Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 36

கல்கியின் பார்த்திபன் கனவு – 36

அத்தியாயம் 36
குடிசையில் குதூகலம்

மறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. படகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான்? என்ன அதிகார தோரணையில் பேசினான்? “நிறுத்து படகை!”, “பிடித்துக்கட்டு இரண்டு பேரையும்!” “விடாதே!”,”படகைச் சோதனை போடு!” என்று என்ன தடபுடல் செய்துவிட்டான். இவ்வளவு தடபுடலுக்கும் பொன்னனும் வள்ளியும் அமைதியாயிருந்தார்கள். படகைச் சோதனை போடும் போது, அவர்கள் கரையிலேயே இறங்கி நின்று விட்டார்கள். படகில் ஒன்றுமில்லையென்று கண்டதும், மாரப்பனுடைய முகத்தில் ஏமாற்றமும் கோபமும் கொந்தளித்தன. “பொன்னா! எங்கே அது!” என்றான். “எது எங்கே, சேனாதிபதி?” என்று கேட்டான் பொன்னன். “கையிலே என்னவோ கொண்டு வந்தாயே, அதுதான்!” “என்னவோ கொண்டு வந்திருந்தால், அது என்னமாய் இல்லாமலிருக்கும்?” என்றான் பொன்னன். மாரப்பன் மிரட்டி உருட்டிப் பார்த்ததெல்லாம், பலிக்கவில்லை. மாரப்பன் தன்னுடைய ஆட்களை விட்டு மரத்தடியிலும், தண்ணீரிலுங்கூடத் தேடிப் பார்க்கச் சொன்னான், ஒன்றும் கிடைக்கவில்லை.

 

நடு நடுவே வள்ளி பொன்னன் காதோடு என்னவோ சொல்லிக் கலீரென்று சிரித்தபடியால் மாரப்பனுடைய கோபம் அதிகமாயிற்று. “இந்த அர்த்த ராத்திரியில் என்னத்துக்காக இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கிளம்புகிறீர்கள்? படகு ஏது?” என்று கேட்டான். “காலையில் தோணித்துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று இப்போதே கிளம்புகிறோம். எங்கள் பாட்டன் படகு; அதைத் தோணித்துறைக்குக் கொண்டு போகிறோம்” என்று வள்ளி மறுமொழி சொன்னாள். “அரண்மனையில் புகுந்து நீங்கள் எதையோ திருடிக் கொண்டு வந்தீர்கள்; கொண்டு வந்ததை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை ஒத்துக் கொள்ளாவிட்டால், உங்களை இப்படியே கொண்டு போய்க் காராகிரகத்தில் அடைத்துவிடுவேன்” என்றான் மாரப்பன். எந்தக் காராகிரகத்தில் அடைப்பீர்கள்?” என்றான் பொன்னன். “நீ என்னத்துக்காக அவரோடு பேசறே? நாளைக்குச் சக்கரவர்த்தியின் சமூகத்தில் வழக்கைத் தீர்த்துக் கொண்டால் போகிறது!”என்றாள் வள்ளி. இதைக் கேட்டதும் மாரப்பனுடைய முகம் தொங்கிப் போய்விட்டது. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

 

பிறகு தன்னுடன் வந்திருந்த ஆட்களைப் போகச் சொல்லி விட்டுப் பொன்னனைப் பார்த்துச் சாவதானமாய்ச் சொன்னான்! “இதோ பார், பொன்னா! உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது இப்போது அப்போதல்ல, சில சமயம் நமக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு உன் பெண்டாட்டியின் வாய்த்துடுக்குத்தான் காரணம்…” “இவருடைய கையிலே துடுப்பு, என்னுடைய வாயிலே துடுக்கு…” என்றாள் வள்ளி. “நீ சற்றுப் பேசாமலிரு, வள்ளி! ஆண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ ஏன் குறுக்கிடுகிறாய்?” என்றான் பொன்னன். “ஓகோ? நீங்கள் ஆண் பிள்ளைகளா? இருட்டிலே தெரியவில்லை. வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு வேளை தெரியும்” என்று வள்ளி முணுமுணுத்தாள். மாரப்பன், “பொன்னா! அவ்விதம் வள்ளியை நீ தள்ளிவிட வேண்டாம். நான் சொல்லுகிறது அவளுக்கும் தெரிய வேண்டியதுதான். உங்களால் எனக்கும் ஒரு முக்கிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை மட்டும் நீங்கள் செய்து கொடுத்தீர்களானால் உங்கள் உதவியை நான் மறக்கமாட்டேன். என்னாலும் உங்களுக்கு ஏதாவது ஒத்தாசை வேண்டியதாயிருக்கும்.

 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்…” என்றான். “உங்களைச் சிறு துரும்பு என்று யாராவது சொல்வார்களா, சேனாதிபதி?” என்றான் பொன்னன். “சரிதான்; இந்தத் துரும்பினால் பல்லைக் குத்தினால், பல்லு உடைந்து போய்விடும்” என்று வள்ளி முணுமுணுத்தாள். “என்னால் தங்களுக்கு ஆகக்கூடிய ஒத்தாசை என்ன இருக்கிறது? சேனாதிபதி! இந்த ஏழைப் படகோட்டி…” மறுபடியும் வள்ளி குறுக்கிட்டு, “நீ ஏழை என்றால் யாராவது நம்புவார்களா? உன்னை உருக்கினால் ஒரு ராஜ்யத்தை வாங்கலாமே…” என்றாள். மாரப்பன் கூடச் சிரித்துவிட்டான். “ஆமாம் பொன்னா! உன் பெயரே உனக்கு விரோதமாயிருக்கிறது. போகட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்தக் கபடச் சாமியார் இருக்கிறார் அல்லவா? அவர் இருக்கிற இடத்தை மட்டும் சொல்லிவிடு. அவரைப் பிடித்துக் கொடுப்பதாகச் சக்கரவர்த்தி குமாரிக்கு வாக்களித்திருக்கிறேன். உன் பேரிலும் வள்ளி பேரிலும் குந்தவி தேவிக்கு ரொம்பக் கோபம். நீங்கள் எனக்கு ஒத்தாசை செய்தால் குந்தவி தேவியிடம் உங்களைப் பற்றிச் சொல்லிக் கோபம் தீரும்படி செய்வேன்….” “சேனாதிபதி! நாங்கள் படகோட்டிப் பிழைப்பவர்கள்; யார் கோபம் எங்களை என்ன செய்யும்?” என்றான் பொன்னன்.

 

“சிவனடியார் எங்கே இருக்கிறார் என்று சொல்லமாட்டாயா?” “தெரிந்தால்தானே சொல்லுவேன்!” “அந்த வேஷதாரிச் சாமியார் இன்றைக்குக்கூட இந்த உறையூரிலேதான் இருக்கிறார். ‘இல்லை’ என்று சத்தியமாய்ச் சொல்வாயா?” “அதெப்படிச் சொல்கிறது? சாமியார் மந்திர சக்தியுள்ளவராச்சே! எந்த நேரத்தில் எங்கே இருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்?” என்றாள் வள்ளி. “இந்தச் சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்று உனக்குச் சத்தியமாய்த் தெரியாதா?” “சத்தியமாய்த் தெரியாது” என்று பொன்னனும் வள்ளியும் ஏககாலத்தில் உண்மையைச் சொன்னார்கள். நிஜமாகவே அவர்களுக்குத் தெரியாதுதானே? “இருக்கட்டும், பொன்னா! நான் மட்டும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் ஒரு நாளைக்கு அந்தச் சடைச் சாமியாரைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர் சடையைப் பிய்த்தெறிந்து, அவருடைய உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்துவேன்! அப்போது உங்களையும் லேசில் விடமாட்டேன்” என்று கருவிக்கொண்டே மாரப்பன் போய்ச் சேர்ந்தான். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் இப்போது நினைத்துக் கொண்டு சிரித்த வள்ளி, “ஆகா; சாமியாருடைய சடையை மட்டும் நிஜமாகவே பிய்த்துவிட்டுப் பார்த்தால்… மனுஷன் உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விடமாட்டானா!” என்றாள். “ஆமாம், வள்ளி! அந்தச் சாமியார் யார்? சொல்கிறேன், சொல்கிறேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாயே?” என்று பொன்னன் கேட்டான்.

 

“பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று நீ சொல்லு; பிறகு சாமியார் யார் என்று நான் சொல்லுகிறேன்.” “அதை நினைத்தால்தான் எனக்கு வேதனையாயிருக்கிறது! பெட்டி மட்டும் கிடைக்காமற் போனால்…. ஐயோ! மகாராணியின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?” “அப்படி என்னதான் அந்த அதிசயப் பெட்டிக்குள் இருக்கிறது? சொல்லேன்!” “அது அதிசயப் பெட்டிதான் வள்ளி! அதற்குள் சோழ வம்சத்தின் பரம்பரைப் பொக்கிஷம் இருந்தது. கரிகாலச் சக்கரவர்த்தியின் உடைவாளும், வள்ளுவர் பெருமான் தம் கையால் எழுதிய தமிழ் வேதச் சுவடியும் இருந்தன. பார்த்திப மகாராஜா, போக்களத்துக்குக் கிளம்பியபோது, அந்தப் பெட்டியை மகாராணியிடம் ஒப்புவித்தார். இளவரசருக்கு வயது வந்து சுதந்திர மன்னராகும்போது அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்.” “இத்தனை நாளும் அரண்மனையில் இருந்ததை இப்போது என்னத்திற்காக மகாராணி எடுத்துவரச் சொன்னார்? இளவரசருக்கு அனுப்பி வைக்கலாம் என்றா?” “இளவரசருக்கு எப்படி அனுப்புகிறது? அவர் இருக்குமிடந்தான் யாருக்குத் தெரியும்? பாவம்! எந்தக் கண்ணில்லாத் தீவிலே என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ?… அதற்காக இல்லை, வள்ளி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார்.

 

பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ? நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டு போக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார்!” “ஐயையோ! அப்படியா சமாசாரம்? எனக்குத் தெரியாமல் போச்சே!” “அதனால்தான் நான் சிவனடியாரிடம் பெட்டியைக் கொடுக்கத் தயங்கினேன். நீ ‘கொடு கொடு’ என்று அவசரப் படுத்தினாய்!” “நான் என்ன செய்வேன்? அந்த அவசரத்தில், வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும்? இருந்தாலும், என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. பெட்டி பத்திரமாய் வந்துவிடும் என்று.” “வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டால் மகாராணியின் முகத்திலேயே நாம் விழிக்க முடியாது! ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி? அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்?” அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும், அவனுக்கு உண்டான ஆச்சரியம் முகத்தில் தெரிந்தது. அதே சமயத்தில் வெளியில் குதிரைகளின் குளம்புச் சத்தம், பல்லக்குச் சுமப்பவர்களின் குரலொலி முதலியவை கேட்கவே, பொன்னன் வள்ளி இரண்டு பேருமே வியப்படைந்து குடிசை வாசலுக்கு வந்து பார்த்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 53கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 53

அத்தியாயம் 53 – கல்யாணியின் கல்யாணம் நிர்மலமான வானத்தில் பூரண சந்திரன் பவனிவந்து கொண்டிருந்தது. கீழே அலைகளின்றி அமைதியாயிருந்த நீலக்கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் அதிவேகமாய்ச் சென்றது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் ஓர் ஓரமாகக் கம்பியின் மீது சாய்ந்து

கல்கியின் பார்த்திபன் கனவு – 04கல்கியின் பார்த்திபன் கனவு – 04

அத்தியாயம் நான்கு பாட்டனும் பேத்தியும் உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. “தாத்தா!” என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் “வா வள்ளி!