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அதிலிருந்த முகவரியைப் பார்த்தவள்,

 

“அடேய் நல்லூர்க் கந்தா! ஏன்டா என்னை இப்படி சோதிக்கிறாய்? ஏற்கனவே நான் லேட். இதில இந்த பாசை புரியாத ஊரில நான் இந்த இடத்தை தேடிப் பிடிச்சுப் போன மாதிரி தான். இந்த அத்தை மட்டும் இல்லை என்றால் மாமாவே காரில கொண்டு வந்து விட்டிருப்பார். எல்லாம் என்ர நேரம்…”

 

தன் போதாத காலத்தை எண்ணித் தன்னையே நொந்து கொண்டவள், சுயபச்சாதாபத்திற்கு இதுவல்ல நேரம் என்றுணர்ந்து அருகில் வந்தவரிடம், தான் வைத்திருந்த கடிதத்தில் இருந்த முகவரியைச் சுட்டிக் காட்டி,

 

“எக்ஸ்கியூசிமுவா மிஸு… ஊ…? சில் வு ப்ளே…”

 

என்று அவளது குட்டி மச்சானிடம் பயின்றிருந்த அவளது முழு வித்தையையும் இறக்கி பிரெஞ்சில் கேட்டாள். அதாவது அவள் அதை பிரெஞ்ச் என்று நினைத்துக் கொண்டு கேட்டாள்.

 

அவரும் அவள் காட்டிய முகவரியைப் பார்த்து விட்டு,

 

“நேராய் போய் இடது பக்கம் திரும்பி நேராகச் செல்ல இந்த இடம் வரும்”

 

என்பதை சைகைகளுடன் இவளிடம் பிரெஞ்சில் விளக்க, இவளும் ஏதோ தனக்கு நன்றாய் புரிந்தது போல மண்டையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டாள். அவர் விளக்கி முடித்ததும்,

 

“மெர்சி ஃபுக்கு மிஸு…”

 

என்றவள், மனதுக்குள்

 

“அடேய்… நான் வெள்ளைக்காரன் இங்கிலீஷ் கதைச்சாலே வேற்றுக்கிரகவாசியோ என்று பாக்கிற ஆளடா… இப்ப நீ பிரெஞ்சில சொன்னதை விளங்கி என்ர வகுப்பைத் தேடிப் பிடிச்சு நான் போன மாதிரி தான்…”

 

என்று புழுங்கியவள், தனது குட்டி மச்சான் ஆத்விக் கூகிள் மாப்பில் பார்த்து சொல்லியிருந்த விளக்கத்தை மீளவும் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அவன் சொன்னதும் இந்தாள் கைகாட்டிய திசைகளும் ஒத்துப் போகவே தனக்குள் ஒரு வழியை நிர்ணயம் பண்ணிக் கொண்டு ஐந்து நிமிடத்தில் அடைய வேண்டிய வழிக்கு ஐம்பது பேரிடம் வழி கேட்டு ஒரு வழியாக பத்து நிமிடங்களில் தான் செல்ல வேண்டிய IFRA பெயர் பலகை இட்ட கட்டிடத்தை வந்தடைந்தாள்.

 

பெயர் பலகையை கண்டதுமே கடவுளைக் கண்டது போல மகிழ்ச்சியில் ஆசுவாசப் பெருமூச்சொன்றை விட்டவள்,

அந்த கண்ணாடிக் கதவைத் திறக்க முனைந்த போது கதவைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றாள். காரணம் அந்த கதவைத் திறப்பதற்கு அவளை நோக்கி இழுக்க வேணுமா? அல்லது உள் நோக்கித் தள்ள வேணுமா? என்பது தான். ஆங்கிலத்தில் push, pull எழுதி இருந்தாலே இவள் குழம்பி விடுவாள். இங்கே பிரெஞ்சில் எழுதி இருப்பதை பார்த்து மலைத்தவள்,

 

“சரி… சரி… வழக்கம்போல இழுத்தும் தள்ளியும் பார்த்திட வேண்டியதுதான். நமக்கென்ன இதெல்லாம் புதுசா…? அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா…”

 

என்று தனக்குள்ளேயே சொன்னபடி கதவைத் தள்ளினாள். உண்மையில் இவள் பக்கமாய் இழுக்க வேண்டியது.

 

அப்போது தான் அவசரமாக வெளியே போக வந்து கொண்டிருந்தான் அவன். அவனுக்கிருந்த அவசரத்தில் வேகமாய் இவளை நோக்கித் தள்ள, அதற்கு எதிர்ப்புறமாக கதவை உள்நோக்கி தள்ளிக் கொண்டிருந்த ஷானவி அந்த ஆறடி இரண்டங்குல உயரத்தில் ஆஜானுபாகுவாய் இருந்தவனின்  பலத்தின் முன்னால் நிலை தடுமாறி அவனின் பலமான இழுவையில் அவன் புறமே உந்தப் பட்டு அவன் மேலேயே நிலைகுலைந்து விழுந்தாள்.

 

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பிரெஞ்சுக்காரனும் தன்மேல் புத்தம் புது ரோஜாக் குவியலாய் வந்து விழுந்தவளின் திடீர் தாக்குதலை எதிர்பாராமல் அப்படியே அவளையும் தன் மார் மேலேயே சாய்த்துக் கொண்டு கீழே விழுந்தான்.

 

தன் மீது பஞ்சுப் பொதியாய் விழுந்து கிடந்தவளின் கொள்ளை அழகில் சொக்கிப் போனவனோ எழுந்திருக்கவும் தோன்றாது மந்திரத்தால் கட்டுண்டவனாய், அப்படியே அவளை விழுங்கி விடுவது போல, விழிகள் இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஒரு நொடி நடந்ததை ஜீரணிக்கும் சக்தியை இழந்த ஷானவி, பின்னர் தலையை உலுக்கி சுயநிலைக்கு வந்தவள், அவனை விட்டு எழுந்திருக்க முனைந்தாள். ஆனால் அந்தோ பரிதாபம்! அவள் காதில் போட்டிருந்த சிறு வளையம் அவன் ஜாக்கெட் பட்டினில் மாட்டிக்கொண்டு விடுபட மாட்டேன் என்றது.

 

அவனோ அவளுக்கு உதவும் எண்ணம் சிறிதுமின்றி, தன் சிவந்த அதரங்களில் நெளிந்த மந்தகாசப் புன்னகையோடு அவள் படும்பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

“ஏன்டா… வெள்ளைக் கொக்கு! நான் தான் ஏதோ கதவைத் திறக்கத் தெரியாமல் திறந்து விழுந்து வைச்சேன்னா, நீ நான் எழும்ப உதவி செய்யாமல் இப்படி பசும் புல்வெளில சுகமாப் படுத்திருந்து வானத்தை அண்ணாந்து பாத்து ரசிக்கிற மாதிரி பார்த்திட்டு இருக்கிறியேடா. அதில அவரிட சிரிப்பை வேற பாரேன். எனக்கு வாற ஆத்திரத்துக்கு…”

 

கொஞ்சம் சத்தமாகவே தமிழில் புறுபுறுத்தபடி, தனது வளையத்தை விடுவிக்கும் முயற்சியைத் தொடர்ந்தாள்.

அவனோ இவள் அவஸ்தை புரியாது,

 

“Wow…! quelle beauté incarnée,
Je peux mourir pour cette beauté divine”

 

என்று மெதுவாய் சொன்னான்.

 

என்னவொரு அழகு! இந்த அழகுக்காக நான் உயிரையும் கொடுப்பேனே என்று அவன் பிரெஞ்ச் மொழியில் கூறியதை புரிந்து கொள்ள முடியாத இவளோ, மேலும் கடுப்பாகி இப்போது முகத்திலே எள்ளும் கொள்ளும் தாராளமாய் வெடிக்க,

 

“ப்ளீஸ்! ஹெல்ப் மீ!”

 

என்றாள் ஆங்கிலத்தில்.

 

அவனும் அதற்கு மேலும் அவளை சங்கடப்படுத்துவது சரியில்லை என்பதை உணர்ந்தவனாக, தனது தலையை கொஞ்சமாய் அவளை நோக்கி குனிந்து வளையம் பட்டனில் மிக இறுக்கமாக பொருந்தி விட்டதை உணர்ந்து அவள் காதிலிருந்து மிக மென்மையாக வளையத்தை கழட்டினான்.

 

அவளது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் அது வரைக்கும் இத்தனை நெருக்கமாக எந்த ஆண் ஸ்பரிசத்தையும் அனுபவித்திராத ஷானவி கொஞ்சம் என்ன நிறையவே தடுமாறிப் போனாள். அவன் உஷ்ணமான மூச்சுக் காத்து அவள் வதனத்தை ஸ்பரிசித்துக் கொண்டிருக்க, மெதுவாய்  வளையத்தை கழட்டியவன், சிவந்திருந்த அவள் காது மடலை மிருதுவாய் தடவி விடவும், உடலெங்கும் குப்பென புது ரத்தம் பாய கன்னம் காதுமடல் எல்லாம் சிவக்க, அவன் கையைத் தட்டி விட்டவாறே துள்ளி எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் வதனமோ கோபாவேசமாய் சிவந்து முறைக்க வாயோ அதற்கு மாறாய்,

 

“ஸாரி…. ஸாரி… பார்டின்…. தாங்க்யூ… மெர்சி…”

 

என்றபடி முன்னால் தெரிந்த படிக்கட்டுகளில் தாவி ஏறி ஓடினாள். மூச்சிரைக்க முதலாம் மாடியை அடைந்தவள் மனதோ, உள்ளுக்குள்ளேயே அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.

 

“ஏன்டா… வெள்ளைக் கொக்கு… தோட்டைக் கழட்டி விட உதவி கேட்டால் காதையா தடவுறாய்? மவனே! இது மட்டும் எங்க ஊராய் இருந்திருக்கோணும் செருப்பைக் கழட்டி நல்லா நாலு  தந்து, உன் பல்லைக் கழட்டிக் கையில தந்திருப்பன்… இது உன்ர ஊராகப் போன படியால தப்பிட்டாய்டா வெள்ளைப்பன்னி…

 

சீச்சி… அவன் குண்டா எல்லாம் இல்லை… பன்னி பொருந்தாது… கொக்குத்தான் சரி…”

 

என்று பினாத்திக் கொண்டே முதலாம் மாடியில் சுற்றும் முற்றும் தான் செல்ல வேண்டிய இடம் எங்கே என்பதைத் தேடினாள்.

 

அங்கு தென்பட்ட accueil பெயர் பலகை காட்டிய IFRA அலுவலகத்தின் வரவேற்பறை இருந்த இடத்திற்குச் சென்றவள், அங்கே சாந்தமே உருவாய் தனது கணணியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியிடம் தனது கடிதத்தை காட்டி,

 

“மோஷு மெடம்!”

 

என்றாள். மீதியைக் கடிதத்தை பார்த்தே புரிந்து கொண்ட அவர்,

 

“சல் ஹத் மடமொஷல்…”

 

என்று கூறியபடி கைவிரல்களில் நான்கைக் காட்டினார்.

 

நாலாவது வகுப்பறை என்பதைப் புரிந்து கொண்டவள்,

 

“மெர்சி ஃபுக்கு மெடம்…”

 

என்றவாறு அவரிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டு அந்த நீண்ட வராந்தாவில் சல் ஹத்தை தேடத் தொடங்கினாள்.

 

‘வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்’ என்றோ ஒருநாள் அன்னை சொன்ன பழமொழியை மனதில் இருத்திக் கொண்டவள், தனக்கு புரியாதவிடத்து தயங்காமல் வெட்கப்படாமல் அடுத்தவரிடம் ‘எந்த இடம்? எப்படிப் போக வேண்டும்?’ என்ற உதவிகளைக் கேட்டு விடுவாள்.

 

அந்த வராண்டாவில் எங்கு தேடியும் நாலாம் இலக்க வகுப்பறையைக் கண்டுபிடிக்க முடியாதவள், அந்த வராண்டாவின் முடிவில் நின்றவளிடம் கேட்போம் என்று எண்ணிக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்றவளின் நடையோ கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படத் தொடங்கியது.

 

காரணம். அங்கே நின்றவள் ஒருத்தியல்ல. ஆறடிக்கு வளந்திருந்த அவள் தன் உயரத்துக்கு தன் முன்னால் நின்றிருந்த ஒருவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தது போலிருந்தது.

 

மெல்லிய ரோஜா வண்ணத்தில் முழங்காலை எட்டும் வரைக்கும் குளிர் அங்கி அணிந்திருந்தவள், கருநிற  ஃபான்டின் வலப்பக்கதில் வெள்ளியிலான சங்கிலி ஒன்று வளையமாய் இடுப்பில் தொங்க விட்டிருந்தாள். அணிந்திருந்த சப்பாத்துக்களின் அழகை மட்டுமே இவளால் ரசிக்க முடிந்தது. பாவம் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு அந்த மார்க் சப்பாத்தின் விலை தெரிந்திருந்தால் பாவம். அங்கேயே மயங்கியிருப்பாள்.

 

அந்த உயர்ந்தவளோ தனது உயரத்தை இன்னும் உயரக் காட்டும் விதமாக, பின் தோள் வரை இருந்த கோகோ கோலா நிற முடியை உச்சியில் கொஞ்சமாய் பிடித்து ஒரு போனி டெயில் போட்டிருந்தாள்.

 

இங்கே பொது இடங்களில் முத்தமிடுதல் எல்லாம் சகஜம் என்றாலும், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த இவளால் இவற்றை இன்னமும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களை பார்க்கும் திராணியற்று, அவர்களைத் தொந்தரவு செய்வதும் அநாகரீகம் என்று எண்ணியவளாய் வந்த வழியே அலுவலக வரவேற்பறைக்கே  சென்று, தன்னால் வகுப்பறையைக் கண்டுபிடிக் முடியவில்லை என்று ஆங்கிலத்தில் கூற அங்கிருந்த பெண்மணியும் இன்முகத்துடன் அவளை அவளது வகுப்பறையை நோக்கி அழைத்துச் சென்றார்.

 

ஆரம்பத்தில் இருந்தே முதல் நாள் வகுப்பிற்கு தாமதமாக வந்தது, பின்னர் நடந்த மோதல் என்று கொஞ்சம் பதட்டதுடன் இருந்த ஷானவி கொஞ்சம் உன்னிப்பாய் கவனித்திருந்தாலும் அவர்கள் இருவரும் முத்தமிடவில்லை  என்பதையும் தனது நண்பனின் கண்களில் இருந்த தூசியைத் தான் எடுத்து விட்டுக் கொண்டிருந்தாள் என்பதையும் அவள் கண்டு கொண்டிருந்திருக்கலாம். அவளின் அன்றைய தவறான ஊகம் பின்னாளில் பல விளைவுகளுக்கு வழி வகுக்கப் போவதை அவள் அன்றைக்கு அறிந்து கொள்ளாமல் தனது வகுப்பறையை நோக்கிச் சென்றாள்.

 

இங்கே கீழேயோ தனது கைகளைத் தட்டி விட்டு குதித்தோடிச் செல்லும் அந்த அழகு முயல் குட்டியையே  பார்த்துக் கொண்டு சாசுவதமாய் எழுந்திருந்த அந்த வெள்ளைக்காரன், தனது உடைகளைச் சரிப்படுத்திக் கொண்டே, உதடுகளில் இன்பமயமான மென்னகையைத் தவழ விட்டுக் கொண்டே,

 

“Elle est mon Amour!” “எல் ஏ மொன் அமொர்…!” (இவள் என்னுடைய காதல்)

 

மெதுவாய் முணுமுணுத்தவாறு வெளியே சென்றான்.

 

ஷானவியும் அவனும் மோதுப்பட்டு விழுந்ததில் இருந்து நடந்த கூத்தை இரு ஜோடி விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன. ஷானவியைப் பார்த்து மயங்கிய அந்த நான்கு கண்களிலும் ஒரு வித மயக்கம் தோன்ற, அந்த பிரெஞ்சுக்காரன் மீதோ கொலைவெறி பார்வை ஒன்றைச் செலுத்தினார்கள் அவர்கள்.

 

அந்த இருவரும் யாவர்? ஷானவிக்கு அவர்களால் ஆபத்தா? இல்லை பாதுகாப்பா?
5 Comments »

  1. சத்யா ஆரம்பமே அமர்களமா இருக்கு. அடுத்த பதிவுக்காக ஐ அம் வெய்ட்டிங்

    • அக்கா நீங்க படிக்கிறீங்களா? ரொம்ப வெக்கமாக இருக்கே. ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு. ரொம்ப நன்றி அக்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: