Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது.

“கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப் பாரும்! எந்திரிம்…”

பொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற் போல் தூக்கி வாரிப் போடுகிறது.

ஐயோ… பச்சை… பச்சையா? பச்சை வரல…? அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரசு, நல்லகண்ணு, மருது எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை.

“பச்சை எங்க சின்னம்மா?…”

“எங்கயா? அதா குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு! அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா! தண்ணி கொண்டாரானாம் டீக்க்டய்க்கு! பொட்டக்கண்ண வச்சிட்டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது? அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா!… போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்?…”

உரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும் கை ஓட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின்று இந்தச் சண்டையை ரசிக்கிறான்.

பாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் தண்ணீருக்குப் போகிறாள்.

நேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தான் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்குவானா?

“சின்னம்மா, ஒங்கக்கு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய? அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே?…” என்று ஆற்றாமையுடன் பொன்னாச்சி வருந்துகிறாள்.

“பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும். நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு?”

“அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்க மாட்டா. டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடுத?”

சின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள்.

“நீரு பேசாதீம்…! எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ மம்முவத்தைக் கேப்பீரோ! பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும்! இல்லாட்டி இங்ஙன கொலவுழுகும்!” என்று அனல் கக்குகிறாள்.

அந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக்களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர்களுக்கு. அங்கு இந்தத் ‘தண்ணி’யும் கிடைக்குமோ?

இவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடுகளின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடையலாமென்று பாஞ்சாலி சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக் கடன் கழிக்கச் செல்வான்.

இப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்பனை விரட்டுகிறாள்.

பொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

சென்ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்ததென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து விடுவார்களாம். மாமி அதனால் தான் கல்லூரியில் போலீசென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டி வரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ? ‘நகக்கண்களில் ஊசியேற்றல், முதுகின் மேலேறித் துவைத்தல்…’

இதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவியாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள்.

சின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், “நீ இன்னக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் தந்திட்டுப் போற; சாங்காலமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. இப்ப ரெண்டு சுள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு” என்று கூறி விட்டுப் போகிறாள்.

பொன்னாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை.

சின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள்… பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடையோரம் நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையும் துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் வீடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறான் என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா? என்ன சொல்வது?

சைகிள் விர்ரென்று போய் விட்டது.

“ஏட்டி, காலம வாசல்ல வந்து நிக்கே? சோலி யொண்ணுமில்ல?” என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள்.

“இல்லாச்சி. தம்பிய… தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம போனவ…”

“அதுக்கென்ன… டீ?”

இந்தக் கேள்வி அவளைச் சுருட்டிப் போடுகிறது. “இதென்ன புதுக் கதையா? இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு?”

“நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது…”

“வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்?”

கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன பொன்னாச்சியின் கன்னங்களில்.

“நா யாரிட்டப் போயிச் சொல்லுவ? சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா!”

“பொறவு நீ ஏ அழுது மாயுறே? அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும்! நீ உள்ள போயி சோலியப் பாருடீ!” என்று ஆச்சி அதட்டுகிறாள்.

மனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பது போல் இருக்கிறது. அந்தத் தம்பி ஒரு நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான். நினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில் கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டினாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை ‘அழுவாத தம்பி’ என்று தேற்றியிருக்கிறாள். முனிசீஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமியறியாமல் கொடுப்பாள்.

அவனைப் போலீஸ் அடிக்கையில் ‘அக்கா, அக்கா’ என்று கத்துவானோ?…

வாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலையில் பிசாசுகள் போல் நிற்கும் தலை விரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் “பசிக்கிதக்கா” என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான்.

பானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள்.

முதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக் கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்லகண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள்.

சரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, “அக்கா சடை போடுறியா?” என்று கேட்கிறது.

“நீ வேலக்கிப் போவலியாக்கா?… எனக்கு ரெட்ட சடை போடறியா?” என்று பானையைக் கழுவிக் கொண்டு பாஞ்சாலி கேட்கிறது.

சரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் பாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது.

“பச்சை ஒங்க கூட வரலியா டீ…?”

“ஊஹும், அண்ணனக் காங்கலக்கா. அப்பச்சி கூட எங்களைப் பந்தல்ல குந்த வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. நாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தூங்கிப் போயிட்டாவ. செவந்தனி மாமா மாமி வந்து “ஒங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு” எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா. போலீசு வந்து ‘சரக்கு’க் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்ன கூட, அந்தா மாரியம்மா – பெரியாச்சி வீட்டுக்கு வருமே, அவ பய்யன் சுப்பிரமணியக் கூட போலீசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ இருநூறு ரூவா, வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப சுப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட்டா?” என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை எடுத்துரைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகள் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன.

இருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள்! அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள்? கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது.

அத்துடன் ஓடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசீஃப் ஐயா நல்லவர்.

இங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள்.

பிறகு… பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே ஆதரவான ஆளும் இல்லையென்றான பின் எப்படிப் போவாள்?

எனவே மாமன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி… அங்கே… அங்கே தான் இருக்கவேண்டும்.

பொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென்று நிச்சயம் செய்து கொள்கிறாள்.

ஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை.

நிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய்கிறான்.

அப்பன் வரவில்லை. பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச் சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது.

“பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க. சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி. பதனமாப் பாத்துக்க? மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா?”

அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவள் விடுவிடென்று ஓட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன.

புரும்புரும் என்று தெருவை அடைத்துக் கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள், சாக்கடை ஓரத்துத் தேநீர் கடைகளில் கறுத்த பனியனும், பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப்பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக் கொண்டு உதட்டில் வைத்து அருந்தும் தொழிலாளர், லாரியாட்கள், சிவந்த கண்கள், கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பனியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது. தம்பி இங்கெல்லாம் இல்லை.

அவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா? அவன் போலீசுக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம்.

மாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம் – பசுமை… மாமி ஏசினாலும் உறைக்காது… இருநூறு ரூபாய்… அம்மா…!

“ஏத்தா? எதிரே லாரி தெரியாம ஓடுற?”

அவளை அந்த முடுக்குச் சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்குகிறாள்.

சாக்கடை ஓரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள் – குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான்.

ஒரு பெண் அவனிடம் அழுது முறையிட்டுக் கெஞ்சுகிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள்.

“ஆசுபத்திரில புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா – நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த. நாலு ரூவாக் கூலி குறைச்சிருக்கிய. நா என்ன சேவ… இது நாயமா கங்காணி?…” அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை. மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்…

“ராவும் பவலுமா ஓடி வந்த. மூணு நாளாச்சி புள்ளயக் கவனிச்சி சோறு வச்சி…”

இவர்கள் ‘வித்து முடை’க்காரர்கள் என்று பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டைகளில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது “லாரி வந்திருக்கு!” என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டு விட்டு ஓடவேண்டும்.

இவளும் அப்படித்தான் ஓடி வந்திருக்கிறாள். ஆனாலும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா? ஏன் குறைத்தாள்? அவள்…

அவளுடைய ஓலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ளவில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஓலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலிகளைப் பார்த்த வண்ணம் அவர்கள் போக்கில் செல்கின்றனர்.

டீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டு விட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிது நேரம் நிற்கிறாள்.

அன்றொரு நாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள் – தொழிற்களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள் – மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணியெடுக்க வரும் பெண்கள் – அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சிக்கு அங்கு வந்த வழி மறந்து போனாற் போல நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது ‘துரோகச் செயல்’ என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 53கல்கியின் பார்த்திபன் கனவு – 53

அத்தியாயம் 53 ஆற்றங் கரையில் குந்தவியின் முகத்தில் தோன்றிய மாறுதலை மகேந்திரன் கவனித்தான். “என்ன தங்காய்! என்ன” என்றான். தனித்து வந்த குதிரையை வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தாள் குந்தவி. அவள் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. இதைக் கவனித்த மகேந்திரன்,

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40

அத்தியாயம் 40 – ராயவரம் ஜங்ஷன் சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள்