Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 46

பாகம் – 46

பாதி கண்களால் தூங்கி

என் மீதி கண்களால் ஏங்கி

எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே

கொண்டு சேர்க்கிறேன் தாங்கி

நேசம் என்பது போதை

ஒரு தூக்கம் போக்கிடும் வாதை

என்ற போதிலும் அந்த துன்பத்தை

ஏற்று கொள்பவன் மேதை

உன்னோடு நான் வாழும்

இந்நேரம் போதாதா?

எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?

இன்றே இறந்தாலும்

அது இன்பம் ஆகாதா ?

 

பார்பி, ஏதும் அறியாதவளை போல லேப்டாப்பை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, பால்கனியில் இருந்த சேர்களில் இரண்டை வசதியாய் இழுத்து போட்டு கால் நீட்டி அமர்ந்தாள். இதுநாள் வரை அவன் தந்த காதலெல்லாம் மொத்தமாய் சேர்த்து கூட்டி கணக்கு பார்க்க தொடங்கினாள். ‘எங்க இருந்து இது ஆரம்பிச்சிருக்கும்? ஹாஸ்பிடல்ல இருந்தே ஆரம்பிச்சுட்டானா? ம்ம்ம்… இருக்கும், என்ன சுட்டத பாத்ததும் பரிதாபத்துல லவ் வந்திருக்குமோ? அவனோட முதல் காதல் பார்வைய எங்க பார்த்தேன்? ஞாபகமே இல்லையே! காட்டுக்குள்ள மலை மேல இருந்து குதிக்கும் போது என்ன சொன்னான்? ‘அவ நிழலக்கூட யாரையும் தொட விடமாட்டேன்’னு சொன்னான்ல, அப்டினா அப்போவே என்னை புடிச்சிருந்ததா? இல்லையே, அப்பல்லாம் சாதாரணமா தான என்கூட பேசினான். எப்போ? எப்டி? எதனால காதலிச்சான்? அவனுக்குன்னு எதுவுமே செய்யாத எனக்காக ஏன் எல்லாமே செஞ்சிருக்கான்? எனக்காவது காதலிக்க காரணம் இருந்துச்சு, அவனுக்கு என்ன காரணம்னு புரியலியே!’ என விட்டத்தை பார்த்து விரல்விட்டு எண்ணிக்கொண்டு இருந்தவள், பின்னால் ஏதோ அசைவதை போல் தோன்ற சந்தேகபட்டு திரும்பி பார்த்தாள். ஆறடி உருவம் ஒன்று சின்ன சிரிப்போடு அவள் பின்னால் கைக்கட்டி சுவற்றில் சாய்ந்தபடி நின்று அவளை ரசித்து கொண்டிருந்தது.

 

‘திருட்டுப்பய, சத்தமில்லாம வந்து நிக்கிறத பாரு…’ என அவள் தான் வசமாக மாட்டிக்கொண்ட பதற்றத்தில் அவனை வஞ்சனையில்லாமல் வருணித்தாள். அவனோ அவள் இருந்த சேரின் பின்புறம் வந்து நின்று அவள் காதருகே குனிந்து காதல் நிறம்பி வழியும் குரலில், “என்னடா செல்லம் எண்ணிட்டு இருக்குற?” என்று அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த அவளின் வெண்டைக்காய் விரல்களை தொட்டு தடவி கேட்டான். பார்பிக்கு இப்போதுதான் தான் இன்னும் விரல்களை மடக்கவே இல்லை என நியாபகம் வர, வேகவேகமாய் கைகளிரண்டையும் தன் மடிக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு “ஒண்ணுமில்லயே” என்றாள்.

 

ஆரவ், “நான் கூட, உன்னோட அடுத்த ஆபரேஷன்க்காக, இதுவரைக்கும் நான் குடுத்த முத்தத்தெல்லாம் மொத்தமா கணக்கு எடுக்குறியோன்னு நினைச்சேன்.”

 

“சீ… சீ… இல்ல.. இல்ல… ஆமா, நீங்க எங்க போனீங்க? கீழ வஜ்ராவும் காணும்.”

 

“வஜ்ரா போர் அடிக்குதுன்னு சும்மா ஒரு ரவுண்ட் சுத்திட்டு வர போயிருக்கான். எனக்கு காலைலயே ஒரு ஆட் ஷூட் இருந்துச்சு, நீ தூங்கிட்டு இருந்ததால டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு அப்டியே விட்டுட்டு கிளம்பிட்டேன். நான் இன்னிக்கி போனது ஒரு காஸ்மெடிக்ஸ் ஆட் ஷூட், அதுனால என் கைல ஒரு கிப்ட் பேக் குடுத்துட்டாங்க, இந்தா உனக்கு பிடிச்சமாதிரி எதாச்சும் இருக்கான்னு பிரிச்சு பாரு” என்று நீட்ட, அதை ஆசையாக பிரித்து பார்த்தாள். பேஸ் கிரீம், லிப்ஸ்டிக், பெர்ப்யூம், காஜல், நெயில் பாலிஷ் என அத்தனையும் அதில் அடங்கி இருக்க, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆரவ் அதிலிருந்த நெயில் பாலிஷ்ஷை கையில் எடுத்தான். மெருன் வண்ணம் அவளுக்கு எடுப்பாய் இருக்கும் என தோன்றியது. அவள் கால் வைத்திருந்த சேரிலிருந்து கால்களை ஒற்றை கையால் தூக்கி பிடித்து, அந்த சேரை தள்ளி விட்டுவிட்டு அதனிடத்தில் கீழே அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடியில் தாங்கியபடி நெயில் பாலிஷ்ஷை போட்டுவிட ஆரம்பித்தான்.

 

அவன் ஆண்மைக்கும், ஆளுமை திறனுக்கும், அணிந்திருந்த அந்த பகட்டான உயர்தர ஆடைக்கும், அவன் தன் காலடியில் இருப்பதை அவளால் ஏற்க முடியாமல், “வேணாம் விடுங்க ஆரவ்” என்றாள். ஆனால் அவன் எந்த மாற்றமும் இன்றி சிற்பத்தை செதுக்கும் கைதேர்ந்த சிற்பியின் கவனத்தோடு ஒவ்வொரு விரலாய் பிடித்து விரலில் பட்டுவிடாமல் அதன் நகங்களில் நெயில் பாலிஷ்ஷை போட்டு கொண்டிருந்தான். அதுசரி அவள் வாயிலிருந்து வந்தது வெறும் காத்து மட்டும்தானே, அது அவனுக்கு எப்படி கேட்டிருக்கும்? இத்தனை நாள் இல்லாத குறுகுறுப்பு இன்று வந்து ஒட்டிக்கொள்ள, பார்பி தலை கவிழ்ந்து இதழ்கடித்து சிவந்த அதரங்களை மேலும் சிவப்பாக்கினாள். ஒருவேளை இதுதான் வெட்கமோ? இருக்கலாம். கர்ம சிரத்தையோடு ஒரு கால் முழுதும் போட்டு முடித்தவன், அதை விரைவில் காய வைப்பதற்காக, அவளின் பாதத்தை கையில் ஏந்தி தன் முகத்தருகே வைத்து இதழ் குவித்து ஊதினான். அவனின் மூச்சுக்காற்று பட்டதுமே விரல்கள் எல்லாம் தொட்டா சினுங்கியாய் ஒன்றோடொன்று பிண்ணி பிணைந்து சுருண்டு கொண்டது.

 

“ம்ச்ச்…. பார்பி நீ இப்டி பண்ணா நான் போட்டதெல்லாம் அழிஞ்சிடும்” என நிமிர்ந்து பார்த்தவனின் காதல் பார்வையில், அவளுக்கு ஏதோ ஒரு மின்சாரம் தன் விழி வழி புகுந்து இதயம் கடந்து அடிவயிற்றில் சென்று வெடிப்பதை போல் இருக்க, அந்த அடி தந்த தாக்கத்தால் விழிகள் இரண்டையும் இறுக்கமாக மூடிக்கொண்டாள். ஆரவ்விற்கு அவள் விழி வழியே ஆழ் மனதின் நிலை புரிந்தாலும் புரியாதவனைப்போல, “என்ன ஆச்சுடா?” என்றான்.

 

அவன் வசமிருந்த கால்களை பிடுங்கி தன்னுடலோடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொண்டு குழைந்த குரலில், “ஒண்ணுமில்ல, நீங்க ஏன் இப்டி பாக்குறீங்க ஆரவ்?” என்றாள்.

 

காதலி தன் முன் வெட்க புன்னகை சூடிக்கொண்டாளானாள், அதைவிட காதலனுக்கு சொர்க்கம் ஏது? ஆரவ் எழுந்து வந்து அவள் விழிகளை நெருங்கி, “ஏன்டா என் கண்ணுக்குள்ள உனக்கு எதாவது தெரியுதா?” என்றதும், அவள் குரலில் மீண்டும் சத்தம் வராமல் போனது. அது ஏனோ தெரியவில்லை, வார்த்தை வராமல் தவிக்கும் நேரம்தான் வாய்மொழிச்சொல் கேட்டே தீருவேன் என துடிக்கின்றது இந்த ஆண் வர்க்கம், அதில் என்ன ஆனந்தமோ அவர்களுக்கு… அவன் தள்ளி நின்று, “உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னா, நான் வேணும்னா என் கண்ண கட்டிக்கவா?” என்றான். இன்னோரு மின்சார தாக்குதலை எதிர்கொள்ள துணிவில்லாததால், இந்த ஐடியாவே அவளுக்கும் சரி என பட்டது. ஆரவ் அறைக்குள் சென்று நிதிஷ்ஷிற்கு  போன் போட்டு இன்று ஒருநாள் தொந்தரவு செய்யாமல் இருக்க செல்லி விட்டு, ஒரு ஐ மாஸ்க்கை எடுத்து அணிந்து பெட்டில் சாய்வாக படுத்து கொண்டான்.

 

சில நிமிடங்கள் கழித்து “பார்பி மறந்தே போயிட்டேன்டா, நான் நம்ம ரெண்டு பேருக்கும் ஐஸ்கிரீம் சொல்லி இருந்தேன், வந்திருந்தா எனக்கு எடுத்து குடு” என்றான். தனக்குள் உருவான மாற்றத்தை அவனுக்கு தெரியாமல் மறைத்து விட்டதாகவே எண்ணியவள், பழையபடி சகஜ நிலைக்கு திரும்பியதை கெடுப்பதற்கென்றே ஐஸ்கிரீம் வந்து தொலைத்திருந்தது.

 

அவள் தங்கள் இருவருக்கும் எடுத்து வந்ததும் ஆரவ், “பார்பி… நான் ஐஸ்கிரீம் சாப்பிடுற வரைக்கு மட்டும் ஐ மாஸ்க்க கழட்டிக்கலாமா?”

 

அவளோ அவசரமாய், “ஐயோ வேண்டாம், ப்ளீஸ் கழட்டாதீங்க…. கண்ண மூடியே சாப்பிட ட்ரை பண்ணுங்க” என்றாள். கண்ணை திறந்திருந்தாலே சில நேரங்களில் சிந்திவிடும் ஒன்றை, கண்ணை கட்டிகொண்டு சரியாக சாப்பிட முடியுமா? இருந்தும் அவனுக்கு அவளுடனான இந்த விளையாட்டு நன்றாகத்தான் இருந்தது. ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, “பார்பி… நான் டிரஸ்ல சிந்திட்டேன்னு நினைக்கிறேன், ஒரு டவல் தாயேன்” என்றான். அவன் கண் கட்டியபடியே துடைக்க நினைத்து லேசாக வழிந்து இருந்ததை அழுத்தி துடைத்துவிட, அது ஆடைகளில் அதிகமாக பரவி இன்னும் மோசமாய் பாழாகியதை பார்த்ததும், பாவப்பட்டு அவளே துடைத்து விட வந்தாள்.

 

அவனுக்கு அருகில் மிக அருகில் அவளிருக்க, அவன் பெர்ப்யூம் வாசனை மூச்சுமுட்டி அவளின் சந்தன நிற முகம் அந்திவான வண்ணம் பூசிக்கொண்டது. அவனது கன்னங்களில் கம்பீரமாய் படர்ந்திருந்த ஊசி குத்தும் ரோமங்கள் ‘ஒரு முறை என்னை தொட்டுப்பாரடி பெண்ணே…’ என்று அவள் விரலை தூண்டி அழைப்பு விடுக்க, கைகளிரண்டும் சிந்தியதை துடைக்க முடியாமல் நடுங்க தொடங்கியது. அவளை பார்க்காமலே அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது போல… எதிர்பாராத நொடியில் அவன் இதழில் பூத்த புன்னகை உன் அருகில் வரவா? என்று அவள் இதழ்களை கேலி பேசியது. அதற்கு மேல் அவனருகே இருக்க முடியாமல் அடி வயிற்றுக்குள் ஏதோ பிசைய, “நான் போறேன்” என விலகி ஓடினாள். கால்களில் ஒரு புதுவித நடுக்கம் பரவி, அவை ஒன்றோடொன்று இடறி அவளை தடுக்கி விழவைக்க முயல, கைத்தாங்கலாய் தடுத்து நிறுத்தியது நிலைக்கண்ணாடி மேஜை. கண்ணாடியில் தெரியும் தன் உருவமே தனக்கு புதிதாய் தோன்றிட்டது… விட்டு விட்டு வேலை செய்த மூச்சுக்குழாய் உள்ளிழுத்த காற்றை வெளியேற்றாது, எச்சிலும் விழுங்க விடாது நடுவில் நின்று இம்சித்து… இமைகள் வேறு இடையிடையே மூடிக்கொண்டு அவளை முன்னேறி போகும் வழி தெரியாது திணற வைத்த பார்த்து ரசித்தது… நர மாமிசத்தை வேண்டி இரை தேடும் வேங்கையாய் மாறிய தன் பற்களை கட்ட படுத்த முடியாமல், அதனருகிலேயே இருந்த அதரங்களை தின்ன கொடுத்து சில நிமிடங்கள் அமைதி படுத்தினாள்… அடுத்ததாக கால்களிரண்டும் இதற்கு மேல் ஒரு அடி கூட நடக்க மாட்டோம் என வேலை நிறுத்தம் செய்திட, தத்தி தத்தி கால்களை இழுத்து அங்கிருந்து நகர்த்த முயன்றாள்… இதெல்லாம் போதாதென உடலோ இப்போதே விழுந்து விடுவேன் என பயம் காட்ட, துவளும் கொடியாய் பற்றிக்கொள்ள எதையாவது தேடிய நேரம், அத்தனைக்கும் காரணமானவன் அவளை இழுத்தணைத்து தற்சமயம் தங்கிக்கொள்ள தன் மார்பில் இடம் தந்தான். காதலெனும் வழியில் வந்து காமத்தின் காட்டுக்குள் தொலைந்து போன சிறுமியவள், முன்னுக்கோ பின்னுக்கோ போகும் வழி தெரியாமல் தவிக்கலானாள். இடம் தந்தவனோ தன் இறுக்கத்தை கூட்டி கொண்டே செல்ல, அவனுள் புதைந்துவிடும் உணர்வு அவளுக்கு அத்தனை இன்பமாய் இருந்தது. சிற்றின்பத்தோடு மட்டும் இது நின்றிடாது என்றுணர்த்த, சட்டென அவன் தந்த ஒரு எச்சில் முத்தம் அவள் உள்ளிருந்த உயிரை இரண்டடி உயரம் தூக்கி எறிந்திட, மயக்கம் வருவதை போல் சரிந்தவளை தூக்கி சென்று ஸோபாவில் தன்னோடு அமர்த்தினான். அவன் எதுவும் பேசவில்லை, அதற்கு மேல் அவளிடம் முன்னேறவுமில்லை, மடியோடு கட்டி அணைத்திருந்த அவளை இறக்கியும் விடவில்லை.

 

அவன் செயல் எதையுமே அவள் உணரவும் விரும்பவில்லை. அவள் மனம் இந்த நொடி தந்த தித்திப்பினால் இந்த உலகத்திற்கு அப்பால், ஏதோ ஒரு கிரகத்தில் உலவி கொண்டிருந்தது. அவனின் அரவணைப்பும், மெல்லிய வருடலானா தலை கோதலும், இதமான மார்புச்சூடும் இப்படியே காலம் முழுதும் படுத்திருக்கலாம் என தோன்றியது. அவள் தன்னிலை அடையும் வரை காத்திருந்தவன் அவள் நாணம் பூசி விலகி அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தான், “ஆர் யூ ஓகே பார்பி? நான் வேணும்னா திரும்பவும் கண்ண கட்டிக்கவா?”

 

“வேணாம்.. சாரி.. நான்.. தப்பா.. நான் கீழ போறேன்..”

 

அவளை மீண்டும் இழுத்து தன் மார்பில் விழ வைத்தவன், “போகாத நான் உன்கூட கொஞ்சம் பேசனும்டா. எனக்கும் அன்னிக்கி இப்பிடிதான் இருந்துச்சு பார்பி, உன்ன தவிர மத்ததெல்லாம் மறந்து போயிடுச்சு. எனக்கு என்னை பத்தியோ, உன்ன பத்தியோ, இல்ல இந்த உலகத்தை பத்தியோ ஞாபகமே இல்ல. தப்புன்னு தோணவே இல்ல, நீயும் நானும் ஒண்ணுதான? அப்புறம் எப்டி உன்னோடது என்னோடதுன்னு தனி தனியா ஒரு விஷயம் இருக்க முடியும்? நீ முழுக்க முழுக்க எனக்கு மட்டும் சொந்தம், என்னோட இந்த ஜென்மமே உனக்காகத்தாண்டி. உன் மனசு இறங்க இன்னும் நான் எவ்ளோ கெஞ்சனும்? பழச மறந்து என்னை மன்னிக்க கூடாதா?”

 

“இல்ல எனக்குத்தான் எதுவும் புரியல, நீங்களாவது என் புத்திக்கு விளங்குற மாதிரி அப்பவே தெளிவா சொல்லி இருக்கலாம்ல”

 

“எப்டி சொன்னாலும் உனக்கு புரியாதுன்னு எனக்கு தெரியும்டா, அதான் மெதுவா சொல்லிக்கலாம்னு விட்டேன்.”

 

“ஏன் புரியாது? அப்புறம் ஏன் நீங்க என்ன மாதிரி ஒரு மக்கு பொண்ண விரும்புனீங்க?” என்றாள் கோபத்தில் மூக்கு சிவக்க…

 

அவனிடம் பதிலுக்கு பதிலாக மந்தகாசன மோக புன்னகையே கிடைத்திட, அவள் என்ன நினைத்தாளோ மீண்டும் அவன் மார்புக்குள் புதைந்து கொண்டு, “நீங்க என்னோட உயிர காப்பாத்துனீங்க, உங்க வீட்ல என்னை தங்க வச்சீங்க, யாரும் என்ன நெருங்காம பத்திரமா பாத்துகிட்டீங்க, எவ்ளோ தொல்ல செஞ்சாலும் என் மேல உயிரா இருந்தீங்க, எனக்காக இவ்ளோ செஞ்சு இருக்கீங்கன்னு காரணத்தோட நான் உங்கள விரும்புனேன். நான் உங்களுக்கு எதுவும் பண்ணலியே, அட்லீஸ்ட் உங்க மனச புரிஞ்சுக்கவாது செஞ்சேனா? அதுவும் இல்ல… அப்டி இருந்தும்கூட நீங்க எனக்காக உங்க உயிரையே குடுக்குற அளவு ஏன் காதலிச்சிருக்கீங்க ”

 

அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு “பார்பி, என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்சத விட நான் இழந்ததே அதிகம், அதெல்லாம் மொத்தமா திருப்பி குடுக்க வந்தவ நீ. அதுனாலதான் இப்ப உன்னை இழந்துட கூடாதுன்னு எங்கிட்ட இருக்குறது எல்லாத்தையும் இழக்க தயாரா இருக்கேன். உன்ன முதல் முதல்ல பாத்த நிமிஷத்துல இருந்து இப்ப வரைக்கும் நீ எனக்கு எதையாவது குடுத்துகிட்டே தாண்டி இருக்க, உனக்கு அதெல்லாம் பெரிய விஷயமா தோணாம இருக்கலாம். எனக்கு அதுதான் உலகத்துலயே ரொம்ப பெரிய பரிசு தெரியுமா. என்னை ஏன் காதலிக்கிறேன்னு கேட்டா நான் என்ன காரணம் சொல்ல? நீ என் மூச்சு காத்துடி.. என்னோட உயிரு.. இன்னும் தெளிவா சொல்லனும்னா என்னோட குழந்தைடி நீ..”

 

இதுவே போதும் என தோன்றியது போல இன்னும் இன்னும் அவனுள் புதைந்தவளை நிமிர்த்தி, “நான் பேசி முடிக்கலடா, எனக்கு இன்னும் நிறைய விஷயம் உன்கிட்ட சொல்லனும், உங்க பாட்டி இறந்ததை பத்தி, ரெஜிஸ்டர் மேரேஜ் பத்தி நாம பேசி தீக்கனும்” என்றான். ஏற்கனவே அவன் வார்த்தைகளால் காதலில் கரைந்து தொலைந்து போயிருந்தவள், அவன் வாயை தன் கையால் மூடிவிட்டு, “ஆரவ், நீங்க எது செஞ்சாலும் அது என்னோட நல்லதுக்குதான்னு இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சு… இதுக்குமேல எனக்கு கேட்க எதுவும் இல்ல…” என தன் மனதிற்கினிய மயக்கத்திலேயே மூழ்கி விட்டாள். இந்த நொடிக்காகவே இத்தனை நாட்களாய் காத்திருந்தவன் அவளின் முழு உடலையும் தன் மேல் தாங்கியபடி ஸோபாவிலேயே சரிந்து படுத்து, மனதின் பாரங்களெல்லாம் இறங்கிய நிம்மதியில் அப்படியே தூங்கி விட்டான். தனக்கு மட்டுமே இத்தனை காதலும் சொந்தம், தனக்கு மட்டுமே இத்தனை ஆண்மையும் சொந்தம், இவனின் அருகாமை இருந்தால் தனக்கு இந்த உலகமே அடிமை என்ற இன்ப கனவுகளில் சிறகில்லாமல் பறந்து மிதந்து கொண்டிருந்தாள் பார்பி.

 

முதலில் இருக்கும் நிலை உணர்ந்து எழுந்தவன் அவன்தான், தன் மார்பின் மேல் அசந்து உறங்குபவளை, எழுப்ப மனமின்றி சத்தம் செய்யாமல் அவளை இறக்கி வைத்துவிட்டு, அவன் அறையை விட்டு வெளியேறினான். நெடுநேரம் தூங்கி எழுந்த பார்பி ஆரவ்வை காணாமல் கீழே தேடி வந்து பார்த்தாள், அங்கே இவனும் இல்லை வஜ்ராவும் இன்னும் வந்திருக்கவில்லை. கிடைத்த கொஞ்ச நேர தனிமையும், அவனின் முன்னாள் காதல் ஞாபகங்களை அவளுக்கு எடுத்துணர்த்த, முகமெல்லாம் மத்தாப்பூவாய் மலர்ந்தபடி ஹாலில் உலவி கொண்டிருந்தாள். இது எல்லாம் கனவா நினைவா என புரியாமல் தன்னை மறந்து சிரித்தபடி விரல் கடித்திருந்தவளின் காதருகில், செல்லமாக “என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற குரல் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள்.

 

ஆளே அடையாளம் தெரியாமல் சின்ன தாடி, கொஞ்சம் டாட்டூ, அளவெடுத்து செதுக்கிய உடற்கட்டோடு முழுதாய் மாறிப்போய் இருந்தான் யஷ்மித்.

 

“ஹேய் யஷ்மித், என்ன சொல்லாம கொள்ளாம இப்டி திடீர்னு வந்து நிக்கிற?”

 

“சொல்லிட்டு வர்றதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல, சரி வா பார்பி போகலாம்…” என கைபிடித்து இழுக்க,

 

“எங்க கூப்டுறன்னு கூட சொல்லாம இப்டி திடீர்னு வா ன்னு சொன்னா என்ன அர்த்தம் யஷ்மித்? கொஞ்சம் பொறு ஆரவ் வந்துக்கட்டும்.”

 

“என்ன நீ?… அப்போ வர்றேனு சொல்லிட்டு இப்ப வர மாட்டிக்கிற” என்று பொய்யாய் கோபித்தான்.

 

“எப்போ?”

 

“ஒருநாள் நான் பெரிய ப்ளேயரா ஆனதும் உன்ன வந்து கூப்பிடுவேன் நீ என்கூட வரணும்னு அன்னிக்கே சொன்னேன்ல, இப்போ ஐயா ஐசிசி ரேங்கிங்ல டாப் டென்ல இருக்கேன் தெரியுமா? இந்த ஏஜ்ல இத அச்சிவ் பண்ணினது நான் மட்டும்தான். வைஸ் கேப்டன் ஆப் இன்டியன் கிரிக்கெட் டீம் சொல்றேன் வா போகலாம்” என வர மறுத்தவளை கைபிடித்து வம்படியாக இழுத்து சென்றான். இருவரும் கத்திக்கொண்டே வாசல் வரை வர அங்கே காரில் ரிஷி, வஜ்ரா, பிரித்வி, ஆரவ் நால்வரும் அமர்ந்திருந்தனர். பார்பி கத்துவதை நிறுத்திவிட்டு குழப்பமாய் பார்க்க, யஷ்மித், “சீக்கிரமா ஏறு பார்பி, பிளைட்க்கு டைம் ஆச்சு” என்றான்.

 

“எங்க போறோம்?” என்று வாய் கேட்டாலும், ஆரவ் உடன் இருப்பதால் நம்பி ஏறினாள்.

 

பின்னாலிருந்த ரிஷி, “சொல்லுவோம் சொல்லுவோம், பட் நீ போற இடத்துல பிரச்சினை பண்ணாம சமத்து பொண்ணா நடந்துக்கனும். ஓகே” என்றான்.

 

ஏர்போர்ட்டும் வந்துவிட்டது, பிளைட்டிலும் ஏறிவிட்டார்கள். விமானம் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்து கொண்டிருந்ததால் அவள் மனம் ஆயிரம் சிந்தனைகளில் மூழ்கி இருக்க, அவர்கள் ஐவரும் கும்மாளமும் கொண்டாட்டமுமாய் இருந்தனர். பார்பி, ‘என்னவா இருக்கும் எல்லாரும் சேர்ந்து கிளம்பிருக்கானுங்க, ரொம்ப சந்தோஷமா வேற இருக்கானுங்க. ஒருவேள திருப்பதிக்கு போய் கல்யாணம் பண்ண போறோமா?’ என்ற குழப்பத்தில் இருந்தவளின் கேள்விக்கு பதில் ஏர்ஹோஸ்டர் அறிவிப்பில் கிடைத்தது. ‘தயவுசெய்து பயணிகள் அனைவரும் உடனடியாக சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். இன்னும் பத்து நிமிடங்களில் ப்ளைட் கோயம்புத்தூரில் தரையிறங்க இருக்கிறது. வெளியே 30℃ தட்ப வெப்பம் நிலவுகிறது. பிளைட் நின்ற பிறகு பயணிகள் அனைவரும் வரிசையாக கலைந்து செல்லும் படி கேட்டு கொள்கிறோம். தங்களது பயணத்திற்கு நன்றி..’ என்ற அறிவிப்பை கேட்ட அடுத்த நொடி பார்பி கத்தி கதற ஆரம்பித்து விட்டாள்.

 

“நான் வரமாட்டேன்… ஏன் என்ன ஏமாத்தி கூட்டிட்டு வந்தீங்க?”

 

யஷ்மித், “சொல்லி கூப்பிட்டா நீ வரமாட்ட, சொல்லாம கூப்ட்டதால தான் நீ வந்த, உள்ள அப்டி என்ன இருக்கு முருகேசா?”

 

“டேய், சினிமா டயலாக் சொல்ற நேரமாடா இது? நான் வரமாட்டேன், இப்பவே ப்ளைட்ல இருந்து கீழ குதிக்க போறேன்.”

 

யஷ்மித், “குதி யாரு வேண்டாம்னா? நீ எவரெஸ்ட்ல இருந்து குதிச்சாலும் கூடவே குதிக்கிற மாதிரி ஆள் இருக்கு எங்ககிட்ட”

 

“உனக்கென்ன பைத்தியமாடா ஆரவ்? ப்ளீஸ், வேணான்டா, எனக்கு பயம்மா இருக்கு. நான் இனிமே ஒழுங்கா இருப்பேன், உன்கிட்ட சண்டை கூட போட மாட்டேன். ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேணான்டா, ப்ளீஸ்டா..” இதுவரை கட்டுபடுத்தி இருந்த அழுகை இப்போது அவளுக்கு வந்தே விட்டது. ஆரவ் நிதானமாக எப்போதும் போல் அவள் தோள்களை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்து கொண்டு, “எனக்காக வா பார்பி… நான் பாக்கனும், எல்லாரையும் பார்த்து பேசி, உங்க பொண்ண எனக்கு குடுங்கன்னு முறைப்படி கேக்கனும். குடும்பமா சேர்ந்து வாழ்றதுதான உன்னோட ஆசையே, அத நான் உனக்காக நிறைவேத்தி வைக்க வேணாமா?” என்றதும்,

 

அவள் அழுகையினூடே, “ஒண்ணும் வேணாம்” என சீறினாள்.

 

“எல்லாரும் பாக்குறாங்க பாரு, கண்ண துடைச்சுக்கோ. நான் கண்டிப்பா போறேன், கூட வர்றதும் வராததும் உன் இஷ்டம்.” அவன் கிட்டத்தட்ட பிளாக்மெயில் போல சொல்ல, வேறு வழியின்றி அவள் அவனுக்காக தலையாட்டினாலும் அடிக்கடி விழிகளில் இருந்து சில துளிகள் மட்டும் விழுந்து சிதறி கொண்டே இருந்தது.

 

ப்ளைட்டில் இருந்து இறங்கியதும் ஏற்கனவே தயாராக இருந்த காரில் அனைவரும் ஏறிக்கொள்ள, கார் நகருக்குள் நகர தொடங்கியது. இருள் கவ்வும் நேரத்தில் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாததால் சுலபமாக ஊருக்குள் நுழைந்தனர். வீட்டை நெருங்க நெருங்க அவள் இதயம் பயத்தில் முரசடிக்க ஆரம்பிக்க, பயத்தை மறைக்க ஆரவ் கைகளை இறுக பற்றி கொண்டாள். இதோ வந்துவிட்டது அவள் தெரு… இதோ வந்துவிட்டது அவள் வீடு… நல்ல வேளையாக அங்கே வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை. நடுக்கத்தில் என்ன செயவதென தெரியாமல் விரலை கடித்தபடி அவள் காரிலிருந்து இறங்கிட மறுக்க, மற்றவர்கள் அவளிடம் கெஞ்சி கொண்டிருந்த நேரத்தில் ஆரவ் விருவிருவென வீட்டின் உள்ளே சென்றுவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: