Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 5

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 5

கிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கி வரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் ‘பனஞ்சோலை ஸால்ட் வொர்க்ஸ்’ என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன.

தலைக்கொட்டை எனப்படும் பனஓலையால் பின்னிய சும்மாட்டுச் சாதனமும், அலுமினியத் தூக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஓலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண் பீளையுமாக மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப்படும் இளைஞரும் அந்தக் கும்பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் ‘செய்நேர்த்தி’ முடிந்து தெப்பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மையான பாதங்கள் கன்றிக் கறுத்துக் கீறல்கள் விழுந்து விட்டன.

உப்பளத்து வேலையில் ‘சமுசாரி வேலை’ என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக் காண இயலாது. இங்கு உயிரற்ற வறட்சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் ‘கண்ட்ராக்ட்’ நாச்சியப்பன் உதிர்த்த போது முதலில் அவள் மருண்டு தான் போனாள். அவர்கள் பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாள்.

எல்லை தெரியாமல் விரிந்து பரந்து கிடந்த பாத்திகளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பட்டாளத்தில் வேட்டி காயப் போட்டாற் போல், பாய் விரித்தாற் போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக்கும். இங்கோ… வானக் கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது! தெப்பங்களே (தெப்பம் – கடல் நீரை முதன் முதலாகச் சேமிக்கும் பாத்தி) ஆத்தூர் ஏரி போல் விரிந்து கிடக்கின்றன!

வேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள். அவளைப் போல் நாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கின்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு.

உப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர்களில் சில பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாரி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஐந்து பேருக்கு மேலில்லை. இவர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு பணி செய்யும் தொழிலாளர்களும் உண்டு. தம்பி பச்சைமுத்துவுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக்கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிரவாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில்தான் எத்தனை சிறுவர் சிறுமியர்! பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சியப்பன் நம்பவில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அறைவைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவனுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி சுமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பனஓலையில் பின்னி இரண்டு கயிறுகள் கோத்த மிதியடிகளை அணிகிறாள். அதுவே ஒரு நாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக்கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தியாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளியிட்டார். பசி… பசி அவிய இந்த உப்புக்கசத்தில் எரிய வேண்டும்.

நாச்சியப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி… அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டு விட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி… அன்னக்கிளி சூலி.

பொன்னாச்சியைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சியப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சியைப் போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒரு மாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்லை. போகும் போதும் வரும்போதும் கழுத்தில் தொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக்கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பலகை போடுவாள். “புதுசா தளதளப்பா இருக்கா. ஏட்டி, ஒம்பாடு சோக்குதா. சோலிக்கீலியெல்லா சொம்மா போக்குக் காட்டத்தா…” என்று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. “ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது?…” என்றாள் கோபமாக.

பேரேட்டில் பெயர் படிக்கும் போதே அவன் பொன்னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான்.

“ஏவுள்ள! நீ அவளுவ கூட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற…”

பொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற்கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்தியில் குவித்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒரு புறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வருகிறான்.

“அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக் கழுவ…” என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான்.

அவன் கையை வெடுக்கென்று உதறிக் கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாதது போல் செல்கின்றனர்.

விருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார் வந்து நிற்கக் கண்டிருக்கிறாள். அங்கு முதலாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்று வந்து ‘கண்ட்ராக்டி’டமோ, கங்காணியிடமோ கொடுப்பார்.

பொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப் பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போதுதான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடியில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூசும் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு- பூப்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள். அவள் தயங்கியவளாக வெளிவராந்தாவில் நிற்கிறாள்.

“ஏட்டி, நிக்கிற? இங்ஙன உள்ள வா! சாமானங் கெடக்கு. தேச்சுக் கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி! முதலாளி வராக…!” என்று சொல்லிவிட்டு கட்டிடத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். பின் தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் தூளை எடுத்துப் போடுகிறான். அவள் துலங்க அமருகிறாள்.

நெஞ்சில் சுருக்சுருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. “முருவா… முருவா” என்று உள்ளம் ஓலமிடுகிறது.

சாமான் துலக்கும் போது, அங்கிருந்து ஓடி விடப் பின் கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நா உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக் கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஓர் ஓரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஓர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், கொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். “இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு!”

அவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி, தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

வாரியல் அவிழ்ந்து கொட்டிக் கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும் போது அவன் அவள் மீது விழுந்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான்.

அவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் கிள்ளித் தள்ளுகிறாள், “என்னிய விடு…! என்னிய விடுரா. சவத்து மாடா? சவம்…”

காலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள்.

வெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.

அவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து மோதுகிறான்.

“ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும்டீ…?” என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன்றதோர் அருவருப்பான எதையும் அதற்கு முன் அவள் மனம் உணர்ந்திருக்கவில்லை. அவள் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவு வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள்.

“மூளி… ஒனக்கு அம்புட்டிருக்கா? செறுக்கி மவ… ஒந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித்தனமா காட்டுறே?…”

வெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார்… யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைக்குழைத்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்து கொண்டு ஓட்டமாக ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து மாட்டிக் கொண்டது புரிகிறது.

அவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட்வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப்பார்கள்?

கண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங்களில் இறங்குகிறது. ‘ஐட்ராவை’ (‘ஐட்ரா’ – ஹைட்ரா மீட்டர் எனப்படும், நீரின் அடர்த்தியைச் சோதித்தறியும் கருவி) மூங்கிற்குழாய் நீரில் விட்டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் ‘போணி’க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணீர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான்.

“ஏவுள்ள… ஏ அளுதிட்டுப் போற?… ஏ…?”

அவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ? அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும்? அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை.

எண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்பை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப் பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன் தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கிறாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக்கும் செவந்தியாபுரம் அளத்திலேயே வேலை செய்கிறாளாம்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடிவாம்பா “குடுத்து வச்சவிய நிக்கிறாவ. ஏட்டி எங்கட்டி பாத்து வாயப் பொளக்குறே? ஓ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா?” என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும் கூட எவ்வளவு கேவலமாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக் காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகள்!

நரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது. பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த்துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக்கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும்.

பொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக்கிறாள்.

சுட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி, பாத்திகளில் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமையில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி – உப்பு – நடை – சுமை – தட்டு மேடு – அம்பாரம்… இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத் துளிகள் இயந்திரமாகி விடும் இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த பேச்சு உயிர்க்காது.

பொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுவரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள்கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள்.

சோற்றுக் கொட்டுக்குப் போய் நீரருந்தலாம்? அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான்; இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது.

‘கண்ட்ராக்டு’ நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான். பொன்னாச்சி அவன் நிற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு தெரிய நின்று அவன் விரட்டுகிறான்.

நாச்சியப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தூக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க முடுக்கும் பாவனையில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன் மீது கொட்டி அவனை மிதிக்க வேண்டும் என்ற ஓர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு.

ஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல்களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது.

சிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல்வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். “இன்னும் இன்னும்…” என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.

“ஆளண்டி, அறிவு கெட்டவளே, போனா ஒளையிலே மாட்ட்க்கிட்டு முடிஞ்சி போவ!” என்பாள்.

ஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நாள் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாய் இறந்து போன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின் மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு ஆழத்தில் இறங்கினாள்.

சேற்றில் கால் புதைந்து விட்டது. தூக்க முடியவில்லை. கைகளை அடித்துக் கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். “ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே?” என்று கடிந்தான்.

இப்போது அது நினைவுக்கு வருகிறது.

பகல் நேர உணவுக்கான ஓய்வு நேரம் முக்கால் மணி.

தம்பி பச்சைக்கும் அப்போது ஓய்வு நேரம் தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஓடி வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் நீர் ஒழுகிக் காய்ந்து கோடாகி இருக்கிறது. “மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல… மேலெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்?” என்று அவன் மீது கையால் தட்டுகிறாள்.

படிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்ந்தால் ஓடி ஓடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் தின்னக் காசு கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்து இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் ஓடி ஓடி வந்து அக்காளிடம் “பசிக்குதக்கா” என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப் பிள்ளைகளுடன் கடலுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான்.

தூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

“அக்கா, அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள்ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல? அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித் தரா. பெரிய… பைப். நாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா…”

பொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை.

“ஆனாக்கா… அந்தாளு, எப்பமும் கள்ளு குடிச்சிருக்கா, இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா? போலீசொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பர்மிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பாவளாம்!”

பொன்னாச்சிக்கு அது ரசிக்கவில்லை.

“நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசண்டா, ஒஞ்சோலியுண்டு, நீயுண்டுன்னு வா…” என்று அறிவுரை கூறுகிறாள்.

வயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை.

ஆனால்… அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்?

இந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறணுண்டோ?…

“ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித்தார…”

“இல்ல ராசா…” என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. “இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே…” என்று கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது” என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. யார் யாரோ ஆணும் பெண்ணுமாகத் தொழிலாளிகள். ‘ஐட்ராவை’ வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை ‘ஏன் அழுகிறாய்’ என்று கேட்டவன், கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறான்.

“ஆகா… சோறு மணக்கு… எனக்குஞ் சோறு வையிடீ ராசாத்தி…” என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்து நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்…

“அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இவெதா… அந்த டைவரு.”

அவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக் கையை பற்றும் போது அவள் தூக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள்.

அப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த ‘ஐட்ரா’ இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஓர் உதை விடுகிறான்.

“ராஸ்கோர்ல்… பொண்டுவ கிட்ட வம்பு பண்ணு… ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ…”

அவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான்.

“குடிகாரப் பய…”

“நீ சோறுண்ணும்மா.. இனி அவெ வரமாட்டா இந்தப் பக்கம்…”

பொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள்.

‘அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்?’…

பசுமையற்ற கரிப்பு வெளியில் ஓர் நன்னீரூற்றின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள் அவள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 36கல்கியின் பார்த்திபன் கனவு – 36

அத்தியாயம் 36 குடிசையில் குதூகலம் மறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. படகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான்? என்ன அதிகார தோரணையில் பேசினான்?

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 48கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 48

அத்தியாயம் 48 – நெஞ்சு பிளந்தது இராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச்