Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 45

பாகம் – 45

இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே!

உன் விழியோடு நான் புதைவேனா?

காதல் இன்றி ஈரம் இன்றி

போனாய் அன்பே!

உன் மனதோடு நான் நுழைப்பேனா?

செதிலாய் செதிலாய் இதயம் உதிர, உள்ளே உள்ளே நீயே…

துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே…

 

ஆரவ்வினால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, பார்பி ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஒத்துக்கொண்டதை. ஆனால் தனக்காய் அன்றி இன்னொருவனுக்காய் அவள் மனம் இறங்கியதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை. இருந்தும் வேறு வழி இல்லை, நாளுக்கு நாள் சூழ்நிலை மோசமாகி வரும் போது அவளை ஒத்துக்கொள்ள வைக்க இதை விட்டால் வேறு வாய்ப்பு வராது. ஒரு வாரத்திற்குள் திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு… இருந்த போதும், அவள் நிலை கருதி இரண்டு நாட்களுக்கு எதுவும் பேசாமல் இருப்பதென்று முடிவெடுத்தான். அந்த இரண்டு நாட்கள் முழுவதும் அவள் அரைகுறை உணவோடு அழுது கொண்டே இருந்தாள், சில நேரங்களில் கண்ணீர் வற்றிப்போய் விசும்பிய குரல் மட்டும் மெலிதாய் கேட்கும். கட்டாயத்தின் பேரில் மருந்துகளை மட்டும் ஏற்றதோடு சரி, அவன் கூறும் சமாதானங்களை ஏற்க அவள் தயாராக இல்லை. மூன்றாவது நாள் காலையிலேயே ஆரவ் அவளிடம் திருமணத்தை பற்றி பேச்செடுத்தான்.

 

“பார்பி, நாளைக்கி வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு, ஸோ… நாம நாளைக்கே மேரேஜ் பண்ணிக்கலாமா?”

 

‘அங்க இன்னும் என் பாட்டிக்கி காரியம் கூட முடிஞ்சிருக்காது, இங்க எனக்கு கல்யாணம். கடவுள் என் விதிய எழுதும் போது ரொம்ப கோவமா இருந்திருப்பார் போல, என்ன செய்ய? எழுதினதெல்லாம் நான் அனுபவிச்சு தானே ஆகணும். கெட்டதிலும் ஒரு நல்லது நான் பிரக்னன்ட் இல்ல. இன்னோரு உயிர கஷ்ட படுத்தாம இது எல்லாமே என்னோடயே முடிஞ்சிட்டா அதுவே போதும் ஆண்டவா…’ என நினைத்தவள் அவனிடம், “தாராளமா பண்ணிக்கோங்க, என்னை என்னென்ன செய்யனுமோ எல்லாம் செஞ்சுக்கோங்க. நீங்க என்கிட்ட பர்மிஷன் கேக்கனும்ங்கிற அவசியமே இல்ல ஆரவ்…”

 

பதிலில் அவள் மனதின் வலி அவனுக்கு புரிந்தும் இதை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் செய்தான். அடுத்த நாள் காலை அவன் வீட்டிற்கு ஷர்மா அங்கிள், நிதிஷ், ரெஜிஸ்டர் ஆபீஸில் இருந்து சிலர் வந்திருக்க, சாதாரண சுடிதாரில் பார்பி தயாராகி வந்தாள். ஆரவ்வும் பெரிதாய் எதுவும் போட்டுக்கொள்ள வில்லை.

 

“தாலி எல்லாம் வேண்டாம் அங்கிள், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்க இல்ல. ஜஸ்ட் மாலை மட்டும் மாத்திக்கிறோம்.” என்றவன் டக்கென மாலையை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டான். அவளுக்கும் வேறு வழியின்றி மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள். வந்திருந்த ஆபீஸர்ஸ் அவளிடம் இருபதுக்கும் மேற்பட்ட பேப்பர்களில் கையெழுத்து போட சொல்ல, அவன் உத்தரவின்படி பார்பி என்ற பெயரிலேயே எல்லாத்திலும் கையெழுத்திட்டாள். ‘அவ்ளோதான், எல்லாம் முடிஞ்சு போச்சு. யாருக்கும் தெரியாம, எந்த சந்தோஷமும் இல்லாம, என் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமே இந்த பெரிய அரண்மனை, தங்க தட்டு, வெள்ளி டம்ளர், இதோட லிஸ்ட்டில நானும் ஒண்ணு அவனுக்கு.’ அவள் முட்டிகொண்டு வரும் கண்ணீரை அடக்க பெரும்பாடு படுவது தெரிந்தும், அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. நீட்டிய பேப்பர்களில் எல்லாம் அவள் கையெழுத்து போட்டதும் ஆரவ் அவளை தங்களது அறைக்கு போக சொல்லிவிட்டான்.

 

ரூம்மிற்கு வந்தவள் படுக்கையில் விழுந்து மனம் கொண்ட மட்டும் அழுது தீர்த்தாள். ஆரவ் அவர்களுடன் பேசிவிட்டு நெடு நேரம் கழித்து வந்தான். அவன் வந்ததும் பார்பி அழுகையை நிறுத்திவிட்டு எழுந்து முகம் கழுவி வந்தாள். அவனுக்கு நேர்பட பேச தைரியம் வராததால் ஒரு கிளாஸ் ஜூஸ்ஸை எடுத்து கொண்டு போய், அதை குடிக்க வைக்கும் சாக்கில் சமாதானம் செய்ய முயல, அவளோ சத்தமில்லாமல் அவன் தந்ததை முழுக்க குடித்துவிட்டு காலி டம்ளரை திருப்பி தந்தாள். அடுத்தடுத்து அவன் அவளிடம் பேச முற்பட்டு, ஒப்புக்காக எதையாவது எடுத்து சென்றால், அவள் அவன் சொன்னதை செய்து முடித்துவிட்டு, அவனுக்கு பேச வாய்ப்பே தராமல், மீறி பேசினாலும் பதில் தராது அமைதியாக இருந்து கொண்டாள். ஆரவ்விற்கு அவளின் கோபம் புரிந்தது, அதற்கான காரணமும் பெரிதல்வவா, அவனும் கோபம் குறைந்ததும் பேசலாம் என பொறுமை காத்தான். அடுத்தடுத்து வந்த நாட்களில் இதே தொடர்ந்து வர, நான்கு நாள் தாண்டி ஐந்தாவது நாள் ஆரவ் அவளிடம் மீண்டும் சமரசம் பேச முயன்றான். அன்றிரவு பத்து மணிக்கு மேல் மும்பையின் புகழ் பெற்ற மரைன் டிரைவ் பீச்சிற்கு அழைத்து சென்றான். இருவரும் வழக்கம் போல மாஸ்க் அணிந்து கொண்டு கூட்டமில்லா இடத்தை தேடி அமர்ந்து கொண்டனர்.

 

“இங்க பாரு பார்பி, இந்த பீச்ல இப்போ குறைஞ்சது ஆயிரம் பேராவது இருப்பாங்க. அங்க பாரு ஒரு சின்ன பையன், பதினஞ்சு வயசு இருக்கும். சின்னதா ஒரு பானிபூரி கடை போட்டு வாழ்க்கைய ஓட்டுறான். அந்த பாட்டிய பாரு இந்த வயசில கீழ விழுற பிளாஸ்டிக் பொருளெல்லாம் சேர்த்து அதை எடைக்கு போட்டு வாழ வேண்டி இருக்கு. நம்ம சுத்தி இருக்குற அத்தனை பேரும் சாதாரண மனுஷங்க, கைக்கு வர்ற பணம் வாயிக்கும் வயித்துக்குமே பத்தாம, தன்னோட தினசரி பிரச்சினையையே சாமாளிக்க முடியாம திணறுரவங்க. இவங்களோட வாழ்க்கை ஒரு மழைக்கோ, சின்ன காய்ச்சலுக்கோ கூட தாக்கு பிடிக்காம சரிஞ்சு விழுந்திடும். இவங்களோட கம்பேர் பண்ணிணா உன் பிரச்சினை ரொம்ப சின்னது தெரியுமா. உன் கோபத்தை குறைக்க நான் என்ன வேணாலும் செய்ய காத்திருக்கேன், ஆனா எனக்கு நீ பேசுறதுக்கே வாய்ப்பு தரலன்னா நான் எப்டி என் பக்க நியாயத்த சொல்றதுடா? இப்டி பேசாம உம்முன்னு இருந்து என்னை கஷ்ட படுத்தாதடா, ப்ளீஸ் என்கூட பழையபடி பேசு பார்பி”

 

அவளோ பொறுமையாக, “அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும். யாராலும் மத்தவங்க கஷ்டத்த முழுசா உணர முடியாது ஆரவ். ஸ்விட்ச் போட்டதும் எரியிற லைட் மாதிரி நீ சொன்ன உடனே என்னால டக்குனு மாற முடியாது, உன்னால சாரதாம்பாள இத்தன வருஷம் கழிச்சும் மன்னிக்க முடியாதப்போ, என்ன மட்டும் பத்தே நாள்ல பழச மறந்து மாறிட சொல்றியே” அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. இல்லை, எதுவும் சொல்லும் மன நிலையில் அவன் இல்லை.

 

வீட்டிற்கு வந்ததும் அவள் என்ன நடந்தால் எனக்கென்ன என்று உறங்கிவிட, அவன் உறக்கமின்றி உருண்டு கொண்டிருந்தான். இறுதி முடிவாய், ‘உன்னால என்கிட்ட ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது செல்லம். இப்ப நீ பேசலைனாலும், நான் பேசி பேசி உன்ன சரி பண்றேனா இல்லையானு பாரு. உன்ன விட உன்னபத்தி எனக்கு தான் நல்லா தெரியும். நீ இன்னும் அஞ்சாறு நாள் போனா ஐயாவோட கவனிப்புல மயங்கி கொஞ்சம் கொஞ்சமா மனசுமாறி தானா சரி ஆகிடுவ பாரு….’ என்று சூளுரைத்து கொண்டிருந்தான்.

 

ஆனால் அது அவனுக்கு அத்தனை எளிதாய் இருக்கவில்லை, அவன் எத்தனை முயன்றும் அவள் எள்ளளவும் மாறவில்லை, இதுவரை ஐந்து நிமிடங்கள் கூட வாய் மூடி பேசாது இருந்திராதவள், கோபத்தை இழுத்து பிடித்து ஐந்து நாட்களை தாண்டினாள். அதன்பிறகு தான் ஆரவ்க்கு புரிந்தது இது வழக்கமான கோபமல்ல, அவளின் உச்சகட்ட விரக்தி என்று. அவள் விரக்தியின் நீளம் வெறும் ஐந்து நாட்களல்ல, ஐம்பது நாட்களுமல்ல, முழுதாய் மூன்று மாதங்கள்… ஆரவ்வினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதல் மாதம் முழுதும் அவன் பக்கம் பக்கமாக எவ்வளவு வசனம் சொன்னாலும், அவள் அவனுக்கு ஒரே வரியில் பதில் சொல்லி கொண்டு இருந்தாள். இரண்டாவது மாதம் அவன் கேள்விக்கு பதில் ‘ஆம், இல்லை’ என்ற மட்டில் ஒரு வார்த்தையாய் சுருங்கியது. மூன்றாவது மாதம் அதையும் தவிர்த்து தலையசைப்பை மட்டும் பதிலாக தந்தாள்.

 

மூன்று மாதங்களும் அவள் அவன் முன்னால் அழவில்லை, சிரிக்கவில்லை, சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்க வில்லை, பாதியில் நிற்கும் ஓவியத்தை முடிக்கவில்லை, காதல் காலங்களில் கனவிலும் அவன் பேர் சொல்லி உளறியவள், இப்போது சுய நினைவில் இருக்கும் போதுகூட அவன் பேர் சொல்லி அழைக்கவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் அத்தனை கதவுகளும் திறந்து கிடந்தாலும் அவள் அந்த அறையை விட்டு வெளியேறுவது இல்லை. ஆரவ் மேச்சிற்காக செல்லும் நேரத்தில் கூட அந்த அறை வாசலை தாண்டி வெளியே வருவதே இல்லை. அவன் புதிதாய் வாங்கி தந்த போனை அவள் கையால் தொடவும் இல்லை. ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் கூட உட்கார்ந்து பழக்கமில்லாதவள், இப்போது பல மணி நேரம் ஒரே இடத்தில் உறங்கிகிறாளா விழித்திருக்கிறாளா என்றறிய முடியா நிலையில் சரிந்து கிடக்கிறாள். இது என்ன வகையான போராட்டம் என அவனுக்கு புரியவே இல்லை. பேச்சு வார்த்தையில் பயனில்லை என தெரிந்தும், தன்னம்பிக்கையை விடாமல் ஒருவழி பேச்சாய் பேசி கொண்டிருந்த ஆரவ், ஒவ்வொரு நாளையும் நரகமென நகர்த்தினான். அவனுக்கென்று இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் இரவில் அவளை தன் மார்போடு அணைத்து தூங்குவதுதான். அதற்கு மேல் அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் அவன் ஏற்படுத்தி கொள்ளாமல், அவளின் கோபம் குறையும் நாளுக்காக காத்திருந்தான்.

 

அந்த நாளும் வந்தது. மூன்று மாதத்திற்கு பிறகு ஒருநாள் மாலை ஆரவ் மேச் முடிந்து டெல்லியில் இருந்து திரும்பி வரும் போது தனியாக வரவில்லை, இன்னொருவனையும் உடன் அழைத்து வந்திருந்தான். அறையில் பாதி விழி திறந்து, வெறித்த பார்வையோடு சிறகொடிந்த தேவதையாய் அவள் பெட்டில் படுத்திருந்ததை கண்டதும் வந்தவனுக்கு தன் வலி எல்லாம் மறந்து போனது.

 

“சோனு…..” அவன் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்தவள், அவன் நிலை பார்த்தும் இன்னுமே தன் மனம் நொந்து போனாள். உருக்குலைந்து ஓய்ந்து போன முகத்தில் கொஞ்சம் தாடியுடன் பாழடைந்த சிலையாய் மாறியிருந்தான் அவன்.

 

“வஜ்ராண்ணா….” கைகளை விரித்து குழந்தை போல் ஓடிவர, அவன் தன் கட்டைக்காலை லேசாக இழுத்து இழுத்து நடந்து வந்தான். அதை அவள் பார்த்ததும் தாங்கமுடியாமல் அப்படியே தரையில் மடிந்து விழுந்து கதறி அழ தொடங்கி விட்டாள். மூன்று மாதம் அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் மொத்தமாய் சேர்ந்து இன்று அருவியாய் கொட்ட, அவள் அழுகையை குறைப்பதற்குள் வஜ்ராவும் ஆரவ்வும் திண்டாடி போனார்கள். அவள் ஆரவ்வை உதறி தள்ளிவிட்டு வஜ்ராவின் கழுத்தை கட்டிக்கொண்டு அவனை தன்னோடே அமர்த்தி கொண்டாள்.

 

“என்ன ஆச்சு வஜ்ரா உனக்கு?”

 

“ஆக்சிடன்ட்மா….”

 

“எப்போ?”

 

“ரெண்டு மாசம் முன்னாடி…”

 

“ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?”

 

“சொல்ல முடியலம்மா சாரி….”

 

அவள் அவனை விட்டு இம்மியும் நகராமல் இருக்க, ஆரவ் அவர்கள் இருவருக்கும் ஜூஸ் எடுத்து வந்து, “பார்பி, வஜ்ரா இனிமே நம்ம கூடதான் இருக்க போறான். நீ அவன கொஞ்சம் ப்ரீயா ஜூஸ் குடிக்க விடு, இந்தா இது உனக்கு” என்று அவள் புறம் ஒரு கிளாஸை நீட்டினான்.

 

‘இங்கயேவா? அப்போ எங்களுக்குள்ள நடந்ததெல்லாம் வஜ்ராக்கு தெரிஞ்சிடுமே… ஏற்கனவே வஜ்ராக்கு உடம்பு சரியில்லை, இதுல எனக்காக வேற இவன் வருத்தப்படனுமா?’ என நினைத்தவள், “நீங்க இங்கயே தங்குறதுக்கு உங்க அம்மா அப்பா ஒத்துக்கிட்டாங்களாண்ணா?”

 

“அவங்க இப்போ இல்ல சோனு, ஸ்பாட் அவுட்” அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அவள் அவன் மடியில் முகம் புதைத்து கொள்ள, அவன் அவளுக்கு ஆதரவாக தலை கோதி ஆறுதல் தரும்படி ஆனது. பெண்களை பொறுத்தவரை கண்ணீர் என்பது காயங்கள் ஆற்றும் மிகச்சிறந்த வலி நிவாரணி. மனதில் இருக்கும் அத்தனை துக்கங்களையும் சுலபமாக வெளியேற்றும் ஆகச்சிறந்த மருந்து. பார்பி தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்க, ஆரவ் வஜ்ராவிடம் அவளை தடுக்க வேண்டாமென சொல்லி விட்டான்.

 

சில நிமிடங்கள் கழித்து வஜ்ரா, “சோனு பசிக்குதும்மா சாப்பிடுவோமா?” என்றதும் அவள் கண்ணை துடைத்து விட்டு அவன் மடியிலிருந்து எழுந்து முகம் கழுவ சென்றாள். அவள் திரும்பி வந்ததும் ஆரவ், “வஜ்ரா கீழ டைனிங் ரூம்க்கு போயிட்டான்., நீயும் சீக்கிரமா கீழ வந்திடு…” என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். பின்னே, அவன் நின்றால் அவள் ‘நான் இந்த ரூம விட்டு வெளியே வரமாட்டேன்…’ என்பாளே.  ‘இப்போது நான் வெளியே செல்லாமல் அடம்பிடித்தால் இதுவரை நிகழ்ந்ததெல்லாம் கேள்வி பட்டு வஜ்ரா மனம் நொந்து போவானே…’ என பலத்த யோசனைக்கு பிறகு பார்பி வஜ்ராக்காக ரூம்மில் இருந்து வெளியே வர முடிவெடுத்தாள். டின்னர் டைம் அதிக பேச்சுவார்த்தை இன்றி அமைதியாக போக, ஆரவ்வும் வஜ்ராவும் மட்டும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வையை பரிமாறி கொண்டனர். சாப்பிட்டு முடித்ததுமே ஆரவ் தன் அறைக்கு சென்றுவிட, வஜ்ராவும் பார்பியும் வஜ்ராக்காக கீழேயே ஒதுக்கி இருந்த அறைக்கு சென்றனர். வஜ்ரா தனது கட்டைக்காலை தனியே கழற்றி வைத்துவிட்டு திரும்பி பார்க்கையில், சோனுக்கு அவன் நிலை கண்டு கண்களில் நீர் கோர்த்து விட்டது.

 

“அழாதடா சோனு, என்னால தாங்க முடியல. கண்ண துடைச்சுக்கோ, நான் உன்கிட்ட பேசனும், உனக்காகத்தான் இங்க வந்திருக்கேன்.”

 

“எதப்பத்தி பேசனும்?”

 

“உன்னோட ஹெல்த் இப்போ நல்லா இம்ப்ரூவ் ஆயிடுச்சுல்ல?” என்றதும் அவள் அதிர்ச்சியாய் அவனை பார்க்க,

 

“எனக்கு எல்லாமே தெரியும் சோனு. ஆரவ் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான். உன்ன சமாதான படுத்த சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கான். ஆனா நான் வேற ஐடியால இங்க வந்திருக்கேன் சோனு. எனக்கு எப்பவும் என்னோட சோனுதான் முக்கியம். என் சோனுவ இவ்ளோ கஷ்ட படுத்தினவன நாம சும்மா விடலாமா?”

 

அவன் வார்த்தை ஜாலங்களில் மகுடிக்கி மயங்கிய பாம்பாய் மாறியவள் “விடக்கூடாது” என்றாள். தனக்காக யோசிக்க ஓர் உயிர் கிடைத்த மகிழ்ச்சியும், ஆரவ்வை துன்புறுத்த தோன்றிய புதுவித யோசனைகளும் அவளை மேற்கொண்டு எதைப்பற்றியும் ஆராய விடவில்லை.

 

“நீ இனிமே அழக்கூடாது சோனு, அவன அழ வைக்கனும். காதல்தான வேணும் அவனுக்கு, அவன் தந்தத நீ அவனுக்கு புரியிர மாதிரி திருப்பி குடு. நான் உன்கூட எப்பவும் இருப்பேன், நாம ஆரவ்வ பழிக்குபழி வாங்குற மாதிரி நம்ம கேம்ம ஸ்டார்ட் பண்ணிடுவோமா?”

 

“ம்…” என்றாள் உற்சாகமாக. அரைமணி நேரம் கழித்து அவள் மாடிக்கு திரும்பி வந்த போது ஆரவ் அறைக்குள் உறங்காமல், யோசனையோடு குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். அவளை கண்டவுடன் அவசரமாய், “பார்பி வஜ்ரா எதாவது சொன்னானா?” என்றான்.

 

“ம்.. சொன்னான் சொன்னான்… நான் சந்தோஷமா வாழ்றதுதான் அவங்க அம்மா அப்பாவோட கடைசி ஆசையாம், அதுனால கிடைச்ச வாழ்க்கைய வாழ பழகிக்கனுமாம், பழசயே நினைச்சு அழுதிட்டு இருக்க கூடாதாம், இனிமே இதுதான் என்னோட குடும்பமாம். இன்னும் நிறைய சொன்னான்… அதெப்பிடி ஆரவ் இது என் குடும்பமாகும்? என்னோட குடும்பத்துக்கு நான் ரொம்ப செல்ல பொண்ணு, எனக்காக எவ்ளவோ பண்ணுவாங்க. அதையெல்லாம் நான் உங்க கிட்ட எதிர் பாக்க முடியுமா சொல்லுங்க?”

 

“என்ன வேணும்னு சொல்லுடா, எதுனாலும் நான் வாங்கி தர்றேன்.”

 

“இதுதான் என் பிரச்சன, நீங்க எல்லாத்தையும் பணத்தால வாங்கி தந்து உங்க அன்ப காட்ட முடியாது. எனக்கு இப்ப தூக்கம் வரல, என் பாட்டியா இருந்தா இந்நேரம் எனக்கு கதை சொல்லி தூங்க வச்சிருப்பாங்க. நீங்க என்ன பண்ணுவீங்க பாவம், நெட்ல ஸ்டோரி வீடியோஸ் டவுன்லோட் பண்ணத்தான உங்களுக்கு தெரியும்.”

 

“நான் எனக்கு தெரிஞ்ச கதை சொல்றேன்… உனக்கு ஓகேவா?”

 

“ம்….”

 

ஆரவ் முன்னும் பின்னும் குழப்பி உளறி கொட்டிய கதைகளால் அவளுக்கு தூக்கம் வந்ததோ இல்லையோ, யோசித்து யோசித்து அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது. கண்கள் சொருக தூங்கி வழியும் அவனை உறங்க விடாமல் , “அப்புறம் என்ன ஆச்சு? சொல்லு ஆரவ், சொல்லு” என்று அதற்கு பின்னும் ஒருமணி நேரம் பாடாய் படுத்தி எடுத்த பிறகே விடுவித்தாள். அடுத்தநாள் காலை ஆரவ் கண் விழித்ததும் அவளை அருகில் காணவில்லை. தேடி பார்த்தால் கீழே வஜ்ராவுடன் ஹாலில் பேசிக்கொண்டு இருந்தாள். சென்ற மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட அவள் இத்தனை சீக்கிரம் எழுந்ததே இல்லை. ஆரவ்வை கண்டதும் பார்பி அவனிடம் பாசமாய், “குட் மார்னிங் ஆரவ், உக்காருங்க நான் உங்களுக்கு டீ போட்டு தர்றேன்…” என்று கிச்சனுக்கு செல்ல, ஆரவ்வும் வஜ்ராவும் சத்தமில்லா ஹை பைவ் அடித்து கொண்டனர். அவள் டீ கொண்டு வந்து தந்து விட்டு, “இன்னிக்கி உங்களுக்கு பிரேக் பாஸ்ட் நான் தான் பண்ண போறேன்” என்று சொல்லி சென்றாள்.

 

ஆரவ் ரகசியமாய், “டேய் டீ படு பயங்கரம்டா, என்னத்த கலந்திருக்கானே தெரியல. உனக்கு கொஞ்சம் வேணுமா?” என்றான் வஜ்ராவிடம்.

 

“வேண்டாம்டா… நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்துக்குறேன்” என்றதும் ஆரவ் அவன் தலையை செல்லமாய் தட்டினான்.

 

வஜ்ரா, “இதெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறியா ஆரவ்?”

 

ஆரவ் டீ கப்பிலிருந்து பார்வையை நகற்றாமல் ஆம் என்று தலையத்து, “அவளுக்கு அளவுக்கதிகமான மன அழுத்தமும், என்னை எதுவும் பண்ண முடியலன்ற கோபமும்தான் இதுக்கெல்லாம் காரணமாம். கோபம் குறைஞ்சா டெப்ரஷன் குறைஞ்சு நார்மல் ஆகிடுவான்னு சைக்யாடிரிஸ்ட் சொல்றாங்க. நான் அவ குடும்பத்த எதாவது பண்ணிடுவேன்னு பயந்துட்டு என்கிட்ட கோபப்பட மாட்டிக்கிறா. பட் இப்போ சப்போர்டுக்கு நீ கூட இருப்பன்ற தைரியம் அவளுக்கு வந்திருக்குறது எனக்கு நல்லாவே தெரியுது.”

 

“அதெல்லாம் சரிதான். எனக்கென்னமோ சோனு உன் மேல கொலை வெறில இருக்குற மாதிரி தோணுது. எதாவது எக்குதப்பா செஞ்சிட்டா தாங்குவியாடா நீ?”

 

“வயித்துல இருக்குற குழந்தை அடிக்கடி எட்டி உதைக்கத்தான் செய்யும், அதுக்குன்னு எந்த அம்மாவும் குழந்தைய வெறுக்குறதில்லடா, அது ஒருவிதமான ரசனை. அவதான் என்ன புரிஞ்சுக்கலயே தவிர, நான் அவள நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன். வேணும்னா பாரேன் நீ பயப்படுற மாதிரி அவ எதுவும் பண்ண மாட்டா. பார்பிய கொஞ்சம் யோசிக்க வச்சிட்டா போதும், அப்புறம் அவளே என்னை புரிஞ்சுக்குவா, அவ சேஞ்ச் ஆக ரொம்பல்லாம் டைம் ஆகாதுடா…”

 

ஆரவ் கணக்கு இந்த முறை சரியாக வேலை செய்தது. பழி வாங்குவதாய் நினைத்து டீ, காபி என்ற பெயரில் அவள் தந்ததை விட கோமியம் தேவலாம். அவள் சுடும் தோசைகளெல்லாம் எப்போதும் வஜ்ராவின் தட்டிற்கு பொன்னிறமாகவும், ஆரவ்வின் தட்டிற்கு கருகியும் வந்து சேரும். அதைவிட மோசம் இனிப்பே பிடிக்காத அவனுக்கு இட்லிக்குள் சீனி வைத்து அவித்து கொடுத்தாள். இன்னும் சில நாட்கள் ஆரவ்வை சப்பாத்தி செய்து தர செல்லி கட்டாய படுத்தினாள், அது வட்டமாக இல்லையெனில் தூக்கி எறிவாள். கால் நகத்திற்கு நெய்ல் பாலிஷ் போட சொன்னாள். பிரியாணியில் அவன் பங்கு லெக் பீஸையும் அவளே எடுத்து கொண்டாள். அவசரமாய் அவதிப்படும் நேரம் பாத்ரூமை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டினாள். பெர்ப்யூம் எல்லாம் சொட்டு நீலம் கலந்து வைத்தாள். ஷாக்ஸ்ஸில் ஒன்றை மட்டும் ஒளித்து வைத்தாள். அவன் வெளியில் கிளம்ப தயாராகி இருக்கும் நேரம் தண்ணீரை கொட்டினாள். நினைத்த போதெல்லாம் அவன் ஆடைகளில் ஹோலி கொண்டாடினாள். வேண்டுமென்றே ஸ்விம்மிங் பூல்க்குள் விழுந்து அவனை பதறவிட்டாள். அஸ்விகா பாப்பாவின் பிறந்த நாளுக்கு ஆரவ்வை பிரியங்காவின் வீட்டிற்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள். வீட்டில் ஆரவ் படும் பாடு அத்தனையையும் வஜ்ரா உதவியுடன் தன் போனில் வீடியோவும் எடுத்து கொண்டாள்.

 

பார்பி அவனை கஷ்ட படுத்துவதாய் நினைத்து செய்த ஒவ்வொன்றையும் அவன் மனதார ஏற்று கொண்டான். ஆரவ்விற்கு அவள் அளித்த தொல்லைகள் வெளித்தோற்றத்திற்கு அவன் தோற்றதாய் காட்டினாலும், மறைமுகமாக வெற்றி என்னவோ அவனுக்கே கிடைத்தது. ஒருநாள் இரவு பசியோடு வந்து சாப்பிட அமர்ந்தவனுக்கு ஆனியன் தோசை என்ற பெயரில் மிளகாய் தோசையை சுட்டு கொடுத்தாள். அவன் கால் தோசை சாப்பிடும் முன்பே ஒரு ஜக் தண்ணீர் காலி, இருந்தும் அவன் நிறுத்தாமல் ஸ்ஸ்அஆ… ஸ்ஸ்ஊஊ.. என அனத்தி கொண்டு அடுத்ததை பிய்த்து வாயில் போடும் நேரம், அவன் முன்னால் நல்ல தோசையை கொண்டு வந்து வைத்தாள். ஆசை ஆசையாக அவன் அதை எடுத்து சாப்பிடுகையில் பார்பி, “என் சமையல் சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்குதா ஆரவ்? இதுக்குத்தான அப்பவே நான் உங்க லைப் ஸ்டைலுக்கு செட் ஆக மாட்டேன்னு சொன்னேன். இப்ப நான் பண்ற கொடுமை தாங்க முடியாம, உங்களுக்கே ஏன்டா இவள விரும்பி தொலைச்சோம்னு இருக்குதா?”

 

அவன் சின்ன சிரிப்புடன், “கொடுமையா யாரு நீயா? காமெடி பண்ணாதடா. நீ என்னோட ஏஞ்சல்டா, நீ என்கூட இப்ப விளையாடிகிட்டு இருக்க. இதுக்கு பேரு கொடுமை இல்ல, ப்ராங்க்ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க.”

 

அவள் இத்தனை நாளாய் இதை மிகச்சிறந்த பழி வாங்கும் யுக்தியாய் நினைத்திருக்க, அவன் சாதாரண விளையாட்டு என்று சொன்னதை ஏற்க முடியாமல், “நான் ஏன் உங்க கூட விளையாடனும்?” என்றாள்.

 

எழுந்து அவளுக்கு மிக அருகில் வந்து நின்றவன், “ஏன்னா நீ என்னை அவ்ளோ லவ் பண்ற…” என்றான் கண் சிமிட்டி.

 

பதில் அவளுக்கு பதற்றத்தை உண்டு பண்ணிவிட, “உளறாதீங்க ஆரவ், நான் ஒண்ணும் உங்கள லவ் பண்ணல. ப்ரூப் பண்ண முடியுமா உங்களால?” என கோபத்தில் கத்தியபடி பின்னாலிருந்த சுவற்று பக்கமாய் ஒதுங்கி நிற்க, அவனுக்கு அது இன்னும் வசதியாகி போனது. ஆரவ் அவளை நெருங்கி வந்து எந்த பக்கமும் அவள் தப்பிக்க முடியாதபடி கைகளால் இரண்டு பக்கமும் மறித்து சிறை செய்ததைப்போல நின்றான்.

 

காதல் கொஞ்சும் குரலில், “நிரூபிக்கனுமா? பண்ணிடுவோம்… நான் நிறைய பணம், நகை, சொத்து எல்லாம் உன்கிட்ட கொடுத்து வச்சிருக்கேன்ல, நீ நினைச்சிருந்தா அத எல்லாம் உனக்கு இஷ்டமானவங்க யாருக்காவது எடுத்து குடுத்திருக்கலாம். ஆனா நீ குடுக்கல, ஏன்?… எனக்கு பிடிச்சவங்க யார் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும், இருந்தும் நீ அவங்ககிட்ட இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் பண்ணவே இல்லயே, ஏன்?… என்னோட வேலை என்னன்னு உனக்கு தெரியும், நான் இந்த பீல்டுல இருக்குறதுதான் என்னோட ஸ்ட்ரென்ந்த்னும் உனக்கு தெரியும், நீ நினைச்சிருந்தா ஒரு கத்திய எடுத்து டக்குனு என் உள்ளங்கைய கிழிச்சு விட்ருக்கலாம். ஆனா நீ செய்யலயே ஏன்?… இப்ப கூட நான் உன்னோட மூச்சு தொடுற தூரத்தில நின்னு பேசிட்டு இருக்கேன், நீ டக்குனு என்ன ஒரு அறை அறைஞ்சு கீழ தள்ளி விட்ருக்கலாம், ஆனா நீ செய்யலியே ஏன்?… ஏன்னா நீ உனக்கே தெரியாம என்மேல அக்கறையா இருக்க, புரியுதா?” என மேலும் அவளை நெருங்கியவன், அவள் ஈர இதழ்களை தன்னிதழ் கொண்டு லேசாய் தொட்டு சென்றான்.

 

அவன் போன பிறகும் மயங்கி கிறங்கி அங்கேயே இருந்தவளுக்கு அவன் இதழ் தொட்ட இடம் எரிவது போல் தோன்ற, ‘ஐயோ இவ்ளோ காரத்த எப்டி சாப்ட்டான்?’ என்று தான்னிச்சையாக அவனுக்காய் யோசித்த மனதை, அவள் அப்போதுதான் முதன்முறை நின்று திரும்பி பார்த்தாள். ‘அவன் சொன்னது இதைத்தானா? எனக்கே தெரியாமல் நான் அவன் மேல் அக்கறை கொண்டேனா? இல்லை… இல்லை… இதுவும் அவன் ஏமாற்றும் யுக்தி, பேச்சிலேயே என்னை குழப்புகிறான் நான் இதுக்கெல்லாம் ஏமாற கூடாது…’

 

அடுத்தநாள் காலை அவள் எழுந்த நேரம் ஆரவ்வும் அந்த அறைக்குள் இல்லை, வஜ்ராவும் வெளியே சென்றுவிட்டான். பார்பி கடந்த பதினைந்து நாட்கள் ஆடிய ஆட்டத்தினால் போன் மெமரி புல் ஆகிவிட அதை கம்ப்யூட்டரில் காப்பி செய்ய நினைத்து ஆரவ் இல்லாத நேரம் பெர்சனல் லேப்டாப்பை எடுத்தாள். ஆரவ் எனும் புத்திசாலி பாஸ்வேர்ட் எதையும் வைக்கவில்லை, சுலபமாக உள்ளே சென்றவள் போனில் இருந்ததெல்லாம் கட் அன்ட் பேஸ்ட் கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் மற்ற போல்டரை எல்லாம் நோண்ட ஆரம்பித்தாள். ஒரு போல்டருக்கு ‘மை ஏஞ்சல்’ என்று பெயர் வைத்திருந்தான். ஓப்பன் செய்து பார்க்க, அவள் முதல்நாள் ஹாஸ்பிடலில் இருந்ததிலிருந்து இன்றுவரை அவன் எடுத்த போட்டோக்கள் அத்தனையும் வந்தது. அடுத்த போல்டருக்கு ‘கேமராஸ்’ என்று பெயர் இருக்க, அதனுள் வீட்டை சுற்றி இருந்த அத்தனை கேமராக்களும் வரிசை வாரியாக வீட்டில் நடப்பதை ஒளிபரப்பி கொண்டிருந்தது.

 

‘அடப்பாவி, வீடு முழுக்க வளைச்சு வளைச்சு கேமரா வச்சிருக்கான். இப்டிதான் எல்லா விஷயத்தையும் சொல்லாமலே தெரிஞ்சுகிட்டானா? இன்னிக்கி வரட்டும் அவன உண்டு இல்லன்னு பண்றேன்.’ வரிசையாக வந்தவளுக்கு அவள் முதலில் தனியாக இருந்த பக்கத்து அறைக்கு மட்டும் 6 கேமரா வைத்திருந்ததை பார்த்ததும் கோபம் தலைக்கேறி, ‘அடேய் ஆரவ்… இன்னிக்கி உனக்கு அஞ்சு மிளகா தோச சுட்டு குடுத்து, அது அத்தனையும் திங்க வைக்கிறேனா இல்லையான்னு பாரு…’ என்று கொந்தளித்தாள்.

 

அடுத்ததாக ‘ஸ்டில் ஐ லவ் யூ’ என்ற போல்டர் இருந்தது. அதில் அவள் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அவளை பற்றிய அத்தனை வீடியோக்களையும் வெட்டி எடுத்து சேவ் பண்ணி வைத்திருந்தான். அவளுக்கு அதை எல்லாம் பார்க்க ஆசை வர, வசதியாய் லேப்டாப்புடன் போய் பெட்டில் குப்புற படுத்து கொண்டு ஒவ்வொன்றாய் ப்ளே செய்தாள். முதன் முதலில் வீட்டை பார்த்து பயந்தது, அஸ்விகாவுக்கு உணவூட்டுவது, சாரதாம்பாளுடன் சண்டை போட்டது, மொட்டை மாடி ப்ளாஷ் பேக் டைம், பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடியது என்று அத்தனையிலும் ஆரவ் தன்னுடன் இருந்திருப்பதை அவள் தாமதமாகவே கவனித்தாள். ஏதோ யோசனையில் இருந்தவளை கீழே இருந்த ஒரு வீடியோவை பார்க்க சொல்லி அவள் உள்ளுணர்வு தூண்டியது.

 

அதில் ஆரவ்வும் ஷர்மா அங்கிளும் கீழே இருந்த ஆபீஸ் ரூம்மில் காரசாரமாக பேசி கொள்வதை போல் இருந்தது. அந்த வீடியோ அவள் ஆரவ் அறைக்கு மாறிய பிறகு இரண்டு நாள் கழித்து வந்த தேதியை கொண்டிருந்தது.

 

ஷர்மா, “ரெண்டு நாளா பாக்குறேன், ஏன்டா ஆரவ் நான் கால் பண்ணினாலும் நீ எடுக்கவே இல்ல? ஆன்ட்டிக்கு வேற உடம்பு சரி இல்லாம போயிடுச்சு, இல்லன்னா நான் அவள பாக்க முன்னாடியே வந்திருப்பேன். இப்ப பார்பி எங்க இருக்கா? எப்போ மயக்கம் தெளிஞ்சுச்சு? பழசெல்லாம் நியாபகம் வந்துச்சா? எதாவது சொன்னாளா? உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?” என கேள்விகளை அடுக்கி தள்ளினார்.

 

“முதல்ல நீங்க அவளுக்கு என்ன டேப்ளட் குடுத்தீங்கன்னு சொல்லுங்க அங்கிள், தூங்குறா தூங்குறா பொழுதுக்கும் தூங்கிட்டே இருக்கா.”

 

“அந்த டேப்ளட் எல்லாம் அப்டிதான் இருக்கும். இதுக்கே பயந்தா எப்டி? அவ ஹெல்த் இமப்ரூவ் ஆகலன்னா அடுத்து நான் தர்ற டேப்ளட்ஸ் இத விட மோசமா இருக்கும். சரி இப்ப அவ எங்க இருக்கா?”

 

“என்னோட ரூம்ல”

 

“அங்க எதுக்கு போனா?” அவர் சந்தேகமாய் கேட்க,

 

“அங்கிள் நான் உங்ககிட்ட சில உண்மைகள சொல்லனும். சொன்ன பிறகு நீங்க கோபப்பட கூடாது, உதவி பண்ணணும்.”

 

“சொல்லு….”

 

“அங்கிள் பார்பிக்கு பழசெல்லாம் நியாபகம் வந்திடுச்சு. நான் பார்பிக்கு ஆபத்தா இருந்த மனிஷ்ஷ ஆளுங்கள வச்சு கொன்னுட்டேன், பழிய சாகர் மேல போட்டு உள்ள தள்ளிட்டேன். சாகர்க்கு அண்டர் கிரவுண்ட் ரவுடிங்க கூட பெரிய லிங்க் இருக்கு. அது அவளுக்கும் அவ குடுபம்பத்துக்கும் ஆபத்து, நான் பாடிகார்ட்ஸ் ரெடி பண்ணி பார்பி வீட்டுகிட்ட வைக்க போறேன். பார்பி இறந்துட்டதா அவங்க வீட்ல இப்ப நினச்சுட்டு இருக்காங்க, கொஞ்ச நாள் இப்டியே இருக்கட்டும். நான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சதும் நேர்ல போய் பாத்து உண்மைய சொல்லிக்கலாம்னு இருக்கேன்.”

 

“வேறென்ன?”

 

“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். இருபது நாள் முன்னாடி இருக்கும், அவ ப்ரக்னன்ட் ஆகிடுவாளோன்னு பயம்மா இருக்கு” என்றதும் ஷர்மா அவனை அடிக்க கை ஓங்குகையில், ஆரவ், “கொஞ்சம் பொறுங்க, நான் இன்னும் முடிக்கல. அவளுக்கு அது நடந்ததே தெரியாது, மயக்கத்துல இருந்தா. இப்போதான் ரெண்டு நாள் முன்னாடி அவகிட்ட உண்மைய சொல்லி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். அவ என்னடான்னா டக்குனு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா. இப்போதைக்கு அவள பிளாக்மெயில் பண்ணித்தான் என் ரூம்ல பூட்டி வச்சிருக்கேன். ஏன் இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேன்னா ஒருவேள நான் திடீர்ன்னு செத்துட்டா, நீங்க உடனே வந்து அவள இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க, அவளையும் தேடியும் அடிஆளுங்க வருவாங்க, உங்க பொறுப்புல வச்சு ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. கொஞ்சம் சொத்தெல்லாம் அவ பேருல மாத்த ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். அதவச்சு அவ ட்ரீட்மெண்ட்க்கும், அவளோட பேமிலிக்கும் தேவையானத பாத்து செஞ்சிடுங்க. நான் இதுவரைக்கும் செஞ்ச தப்பெல்லாம் மொத்தாமா சேர்த்து கைப்பட எழுதி தர்றேன், சொத்து பிரச்சனைல பிரியங்கா உள்ள வந்தா அத காமிச்சு அவள ஒதுங்க வச்சுக்கோங்க. ரிஷியும் வஜ்ராவும் ஹெல்ப்க்கு வருவாங்க, பட் அவங்களுக்கு நடந்தது எதுவும் முழுசா தெரியாது. லீகல் டாகுமென்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு சீக்கிரமா வர்ற மாதிரி பண்றேன், ஜாக்கிரதையா வச்சுக்கோங்க.”

 

“டேய்… என்னடா இவ்ளோ தூரம் பண்ணி வச்சிருக்க? வெளியில தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமாடா?”

 

“என்ன பண்ணுவாங்க? மிஞ்சி மிஞ்சி போனா என்னை தூக்குல போடுவாங்க அவ்ளோதான… எனக்காக அவ எவ்ளோ கஷ்ட பட்டிருக்கா தெரியுமா அங்கிள்? அவளுக்காக என் உயிர் போச்சுன்னா அது எனக்கு சந்தோஷம்தான். ஆனா அப்பிடி எதுவும் நடக்க முன்னாடி நான் பார்பிய ரொம்ப தூரம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு அனுப்பி இருப்பேன்” என்றவன் மிக சாதாரண புன்னகையோடு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

 

அதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பார்பி இதயம் துடிக்கும் சத்தம் கேட்குமளவு உயிர் உறைந்து கிடந்தாள்.

2 Comments »

  1. Really enjoyed. Very nice. Thank you so much for giving us a good stories . Eagerly waiting for next updates

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: