Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 8

அத்தியாயம் – 8

காலை அவளைக் கண்களை சுருக்கி சுருக்கி நம்ப முடியாதது போல  பார்த்தான் ஜெய்.

 

“நிஜம்தானா… நான் காணுறது கனவில்லையே”

 

அவனைத் தள்ளி நிறுத்தி வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் செய்த முடிவை செயல்படுத்தத் தொடங்கினாள்.

 

“உனக்கேன் கனவுன்னு தோணுது”

 

“இல்ல நீ இன்னமும் என்கூட இங்கிருக்குறதை என்னால நம்ப முடியல”

 

“அது ஏன் ஜெய்”

 

“நடந்த சம்பவங்களின் விளைவுகளால் நீ என்னை விட்டுட்டு போயிருப்பன்னு நினைச்சேன்”

 

“போயிருப்பேன்தான்… ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. இப்ப சொல்லு நீ யாரு… உன் கையில் எப்படி துப்பாக்கி இருக்கு. எனக்குத் தெரிஞ்ச ‘சாப்ட்வேர்’ பசங்க பேண்ட் பாக்கெட்ல துப்பாக்கி வச்சுட்டு சுத்துறது இல்லை”

 

“நானும் என் ப்ரதர்ஸ்ம் சின்ன வயசில் அப்பா கூட வேட்டைக்குப் போவோம். அப்பத்தான் துப்பாக்கி சுடப் பழகிட்டோம். என் கிட்ட இருக்கும் ரிவால்வர் கூட லைசன்ஸ் வாங்கினதுதான். அன்னைக்கு உன் வீட்டில் ஒரு திருடன் வந்தான்ல அன்னைக்கே என் துப்பாக்கியைத் தூக்கி பாக்கெட்டில் வச்சுட்டேன். அப்படி செஞ்சது நல்லதா போச்சு. சமயத்தில் உதவுச்சு” என்றான்.

 

‘இவன் சொல்றது உண்மையா இருக்குமோ’ அவளால் முடிவுக்கு வர முடியவில்லை. அவன் உண்மை சொல்வதாக மனதிற்கு படவில்லை. பொய் சொல்வதாகவும் தோன்றவில்லை. என்ன இது விந்தை என்றவண்ணம் இந்த முறை சந்தேகத்தின் பலனை அவனுக்களிப்பது என்று தீர்மானித்தாள்.

 

அவர்களது பொருட்களை எடுத்து வைத்தபடியே

“கிளம்பலாமா… “ என்றாள்.

 

“ஐ ஆம் பெர்பெக்ட்லி ஃபைன். கிளம்பலாம்” என்றான்.

 

மருத்துவமனையின் வரவேற்பறையைக் கடக்கும் நேரம் “பில் தாங்க” என்றான்.

 

“மேடம் காலைலயே கட்டிட்டாங்க சார்” என்ற பதிலைப் பெற்றுக் கொண்டு

 

“நீ ஏன் கட்டின அஞ்சலி” முறைத்தான்

 

“இது என்னால ஏற்பட்டது. நான்தான் பொறுப்பேத்துக்கணும்” என்றாள் உறுதியுடன்.

 

“இதென்ன பார்மாலிட்டி நமக்குள்ள”

 

“இந்த ட்ரிப்பில் நீ என் கூட துணைக்கு வரதாத்தான் நம்ம பேசிட்டதா நினைவு. மத்தபடி செலவு என்னுதுதான். அதுக்கு சரின்னா ப்ரஸீட் பண்ணலாம். இல்லைன்னா இங்கிருந்து பெங்களூருக்குத் திரும்பிடலாம்” என்றாள் உறுதியாக.

 

 

மறுத்து பேசுவதை நிறுத்திவிட்டு காரில் ஏறப்போனான்.

 

“நான் ட்ரைவ் பண்ணுறேன். நீங்க அங்க உட்கார்ந்துக்கோங்க”

 

அவள் சொன்னவாறே பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

 

அஞ்சலி என்னதான் முயன்றாலும் சமீபகாலமாக அப்பாவைப் போல ஒரு உருவத்தைப் பார்த்ததையும், ஜெய்யின் நெருக்கத்தையும் சந்தேகப் படாமல் இருக்க முடியவில்லை. இனிமேல் தானுண்டு வேலையுண்டு என்று இருக்க முடியாது. இந்தப் புதிரை விடுவிக்காமல் அவள் பெங்களூருக்குத் திரும்பப் போவதில்லை.

 

“அடுத்து என்ன பிளான்” என்றான் அமைதியாக.

 

“சித்தூர், அரக்கோணம் வழியா சென்னை போகலாம். கொஞ்சம் நேரம் அதிகம் ஆகும். ஆனால் அதைவிட பாதுகாப்பான பயணம் ரொம்ப முக்கியம்.”

 

“ஐ அக்ரீ”

 

“நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றபடி வண்டி ஓட்டுவதில் கவனமானாள்.

 

நடுவே சிலமுறைகள் பார்த்தபோது அவன் உறங்காமல் கொட்ட கொட்ட விழித்தவண்ணம்  சுற்றுப்புறத்தைக் கண்காணித்தபடியே வந்தது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

 

“நான் பத்திரமா ஓட்டிட்டு போறேன். கொஞ்சம் தூங்குறிங்களா”

 

“எனக்கு சாப்பாடு வேணுமே… பசிக்குது” என்றதும்தான் உணவு வேளை நெருங்கியதைக் கவனித்தாள்

 

“ஸாரி  எதோ நினைவுல கவனிக்கல. நல்ல ஹோட்டலா  பார்த்து நிறுத்துறேன்”

 

வழியில் ஒரு உணவகத்தில் இருவரும் உணவு உண்டனர்.

 

அப்போது மாயாவிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பை ஏற்று பதிலளித்த அஞ்சலியின் முகம் அதிர்ச்சியானது.

 

“மறுபடியுமா…”

 

….

 

“நீ எப்ப பார்த்த…”

 

…..

 

“அப்ப காலைல நீ வெளிய கிளம்பினதும் நடந்திருக்கணும் … போலீஸ்ல சொல்லிட்டியா….”

 

….

 

“நான் வேணும்னா பெங்களூருக்கே திரும்பிடட்டுமா”

 

….

 

“நீயே சமாளிச்சுப்பியா… நம்ம வீட்டில் இனிமேல் இருக்காதே… சந்தானம் அங்கிள் வீட்டில் தங்கிக்கோ”

பேசி முடித்ததும் சோர்வாக சொன்னாள்

 

“மறுபடியும் திருட்டு முயற்சி … என் ரூமையே தலைகீழா புரட்டிருக்காங்க. பெங்களூரில் நடந்த முயற்சிக்கும், இங்க நடந்த சம்பவத்துக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கு. நான் தான் இவங்க குறின்னு உறுதியா தெரிஞ்சிடுச்சு. இவனுங்களுக்கு என்னதான் வேணுமாம்” அவள் குரலில் அடக்கமாட்டாத எரிச்சல்.

 

“எனக்கென்னமோ அவங்களுக்குத் தேவையானதை உன் கிட்ட இருக்குன்னு தோணுது. என்னவா இருக்கும்னு தெரியல. ஆனால் உன் ஆல்பத்தில் ஒரு க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன். உன் பொருட்களை, உங்கப்பா பொருட்களைக்  கொஞ்சம் ஆராயணும்…  அப்பறம் போட்டோல உங்க அப்பாவை மாத்தின சம்பவம் நடந்த இடத்துக்குப் போகணும்.”

 

பின்னர் வலிநிவாரணி மாத்திரைகளை ஜெய்ஷங்கர் விழுங்கியதும் கிளம்பினார்கள். சற்று தூரம் சென்றதும்.

 

“மெட்ராஸ்ல உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா. அவங்க வீட்டில் உங்களை விட்டுடட்டுமா” என்றதும் கோக் அருந்திக் கொண்டிருந்த ஜெய் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

 

“ஏன் சொந்தக்காரங்க வீட்ல விடணும். கைல அடி பட்டதும் உன்னைக் காப்பாத்த முடியாத கையாலாகாதவனாயிட்டேனா” என்றான் ஆத்திரம் கொப்பளிக்க.

 

“பொங்காதிங்க ஜெய். இந்த மாதிரி உடம்பு இருக்கும்போது ஓய்வு ரொம்ப அவசியம்”

 

“அதை உன் வீட்டில் தர மனசில்லையா”

 

“மனசை விடுங்க. என் நிலமை என்னன்னு எனக்கே தெரியல. எந்த இடத்தில் யாரு போட்டுத் தள்ளுவாங்களோன்னு பார்க்க வேண்டியிருக்கு. இதில் என்னால் எதுக்கு நீங்க ஆபத்தில் மாட்டிகிட்டு”

 

“உனக்கு இத்தனை ஆபத்து இருக்குன்னு நீயே சொல்ற. இந்த நிலமையில் உன்னை விட்டுட்டுப் போகமாட்டேன்”

 

“நான் ஜாக்கிரதையா இருந்துப்பேன்”

 

“என்ன ஜாக்கிரதையா இருப்ப… அவன் ஒவ்வொருத்தனும் துப்பாக்கியைத் தூக்கிட்டு அலையுறான். நிலமையோட தீவிரம் தெரியாம பேசக்கூடாது”

 

ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை ஓரம் காட்டினாள். அவன் கையிலிருந்த காலி கோக் டின்னைப்  பிடுங்கி சாலை ஓரத்தில் தெரிந்த கல்லின் மேல் வைத்தாள்.

 

நூறு அடிகள் தள்ளி நின்றவள் சாவதானமாய் தனது ஜீன் பாக்கெட்டிலிருந்து அந்த சின்ன ரிவால்வரை எடுத்து குறி பார்த்து சுட்டாள். கோக் கேன்  எகிறிப் போய் தூர விழுந்தது.

 

கேனை எடுத்து  மறுபடியும்  அதே இடத்தில் வைத்தவள் முன்பு நின்று சுட்ட இடத்திற்கு எதிர் திசையில்  சென்றாள். தோராயமாய் ஒரு நூறடி சென்றதும் மறுபடியும் அந்தக் கோக் கேனை சுட்டாள். ரிவால்வரை லாக் செய்து ஜீன் பாக்கெட்டில் வைத்துவிட்டு அந்தக் கோக் கேனை எடுத்து வந்து ஜெய்யின் கைகளில் திணித்தாள்.

 

“உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?”

 

“ஏன் தோசை மட்டும்தான் சுட லாயிக்குன்னு நினைச்சிங்களா” என்றாள் நக்கலாக.

 

இல்லை… என்றவன் அந்தக் கேனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்ததைக் கண்டு.

 

“வாவ்… ஒரே இடத்தில் எதிர் எதிர் திசையிலிருந்து… பெர்பெக்ட்” என்றான் வியப்புடன்  உரத்த குரலில்.

 

“இப்பவாவது நம்புங்க. எங்கப்பா கொடுத்த ட்ரைனிங் என்னைப் பாதுகாத்துக்க உதவும்”

 

“அஞ்சலி நீ திறமைசாலிதான் ஒத்துக்குறேன். ஆனால் உன்னை எதிர் கொண்டிருக்கிற சவால்களைக் குறைச்சு எடை போடாதே. உன்னால் தனியா சமாளிக்க முடியாது.  என்னை மாதிரி ஒரு துணை இப்ப அவசியம் தேவை”

 

“எங்கப்பாவோட மரணம், அதைத் தொடர்ந்த லீகல் விவகாரம், பெங்களூருக்கு வந்தது, வொயிட் ஹார்ஸ் தொடங்கியது எல்லாம் இதுவரை தனியாத்தான் செஞ்சிருக்கேன். அதை மறந்துடாதிங்க”

 

“நான் அங்க இருந்திருந்தால் உன்னைத் தனியா விட்டிருக்க மாட்டேன். இப்ப மாதிரியே அப்பவும் உன் நிழலா இருந்திருப்பேன்” என்றான் உறுதியான குரலில்.

3 Comments »

Leave a Reply

%d bloggers like this: