Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 49

பாகம் – 49

திகாலை நேரம் விடிந்தும் விடியாமலும் கவிழ்ந்து கிடக்க, குயிலும் குருவியும் கீச்கீச்சென தங்களின் தனித்துவ இன்னிசையால் சுப்ரபாதம் பாடி அழைத்ததில், சோம்பல் முறித்து எழுந்தார்கள் அந்த ஐந்து வானம்பாடி பறவைகளும். ஆரவ் கண் விழித்ததும் தானாகவே வந்து கண்ணுக்குள் ஒட்டிக்கொண்ட, தன் இதழ் கொத்தி போன பறவையின் இன்ப நினைவில் மூழ்கி திளைத்திருக்க, ரிஷி ஜன்னலை திறந்து அதன் வழி பார்த்த பச்சை புல்வெளி அழகிலேயே சொக்கி போனான், ஜன்னலின் இடுக்கில் உள் நுழைந்து சுற்றி சுற்றி வந்த தட்டான் பூச்சி போனில் சிக்னல் தேடிக்கொண்டு இருந்த யஷ்மித்திடம் வம்பிழுத்து செல்ல, போனை தூக்கி எறிந்து விட்டு பூச்சியை எட்டி பிடிக்கும் ஆவலில் அறை முழுவதும் தாவி குதித்து விளையாடினான். அவன் தொல்லை தாங்காது, தூக்கம் தொலைத்த பிரித்வி எழுந்து நீண்ட கொட்டாவியுடன் பால்கனி கதவினை திறந்து பார்த்ததும், “ப்ப்பா…… செம்மடா” என்றான். அவன் பாராட்டை சரிபார்க்க மற்றவர்களும் எழுந்து வந்து வெளியே எட்டி பார்த்தார்கள்.

 

சொர்க்கம் என்றால் எப்படி இருக்கும் என ஆரவ்விற்கும் அவன் நண்பர்களுக்கும் அந்த வீட்டை வெளிச்சத்தில் பார்த்த பிறகு தான் புரிந்தது. பால்கனியில் இருந்து பார்க்கையில், முழுக்க முழுக்க இயற்கை அன்னையின் உழைப்பினால் நிறம்பி வழிந்த வீட்டின் பின்னழகு பார்த்தவர்களை மதிமயங்கிட செய்தது. பார்க்கும் தூரத்தில் பனிப்புகை படர்ந்த மலைகள், பாதைகளெல்லாம் பச்சை போர்த்திய புல்வெளி, கிழக்கை காட்டிட தோன்றிட்ட இளஞ்சூரிய தரிசனம், தென்றலின் அசைவினால் பூக்களின் மலர்வு, பசுவுடன் தாவி விளையாடும் கன்றின் கழுத்து மணி சத்தம், சில்லென்ற சாரல் துளி தரும் இதமான தேக நனைவு, பூக்களின் மேல் முத்தமிட துடித்த வண்டுகளின் மோக தாளம், பழங்களை கொத்தும் கிளிகளின் இதழ் கீச்சு, வீட்டை ஒட்டியே அமைந்திருந்த ஒரு சிறிய அம்மன் கோவில், அதனை ஒட்டிய பழங்கால கல் மண்டபம் ஒன்று தன் தலைமேல் பூக்களை தாங்கிய கொடிகளுடன், அதனையடுத்து புதிதாய் முளைத்திருந்த ஒரு ஆபீஸ் பில்டிங் (அவன் ஆட்களை தங்க வைத்திருக்கும் இடம்தான்), தூரத்தில் பெரிய ஏரி இருப்பதற்கான அறிகுறியாய் பறக்கும் வெளிநாட்டு பறவைகள் சில, என அத்தனையும் ஒரே இடத்தில் அமைந்திருந்தது.

 

ஜனனி கிச்சன் பக்கமாய் இருந்த பின்பக்க கதவு வழியே வெளியேறியபடி “என்ன மாமா எங்க ஊரு எப்டி இருக்கு?” என்றாள் கீழிருந்து. அங்கே ஜனனி, வித்யா, சந்தனா மூவரும் ஆளுக்கொன்றாய் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். பாவாடை தாவணி அணிந்து இயற்கை அழகுக்கு சரிக்கு சமமாக போட்டி போடும் அந்த செயற்கை அழகிகளினால் கீழே எட்டி பார்த்தவர்கள் ஐவரும் மீண்டும் அசந்து போனார்கள்.

 

வஜ்ரா, “அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க ஜனனி?”

 

“வீட்ல யாரும் இல்லண்ணா, ஜென்ட்ஸ் எல்லாம் வேலை விஷயமா வெளியில போயிட்டாங்க, லேடிஸ் டீம்மா ஜோசியர பாக்க போயிட்டாங்க, அண்ணனுங்க யாரும் இன்னும் எந்திரிக்கல. நீங்க எல்லாரும் லேட்டாத்தான் எந்திரிப்பீங்கன்னு சந்தனா அக்கா சொன்னாங்க, அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் எழுப்பல. டீ வேணுமாண்ணா?”

 

வஜ்ரா, “இப்ப வேணாம்மா, நாங்க கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு கீழ வந்து எடுத்துக்கிறோம்.”

 

யஷ்மித், “என்னை கேக்காம ஏன்டா நீ அப்டி சொன்ன? எனக்கு இப்பவே டீ வேணுன்டா.”

 

வஜ்ரா, “போய் பல்லு விளக்கு பக்கி” என்றவனிடம் காலையிலேயே யஷ்மித் தன் வம்பு சேட்டையை ஆரம்பிக்க, இது எதையுமே கவனிக்காம அங்க ஒரு ஜீவன் இருந்துச்சு, அது எதுன்னு உங்களுக்கே தெரியும். பார்பி வெள்ளை நிற தாவணியில், தனக்கு தோதாக ஆடும் கல் வைத்த ஜிமிக்கி, அளவான அலங்காரம், இதோடு சேர்த்து ஆளை தூக்கி அடிக்கும் புன்னகையை சூடி அங்கே வலம் வர அதை கண்டவனோ முழுவதுமாய் ஆடித்தான் போனான். ஆரவ் தன்னவளை ஆசையோடு துளைக்கும் பார்வையிட, அவளோ ‘நீ என்ன செஞ்சாலும் இனிமே உன் மேல ஆசைய வளர்த்துட்டு, நான் ஏமாற மாட்டேன் போடா…’ என அவனை கண்டும் காணாமல் கோழி குஞ்சுகளுக்கு தீனிகளை தூவினாள்.

 

யஷ்மித் ஐந்தாறு வாத்துகளை ஜனனி கவனிப்பதை கண்டதும், “ஒரு வாத்தே இன்னோரு வாத்தை மேய்க்கிறதே அடடா ஆச்சரியகுறி” என்றான்.

 

அவள், “என்ன மாமா? அவன் என்ன வாத்துன்னு சொல்றான், நீங்க சும்மா பாத்துட்டு இருக்கீங்களே…” என்று ஆரவ்வை துணைக்கு அழைத்தாள். ஆரவ் கனவிலிருந்து மீண்டு மச்சினிக்காக யஷ்மித்தை அடிக்க நெருங்கி வருவதை கண்டதும், மேலிருந்து ஒரே தாவலாக கீழே குதித்து இறங்கி வந்து விட்டான் யஷ்மித்.

 

ஜனனி, “நான் பரவாயில்லப்பா வாத்துதான் மேய்க்கிறேன். ஆனா நீங்க மேலயும் கீழயும் தாவுறத பாத்தா…” என்றிழுக்க, யஷ்மித், “என்ன…து…” என்று கைகளை முறுக்கி அவளை அடிப்பதை போல் அருகில் வந்தான். ஜனனியோ சிறிதும் அச்சமின்றி கையில் கிடைத்த சின்ன குச்சியை வைத்து அருகே வந்தவனை அடித்தே விட்டாள். குச்சி நான்கு அடிகளுக்கு பிறகு உடைந்து போக, அவன் அவள் கைகளை பின்னால் வளைத்து பிடித்து அவள் தலையில் நங்கென ஒரு குட்டு கொட்டினான். உடனே தங்கள் எஜமானிக்கு ஆதரவாக கன்று குட்டியும், குட்டி நாயும் துணைக்கு வந்து யஷ்மித்தை விரட்ட சில அடி தூரம் ஓடியவன், “போதும்… நிறுத்திக்கலாம்… இவ்ளோ நேரம் உன்கிட்ட அடி வாங்குனது நானு… நியாயப்படி நான் தான் உன்ன கடிக்க நாய அனுப்பனும்… அத புடிம்மா, படாத இடத்துல பட்டுட போகுது…” என கெஞ்சிய பிறகு அவள் அவற்றை இழுத்து சென்றாள். நண்பர்கள் நால்வரும் டீ கப்புடன் கீழே வந்து ஏதோ கபடி மேச் பார்ப்பதை போல யஷ்மித் ஜனனி சண்டையை வேடிக்கை பார்த்ததை கண்ட யஷ்மித், “கூட வந்தவன் உயிருக்கு போராடுறானேன்னு கொஞ்சமாவது கவல படுறானுங்களா பாரு” என கரித்து கொட்டினான்.

 

ஜனனி கன்றையும் நாய்குட்டியையும் கட்டிவிட்டு யஷ்மித்திடம் திரும்பி வந்து, “நீங்க அடிக்க வந்தா என் கை என்ன பூ பரிச்சிட்டு இருக்கும்னு நினைச்சீங்களா? இனிமே என்கிட்ட வம்பு பண்ணீங்க, என் பெட் அனிமல் டைகர கூட்டிட்டு வந்திடுவேன் பாத்துக்கோங்க…”

 

யஷ்மித், “அது யாரு இந்த நாய் குட்டிக்கி அப்பாவா?”

 

ஜனனி, “இல்ல, அந்த கன்னு குட்டியோட அப்பா, தி கிரேட் ஜல்லிக்கட்டு வின்னர் ஆப் 2018. இந்த வீட்ல நீங்க எந்த மூலைக்கு ஓடி ஒளிஞ்சாலும் அட்டாக் பண்ற அளவுக்கு என்கிட்ட பெட்ஸ் இருக்கு தெரியுமா. பூனை, நாய், ஆடு, கோழி, மாடு, மீன் வரைக்கும் என்னோட விரல் அசைவுக்கு ஆடும்…” என்று திமிராக நிமிர்ந்து நின்றவளை கைதட்டி பாராட்டிய பிரித்வி, “சபாஷ் சரியான போட்டி, டேய் யஷ்மித் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில இருக்காங்க பாரேன்…” என்றான்.

 

யஷ்மித், “ஏம்மா வித்யா நீ எதும் வளக்கலியா?”

 

வித்யா, “இல்லங்க, நான் தினமும் சாயங்காலம் குருவி, குயில், மயில்னு வீட்டுக்கு வர்ற பறவைக்கெல்லாம் தீனி மட்டும் போடுவேன். அதெல்லாம் எங்கிருந்தோ வந்து சாப்ட்டு எங்கயோ போயிடும், அவ்ளோதான்.”

 

யஷ்மித், “இருக்குற எல்லாமே நீங்க வளக்குறதுனா, அப்போ பார்பியோட பெட் என்னது?”

 

ஜனனி, “அவங்க வளத்தது ஒரே ஒரு பெட் தான், பேரு பப்லு. மத்த அனிமெல்ஸ் எல்லாம் பயம் அவங்களுக்கு.”

 

யஷ்மித், “பப்லுனா, பப்பல்லோவா?”

 

ஜனனி, “அந்தா அதுவே வருது பாருங்க”, யஷ்மித்தோடு மற்றவர்களும் திரும்பி பார்க்க காரிருள் மேகமென உருண்டு திரண்டு பெருத்த உருவத்தோடு ஓடி வந்தது ஒரு யானை.

 

யஷ்மித், “அட கொலைகாரிகளா…” என கத்திக்கொண்டே தெறித்து ஓடியவன்தான். அடுத்த அரைமணி நேரத்திற்கு அந்த பக்கமே அவன் வரவில்லை. பார்பி, “பப்லூ…” என ஆசையாக கை நீட்டி அணைக்க வர, அந்த ஐந்தறிவு ஜீவன் அவளிடம் முகம் காட்டாமல் கோபமாய் திரும்பி கொண்டது. அவள் அதன் முன்னால் போய் நின்று, “டேய் என்ன பாருடா” என்று கொஞ்ச, அது இப்போதைக்கு சமாதானமில்லை என மிஞ்சியது. மூன்றாவது முறையில் அவள், “டேய் பப்லு, என் செல்லம்ல, வா.. வா.. வா..” என்றழைத்தாள். உடனே அழுத குழந்தை அன்னை மடி சேர்வது போல துதிக்கை தூக்கி லேசான பிளிறலுடன் அவளை நெருங்கும் தருணம், ஆரவ் ஓடி வந்து அவள் அருகில் நின்று கொண்டான்.

 

பார்பி, “பயப்படாதீங்க ஆரவ், இவன் ரொம்ப சின்ன யானைதான். அவனுக்கு நான்னா ரொம்ப இஷ்டம், என்னை ஒண்ணும் செய்ய மாட்டான்.” என்று விளக்கி கொண்டிருந்தாள். அதுசரி, அவன் மனது தவிக்கும் தவிப்பு அவனுக்குதானே தெரியும், சமாதானமாக மறுப்பது அவளுக்கு குழந்தை என்றாலும், சமாதானம் செய்ய முயல்வது அவன் குழந்தையல்லவா. விலகாமல் அவளருகிலேயே நின்றவனை அது தனக்கு போட்டியாக நினைத்ததோ என்னவோ, துதிக்கையால் ஆரவ்வை கீழே தள்ளி விட்டுவிட்டு அவளை தன்னோடு தூக்கி, தன் பிரிவின் வலியை கண்ணீர் துளி கொண்டு உணர்த்தியது.

 

விழுந்து எழுந்த ஆரவ்விற்கு எதுவும் ஆகவில்லை என தெரிந்ததும், அவள் பப்லுவை சமாதான படுத்த தொடங்கினாள். துதிக்கையை விட்டு கீழிறங்கி அதற்காக பழங்களை கொஞ்சம் தந்ததும், நாய் குட்டி போல அவளருகிலேயே படுத்து கொண்டது. எத்தனை பெரிய உருவம் அது! இருந்தும் இந்த மானிட பிறவிகளின் ஒற்றை சொல்லுக்கு கட்டுபடுமேயானால், அது அவர்கள் மேல் கொண்ட அன்பன்றி வேறென்ன? ஆறறிவு கொண்டவர்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒதுங்கி விட, சில மணி நேரம் அது அப்டியே உறங்கி கிடந்தது. மணி ஒன்பதை நெருங்கிய நேரம் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்று காம்பவுண்டின் வழி வீட்டிற்குள் நுழைந்து நேராக அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்றது. அதிலிருந்து பார்பியின் அம்மா, சித்தி, அத்தை அனைவரும் முகமெல்லாம் சந்தோஷமாய் இறங்கி வந்தனர்.

 

பிரித்வி, “ஏன்டா… இந்த வண்டி எல்லாம் இன்னுமாடா ஓடுது?”

 

ரிஷி, “சத்தமா சொல்லி தொலைக்காதடா, அப்புறம் யானையால மிதிக்க விட்ருவா ஜனனி…”

 

மல்லிகா (பார்பியின் சித்தி), “வந்திடுச்சா பப்லு, பாவம் நீ உயிரோட இல்லன்னு தெரிஞ்சதும் அழுது அழுது அவனுக்கு ரெண்டு நாள் காய்ச்சலே வந்திடுச்சு சந்தனா. இவன் இன்னிக்கி உன்ன லேசில விட மாட்டான் பாரு…”

 

பார்பி, “அப்பிடியெல்லாம் இல்லையே, பப்லு சொன்னா கேட்டுக்குவான், நல்ல பையன் இவன். பப்லு நீ இப்ப முத்துச்சாமி தாத்தா கூட போய் சாப்பிட்டு வருவியாம், நானும் போய் சாப்பிட்டு வந்து உன்ன பாப்பனாம், எழுந்திரி…” என்று கட்டளையிட அவள் சொன்னபடி எல்லாம் ஆடியது அது.

 

முத்துச்சாமி தாத்தா அதன் பாகன், அவர் அதை அங்கிருந்து அழைத்து சென்றதும், ரேவதி கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பெரிய பூசணிக்காயை வெளியே எடுத்தார். அவளையும் ஆரவ்வையும் கிழக்கே பார்த்து நிற்க சொல்லி பூசணிக்காயை எடுத்து பார்பியின் அத்தையும் சித்தியும் திருஷ்டி சுற்றி விட்டு, அதை உடைக்க வெளியே எடுத்து கொண்டு சென்றார்கள்.

 

பார்பி, “என்னமா திடீர்னு?”

 

ரேவதி, “ஜோசியரே சுத்தி போட சொல்லி சொன்னாருடி, அவரு கண்ணே பட்ருச்சாம். உனக்கு வந்த கண்டமெல்லாம் மாப்ள ஜாதகத்தால உன் கிட்டயே நெருங்கலயாம். அவரு ஜாதகத்த பாத்ததில இருந்து ஆகா ஓகோன்னு ஜோசியர் புகழ்றாருடி. சிம்ம ராசி மக நட்சத்திரம் உங்க கூட இருக்கும் போது, இனிமே உங்க பரம்பரைக்கே எந்த கவலையும் இல்லனு சொல்லிட்டாருடி…” என்றார் வாயெல்லாம் பல்லாக.

 

ஶ்ரீ, கார்த்தி (பார்பியின் இளைய சகோதரர்கள்), “ஏன் பெரியம்மா இதுவரைக்கும் நாங்க எத்தன சாகசம் பண்ணியிருக்கோம், எங்களுக்கு என்னைக்காச்சும் இப்டி சுத்தி போட்ருக்கீங்களா?” என்றனர் தூக்க கலக்கத்திலேயே.

 

“டேய் நீங்களும் மாப்ளயும் ஒண்ணாடா? ஆமா நீங்க ரெண்டு பெரும் இன்னிக்கி ஸ்கூலுக்கு போகாம மட்டம் போட்டுட்டீங்களாடா?” என்று திட்டி கொண்டே ரேவதி கிச்சனுக்குள் சென்றுவிட்டார்.

 

ஶ்ரீ, “சந்தனா அக்காகூட நைட் பேசவே முடியலைல பெரியம்மா…. இன்னிக்கி ஒருநாள் பேசுறதுக்காக வீட்ல இருந்துக்குறோமே…”

 

ஆரவ் அவர்கள் இருவரையும் அழைத்து, “எல்லாருமே பார்பிய அக்கான்றீங்க, எது யாரு பசங்கன்னு தெரியாம ரொம்ப குழப்பமா இருக்குடா, நீங்க பார்பிக்கி என்னடா வேணும்?” என்றான்.

 

கார்த்தி, “நான் சொல்றேன் மாமா, சந்தோஷூம் சந்தனா அக்காவும் ரேவதி அத்த பிள்ளைங்க. வித்யாவும் ஶ்ரீயும் மல்லிகா அத்தை பிள்ளைங்க. எனக்கும் ஜனனிக்கும் அம்மா நந்தினி, ஆனா நாங்க சின்ன வயசில இருந்தே மத்தவங்கள அண்ணா அக்கான்னே கூப்ட்டு பழகிட்டோம், அவ்ளோதான்”

 

ஆரவ், “நீங்க என்னடா படிக்கிறீங்க?”

 

கார்த்தி, “சந்தோஷ் அண்ணன் என்ஜினியரிங் முடிச்சுட்டு வேலை பாக்குது. சந்தனா அக்கா இந்த வருஷம் தான் பி.எஸ்சி படிச்சு முடிச்சாங்க, வித்யா அக்கா இப்ப பைனல் இயர். நான் 12த், ஶ்ரீ 11த், ஜனனி 10த்.”

 

ஆரவ், “சரி உங்க அக்காக்கு யானை கூட எல்லாம் எப்டிடா இப்டி பழக்கம்?”

 

கார்த்தி, “இதல்ல நீங்க பர்ஸ்ட் கேட்ருக்கனும்”

 

ஆரவ் சிரித்தபடியே “சொல்லுடா…” என்றான்.

 

கார்த்தி, “அது கொஞ்ச தூரத்தில இருக்குற பெரிய கோவிலுக்கு சொந்தமான யானை. அதோட அம்மா யானை அப்பத்தான் பப்லுவ குட்டி போட்டுச்சு, திடீர்ன்னு பெஞ்ச பெரிய மழையால அது இருந்த மண்டபம் இடிஞ்சு விழுந்து யானையும் யானைக்குட்டியும் உள்ளயே மாட்டிக்குச்சு. பப்லுக்கு ஒண்ணுமில்ல, ஆனா அதோட அம்மாக்கு கால்ல பெரிய காயம். சுத்தி வேற இடம் இல்லாததால நம்ம வீட்டுக்கிட்ட இருக்குர இந்த சின்ன கோவில் மண்டபத்துக்கு கொண்டு வந்து தங்க வச்சாங்க. அம்மா யானைக்கு எவ்ளோ மருந்து போட்டாலும் சரி ஆகவே இல்ல. டெய்லி குட்டி யானைக்கு நம்ம வீட்ல இருந்து சந்தனா அக்கா ஒரு வாளில பால் எடுத்துட்டு போவா, அப்டியே அவகிட்ட பப்லு ஒட்டிகிச்சு. அம்மா யானை ஆறு மாசம் வரைக்கும் படுத்தே கிடந்துட்டு அப்புறமா செத்திடுச்சு. அப்ப இருந்தே குட்டியானை அக்காவையும் முத்துச்சாமி தாத்தாவையும் தவிர யாருக்கும் அடங்காது. பெரிய கோவிலுக்கு காலைலயும் சாயங்காலமும் பூஜை டைம்க்கு போயிட்டு, நைட்டும் மதியமும் இங்கயேதான் மண்டபத்துல இருக்கும்.” என்று முடித்தான்.

 

நந்தினி, “தம்பிங்களா, எல்லாரும் போய் குளிச்சிட்டு சாப்பிட வாங்க டைம் ஆகுது…” என்றதும் அனைவரும் மீட்டிங்கை முடித்து கலைந்து சென்றனர். மளமளவென அனைவரும் தயாராகி வர, ஆண்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர். வீட்டு பெரியவர்களை போல் இல்லாமல் ஶ்ரீ, கார்த்தி, ஜனனி மூவரும் ஆரவ்வோடு அதற்குள் அத்தனை பாந்தமாய் பொருந்தி விட்டனர். இதுநாள் வரை புது ஆட்களிடம் பேசவே தயங்கியவன், இன்று தனக்காக தன் குடும்பத்து ஆட்களுடன் வெகுவாய் ஒட்டி உறவாடும் அழகை கண்டு, காதல் கனிந்த கண்களோடு தன் காதல் கணவனை பார்த்து ரசித்து கொண்டு நின்றிருந்தாள் பார்பி…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: