Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – இறுதிப் பகுதி

பாகம் – 58

ந்து ஆண்டுகளுக்கு பிறகு, ஊர் திருவிழாவிற்காக ஆரவ், சந்தனா இவர்களின் மூன்று வயது இளவரசி ஆராதனாவுடன் நெல்லித்துரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கார் வீட்டை அடைந்ததும், பார்பியின் தம்பி தங்கைகள் ஓடி வந்து தலைமேல் தாங்கினார்கள் அந்த குட்டி இளவரசியை.

 

லக்கேஜ் எடுத்து கொண்டிருந்த பார்பி, “எவனாவது எனக்கு ஹெல்ப் பண்றானான்னு பாரு…” என்று கொஞ்சம் சத்தமாகவே முணங்கினாள்.

 

கார்த்தி, “உனக்கு உங்க மாமா ஹெல்ப் பண்ணுவாருக்கா” என்று ஆரவ்வை குறி வைத்து தாக்கினான்.

 

ஆரவ், “வந்த உடனே ஆரம்பிச்சுட்டயா கொழுப்பு கூடிப்போச்சுடா உனக்கு, பெரிய எம்.என்.சி ல வேலை பாக்குறன்னு ஓவரா ஆடாதடா…”

 

ஶ்ரீ, “ஆமா மாமா, காசு கைக்கு வந்ததில இருந்து இவன் ரொம்ப பண்றான். பைனல் இயர் புராஜெக்ட்க்கு எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி குடுக்க சொல்லி ரொம்ப நாளா கேக்குறேன், வாங்கியே தர மாட்டிக்கிறான் மாமா.”

 

ஆரவ், “ஆர்ட்ஸ் குரூப் புராஜெக்ட்க்கு எதுக்குடா லேப்டாப்பு? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லனும் தம்பி. நாங்கள்ல்லாம் உன் வயச தாண்டித்தான வந்திருப்போம், எங்களுக்கு தெரியாதா நீ ஏன் கேக்குறன்னு…” என பேசி சிரித்தபடி உள் வந்தவர்களுக்கு வித்யா ஜூஸ் கெண்டு வந்து தர, பின்னாலேயே வாக்கரில் ஆடி ஓடியபடி ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தான் அவளின் ஒரு வயது மகன்.

 

ஆரவ், “உன் ஹஸ்பெண்ட் வரலயாம்மா?”

 

வித்யா, “இல்ல மாமா, இயர் என்டிங். நிறையா வொர்க் இருக்குதாம். என்ன முன்னால போ, நான் பின்னால வர்றேன்னு டெல்லில இருந்து ப்ளைட்ல அனுப்பிட்டாரு.”

 

பார்பி, “செல்ல குட்டி, வாங்க.. வாங்க.. இங்க பாரு பெரியம்மா உனக்காக என்னெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்னு…” என லக்கேஜை பிரித்து எடுத்து தந்து கொண்டிருந்தாள்.

 

வீட்டு ஆட்களுக்காக பார்த்து பார்த்து வாங்கியதெல்லாம் நான்கு பெரிய லக்கேஜ் நிறைய கொண்டு வந்திருந்தவளை கண்டு மல்லிகா சித்தி, “நீ இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லடி, படிக்கிற காலத்தில பை நிறைய ஸ்னாக்ஸ் தூக்கிட்டு வந்த மாதிரியே இப்பவும் லக்கேஜை தூக்கிட்டு வந்து நிக்கிறியே…. இருந்தாலும் நீ மாப்பிளைக்கு இவ்ளோ செலவு இழுத்து விடக்கூடாது.”

 

ஆரவ், “இது என்னோட காசில்ல, இதெல்லாம் அவளே சொந்தமா சம்பாதிச்சு வாங்கினது…” என்றதும் பெருமையாய் காலரை தூக்கி விட்டு கொண்ட பார்பி, தன் சித்தியிடம், “என்னை யாருன்னு நினைச்சீங்க? நானும் ஆரவ்க்கு உதவியா ஒரு வர்ஷமா கொஞ்சம் பிஸினஸ்லாம் கவனிச்சுக்கிறேன் தெரியுமா” என்றாள்.

 

நந்தினி, “பரவாயில்லையே உனக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா…” என திருஷ்டி கழித்து பாராட்ட, ஆரவ் கஷ்டப்பட்டு தன் சிரிப்பை ஜூஸ் கிளாஸினுள் மறைத்தான். பின்னே, ஆரம்ப நாட்களில் ஸ்கூல் போக அடம்பிடிக்கும் குழந்தையாய் தினமும் காலை ஆபீஸ் போகமாட்டேன் என அவனை என்ன பாடு படுத்தினாள். படிக்க சொல்லி சில முக்கிய டாகுமென்ட்ஸ்ஸை தந்தால், அதை தலைக்கு வைத்து உறங்கினாள்.

 

‘எல்லாரையும் பார்த்து சிரிக்க கூடாது… வயசில பெரியவங்களா இருந்தாலும் ஆர்டர் போட்டு வேலை வாங்க கத்துக்கனும்… மனசில இருக்குறத முகத்தில காட்டாம பேச பழகு…’ இதெல்லாம் அவன் தினமும் அவளுக்கு சொல்லும் சுப்ரபாதம். இருந்தும் அவளிடம் விளையாட்டுதனம் குறைந்த பாடில்லை.

 

ஒருநாள் ஆரவ், “பார்பி நீ என்னோட வேலையில பாதி செஞ்சா தான், என்னால பாப்பாவுக்கு உனக்கும் டைம் ஸ்பென்ட் பண்ண முடியும். எல்லாத்தையும் நானே பாக்க கஷ்டமா இருக்குடா” என்றதில் இருந்து, ஒரு தென்றல் புயலாகி வருதேங்கிற ரேஞ்சுக்கு பொறுப்பாய் மாறி விட்டாள்.

 

இப்போது சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் பார்பி மறைந்து பழைய சந்தனாவாக உருமாறி இருக்கிறாள். ஆரவ் சிந்தனையை கலைக்கும் விதமாக, வெளியே ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. ஊருக்கு முன் ஆராதனா, “சித்தி வந்தாத்து…” என மழலையில் கத்தி கொண்டே துள்ளி குதித்து வெளியே ஓட, ஜனனி தன் ஆசை மகளுக்காய் கை நிறைய ஐஸ்கிரீம் வாங்கி வந்திருந்தாள். எனக்குத்தான் குட்டிம்மா பெருசு உனக்கு சிறுசு என ஆராதனாவுடன் சண்டை பிடித்தபடி உள்ளே வந்தவள் ஆரவ்வை கண்டதும், “ஹாய் மாமா, எப்போ வந்தீங்க…” என்று சின்னவளை இறக்கி விட்டாள்.

 

ஆரவ், “இப்போத்தான் நாங்க வந்து இறங்குறோம் ஜனனி… உனக்கு காலேஜ் எல்லாம் எப்டி போச்சு?”

 

ஜனனி, “செம்ம ஜாலியா போச்சு மாமா, இன்னிக்கோட இந்த பைனல் செமஸ்டரும் முடிஞ்சது” என்று பேக்கை தூக்கி எறிந்ததிலேயே அவள் படிப்பின் லட்சணம் அவனுக்கு நன்றாக புரிந்தது.

 

மாலை நேரம் வீட்டின் பின்புறம் பப்லுவுடன் சேர்ந்து ஆரவ்வும் ஆராதனாவும் பால் விளையாடி கொண்டு இருக்க, கிச்சனில் பார்பி அவர்கள் இருவருக்கும் பன்னீர் சான்ட்விச் தயாரித்து கொண்டிருந்தாள்.

 

டீ போட கிச்சனுக்குள் வந்த மல்லிகா சித்தி பார்பியிடம், “என்னடி பண்ற…”

 

பார்பி, “சான்ட்விச் பண்றேன் சித்தி, சின்னதுக்கு இதுதான் ரொம்ப பிடிக்கும்.”

 

மல்லிகா சித்தி, “சந்தனா… நான் ஒண்ணு சொல்லுவேன் கேப்பியா? ஆராதனா பாப்பா இப்பவே நல்லா வளந்துட்டா, காலா காலத்துல இன்னொன்ன பெத்துக்கோடி.”

 

இந்த வார்த்தைகள் சமீப காலமாய் அவளை அடிக்கடி விரட்டி வருகிறது. என்ன செய்ய, பிள்ளை வேண்டுமெனில், அவள் என்ன குக்கரில் வைத்தா அவித்து எடுக்க முடியும்? அவன் வந்தால்தானே அவளும் ஏதாவது செய்வதற்கு… இதே போலத்தான் முதல் குழந்தைக்கும் பாடாய் படுத்தினான்.

 

கல்யாணம் ஆன புதிதில் பார்பி, “எனக்கும் ஒரு பாப்பா வேணும் ஆரவ். எல்லாரும் பாப்பா வச்சிருக்காங்க, எனக்கும் ஆசையா இருக்கு…”

 

“இப்ப வேண்டாம்டா, ஒரு ஒன் இயர் போகட்டும். அதுக்குள்ள நீயும் இன்னும் கொஞ்சம் ஹெல்த் இம்ப்ரூவ் பண்ணிக்கோ, அப்புறம் நாம கண்டிப்பா வாங்கிக்கலாம்…”

 

“எனக்கு ஒண்ணுமில்ல, நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு இப்பவே பாப்பா வேணும்” என்றவளை பேசி பேசியே ஏமாற்றினான். அவள் எத்தனை கெஞ்சினாலும் அவன் விட்டு கொடுக்காததால், முழுதாய் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அவள் ஆசை ஈடேறியது.

 

அதிலாவது ஒழுங்காய் இருந்தாளா? சேதி தெரிந்த இரண்டாவது மாதம் முழுவதும் செல்லம் கொஞ்சி தீர்த்தாள். மூன்றாவது மாதம் வாந்தி வர ஆரம்பித்தது. அவள் பால் குடித்தாலும் வாந்தி, பாதி இட்லி தின்றாலும் வாந்தி, நள்ளிரவிலும் வாந்தி, நண்பகலிலும் வாந்தி, சிலசமயம் அதோடு தலை சுற்றலும் வேறு சேர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் ‘ஆரவ் தொண்டை எல்லாம் வலிக்குது… மூக்கு எரியுது… ரொம்ப கஷ்டமா இருக்குது… ப்ளீஸ் எனக்கு சாப்பாடே வேணாம், சாப்பாட்ட வாயில வச்சாலே உமட்டுது…’ என அழுது புரள ஆரவ் முற்றிலும் உடைந்து போனான்.

 

ஐந்தாவது மாதம் வயிறு மேடேற மீண்டும் செல்லம் கொஞ்ச தொடங்கினாள். ஆறாவது மாதம் பாப்பாக்கு பேரு ஜெர்ரினு என்று வைத்து கொண்டாள், காரணம் வயிறு முழுக்க உருண்டு புரண்டு உருட்டிட்டு இருக்குதாம். ஆரவ் கைகள் தொட்டு பார்க்கும் நேரத்தில், தானும் தந்தையின் கரத்தை தொட்டு விடும் ஆசையில் உள்ளுக்குள் நன்றாக உருண்டது குழந்தை. ஏழாவது மாதம் வளைகாப்பில் பிறந்த வீட்டு சொந்தங்கள் மும்பை வந்து தங்கிய சந்தோஷத்தில் அவள் முகம் இன்னும் மெருகேறிட, எட்டாவது மாதம் பிரச்சினை பண்ண ஆரம்பித்தாள்.

 

‘மாட்டேன்… மாட்டேன்… மாட்டேன்… எனக்கு டெலிவரிய பத்தி நினச்சாலே பயம்மா இருக்கு ஆரவ். உன் புள்ளதான எடுத்து உன வயித்தில வச்சுக்கோ…’ எனக்கு தூக்கமே வர மாட்டிக்குது ஆரவ் – இது மிட் நைட் டயலாக். எனக்கு தூக்கம் தூக்கமா வருது ஆரவ் – இது மார்னிங் டயலாக். எனக்கென்னமோ என் உடம்பு இன்னும் சரி ஆகலன்னு தோணுது ஆரவ். பாரேன் என் கால் நகம் மட்டும் சரியா வளரவே மாட்டிக்குது. அதான் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்குது – அடிப்பாவி இதையே இப்பத்தான் கவனிக்கிறியா – இது அவன் டயலாக்.

 

வடி தண்ணீரில் வெண்ணெய், இரவில் கொதிக்க கொதிக்க சுடு தண்ணீர் குளியல், வாய்க்கு சகிக்காத முருங்கை கீரை கூட்டு என அத்தனை கஷ்டங்களையும் இரவில் அவனிடம் சொல்லி அழுதாள். நாட்கள் நெருங்க நெருங்க பயந்து மிரளும் அவளை விட்டு அவன் இம்மியும் நகராதிருந்தான். திடீரென நள்ளிரவில் வலி வர அவசர அவசரமாக ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தார்கள்.

 

டாக்டர், “பனி குடம் உடைஞ்சிடுச்சு, இன்னும் நல்லா வலி வந்தா தான் டெலிவரி ஆகும். இப்போதைக்கு குளுக்கோஸ் ஏத்த செல்றேன்…”

 

பார்பி, “ஆரவ்… வேண்டாம் ப்ளீஸ் ஆரவ்… என்ன இங்க இருந்து கூட்டிட்டு போயிடுடா… பயம்மா இருக்கு ஆரவ்… ஊசி எல்லாம் வேண்டாம்… பயம்மா இருக்குதுடா….” அவள் கதற கதற கைகளில் டிரிப்ஸ் ஏற்றும் ஊசி சொருக பட்டது. அவனால் என்ன செய்ய முடியும், எங்கே கூட்டிச்செல்ல முடியும்?

 

டாக்டர், “ரொம்ப டைம் ஆயிடுச்சு, இதுக்கு மேல வெய்ட் பண்ணி பாக்க கூடாது, சிசேரியன் பண்ணிடலாமா?”

 

பார்பி, “ஆரவ் என் கூடவே இரு… ப்ளீஸ் என்ன விட்டு எங்கயும் போகாத…” என்று சொல்லி கொண்டே மயங்கிவிட, ஆரவ் வழியும் தன் கண்ணீரை துடைக்க தனியாக ஒரு இடம் தேடினான். சில நிமிடங்களிலேயே டவலில் சுற்றப்பட்ட ஒரு அழகான ரோஜா நிற புதையல் அவன் கைகளில் தரப்பட்டது. அழுகையும் சிரிப்பும் ஆண்களிடம் இணைந்து தோன்றிடும் தருணம் சிலதே, அதில் முக்கியமானது இது.

 

கண் விழித்த பின்னரும் கூட பார்பி, “முதுகு ரொம்ப வலிக்குது ஆரவ், கால அசைக்கவே முடியல…” என புலம்பிட ஆரவ் முகம் வாடிப்போனான்.

 

மல்லிகா சித்தி, “அடியே நீ மட்டும் தான் புள்ள பெத்திருக்கியா? ஊரு உலகத்தில யாரும் பெத்ததே இல்லியா. இப்டி அந்த மனுஷன போட்டு படுத்துறியேடி. இப்ப  அடுத்த ரூம்க்கு போய் அழுதுட்டு இருக்கு அந்த தம்பி.” என வாட்டி எடுத்தபின் அவள் வாயை மூடிக்கொண்டாள்.

 

அவள் சொல்லவில்லை எனிலும் அவனுக்கு தெரியாதா? அடுத்த நான்கு நாட்கள் மற்றவர்கள் உதவி இன்றி நடக்க கூட முடியாமல் திணறினாள். வீட்டிற்கு வந்த பிறகும் எத்தனை துன்பங்கள் அவளுக்கு, பத்திய சாப்பாடு, உறக்கமில்லா இரவுகள் என உருக்குலைந்து போனாள். ஏதோ சில மருந்துகளை அரைத்து செய்த லேகியம் அவள் அழுதழுது தின்றாள். அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்க அவனும் அதை தின்ன முயன்றதில் வாந்தியே வந்துவிட்டது. அடிக்கடி குழந்தைக்கு முடியாமல் போக அவளையே அதுவும் குறிவைத்து தாக்கியதில் இந்த ஜென்மத்திறுகு இது ஒன்றே போதும் என முடிவு செய்து விட்டான். அவள் என்ன முயன்றும் அவன் மனதை கரைக்க முடியவில்லை.

 

“அம்மா… எவ்ளோ நேரமா சான்ட்விச் செய்வீங்க?” ஆராதனாதான், தன் தந்தையின் செல்வ சீமாட்டி, இப்போது வளர்ந்துவிட்டு அவனைப்போலே இடுப்பில் கைவைத்தபடி நின்று கொண்டு பார்பியிடம் அதிகாரம் செய்கிறாள். இரவு உணவின் போதும் முதல் பேத்தியாகிய ஆராதனாவை அத்தனை பேரும் தாங்கு தாங்கென்று தாங்கிட, முக்கிய ஆளாய் நடத்த பட்டதில் அத்தனை பெருமை அவளுக்கு.

 

அடுத்தநாள் காலை, சந்தன மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து விழா இனிதே தொடங்கிட, இடையில் யஷ்மித் வந்து இணைந்து கொண்டான். அவன் எப்படி வந்தான், எங்கிருந்து வந்தான், ஏன் வந்தான் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. நேரடியாக கோவிலுக்கு வந்தவனை விரட்ட முடியாதல்லவா. அவனையும் சேர்த்து கொண்டு பரிவட்டம் கட்டும் வைபவம் தொடங்கியது.

 

பூசாரி, “பரிவட்டம் கட்ட போறவரோட பேரு, ராசி, குலம் எல்லாம் சொல்லுங்க.”

 

தாத்தா, “ஆரவ், சிவ கோத்திரம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். என் மூத்த பொண்ணு வைதேகியோட புள்ள”

 

ஆமால்ல, சொல்ல மறந்துட்டேன் நம்ம ஆராவமுதன் @ அமுதன் தாத்தாக்கு மொத்தம் நாலு பிள்ளைங்க.

 

(முற்றும்)

 

 

3 Comments »

Leave a Reply

%d bloggers like this: