Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3

அத்தியாயம் 3 – பாழடைந்த கோவில்

     பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல் ஜலம் அதிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கும். மூங்கில் பாலத்தின் வழியாக ராஜன் வாய்க்காலைத் தாண்டி அப்பால் சென்றால், கொள்ளிடத்தின் லயன் கரையை அடையலாம். லயன் கரையிலிருந்து வடக்கே பார்த்தால், வெகு தூரத்துக்கு நாலா பக்கமும் அடர்ந்த காடுகள் தென்படும். தண்ணீர்த் துறைக்குப் போக ஒரு குறுகலான ஒற்றயடைப்பாதை மட்டுந்தான். இந்தக் காட்டைப் பிளந்து கொண்டு போகின்றது. நீரோட்டத்துக்கு அருகே போகப் போக, மரம் செடி கொடிகளின் நெருக்கம் குறைந்து வந்து நீர்க்கரையில் ஒரே நாணல் காடாயிருப்பதைக் காண்போம்.

அந்தப் பிரதேசத்தில் லயன் கரைக்கும் நதியில் நீரோடும் இடத்துக்கும் வெகு தூரம் இருக்கிறது. சில இடங்களில் இரண்டு பர்லாங்கு தூரம் கூட இருக்கும். கிழக்கேயும் மேற்கேயும் பல மைல் தூரத்துக்கு அடர்த்தியான காடுதான். பல்வேறு காட்டு மரங்களும் முட்செடிகளும் கொடிகளும் செறிந்து வளர்ந்து, மனிதர்கள் அந்தக் காட்டிற்குள் நுழைவது அசாத்தியமென்றே தோன்றும். ஆனால் கொள்ளிடக் கரையிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்தக் காட்டுக்குள் பிரவேசிப்பது மிகவும் சகஜமான காரியமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதோ அந்த இளநங்கை அவ்வளவு லாகவமாக அந்தச் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு செல்கிறாளே, அது எப்படி சாத்தியம்?

ஆமாம்! நேற்று முத்தையன் வீதி வழியே வந்த போது, பந்தல் போட்ட வீட்டின் காமரா உள் ஜன்னலுக்குப் பின்னால் கண்ணுங் கண்ணீருமாய் நின்றாளே, அந்தப் பெண்தான் இவள். முன் அத்தியாயத்தில் நடந்த சம்பாஷணையைக் கொண்டு இவள் தான் கல்யாணி என்று நாம் ஊகிக்கலாம். அவளுக்குப் பதினேழு, பதினெட்டுப் பிராயம் இருக்கும். அவளுடைய முகத்திலே எழிலுடன் கம்பீரமும் கலந்திருந்தது. அவள் நடையிலே அழகுடன் மிடுக்கும் காணப்பட்டது. நீண்டு பரந்த அவள் கண்களிலோ, தண்மையுடன் தணலின் ஜுவாலையும் வீசிற்று.

அடர்ந்த காட்டிற்குள் அலட்சியமாய் நுழைந்து செல்லும் கல்யாணியைப் பின் தொடர்ந்து நாமும் போகலாம். அதோ, அது என்ன யாரோ பாடுங் குரல் கேட்கிறதே! அந்தக் குரலில் தான் எவ்வளவு தீனம்; எவ்வளவு துயரம்? பாட்டின் ராகமும் விஷயமும் அந்தச் சோகமான குரலுக்குப் பொருத்தமாகவே யிருந்தன.

“உண்டானபோது கோடி உறன் முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாகிக் கொள்வார் தனங் குறைந்தால்
கண்டாலும் பேசாரிந்தக் கை தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தில் சத்குருக்களைத் தேட
என்றைக்குச் சிவகிருபை வருமோ – ஏழை
என் மனச்சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)
பாட்டின் குரல் வந்த வழியே கல்யாணி சென்றாள். கொஞ்ச தூரம் போனதும் காட்டிலே கொஞ்சம் இடைவெளி தென்பட்டது. என்ன ஆச்சரியம்! இங்கே ஒரு பாழடைந்த கோவில் அல்லவா இருக்கிறது? இந்த மாதிரி கோவில் ஒன்று இங்கே இருப்பது அதற்கு சமீபத்தில் வரும் வரைக்கும் தெரியவேயில்லையே?

ஒரு காலத்தில் அது ஏதோ கிராம தேவதையின் ஆலயமாயிருந்திருக்க வேண்டும். இடிந்துபோன சுவர்களில் செடிகள் முளைத்து மண்டிக் கிடந்தன. ஒரு பக்கத்தில் வேண்டுதல் செய்து கொண்டவர்கள் கொண்டு வைத்த மண் குதிரைகளும், யானைகளும் உடைந்து கிடந்தன. இன்னொரு பக்கம் பெரிய கறையான் புற்றுக்கள் காணப்பட்டன. ஏதோ ஒரு சமயம் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது அந்தக் கோயில் இடிந்து போக, அதற்கு அப்புறம் அதை ஒருவரும் கவனிக்காமல் நாலாபுறமும் காடுமண்டி அது அங்கிருப்பதே தெரியாமல் போயிருக்க வேண்டும்.

இந்தக் கோவிலின் வாசலில் ஒரு சிறு திண்ணை பாதி இடிந்து கிடந்தது. அதன் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் கிளம்பி நிழல் தந்து கொண்டிருந்தது. அந்த இடிந்த திண்ணையின் மேல் உட்கார்ந்து மேற் சொன்னவாறு பாடிக் கொண்டிருந்தான் முத்தையன்.

கல்யாணி அடிமேல் அடிவைத்து ஓசை கேட்காதபடி நடந்து வந்தாள். முத்தையனுக்குப் பின்புறமாய் வந்து நின்று அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசின் பின் குச்சைப் பிடித்து இழுத்து விட்டு நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். முத்தையன் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன்னுடைய உதடுகளை மடித்துக் கொண்டு ஏதோ பிடிவாதமான தீர்மானத்துக்கு வருபவன் போல் காணப்பட்டான். அடுத்த தடவை அவள் அம்மாதிரி முண்டாசைப் பிடித்து இழுத்த போது, முத்தையன் சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

கல்யாணி கலகலவென்று சிரித்தாள். ஆனால் முன்புறமாக வந்து, முத்தையனுடைய முகத்தைப் பார்த்ததும், அவளுடைய சிரிப்பு அப்படியே பாதியில் நின்று போயிற்று.

“கல்யாணி! இது என்ன பைத்தியம்? இங்கு ஏன் வந்தாய்?” என்றான் முத்தையன்.

கல்யாணிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது.

“ஏன் வந்தேனென்றா கேட்கிறாய்! வேறு எதற்காக வருவேன்? உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்!” என்றாள்.

“என்னைத் தேடிக்கொண்டா? ஆச்சரியமாயிருக்கிறதே! எதற்காக இந்த ஏழையைத் தேடி வரவேணும்? தாங்கள் இனிமேல் ரொம்பப் பெரிய மனுஷாள் அல்லவா? எஜமானியின் வீட்டு வாசலில் என்னைப் போல் நூறு பேர் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்களே! – அடடா? இத்தனை நேரம் நான் பார்க்கவில்லையே? கழுத்திலே காசுமாலை; காதிலே வைரக்கம்மல், என்ன ஜொலிப்பு! என்ன ஜொலிப்பு! கண் கூசுகிறதே…”

கல்யாணி அந்தத் திண்ணையின் மேல் உட்கார்ந்து தீனமான குரலில், “அத்தான்!…” என்றாள்.

“அத்தானா? – அசட்டு அம்மாஞ்சி என்று வேண்டுமானால் சொல்!” என்றான் முத்தையன்.

“என் மனது ஏற்கனவே புண்ணாயிருக்கிறது. அதிலே நீ முள்ளை எடுத்துக் குத்துவதுபோல் பேசுகிறாய்” என்று கூறியபோது கல்யாணியின் கண்களில் நீர் ததும்பிற்று.

முத்தையன் பதில் ஒன்றும் கூறவில்லை. தரையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தாள்.

கல்யாணி தொடர்ந்து கூறினாள்: “என்மேல் குற்றம் இருப்பதுபோல் நீ பேசுகிறாய். நான் செய்த குற்றம் என்ன? உன்னை நானாகத் தேடிக் கொண்டு வந்தது இது தானா முதல் தடவை? இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு இரண்டு பேரும் போய்விடுவோமென்று எத்தனை நாளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அதற்கு வேண்டிய தைரியம் உனக்கு இல்லாவிட்டால், அதற்கு நானா பொறுப்பாளி? இப்போதுதான் என்ன…? நீ உன் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். உன்னைவிடப் பெரியது எனக்கு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. நீ கிளம்பத் தயாரா, சொல்லு! ஏன் பேசாமலிருக்கிறாய்?”

முத்தையன் கடுகடுப்பான குரலில், “ரொம்ப பேஷான யோசனைதான். நாம் இரண்டு பேரும் போய் விடலாம். ஆனால் அபிராமியை என்ன பண்ணுவது? அவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போய் விடுவோமா?” என்றான்.

“கிணற்றில் பிடித்துத் தள்ளுவானேன்? காலம் வரும் போது அவளை யாராவது வந்து கட்டிக் கொண்டு போகிறான். அவரவர்கள் தலையெழுத்துப் போல் நடக்கிறது. ஒருவருக்காக இன்னொருவர் ஏன் கஷ்டப்படவேண்டும்!”

“ஆமாம்! ஒருவருக்காக இன்னொருவர் கஷ்டப்படத்தான் வேண்டும். அம்மா செத்துப் போகும்போது, அபிராமிக்குத் தாயும் தகப்பனும் இல்லாத குறை தெரியாதபடி காப்பாற்ற வேணுமென்று சொன்னாள். அவ்விதமே வாக்களித்தேன். அந்த வாக்கை மறக்கமாட்டேன். அபிராமியை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது. நீ மகராஜியாய்க் கிழவனைக் கல்யாணம் செய்து கொண்டு சௌக்கியமாயிரு!”

கல்யாணியின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவள் எழுந்து நின்று, “இந்த வார்த்தை சத்தியந்தானா?” என்று கேட்டாள்.

“சத்தியந்தான்!”

“அப்படியே ஆகட்டும்; நான் கிழவனையே கல்யாணம் செய்து கொள்கிறேன். உன்னைப் போன்ற கோழையைக் காட்டிலும் தலை நரைத்த கிழவன் எவ்வளவோ மேல்” என்று சொல்லிவிட்டுக் கல்யாணி விரைந்து நடந்தாள். அளவற்ற ஆத்திரத்தாலும் துக்கத்தினாலும் அவளுடைய கண்களிலிருந்து ஜலம் பெருகி வழிந்தது. அதைக் காட்டிக் கொள்ள விரும்பாததினால்தானோ என்னமோ, அவள் திரும்பியே பார்க்கவில்லை.

முத்தையன் கல்யாணியைப் பின்பற்றி ஐந்தாறு அடி சென்றான். மறுபடி பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்த இடிந்த கோவிலின் திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்தான்.

மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக் கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்க வேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே “ஏன் வந்தாய்?” என்று கேட்பது போல் நடந்து கொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்து போவது போன்ற வேதனை உண்டாகிறதோ அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 16கல்கியின் பார்த்திபன் கனவு – 16

அத்தியாயம் 16 கலைத் திருநாள் மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர் களுடைய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1

அத்தியாயம் 1 – பறித்த தாமரை      பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும்,

கல்கியின் பார்த்திபன் கனவு – 57கல்கியின் பார்த்திபன் கனவு – 57

அத்தியாயம் 57 பொன்னனும் சிவனடியாரும் சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா?