Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 46

கல்கியின் பார்த்திபன் கனவு – 46

அத்தியாயம் 46
விபத்தின் காரணம்

சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. “இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்” என்று கேட்டாள். “ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்….” என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். “இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?” என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள். “சந்தேகமில்லை. குந்தவி! நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுபேருக்கு மரணம் சம்பவித்தது!” என்று சக்கரவர்த்தி சொன்னதும் குந்தவிக்குத் தூக்கி வாரிப்போட்டது.

 

“இதென்ன, அப்பா! எனக்கு ஒன்றும் தெரியாதே!” “ஆமாம்; உனக்கு ஒன்றும் தெரியாதுதான். அயல்தேசத்திலிருந்து வந்த இரத்தின வியாபாரி ஒருவனை நீ அரண்மனைக்கு வரச் சொன்னாயா?” “ஆமாம்? சொன்னேன், அது குற்றமா?” “அவனிடம் நீ யாரென்று உண்மையைச் சொல்லாமல், குந்தவி தேவியின் தோழி என்று சொன்னதுண்டா?” “உண்மைதான்; அதனால் என்ன?” “அதனால்தான் ஆபத்து வந்தது. அந்த இரத்தின வியாபாரிக்கு நீதான் சக்கரவர்த்தியின் மகள் என்று யாரோ பிறகு சொல்லியிருக்கிறார்கள். அவன் இதில் ஏதோ அபாயம் இருக்கிறதென்று மிரண்டு போய் விட்டான். மிரண்டு அன்றிரவே உறையூருக்குக் குறுக்குக் காட்டுப் பாதை வழியாகக் கிளம்பிப் போனான்…..” “உறையூருக்கா?” என்று குந்தவி கேட்ட குரலில் மிக்க ஆச்சரியம் தொனித்தது. “இல்லை, அப்பா! இரத்தின வியாபாரி காஞ்சிக்கு வராமல் உறையூருக்குப் போவானேன் என்று யோசித்தேன். அங்கே அரண்மனையில்கூட ஒருவரும் இல்லையே!” “அந்த இரத்தின வியாபாரியின் தாயார் உறையூரில் இருக்கிறாளாம். அவளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினானாம்….”

 

குந்தவி ஏதோ சொல்ல வாயெடுத்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு மௌனமானாள். அந்த இரத்தின வியாபாரி உண்மையில் விக்கிரமன்தானோ என்று அவள் மனத்தில் தோன்றியிருந்த சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. அந்தச் சந்தேகம் தன் தந்தைக்கும் ஒருவேளை தோன்றியிருக்குமோ என்று எண்ணினாள். தான் ஏதாவது பிசகாகப் பேசி அவருடைய மனத்தில் சந்தேகத்தை எழுப்பக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டாள். “என்ன, அம்மா! யோசனை செய்கிறாய்?” என்று சக்கரவர்த்தி கேட்டார். “ஒன்றுமில்லை, அப்பா! பழைய ஞாபகங்கள் வந்தன. உறையூருக்கு முன் தடவை நாம் போயிருந்ததை நினைத்துக் கொண்டேன்… இருக்கட்டும் அப்பா! அப்புறம் அந்த இரத்தின வியாபாரியின் கதையைச் சொல்லுங்கள்” என்றாள்.

 

“காட்டுப் பாதையில் இரவில் போகும்போது அவனைத் திடீரென்று நாலு பேர் வளைத்துக் கொண்டு வாளால் தாக்கினார்கள். ஆனால் அந்த இரத்தின வியாபாரி லேசுப்பட்டவன் அல்ல; மூன்று பேரை அவனே தீர்த்துவிட்டான். நாலாவது ஆள் இந்த வாளுக்கு இரையானான்!” என்று சக்கரவர்த்தி தம் வாளைச் சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும், “நீங்கள் எப்படி அங்கே அந்தச் சமயம் போய்ச் சேர்ந்தீர்கள்?” என்று கேட்டாள் குந்தவி. “இல்லாவிட்டால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய முடியுமா, குழந்தாய்?” “ரொம்பத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள்! ‘நரசிம்ம சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் திருட்டுப் புரட்டே கிடையாது!’ என்னும் கீர்த்தி என்ன ஆயிற்று? காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இவ்வளவு சமீபத்தில் திருடர்கள் ஒரு அயல் தேசத்து வியாபாரியைத் தாக்குவது என்றால்…!”

 

“நானும் உன்னைப் போல்தான் அவர்கள் திருடர்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், உண்மையில் அவர்கள் திருடர்கள் இல்லை.” “பின்னே யார் அவ்வளவு துணிச்சலாகக் காரியம் செய்தவர்கள்?” “திருட்டையும் வழிப்பறியையும் காட்டிலும் பயங்கரமான விஷயம் குழந்தாய்!” “என்ன, அப்பா!” “அந்த இரத்தின வியாபாரியை நன்றாய்ப் பார்த்தாயல்லவா?” “பார்த்தேன்.” “அவனைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?” குந்தவி மென்று விழுங்கிக் கொண்டு, “ஒன்றும் தோன்றவில்லையே!” என்றாள். “அவன் முகத்தில் இராஜ களையைக் கூடவா கவனிக்கவில்லை?” என்று சக்கரவர்த்தி கேட்டபோது குந்தவிக்கு அவர் விக்கிரமனைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தினால் உள்ளம் பதறியது. சக்கரவர்த்தி அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே, “நரபலி கொடுப்பவர்களுக்கு இந்த மாதிரி இராஜலட்சணம் பொருந்தியவன் கிடைப்பது மிகவும் அருமை!” என்றார். “ஐயோ!” என்று அலறினாள் குந்தவி. “அப்பா! நமது நாட்டில் இன்னுமா இந்தப் பயங்கரம்?” என்று கேட்டாள்.

 

“ஆமாம், குழந்தாய்! இந்தப் பயங்கர மூடநம்பிக்கைகளை வேரறுப்பதற்கு முயன்றுதான் வருகிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் வேரைக் களைத்தால் இன்னொரு இடத்தில் முளைத்து எழும்புகிறது.” “பாவம்! அந்த சாது இரத்தின வியாபாரிக்கு இப்படிப்பட்ட ஆபத்து வந்ததே! நீங்கள் அச்சமயம் அங்கே போயிராவிட்டால் என்ன ஆகியிருக்கும்?” “அவன் அப்படியொன்றும் சாது இல்லை, குந்தவி. அவனும் ஒரு திருடன்தான்; அதனால்தான் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டான்!” என்றார் சக்கரவர்த்தி. குந்தவிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. “நிஜமாகவா, அப்பா! இந்த இரத்தினம் எல்லாம் அவன் திருடிக்கொண்டு வந்ததா?” என்று கேட்டாள். “இல்லை, குந்தவி! அவன் இரத்தினம் திருடவில்லை. வேறொரு திருட்டுத்தனம் மாமல்லபுரத்தில் செய்யப் பார்த்தான்! நமது சிற்பிகள் சிலருக்கு ஆசைகாட்டி அவன் வசிக்கும் தீவுக்கு அழைத்துக் கொண்டு போக முயன்றான். இது எப்பேர்ப்பட்ட குற்றம் தெரியுமா, குழந்தாய்! இந்தக் குற்றத்துக்குத் தண்டனை என்ன தெரியுமா?” “தெரியும் அப்பா!”

 

“ஆகையினால்தான் அவன் தன்னுடைய முயற்சி வெளிப்படாதிருக்கும் பொருட்டு மூட்டை தூக்குவதற்கு ஒரு ஊமைக்குள்ளனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். ஆனால் அந்தக் குள்ளன்மேல் எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவன் கபாலிகர்களின் ஆள் என்று. அது உண்மையாகிவிட்டது. குள்ளன் இரத்தின வியாபாரியை ஏமாற்றி உறையூருக்கு வழி காட்டுவதாகச் சொல்லிக் காட்டுப்பாதை வழியாக அழைத்துப் போனான். நான் மட்டும் சரியான சமயத்தில் போய்ச் சேர்ந்திராவிட்டால்….?” சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். “அப்புறம் என்ன நடந்தது; அப்பா! இரத்தின வியாபாரி இப்போது எங்கே?” “சக்கரவர்த்தி, பின்னர் நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லி அவனைத் தம்முடைய குதிரை மீதே உறையூருக்கு அனுப்பி வைத்ததையும் தெரிவித்தார். குந்தவி சற்றுப் பொறுத்து, “இரத்தின வியாபாரி தங்களை இன்னாரென்று தெரிந்து கொண்டானா?” என்று கேட்டாள். “அவனுக்குத் தெரியாது. ஏன் கேட்கிறாய்?” என்றார் சக்கரவர்த்தி. “ஒன்றுமில்லை; வேஷம் எவ்வளவு தூரம் பலித்தது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்.” பிறகு குந்தவி, “அப்பா! ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றிருந்தேன்” என்றாள்.

 

“என்ன அம்மா!” “அண்ணா உறையூரே பார்த்ததில்லையல்லவா? நானும் அவனும் உறையூருக்குப் போக எண்ணியிருக்கிறோம்.” “ஆகா! ஆனந்தமாய்ப் போய்விட்டு வாருங்கள். உறையூர் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் மாரப்ப பூபதியைப் பார்த்தேன். அவன் எங்கே வந்தான்? உனக்கு ஏதாவது தெரியுமா?” “தெரியும், மாரப்ப பூபதியை நானும் அண்ணாவும் தான் வரச் சொல்லியிருந்தோம்…” “என்னத்திற்காக?” என்று சக்கரவர்த்தி அதிசயத்துடன் கேட்டார். “அச்சுதவர்மர் தமக்குத் தேகம் மெலிந்துவிட்டதென்றும், இராஜ்ய காரியங்களைக் கவனிக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார். அதன்மேல் அண்ணா மாரப்ப பூபதியை வரவழைத்து அவனுக்குச் சோழ நாட்டின் சேனாதிபதி பதவியைத் திரும்பவும் கொடுத்திருக்கிறான்.” “ஓகோ!” என்றார் சக்கரவர்த்தி மறுபடியும் அவர் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு அவருடன் பேசுவதில் பயனில்லையென்று, குந்தவி யாழை எடுத்துச் சோகம் பொருந்திய இசையை எழுப்பலானாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2

மருதாம்பா வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோயும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு

சாவியின் ஆப்பிள் பசி – 32சாவியின் ஆப்பிள் பசி – 32

ரயிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது சிங்காரத்தை ‘இறங்கு! இறங்கு!’ என்று சேட் சொன்னது, “நான் மாட்டேன்! நான் மாட்டேன்!” என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணாவின் கவனத்தில் பதியவில்லை. அவன் பார்வை நகரும் பிளாட்பாரத்தில் லயித்திருந்தது. தூரத்தில் தெரிந்த நுழைவாயில்