Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 57

பாகம் – 57

ண்ண வண்ண திரை சீலைகளாலும் வாசனை மிகு மலர்களாலும், வரிசையாக அணிவகுத்து நிற்கும் விளக்கு வெளிச்சங்களினாலும் வீட்டின் பின்புறம் அலங்கரிக்கப்பட்டு தயாராகி கொண்டிருந்தது. இன்னொரு புறம் விதவிதமான உணவு பதார்த்தங்களும், தேநீர் ஐஸ்கிரீம் எல்லாம் வரைமுறையின்றி வாரி வழங்கப்பட்டது.

 

ஆரவ் சந்தனாவின் நிச்சயத்திற்கு அளவான ஆட்களையே அவர்கள் குடும்பத்தினர் அழைத்திருந்தார்கள். ஆனால் வந்தவர்கள் எல்லாம் கிரிக்கெட் பற்றி தெரிந்தவர்களாக இருந்ததால் எதிர்காலத்தில் பிரச்சினை வராமல் இருக்க, நிதிஷ் வாசலில் நின்று ஆரவ் போட்ட கன்டிஷன்களை தெளிவாக சொல்லி விருந்தினர்களை உள்ளே அனுப்பினான். ஆரவ் நியமித்த ஒரு போட்டோ கிராபரை தவிர வேறு யாரும் போட்டோ எடுக்க அனுமதிக்க படவில்லை. வந்தவர்கள் அனைவரது செல்போனும் அலங்கார வாசலிலேயே வாங்கி கொண்ட பிறகே உள்நுழைய அனுமதி அளிக்கபட்டது. பாடிகார்ட்ஸ் வேறு ஆங்காங்கே உலவியபடி செக் செய்து கொண்டிருந்தார்கள். ஆதலால் விஷயம் வெளியே தெரியாமலேயே விஷேசம் ஆரம்பிக்க பட்டது. ஆளை தூக்கி அடிக்கும் மெருன் வண்ண டிசைனர் சேலையில் அவள் இன்னும் சிகப்பாய் தெரிய, அவளைத்தவிர அத்தனையும் கண்ணில் இருந்து மறைந்து விழி விரிய பார்த்து நின்றான் அந்த ஆணழகன்.

 

இருவரும் இடம் பார்த்து ஜோடியாக அமர வைக்கப்பட்ட பிறகு ஆரவ் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “திடீர் திடீர்னு எங்கடி போற? போன் பண்ணாலும் எடுக்க மாட்டிக்கிற, நேத்து உன்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டா…” என்றான்.

 

“நீங்க வேற… நேத்து முழுக்க தாத்தா ரூம்லதான் இருந்தேன். நீங்க கால் பண்ணினப்போ தாத்தா என் பக்தத்துலயே உக்காந்து இருந்தாரு. அவர பாத்துகிட்டே நான் உங்ககிட்ட என்ன பேச முடியும் சொல்லுங்க. எப்டியாவது தாத்தாவ ஏமாத்தி உங்கள பாக்கலாம்னு நினச்சப்போ தாத்தா, ‘நாளைக்கு வெள்ளி கிழமை, பொண்ணு வீட்ட விட்டு போனா வீட்ல இருக்குற லக்ஷ்மியும் கூட போயிடும்’னு சொல்லி, இன்னிக்கி மதியமே மாமன் முறைய பார்த்து என்னை தினேஷ் வீட்டுக்கு அனுப்பிட்டாரு தாத்தா. நீங்க இல்லாம எனக்கும் அங்க ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு ஆரவ்” என்றாள் சினுங்கலோடு.

 

“உங்க தாத்தா ஓவரா பண்றாருல்ல, சொல்லி வை, ஆரவ் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்னு….”

 

“ம்க்கும்… அதெல்லாம் அவருக்கே தெரிஞ்சிருக்குது, அதான் உங்களுக்கு தெரியாமலே என்ன கூட்டிட்டு போயிட்டாரு. ”

 

“அவர… இப்ப என்ன பண்றேன்னு பாரு”

 

அவர்கள் பேச்சை தடை செய்யும் விதமாக நிச்சயதார்த்த சம்பிரதாயங்கள் ஆரம்பிக்க பட்டது. பெண்ணிற்கு மாமன் மாமியாய் நந்தினியும் அவர் கணவரும் சபையில் அமர, மாப்பிள்ளையின் மாமன் மாமியாய் ஷர்மா அங்கிளும் மிருதுளாவும் எதிர் அமர்ந்தார்கள். அனைவரின் ஆசிக்கிணங்க நிச்சய தாம்பூலம் மாற்றி கொள்ள பட்டு, ஊர் அறிய உறவறிய அவர்கள் திருமண சேதி அறிவிக்க பட்டது. இதுவரை அமைதியாய் இருந்ததே பெரிய விஷயமென யஷ்மித் தன் குறும்புகளை கட்டவிழ்த்து விட தொடங்கினான்.

 

“ஹாய் பியூட்டிஸ்” என்றபடி யஷ்மித் நான்கு கிழவிகளுக்கு இடையில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

பாட்டி, “யாரு ராசா நீ? சந்தோசு பிரன்டா?”

 

“சீ சீ சீ… பிரன்டா, அவன் வேல பாக்குற கம்பெனிக்கே நான்தான் ஓனரு. கல்யாண மாப்பிளயும் அவன் ப்ரெண்ட்ஸ்சும் கூட என் கம்பெனில தான் வேல பாக்குறானுங்க, சின்ன பசங்க…”

 

“அப்புடியாய்யா, எங்க சந்தோசு ரொம்ப நல்ல புள்ள. சந்தன வூட்டுகாரனும்  பாக்க அம்சமாத்தேன் இருக்கான். நீதேன் பாத்து பதனமா அவகள கரை சேத்துவுடனும் ராசா…”

 

“அது கிடக்கட்டும் ஸ்வீட்டி, நானும் நீங்க வந்ததில இருந்து பாக்குறேன், இவ்ளோ பெரிய தோடு போட்டுகிட்டு அத அப்டி இப்டின்னு ஆட்டிட்டு இருக்கியே பாட்டி, உனக்கு காது வலிக்கல?”

 

“இதுக்கு பேரு தண்டட்டி ராசா, என்ற வூட்டுகார்ரு எம்மட கல்லாணத்துக்கு போட்டது.”

 

“போ பாட்டி, இப்பவே இம்புட்டு அழகா இருக்க, சின்ன வயசில நீ எப்டி இருந்திருப்ப? இத குடுத்து உன்ன ஏமாத்தி உன் வீட்டுக்காரு கல்யாணம் பண்ணிட்டாரு”

 

“ஆமா ராசா, ஒரு குதிர் நெல்லயும், ஒரு உளக்கு சங்கிலியும், ஆயிர ரூவா பணத்தையும் குடுத்ததும் நானும் வெவரமில்லாம மண்டைய ஆட்டிபுட்டேன். அந்த மனுசனும் இதான்டா சாக்குன்னு என்ன ஏமாத்தி கட்டிக்கிட்டு வந்திட்டாரு”

 

“நான் உனக்கு ஒரு அண்டா நெல்லு, ஒரு குண்டா சங்கிலி, பத்து பதினஞ்சு லச்சம் பணம் தர்றேன், இப்ப நீ என்ன கட்டிக்கிறியா பாட்டி?” என்றதும் பாட்டிகளின் கேலி சிரிப்பு அறை முழுவதும் எதிரொலித்தது.

 

“இந்த ஜனனி புள்ளையும் இதத்தான் என்ற வூட்டுகாருகிட்ட போய் சொல்லுவா, ‘இந்த கிழவிய கழட்டி உட்டுட்டு என்னைய கட்டிக்கோ தாத்தா, நானு உனக்கு ருசியா ஆக்கி போடுறேன், அதுக்கு பதிலா நீ கிழவியோட காசு மாலைய எனக்கு குடுத்திடுன்னு’ கன்னத்த கிள்ளி செல்லம் கொஞ்சிட்டு போவா, இன்னிக்கி என்ன அவள ஆளையே காணும்” என கிழவிகள் பார்வையால் வீடு முழுக்க துளாவினார்கள்.

 

அவள் பெயரே யஷ்மித் நெஞ்சில் நெரிஞ்சி முள்ளாய் தைத்திட, ஒரு பாட்டி “அந்தா அதோ அங்கின நிக்கிறா பாரு” என்றதும் பாட்டிகள் எல்லாம் மொத்தமாய் அவள் புறம் திரும்பிட, தன்னை மறந்து அவனும் திரும்பினான். மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே கல் வைத்த அனார்கலி ஆடை அணிந்து அவள் நடந்து வர, அவன் கண்கள் அவளை விட்டு நகர மறுத்து அப்படியே நின்றுவிட்டது. இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உம்மென்று சுத்தி கொண்டிருந்தவளை காண அவனுக்கே மனது இளகி போனது. இடையில் ஒரு கிழவி, “அது சரி இப்ப சந்தனாக்கு எம்புட்டு பவுனு போட போறாகளாம்” என்றார்.

 

அவர் கேள்வி திடீர் அமைதியை சபையில் உருவாக்கி விட, தாத்தா, “மாப்பிளைக்கு நம்ம குடுத்து நிறைய போறது ஒண்ணுமில்ல. இருந்தாலும் எங்க பொண்ண அப்டியே விட முடியாது, எங்களால முடிஞ்சத நாங்க செஞ்சா தான நல்லா இருக்கும். அவளுக்குன்னு கொஞ்சம் சேத்து வச்சிருக்கோம், அத அவ கையிலயே குடுத்திடுவோம்.” என்றார்.

 

ஆரவ், “ஒருவேள உங்களால குடுக்க முடிஞ்சதா வேற எதையாவது கேட்டா நீங்க தருவீங்களா?”

 

அத்தனை பேரும் இருக்கையில் இப்படி கேட்டால் அவர் என்ன சொல்ல முடியும்? தாத்தா, “கேளுங்க தம்பி, எங்க சக்திக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ செஞ்சிடுவோம்” என்றதும் திடீரென கூட்டத்திற்குள் உருவான சலசலப்பு யஷ்மித்தை ஜனனியின் மீதிருந்த கண்களைத் திருப்பி, சபையினில் கவனம் கொள்ளச் செய்தது.

 

சலசலப்பின் காரணம் புரிய, ஏதோ வரதட்சனை கேட்கப் போகிறான் என்று நினைத்து ஆரவ்வை கோபமாய் முறைத்து கொண்டிருந்த யஷ்மித், அவன் கேட்ட தட்சனையை கண்டு ஆடித்தான் போய்விட்டான்.

 

ஆரவ், “ஜனனிய என்கிட்ட குடுத்துடுறீங்களா? அவளோட படிப்பு கல்யாணம் எல்லாத்தையும் நாங்களே பார்த்து செஞ்சுக்குறோம். அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும், அவ விரும்புன வாழ்க்கையை அமைச்சு தர நான் நினைக்கிறேன்” என்றவன் யஷ்மித்தின் மீது தன் பொருள் நிறைந்த பார்வையை செலுத்தினான்.

 

யஷ்மித் ஆரவ் அருகில் ஓடிவந்து அவன் காதுக்குள், “ஆரவ், என்ன பேசுற? எனக்கு அப்டி எந்த நினப்பும் இல்லடா”

 

ஆரவ், “ஓ… அதான் தூக்கத்துல சாரி ஜனனி.. சாரி ஜனனின்னு உளறிட்டு இருந்தியா? உன் போன்ல போட்டோ எல்லாம் எடுத்து வச்சிருக்க. உங்க அம்மாகிட்ட கூட அவள பத்தி சொல்லி வச்சு இருக்க போல” என்றதும் யஷ்மித் வசம்மாய் சிக்கியதை உணர்ந்து மௌனமாய் தலை குனிந்தான். தாத்தா அவர்கள் நடவடிக்கை பார்த்தே நடந்ததை புரிந்து கொண்டார்.

 

தாத்தா, “தம்பி, நீங்கள்ளாம் ரொம்ப பெரிய இடம். சந்தர்ப சூழ்நிலையால உங்கள பாத்து பேசி பழகி விரும்பி, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்திருக்குற சந்தனாவ உங்களுக்கு குடுக்குறதுக்கே பயந்துகிட்டு, இத்தன நாளா என் மனசு தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும். இதுல நாலுநாள் பழகின பழக்கத்தில சின்ன பொண்ணு பேச்ச கேட்டு முடிவெடுத்தா நல்லா இருக்குமா? வீட்ல நாங்க லேசா திட்டினாலே புள்ளைங்க தேம்பி தேம்பி அழுதிடும், வெளி உலகத்துக்கு போயி மத்தவங்க ஏச்சு பேச்செல்லாம் கேட்டா தாங்காதுங்க தம்பி” என கெஞ்சலாய் முடித்தார். தாத்தா சுற்றத்தார் முன்னிலையில் சாதுர்யமாக காதல் விஷயத்தை வெளிப்படையாய் சொல்லாமல், படிப்பினை பற்றி பேசுவதை போலவே பதில் சொல்லி முடித்ததை ஆச்சரியமாக பார்த்தனர் ஆரவ்வும் யஷ்மித்தும்.

 

ஆரவ், “அப்போ நான் கேட்டத தர மாட்டேன்னு சொல்றீங்க” என்று வம்பை விடாமல் வளர்த்தான் அவன்…

 

தாத்தா, “முடியாதுன்னு சொல்லல, இப்போதைக்கு வேண்டாம்னு சொல்றேன். அவ ரொம்ப சின்ன பொண்ணு, அஞ்சாறு வருஷம் படிச்சு முடிக்கட்டும், அதுக்கு அப்புறமும் அவ மனசு மாறாம இருந்தா அப்ப பாக்கலாம்”  என்று கறாராய் முடித்தார்.

 

ஆரவ் ஜனனி மீது கொண்டிருந்த பாசத்தை ஏற்கனவே உணர்ந்திருந்த வீட்டு பெரியவர்களும், வீட்டுக்கு வந்திருந்த மற்ற உறவினர்களும் படிப்பு விஷயம் என்றே நினைத்து கொண்டு, இதையே வற்புறுத்த ஆரவ் இப்போதைக்கு ‘சரி’ என்று மனமில்லாமல் தலையாட்டினான்.

 

நிச்சயம் முடிந்ததும் விருந்து ஆரம்பித்தது, வந்தவர்களை குறையின்றி கவனிக்க பெரியவர்கள் அங்கு சென்றதால், இங்கே இளைஞர்கள் வம்பு வளர்த்தபடி தனி ராஜ்ஜியம் செய்ய தொடங்கினார்கள். யஷ்மித் மனதில் தான் இருப்பதை அவள் உணர்ந்த அடுத்த நிமிடம் பழைய ஜனனி வெளிவர, அவள் அட்டகாசத்தை கேட்கவும் வேண்டுமா? அனைவரின் முகத்திலும் புன்னகை கூத்தாட இனிதே நிச்சயதார்த்த வைபவம் நிகழ்ந்தேறியது. ஆரவ் இன்று விவரமாக வஜ்ரா போனை பார்பியிடம் தந்துவிட, இரவில் நெடுநேரம் பேசி தீர்த்ததில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட இந்த நாள் இனிய நாளாகவே முடிந்தது.

 

வாரணமாயிரம்,

வரிசையில் நின்றசைய…

தோரணமாயிரம்,

தென்றலில் தலையசைய…

வான்முகில் வந்தே,

வாழ்த்திடும் நன்னாள்- நல்ல

தேன்தமிழ் பாடலாய்,

இனித்திடும் திருநாள்!!!

 

தோள் சேர்ந்த மாலையோடு,

சுகம் காணும் நன்னாள்…

வாள் போன்ற விழிகளுமே,

தோளோடு கிறங்கிடும் திருநாள்…

மணவறையில் ஈருயிர்கள்,

மங்கலமாய் இணையும் நாள்!

மன அறையில் இருந்த காதல்,

மணையறையில் தவழும் நாள்!

 

மங்கள நாண் முழங்க, அர்ச்சதை தூவி அத்தனை சொந்தமும் வாழ்த்தளிக்க, வானுலக தேவதையவள் சங்கு கழுத்தில் வாழ்வின் பயனடைந்ததாய் நினைத்தவன் மூன்று முடிச்சிட்டான்.

Leave a Reply

%d bloggers like this: