Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 52

பாகம் – 52

ன் இதழ்கள் படைக்க பட்டது உன்னை முத்தமிட மட்டுமே என்ற எண்ணத்தில் முத்தங்களை வஞ்சனையின்றி வாரி வழங்கி கொண்டிருந்தான் அவன். தன்னிதழ் படைக்க பட்டதே தன் தலைவன் பசியாறிட என நினைத்த அவளும் தன் இதழ்களை அவன் பொறுப்பில் கொடுத்துவிட, நெடுநேரம் வரை நான்கு இதழ்களின் கை குலுக்கல் அந்த கல் மண்டபத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது. இடையிடையே பப்லு வேறு தன் கையை தூக்கி இருவருக்கும் நடுவில் போட்டு ‘கீப் டிஸ்டென்ஸ்….’ என்று அதிகாரமிட்டு அழிச்சாட்டியம் செய்தான்.

 

ஆரவ், “டேய், செல்லம்… குட்டிம்மா… டைம் மிட் நைட்ட தாண்டி இருக்கும்டா. வா வீட்டுக்கு போகலாம்.”

 

அவனோடு பிணைந்து கிடந்தவள், “ம்ஹூம்… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போவோம் ஆரவ்.”

 

“குளிர் காத்து அடிக்க ஆரம்பிக்குதுடா, உனக்கு ஒத்துக்காதுல, சொன்னா கேளு. வாடா எழுந்திரி…” என்று அவளை எழுப்பி அமர்த்தி, வந்த வழியிலேயே வந்து சென்றதற்கான எந்த சுவடுமின்றி திரும்பி சென்றார்கள். அவன் சொன்னது சரிதான், மணி இரண்டை நெருங்கி இருந்ததால் மற்றவர்கள் அசந்து உறங்க, இருவரும் தங்களது அறைக்கு சென்று அமைதியாக படுத்து கொண்டார்கள்.

 

நேற்றைப்போலே இன்றும் புதுப்பொலிவுடன் காலை புலர, நேற்றைய சம்பவத்தின் முக்கிய காரணிகள் மூன்றும் இன்னும் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தது. ஆரவ், பார்பி, யஷ்மித்தை தவிர மற்றவர்கள் அனைவரும் எழுந்து கீழே சென்று விட்டார்கள். மணி ஏழை நெருங்கிய நேரம் தூங்கி கொண்டிருந்த யஷ்மித்தை, டீ கப்புடன் வந்து தட்டி எழுப்பினாள் ஜனனி.

 

யஷ்மித், “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்டா…” என்ற உளறலோடு கண்ணை திறக்கவே முடியமல் சிரமப்பட்டான் அவன்.

 

ஆழ்ந்த உறக்கத்திலும் ஆண்மை பொங்க துயிலும் அவனின் அலைகடலென புரளும் கேசத்தை வருடியவள், “எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு யஷ்மித்…” என்றதும் பதறி சிதறி கண்களை திறந்தான்.

 

“ஏய், என்ன சொல்ற?…” அத்தனை தூக்க கலக்கத்திலும் கோபமாக வந்தது அவன் வார்த்தைகள்.

 

ஜனனி, “ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? எல்லாருக்கும் மனசில ஒரு ட்ரீம் பாய் இருப்பான். என்னோட மனசில இருந்த உருவத்துக்கு 99% நீங்க ஒத்து போறீங்கன்னு தோணுச்சு. பட் நான் ஒண்ணும் உங்கள லவ்வெல்லாம் பண்ணல, நீங்க போனதுக்கு அப்புறமும் உங்களையே நினைச்சு அழுதுட்டு இருக்க மாட்டேன். எனக்கு உங்க மேல ஜஸ்ட் க்ரஷ் அவ்ளோதான், ஸோ இங்க இருக்குற வரைக்கும் நான் அப்பப்போ கொஞ்சம் சைட் அடிப்பேன், அத நீங்க கண்டும் காணாம இருந்துக்கோங்க, ஓகே…” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

 

அவன், “அட போங்கடா….” என மீண்டும் திரும்பி படுத்து உறங்கி விட்டான். ஏழே முக்காலுக்கு எழுந்தவனுக்கு தான் கண்டது கனவா நனவா என முதலில் புரியவில்லை. டீ கப் எதுவும் தன் அருகில் இல்லாததால் அதை கனவென்று முடிவு செய்தவன், தன்னருகே இன்னும் குப்புற படுத்து உறங்கும் ஆரவ்வை கண்டதும் கோபம் தலைக்கேறியது. யஷ்மித் அவன் பின்னால் ஓங்கி ஒரு மிதி மிதித்து, “உன்னால நேத்து ராத்திரி முழுக்க சண்ட போட்டு ஓஞ்சு போன நானே எந்திரிச்சுட்டேன், ஐயா இன்னும் சுகம்மா தூங்குறீகளோ? எழுந்திரிடா…” என்று எழுப்பி விட்ட பிறகு பாத்ரூம் பக்கம் போக, அவனை திட்டிக்கொண்டே ஆரவ்வும் எழுந்து தயாராக தொடங்கினான்.

 

எட்டு மணிக்கு அவர்கள் இருவரும் தயாராகி கீழே வர, அங்கே ஸ்கூல் செல்ல மறுக்கும் மூவருக்கும் (கார்த்தி, ஶ்ரீ, ஜனனி) தடபுடலான அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நந்தினி அத்தை, “டெய்லி எல்லாம் லீவு போட கூடாது, ம்.. ம்.. சீக்கிரமா சாப்ட்டு கிளம்புங்க மூணு பேரும். டைம் ஆச்சு பாரு…” என ஒருபக்கம் பரபரக்க, இன்னொரு புறம் வித்யா ஜனனிக்கு அவசரமாக ஜடை கட்டி கொண்டிருந்தாள். வீட்டு ஆண்கள் வழக்கம் போல் ஏற்கனவே வெளியேறி இருக்க பெண்கள் கிச்சனில் வழக்கம் போல சமையலில் தங்களது கை வண்ணத்தை காட்டி கொண்டிருந்தார்கள்.

 

யஷ்மித், ‘நேத்து நடந்தது எதையும் தாத்தா யாருகிட்டயும் சொல்ல போல’ என்று இலகுவாக சாய்ந்தமர்ந்தான். டீ வந்ததும் யஷ்மித் மனதில் அவன் கண்ட கனவு வந்து நிழலாட, யாரும் அறியாமல் சந்தேகமாக ஜனனியை பார்த்தான். அவளோ டீவியில் ஹிப் ஹாப் ஆதியின் வாடி புள்ள வாடி என்ற பாடலில் லயித்து தன்னை மறந்து தலையாட்டி ரசித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

 

யஷ்மித், ‘சீ சீ இருக்காது, அவ ரொம்ப சின்ன பிள்ள, நான் தான் ஏதோ கெட்ட கனவு கண்டிருக்கேன் போல’ என தனக்குத்தானே விளக்கம் கொடுத்து கொண்டான்.

 

ஆரவ் பார்பியை காணாமல் தேடி செல்ல தயங்கி, தனக்கு டீ கொண்டு வந்து தந்த அவளின் அம்மா ரேவதியிடம், “பார்பி எங்க காணும்?” என்றான்.

 

ரேவதி, “அவ இன்னும் தூங்குறா தம்பி, எழுப்ப எழுப்ப எந்திக்கலயாம். நீங்க டீ குடிங்க…” என்றதும் அமைதியாய் அவன் போய் மற்றவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

 

ஜனனி யூனிபார்ம் அணிந்து வந்து ஸ்கூல் பேக்கை மாட்டியபடி, “அம்மா நாங்க கிளம்புறோம், பாய்ம்மா…” என்று அம்மாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு அண்ணன்களின் பின்னால் சென்றாள். சில அடிதூரம் வெளியே சென்று மெல்ல தலை சாய்த்து நின்றவள், யஷ்மித்க்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் டாட்டா காட்டிவிட்டு துள்ளி ஓடியதை கண்டதும், குடித்த டீ பொறை ஏறிப்போக சில நிமிடங்களுக்கு மின்சார தாக்குதலுக்கு ஆளாகிய மீன் குஞ்சாக அதிர்ந்து இருந்தான் அவன்.

 

ஆரவ் பாதி டீ குடித்திருந்த நேரம் அவனுக்கு பின்னால் மல்லிகா சித்தி, “ஏன்டி இப்டி முடியில ஈரம் சொட்ட சொட்ட வந்து நிக்கிற?… சளி புடிச்சுக்க போவுது. போ முதல்ல வெயில்ல நின்னு நல்லா தலைய துவட்டிட்டு வா” என்றதும் பார்பி, “சரிங்க சித்தி…” என்றுவிட்டு கிச்சன் வழி புகுந்து வீட்டின் பின் பக்கம் சென்று விட்டாள்.

 

ஆரவ் அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு போனில் ஏதோ முக்கியமாய் நோண்டுவதை போல யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து வீட்டின் பின் புறம் நகர தொடங்கினான். பாவம்… அந்த ஹாலில் இருந்த ஒரு டஜன் கண்களும் அவனைத்தான் கண்காணிக்கின்றன என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பார்பி வெளியே இல்லாத வெயிலில் தலை முடியை உலர்த்தி கொண்டிருக்க, ஆரவ் அவளருகில் வந்து நின்று, “ஒரு ஹேர் டிரையர் வாங்குறத விட்டுட்டு இப்டியா கை வலிக்க கஷ்ட படுறது?” தான் குடித்து கொண்டிருந்த டீயை அவள் கையில் கொடுத்து விட்டு, டவலினால் அவள் கூந்தலை தான் உலர்த்த தொடங்கினான்.

 

பார்பி, “அப்டி ஒண்ணு இருக்குறதே, நீங்க வந்ததுக்கப்புறம் தான் நான் தெரிஞ்சுகிட்டேன்.”

 

ஆரவ்வை போலவே, தாத்தாவும் யாருக்கும் தெரியாமல் கிச்சன் ஜன்னலின் வழி திருட்டு தனமாக வெளியே எட்டி பார்த்தார். அங்கே அவன் அவளுக்கு தலை துவட்டி விட, அவள் அவனின் மீதி பாதி டீயை தான் பருக என அவர்கள் இருவரும் ஏதோ புதுமண தம்பதிகள் போல உலகம் மறந்து கொஞ்சி குலாவி கொண்டிருந்தார்கள். அவள் தலை உலர்ந்ததும், அவளை உள்ளே அனுப்பி விட்டு, ஆரவ் மட்டும் வீட்டின் முன் வாசல் பக்கம் சென்று வந்தான். கையில் இரண்டு லேப்டாப் பேக்குடன் அவன் திரும்பி வர, ரிஷியும் வஜ்ராவும் ஆளுக்கொன்றாய் எடுத்து ஏதோ சில வேலை செய்தார்கள். அதன் பின் ஆரவ்வும் பிரித்வியும் சில நிமிடங்கள் அதில் ஏதோ குடைந்திட, இறுதியாக யஷ்மித்தும் ஏதோ செய்து கொண்டிருந்தான். அனைத்தையும் கண்காணித்து கொண்டிருந்த தாத்தாவுக்கு, அதெல்லாம் எங்கிருந்து வந்தது? யார் தந்தது? என கேட்க வேண்டும், ஆனால் முடியவில்லை.

 

திடீரென யஷ்மித் லேப்டாப்பில் யாருடனோ வீடியோ சாட் செய்து கொண்டிருக்க, மற்றவர்களும் அவனுடன் இணைந்து ஜாலியாக பேச தொடங்கினார்கள். தாத்தா, ‘யாராவது அவனுங்க பிரண்டா இருக்கும்’ என்றே அதுவரை நினைத்திருக்கையில், யஷ்மித் திடீரென எழுந்து அந்த லேப்டாப்பை தூக்கி கொண்டு தாத்தா அருகில் வந்தான். லேப்டாப்பை அவர் பக்கம் திருப்பி பிடித்து, “ஸ்வீட்டி மீட் மை கிரான்ட் பா…” என அவருக்கு காட்டிட அதில் தெரிந்தது, இந்திய பிரதமர் வசுந்தரா.

 

பிரதமர் வசுந்தரா, “நமஸ்தே ஜி…” என்றதும், தாத்தாவின் கைகள் தானாகவே வணக்கம் வைத்துவிட, அதன்பிறகு பிரதமர் பேசியது எதுவும் மனதில் பதியாமல் தாத்தா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார். அவர் பயம் புரிய யஷ்மித் பிரதமரிடம் பேச்சை மாற்றி விட்டு லேப்டாப்புடன் தனியாக போய் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு அதிர்ச்சி விலகியதும் தாத்தா பிரித்வியை சைகை காட்டி அழைத்து, “அது நெஜமாவே நம்ம பிரதமர் வசுந்தரா தானா?” என்றார்.

 

பிரித்வி, “ஆமா தாத்தா, மூணு மாசம் முன்னாடி நாங்க ஆஸ்ட்ரேலியால கப் வின் பண்ணோம். அதுல இதுவரைக்கும் கிரிக்கெட் வரலாற்றுல இல்லாத அளவுக்கு நிறைய ரெக்கார்ட்ஸ் கிரியேட் பண்ணதால பிரதமரே எங்கள நேரடியா கூப்பிட்டு பாராட்டி விருந்து குடுத்தாங்க. எல்லாரும் மரியாதையா பேசிட்டு இருக்கும் போது யஷ்மித் மட்டும் ஒரு இடத்துல நிக்காம ஆடிக்கிட்டும் ஓடிக்கிட்டும் குரங்கு சேட்டை பண்ணிட்டு இருந்தான். அவன பாத்ததுமே அவங்களுக்கு ரொம்ப புடிச்சிடுச்சு. எப்பவும் அவன் பேச ஆரம்பிச்சாலே அவங்க வொர்க் டென்ஷன் எல்லாம் மறந்து சிரிச்சிடுவாங்க, அதுக்காகவே அடிக்கடி அவனுக்கு கால் பண்ணிடுவாங்க.” என்றான் சர்வ சாதாரணமாய்.

 

தாத்தா, ‘இவனுங்களால எப்டி இப்டி இருக்க முடியுது. ரிஷி கேப்டன் பொறுப்பு தன் கைக்கு வந்தாலும் ஆரவ்தான் கேப்டன் ஆகனும்னு ஆசையா சொல்றான். இந்த பிரித்வி என்னடான்னா தனக்கு கிடைக்க வேண்டிய வைஸ் கேப்டன் பதவிய யஷ்மித்க்கு விட்டு குடுத்திருக்கான். வஜ்ரா இப்ப டீம்ல இல்லனாலும் ஆரவ்க்காக இவ்ளோ தூரம் கஷ்ட படுறான். பெரிய பெரிய ஆளுங்க கூடல்லாம் பழக்கம் இருந்தும், பெருமையா வெளியில சொல்லிக்கவே மாட்டிக்கிறானுங்க….’

 

அவர் யோசனையை தடை செய்யும் விதமாக ஆரவ் இரண்டு லேப்டாப்களையும் திருப்பி கொடுக்க எடுத்து சென்றதை கண்டார். கேட் வரை சென்றவன் அங்கே ஒரு ஆளிடம் அதை கொடுப்பதை, கதவின் பின் ஒளிந்திருந்த தாத்தா நன்றாகவே கவனித்து கொண்டார். அந்த புதிய ஆள் பக்கத்தில் இருக்கும் புது ஆபீஸ்ஸில் வேலை பார்ப்பவன் என தெரிந்ததும், தாத்தா நண்பர்கள் ஐவரும் பிரேக் பாஸ்ட் சாப்பிட அமரும் வரும் வரை காத்திருந்து, அவர்கள் டைனிங் டேபிளில் அமர்ந்ததும் நைசாக வெளியேறினார்.

 

ஓட்டமும் நடையுமாக அந்த புது ஆபீஸ்ஸை அவர் அடைந்தததும், ஒருவன் வந்து, “வாங்க ஐயா, என்ன வேணும்?” என்றான் மரியாதையாய்.

 

தாத்தா, “ஆரவ் தம்பி இப்ப உங்ககிட்ட கம்ப்யூட்டர் குடுத்துச்சில்ல, அதுல ஒண்ணு திரும்ப வேணுமாம். அதான் நான் வாங்கிட்டு போக வந்தேன்.”

 

அந்த ஒருவன், “இந்தா கொண்டு வர சொல்றேன். டேய்… சத்யா உள்ள இப்ப நான் வச்சதில இருந்து ஒரு லேப்டாப்ப மட்டும் எடுத்துட்டு வாடா…” என்றான்.

 

தாத்தா, “உங்களுக்கு ஆரவ்வ எத்தன நாளா தெரியும்?”

 

அவர் தன் திறமையை சோதிப்பதாக எண்ணிய அவன், “மூணு மாசத்துக்கு முன்னாடி எங்கள வேலைக்கு எடுத்தப்போதான் தெரியும். அதுக்கு முன்னாடி நான் ஒரு சினிமா ஹீரோக்கு பாடிகார்டா இருந்தேன் ஐயா.” என்று பெருமையாக சொல்ல, தாத்தா அப்போதுதான் கவனித்தார் அங்கிருப்பவர்கள் அனைவருமே வாட்ட சாட்டமாக அடியாள் போலிருப்பதை.

 

தாத்தா, “சரி தம்பி, நான் வர்றேன்” என கிளம்பியவர் மனதில், ‘மூணு மாசமா எங்கள ஆள் வச்சு கண் காணிச்சிருக்கானா? அப்போ மூணு மாசம் முன்னாடியே எங்கள தெரியுமா? அத்தன நாள் முன்னாடியே சந்தனாக்கு ஞாபகம் வந்திருக்குனா பாட்டி செத்ததும் அவளுக்கு தெரிஞ்சிருக்குமே. ஏன் இத்தன நாளா வராம இருந்தாங்க? நேத்து யஷ்மித் சந்தனாவ அடைச்சு வச்சிருந்ததா சொன்னான்ல, அப்டின்னா…’ அவருக்கு தலையே வெடிக்குமளவு சிக்கலாக தோன்றினான் ஆரவ். வீட்டிற்குள் நுழைந்தவர் ஓய்ந்து போய் அமர்ந்து விட, ஆரவ் சத்தமின்றி சைகையால் சந்தனாவை மிரட்டி கொண்டிருந்தான்.

 

ஆரவ், ‘ஏற்கனவே நீ டீ குடிச்சிட்ட, இத குடிக்காத’ என விரல் நீட்டி மிரட்ட, அவள், ‘ஒரே ஒரு கிளாஸ் ப்ளீஸ்…’ என கெஞ்சினாள். அவன், ‘முடியாதுன்னு சொல்லிட்டேன்’, என கோபமாக அவள் புறம் திரும்பாமலே போனில் தலையை நுழைத்து கொள்ள, தோல்வியை ஒத்துக்கொண்டு அவள் போய் ஜூஸ் எடுத்து வந்து அமர்ந்தாள். அவன், ‘இதுதான் சரி’ என்று புன்னகையோடு தலையசைத்து காட்ட, அவள் வக்கனைத்து விட்டு அதை பருகினாள். இதையெல்லாம் மற்றவர்களை போலவே தாத்தாவும் தன் ஓரக்கண்ணால் பார்த்திருக்கையில், வெளியே மணிச்சத்தம் கேட்டது.

 

“பப்லு வந்துட்டான், நான் போய் அவனுக்கு கொஞ்சம் ப்ரூட்ஸ் குடுத்துட்டு வர்ரேன்” என்று அவள் ஓட, அவனும் அவள் பின்னாலேயே ஊர்ந்தான். தாத்தா மீண்டும் ஜன்னலின் வழி எட்டி பார்க்க, அவர் தன் கண்ணால் கண்டதை மூளை ஏற்க மறுத்துவிட்டது. அங்கே பப்லு ஆரவ் கையால் பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தது, (அது இதுவரை வேறு யார் உணவளித்தாலும் சாப்பிட்டு பழக்கமில்லாதது என்பது கூடுதல் தகவல். நேற்றிரவே அது கட்சி மாறியது அவருக்கு தெரியாதல்லவா…) அவனால தலைய பிச்சுக்கலாம் போல ஆனார் தாத்தா. மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல்  அவர் யோசனையோடு ஹாலில் அமர்ந்து இருக்கையில், திடீரென ஏழெட்டு பேர் வெட்டருவா, வேல் கம்புடன் மதமதவென உள் நுழைந்தார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: