Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 10

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 10

நார்ப் பெட்டியும் கையுமாக பொன்னாச்சி, பாஞ்சாலி, சரசி, நல்லக்கண்ணு நால்வரும் சந்தைக்கு நடக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைச் செலவு சாமான் வாங்க அவர்கள் வந்திருக்கையில் அப்பன் பச்சையை வைத்தியரிடம் அழைத்து சென்றிருக்கிறார்.

“என்ன புள்ள மார்க்கட்டா?” என்ற குரல் கேட்டுச் சிலிர்த்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்க்கிறாள்.

சைக்கிளில் ராமசாமி! தலையில் சுற்றிய துண்டை மீறி முடிக்கற்றை வழிய, ஒரு நீல சட்டையும் அணிந்து ராமசாமி நிற்கிறான். அவன் கண்கள் சிவந்திருக்கின்றன. இரவு தூக்கமில்லை என்று அவன் முகம் பறையடிக்கிறது.

பொன்னாச்சிக்கு முகம் மலர்ந்தாலும் ஒரு கணத்தில் ஊசி பட்டாற் போல் குவிந்து விடுகிறது. பதிலேதும் பேசாமல் அவள் திரும்பி நடக்கிறாள். ‘இந்த ஆளை இப்ப யார் வரச் சொன்னது?” என்ற கோபம் அவளுள் துருத்திக் கொண்டு எழும்புகிறது.

சந்தைக் கும்பலில் அவள் புகுந்து நடக்கிறாள்.

அவன் அவளுடைய புள்ளிச் சேலையைக் குறியாக்கிக் கொண்டு அதே சைக்கிளுடன் தொடர்ந்து செல்கிறான். பக்கத்தில் இடிப்பது போல நெருங்கி, “ஏத்தா கோவமா?” என்று யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில் வினவுகிறான்.

கொட்டைப் புளி சவளம் சவளமாகத் தட்டில் மலர்ந்திருக்கிறது.

“எப்படிக் குடுக்கிறிய?”

“மூணு ரூவா.”

“அம்புட்டுப் புளியுமா? என்னாயா, வெல சொல்லிக் குடு?” என்று அங்கிருந்து ராமசாமி ‘ஆசியம்’ பேசுகிறான்.

அவளுக்கு ஓர் புறம் இனிக்கிறது; ஓர் புறம்… ஓர் புறம்.

ஐயோ! இவர் ஏன் நேற்று வரவில்லை?

பொன்னாச்சி புளியைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். பிறகு புளி நன்றாக இல்லை என்று தீர்மானித்தாற் போன்று விடுவிடென்று மிளகாய்க் கடைக்குச் செல்கிறாள். கடைக்காரனான முதியவன், “ஏத்தே! வெல கேட்டுட்டுப் போறியே, ரெண்டே முக்கால் எடுத்துக்க! புளி ஒருக்கொட்ட சொத்த ஒண்ணு கிடையாது!”

அவள் செவிகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. மிளகாய்க் கடையையும் தாண்டிப் போகிறாள்; சரசி, “அக்கா வளவி, வளவி வாங்கணும் அக்கா!” என்று கூவுகிறாள்.

“வளவிக் கடை கோடியில இருக்கு. அங்க வா போவலாம்!” என்று பாஞ்சாலி ஓடுகிறாள். சரசியும் ஓடுகிறது.

“ஏவுட்டி, ஏனிப்படி ஓடுறிய? வளவி கடாசில தா” என்று தடுத்து நிறுத்தப் பார்க்கிறாள். நல்லகண்ணுவோ, சீனி மிட்டாய்க்காக மெல்லிய குரலில் இராகம் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் தோளோடு உராயும் அண்மையில் வந்து அரிசிக் கடையில் நிற்கிறான்.

“இப்ப ஏன் பின்னாடியே வாரிய? தொணயிருப்பேன்னு சொல்லிட்டு வராம இருந்துட்டிய. பாவி குடிச்சிட்டு வந்து… தேரிக்காட்டுல கொலச்சிட்டுப் போயிட்டா. இனி யாரும் யார் பின்னயும் வராண்டா…”

அந்த மெல்லிய குரலில் வந்த சொற்கள் சந்தை இரைச்சலின் எல்லா ஒலிகளோடும் கலந்துதான் அவன் செவிகளில் புகுகின்றன. ஆனால் அது எல்லா இரைச்சலுக்கும் மேலான பேரிரைச்சலாக அவனது செவிப்பறைகளைத் தாக்கி அவனை அதிரச் செய்கிறது.

அவன்… அவன் மேட்டுக்குடி அளத்தில் சுமை தூக்குகையில் கையில் முதுகெலும்பு அழுந்த நொடித்து விழுந்து ஒருவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்ததைக் கேட்டு மாலையில் விரைந்து சென்று விட்டான். இருபது ஆண்டுகளாக அங்கே வேலை செய்யும் அந்த மனிதன் அளத் தொழிலாளி அல்ல என்று விசாரணையில் கூறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு அவன் அங்கு சென்றான். தனபாண்டியன், அங்குசாமி போன்ற பல தொழிலாளர் சங்கத் தலைவர்களைப் பார்த்து விவரங்களை சொல்வதற்காகவே சென்றிருந்தான். இப்போதும் அதற்காகவே அவன் தனபாண்டியன் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

“இனி யாரும் பின்ன வராண்ட. வரத் தேவையில்ல. தேவையில்ல…” என்றல்லவா சொன்னாள்!

அவன் அதிர்ச்சியினின்றும் விடுபடுமுன் அவள் அந்தப் பக்கத்தைக் கடந்து வேறு பக்கம் சென்று விடுகிறாள்.

சந்தை இரைச்சல்… வாங்குபவர் யார், விற்பவர் யார் என்று புரிந்து கொள்ள முடியாத இரைச்சல். சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர், கிராமம், பட்டினம், நாய், மாடு, சகதி, அழுகல், ஈக்கள் யாருமே எதுவுமே அவன் கண்களிலும் கருத்திலும் நிலைக்கவில்லை.

பாவி குடிச்சிட்டு வந்து… பாவி குடிச்சிட்டு வந்து… நாச்சப்பனா?

நரம்புகள் புடைக்கின்றன.

“உங்கள் உழைப்பை எல்லாம் அந்தக் காரில் வரும் முதலாளிக்குக் கொடுக்கிறீர்கள். பிள்ளை பெறுவரையிலும் உழைக்கிறீர்கள்” என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் விழிக்கவே அஞ்சும் இந்தப் பெண்கள்…

முதல் நாள் அந்தப் பெண்ணிடம் அந்தக் கணக்குப் பிள்ளை – மாண்டு மடிந்தவனின் மனைவியிடம், அம் முதலாளித் தெய்வத்தின் பூசாரியான கணக்கப்பிள்ளை, ‘இறந்த என் புருசன் அந்த அளத்தில் வேலை செய்யும் தொழிலாளியல்ல’ என்று எழுதிக் கொடுத்து அதன் கீழ் அவளைக் கையெழுத்துப் போடச் செய்திருக்கிறான். அதற்குக் கூலி அவனது ஈமச் செலவுக்கான நூறு ரூபாய். அவன் அளத்தொழிலாளியானால் நட்ட ஈடு என்று தொழிற்சங்கக் காரர்கள் தூண்டி விடுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாகக் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

“மக்கா*, (மக்கா – பையா) ஊருல ஒன்னொன்னு பேசிக்கிறாவ… நீ எதுக்கும் போவாண்டா. அளத்துல டிகிரி வேலை, மாசச் சம்பளம் எல்லாமிருக்கு. இங்க வூடுமிருக்கு, நீ ஆரு சோலிக்கும் போவண்டா. என் ராசா” என்று பேதமையுடன் கெஞ்சும் தாயை நினைத்து இரங்குகிறான். தான் சந்தைக்கு எதற்கு வந்தானென்று புரியாமல் சுற்றி வருகிறான். நினைக்கவே நெஞ்சு பொறுக்கவில்லை. வெய்யோன் என்னாச்சி தானென்று தனது வெங்கிரணங்களால் தென்பட்ட இடங்களில் எல்லாம் ஈரத்தை உறிஞ்சுகிறான். சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் குழுமுபவர்கள் முக்காலும் உப்பளத் தொழிலாளர் தாம். இவர்கள் சூரியன் மேற்கே சாய்ந்தால் வெளிக் கிளம்பமாட்டார்கள். ஆணானாலும் பெண்ணானாலும் நேர்ப்பார்வை பார்க்க மாட்டார்கள். கீழ்ப்பார்வை, அல்லது சரித்துக் கொண்டு பார்க்கும் கோணல் பார்வையால் தான் உலகைக் காண வேண்டும். முடியில் உப்புக் காரம் ஏறி ஏறிக் கருமையும் கனமும் தேய்ந்து நைந்து விட, முப்பது முப்பத்தைந்துப் பருவத்திலேயே முடி பதம் பண்ணிய தேங்காய்ப் பஞ்சு போலாகி விடுகிறது.

பஸ் நிறுத்தத்தில் ஒரு கங்காணியும் ஏழெட்டுத் தொழிலாளரும் நிற்கின்றனர். வாய் திறக்காமல் பெண்கள் நடைபாதையில் குந்திக் கிடக்கின்றனர். புருசன் வீடு, குழந்தைகள் என்ற மென்மையான தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொண்டு இந்த நடைபாதையில் சுருண்டு கிடக்கின்றனர். எப்போது சாப்பாடோ, குளியலோ, தூக்கமோ? லாரிக்காகக் காத்திருப்பார்கள். லாரி எப்போது வந்தாலும் சுறுசுறுப்புடன் சென்று பசி எரிச்சலானாலும் உழைக்க வேண்டும். அப்போது காசு கிடைக்கும். காசைக் கண்டபின் அந்தத் துண்டிக்கப்பட்ட பாச இழைகள் உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கும்.

“புள்ளக்கிக் காயலாவாயிருக்கு கொஞ்ச நேரம் முன்ன போகணும்” என்றால் நடக்குமா? இல்லை என்றால் வேலை இல்லை. கெஞ்சலுக்கெல்லாம் இங்கே இளகும் நெஞ்சங்கள் கிடையாது.

“பாத்திக் காட்டில் ஆம்பிளயக் காட்டிலும் கால் தேய நீங்கள் பெட்டி சுமக்கிறிய. ஆனா ஒங்களுக்கு ஆம்பிளக் கூலி கிடையாது. நினைச்சிப் பாருங்க. ஒங்களுக்கு எத்தனை கஷ்டமிருக்கு? நீங்கள்லாம் கூடிச் சங்கத்திலே ஒரு குரலா முடிவெடுத்து ஏன் எதிர்க்கக் கூடாது!” என்று அவன் அன்னக்கிளி, பேரியாச்சி எல்லோரிடமும் வாசலில் குந்தியிருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேசுவான்.

சங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டு போவார்கள்.

“சங்கமின்னு காரூவா பிரிச்சிட்டுப் பிரிச்சிட்டுப் போவா. அதொண்ணும் வராது. சங்கந்தா ஒப்பனக் கொன்னிச்சி…” என்று பேரியாச்சி அவன் தாய்க்கு ஒத்துப்பாடுவாள்.

“சங்கம் சேந்து போராடினால், சம கூலி மட்டுமில்லை, பேறு கால வசதி, ஆசுபத்திரி மருத்துவ வசதி, பிள்ளைப் பால், படிக்க வசதி, நல்ல சாப்பாடு, ஓய்வு காலப் பென்சன், குடியிருக்க வசதியான வீடு, சம்பளத்துடன் லீவு…” என்று அவன் அடுக்கினால் அவர்கள் சிரிப்பார்கள். “வெடலப் புள்ள அகராதியாப் பேசுதா…” என்பார்கள்.

பேரியாச்சிக்குக் காலில் ரணம் காய்ந்த நாளேயில்லை.

“ஆச்சி, செருப்புப் போட்டுக்கிட்டு பாத்தில நின்று கொத்திவிட்டா என்ன?” என்று அவன் அவள் வாயைக் கிளறுவான்.

“சீதேவிய, சீதேவிய செருப்புப் போட்டு மிதிக்கவா?” என்பாள்.

“அப்ப மண்ணுகூடச் சீதேவி தா. அதுலதா வுழறோம், எச்சித் துப்பறோம், அசிங்கம் பண்றோம். அதெல்லாம் செய்யக் கூடாதா?”

“போலே… கச்சி பேசாம போ!” என்பாள்.

பொன்னாச்சி… பொன்னாச்சி! நீ வித்தியாசமான பெண் என்று அவன் நினைத்திருந்தானே? …உன்னை… அந்தப் பேய்… நாச்சப்பன்.

நெற்றியிலிருந்து வேர்த்து வடிகிறது. தந்தியாபீசு முனையில் சுப்பையா அவனைத் தடுத்தாட் கொள்கிறான்.

“ராமசாமி, ஒன்னத் தேடிட்டுத் தாம்பா வந்தே. சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்ம வீட்டில கூடுறோம். தெரியுமில்ல?”

“அது சரி பொண்டுவள்ளாம் வாராவளா கூட்டத்துக்கு?”

சுப்பையா விழித்துப் பார்க்கிறான்.

“பொண்டுவளா? எதுக்கு?”

“எதுக்குன்னா, பேசத்தான்! அவங்க பிரச்சினையும் இருக்கு பாரு?”

“அது சரிதா… அவளுவ வந்து என்ன பேசுவா? ஞாயித்துக்கிளம, தண்ணி தவிசு கொண்டார, துணி துவைக்க, புள்ள குளிப்பாட்ட, எண்ண தேச்சி முழுவ இதுக்கே நேரம் பத்தாதே? அதுமிதும் போச்சின்னா பாதி பேரு சினிமாக் கொட்டாயிக்குப் போயிடுவா? பொண்டுவள்ளாம் வரமாட்டா…”

“இல்ல அண்ணாச்சி, நாம என்ன செஞ்சாலும் பொண்டுவளச் சேக்கலேன்னா புண்ணியமில்ல. நாம கண்ணுக்கு பாதுகாப்பு வேணும், மேஜோடு குடுக்கணும், ஒரு நா வாரத்தில் சம்பளத்து லீவு, பிறகு ஒன்பது நாள் விசேச லீவு, போனசு, வருசம் முச்சூடும் தொழில் பாதுகாப்பு, இதெல்லாம் கேட்டா மட்டும் பத்தாது. பாத்திக் காட்டில் வேலை செய்யும் தாய்மார், தங்கச்சிய, இன்னிக்கு எந்தவிதமான பத்திரமும் இல்லாம இருக்காங்க. புருசமாரா இருக்கிறவங்களும் அவங்களுக்குப் பாதுகாப்பா இல்ல. அண்ணன் தம்பியும் பாதுகாப்பு இல்ல. கோழிக்குஞ்சைக் கூடத் தாய்க்கோழி சிறகை விரிச்சி மூடிப் பருந்திட்ட இருந்து காப்பாத்துது. நம்ம மனுச இனத்தில் நம்ம பொண்டுவ, கழுகும் பருந்துமாக இருக்கும் மனிசங்ககிட்ட தப்ப முடியாம தவிக்கிறாங்க. இதுக்கு நாம வழி செய்யண்டாமா? நமக்கு மானம் இருக்கா? நீங்க சொல்லுங்க அண்ணாச்சி, நாம தமிளன் மானம், இந்தியன் மானம்னு அளவாப் பேசுதோம்! பொண்டுவளக் கூட்டாம சங்கக் கூட்டமில்ல… அவங்களைக் கூப்பிடணும், அவங்களுக்கு நாமதா தயிரியம் சொல்லணும்…”

இந்தப் புதிய வேகத்தின் ஊற்றுக் கண் எப்போது பிறந்ததென்று புரியாமலே சுப்பையா பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ராமசாமி வெறும் பேச்சாகப் பேசவில்லை.

அவனுடைய மூலாதாரத்திலிருந்து புறப்பட்டதோர் எழுச்சியாகவே அந்தக் குரல் ஒலிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 8சாவியின் ஆப்பிள் பசி – 8

வாசலில் ஓட்டல்காரர் மகள் லல்லு நின்று கொண்டிருந்தாள். ‘அச்சச்சோ’ போல, கையால் முகத்தை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பிறகு தாவணி தடுக்காமலிருக்க ‘ததக் பிதக்’ என்று காலை வைத்து உள்ளே வந்தாள். வக்கீல் மாமி கோமளத்திற்குக் கதி கலங்கிற்று. அவள்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14

ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மை சூட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் ‘கொடை’ நாட்கள். ‘பனஞ்சோலை’ அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. ‘கண்ட்ராக்ட்’ தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து