Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 47

பாகம் – 47

டுகளால் வேயப்பட்ட அந்த அகன்ற பெரிய, பழைய வீடே அவர்கள் வாழ்வின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் அளவிற்கு புராதானம் நிறம்பி இருந்தது. ஆரவ் வேகமாக உள்ளே செல்வதை பார்த்ததும் பார்பி, ‘ஐயோ இவன் உள்ள போய் தாத்தாகிட்ட எல்லாத்தையும் உளறிட்டான்னா, அப்புறம் என்ன செஞ்சாலும் அவரு சமாதானமாக மாட்டாரே…’ என்ற பயத்தில் அவளும் இறங்கினாள். உள்ளே சென்று அவர்களை எதிர்கொள்ள துணிவு வர மறுத்திட, தனக்கு ஆதரவாக வஜ்ரா கைகளை இறுக பிடித்து கொண்டாள்.

 

ஆரவ் வீட்டிற்குள் நுழைந்த நேரம் அங்கே ஹாலில் யாரும் இல்லை. வலதுபுறம் இருந்த இரண்டு அறைகளில் முதல் அறைக்குள் இருந்து ஏதோ பழைய பாடல் ஓடும் சத்தம் கேட்டது. அவற்றையடுத்து சுவற்றை ஒட்டினார் போல் இருந்த அகன்ற மாடி படிக்கட்டுகளில் மேலிருப்பவர்களின் மெல்லிய பேச்சு சத்தம் கேட்டது. வாசலுக்கு நேர் எதிரே கிச்சனும் அதனை ஒட்டியபடி ஒரு மரத்தாலான பெரிய டைனிங் டேபிளும் இருக்க, இடதுபுறம் மூன்று அறைகள் இருந்தது. கிச்சனுக்குள் இரவு உணவுக்கான ஏற்பாடுகள் நடப்பதை குறிக்கும் வகையில் நல்ல வாசனையோடு தாளிக்கும் சத்தம், குக்கர் விசில் சத்தம் எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தது. கிச்சனில் இருந்து இரண்டு வயது குழந்தையுடன் வெளியேறிய ஒரு பெண் ஆரவ்வை கண்டதும், “யாருங்க நீங்க? யார பாக்கனும்?” என்றாள்.

 

அவள் சத்தம் கேட்டு கிச்சனுள் இருந்து ரேவதி, “யாரு வந்திருக்கா சரசு?” என்றார். ஆரவ்விற்கு பார்பி அன்று சொன்ன தட்டாங்கல் விளையாடும் பக்கத்துவீட்டு சரசு அக்கா இவர்தான் என புரிந்துவிட்டது.

 

“தெரியலம்மா…. யாரோ ஒரு தம்பி வந்திருக்காக, பெரியவர பாக்கத்தேன் வந்திருப்பாக போல, நான் போயி ஐயாகிட்ட சொல்றேன்…” என்றவள் வலதுபுறம் பழைய பாடல் ஒலித்த அறைக்கு போனாள்.

 

ரேவதி கிச்சனில் இருந்து வெளியே வந்து ஆரவ்வை யோசனையாய் பார்த்தபடி “யாருப்பா நீ?” என்றார்.

 

“நான் சந்த…” அவளின் கணவன் என்பதா காதலன் என்பதா? தற்சமயம் என்ன சொல்வதென்று சரியாக இருக்குமென்று அவனுக்கு தெரியவில்லை. பதில் சொல்ல தடுமாறிய அவனுக்கு உதவி செய்யும் வகையில் வெளியே வானம் திடீரென்று இடியும் மின்னலுமாய் மழையை கொட்டி வெளுத்து வாங்க தொடங்கியது.

 

ரேவதி, “மதினி… மழ வருது பாருங்க, டியூஷன்ல இருந்து ஜனனிய கூப்பிட யாரு போயிருக்கா?”

 

கிச்சனில் இருந்து அவரின் மதினி நந்தினி, “சந்தோஷ் தான் போனான் அண்ணி, கைல குடை எடுத்துட்டுதான் போயிருக்கான். வர்ற நேரம்தான், ரெண்டு பேரும் இப்ப வந்திடுவாங்க…”

 

இதற்குள் அறையில் இருந்து வெளியேறிய தாத்தா அவன் முன்னால் வந்து நின்று “யார் வேணும் தம்பி? எதுக்கு வந்திருக்கீங்க? சந்தோஷ்ஷோட ப்ரண்டாப்பா நீ?” என்றதும் அவன் மறுப்பாய் தலையசைக்க, சந்தேக பார்வையோடு “பின்ன யாரு நீ?” என்றார். அவனுக்கு பின்னால் மேலும் புதிதாய் நான்கு பேர் உள்ளே நுழைய, அவர்களில் ஒருவன் பின்னால் இருந்து சுடிதார் அணிந்த பெண் ஒருத்தி மெதுவாய் தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தாள். அவர் தன் கண்களை நம்பாமல் மீண்டும் ஒருமுறை கண்ணை கசக்கி பார்க்க, அவளோ அங்கிருந்து வெளியே வர விருப்பமின்றி அந்த புதியவனின் பின்னாலே ஒளிந்து நின்றாள். அந்த புதியவனோ உரிமையாய் தானே அவள் கைகளை பிடித்து இழுத்து அவர் முன்னால் கொண்டு வந்து  நிறுத்தினான்.

 

“சந்தனா… நீ… எப்டி உயிரோட?” தாத்தா சொல்லி முடிக்கும், “அக்கா…..” என்று அழுது அரற்றியபடி பின்னாலிருந்து ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டாள் ஜனனி. “எங்கக்கா போன இவ்ளோ நாளா? நான் அப்பவே சொன்னேன்லம்மா அக்கா திரும்பி வருவான்னு, இவங்க யாருமே என்னை நம்பலக்கா… பாட்டியும் நானும் உனக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுன்னு இவங்கட்ட எவ்ளோ தடவ சொன்னோம் தெரியுமா? பாட்டி உனக்கு காரியம் பண்ண வேண்டாம்னு அன்னிக்கி தாத்தாகிட்ட எப்டி எல்லாம் கெஞ்சுனாங்க தெரியுமா? சாகுற வரைக்கும் பாட்டி நீ வருவ.. வருவன்னு.. சொல்லிட்டுதான் இருந்தாங்கக்கா.” என்று தன் ஆதங்கத்தை வெடித்து சிதறினாள்.

 

ஜனனியின் திடீர் அழுகை சத்தம் கேட்டு உள்ளிருந்த அப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, தம்பி, தங்கை என அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். இறந்ததாய் நினைத்தவள் மீண்டும் தங்கள் கண்முன் வந்து நின்றதை அவர்கள் நம்ப முடியாமல், அவளை கட்டி அணைத்து உணர்ச்சி பெருக்கில் அழுவதும் சிரிப்பதுமாய் இருந்தனர். பார்பிக்கோ அந்த அன்பை மனப்பூர்வமாக ஏற்க முடியாமல், ‘அடுத்து அவன் என்னெல்லாம் சொல்ல போறானோ… சொன்னதுக்கு பிறகு இங்க என்னெல்லாம் நடக்க போகுதோ…’ என்ற தர்ம சங்கடத்திலேயே நெளிந்து கொண்டு, அடிக்கடி ஆரவ் முகத்தையே கெஞ்சலோடு பார்த்திருந்தாள். அதை புரிந்து கொண்ட அவள் தாத்தா ஆரவ்விடம் வந்து அழுத்தமாய் “நீங்க யாரு? உங்களுக்கும் சந்தனாக்கும் என்ன சம்பந்தம்? இத்தன நாளா எங்க இருந்தீங்க?” என்றார்.

 

“என் பேர் ஆரவ், நீங்க சந்தனா செத்ததா நினைச்ச அந்த இடத்துல செத்திருக்க வேண்டியவன் நான்தான். என்னை காப்பாத்துனது உங்க சந்தனாதான், அதுக்காக பழிவாங்க அவள சுட்டுட்டாங்க. அதுல கீழ விழுந்து அடிபட்டு அம்னீஷியா வந்து அவளுக்கு பழசெல்லாம் மறந்திடுச்சு. அதுக்கப்புறம் அவள பாத்துக்குற பொறுப்ப நானே எடுத்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ள….” என்கையில் பார்பி அவனை தள்ளிக்கொண்டு வந்து மிச்ச கதையை அவள் சொல்ல ஆரம்பித்தாள். “கொஞ்ச நாள் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் விரும்பி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம் தாத்தா. எனக்கு இப்போதான் பழசெல்லாம் ஞாபகம் வந்தது, அதான் உங்கள பாத்து பேசி எல்லாத்தையும் முறைப்படி பண்ணலாம்னு வந்திருக்கோம்…” என சொல்லி முடித்ததும், குடும்பத்தினர் அனைவரும் மகளுக்கு பொருத்தமான ஜோடியாய் ஆரவ்வை சந்தோஷமாய் பார்த்தனர், ஒருத்தரை தவிர.

 

அவள் சொல்வதை அப்படியே நம்ப அவர் ஒன்றும் அவ்வளவு முட்டாளல்ல. தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் அவர்கள் இருவரும் எதையோ இட்டுக்கட்டி மறைப்பது புரிய மற்றவர்கள் அறியா வண்ணம் ஆரவ்விடம் தன் சந்தேக பார்வையை வீசினார். அவனோ ‘அவ எந்த தப்பும் பண்ணல, நான் தான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று தன் பார்வையிலே அவருக்கு பதில் சொல்லி விட்டான். அவரின் முகபாவம் மாறுவதை உணர்ந்ததும் யாரும் எதிர்பாராத வகையில், ஆரவ் நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து, “என்ன மன்னிச்சிடுங்க தாத்தா…” என்றான்.  அடுத்த நொடி பார்பி பதறியடித்து “வேணாம் ஆரவ்… எழுந்திரி…” என அவனை தூக்க முயற்சிக்க, அதை பார்த்து கொண்டிருந்த அவனின் நண்பர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. பின்னர் சுதாரித்து கொண்டு ரிஷிதான் ஓடிவந்து அவனை தூக்க பார்பிக்கு உதவினான்.

 

தாத்தா இதையெல்லாம் பார்த்த மாத்திரத்திலேயே கிட்டத்தட்ட அவனை பற்றிய பாதிக்கும் மேல் புரிந்து கொண்டார். ‘அவன் கூட இருக்குறவங்க இவ்ளோ அதிர்ச்சி ஆகுறாங்கனா, இதுக்கு முன்னாடி யார் கால்லயும் இவன் விழுந்ததில்ல போல. என் பேத்திக்காக விழுறான்னா அவள அவ்ளோ புடிச்சிருக்குனு புரியுது. ஆனா குடும்பத்தோட வராம பிரெண்ட்ஸ்கூட வந்திருக்கான், ஆளு வேற பார்க்குறதுக்கு பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கான். போதாததுக்கு இவங்க ரெண்டு பேரும் முழிக்கிற முழியே சரி இல்லையே! போனா போகுதுன்னு முடிவெடுக்குற விஷயமா இது? முன்ன பின்ன தெரியாத நாலஞ்சு சின்ன பசங்க சொல்றத நம்பி அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு, போற இடத்துல நாளைக்கு நம்ம பொண்ணு கஷ்ட பட்டா என்ன பண்றது? இப்போதைக்கு நான் எந்த முடிவும் எடுக்க கூடாது. இந்த பசங்களோட நடவடிக்கை நாலு நாளைக்கு பொறுத்து பார்த்து மேற்கொண்டு என்ன பண்றதுன்னு முடிவெடுக்கலாம்…’ என நினைத்தவர், ஆரவ்வையும் அவன் நண்பர்களையும் தங்க வைக்க மாடியிலிருக்கும் பெரிய அறையை ஏற்பாடு செய்ய சொன்னார்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஐவருக்கும் டைனிங் டேபிளில் சாப்பாடு பரிமாறப்பட்டது. புளியோதரை… இதுவரை அவர்களின் வாழ்வில் பார்த்திராத ஒன்று. காரமும் சற்று தூக்கலாகவே இருந்ததால் வேறு சாப்பாடு செய்கிறோம் என்று கேட்டவர்களிடம், மரியாதை நிமித்தமாக வேண்டாம் என்று சொல்லி விட்டனர் ஐவரும். இருந்தும் நந்தினி அத்தை அப்படியே விடாமல் சட்னி, வடகம், அப்பளம் என்று வேகமாக முடியும் ஐட்டங்களாக முடிந்தவரை விரைவில் செய்து கொண்டு வந்து வைத்துவிட்டு, “கூச்சப்படாம சாப்பிடுங்கப்பா… ஏன் தம்பி, நீங்கள்லாம் எந்த ஊரு? என்ன வேல பாக்குறீங்க? ”

 

ரிஷி, “நாங்க எல்லாரும் இன்டியன் கிரிக்கெட் டீம் ப்ளேயர்ஸ், எல்லாருக்கும் வேற வேற ஊரு. நீங்க சந்தனாக்கு என்ன வேணும்?”

 

“நான் சந்தனாவோட அத்தை. நீங்களும் என்னை அத்தைனோ இல்ல சித்தினோ கூப்பிடலாம். உங்களுக்கு எதாவது கேக்கனும்னா என்கிட்ட எப்பனாலும் கேளுங்க, இத உங்க வீடு மாதிரி நெனச்சுக்கோங்க தம்பி.”

 

யஷ்மித், “உங்க வீட்ல டீவி இருக்காங்க”

 

“ஓ இருக்கே, ஹால் நடுவுல அங்கதான இருக்கு, பாக்கலயா நீங்க?”

 

யஷ்மித், “அத எடுத்துட்டு போய் மூணு சுத்து சுத்தி முச்சந்தியில போட்டு உடச்சிட்டு திரும்பி பாக்காம வந்திடுங்க. ஓடாத டீவி இருந்தா என்ன இல்லன்னா என்ன?” அவன் சொன்ன தோரணையில் நண்பர்கள் அனைவரும் அடக்க முடியாமல் மொத்தமாய் சிரித்துவிட்டனர்.

 

நந்தினி குழப்பமாய் பார்க்க, ரிஷி, “எங்கள தெரியலன்னு சொல்றீங்கள்ள, அதான் பையன் கோபத்துல பொங்குறான்.”

 

யஷ்மித், “பின்ன என்னங்க? எனக்கு டுவிட்டர், பேஸ்புக்ல மட்டுமே கோடிக்கணக்கான பாலோயர்ஸ் இருக்காங்க தெரியுமா? நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், இந்த வீட்ல இருக்குற எல்லாரும் வரிசையா வந்து தம்பி நீங்க யாரு? தம்பி நீங்க யாரு? ன்னு கேக்குறீங்க. கிரிக்கெட் பாக்கலன்னாலும் பரவாயில்ல, நியூஸ், விளம்பரம் இது கூடவா பாக்க மாட்டீங்க?”

 

நந்தினி அத்தையோ அவன் பேசியது எதுவும் புரியாமல் முழிக்க, ரிஷி, “இவன் இப்டித்தான் நீங்க போங்கம்மா, தேவைன்னா கூப்பிடுறோம்” என்றான்.

 

சாப்பாட்டின் காரம் தாங்காமல் யஷ்மித், “ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா… டேய் இத எப்டிடா சாப்பிடுற?” என்றான் பேய் தீனி தின்று கொண்டிருந்த பிரித்வியிடம்.

 

பிரித்வி, “கழுதைக்கு தெரியுமா கோயில் புளியோதரையோட வாசனை” என்று தான் விட்ட இடத்தில் வேலையை தொடர, ரிஷி அதற்கு மேல் சாப்பிட முடியாமல் பெரியவர்களுக்கு தெரியாதபடி, தங்களை வேடிக்கை பார்த்து கொண்டு ஓரமாய் நின்றிருந்த ஒரு பெண்ணை ஜாடை காட்டி அழைத்தான்.

 

வித்யா: பார்பியின் தங்கை, பி.எஸ்சி இறுதி ஆண்டு மாணவி. உருவத்திலும் பழக்க வழக்கத்திலும் பார்பியை ஒத்திருந்தாள். ரிஷி அழைத்ததும் தன் அம்மா மல்லிகாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு, அவர் வேலையாய் இருக்கவே, தயங்கி தயங்கி அவன் அருகில் வந்தாள்.

 

“என்னால சாப்பாடு காரம் தாங்க முடியல, கொஞ்சம் நெய் தர்றீங்களா”

 

“நான் போய் எங்க அம்மாகிட்ட கொண்டு வர சொல்றேன்ங்க…”

 

“அவங்ககிட்ட கேக்க எனக்கு தெரியாதா? சங்கட படுவாங்கன்னுதான் உன்ன கூப்ட்டேன். அவங்களுக்கு தெரியாம குடுக்க முடியுமா? ப்ளீஸ்…”

 

“ம்ம்ம்…”

 

உள்ளே சென்றவள் கையில் ஒரு ஜாடியுடன் வந்து ரிஷியின் தட்டில் இரண்டு மூன்று ஸ்பூன் ஊற்றிட, ரிஷியும் மற்றவர்களும் கெக்கபெக்கேவென சிரித்தனர். ‘அவன் சொன்னதத்தான செஞ்சேன், ஏன் இப்டி சிரிக்கிறானுங்க?’ என வித்யா யோசனையாய் பார்க்க, ரிஷி, “அச்சச்சோ… உன்ன பாத்து சிரிக்கலம்மா, இதையெல்லாம் பாக்க எங்க பாஸூக்கு குடுத்து வைக்கலன்னு சிரிச்சோம். அவரோட முழு பேரு பாஸ்கரன், எங்க பிட்னஸ் ட்ரெயினர். ஆசையா ஒரு வடைய எடுத்தாலே ஆயில் புட்னு பாதிய புடிங்கிட்டு போயி அவரு தின்னுடுவாரு. நீ இப்டி தாராளமா நெய்ய ஊத்தினத பாத்தா அவ்ளோதான், அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.” அவளும் அவர்களோடு சேர்ந்து சிரித்தாலும் ‘இவர்களுக்கு நெய், எண்ணெய் பலகாரங்களெல்லாம் அதிகமா தரக்கூடாது போல’ என புரிந்து கொண்டாள்.

 

சாப்பிட்டு முடித்து ஆரவ் கை கழுவ எழுந்ததும், எங்கிருந்தோ ஜனனி ஓடிவந்து அவனிடம், “மாமா உங்கள மட்டும் தாத்தா ரகசியமா கூட்டிட்டு வர சொன்னாங்க. இவ்ளோ நேரமா அக்காகிட்ட என்கொயரி நடந்துச்சு, இப்போ அடுத்த ரவுண்ட் உங்களுக்கு. நீங்க தாத்தாவ பாக்குறதுக்கு போக முன்னாடி, இந்த போன்ல இருக்குற வீடியோவ கண்டிப்பா ஒரு தடவ பாக்கனும்னு சந்தனா அக்கா சொல்லி அனுப்புனாங்க” என்றாள். சில நிமிடங்களிலேயே தன்னை முறை வைத்து பேசும் அவளை ஆரவ்க்கும் ரொம்பவே பிடித்து போனது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: