Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 10

அத்தியாயம் – 10

ஜெய்ஷங்கர் அந்தப் புத்தக அறையை நோட்டமிட்டான். புத்தக அலமாரிக்கு அருகே இருந்த இருக்கைகளும், கோப்புக்களும் அது நூலகம் மட்டுமின்றி தனசேகரின் அலுவலக அறையும் கூட என்பதை உணர்த்தியது.

சற்று முன் நடந்த உரையாடல் அவன் நினைவில் வந்து போனது.

 

“உனக்குப் புத்தகங்கள்னா பிடிக்குமா ஜெய்”

 

“ஆமாம்… அதுவும் பாடப் புத்தகங்கள் மாதிரி நிம்மதியான தூக்கம் தரும் விஷயங்கள் இனிமே கடவுளே படைச்சால்தான் உண்டு”

களுக்கென சிரித்தவள்.

“படிப்புக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தமா. உன் பொழுதுபோக்கு என்ன?”

“தலை தெறிக்க நானும் என் தம்பியும் ஓடுவோம். எதையாவது உடைப்போம். அம்மா திட்டி வீட்டை விட்டுத் துரத்திடுவாங்க. வீட்டுக்குள்ள இருக்கவங்கதான் புத்தகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். எங்களை மாதிரி ஆட்களுக்கு  அந்த வாய்ப்பே இல்லையே. அப்பறம் வேலைக்கு போனதும் கிடைக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பிச்சேன். அதுவே பழக்கமாயிடுச்சு”

“எனக்கு புத்தகங்கள்னா  உயிர். ஒவ்வொரு வயசுக்கு தகுந்த மாதிரி எங்கப்பாவும் புத்தகங்கள் வாங்கித் தருவார்.குழந்தைகளுக்கு புத்தகம் படிச்சு கதை சொல்றது எவ்வளவு பெரிய சுகம் தெரியுமா”

அவளை ரசனையோடு பார்த்தவன் “நீ ஒரு நல்ல அம்மாவா இருப்ப அஞ்சலி” என்றான்.

 

பூட்டியிருந்த அவளது அறையைப் பார்த்தான். ‘என்னோட குழந்தைக்கு’ என்று சத்தம் எழாமல் சொன்னான். பின்னர் சிரித்தபடியே லைப்ரரிக்கு மறுபடியும் வந்தான்.

தேக்கு மரப் பலகைகள் இழைத்து செய்யப்பட்ட புத்தக அலமாரிகள்   சுவர் முழுவதும் ஆக்ரமித்திருந்தன. நடுநடுவே அழகான புகைப்படங்கள், அஞ்சலியின் சிறுவயது படங்கள் என்று நிரம்பியிருந்தன. கண்கள் படும் திசைகளில் எல்லாம் அஞ்சலியை நினைவுபடுத்தும் ஒன்று இருந்தது.

இவனது வீட்டில் அனைவரும் ஆண்பிள்ளைகள். அதனால் பெண்கள் இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்றே அவன் அறிந்ததில்லை. அவனும் பெற்றோர் மீது மிகப் பிரியம் கொண்டவன் என்றாலும் இவ்வளவு வெளிப்படையாக அதனைக் காட்டிக் கொண்டதில்லை.

 

குழந்தையின் மீது இந்த  அளவுக்கு அன்பு செலுத்த முடியுமா. முடியும் என்று தனசேகர் உணர்த்திவிட்டாரே. அவனது பார்வை அஞ்சலியின் புகைப்படத்துக்கு சென்றது. டீன்ஏஜில் நல்ல வட்டமுகமாகவே இருந்தாள். செதுக்கி வைத்த மூக்கும், வடிவான இதழ்களும், பெரிய கண்களும் அவனை எப்போதும் போலவே கவர்ந்தது. மெதுவாக புகைப்படத்துக்கு அருகே சென்று அவளது முகத்தை வருடினான்.
‘இந்தப் பெண்ணிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என் மனதை செயல்படவிடாமல் தடுக்கிறது. அஞ்சலி, இது முறையானதில்லை. உன்னிடம் இப்படி நான் நடக்கக் கூடாது…. ஆனாலும் நீ பக்கத்தில் இருக்கும்போது என்னால் இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. நீ எனக்கானவள்  என்றே என் மனது சொல்கிறது. நான் வந்த விஷயத்தைப் பற்றி நீ அறியும் நிமிடம் என்னாகும் என்றே என்னால் கணிக்க முடியவில்லை’

 

மனக்கட்டுப்பாடில்லாத ஆண்களும் பெண்களும் தங்கள் பெற்றோரின் கண்காணிப்பு தளரும் கணத்தில் இடர ஆரம்பிக்கின்றனர் என்று எங்கோ படித்த நினைவு அஞ்சலிக்கு.

தந்தை  இல்லாதது வீட்டில் ஒரு ஆணுடன் தனித்துத் தங்கவும், அவனை முத்தமிட அனுமதிக்கவும் துணிச்சலைத் தந்திருக்கிறது. இது இனி தொடரக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் எப்படி என் மனது இத்தனை பலவீனமானது. அவனது அருகாமை அவளை சிந்திக்கக் கூட விடவில்லை. என் மனதை முழுவதுமாக அத்துமீறி ஆக்ரமித்திருக்கிறான். விசித்திரமாக என் மனம் அதை வரவேற்கிறது. அப்பா என்னுடன் இருந்திருந்தால் வழி நடத்தியிருப்பாரோ…

குழப்பத்துடன் இருந்தவளுக்கு தன் தந்தையின் நினைவு அதிகமாகத் தாக்கியது. தனது தந்தையின் அறைக்கு சென்றாள். அவர் இறந்தவுடன் அந்த அறையில்தான் பலநாட்கள் தங்கியிருந்தாள். ஆனாலும் அவரது சீப்பில் சிக்கியிருக்கும் தலைமுடியைக் கூட அகற்றாமல் பத்திரமாக அவர் நினைவில் பாதுகாத்தாள்.

 

அறையில் நுழைந்தவுடன் தனது தந்தையின் வாசத்தை எதிர்பார்த்தவளுக்கு அது குறைந்து வருவது புலனானது. அவரது உடைகளை சலவை செய்து அழகாக கப்போர்டில் அடுக்கி வைத்திருந்தாள். அதிலிருந்து ஒரு சட்டையை எடுத்துக் கொண்டாள்.

“அப்பா ரொம்பக் குழப்பமா இருக்குப்பா… நீங்க என்கிட்டே சில விஷயங்களை மறைச்சிருக்கிங்கன்னு  கண்டுபிடிச்சுட்டேன். ஆனால் என்ன விஷயம்னுதான்  கண்டுபிடிக்க முடியல. இந்த ஜெய் வேற என் மனசை சலனப் படுத்திட்டான். ஆனால் இந்த உறவைத் தொடர பயமாருக்கு” முகத்தில் வைத்துக் கொண்டாள்.

 

அப்பாவின் பர்ஃபியூம் பாட்டிலைத் தேடி கடைசி அலமாரியில் குவிந்திருந்த பொருட்களுக்கு இடையிலிருந்து  எடுத்தாள். அதனை அங்கிருந்த உடைகள் அனைத்திலும் தெளித்தாள். அப்படியே அறை உள்ளும் தெளித்தாள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த வாசம் தந்தையை நினைவுபடுத்தும். திருப்தியுடன் மறுபடியும் அதனை வைக்கப் போனாள். ஆனால் அந்த இடத்தில் நெருக்கி அடுக்கப்பட்டிருந்த சிறு சிறு பொருட்களிலிருந்து ஒன்று கீழே விழுந்து வைக்கவிடாமல் தடுத்தது. கைகளை விட்டுத் துழாவி அந்தப் பொருளை எடுத்தவளின் கண்கள் ஆச்சிரியத்தில் மலர்ந்தன.

 

ஏனென்றால் அது ஒரு டிக்ட்டாபோன். சிறு வயதிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்ள அதை அவள் தந்தை உபயோகிப்பது வழக்கம். அவரது வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரும்போது அந்த சிறிய ஒலிபதிவுக் கருவியில் அவளுக்கான தகவல்களை ரெகார்ட் செய்துவிட்டுப் போவார்.

 

அப்படியென்றால் தந்தையின் குரல் இதில் இன்னமும் இருக்கும். வேகமாய் ஆன் செய்தாள். உபயோகித்து நாளாகிவிட்டதால் பேட்டரி மரித்திருந்தது. அவரது பேட்டரி ஷெல்ப்பில் புதிதாக வாங்கியிருந்த பேட்டரிகளை எடுத்தாள். செல்லை பண்டிலாக சுற்றியிருந்த பிளாஸ்டிக் பேப்பர்களுக்கிடையிருந்து ஒரு சிறிய பொருள் கீழே விழுந்தது. அதனைக் குனிந்து எடுத்தாள். அது நன்றாக சுருட்டப்பட்ட வெள்ளைக் காகிதம். கவனமாக அதனைப் பிரித்தாள். அதில் ‘லிசன் டு மீ’ என்று தந்தையின் கையெழுத்து அவசரத்தில் கிறுக்கியிருந்தது.

 

இது எதற்காக எழுதினார், எப்போது எழுதினர் என்று யோசித்தாள். வேறு ஏதாவதாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரது அலமாரிகளை தோண்டினாள். ஆனால் அங்கும் கூட பல புகைப்படங்கள், ஆல்பம் இவற்றைத்தான் காண முடிந்தது. அதிலும் சில படங்களின் பின்னால் ஏதோ எண்களைக் கிறுக்கியிருந்தார். இது ஏதாவது ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்பட வரிசையை கிறுக்கியிருக்கிறாரா…. தெரியாது விழித்தாள்.

 

காலை காரை ஓட்டி வந்ததும், முதல் நாள் நடந்த துப்பாக்கி சூடும், ஜெய் மேல் இருந்த குழப்பமும், பயணக்களைப்பும்  அவளது மூளையை அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் இப்போதைக்கு என் தந்தையின் குரலைக் கேட்க வேண்டும் என்றவாறே பேட்டரியை எடுத்து டிஃடாபோனில் போட்டு அதற்கு உயிரூட்டினாள்.

 

அவளது தந்தையின் குரல் அவள் காது வழியாக நுழைந்து மனதில் பேரமைதி தந்தது.

“அஞ்சலி…  நான் அவசர வேலையா ஊருக்குப் போறேன். உனக்கு   மேத்ஸ்  சொல்லித்தர புது டீச்சர் ஏற்பாடு பண்ணிருக்கேன். சாயந்தரம் வீட்டுக்கு வருவாங்க… நான் வீட்டில் இல்லாததால அவங்ககிட்ட ரகசிய கோட் கேளு. தப்பா சொன்னால் அது உன் டீச்சர் இல்ல

 

ரகசிய வார்த்தை ‘தவளை இளவரசி’ ஹா ஹா ஹா”

 

அவரது வார்த்தைகள் சிரிப்போடு ஒலித்தது.

 

“இந்த வாரம் ஸ்கூலில் உன்னைப் பிக் அப் பண்ண வரும் ஆள் பேர் தங்கமுத்து. ரகசிய வார்த்தை ‘நிலாக் குதிரை’ ”

 

அவளை விட்டுவிட்டு வெளியூர் செல்ல நேரும்போதெல்லாம் மகளை சந்திக்க வருபவர்களுக்கு ரகசிய வார்த்தைகளை சொல்லிவிட்டு செல்வார். அல்லது ரெகார்ட் செய்து வைப்பார்.

 

அவளும் அந்த ரகசிய வார்த்தைகளை சொல்கிற மனிதர்களை மட்டுமே நம்புவாள். தனசேகரும் இரு நபர்களுக்கு ஒரே சமயத்தில் ஒரே வார்த்தைகளை தந்ததில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகவே இருவருக்கும் தெரிந்தது.

 

அதனைத் திரும்பத் திரும்பக் கேட்டாள். முதல் தடவை கேட்டபொழுது கண்ணீர் வழிந்தது. அடுத்தடுத்த முறைகளில் அதற்கும் பஞ்சம் வந்தாற்போல் நின்றுவிட்டது. சில இடங்களில் உரையாடலுக்கு நடுவே அவளது தந்தையின் குரல் இடையிட்டு சில வார்த்தைகளை அழுத்தி சொல்லின. அதனை எண்ணியபடியே அவள் உறக்கத்தில் ஆழ்ந்தபோது அவளது மண்டைக்குள் தந்தை சொன்ன ரகசிய வார்த்தைகள் சுற்றி நின்று நடனம் ஆடியது.

 

‘தவளை இளவரசி’

‘நிலாக் குதிரை’

‘விசித்திரக் குள்ளன்’

‘மாயச்  சுவர்’

‘மாஜிக் மாலினி’

‘கடல் கிழவன்’

‘நீலப் போர்வை’

 

உறக்கத்திலும் அவள் மூளை பளிச்சென தெளிவாக உணர்ந்தது

 

‘கண்டிப்பாக அப்பா எழுதிய ‘லிசன் டு மீ’ இந்த வார்த்தைகள்தான்’

 

அதை உறுதி செய்வது போல கடைசியாக கரகரப்பாக அவரது  வார்த்தைகள் ஒலித்தன

 

“லிசன் டு மீ… அந்த நபரின் ரகசிய வார்த்தைகள் ‘வேடிக்கை விளையாட்டு’. ஆனால் அந்த ரகசிய வார்த்தைகளை நானே சொல்வேன்”

‘அப்பாதான் உயிரோடு இல்லையே. அப்பறம் எப்படி  அவரே சொல்ல முடியும்’ ஒரு புதிர் விடுபட்டு இன்னொரு புதிர் ஆரம்பித்தது போல உணர்ந்தாள்.

இரவு முழுவதும் ஏற்பட்ட மனக்குழப்பம் சுலபத்தில் அஞ்சலியைத் தூங்க விடவில்லை. ஒரு வழியாகத் தூங்க ஆரம்பித்தவளை காலையில் எழுப்பினான் ஜெய்ஷங்கர்.

“உன்னை தூங்க விடணும்னு எனக்கு ஆசைதான். ஆனால் சில முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டியிருக்கு. கிளம்பலாமா” என்றதும் தூக்கமின்றி எரிந்து சிவந்த கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.

“ராத்திரி பார்த்த கார் போட்டோவை என்லார்ஜ் பண்ணா ஏதாவது தடயம் கிடைக்கலாம். எனக்குத் தெரிஞ்ச போட்டோ பிரிண்டிங் ஷாப் இருக்கு. அங்க போகணும். இதைத் தந்துட்டு அப்படியே போட்டோ எடுத்த இடத்தையும் பார்த்துட்டு வந்துடலாம்” அவளுக்கும் சேர்த்து அவனே பிளான் செய்தான்.

 

“இது எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு நல்ல காலை உணவு உனக்காக ரெடி பண்ணிருக்கேன். போனதடவை மாதிரி குப்பை தொட்டில கொட்டாம சாப்பிட்டுப் பாரு. அப்பறம் விடவே மாட்ட”

 

“இந்த ஸெல்ப் டப்பாதானே வேண்டாம்னு சொல்றது. நான் கிளம்பி வரேன். நீயும் சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கோ” என்றாள்  அஞ்சலி.

 

சரியாக பதினைந்தாவது நிமிடம் சாப்பாட்டு மேஜையில் ஜெய் செய்த காராபாத்தை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“வாவ்… உப்புமாவைக் கூட இவ்வளவு ருசியா செய்ய முடியுமா?” வியந்தாள்.

 

“காராபாத்தை யாரு உப்புமான்னு சொன்னது”

 

“ஏன்… நவீன்தான் சொன்னான்”

 

“கடவுளே… அவனுக்கு உப்புமாவுக்கும் காராபாத்துக்கும் வித்யாசம் கூடத் தெரியல”

 

“உனக்குத் தெரிஞ்சா சொல்லேன் கேட்போம்”

 

“இது கிச்சடி மாதிரி நிறைய காய்கறி முக்கியமா பச்சை பட்டாணி போடணும். இதுக்குன்னு தனியா மசாலா இருக்கு. இது எதுவும் தெரியாம வெறும் மல்லித்தூள், மிளகாய்தூளைக் கொட்டி அவன் சமைக்கிறதை  சாப்பிடுறது நரக வேதனை”

 

“நிஜம்மாவா…. அப்பறம் ஏன் தினமும் காராபாத் ஆர்டர் பண்ண…”

 

“அதுதானே சீக்கிரம் வழுக்கிட்டு வயித்துக்குள்ள போகும். தோசைன்னா பிச்சு வேற மென்னு முழுங்கணும். நல்லா நோட் பண்ணியா காராபாத் கூட ஒரு கப் தயிர் ஆர்டர் பண்ணுவேன். ஒரு வாய் சாப்பாட்டை போட்டு அதுக்கு மேல ஒரு ஸ்பூன் தயிரோட முழுங்கிருவேன்…”

 

“அடப்பாவி உன்னை நம்பி எங்க ஹோட்டல் ஸ்பெஷல் காராபாத்னு வேற நானும் மாயாவும் கஸ்டமர்ஸ்க்கு சொல்லிருக்கோம்”

 

“ஹி… ஹி… சீக்கிரம் ஹோட்டலை மூடத் தயாராகு”

 

“ஏன் மூடணும்… நீ தான் இவ்வளவு நல்லா சமைக்கிறியே உன் ரெசிபியை எங்களுக்குக் கத்துத் தந்துட்டு போ”

 

பேச்சும் சிரிப்புமாக கிளம்பும்போது கூட இருவரும் இது தற்காலிகம்தான் நினைக்கவில்லை.

3 Comments »

  1. Aha hero nalavara ketavara nu manda kaya vaikireengale. Avaru enna marmatha vachirukarunu theriyala. Apo dhana sir uyiroda than irukara

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: