Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 63

கல்கியின் பார்த்திபன் கனவு – 63

அத்தியாயம் 63
படகு நகர்ந்தது!

படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். “மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!” என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், “பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்…. அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு” என்றான். பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். “பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?” என்று விக்கிரமன் கேட்டான்.

 

“ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?” “வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!” “அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?” “ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!” “மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது…”

 

“அப்புறம் என்னதான் செய்தாய்?” என்று விக்கிரமன் கேட்டான். பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான். பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது. “பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது” என்றான் விக்கிரமன். “என்ன மகாராஜா, சந்தேகம்?” “அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று.”

 

“ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!” “ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்…. ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?” “ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்….” “ஆனால் என்ன, பொன்னா?”

 

“வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்.” “இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்” என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். “அது என்ன அபாயம், மகாராஜா?” என்று கேட்டான். “ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்” என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:- “உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்.”

 

“மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்.” “பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்.” “ஐயோ, அது என்ன?” “மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்…!” பொன்னன் குறுக்கிட்டு, “மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்” என்றான். “சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?” “விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?”

 

“பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்.” “அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?” “கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளா யிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?”

 

பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. “விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை” என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. “ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான். “ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?” என்றான் விக்கிரமன். “கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்….” “பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?” என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். “சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!” “தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?” “முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.

 

அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 70கல்கியின் பார்த்திபன் கனவு – 70

அத்தியாயம் 70 அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 36கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 36

அத்தியாயம் 36 – குயில் பாட்டு அபிராமியை நாம் பார்த்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டதல்லவா? திருப்பரங்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் ஸ்ரீமதி மீனாட்சி அம்மாளுடன் அவளை நாம் கடைசியாகப் பார்த்தோம். இப்போது, சரஸ்வதி வித்யாலயத்தின் மதில் சூழ்ந்த விஸ்தாரமான தோட்டத்தின் ஒரு

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22

அத்தியாயம் 22 – நிலவும் இருளும்      முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே