Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 48

பாகம் – 48

யாருக்கும் தெரியாமல், வாசல் பக்கமாய் வந்து வீடியோவை ப்ளே செய்தான். அவள் தனக்கும் தாத்தாவுக்குமான உரையாடலை  வீடியோவாக பதிந்து அனுப்பி இருந்தாள். தாத்தாவிடம் அவனுக்கும் அவளுக்குமான காதல் கதையில் அவனை கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு பாராட்டி சொல்லி இருந்தாள். இறுதியாய் தாத்தா அங்கிருந்து போன பிறகு தனியாய் வந்து கேமராவை பார்த்து, “இப்ப நான் சொன்னதையே தான் நீயும் சொல்லனும். மாத்தி கீத்தி எதையாவது உளறி வச்சன்னு வச்சுக்கோ கொன்றுவேன்… என்மேல ப்ராமிஸ் நீ எதையும் சொல்லக்கூடாது, புரியுதா…” என்று முடித்திருந்தாள்.

 

அவன் சிரித்து கொண்டே அதை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு தாத்தாவின் அறைக்கு சென்று ஏதோ அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி, “தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் அவ்ளோ நல்லவன் இல்ல. அவ சொன்னது எல்லாமே பொய், என்னையும் எதையும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்கா. ஒண்ணு மட்டும் நிஜம் நான் அவ மேல உயிரையே வச்சிருக்கேன். ஆனா, எவ்ளோதான் நான் பாசமா இருந்தாலும், நீங்களும் எங்க கூட இருந்தாத்தான் அவளுக்கு முழு சந்தோஷம் கிடைக்கும்னு எனக்கு தெரியும். எனக்குத்தான் யாரும் இல்ல, அவளுக்கு இவ்ளோ நல்ல குடும்பம் இருக்கும் போது ஏன் அவ தனியா வாழனும்? எங்களுக்கு நீங்க எல்லாரும் வேணும் தாத்தா…” என்று முடித்தான்.

 

தாத்தாவிற்கு ஒளிவு மறைவின்றி, அவன் சொல்ல வேண்டியதையும், தன் தேவையையும், சந்தனா மீதான தன் பாசத்தையும் துளி பயமின்றி, சுருக்கமாகவும் திருத்தமாகவும் சொன்ன விதத்தில் அவன் குணம் பிடித்துவிட அவருக்கு ரொம்பவே சந்தோஷம். இருந்தும் முதலில் எடுத்த முடிவான நான்கு நாள் ஒத்திகைக்காக எதையும் வெளிக்காட்டாமல் மறைத்து கொண்டார்.

 

அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் வித்யா பார்பியை தனியாக அழைத்து சென்று, “அக்கா சாப்பாட்டுல காரம் ரொம்ப அதிகமா இருந்ததால உங்க கூட வந்தவங்க யாருமே சரியா சாப்பிடலக்கா, அம்மா வேற எதாவது செய்றோம்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிட்டு மாடிக்கு போயிட்டாங்க…” என்றாள்.

 

பார்பி, “கொஞ்சம் கோதும மாவ நம்ம ரூம்ல எடுத்து வை வித்யா…” என்று இன்டக்ஷன் ஸ்டவ்வை தன் கையில் எடுத்து கொண்டு மேலே சென்றாள். மாடியில் இரண்டு பெரிய அறைகளும் இரண்டு சிறிய அறைகளும் இருந்தது. இரண்டு பெரிய அறைகளுக்குமான பால்கனி ஒரு அடி மட்டுமே இடைவெளி விட்டு மிக நெருக்கமாகவே அமைந்திருக்க, ஒன்றில் சகோதரர்களும் இன்னொன்றில் சகோதரிகளும் இதுவரை தங்கி இருந்தனர்.

 

இன்று ஆண்கள் அறையில் ஐந்து நண்பர்களும் தங்குவதற்கு வசதியாக மேலும் சில பெட் சேர்க்க பட்டிருப்பது பார்வைக்கு நன்றாகவே தெரிந்தது. ஏசி, பேன் எதுவுமே தேவையில்லை என்பதைப்போல மல்லிகை மணம் கலந்த குளிர் காற்று ஜன்னல்களின் வழியே இதமாக வீசியது. ரிஷி வஜ்ராக்காக பெட்டை உதறி விரித்து ஒழுங்கு படுத்தி தந்து கொண்டிருந்த நேரம், யஷ்மித்தும், பிரித்வியும் ‘எனக்கு உனக்கு’ என வழக்கம் போல தலையணைக்கு சண்டை போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று பால்கனி கதவை யாரோ டமடமவென தட்டும் சத்தம் கேட்டு யஷ்மித் ஓடிப்போய் கதவை திறக்க, அங்கே ஜனனி இடுப்பில் கை வைத்து கொண்டு நின்றிருந்தாள்.

 

யஷ்மித், “ஐயோ… அம்மா… பேய்யி….” என்று அலற,

 

“ஓய்… நான் இந்த வீட்டு ஏஞ்சலாக்கும்….”

 

யஷ்மித்தோ இன்னும் ஆச்சரியம் விலகாமல், “எப்டி இங்க வந்த நீ?” என்றான். அவன் மூக்கில் விரல் வைக்கும் படியாக, பால்கனி மீது ஏறி தாவி வந்த தன் சாகசத்தை மீண்டும் அவனுக்கு செய்து காட்டினாள்.

 

அது புதிய ஆண்களுக்கு ஒதுக்கிய அறையென்றும் பாராது தயங்காமல் உள் நுழைந்த ஜனனி நேராக ஆரவ்விடம் போய், “ஹாய் மாமா, எங்களோட ரூம்ல உங்களுக்கு சாப்பாடு ரெடி ஆகிட்டு இருக்கு, அதுவரைக்கும் சும்மா உங்கள பாத்து பேசலாம்னு வந்தேன்” என்றாள்.

 

யஷ்மித், “மறுபடியும் சாப்பாடா… வேண்டா…..” என்று அலற,

 

ஜனனி, “கவலப்படாதீங்க, நீங்க எங்க ஊரு சாப்பாட்ட வயித்துக்கு சாப்பிடலன்னு தான், சந்தனாக்கா உங்க ஊரு சாப்பாட்ட பக்கத்து ரூம்ல சமச்சிட்டு இருக்காங்க.”

 

ஆரவ் காதருகே வந்து ரகசியமாய், “அப்புறம் மாமா… உங்களுக்கு மட்டும் இன்னிக்கி நைட் ஸ்பெஷலா ஒரு பெரிய விருந்தே இருக்கு, நீங்க தாத்தாகிட்ட சொன்னதை எல்லாம் நானும் சந்தனா அக்காவும் ஜன்னல் பக்கம் ஒளிஞ்சிருந்து கேட்டுட்டோம்.”

 

ஆரவ் ‘போச்சுடா’ என தலையை சொறிய, அவள் பாசமாய், “பயப்டாதீங்க மாமா… எங்க அக்கா ரொம்ப நல்ல பிள்ள. பொதுவாவே யாரையும் திட்ட மாட்டா, ஏன்னா அவளுக்கு அவ்ளவா திட்றதுக்கு வராது…” என்று ஆறுதல் சொல்பவளுக்கு எப்படி தெரியும், இப்போதிருக்கும் சந்தனாவை பற்றி.

 

சமையல் வேலைகள் முடிந்ததும் வித்யா அடுத்த அறை பால்கனியிலிருந்து விசில் அடித்து சிக்னல் தர, ஜனனியின் வழிகாட்டுதலின் பேரில் அவளோடு சேர்ந்து நண்பர்கள் ஐவரும் பால்கனியை தாண்டி குதித்து சென்றனர். அவர்களுக்கு பிடித்த ஆலு பராத்தாவே சந்தனா செய்திருக்க, இருந்த பசிக்கு ஆளுக்கொரு தட்டை எடுத்து கொண்டு வட்டம் போட்டு அமர்ந்தனர்.

 

யஷ்மித், “ஏம்மா, இத நீ கீழயே செஞ்சிருக்கலாம்ல…”

 

பார்பி, “அப்புறம் நீங்க டைனிங் டேபிள்ல கஷ்டப்பட்டு பண்ண தியாகத்துக்கு அர்த்தம் இல்லாம போயிடுமே….” அதற்கு மேல் பேசாமல் நால்வரும் சாப்பிட தொடங்க, ஆரவ் மட்டும் வேண்டாம் என சொல்லிவிட்டு அவளோடு சேர்ந்து உண்பதற்காய் காத்திருந்தான்.

 

ஜனனி, “ஏன் மாமா…. நீங்கதான் கீழ வரவே இல்லயே, இருந்தும் எங்க அக்கா இன்னும் சாப்பிடலன்னு உங்களுக்கு எப்டி தெரிஞ்சுச்சு?”

 

“அது ரொம்ப ஈசிம்மா… உங்க அக்காக்கு கோபம் வந்தா அத முதல்ல சாப்பாட்ல தான் காட்டுவான்னு, எனக்கு நல்லா தெரியும்” என்றதும் அங்கே அவளிடமிருந்து முறைப்பும், அவனிடமிருந்து சிரிப்பும் பரிமாறி கொள்ள பட்டது. “ஐயோ… செம ஜீனியஸ் மாமா நீங்க…” என்று விடாமல் தொண தொணவென ஜனனி பேசி கொண்டே இருந்ததால் அவளுக்கும் ஒரு தட்டை கையில் தந்து, தற்காலிகமாக அவள் வாயை அடைத்தாள் பார்பி.

 

மற்றவர்கள் உண்டு முடித்த பிறகும் அவன் அசையாமல் இருக்க, அவளே மூன்று பராத்தாவை எடுத்து வைத்து தட்டை கொண்டு வந்து அவனிடம் தந்தாள். அவன், ‘நீ முதல்ல சாப்பிட்டாத்தான் நானும் சாப்பிடுவேன்…’ என சைகை செய்தான். அவள் இன்னும் கோபமாக, ‘எனக்கு ஒண்ணும் வேண்டாம்…’ என திரும்பிக் கொண்டு நின்றாள்… ஊரும் உறவும் சுற்றி இருக்கையில், உணவுண்ண மாட்டேன் என்று அடம் பிடிக்கும் தன் செல்ல குழந்தையை அவன் என்ன செய்ய?

 

அவர்கள் இருவரின் ஊடல் புரிந்ததும், ‘இனி நமக்கு இங்கே வேலையில்லை…’ என தனிமை கொடுத்து நண்பர்கள் நால்வரும் வந்த வழியே தங்கள் அறைக்கு திரும்பி சென்று விட்டார்கள். வித்யா கிச்சனில் இருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் திருப்பி வைக்க கீழே சென்றாள். ஜனனியும் அல்ட்ரா மாடர்னாக இருந்த ஆரவ்வின் போனை ஆசையாக எடுத்து போய் பெட்டில் படுத்து கொண்டு நோண்ட ஆரம்பிக்க, அவன் பார்பியை தனியாக பால்கனி பக்கமாக தள்ளி சென்றான்.

 

பால்கனி கதவுகளை சாற்றி வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு, “ஏன்டா என்கிட்ட இவ்ளோ கோபம்? இந்தா சாப்பிடு…” என ஊட்ட வந்தான். அவள் தன் இதழ்களை இடைவெளி இல்லாத அளவிற்கு இறுக்கமாக மூடிகொண்டு, அதே இடத்தில் கீழே சட்டமாக அமர்ந்து கொண்டாள். மங்கலான நிலவொளியில் மல்லிகை மணம் குறைந்து அவளது சந்தன மணம் கூடி வரும் நேரத்தில், அவன் மனம் தாபத்தில் ஏங்க தொடங்க, கோபத்தின் உச்சத்தில் அவள் இருந்தாள்.

 

கண்ணாடி கண்களில் அவளின் மனம் புரிய அவனும் அவளருகேயே அருகே அமர்ந்து ஒரு கையால் அவளது தலையை கோதி விட்டு, மறு கையால் அவளின் கைகளை பிடித்து, “சரி நாம பேசி தீத்துக்கலாம், சொல்லு… என் செல்லத்துக்கு என்ன பிரச்சனை?”

 

“என்ன சொல்லனும்? நீங்க இதுவரைக்கும் என்னை கேட்டு எதாவது முடிவு எடுத்திருக்கீங்களா? இல்ல நான் சொல்றது எதையாவது காது குடுத்து கேட்ருக்கீங்களா? அட்லீஸ்ட் எனக்கு புரியிர மாதிரி எதையாவது விளக்கமா சொல்லி இருக்கீங்களா?”

 

“இல்லைல… சரி சாரிடா…. இனிமே இப்டி நடக்காது. என்னை நான் திருத்திக்கிறேன், ப்ளீஸ் இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சிடு செல்லம். வாய திற… இந்தா ஆ… சொல்லு…” என்று ஊட்டிட வருகையில் அவன் கையை பிடித்து கொண்ட,

 

“நான் சாப்பிட ஒத்துக்கிறேன், ஆனா அடுத்த நிமிஷம் நாம இங்க இருந்து இப்டியே கீழ குதிச்சு ஓடி போயிடலாம். ஓகேவா?” என அவள் சீரியஸ்ஸாக கேட்க அவனோ டக்கென்று சிரித்து விட்டான். அவனது கேலி சிரிப்பினால், மூக்கு சிவக்க கோபத்தில் அவனுக்கு முதுகை காட்டி திரும்பி கொண்டாள்.

 

பவள நிற வானவில் துண்டங்களென வளைந்து கிடக்கும் அவளின் இடையினை பற்றி இழுத்து, சமாதனம் பேச வசதியாக அவளை தன் மடிமேல் அமர்த்தினான். காற்றில் ஆடும் காதின் கம்மலோடு மூக்குரசியபடி, “மறுபடியும் முதல்ல இருந்தா குட்டிம்மா?” என்றான் கிறங்கிய குரலில்.

 

அவனை தன் முழங்கை கொண்டு இடித்து தள்ளிவிட்டு மடியிலிருந்து கீழிறங்கி எதிரே அமர்ந்தவள், “நீங்க ஏன் இப்பிடி எல்லாம் செய்றீங்கன்னு, எனக்கு புரியுது ஆரவ். நீங்க அந்த சாகர்னால உங்களுக்கு எதாவது ஆகிடும்னு பயந்து தான, என்னை என் குடும்பத்தோட சேத்து வைக்கிறீங்க. நீங்க இல்லாம நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினச்சீங்களா?”

 

“சாகர பொதச்ச இடத்துல இன்னேரம் புல்லு முளைச்சிருக்கும், போலீஸ் என்கவுண்டர்டா…” என்றவனை அவள் சந்தேகமாய் பார்க்க, அதற்கும் அந்த கள்வன் தன் மந்திர புன்னகையே பதிலாய் தந்தான்.

 

“அப்புறம் என்னடா பிரச்சினை? அவனுங்கள கொல்றதுக்கு பதிலா பேசாம நீ என்னயே கொன்றுக்கலாம். ஒவ்வொரு தடவையும், நான் ஆசையா உனக்காக காத்திருக்கும் போது, ஏன் என்னை புரிஞ்சுக்காம தவிக்க வச்சு பாக்குற? வஜ்ரா வீட்ல நான் உடம்புக்கு முடியாம இருந்தப்போ நீ வந்து பேசினேலே, அப்பவே எனக்கு உன்மேல காதல் வந்திடுச்சு. ஆனா அப்போ பதில் சொல்ல கூட என் உடம்புல தெம்பே இல்ல தெரியுமா… பத்து நாள் கழிச்சு உன்ன பாக்கனும்னு ஆசை ஆசையா நான் ஓடி வந்தா நீ என்னை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்ல. அப்புறம் ஆஸ்ட்ரேலியால குரு ஹோட்டல்ல பார்ட்டி குடுத்த அன்னிக்கி, எனக்காக.. நீயே என்ன தேடி வந்து காதல சொல்லுவன்னு ரூம்க்குள்ள நாலு மணி நேரமா ஆசையா காத்திருந்தேன். நீ என்னடான்னா மூச்சுமுட்ட தண்ணி அடிச்சுட்டு வந்து சாப்பாட்ட மட்டும் தந்துட்டு, என்ன ஏதுன்னு கூட கேக்காம போயிட்ட. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கி நான் காலைல எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? எனக்காக இன்னிக்கி ராத்திரி நீ என்னெல்லாம் தரப்போறன்னு லூசு மாதிரி கனவுல மிதந்துகிட்டு இருந்தேன் தெரியுமா? பாரு எனக்கு நீ என்ன குடுத்திருக்கன்னு” என ஆறு பேருக்கும் சேர்த்து சப்பாத்தி தேய்த்ததால் சிவந்து போயிருந்த கைகளை நீட்டினாள்.

 

தாமரை நிறமாய் மாறி இருந்த அவள் கைகளை பார்த்ததுமே செய்வதறியாது, தன் இதழ் முத்தங்களை அவளின் உள்ளங்கைகள் முழுக்க நிறைத்தான். “நான் செஞ்சது எல்லாமே முழுக்க முழுக்க உனக்காகத்தான்டி, அப்போல்லாம் உனக்கு புரியிர மாதிரி சொல்ற நிலமைல நானே இல்லடா, உன்ன நினைச்சு அவ்ளோ நொந்து போயிருந்தேன் நான். இப்பவும் நீ மனசு மாறத்தான் இத்தன நாள் காத்திருந்தேன். உனக்கென்னடி குறை? இவ்ளோ அழகான குடும்பம் இருந்தும் நீ தனியாவே இருக்குறது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. நான் தான் யாருமில்லாத அநாத..”

 

பார்பி தன் காதால் அநாதை என்ற வார்த்தையை கேட்ட அடுத்த நிமிடமே அவன் வாயை வேகமாய் மூடி, “ஒண்ணும் வேண்டாம், எனக்கு வேற யாருமே வேண்டாம்… நீ மட்டும் போதும்… நீ எனக்காக கஷ்ட படுறத என்னால பாக்க முடியலடா, ஏன் நீ எங்க தாத்தா கால்ல எல்லாம் விழுறடா?” என்று அழ தொடங்கினாள். தன் தாத்தாவாய் இருந்தும்கூட தன்னவன் தனக்காய் தலை குனிந்ததை தாங்கி கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுதவளை ஆதரவாய் அணைத்து கொண்ட ஆரவ், “எனக்காக மூணு மாசமா நீ உயிரில்லாத பொம்மை மாதிரி வாழ்ந்து கஷ்டபட்டியே, உனக்காக நான் இதக்கூட செய்ய கூடாதாடி?” என்றான்.

 

அடுத்த வினாடியே அவனை தாவி அணைத்தவள், இந்த ஜென்மம் முழுவதிற்கும் அவன் நினைவில் நீளும்படி அழுத்தமான தன் முதல் இதழ் முத்தத்தை தந்தாள். எதிர்பாராமல் கிடைத்த அந்த அரிய பரிசினால், ஆரவ் சந்தன காற்றில் கரைந்த கற்பூரமானான்.

 

பாதையும் தூரம்,

நான் ஒரு பாரம்,

என்னை உன் எல்லை வரை,

கொண்டு செல்வாயா???

 

உடலுக்குள் இருக்கும்

உயிர் ஒரு சுமையா?

பெண்ணே உன்னை நானும்

விட்டுச் செல்வேனா???

 

தந்தை தந்த உயிர் தந்தேன்…

தாய் தந்த உடல் தந்தேன்…

உறவுகள் எல்லாம் சேர்த்து,

உன்னிடம் கண்டேன்!!!

 

மொத்தத்தையும் நீ கொடுத்தாய்

ஆனால்,

முத்தத்துக்கோ நாள் குறித்தாய்!!!

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: