Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 56

பாகம் – 56

நேரம் மாலை ஆறு மணியை நெருங்குகையில் அவர்கள் ப்ளான் படி கார் ஏறுவதில் இருந்தே டீம்மாக கிளம்பினார்கள். ஏற்கனவே ஆரவ் கோவையில் ஒரு பெரிய பொட்டிக்கில் முன் அனுமதி வாங்கி இருந்ததால், அந்த கடை வேறு ஆட்களின்றி அவர்களுக்காகவே காத்திருந்தது. கடைக்குள் நுழைந்ததும் முதலில் முகூர்த்த புடவையை எடுக்க தீர்மானித்து தேட ஆரம்பிக்க, சில நிமிடங்களிலேயே ஆரவ் அவளுக்கான புடவையை செலக்ட் செய்து விட்டான்.

 

முழுக்க முழுக்க தங்க நிறத்தாலான அந்த பட்டு புடவை, அவளுடன் அத்தனை பாந்தமாக பொருந்தியது. அதையடுத்து ஆரவ்க்கும் தங்கநிற கரையிட்ட வெள்ளை நிற வேட்டி சட்டை எடுக்கப்பட்டது. என்கேஜ்மென்ட்க்கு அவளுக்கு ஒரு டிசைனர் சேரியும், அவனுக்கு அதே வண்ணத்தில் ஒரு கோட் சூட்டும் எடுத்து கொண்டார்கள். மணமக்கள் இருவரும் அத்தோடு அங்கிருந்து மறைந்து விட, மற்றவர்கள் தங்களுக்கான ஆடைகளை கடை முழுவதும் தேடி துளாவினார்கள். அதே கடையில் தைக்க வேண்டிய ஆடைகளை மட்டும் தைக்க கொடுத்து விட்டு, மறுநாள் ஆள் அனுப்பி வாங்கி கொள்வதாக சொல்லி சென்றார்கள். அடுத்ததாக ஜுவல்லரி, மணப்பெண் டைமண்ட் நகைகளை எடுத்து கொள்ள, மற்றவர்கள் ஆரவ் உத்தரவின் படி பெரிய தங்க நகைகளை எடுத்து கொண்டார்கள். ஜனனிக்கு மட்டும் டைமண்ட் செட் வாங்க ஸ்பெஷல் அனுமதி அளிக்கபட்டது. இரவு உணவும் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் முன் பதிவு செய்திருந்த அறையில் முடிந்துவிட இரவு பத்து மணிக்குள்ளாகவே வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார்கள். பார்பிக்கு அவனருகே செல்வதற்கு பலத்த தடை உத்தரவு இருப்பதால், அஸ்விகா பாப்பாவுடனேயே சேர்ந்து சுற்றி கொண்டிருந்தாள்.

 

அடுத்தநாள் காலை ஐந்து மணிக்கே எழ வேண்டி இருந்ததால் அனைவரும் விரைவாக உறங்கி விட, தன்னவளின் அருகாமை இன்றி தவித்து போனான் ஆரவ். தானும் உறங்காமல் மற்றவர்களையும் உறங்க விடாமல் பாடாய் படுத்தியவனை,

 

பிரித்வி, “வேணும்னா என்னை கட்டி புடிச்சு தூங்குறயாடா?” என்று ஆரவ் மேல் ஒரு காலை தூக்கி போட,

 

ஆரவ், “சீ… சீ… தள்ளி படுடா”

 

வஜ்ரா, “டேய் பிரித்வி… அவனா நீ”

 

ரிஷி, “டேய் நாங்க இங்கிட்டு தூங்கினதும், நைசா அங்கிட்டு கம்பிய நீட்டிடாதடா, நாளைக்கு ஏதோ முக்கியமான பூஜையெல்லாம் இருக்காம்.”

 

பிரித்வி, “ரிஷி அசிங்கம் புடிச்ச பயடா நீ, கம்பிய நீட்டிடாதன்னு தெளிவா டபுள் மீனிங்கல சொல்ற…” அவர்களின் ஏ ஜோக்குகள் மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்ல, யஷ்மித் மட்டும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளாமல் ஜனனியை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான்.

 

அடுத்தநாள் காலை ஐந்து மணிக்கு கண் விழித்தது முதலே வீடு களேபர பட்டது. உறங்கும் இளையவர்களை ஒரு கூட்டம் எழுப்பி கொண்டிருக்க, பெண்கள் கூட்டம் வேகவேகமாக குளித்து முடித்து அடுத்து எழுந்து வருபவர்களுக்கு, கையில் வடை காபியை கொடுத்து கொண்டிருந்தது. மற்றொரு கூட்டம் கோவிலுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்களை அவசர அவசரமாக எடுத்து வைத்து கொண்டு இருக்க, இன்னும் சிலர் கேமராவும் கையுமாய் ஒரு ஆள் விடாமல் போட்டோ எடுத்து குவிக்க, அந்த அதிகாலை வேளையிலேயே வீடு ஜே ஜே என்றிருந்தது.

 

பார்பி அடர் நீல நிற பட்டு சேலையில் வழக்கத்தை விட மெருகேறிய முக அழகில் புது மண பெண்ணாய் தயாராகி வர, ஆரவ்வும் அதே நிற ஷர்ட் அணிந்து அவளுக்கு இணையாய் வந்தான். இன்று முழுக்க இருவரும் கண்ணால் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. தப்பி தவறி கூட அருகில் செல்ல முனைய கூடாது என்பது தாத்தாவின் த(தொ)டா உத்தரவு.

 

யஷ்மித், “இதான்டா நம்ம பசங்க கிட்ட இருக்குற கெட்ட பழக்கம். எங்க போனாலும் டீம் ஜெர்ஸி கலர்லயே ஒரு தடவ டிரஸ் போட்டுர்றானுங்கடா.”

 

ஆரவ் அவன் கழுத்தை தன் கைகளால் சுற்றி வளைத்து இறுக்கி கட்டி கொண்டு, “சும்மாவே எனக்கு வெக்க வெக்கமா வருது, நீயும் வேற என்ன சாகடிக்காதடா” என தன்னோடே இழுத்து கொண்டு சென்றான்.

 

அரை மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு பரந்த வயல் வெளி அருகே வண்டிகளை நிறுத்த, அனைவரும் இறங்கி வயலுக்குள் இறங்கி வரப்பின் மேல் நடக்க தொடங்கினார்கள். உடன் வந்த கார்ட்ஸ் எல்லாம் வயலுக்கு வெளியிலேயே நின்று விட்டார்கள். மாப்பிள்ளை என்பதனால் ஆரவ்வை தவிர அத்தனை பேரும் ஆளுக்கொன்றாய் பொங்கல் சாமானை தூக்கி கொண்டு வந்தார்கள். பார்பி அஸ்விகாவை பிடித்து கொண்டு வந்தாள். தங்கள் காஸ்ட்லியான ஷூ சகதியில் அழுக்காவதை கூட மறந்து வயல்வெளியின் வாசனை காற்றில் மயங்கி கிறங்கி இருந்தார்கள். வழி எல்லாம் நண்பர்கள் நால்வரும் தன்னனானே… என பாட நிதிஷ்ம், அஸ்வத்தும் தா…னானே… என எசப்பாட்டு பாட்டு பாடிக்கொண்டே செல்ல, பத்து நிமிட நடை பயணத்திற்கு பிறகு வயலுக்கு நடுவே ஒரு கோவில் தென்பட்டது.

 

ஆள் அரவமின்றி இருந்த கோவிலில் ஏற்கனவே பூசாரி தேவையான ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க மணமக்களை பூஜைக்காக சந்நிதிக்குள் அழைத்து சென்றார்கள். இருவர் பேரிலும் அர்ச்சனை செய்யப்பட்டு, விபூதி பூசிய பின் மற்றவர்கள் அனைவரும் குடும்ப சகிதமாய் அம்மனை தரிசனம் செய்தார்கள். அதன் பின் ஆண்கள் தங்கள் கலைக்கண்ணை காட்டிடும் வகையில் போனில் விதவிதமான போட்டோக்கள் எடுக்க தொடங்கினார்கள். ஒரு குரூப் க்ளிக், ஒரு செல்பீ க்ளிக், வரிசையாய் நின்ற சப்த கன்னிகளுடன் வரிசையாய் நின்ற வானரங்கள் ஒரு க்ளிக், கோவில் மண் குதிரையுடன் ஒரு க்ளிக், வயல்வெளியை ஒரு க்ளிக், வானம் பார்த்த தென்னைக்கு ஒரு க்ளிக், மண்படிந்த உள்ளங்காலை ஒரு க்ளிக், யதேட்சயாய் அந்த பக்கம் வந்த பட்டாம்பூச்சிக்கும் ஒரு க்ளிக்.

 

பெண்கள் அம்மன் சன்னதிக்கு நேராக ஓரிடத்தை கூட்டி நீர் தெளித்து வைக்க, பார்பியும் வித்யாவும் வேகமாக கோலம் போட்டார்கள். அது இருவர் போட்டது என்றறிய முடியாத அளவு அத்தனை ஒற்றுமையாய் வளைவு நெளிவுகள் தப்பாமல் அவர்களின் கைகள் சொன்னபடியே உருவானது அந்த பூக்கோலம். எங்கிருந்தோ அப்பாவும் சித்தப்பாவும் மூன்று கல்லை கொண்டு வர அதை வசதியாக வைத்து அதன்மேல் பொங்கல் பானை நீர் நிரப்பி வைக்க பட்டது. ஏற்கனவே கையோடு கொண்டு வந்திருந்த சுள்ளிகளை அடுப்பில் வைத்து அதனிடையில் சூடம் வைத்து பார்பியை ஏற்ற சொல்ல, சுள்ளிகள் சட்டென நன்றாக பற்றி எரிய தொடங்கியது.

 

ரேவதி, “அவ்ளோதான் நீங்க போகலாம், இனிமே கூப்பிட்டா மட்டும் வாங்க” என்று அனுப்ப பார்பியும் வித்யாவும் சந்தோஷமாக வெளியே ஓடிப்போனார்கள். காரணம் கோவிலிக்கு பின்னால் ஒரு சிறிய ஊற்று இருக்கிறது. அதில் கால் நனைக்க அத்தனை ஆசை அவர்களுக்கு. தங்களுக்கு முன்னதாகவே முக்கால் வாசிபேர் அந்த இடத்தை ஆக்கிரமித்து விட்டிருக்க கிடைத்த இடைவெளியில் அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள். சில நிமிடங்கள் நீரில் விளையாடி இருக்க, கோவிலுக்குள் இருந்து ரேவதி ஜனனியை அனுப்ப சொல்லி போன் அடித்தார். ஜனனிக்கு கையில் அரிசியை கொடுத்து கொதிக்கும் நீரில் கொஞ்சம் போட சொன்னார்கள். அரிசி போடும் கைகளுக்கு நல்லதே நடக்கும் என்பது ஒரு ஐதீகம், எப்போது பார்த்தாலும் யாரிடமாவது மல்லு கட்டி கொண்டு திரிவதால் ஜனனிக்கு இது போன்ற சில ஸ்பெஷல் கவனிப்புகள் அவ்வப்போது கிடைக்கும்.

 

அங்கே பார்பியின் அப்பா கணேசனும் சித்தப்பா முருகனும் கொஞ்ச தூரத்தில் தெரிந்த தோப்புக்குள் சென்று வர, அவர்களுடன் ஒருவன் பெரிய பானையோடு வந்தான். அதை பார்தததும் இவர்களுக்கு ஏகபோக குஷி, பின்னே பனை ஓலையில் பதனீர் குடிக்க யாருக்காவது கசக்குமா என்ன? வந்தவன் ஆளுக்கொரு மட்டை கட்டி தர, ஆசை ஆசையாக குடித்து கொட்டமடித்தது நம் கூட்டம். திரும்பி வந்த ஜனனி எல்லாம் காலியானதை கண்டதும் கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிட, போன் பேச சென்ற யஷ்மித்தும் இப்போதுதான் அவள் சத்தம் கேட்டு திரும்பி வந்தான்.

 

யஷ்மித், “அடப்பாவிகளா… ஒருத்தன் உங்ககூட வந்தானேன்ற நினப்பே இல்லையாடா உங்களுக்கெல்லாம்?”

 

இதற்குள் பார்பியும் வித்யாவும் தங்களிடம் மீதி இருந்த பதனீரை ஒன்று சேர்த்து ஜனனிக்கு தர, அவளும் ‘ஒண்ணும் இல்லாம போறதுக்கு இதுவாச்சும் கிடைச்சதே, சரி பரவாயில்லை’ என குடிக்க ஆரம்பித்தாள். அதை பார்த்த யஷ்மித் தன் நண்பர்களை திரும்பி பார்த்தான். எங்கே அவன் இதை கேட்டு விடுவானோ என்ற பயத்தில் மூச்சடக்கி விருவிருவென குடித்து தள்ளியது அந்த கூட்டம்.

 

யஷ்மித், “ஏன்டா டேய்… பொம்பள புள்ளைங்க எவ்ளோ அழகா ஒருத்தொருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணி சாப்பிடுறாங்க… மாடு மாதிரி வளந்திருக்கானுங்களே தவிர எவனாச்சும் ஒருத்தன் கொஞ்சூண்டு குடுக்குறானா பாரு” என்று கழுவி ஊற்றினான்.

 

பொங்கல் பொங்கிவிட்டதாக போன் வந்ததும் அனைவரும் விளையாட்டை நிறுத்தி விட்டு கோவில் பக்கம் நகர, யஷ்மித் ஜனனியை மட்டும் தனியாக தள்ளி கொண்டு போனான்.

 

யஷ்மித், “நானும் பாத்துட்டே இருக்கேன், ரொம்ப ஓவரா சேட்ட பண்ணிட்டு இருக்க. யாருக்கும் தெரியாம டாட்டா சொல்ற… சிரிக்கிற… அன்னிக்கி மெகந்தி போடும் போது என் கைய தொட்டு விளையாடுற… நேத்து ஷாப்பிங் போன இடத்தில என் பின்னாடியே வந்து தொல்லை பண்ணிட்டு இருக்க… இன்னிக்கி என்னடான்னா எல்லார் முன்னாடியும் நீ குடிச்ச பதனீய எனக்கு குடுக்க வர்ற… என்ன பத்தி என்ன தெரியும்னு நீ இப்டி பண்ணிட்டு இருக்க? நான் இங்க இருக்குற மாதிரியே வெளியவும் இருப்பேன்னு நினைச்சயா? நான்லாம் தினம் ஒரு பொண்ணு கூட சுத்துறவன். ஏதோ பார்பியோட தங்கச்சியாச்சே, நாலுநாள் உங்க வீட்ல இருக்கோமேன்னு கொஞ்சம் சகஜமா பழகுனா, இப்டி பிகேவ் பண்ற. இங்க இருந்து கிளம்புன அடுத்த நிமிஷமே நான் உன்ன மறந்திடுவேன். தேவையில்லாம ஆசைய வளத்துகிட்டு உனக்கும் உன்ன சேர்ந்தவங்களுக்கும் கெட்ட பேர் வாங்கி தந்திடாத…” என்றவன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டான். அதன்பின் ஜனனி இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு சத்தமின்றி இருக்க, வேலை பளுவினால் அவளை யாரும் கண்டு கொள்ளவில்லை.

 

தயாரான சர்க்கரை பொங்கலை அம்மனுக்கு படைத்து விட்டு, மீதம் இருந்தது அனைவருக்கும் பிரசாதமாக வாழை இலை துண்டுகளில் வைத்து வழங்கப்பட்டது. நண்பர்கள் நால்வரும் அதன் சுவையை விரும்பி எனக்கு உனக்கு என அடியும் தடியுமாய் வாங்கி வாங்கி தின்றார்கள். வீட்டிற்கு வந்தபின் மதிய உணவிற்கு பார்பி சொன்னபடி மாப்பிள்ளை வீட்டார்க்கு நார்த் இன்டியன் புட் தனியாக சமைக்கப்பட்டது. மதிய உணவிற்கு பின் பெண்கள் அசதியில் உறங்கிவிட, ஆண்கள் விட்டுப்போன ஆபீஸ் வேலைகளை செய்து முடித்தார்கள். மாலையும் இரவும் அனைவராலும் கங்கனம் கட்டிக்கொண்டு பார்பி அவனிடம் இருந்து பிரித்து வைக்க பட்டாள். ரெண்டு நாளெல்லாம் அவன் தாங்க மாட்டான் என தாத்தாவிற்கு முன்பே புரிந்ததால், மாலையே அவளை ரகசியமாய் தன் அறைக்கு மாற்றிவிட்டார். அவன் வீடு முழுவதும் தேடி துளாவியும் அவள் கிடைக்காமல் போக, வெட்கத்தை விட்டு அவனே போய் கேட்டான், “தாத்தா பார்பிய பாக்கனும்…”

 

தாத்தா, “பேரான்டி, நாளைக்கு காலைல தாலியும் சேலையும் வச்சு கும்பிடனும், அதுனால நீங்க இன்னிக்கி அவள பாக்க வேண்டாம்.”

 

ஆரவ், “அவ எங்க இருக்கான்னாவது சொல்லுங்களேன்…”

 

தாத்தா, “அதுவும் நாளைக்கு தான் சொல்லுவேன். வேணும்னா போன்ல பேசிக்கோங்க, நம்பர் தாரேன்” என அவர் போன் நம்பர் தர அதை குறித்து கொண்டு அறைக்கு விரைந்தான்.

 

பார்பி, “ஹலோ…” என்றதுமே, அவன், “ஏய் எங்கடி போன? எவ்ளோ நேரமா உன்ன தேடிட்டு இருக்கேன் தெரியுமா? உன்ன பாக்கனும்னு இருக்குது செல்லம், வீட்டுக்கு பின்னாடி கல் மண்டபத்துக்கு வாடா, கொஞ்ச நேரம் தனியா பேசலாம்”

 

“இல்ல ஆரவ்… எனக்கு இங்க நிறைய வேல இருக்குது, நாம நாளைக்கு பார்க்கலாம்…” என கட் செய்து விட்டாள். அடுத்து அவன் கால் செய்தாலும் அவள் எடுக்கவில்லை. அவளுக்கு அருகிலேயே தாத்தா கருப்பண்ண சாமியாய் அமர்ந்திருக்கையில் பாவம் அவளும் என்ன செய்ய முடியும். இன்றும் உறங்க முடியாமல் தவித்தவனை நண்பர்கள் ஒருபுறம் ஓட்டி தள்ள அவளின்றி தனிமையின் தாக்கத்தில் வாடித்தான் போனானவன். இரக்கமில்லாதவள் கனவிலும் வந்து தொல்லை செய்து அவன் உறக்கத்தையும் பறித்து சென்றுவிட்டாள். மற்றவர்களை போலல்லாமல் தன் கடமையை தினந்தோறும் சரியாக செய்யும் காலை கதிரவன் இதோ வந்துவிட்டான். ஆரவ்விற்கு விழி திறக்காமலேயே வீடு முழுவதும் புது வாசனை பரவி இருப்பதை உணர முடிந்தது. உறக்கமின்மையால் உடல் முழுதும் அசந்து இருந்தாலும், அவளை காணும் ஆசை அதைவிட அதிகமாயிருக்க எழுந்து தயாராகி கீழே வந்தான்.

 

‘வாசலில் தென்னங்கூரை பந்தலிட்டு, குலை தள்ளிய வாழைநட்டு, நடுவீட்டில் பாக்கு பழ தாம்பூலமிட்டு, சுற்றமும் நட்புக்களும் கூடி இருக்க, என்னவள் கரத்தால் விளக்கிட்டு வீடே ஒளிரும் தருணத்தில், எங்கள் திருமண ஆடைகள் படைத்தவனையும் பந்தங்களையும் பாதந்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று எங்கள் கை வந்து சேர்ந்தது. இதுவரை இல்லாமல் அனைவருக்கும் நான் வேடிக்கை பொருளாக, ஆணாய் இருந்தும் அடுத்தவர்களின் கேலியால், கூச்சம் தாளாமல் தலை குனிந்திருக்க, என்னவளோ எனக்குமேல் வெட்கப்பட்டு அங்கம் அங்கமாய் புல்லரித்து போய் நின்றிருந்தாள்.’

 

அதற்குமேல் சோதிக்க வேண்டாமென நினைத்த உறவினர்கள் அவளை தனி அறைக்கு அனுப்பிவிட, ஆரவ் மட்டும் முன்னும் பின்னும் உறவினர்கள் சூழ்ந்திருக்க நடுவீட்டில் கொலு பொம்மை போல் அமர்ந்திருந்தான். அதன் பிறகு அவன் எத்தனை முயன்றும் அவளை அவன் கண்ணில் காட்டவில்லை, கால் செய்தாலும் அவள் போனை எடுக்கவில்லை. மாலை நேரம் நெருங்க நெருங்க ஒருசில உறவினர்கள் வருகையால் வீடு நிற்க இடமின்றி நிறைய தொடங்கியது.

 

வீடு முழுவதும் விளக்குகளால் வெளிச்சம் நிறம்பி இருந்தாலும் அது அந்த வெண்ணிலவிற்கு ஈடாகிடுமா? நூறாவது முறையாய் ஆரவ் யோசித்தான், ‘அன்னிக்கி அவ சொன்னதுமே ஓடிப்போய் இருக்கலாமோ….’

Leave a Reply

%d bloggers like this: