Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 12

அத்தியாயம் – 12

 

டாரென்று கார்க்கதவை அடித்து சாத்திவிட்டுப் புயல் வேகத்தில் கிளம்பினாலும் அஞ்சலியின்  கண்களில் கண்ணீர் கரை கட்டியது. மனதின் வலி அவளது உடலையும் மூளையையும் தனியே கழட்டிப் போட்டுவிட்டு பிரமை. எதையுமே அவளால் சிந்திக்க முடியவில்லை. கண்ணீர் திரைக்கு மத்தியில் பாதை மறைய, டிராஃபிக் சிக்னல்களையும், திருப்பங்களையும் கடந்து வீட்டுக்கு வந்ததே அதிசயம்தான்.

 

வீட்டு காம்பவுண்டினுள் நுழைந்ததும் கார் சாவியை அங்கேயே  விட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாக இறங்கினாள். நடுங்கும் கைகளால் பூட்டிய கதவைத்  திறப்பதே பிரம்ம ப்ரயத்தனமாய் இருந்தது அவளுக்கு. ஏமாற்றம் தந்த கோபத்தின் அளவை உலகில் அனைவருக்கும் உணர்த்திவிடும் வெறியில் ஓங்கிக் கதவை சாத்தினாள்.

 

ஏதோ நினைவுக்கு வந்தவளாக ஜெய்ஷங்கர் தங்கியிருந்த அறைக்கு சென்றாள். அவனது பொருட்கள் எந்த நேரமும் கிளம்பத் தயாராக பையில் இருந்தது.

 

‘ இந்த மாதிரி சூழ்நிலையை எதிர்பார்த்தே இருந்திருக்கான்’ கசப்பாக சிரித்துக் கொண்டாள். அவனது பையை எடுத்தது வாசலில் எறிந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

நுழைந்த கணத்திலிருந்து அவளது மனது தாங்க முடியாத ஏமாற்றத்தால் வலிக்க ஆரம்பித்தது. இதே போல முன்பொரு முறை நடந்திருக்கிறது. அப்போது தந்தை இறந்த தகவலை போலிஸ்காரர் ஒருவர் வந்து சொன்னபோது இப்படித்தான் துடித்தாள்.

 

எல்லார் மீதும் தாங்க முடியாத கோபம் வந்தது. பல விஷயங்களை மறைத்த தந்தையின் மீது, அவரைக் கொன்ற கிஷோர் மீது, தன்னை முட்டாளாக்கிய ஜெய் மீது.

 

ஜெய்யை எவ்வளவு முட்டாள்தனமாக நம்பியிருக்கிறேன். எந்த நிமிடத்தில் மூளை ஒன்று செயலற்று மனது அதன் இஷ்டப்படி முட்டாள்தனமான முடிவெடுக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அவளது வேதனை ஆரம்பமாகிவிட்டது.

 

இந்த வலி நாளை பெங்களூருக்கு சென்று தனது உணவகத்தில் வேலையை ஆரம்பித்தால் மறையுமா? இருக்கலாம்…  இது எதுவும் வேண்டாம் பேசாமல் பெங்களூர் சென்றுவிடலாம்.

 

இப்போதைக்கு கொஞ்சம் தூக்கம் வேண்டும். அவளால் முடிந்தால் நன்றாகத் தூங்கி இந்த ஏமாற்றம், வலி எல்லாம் மறைந்தவுடன் சில மாதங்கள் கழித்து விழிப்பாள். அது சாத்தியமில்லாததால் …

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே…

இன்று மட்டும் அமைதி தந்தால்  உறங்குவேன் தாயே… என்று மனதில் வேண்டினாள்.

 

தனது தந்தையின் படத்தை கைகளில் வைத்தவண்ணம் அழுதவண்ணம் இருந்தவள் அப்படியே விம்மினாள். தனது தந்தையின் வாய்ஸ் ரெக்கார்டரை எடுத்து காதில் வைத்துக் கொண்டாள். ஆனால் முதல்நாள் ஆறுதல் அளித்த தந்தையின் குரல் கூட அந்த நேரத்தில் நிம்மதி தரவில்லை.

வீட்டில் ஜெய்ஷங்கரின்   இருப்பையும் நினைவுபடுத்திய ஒவ்வொரு இடமும் காயத்தைக் கிளறியது. முதல்நாள் அவனிடம் பரிமாறிய  ஆசை முத்தத்தை  அவமானமாக உணர்ந்தாள். அவளது கனவுகளும் ஆசைகளும் கண்முன்னே இடிந்து சில்லு சில்லாய் உடைந்ததை மனக்கண்ணால் கண்டாள்.

 

மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் கணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

 

ஜெய் அவனுக்குத் தேவையானதை நேரடியாகவே கேட்டிருக்கலாம். அதைவிட்டு உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் ஆதாயம் பெற்றது மிகக் கேவலமாய் தோன்றியது.

 

ஏன் அப்படி செய்தான்? ஏன் என் உணர்ச்சிகளுடன் விளையாடினான். ஏன் பொய் சொன்னான்? உயிரைப் பணயம் வைத்து பெரும் அளவுக்கு என்னிடம் அப்படி என்ன முக்கியமான விஷயம் இருக்கிறது.

இந்நேரம் அப்பா மட்டும் என் அருகில் இருந்தால் இந்த மாதிரி துணிச்சல் எந்த ஆண்மகனுக்காவது வந்திருக்குமா?

 

“டாடி… இந்த உலகத்தில் எல்லாரும் துரோகிங்க.  என்னை விட்டுட்டு ஏன்  போனிங்க. என்னையும் உங்க கூட கூட்டிட்டுப் போயிடுங்க”

‘ஓ’வென்று கதறினாள்.

 

அவளது மனதின் அடி ஆழத்திலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகை அந்த இருளைக் கிழித்து அந்த வீட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஜெய்யின் காதில் விழுந்து அவனது உடல் திடுக்கிட்டுத் தூக்கிப் போட்டது. இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

 

“அஞ்சலி மை லவ்… உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திருக்கேன். உன்னோட கண்ணீருக்கு நான் காரணமானேனே. இதுக்குக் காரணம் என் வேலை, கடமை, சத்தியம் எல்லாத்துக்கும் மேல உங்க அப்பாவும் கூட. அவரைப் பத்தின விவரங்களை சுருக்கமா அவர் மேல பழி வராத மாதிரி கூட உன்கிட்ட சொல்லிருந்திருக்கலாம். எதையும் சொல்லாம எங்க உயிரை வாங்கிட்டார். இது உன்னோட பாதுக்காப்புக்கும் பயங்கர பிரச்சனைன்னு அவ்வளவு அனுபவம் வாய்ந்தவருக்குத் தெரியாம போனது ஆச்சிரியம்தான்”

 

வலியுடன் அவளது அறையினை இமைக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். மரத்திலிருந்த கட்டெறும்புகள் இதென்ன புது இடையூறு என்று நினைத்து அவனை நன்றாகக் கடித்துச்  சென்றன. அவனது உடம்பில் அவை கடித்த இடங்களிலெல்லாம் சிவந்து தடித்தன. இருந்தும் சொரிந்து கொள்ளக் கூட இம்மியளவும் அவன் கையை அசைக்கவில்லை.

 

ஏனென்றால்  இது அவனுக்குப் புதிதில்லை. வேலை காரணமாக எத்தனையோ தடவைகள் அஞ்சலியையும் மற்றவர்களையும்  இப்படிக் கண்காணித்திருக்கிறான். ஏன் பெங்களூரில் அஞ்சலியின் வீட்டின் அருகிலிருக்கும் மரத்தில் கூட எத்தனையோ நாட்கள் இரவு நேரங்களில் ஏறி அவளை வேவு பார்த்திருக்கிறான். அவள் இல்லாத சமயத்தில் ரகசியமாக கள்ளச்சாவியைப் போட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்று இன்ச் பை இன்ச்சாக ஆராய்ந்திருக்கிறான். அதே சமயத்தில் அவனது கூட்டாளிகள் அவளது சென்னை வீட்டை ஒரு சதுர அங்குலம் கூட விடாமல் தேடியிருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் தேடல் முற்றுப் பெறவில்லை. அப்போதுதான் அவனது சகோதரன் ரவிச்சந்திரன் சொன்னான்

“வேற வழியில்லை. அஞ்சலிகிட்டதான் நம்ம தேடினது இருக்கு”

 

மறுத்த மற்றொரு நபர் “அவளுக்கு ஒரு விஷயமும் தெரியாதுன்னுதான் நினைக்கிறேன். தனசேகர் அழுத்தக்காரன். தன்னோட மனைவியின் கடைசி தருணத்தில் கூட அவனோட ரகசியங்களை சொன்னதில்லை. சொல்லப் போனா அவனோட பகைதான் அவன் மனைவியைக் கொன்னது. போலிஸ் விசாரிச்சப்ப கூட ஆக்ஸிடென்ட்ன்னு கூசாம சொன்னவன். இப்ப மககிட்ட சொல்லிருக்க வாய்ப்பில்லை”

 

எல்லாவற்றையும் அடக்கிய பெரிய தலை ஒன்று தீர்ப்பு சொன்னது“அஞ்சலிகிட்ட தனசேகர் சொன்னாரோ இல்லையோ… இல்லை அந்தப் பொண்ணுக்குத்  தெரியுதோ தெரியலையோ… அதெல்லாம்  நமக்கு சம்மந்தமில்லாத விஷயம். ஆனால் இதுக்கான விடை அவகிட்டதான் இருக்கு. இல்லை அதை அடைய அவளோட உதவி கண்டிப்பா தேவை என்பது மறுக்க முடியாத உண்மை”

 

தனது டேபிளிலிருந்த ஸ்ட்ரெஸ்சை விடுவிக்கும் பந்தினை கைகளில் உருட்டியபடி யோசித்தவர்

“வேற வழியில்லை… நமக்கு நேரமும் இல்லை… ஜெய்ஷங்கர் இது உன்னோட பொறுப்பு. அவகிட்டேருந்து எப்படியாவது விஷயத்தைக் கொண்டு வர… உனக்குத் தேவையான சமயத்தில் தேவையான உதவிகள் வந்துட்டே இருக்கும்”

 

அன்று தொடங்கியதுதான்… கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியை நெருங்கியாகிவிட்டது. கடைசி நேரத்தில் இப்படி எல்லாவற்றையும் நாசப் படுத்திவிட்டான். அவளிடமிருந்து விவரங்களைப் பெற்றாகிவிட்டது ஆனால் இழந்த நம்பிக்கையை…

 

ஒருவரிடம் அன்பையும் நம்பிக்கையையும் பெறுவது மிகக் கடினம். முறிப்பது வெகு சுலபம். அஞ்சலியை சந்திப்பதற்கு முந்திய ஜெய்ஷங்கருக்கு முடிக்க வேண்டிய கடமை மட்டுமே குறி… உணர்ச்சிகளுக்கு அவன் அகராதியில் இடமில்லை. ஆனால் அஞ்சலி போன்ற ஒரு தேவதையைக் கண்டவுடன் புறம் தள்ளி விடும் அளவுக்கு அவன் ஒன்றும் சாமியாரும் இல்லை.

 

இப்போது என்ன செய்வது யோசித்தபடி அமர்ந்திருந்தான். அஞ்சலியின் அறையில் தெரிந்த அவளது நிழலுருவம் சிறிது நேரம் முன்பு கட்டிலில் சாய்ந்ததைப் பார்த்தான். அரைமணி நேரமாகிவிட்டது ஒரு அசைவும் இல்லை. அவனறிந்த வரை அவள் கோழையல்ல இருந்தும் உணர்ச்சியின் பிடியில் ஏதாவது தவறான முடிவுக்குப் போய்விட்டால் நினைத்த நொடி சரசரவென மரக்கிளையின் மேல் தாவி ஏறினான். லாவகமாக சன்ஷேடில் தாவி  ஏறி, மழை நீர் குழாயைப் பிடித்துக் கொண்டு பக்கவாட்டு சன்ஷேடில் குதித்து அஞ்சலியின் படுக்கை அறையின் கீழிருந்த ஜன்னலை வந்தடைந்து சற்று எக்கிப் பார்த்தான். சற்று ரிஸ்க்கான மூவ்தான் இருந்தாலும் அவளுக்காக எடுப்பதில் அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லை.

படுக்கையில் தனது தந்தையின் புகைப்படத்தைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தவள் அப்படியே கண்ணயர்ந்திருந்தாள். அந்த உறக்கத்திலும் அவளது தேம்பல் நிற்கவில்லை. அவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தவனின் கண்கள் ஏனோ கலங்கின.

“சாரி டார்லிங்… ஷாஜகானின் டீப் லவ் மும்தாஜுக்குத் தெரியாது.அது மாதிரிதான் என் காதலும்” மெதுவாய் முணுமுணுத்தான்.

வந்த வழியே அப்படியே இறங்கியவன், அவளது வீட்டு வாசலுக்கு வந்தான். அங்கே அனாதையாய் எறியப்பட்டிருந்த தனது பெட்டிகளைப் பார்த்ததும் வாசல் படியிலேயே அமர்ந்துவிட்டான்.

பின் ஏதோ யோசித்தவனாய் மொபைலில் ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்.

“வேற வழியில்லை… நான் வீட்டுக்குள்ள போகப் போறேன். இன்னைக்கு நம்ம ட்ரம்ப் கார்டை அவகிட்ட காமிக்கிறதைத் தவிர வேற வழியில்லை. இல்லைன்னா கடைசி வரைக்கும் நம்மால விஷயத்தை வாங்கவே முடியாது” என்றான்.

 

***

 

ஏதோ உள்ளுணர்வு தோன்ற திடுக்கிட்டு எழுந்த அஞ்சலி அவள் படுக்கை அறையில் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

 

“நீ எப்படி என் வீட்டுக்குள்ள வந்த… கெட் அவுட்… “

 

“நானும் இங்க நின்னு நிதானமா குடித்தனம் நடத்துற எண்ணத்தில் இப்ப வரல. ரெப்ரெஷ் ஆயிட்டு வா உன்கூட முக்கியமான சில விஷயங்களைப் பத்திப்  பேசணும்” என்றான்  அவள் மறுக்க நினைக்கக் கூட முடியாத கண்டிப்பான குரலில்.

 

“வெளிய போ… நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்” என்றாள்.

 

குளியலறையில் அழுது சிவந்து வீங்கியிருந்த அவளது முகத்தைக் காணவே வெறுப்பாக இருந்தது. தவறு செய்தவன் ஜம்மென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான். தான் இன்னமும் அவன் பால் செலுத்திய அன்பு மாறாமல் இருப்பது கண்டு தன் மேல் அவ்வளவு கோபம் வந்தது. ஆத்திரம் தீருமட்டும் குளிர்ந்த நீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள். முகத்தின் சிவப்பு குறைந்தது. ஆனால் தலைக்கு ஊற்றினாற்போல கூந்தல் நனைந்திருந்தது. அதற்கு ட்ரையர் போடக் கூட மனமில்லை. அரைகுறையாகத் துவட்டி விட்டு நனைந்திருந்த உடையை மாற்ற எண்ணி மாற்றுடையைத் தேடினாள்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவள் அவளது இரவு உடையைக் களைந்து ஒரு காட்டன் சுடிதாரில் வந்தபொழுது அவன் இருவருக்கும் காப்பி தயாரித்து வைத்திருந்தான்.

 

சோபாவில் அமர்ந்து கொண்டு “க்கும்…” என்று தொண்டையைக் கனைத்தாள். என்னவோ அவன் பெயர் சொல்லி அழைக்கவும் பிடிக்கவில்லை.  அதற்கே அவன் திரும்பிப் பார்த்தான்.

 

அவளது முடி ஈரமாக இருப்பதைக் கண்டவன்  வெளியிலிருந்த அறையிலிருந்து பூந்துவலை ஒன்றை அவளிடம் தந்தான். வாங்க மறுத்து முறைத்தவளிடம்

 

“உன் உடல் நலம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால இதை வச்சு தலையைத் துடை. வாங்க மறுக்குறதுக்கு என் கையால் துவட்டிக்க ஆசைன்னு அர்த்தம்”

 

கண்களில் கனல் பறக்க அவனைப் பார்த்தாள். அவனோ சற்றும் அசராமல்

“எனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன்  இல்லை. என் கடமையை முடிக்க என்ன செய்யவும் நான் தயார். ஒரு பொண்ணுக்குத் தலை  துவட்டி விடுறது உட்பட…” உணர்ச்சி துடைத்த குரலுடனும் முகத்துடனும் அவன் சொல்லி முடித்தபொழுது அவள் விக்கித்துப் போனாள்.

 

“அப்ப இதுவரைக்கும் என்னை கவனிச்சுகிட்டதும், இப்ப வரைக்கும் என் கூட நிக்கிறதுக்கும் கூட உங்க கடமை மட்டும்தான் காரணமா”

 

“ஆமாம்” அவன் வாயால் இந்த பதிலைக் கேட்டபொழுது அவளது இதயத்தை யாரோ சுக்கல் நூறாக உடைத்தது போலவே தோன்றியது.

7 Comments »

  1. ரொம்ப விறுவிறுப்பா கொண்டுபோறிங்க. அஞ்சலியோட பின்னணி, ஜெய் எதற்க்காக அவளை பின் தொடர்கிறான், அஞ்சலி அப்பாவின் கொலை, அவரின் பின்னணி எல்லாமே மர்மமாக இருக்கிறது. கதையின் ஓட்டம் கூட வேகமாக இருக்கிறது. எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

  2. Ayyo jai unoda kadamai unarchiku oru alave iliya.anjali in the mathiri kadamai kanayirangala ellam love pannina ipidi than.ungappa enna marmam irukum nu yosichu manda kaithu anjali.

  3. please adutha episode vekama update panungalen…… anjali ku pinnadi yar iruka jai yaru…. ore suspense…. ithellam enoda heart ku agave agathu pa…. plz fast fast fast….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: