Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 11

அத்தியாயம் – 11

 

போட்டோ ஸ்டுடியோவில் புகைப்படத்தை பெரிது படுத்தத் தந்தார்கள். பெரிது படுத்திய படத்தைக்  காத்திருந்து வாங்கிப் பார்த்தான். அந்தக் காரின் எண்கள் அரைகுறையாகத் தெரிந்தது. முழு நம்பர்பிளேட்டை வாசிக்க முடியவில்லை.

 

அதை அப்படியே வாட்ஸ் அப்பில் யாருக்கோ அனுப்பினான்.

 

“இது எந்த அளவுக்கு ப்ரோஜனப்படும்னு தெரியல இருந்தாலும் என் பிரெண்ட் ஒருத்தன் போலிஸ்ல இருக்கான்னு சொன்னேன்ல அவனுக்கு அனுப்புறேன்” என்றான்.

 

பின்னர் இருவரும் நாகலாபுரத்துக்கு சென்றனர். வழியே தெரிந்த காட்டுவழியைக் கண்டு

“நீ  ட்ரெக்கிங் ரூட் காமிக்கக் கூட்டிட்டு போறியா இல்லை என்னை எங்கேயாவது காட்டில் தொலைக்கப் போறியா” என்றான்.

 

“ரெண்டாவது ஐடியா நல்லாருக்கே.. ” என்றவாறு காரை நிறுத்தினாள்.

 

“ஜெய் முடிஞ்சளவு பக்கத்தில் நிறுத்திருக்கேன். உன்னால நடக்க முடியுமா… முடியலைன்னா திரும்பிடலாம்”

 

“முடியும்…” என்றான் தெம்போடு.

 

இருந்தாலும் சில சரிவான பாதைகளில் சற்று நேரம் எடுத்தே ஏறினான்.

 

அவனது மனஉறுதியைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது அஞ்சலிக்கு. சிலமாதங்களுக்கு முன்பு சந்தித்த ஒரு பெண்ணிற்காக  இந்த அளவுக்கு உறுதியோடு உடல் வேதனையும் பொருட்படுத்தாது ஒரு காரியத்தில் இறங்கினானென்றால் அதற்கு பலமான ஒரு காரணம் இருக்க வேண்டும். யாரிவன்? எதற்காக இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்?

 

இயற்கை அன்னையின் தயவால் முதல் முறையை விட அதிகமாய் முள் புதரும், செடி கொடியும் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தன. கடைசியாக தந்தை அவளைப் படம் எடுத்த இடத்தை நினைவு வைத்திருந்து காட்டினாள் அஞ்சலி.

 

“இதுதான்… இந்த இடம்தான்…” அவளிடம் ஒரு நடுக்கம். அதனை அறிந்தவனைப் போலத் தன்னுடன் அணைத்துக் கொண்டான் ஜெய்.

 

“இங்க நடந்த என்னவோ ஒரு விஷயம்தான் எங்கப்பா என்னை விட்டுப் பிரியக் காரணம்” அவளது குரல் தளுதளுத்தது.

 

“நோ மா… நோ அஞ்சலி … தைரியமா இருக்கணும்”

 

“ஜெய் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என் கூடவே இருங்களேன்”

 

அவளைத் தோள் சாய்த்துக் கொண்டவன்

 

“எஸ் டார்லிங்… உன் கூடவே நிழல் மாதிரி இருப்பேன். அதுதான் என் முழு நேர டியூட்டி… நீ குளிக்கும்போது கூட” கண்ணடித்தான்.

 

“சே… ஆம்பளை புத்தி…” என்றவாறு அவனை விட்டு விலகினாள் .

 

“எங்கம்மா சொல்லுவாங்க சனீஸ்வரன் உன் வாயில தாண்டா குடியிருக்கான்னு சொல்லுவாங்க… உண்மையாயிடுச்சே” என்றவாறு அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

 

“அதுதான் பாத்தாச்சுல்ல இப்பக் கிளம்பலாம் வாங்க” என்றாள்.

 

அதற்குள் தனக்கு வந்த மெசேஜை செக் செய்தவன்

 

“படம் அனுப்பினோம்ல, நம்பர் தெளிவில்லாம எதுவும் கண்டுபிடிக்க முடியலையாம். இருந்தாலும் கார் மாடல், கலர் வச்சு குத்து மதிப்பா விவரங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துட்டிருக்காங்களாம்”

 

“அது அவங்க காரோ இல்லை திருட்டுக் காரோ யாருக்குத் தெரியும் ஜெய்” என்றாள் அலுப்பாக.

 

“அந்தக் கார் அந்த இடத்தில் ஒரு மரத்துக்கு அடியில் நின்னது. அது வழக்கமா மற்ற வாகனங்கள் நிக்குற இடமா”

 

“இல்லை… ஏன்  கேக்குறீங்க”

 

“சரி அந்த இடத்துக்குப் போகலாம் வா…” அந்த இடத்துக்கு சென்று தடம் கிடைக்கிறதா என்று பார்த்தான். ஒரு காலி லேஸ் சிப்ஸ் பாக்கெட், பெப்சி பாட்டில் தவிர சில சிகிரெட் துண்டுகள். அந்தத் துண்டுகளை ஜாக்கிரதையாக அவன் பத்திரப்படுத்திய விதம் கண்டு மறுபடியும் எரிச்சலானாள் அஞ்சலி.

 

“டிஎன்ஏ டெஸ்ட் பண்ணவா”

 

தலையாட்டினான் ஜெய்.

 

“ஓ மை காட்… இந்த மாதிரி எங்கப்பாவோட கொலையைத் துப்புத் துலக்க வந்த டிபார்ட்மெண்ட்டில்தான் செஞ்ச நினைவு. அதே மாதிரியே நீயும் செய்ற… இதுக்கு என்ன காரணம் சொல்லப் போற?”

 

“என் பிரென்ட் கிடைக்குற தடையம் எல்லாத்தையும் பத்திரமா எடுத்துட்டு வர சொன்னான்”

“நம்பித் தொலைக்கிறேன்… வேற வழி”

 

நாகலாபுரம் ட்ரிப் முடிந்ததும் வழியில் ஓரிடத்தில் உணவு உண்டுவிட்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தபோது மாலை நான்கு மணியாகிவிட்டது.

 

“கொஞ்சம் ரெஸ்ட் எடு… நான் டின்னர் செய்றேன்”

 

“எனக்கு டயர்டா இல்லை. நீ வரும்போது ஏதோ வாய்ஸ் ரெக்கார்டர் பத்தி சொன்னியே. அதைக் காமி”

 

இரவு அவளது தந்தையின் குரலில் பதிவு செய்துவைத்திருந்ததை சொன்னாள்.

 

“அஞ்சலி… இதை முன்னாடியே சொல்லிருக்க வேண்டாமா… இப்படியா பொறுப்பில்லாமல் இருக்குறது” என்று சிடுசிடுத்த ஜெய் அவளுக்குப் புதுசாகத் தெரிந்தான்.

 

“அப்படி என்ன பெரிய தப்பு பண்ணேன்…” என்றாள் நம்பமுடியாது.

 

“இல்லை ஒரு வேளை இன்னைக்குப் போன இடத்தைப் பத்தி துப்பு ஏதாவது இருந்தால் உபயோகமா இருந்திருக்குமே. இல்லைன்னா இன்னொரு தடவை போகணும்” என்றான் சுதாரித்துக் கொண்டதற்கு அடையாளமாய்.

 

அவளை மேலும் யோசிக்க விடாது “சரி சரி சீக்கிரம் எடுத்துட்டு வா” என்று அவசரப் படுத்தினான்.

 

அவள் எடுத்து வந்ததும் டீ பருகியபடியே மறுபடியும் முதலிலிருந்து கேட்டார்கள். அதனைக் கணினிக்கு  மாற்றி சத்தத்தை  அதிகமாக்கிக் கேட்டபோது சில இடங்களில் இடறியது.

 

“இந்த ரெக்கார்டார்ல நடுவில் நடுவில் உங்கப்பாவோட குரலில் சில வார்த்தைகள் பதிவாயிருக்கு. அதாவது ஏற்கனவே இருந்ததை அழிச்சுட்டு அதுக்கு மேல இந்த வார்த்தைகளை அவர் பதிவுசெஞ்சதுக்குக் காரணம் அப்பத்தான் நம்ம அந்த வார்த்தைகளில் தனி கவனம் செலுத்துவோம்”

 

“நானும் அப்படித்தான் நினைச்சேன். சில வார்த்தைகளை நோட் செய்தும் வச்சேன்”

 

“நீ நோட் செய்ததைத் தனியா எழுது. நான் என் கவனத்தில் படுறதை எழுதுறேன். கடைசியில் ரெண்டு பேரும் சரி பார்க்கலாம்”

 

கடைசியில் இருவரும் சரி பார்த்தபோது  ஒரே வார்த்தைகளை எழுதியிருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

‘தவளை இளவரசி’

‘நிலாக் குதிரை’

‘விசித்திரக் குள்ளன்’

‘மாயச்  சுவர்’

‘மாஜிக் மாலினி’

‘கடல் கிழவன்’

‘நீலப் போர்வை’ என்று ஐந்து  தலைப்புகளுக்கு மேல் தொடர்ந்தது.

 

இதெல்லாம் என்னது… ஏதோ அம்புலிமாமா கதை  மாதிரி இருக்கு”

பளிச்சென மின்னல் வெட்டியது அஞ்சலிக்கு. வேகமாய் லைப்ரரிக்கு ஓடியவளைப் பின் தொடர்ந்தான் ஜெய்.

 

அதன் அருகே இருந்த அறை  ஒன்றைத் திறந்து அங்கிருந்த பீரோவிலிருக்கும் பழைய புத்தகங்களைக் காட்டினாள் அஞ்சலி.

 

“பாத்திங்களா.. இதெல்லாம் என் சின்ன வயசில் அப்பா படிக்க வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்”

 

மங்கலாய் இருந்த விளக்கொளியில் படித்தான் “வாண்டுமாமா… அவர் எழுதின புத்தகத் தலைப்புக்கள்”

 

“ஆமாம் ஜெய்…. எனக்கு அவர் புக்ன்னா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசில் நிறைய அவரோட புத்தகங்களைப் படிப்பேன். அப்பறம் பழைய புத்தகங்களை இந்த பீரோவுக்கு மாத்திட்டு புதுசா வாங்கின புத்தகங்களை லைப்ரரில அடுக்கி வச்சுடுவோம்”

 

“அஞ்சலி, இந்தப் புத்தகங்களை பீரோவுக்கு மாத்தி எத்தனை வருஷம் இருக்கும்”

 

“ஒரு பத்து வருஷம்”

 

“யாராவது இந்த புத்தக அலமாரியை சுத்தம் செய்வாங்களா?”

 

“இல்லை… வரவேற்பறையில் இருக்குறதைத்தான் சுத்தம் செய்ற வழக்கம்”

 

“நடுவில் சில புத்தகங்களை யாரோ எடுத்திருக்காங்க. அதனாலதான் அதில் படிஞ்சிருக்கும் தூசி குறைவா இருக்கு” அவன் காட்டிய புத்தகங்களில் தூசி குறைவாக இருந்தது.

 

“தலைப்பு  ‘கடல் கிழவன்’,  ‘விசித்திரக் குள்ளன்’…” என்று ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சேர்ந்து அந்தப் புத்தகங்களை மட்டும் எடுத்து வந்தார்கள்.

 

புத்தக மேஜையில் வைத்து விளக்கு  வெளிச்சத்தில் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு வரியாகப் புரட்டிவிட்டாள். ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

 

“என்ன ஜெய் ஒண்ணும் புரியல”

 

மற்றொரு புத்தகத்தை எடுத்தவன் மெக்னிபையிங் கண்ணாடி வழியாகப் பார்த்தான்

 

“அஞ்சலி இங்க பாரு”

 

அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பென்சிலால் ஒரு எண் புத்தக முன் அட்டையில் எழுதப்பட்டிருந்தது.

 

“ஆமாம் நாலுன்னு எழுத்திற்கு”, அதே போல மற்ற புத்தகங்களிலும் நம்பர்கள் இருந்தன. அந்த வரிசைப்படி அடுக்கினார்கள்.

மறுபடியும் அதே புத்தகங்களை கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடினார்கள். மிகக் கவனமாகப் பார்த்தால் மட்டுமே தெரியும் வண்ணம் மிக லேசாக ஒரு எண் பென்சிலால் எழுதப் பட்டிருந்தது.

 

பரபரவென மற்ற புத்தகங்களிலிலும் அதே போன்ற எண்ணைத் தேடினார்கள்.

 

“மொத்தம்  எட்டு  புக்ஸ். அதுக்குள்ள ரகசிய எண்கள். ஆனால் புக் கடைசி நம்பர் பதினாறு. அப்படின்னா நடுவில் எட்டு  நம்பர்கள் விட்டுப் போகுது. அது இங்கிருக்கும்” தீவிரமான யோசனையுடன் ஜெய் கேட்க, அதே மாதிரி எண்களைப் பார்த்த நினைவு அஞ்சலிக்கு.

 

“வெய்ட் பண்ணுங்க ” வேகமாய் தந்தையின் அறைக்கு ஓடிச் சென்று அங்கிருந்த புகைப்படங்களை எடுத்து வந்தாள்.

 

“இதில் சில படங்களில்  நம்பர் இருக்கு”

 

புத்தகங்களில் காணப்படாத நம்பர்கள் போட்டோவில் இருந்தன.

வெகு வேகமாக புதிர் ஒன்றை விடுவிப்பது போல போட்டோவில் இருந்த நம்பர்களுடன் பொருத்தினார்கள்.கச்சிதமாகப் பொருந்தியது. ஆனாலும் ஐந்து புகைப்படங்கள் மட்டுமே இருந்தன.

 

“இன்னும் குறைஞ்சது மூணு நம்பராவது கண்டுபிடிக்கணும்”

 

இதைக் கண்டுபிடித்ததே எதையோ சாதித்த மாதிரி இருந்தது, அவ்வளவு நேரம் போனதே தெரியாமல் வேலையில் ஆழ்ந்திருந்த இருவருக்கும் அப்பொழுதுதான் பசி தெரிந்தது.

 

“இதை செலிப்ரேட் பண்ண ஒரு நல்ல டின்னர் சாப்பிட்டுட்டு வரலாம்” இருவரும் கிளம்பினர்.

 

உணவு உண்டுவிட்டு வரும் வழியில் சொன்னான்.

 

“சாப்பாடுன்னா இது சாப்பாடு. நவீனை வந்து சாப்பிட்டு போக சொல்லு”

 

அவளும் ஒத்துக் கொண்டாள் “அவன் அத்தனை மோசமில்லை. இருந்தாலும் சில விஷயங்களில் இன்னமும் இம்ப்ரூவ் பண்ணலாம்”

 

“சென்னையில் ட்ரைவ் பண்ணறது கொஞ்சம் கஷ்டம்தான் இல்ல”

“இல்லையே… என்றவள் நடுவே குறுக்கிட்டு ஓடிய ஒரு பெண்ணுக்காக பிரேக் அடித்தாள்.

“எப்போதும் கொஞ்சம் அலெர்ட்டா இருக்கணும். இந்த மாதிரி குறுக்க வரும் ஆட்களை எதிர்பார்த்துட்டே ஓட்டணும். அவ்வளவுதான்” என்றாள்

 

“இவ்வளவு அலெர்ட்டா என்னால இருக்க முடியாதுப்பா… ” என்றான் சிரித்தபடி.

 

வழியில் கிஷோர் ஜவல்லரி விளம்பரம் கண்ணில் பட “கிஷோரை எவ்வளவு நாளா உனக்குத் தெரியும்” வாய் தவறி வார்த்தைகள் அவனறியாமல் விழுந்துவிட்டது. அவள் பிரேக் அடித்து கிரீச்சிட்டு நிற்கவும் அவனது தவறை உணர்ந்தான்.

 

“அவுட்…”

 

“அஞ்சலி”

 

“கெட்  அவுட் ஜெய்…”

 

“அஞ்சலி நான் சொல்றதை கொஞ்சம் கேளு”

 

“ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்… இதுவரை கிஷோர்னு பெயரைக் கூட உன்கிட்ட சொன்னதில்லை. ஆனால் என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுட்டு வந்திருக்க. சோ எதோ தகவல் எதிர்பார்த்துதான் என் பின்னாடி சுத்திருக்க.

 

உனக்கு வேணும்னுற தகவல் கிடைச்சாச்சுல்ல… கிளம்பி போயிட்டே இரு. வீட்டில இறங்கிட்டு உன் காரில் பெட்டி படுக்கையை போட்டு வைக்கிறேன். வந்து பொறுக்கிட்டு போ…

 

இனிமே உன்னை என் ரெஸ்டாரண்ட்லயோ இல்ல என் கண் முன்னாடியோ பார்க்கக் கூடாது”

 

அவனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு புழுதியை முகத்தில் வாரி இறைத்துவிட்டு அஞ்சலியை சுமந்தபடி அவனது கார் ரோட்டில் பறந்தது.

 

தவறை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அந்த ராத்திரியில் நடுத்தெருவில் திகைத்து போய் நின்றான் ஜெய்.

5 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: