Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 50

பாகம் – 50

யிருக்கு போராடிய தங்கள் வீட்டு பெண்ணை காப்பாற்றி கரை சேர்த்து கணவனாகவும் மாறியவனை, அந்த வீட்டு உறவுகள் மூத்த மாப்பிள்ளையாய் மதித்து கொண்டாடினார்கள். முழுக்க முழுக்க தன்னை தனக்காக மட்டுமே ஏற்று கொண்ட உறவினர்களின் கவனிப்பால், இன்று புதிதாய் பிறந்ததை போல ஆரவ்வும் திளைத்து திகட்டியிருந்தான். காலை உணவிற்காக டைனிங் டேபிளில் மொத்தமாய் ஆண்கள் எட்டு பேர் ஒன்றாய் கூடி அமர்ந்திட்டனர்.

 

அந்த பக்கமாய் உலவி கொண்டிருந்த ஜனனியை பார்த்து ஆரவ், “ஜனனி நீயும் சாப்பிட வாம்மா…” என்றிட அவள் அவன் காதில் ரகசியமாய், “மாமா இந்த வீட்ல ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகுதான் லேடிஸ் சாப்பிடுவோம். பசிக்குதுனு கேட்டாலும் இரக்கமே இல்லாம எதுவும் தரமாட்டாங்க, கல் நெஞ்சுகாரங்க…” என்றாள்.

 

ஆரவ்க்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ, பரிமாற வந்த நந்தினியிடம், “ஜனனியும் என்கூட சாப்ட்டாத்தான் நான் சாப்பிடுவேன்…” என்றான். நந்தினி எதையோ சொல்ல வாயெடுக்கும்முன் ஆரவ் முகம் இறுக, “நாங்கள்ல்லாம் அவள விட பெரியவங்க, லேட்டா எழுந்திருச்ச எங்களுக்கே இப்ப பசிச்சிடுச்சு, பாவம் அவ சின்ன பொண்ணுங்க. நாங்க சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் அவ சாப்பிடனும்னா இன்னும் எவ்ளோ நேரம் அவ பட்டினியா இருக்குறது?” என்றான்.

 

நந்தினிக்கு வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளையாகிய அவனை எதிர்த்து பேச முடியாமல், “சரி, வா ஜனனி, நீயும் சாப்பிடு…” என்றார். ஜனனிக்கு ஏகபோக குஷி, தன் அம்மாவை மிரட்டவும் தனக்கு தோதாகவும் வீட்டிற்குள் ஒரு ஆள் வந்ததில்.

 

ஆரவ்வின் அருகிலேயே சேர் போட்டு அமர்ந்தவள், “ம்… பசி உயிர் போகுதும்மா… சீக்கிரமா சாப்பாட்ட கொண்டுவாங்க…” என டைனிங் டேபிளை தட்டி வம்பு செய்தாள்.

 

குண்டு குண்டு இட்லி, கெட்டி சட்னி, மணம் வீசும் சாம்பார், பஞ்சு போன்ற மெதுவடை, இதுவரை பார்த்திராத நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய் வாசனையோடு தடிமனான தோசைகள் என காலை நேரத்து உணவு அவர்களிடையே ஜெக ஜோராக களை கட்டியது.

 

இடை இடையே, “சட்னி வேணும், ஒரு ஆம்லேட் போடுங்கம்மா, தண்ணி காலி” என அதிகாரம் செய்யும் ஜனனியை பார்த்து, யஷ்மித், “இப்பத்தான் தெரியுது உன்ன ஏன் கடைசில சாப்பிட சொன்னாங்கன்னு” என்றான்.

 

ரிஷி, “டேய் கொஞ்சம் அளவா சாப்பிடுங்கடா, இப்டியே போனா ஹெல்த்து பிட்னஸ் எல்லாம் அவ்ளோதான்…” என்றான்.

 

ஶ்ரீ, “மாம்ஸ் நாம வேணும்னா சாப்ட்டு ஒரு வாக் போகலாம், பக்கத்தில கிணறுகூட இருக்கு, ஸ்விம் பண்ணிக்கலாம். இப்ப ஜாலியா சாப்ட்டு என்ஜாய் பண்ணுங்க…” என்றிட, அதுவும் நல்ல யோசனைதான், என ஐவருக்கும் தோன்றியது. உணவை முடித்தபின் கிணற்றை நோக்கி ஆண்கள் எல்லாம் பெரிய படையாய் கிளம்பினார்கள்.

 

ஆரவ், “நீங்கள்லாம் இந்த பேச்சு பேசுறீங்க, ஆனா சந்தோஷ் மட்டும் பேசவே மாட்டிக்கிறான்?”

 

ஶ்ரீ, “சந்தோஷ் எப்பவுமே இப்டிதான் மாமா, தனிமை விரும்பி. அவனுக்கு சேர்க்கை சரியில்ல மாமா, பெரியப்பாங்க கூடவே தான் எப்பவும் இருப்பான், அதான் அவங்க குணம் அப்டியே வந்திருக்கு. ஆனா சந்தனா அக்கா ஜாலி டைப், ஒரு தடவ கேட்டா போதும், செஞ்சுட்டு இருக்குற வேலைய விட்டுட்டு எங்க கூட உக்காந்து ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. ஆனா இவன் நாங்க கெஞ்சி கூப்டாகூட எங்களோட ஒட்டவே மாட்டான், அதுக்கும் மீறி கூப்ட்டா பயபுள்ள அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவான்.”

 

ஆரவ் அவன் பேச்சை கேட்டு கொண்டே முகத்தில் மாஸ்க்கை எடுத்து மாட்டுகையில், கார்த்தி, “இந்த மாஸ்க் எல்லாம் தேவையில்லை மாமா, நம்ம வீடே கொஞ்சம் அவுட்டர்தான். இப்ப நாம இன்னும் வயலு பக்கமா அவுட்டர்க்கு போக போறோம், பீ ப்ரீ”

 

மூட்டை முடிச்சை கட்டி கொண்டு வீட்டிற்கு அருகிலிருந்த சின்ன கோவிலை ஒட்டி இருக்கும் அகன்ற மண்பாதையில் நுழைந்தார்கள், வழி நெடுக தென்னை மரங்கள், பச்சை வயல்வெளி, நேரம் பத்தை தாண்டி இருந்தாலும் தேகம் உரைக்காத வெயில், ஜில்லென்று வீசும் காற்று, ஆங்காங்கே வயலில் தென்படும் வயோதிக முகம், பாதைக்கு அருகே ஓடும் மிக சிறிய ஓடை என எல்லாம் சேர்ந்து அவர்கள் பார்வையை வசியம் செய்தது. பத்து நிமிடத்தில் வயலுக்கு நடுவே மண் பாதையை விட்டு சற்றே தள்ளி பம்ப்செட்டோடு இணைந்தபடி இருந்த அந்த பெரிய கிணறு கண்ணில் பட, ஆசைதீர இரண்டு மணி நேரம் அனைவரும் ஆடி களித்தனர்.

 

வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக அசைவ வகை அத்தனையும் வதம் செய்யப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் வகைவகையான மசாலா அரைத்த மணம் வீட்டை சுற்றி பரவி கிடந்தது. சந்தனாவும் வித்யாவும் சமையலுக்கு உதவிய நேரம் ஜனனி ‘மாமாகிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டியே ரெடியான ஐட்டங்களில் சிலதை மேய்ந்து தள்ளினாள். வாசலில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு ரேவதி போய் பார்த்தார்.

 

புதியவன், “வணக்கம்மா, நான் லோக்கல் இன்ஸ்பெக்டர் மணி, ஆரவ் சார பாக்க வந்திருக்கேன். அவருதான் நேத்து எனக்கு போன் பண்ணி இங்க வர சொல்லி இருந்தாரு.” என்றான்.

 

ரேவதி, “அவரு இப்ப வீட்ல இல்ல தம்பி, நீங்க இங்க உக்காருங்க, வர வைக்க ஆள் அனுப்புறேன்…” என உள்ளே வந்தவர், வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் சந்தனாவையும் துணையாக ஜனனியையும் அவர்களை அழைத்து வர அனுப்பினார். இருவரும் ஆளுக்கொரு சைக்கிள் எடுத்து கொண்டு, கிணற்று பக்கமாக விரைந்து சென்றனர்.

 

யஷ்மித், “ஏய்… எட்டி பாக்காதீங்க… அங்கிட்டு போங்க… சொல்லிட்டே இருக்கேன் வந்து பாத்துகிட்டே இருக்குறடி பிசாசே… சே.. சே.. சே.. இந்த ஊர்ல நாலு ஆம்பள பசங்க, சுதந்திரமா கொஞ்ச நேரம் குளிக்க முடியலயே…” என்று அவசர அவசரமாய் தன் உடலை டவலால் சுற்றி கொண்டான்.

 

ஜனனி, “டேய் அண்டர்டேக்கர் மண்டையா, காஞ்ச மாடு கம்பு காட்ட பாத்த மாதிரி நீ இவ்ளோ நேரமா தண்ணிய விட்டு வரலன்னா நாங்க என்னடா பண்றது? ஐயோ பாவமே, நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்டாச்சே, தண்ணிக்குள்ள செத்துட்டயோன்னு என்னமோன்னு எட்டி பாக்க வந்தேன்…”

 

பிரித்வி, “அவதான் உன்ன வக்கனையா வச்சு செய்றான்னு தெரிதுல, அப்புறமும் ஏண்டா அவட்டயே போய் வம்பு பண்ற?”

 

“நானாடா தேடி போறேன்? அந்த பேய்

தான் என்னைய புடிச்சு ஆட்டுதுடா…”

 

அந்த பக்கம் ஒரு ஹாரர் மூவி ஓடி கொண்டிருக்க, இந்த பக்கம் ஆரவ் ரொமான்டிக் மூவியை ஓட்டி கொண்டிருந்தான். நாணத்தினால் தன்னவளின் தாவணியும் கூந்தலும் இல்லாத காற்றில் அலை புரள்வதை கண்டு, ஈரம் சொட்ட வந்து நின்ற ஆறடி ஆண்மகனின் ஆசை இன்னும் அதிகமாகி போனது. என்ன செய்ய, வம்பிழுக்க தருணம் வாய்க்காதா என பதினெண் கண்கள் அவர்களையே கூர்ந்து நோக்கும்போது, தங்களை சாதாரணமாக காட்டிக்கொள்ள இருவரும் ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

 

பார்பி, “ஆரவ், உங்கள தேடி இன்ஸ்பெக்டர் மணின்னு ஒருத்தர் வந்திருக்காரு”

 

ஆரவ், ‘அவ்ளோதானா? இத சொல்லத்தான் இவ்ளோ வேகமா ஓடி வந்தியா? என்னை உனக்காக நீ தேடி வந்திருந்தா நான் எவ்ளோ சந்தோஷ பட்ருப்பேன்…’ தன் ஏமாற்றத்தை கண்களாலே அவளிடம் காட்டிவிட்டு, “ஓ… மதியத்துக்கு மேலதான் வர சொல்லி இருந்தேன், இப்பவே வந்துட்டானா. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றான். அனைவரும் கிளம்ப தயாராகிய நேரம் மண் பாதையின் பக்கம் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அந்த காரிலிருந்து யாரோ சில நண்பர்கள் நால்வர் இறங்க, நம்ம குரூப் ஆட்கள் எல்லாம் திடுதிடுவென, ஆளுயர வளர்ந்திருந்த வயலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். தாங்கள் ஒளிந்தது மட்டுமில்லாது பார்பியின் அண்ணன் தம்பி என மற்றவர்களையும் இழுத்து சென்று விட்டனர். புதிதாய் வந்த அந்த நால்வரும் கிணற்றில் குளிக்க தயாராகி கொண்டிருக்க,

 

ஜனனி, “ஆமா… ஏன் நாம இப்டி ஒளியிறோம்.”

 

யஷ்மித், “நாங்க வேர்ல்டு பேமஸ் செலபிரிட்டிஸ்மா, வெளி ஆளுங்க எங்கள பார்த்தா கூட்டம் கூடிடும். தேவையில்லாம செக்யூரிட்டி பிரச்சனை வரும். எல்லாரும் உங்க பேமிலி மாதிரியே முட்டாளா இருப்பாங்களா?” என்றான். வந்த கோபத்திற்கு ஜனனி அவனை ஓங்கி ஒரு அடி அடிக்க, அவன் அவளை திருப்பி அடிக்க, அந்த சத்தம் கேட்ட அந்த புதியவர்கள் நால்வரும் குழப்பமாக அங்குமிங்கும் திரும்பி பார்த்தபடி, ஒன்று கூடி பேச தொடங்கினார்கள்.

 

ஒருவன், “ஏதோ சத்தம் கேக்ககுது, ஆனா எங்கன்னு தெரியலயேடா…”

 

இன்னொருவன், “டேய் நான் அப்பவே சொன்னேன்ல… உச்சி பொழுதுல வயகாட்டுக்கு வர வேண்டாம்னு, கேட்டீங்களாடா…”

 

அவர்களின் யோசனை போகும் பாதை புரிந்ததும் ஜனனி, “ஹா.. ஹா.. ஹா..” என்று பேய் சிரிப்பு சிரிக்க, அவளை தொடர்ந்து யஷ்மித், “ஊஊஊஊஊ” என்றான். புதியவர்கள் பயந்து போய் அங்கிருந்து நகர தொடங்க, எங்கிருந்தோ பிரித்வி, “ர்ர்ர்ரரரராரா…” என குரல் கொடுத்ததும் வந்தவர்கள் எல்லாம் அலறி அடித்து தலை தெறிக்க ஓட தொடங்கினார்கள். ஓடியவர்களையும் சும்மா விட மனமின்றி ஜனனி ஒரு கல் எடுத்து எறிய, அந்த கார் கண்ணாடி சல்லி சல்லியாய் நொறுங்கி விழுந்தது. அதை கண்ட அந்த நால்வரும், காரை கூட எடுக்காமல் பின்னங்கால் புடதியில் படுமளவு வேகமாய் ஓடி விட்டார்கள். நம்ம பசங்க அத்தனை பேரும் சில நிமிடங்களுக்கு விழுந்து விழுந்து சிரிக்க, ஜனனி இப்போதுதான் ஒன்றை கவனித்தாள். ஈர பனியன் அவன் உடலோடு ஒட்டி கிடக்க, கட்டு மஸ்தான உடலழகோடு யஷ்மித் அவள் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்தபடி வேடிக்கையில் தன்னை மறந்து சிரித்து கொண்டிருந்தான்.

 

முதல் ஆண் தீண்டலால், அவளுக்குள் உறங்கி கிடந்த பெண் எனும் உணர்வு திடுக்கிட்டு எழுந்தது. அந்த விவரம் புரியா சிறுமி அதன் காரணம் இன்னதென்று தெரியாமல் குழம்பியதால், திரும்பி வரும் வழியெல்லாம் நகம் கடித்து கொண்டு உம்மென்று வந்து கொண்டிருந்தாள். அவளை முதலில் கவனித்தது ஆரவ்தான், “என்னாச்சு ஜனனி, ஏன் சோகமா இருக்க? அடி எதும் பட்ருக்கா?”

 

திடுக்கிட்டு “ஹான்… ஒண்ணுமில்ல மாமா”

 

ஆரவ் அவளை சகஜமாக்க நினைத்து பேச்சு கொடுத்தான், “மாமாக்கு, உங்க தாத்தாவ குப்புற கவுக்குற மாதிரி ஒரு ஐடியா சொல்லேன்டா…”

 

அவன் பேச்சில் சுய நினைவடைந்தவள் ரகசியமாக, “ஒரு சூப்பர் ஐடியா இருக்குது மாமா. எங்க குல தெய்வ கோயில்ல வருஷா வருஷம் சித்திரைல வீட்டுக்கு மூத்த ஆண் பிள்ளைக்கு பரிவட்டம் கட்டுவாங்க. இந்த வருஷம் அதுல ஒரு சிக்கல். அந்த பரிவட்டம் ஒரு ஆளுக்கு இருபத்தஞ்சு வருஷம் தான் வேலிடிட்டி. அதுக்கு பிறகு குடும்பத்தோட வேற ஆள் ஆரம்பிக்கனும். தாத்தாக்கு இப்ப இருபத்தஞ்சு வருஷம் முடியிது, இப்ப சந்தோஷ் ஆரம்பிக்கனும்னு வீட்ல எல்லாருக்கும் ஆசை. பட் பிரச்சனை என்னன்னா தாத்தாவோட தாத்தாக்கு ரெண்டு பொண்டாட்டி, அதுல நாங்க முதல் பாட்டி வழி வந்தவங்க. எங்கள மாதிரி ரெண்டாவது பாட்டிக்கி ஒரு வழி குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்துல இது வரைக்கும் பொண்ணுங்களே முதல்லயும், பசங்க ரெண்டாவதாவும் பொறந்தாங்க. இப்ப முதல் தடவையா ஒரு பையன் சந்தோஷவிட மூத்தவனா இருக்கான்னு அவனுக்கு பரிவட்டம் கட்ட சொல்றாங்க. அவங்க பணக்காரங்களா இருக்குறதால கோவில் ஆளுங்க அவங்க பேச்ச கேக்குறாங்க. இத்தன வருஷமா குடும்ப பெருமையா இருந்தத இழக்குறது தாத்தாக்கு இஷ்டமில்ல. சித்திரை மாசம் வர்றதுக்கு இன்னும் ஆறேழு மாசம் கேப் இருக்குறதாலயும், அக்காவும் பாட்டியும் இல்லன்ற சோகத்துலயும் தாத்தா அத கவனிக்காமலே விட்டுட்டாரு. இதுல நீங்க எதாச்சும் பண்ண முடியுமா மாமா?” என்றாள். அவன் ஜனனியை பார்த்து சிரிப்பில் தன் பதிலை சொல்ல, அந்த புத்திசாலி பெண் சட்டென புரிந்து கொண்டாள்.

 

தாத்தா வீட்டிற்குள் நுழைகையிலே புதிதாக ஒருவன் அமர்ந்திருப்பதை கண்டு, “யாரு தம்பி நீங்க?” என்றார்.

 

“நான் இன்ஸ்பெக்டர் மணி, ஆரவ் சார் வரச்சொல்லி இருந்தாங்க”

 

“ஓ… உங்களுக்கும் ஆரவ்க்கும் எப்டி பழக்கம்?”

 

“உங்க பேத்திய சுட்டாங்கள்ல, அப்போ இருந்து சென்னைக்கு ஹாஸ்பிட்டல் போற வரைக்கும் நான் அவருகூட தான் இருந்தேன். ஆரவ் சார சும்மா சொல்ல கூடாதுங்க, அவரு அந்த பொண்ண ரத்தத்துல பார்த்து உயிரே போன மாதிரி துடிதுடுச்சு போயிட்டாரு. அடுத்த நாள் அந்த பொண்ணு சாகலன்னு தெரிஞ்சதும் தான் உயிரே வந்துச்சு, அந்த பொண்ணுக்காக அன்னிக்கி என்னெல்லாம் செஞ்சாரு தெரியுமா?” என அவன் பாட்டுக்கு நடந்ததெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கையில் நமது படை வந்துவிட்டது.

 

ஆரவ் அவனை தனியாய் அழைத்து சென்று, “ஹாய் மணி, பாத்து ரொம்ப நாள் ஆச்சு, எப்டி இருக்கீங்க?”

 

“நல்லா இருக்கேன் சார்…”

 

“அந்த மலையில இருந்த பாட்டி, பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர் பையன், தேவியோட குடும்பம் எல்லாரும் இப்போ எப்டி இருக்காங்க?”

 

“அந்த பாட்டி மகன் மருமகளோட ஊருக்குள்ள புது வீடு கட்டி சந்தோஷமா இருக்காங்க, பஸ்டிரைவர் குடும்பத்துக்கும் ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கும் தேவைக்கு அதிகமாவே இழப்பீடு குடுத்து செட்டில் பண்ணியாச்சு, ஆனா தேவி குடும்பம் குற்ற உணர்ச்சில பணம்  வேண்டாம்னு சொல்லிட்டு ஊரையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க.”

 

“எதிர் பாத்ததுதான்… சரி நாங்க ஒரு பத்து பதினஞ்சு நாள் இங்க தங்க போறோம். வெளி ஆளுங்களுக்கு தெரியாம, உங்க தலைமையில இந்த ஊர சுத்தி கொஞ்சம் செக்யூரிட்டி போட முடியுமா? உங்க ஹையர் ஆபீசர்ஸ்ட்ட ஏற்கனவே பேசிட்டேன்.”

 

“ஷ்யூர் சார்…” என்றான் சந்தோஷமாக.

 

உள்ளிருந்து இதை கேட்டு கொண்டிருந்த தாத்தா யோசனையில் மூழ்க தொடங்கினார். “கொலை பண்ற அளவுக்கு ஆரவ்க்கு எதிரிகள் இருக்காங்கன்னு நேத்தே தெரிஞ்சும், அவன் நல்லவனா கெட்டவனான்னு யோசிக்காம வீட்ல விட்டுட்டேனோ! சந்தனா கொஞ்ச நாள் பழகின பிறகு காதலிச்சதா சொன்னா, இந்த போலீஸ்காரன் சொல்ற கதை வேற மாதிரி இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் எப்போ இருந்து காதல் ஆரம்பிச்சிருக்கும்?” அவர் எத்தனை முறை யோசித்தாலும் குழப்பமே மிஞ்சியது. இதற்குள் உள்ளே விருந்துக்கு அனைத்தும் தயாராகிவிட, வீட்டின் மூத்த மாப்பிள்ளைக்கான முதல் விருந்தை தலைவாழை இலையில் பரிமாற ஏற்பாடு நடந்தது. மற்றவர்கள் அனைவருக்கும் சாதாரண இலை விரிக்க பட்டு இருந்தது. வஜ்ரா மட்டும் டேபிளில் அமர்ந்து கொண்டான்.

 

யஷ்மித், “ஆத்தாடி, எவ்ளோ பெரிய இலை, ஏன்டா நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஒரே இலை போட்டாங்களாடா?”

 

ரிஷி, “டேய் ஆரவ், இலைல வைக்கிற எல்லாத்தையும் நீ திங்கலைன்னு வச்சுக்கோ…..” இடையே புகுந்து பிரித்வி, “மிச்சத்த பார்சல் கட்டி தருவாங்க…?”

 

யஷ்மித், “டேய் இலைய சுத்தி எல்லாரும் உக்காருங்க, ஒரு செல்பீ எடுத்துக்கிறேன்” என அவர்களுக்குள் கேலியும் சிரிப்பும் வழக்கத்தை விட இன்று அதிகமாக இருக்க, விருப்பமான இடத்தில் அமர்ந்து விருந்தை உண்டு முடித்தார்கள். உண்ட மயக்கத்தில் அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டு வருவதற்குள், நேரம் மாலையை நெருங்கி விட்டது. மாலை நேரம் பார்பியின் அப்பா, சித்தப்பா, மாமாவுடன் அவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். அதற்கு மேல் என்ன பேசுவதென்று இருதரப்புக்கும் தெரியவில்லை. இரவுக்கு பார்பியே லைட் புட் சமைத்து தந்துவிட்டாள். அதன்பின் நண்பர்கள் ஐவரும் மற்றவர்களுக்கு தொந்தரவில்லாமல் அறைக்கு சென்றிட, யாருக்கும் தெரியாமல் ஆரவ் பார்பியை மேலே வர சொல்லி சிக்னல் தந்து விட்டு நகர்ந்தான். ஆரவ் பார்பிக்காக பால்கனியிலேயே காத்திருக்க, வேண்டுமென்றே இன்று தாமதமாக வந்து சேர்ந்தாள்.

 

பால்கனி கதவை வெளிப்பக்கமாக தாழிட்டு கொண்டே ஆரவ், “சீக்கிரமா மேல வான்னு சொன்னேன்லடி, இவ்ளோ லேட்டா வந்திருக்க…” என அவளை நெருங்கிட, அவள் தள்ளி நின்று கொண்டு, “எப்டியும் வேற வேலையத்தான் செய்ய போறீங்க. அதுக்கு நான் சீக்கிரமா வந்தா என்ன? லேட்டா வந்தா என்ன?”

 

‘எனக்காக எத்தனை ஏங்கி இருக்கிறாள்’ என்று அவன் சிரிப்பதை கண்டு எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதை போலாகிவிட, அவன் மார்பில் வலிக்காமல் நான்கு குத்து குத்தினாள்.

 

“இதோட சேர்த்து 1763 ஆச்சு”

 

“என்னது?”

 

“நான் உனக்கு திருப்பி தர வேண்டியது”

 

“ஓ… எம் ஜி ஆர் மாதிரி, நான் அடிச்சதெல்லாம் மொத்தமா கவுண்ட் பண்ணி என்னை திருப்பி அடிப்பீங்களா?”

 

“அது கிட்ஸ் பண்ற வேல”

 

“அப்புறம் 1763 கிஸ் தருவீங்களா?”

 

“அது மென்ஸ் பண்ற வேல, நான் லெஜன்ட்மா, ரிட்டர்ன் வேற மாதிரி கிடைக்கும். ”

 

“புரியிர மாதிரி சொல்லுங்க”

 

“உனக்கு சொன்னாலும் புரியாதே, வேணும்னா நான் செஞ்சு காட்டவா?”

 

அவன் கேலியான பதில் அவளுக்கு இப்போதுதான் பழைய கோபத்தை ஞாபக படுத்தியது, “ஒண்ணும் வேணாம் நான் தூங்க போறேன் போங்க” என விலகியவளின் கை பிடித்து நிறுத்தி “என்கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசுடி” என்றான்.

 

“உங்க கூட பேசுறதுக்குதான் ஜனனி, ஶ்ரீ, கார்த்தின்னு நிறைய ஆளுங்க இருக்காங்கள்ல, அப்புறம் நான் எதுக்கு? போங்க.. போய் அவங்க கூடவே நல்லா அரட்டையடிங்க.. அதுக்குத்தான வந்திருக்கீங்க…” என திரும்பி நின்று கொண்டாள்.

 

ஆரவ் அவளை நெருங்கி வந்து தன் வலிய கரங்களால் மெல்லிடையை சுற்றி வளைத்து காதருகில் “என்னை இன்னிக்கி அவ்ளோ மிஸ் பண்ணிட்டயாடா?” என்று காற்றில் ஆடி கொண்டிருந்த ஜிமிக்கியை முத்தமிட, கண்மூடி அதை ரசித்தவளின் முகம் நிலவொளியில் அத்தனை அழகு. மேற்கொண்டு காதுகளுக்கு இரண்டு, கன்னத்தில் நான்கைந்து தந்தவன் சிரிக்கும் இதழுக்கு தீபாவளி போனஸ் தர நினைத்து குனிய, அவனை தடுத்து நிறுத்தி, “வேணாம், உள்ள தங்கச்சிங்க எல்லாம் இருக்காங்க. நம்ம சத்தம் உள்ள வரைக்கும் கேட்கும் ஆரவ்…” என்றாள் தலை குனிந்து.

 

“அப்போ வா, நாம வேற இடத்துக்கு போகலாம்”

 

“எப்டி? கீழ எல்லாரும் இருப்பாங்களே”

 

“யாருக்கும் தெரியாம போகலாம், நீ போய் ஒரு ஷால் எடுத்துட்டு வா”

 

ஷால் எடுத்து வந்ததும் முன்பொரு நாள் காட்டில் மரம் ஏற செய்ததைப்போல, இன்றும் அதை அவளின் இடை சுற்றி கட்டி கீழே இறக்கி, அவனும் குதித்து இறங்கினான். மாடியில் இருந்து குதித்தவர்களுக்கு காம்பவுண்ட் சுவர் எம்மாத்திரம்? அதையும் தாண்டி வெளியே வர, பக்கத்து கோவில் நடை சாற்றி பூட்டி இருந்தது. அதனை ஒட்டி இருந்த கல் மண்டபத்தில் லேசான லைட் வெளிச்சத்தில் பப்லு படுத்திருந்தான். அதற்கு அடுத்த சின்ன குடிசை வீட்டிற்குள் முத்துச்சாமி தாத்தா தங்கி இருந்தார். கல் மண்டபத்தையே தங்களுக்கு தோதான இடமாக தேர்வு செய்து இருவரும் அங்கே சென்று வெளிப்பார்வைக்கு தெரியாத இடம் பார்த்து அமர்ந்து கொண்டார்கள்.

 

“தாத்தாக்கு இதெல்லாம் தெரிஞ்சா நம்மள வீட்ட விட்டே விரட்டிடுவாரு ஆரவ்.”

 

“அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு, அவருக்கு என்ன புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நீ இங்க வந்து உக்காரு, அப்பத்தான் எனக்கு பேச வசதியா இருக்கும்” என்று தன் கால்களுக்கு இடையில் அமர்த்தி மார்பில் சாய்த்து கொண்டான்.

 

“ஒருவேள தாத்தா ஒத்துக்கலன்னா என்ன பண்ணுவ?”

 

“பேசாம அவர தூக்கிட்டு போய் நம்ம ரூம்ல வச்சு மூணு மாசம் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிடுறேன். அப்புறம் அவருக்கும் என் மேல லவ் வந்திடும்” என்றதும் அவள் தன் கைகளுக்கு அருகிலிருந்த அவன் கால் தொடையை நறுக்கென்று நிமிண்டி விட்டாள்.

 

“அம்மா… ஏன்டி இப்டி செஞ்ச வலிக்குது” என கத்தியதில், உறங்கி கொண்டிருந்த பப்லு லேசாக அசைந்தது.

 

“அச்சச்சோ, சத்தம் போடாதீங்க, பப்லு முழிச்சிட்டா உங்கள அடிக்க வந்திடுவான்.”

 

“ம்ம்ம், சத்தம் போடாம நாம வேற வேலை செய்யலாமா?” அவள் பதில் சொல்லும் முன் அவன் கைகளிரண்டும் சீட் பெல்ட்டாக அவளை கட்டியணைத்து கொள்ள, “ஆரவ், வேணாம் விடுங்க, யாராவது வந்திடுவாங்க….” பதற்றம், அச்சம், வெட்கம் எல்லாம் ஒருசேர திமிறினாள்.

 

“ஷ்ஷ்ஷ், சத்தம் போடாத பப்லு எழுந்திடும்” என்ற சொல் அவளை கொஞ்சம் கட்டுபடுத்தியது. “நான் ஒண்ணும் செய்ய மாட்டேன், கொஞ்சமா கிஸ் மட்டும் ப்ளீஸ்டா. பியூச்சர்ல நமக்கு குழந்தைங்க பொறந்த பிறகு சத்தமில்லாம நான் உன்ன செல்லம் கொஞ்சனும்ல, அதுக்கு இது ரிகர்சல்” என்றவன் விரல்கள் அவள் மேல் மேய தொடங்கின. ஆண்களின் வசம்தான் எத்தனை ஆயுதங்கள்! ஒவ்வொரு தீண்டலிலும் விதவிதமான மின்சாரம் பாய்ச்சும் பத்து விரல்கள், இடி இடிக்கும் சத்தத்தை விட பயம் கவ்வச் செய்யும் காதோர மூச்சு காற்று, இறுக்கி அணைக்கும் தருணம் விலகி ஓடச்சொல்லும் உள்ளுணர்வின் பேச்சை கேட்டு பெண்ணவள் நகர நினைத்தால், ‘ம்ம்ம்’ என்னும் ஒற்றை முனகல் அவளின் உயிர்வரை சென்று அடித்து வீழ்த்தி விடுகிறது.

 

இருவரும் உலகம் மறந்து கிடைத்த தருணத்தை முத்தங்களால் நிறைத்திருக்க, அங்கே தாத்தா இதற்கு மேல் குழப்பி கொள்ள விருப்பமின்றி ஆரவ்வை தேடி செல்ல தீர்மானித்தார். அவர் அவர்களின் அறைக்கதவை தட்டியதும் கதவை திறந்த ரிஷியிடம், “நான் ஆரவ்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும், ஆரவ் எங்க தம்பி?” என்றதும் பயத்தில் அவன் விழிகள் வெளிறியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: