Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கிலிருந்து தான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமையுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி – அது சிதைந்து கூழாகி உருப்புரியாமல்… லாரியில் முகம் நசுங்கி விட்டதா?

பொன்னாச்சி லாரியில் அடிபட்ட உடம்பை அதுவரையிலும் பார்த்ததில்லை.

“ஐயோ, சின்னம்மா!” அவள் துயரம் பொங்கி வரக் கதறி அழுவதைக் கண்டு குழந்தைகள் எல்லோரும் கதறுகின்றனர்.
“இது லாரி மோதலல்ல. அறவை மில்லுல அடிபட்டு விழுந்திருக்கா. வெளிலே பாதையில அடிபட்டு விழுந்தான்னு சொல்றாவ. பொய்யி. அறவை மில்லுல மிசின் பில்ட்டில மாட்டியிருக்கும். அதா விசாரணை எல்லா அதுக்குள்ள ஆயிரிச்சி. ஞாயிற்றுக்கிழமையாதலால் அதிக ஆட்கள் நடமாட்டமுமில்லை. கொண்டு வந்து வெளியே போட்டு லாரியில் அடிபட்டிருக்கிறாள் என்று சொல்லியிருப்பார்கள்” என்று ராமசாமியும் தனபாண்டியனும் பேசிக் கொள்கின்றனர்.

வாயைத் திறந்து பேசமாட்டாள். பேசினால் அது சாட்டையடி போல் இருக்கும். அந்தச் சின்னம்மா உப்பளத்துக்கே இரையாகி விட்டாள்.

“சின்னம்மா! வெடிஞ்சதும் வந்துடுவேன்னு ரெண்டு ரூவாக் காசுக்காவ ஒழக்கப் போயி இப்படிக் கிடக்கிறயளே?…” என்று உள்ளம் புலம்பியழுகிறது. அவள் தாய் இறந்து போனபோது கூட அவள் இத்துணைத் துயரம் அனுபவிக்கவில்லை. தன் மீது வானமே இடிந்து கவிந்தாற் போன்று ஓர் சோகத்துள் அவள் அழுந்திப் போகிறாள்.

அவள் தன்னையும் தம்பியையும் அழைக்க வந்ததும் திரும்ப நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறியதுமான காட்சிகள் படலங்களாகச் சுருள் வீழ்கின்றன. அப்பனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைக் கூட்டி வந்தவள் போய் விட்டாள். “அய்ந்நூறு ரூபா கடன்… கடனிருக்கு…” என்று சோற்றுப் பருக்கைகளை அளைந்து கொண்டு பிரமை பிடித்து உட்கார்ந்து விடும் சின்னம்மா… அவள் போய் விட்டாள். அவள் யாரோ? தான் யாரோ? சின்னம்மா எங்கோ பிறந்து எங்கோ எப்படியோ வளர்ந்து, யாருக்கோ மாலையிட்டு யாருடனோ, எப்படியோ வாழ்ந்து மக்களைப் பெற்று, இந்த உப்புக் காட்டில் உடலைத் தேய்த்து…

“சின்னம்மா!…” என்று கதறிக் கொண்டு உடலின் மீது விழுந்து அழுகிறாள் பொன்னாச்சி.

ராமசாமி அவளைக் கனிவுடன் தொட்டுத் தூக்குகிறான். “அழுவாத புள்ள. நீயே அளுதா மத்த புள்ளயெல்லாம் என்ன செய்யும்? அப்பச்சிக்கு ஆரு தேறுதல் சொல்லுவா…?”

அப்போது கங்காணியும் இன்னொரு ஆளும் அங்கு வந்து தனபாண்டியனை அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் பேசி விட்டு அவர் ராமசாமியிடம் வந்து விவரம் தெரிவிக்கிறார்.

“நூறு ரூபாய் செலவுக்குத் தந்திருக்கா. ‘வட்டிக்கடன் ஓடிப் போச்சு, வேல அதிகப்படி நாஞ் செய்யிறேன் கங்காணி’ன்னு கெஞ்சிக் கேட்டா. எரக்கப்பட்டுக் குடுக்கப் போயி அறவை மில்லில மிசின் பெல்ட்டில மாட்டிக் கிட்டிச்சி. மொதலாளிக்கு மனசுக்கு ரொம்பச் சங்கட்டமாப் போச்சி. கூட இன்னுமொரு பொம்பிளயும் ஆம்பிளயாளும் இருந்திருக்காவ. ஓடி வந்து எடுக்குமுன்ன தல மாட்டிக்கிச்சு. வேணும்னு ஆரும் செய்யறதில்ல. எல்லாருக்கும் இது கஷ்டந்தா. மொதலாளி வீட்டில இன்னிக்குக் கலியாணப் பேச்சுப் பேச வராக. சொன்ன ஒடன ஸ்கூட்டர் எடுத்திட்டு ஓடியாந்தா. பொறவு போலீசெல்லாம் வ்ந்து எழுதிட்டுப் போயிட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டாந்தா. ஆரயும் குத்தம் சொல்றதுக்கில்ல. அந்தப் பொம்பிள தூக்கக் கலக்கத்தில தெரியாம… விழுந்திட்டா…ன்னு சொல்றானுவ. என்ன பண்ணலாம்?”

முப்பது ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்த தொழிலாளிக்கே எந்த ஈட்டுத் தொகையும் கிடைப்பதில்லையே?

சின்னம்மாளை மண்ணில் புதைத்து விட்டு அவர்கள் வீடு திரும்புகையில் இரவு மணி ஒன்பதடித்து விடுகிறது. ராமசாமி அன்று வீட்டுப் பக்கமே செல்லவில்லை. அப்பனின் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அழக்கூட தெரியாத சிலையாகிவிட்டார். சிவந்தகனிதான் அவரை முழுகச் செய்து கொண்டு வந்து உட்கார்த்தினான் திண்ணையில்.

சிவந்தகனியின் மனைவி சோறாக்கி வந்து அவர்களுக்கெல்லாம் போட்டாள்.

ராமசாமியும் படுக்கவில்லை.

செங்கமலத்தாச்சியும் உட்கார்ந்திருக்கிறாள்.

“என்ன விட்டுப் போட்டுப் போயிட்டா… நா என்ன பண்ணுவே…” என்று கண் தெரியாமல் விம்மும் அப்பனைப் பார்த்தாலே பொன்னாச்சிக்கு அழுகை வெடிக்கிறது.

“ஏட்டி அழுவுற? அழுதா என்ன ஆகும்? அவ போயிட்டா மவராசி. அந்தப் பய காட்டில மடிஞ்சி கெடந்தப்ப ராப்பவலா எம்பக்கத்துல ஒக்காந்து கெடந்தா. வேலய்க்கிப் போவல. நா ஒரு மாசம் இப்படியே ஒக்காந்து கெடப்பே. படுக்க மனமிராது – அளத்துலேந்து வந்து ஒக்காந்து தேத்துவா. ஒங்கக்கு ஆறுதல் சொல்ற துக்கமில்லதா ஆனா, இப்பிடியே இருந்திட்டா எப்பிடி? இந்த ஒலகத்தில நினச்சிப்பாத்தா நமக்கெல்லாம் சொகமேது துக்கமேது? ஒரு ஆம்பிளக்கின்னு அடிமப்பட்டுப் புள்ள குட்டியப் பெற்றது சொகமின்னா அதுல இன்னொரு பக்கம் எம்புட்டு நோவும் நொம்பரமும் இருக்கி! பொம்பிளக்கி சுகமும் துக்கந்தாம்பா. அதெல்லாம் இன்னிக்கு நினைச்சிப் பாக்கே. சுகம் எது துக்கம் எது? சுகப்பட்டவ நீண்டு நிக்கிறதுமில்ல, துக்கப்பட்டவன் மாஞ்சு போயிடறதுமில்ல. சினிமா பாக்கப் போறான், இப்பல்லா. அதுல சுகம் துக்கம் பாட்டு ஆட்டம் அழுகை எல்லாம் வருது. கடோசில ஒரு முடிப்பப் போட்டு மணியடிச்சிடறாங்க. எந்திரிச்சி வரோம்… அப்பிடித்தா…”

பொன்னாச்சி கண்ணீர் காய்ந்து கோடாக, அசையாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவள் கூந்தல் தோள்களில் வழிந்து தொங்குகிறது. மங்கலான நிலவொளி தவிர வேறு விளக்கு அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.

“நேத்து இந்நேரம் கூட உசிரோட இருந்தா. இப்பிடிப் போயிடுவான்னு கொஞ்சங் கூட நினப்பு இல்ல…” என்று நினைவு கொள்ளும் போது சோகம் தாளாமல் குழி பறிக்கிறது.

“அவளுக்கு ஆட்டம் முடிஞ்சி மணி அடிச்சிட்டா ஆண்டவ. இல்லாட்ட எதுக்கு இந்தக் கூலிக்கிப் போறா?… பொம்பிளயாப் பொறக்கறதே பாவந்தா. கல்லுல நீதா போயி இடிச்சிக்கிற, முள்ளுல நீதா கால வச்சிக் குத்திக்கிற. ஆனால் கல்லு இடிச்சிச்சி, முள்ளு குத்திச்சின்னுதா ஒலவம் பேசும். ஏன்னா, கல்லும் முள்ளும் எதித்திட்டு வராது. பாத்திக்காட்டுல இளவயிசா ஒரு புள்ள வந்திட்டா அந்த காலத்துல யாரும் என்னேனும் செய்யலான்னு இருந்தது. பொறவு என்ன? மருதாம்பா கெட்டவ; புருசன் இருக்கையில விட்டு ஓடிட்டா. அவெ மானின்னெல்லாந்தா பேசுவா. அந்த காலத்துல நாத் தெருவுல போனா காறி உமிஞ்சவங்க உண்டு. சண்டையிலே போராடி கெலிச்சி வந்தாலும் அவெம்மேல எதிராளி அம்புப்பட்ட வடு இல்லாம போவாது. அப்பிடி எத்தினியோ வடு; இன்னிக்கு எல்லா வடுவையும் செமந்திட்டு நானிருக்கே. ஆச்சின்னு வாராக. சோத்துக்குத் தட்டில்லாத புழக்கம். சல்லிப் புழக்கம். தொழிலில்லாத காலத்துல அத்தயும் இத்தயும் வச்சு பத்து இருவதுன்னு வாங்கிட்டுப் போறாவ. கூலிக் காசுல அப்பப்ப கடன் கொண்டு வந்து தாராவ. அவ போராடி செயிக்காமயே போயிட்டா…”

ஆச்சி தகரப் பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிய வெற்றிலையை எடுத்து நீவிவிட்டுக் கிழித்து சுண்ணாம்பு தடவி அரைப்பாக்கையும் அதையும் போட்டுக் கொள்கிறாள்.

ராமசாமி அசையவில்லை. பொன்னாச்சிக்கு அன்று சோலை தன்னைத் துரத்தி வந்தது நினைவில் நெருடுகிறது.

ராமசாமிக்கு அதை அவள் சாடையாகக் கூறினாள். சோலை என்று பெயரும் கூறவில்லை. அவன் அவளிடம் வெறுப்புக் காட்டாமல் இருப்பானோ?

ஆச்சி புகையிலைச் சாற்றை வெளியில் போய் துப்பிவிட்டு வருகிறாள்.

“பொழுது ரெண்டு மணி இருக்கும். வேல வெட்டிக்குப் போவாணாமா? ஒன் ஆத்தாக்குச் சொல்லி அனுப்பினியா ராமசாமி?”

“இல்ல, ஆனால் சொல்லியிருப்பா மாசாணம். கங்காணிட்டியும் சமாளிச்சிக்கும்னு சொன்னே. செத்தப் படுத்து ஒறங்கணும். மூணு நாளா ராவுலதா வேல. ஆனா இப்ப படுத்தாலும் ஒறக்கம் புடிக்குமான்னு தெரியல. ஒரு உப்பளத் தொழிலாளியின் குடும்பம் எப்படி இருக்குங்கறதுக்கு இந்தக் குடும்பமே போதும். முப்பது வருசம் வேல செஞ்சும் ஒரு பிசுக்கும் ஒட்டல. பெரிய போராட்டத்துக்கு நாம கொடி எடுத்துத்தானாகணும். கட்சி கிட்சின்னு ஒண்ணூம் ஒதுங்கக் கூடாது. ஆச்சி நீங்கதா இதுக்கு சப்போர்ட்டா இருக்கணும். ரெண்டு நா வேலயில்லேன்னாக் கூடக் கஞ்சி குடிக்க ஏலாமப் போயிரும். முன்ன இருபத்து மூணு நா ஸ்டைக் பண்ணினாங்க. பனஞ்சோல அளம் இல்ல அப்ப. தாக்குப் புடிக்காம ஆளுவ போயிட்டா. கூலி கொறஞ்சி போச்சி. அப்படி அத்திவாரம் இல்லாத வீடு கட்டக் கூடாது…”

ஆச்சி ஏதும் மறுமொழி கூறவில்லை.

புகையிலைக் காரத்தில் அமிழ்ந்தவளாக மௌனமாக இருக்கிறாள். பிறகு பொன்னாச்சியைக் கிளப்புகிறாள்.

“போட்டி, போயி செத்தப் படுத்து ஒறங்கு. மாமனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கு. வெடிஞ்சி அவிய துட்டிக்கு வருவா. அப்பச்சி என்னேயான்னு பாரு! வெடிஞ்சி மத்தது பேசிக்கலாம்.”

பொன்னாச்சி பெருஞ்சோரத்திலிருந்து எழுந்திருக்கிறாள்.

“நீ இந்நேரம் வீட்டுக்குப் போவாட்டி இப்படியே கெடந்து ஒறங்கு. தலையாணி போர்வை தார…” என்று ராமசாமியிடம் கூறுகிறாள்.

“அதெல்லாந் தேவையில்ல ஆச்சி. ஒறக்கம் வந்தா நின்னிட்டே கூட ஒறங்கிடுவ. இப்ப நீரு பாயி தலையாணி தந்தாலும் உறக்கம் வராது போல இருக்கி…”

“போட்டி… போ, ஏ நிக்கிற.”

பொன்னாச்சி அங்கிருந்து அகலுகிறாள்.

ராமசாமிக்கு ஒரு தலையணை கொண்டு வந்து ஆச்சி கொடுக்கிறாள்.

“ஆத்தாட்ட இந்தப் புள்ளயப் பத்திச் சொல்லியிருக்கியா?”

அவன் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறான். உடனே மறுமொழி வரவில்லை. அம்மாவின் நினைப்பு மாறானது. அவள் உப்பளத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரையும் மருமகளாக்கிக் கொள்ள ஒப்ப மாட்டாள். சண்முகக் கங்காணியின் தங்கச்சி மகள் வாகைக்குளம் ஊரில் இருக்கிறதாம். எட்டுப் பிள்ளைகளுக்கு நடுவே பூத்திருக்கும் அல்லி மலராம்… அவன் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இதற்காக அவனால் தாயிடம் போராட முடியாது. ஏனெனில் அவனுடைய அன்னையின் உலகம் குறுகிய எல்லைகளுடையது. நிமிர்ந்து பார்க்கும் இயல்பு இல்லாதவள் அவள். அளத்தில் இருநூறு ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருப்பதையே அவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை. தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்றுதான் கூறியிருக்கிறான். அவள் நாள் முழுவதும் தன்னுடைய உலகத்திலேயே கனவு காண்கிறாள்.

அவள் மௌனம் சாதிப்பதைக் கண்டு ஆச்சி மீண்டும் வினவுகிறாள்.

“ஏன்ல… ஆத்தாட்ட சொல்லலியா?”

“இல்ல. பொறவு சொல்லிக்கலான்னுதா சொல்லல…”

அவனுடைய குரல் அமுங்கும்படி பொன்னாச்சி ஓடி வருகிறாள்.

“ஆச்சி…? அப்பச்சி… அப்பச்சிய வந்து பாருங்க…! முளிச்சாப்பல கட்டயா இருக்காவ… எப்படியோ…”

சாவு வீடென்று கொளுத்தி வைத்திருக்கும் சிறு விளக்குச் சுடர் பெரிதாக்கப் பட்டிருக்கிறது. அவன் விழித்தபடியே கட்டையாகக் கிடக்கிறான்; அசைவேயில்லை.

அந்தப் பெண்பிள்ளை போன பிறகு… அவனுக்கு… எல்லாமே ஓய்ந்து விட்டது.

பொன்னாச்சியின் ஓல ஒலி வளைவில் எல்லோரையும் திடுக்கிட்டெழச் செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்

6 கருப்பண்ணனும் கிட்டப்பனும் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள். இருவர் கைகளிலும் பலப்பல பொருட்கள்! துணிமணிகள்! உண்மையில் ‘மணி’ இல்லை! தங்க மோதிரங்கள் தான் மணி போன்றது – நாலைந்து – அழகிய நகைக்கடை பெட்டியும் மடிக்குள்

கல்கியின் பார்த்திபன் கனவு – 69கல்கியின் பார்த்திபன் கனவு – 69

அத்தியாயம் 69 உறையூர் சிறைச்சாலை விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44

அத்தியாயம் 44 – கோஷா ஸ்திரீ மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார