Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 44

பாகம் – 44

ஒதுங்காதே என் உயிரே

உன் மனதை பின் தள்ளி விட்டு..

நீ முன் வந்து நில்,

வாழ்வில் பல காயங்கள்,

தொடர் கதையாய் சோகங்கள்,

காயத்தின் மேல் காயங்கள்,

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சிலர்…

 

காலங்கள் ஓடலாம் காயமது ஆறலாம்,

காலத்தால் முடியாததும்

இவ்வுலகில் உண்டோ என் உயிரே.,

வரம் ஒன்று தந்தான் இறைவன் – இலவசமாக

அழுகையும் கண்ணீரையும் உன்னுடன்..

காயங்கள் உனக்கு தான்,

ஏனோவலிகள், வேதனைகள் எனக்கு….

 

ஆரவ்க்கு தெரியும், பார்பிக்கு அவள் பாட்டிமேல் அத்தனை பிரியம் என்று. அவள் தாங்கமாட்டாள் என்று அவளுக்காக முன் ஏற்பாட்டை செய்துவிட்டு வந்தான். ஒரு ஹெலிகாப்டரை தாயார் செய்துவிட்டு, கொஞ்சம் உணவையும் அவன் வருவதற்கு அரைமணி நேரம் முன்பே அவளுக்கு அனுப்பிவிட்டு, கடைசியில் ஒரு கிளாஸ் ஜூஸ்ஸையையும் குடிக்க வைத்துவிட்டான். நடந்ததை சொன்ன பிறகு அவனால் அவளை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்தும் சொல்ல துணிந்து, அவள் முகம் பார்க்க தைரியம் இல்லாமல் தலை குனிந்தபடி சொல்லி முடித்தான். அவனை நம்பாமல் சில முறை போனிலிருந்த போட்டோவை உற்று உற்று பார்த்தவள், உண்மையை உணர்ந்த பின், அடுத்து வரப்போகும் பெருமழையின் முதல் தூரலாய் வாய் மூடி சத்தமின்றி அழ தொடங்கினாள்.

 

பார்பிக்கும் அவள் பாட்டிக்குமான உறவு சற்று அதிகப்படியானது. அவள் மனதினுள் பாட்டியின் ஞாபகங்கள் விரிய தொடங்கியது, குல தெய்வத்தின் பெயரான சந்தன மாரியம்மன் என்பதை சுருக்கி அவளுக்கு சந்தனா என்ற பெயரையே பாட்டிதான் வைத்தார். குழந்தையிலிருந்து வயதிற்கு வரும் வரை பாட்டி தாத்தாவின் அறையிலேயே தூங்கியவளை, ‘உன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னடி பண்ணுவ?’ என்ற சித்தியின் கிண்டல், ஏனோ இப்போதும் அவள் செவிகளை தழுவி சென்றது. அவள் பாட்டிக்கு செடி வளர்க்க ரொம்பவே பிடிக்கும். பார்பிக்கு பாட்டி வளர்த்த செடிகளிலிருந்து பூ பறிக்க பிடிக்கும். பாட்டிக்கு பூக்கட்ட பிடிக்கும், பார்பிக்கு பூ வைக்க பிடிக்கும். ஸ்கூல் போகும் காலம் வரை ரெட்டை ஜடை நிறைய முழம் முழமாய் பாட்டி தொடுத்த பூக்களை சூடிக்கொண்டு திரிந்தாள். ஜடை நீளத்திற்கு பூ வைக்கவே தொடை வரை முடி வளர்த்தவள் பார்பி. அவளுக்கு பாட்டிதான் எப்பவும் தலைக்கு குளிக்க வைத்து முடியின் சிக்கல் எடுத்து விடுவது. காலேஜ் வந்ததும் மற்றவர்கள் கிண்டலுக்காகவும், நேரமின்மைக்காகவும் முடியை இடை வரை வெட்டிக்கொண்டு பூவின் அளவையும் குறைக்க வேண்டியதாயிற்று. அம்மாவிடம் சொல்லாத ரகசியங்களை எல்லாம் பாட்டியிடம் பகிர்ந்து விடுவாள். கல்லூரியில் நடக்கும் காதல் கூத்து, பிட் அடித்தது, கிளாஸ் கட் அடித்தது, திட்டு வாங்கியது என பாகுபாடே கிடையாது. பாட்டிக்கும் மற்ற பேரன் பேத்திகளை விட பார்பியையே ரொம்ப பிடிக்கும், பாட்டியின் அந்த காலத்து கதைகளை அவள் விரும்பி கேட்பாள். தாத்தாவின் கிண்டலை ஒதுக்கிவிட்டு பாட்டியுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பாள். எல்லா எக்ஸாம் நாள் காலையிலும் பாட்டி தாத்தாவிடம் ஆசிர்வாதத்தை வாங்கி விபூதி குங்குமம் கண்டிப்பாய் பூசி விட சொல்லி கேட்பாள். அது அவளுக்கு லக்கியாம், படிக்காமல் போனாலும் கூட பர்ஸ்ட் மார்க் எடுத்து விடுவாளாம். இதுவரை பாட்டி ஒரு வார்த்தை சொல்லி அதை அவள் மீறியதே கிடையாது. பாட்டியின் மஞ்சள் முகமும் நெற்றி நிறைந்த குங்குமமும் பார்பி கண்ணில் வந்து நிழலாடியது.

 

இதுநாள் வரை கோபமும் பாசமுமே கலந்திருந்த அவள் காதல் விழிகளில், இன்று வழியும் நீரால் அது அத்தனையும் மொத்தமாய் கரைந்து போவதைப் போல ஆரவ் உணர்ந்தான். அவளின் இழப்பு அவனால் ஈடு செய்ய முடியாத ஒன்றாய் இருக்க, அவளை இறுக்கி அணைத்து கொள்வதை தவிர வேறேதும் சொல்ல முடியவில்லை. சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தும் அவள் தன்னிலை அடையாமல் போக, அவனே பேச்சை ஆரம்பித்தான். “பார்பி டைம் ஆகுது, வா நாம ஊருக்கு போய் பாட்டிய பாக்கலாம்.” என்றதும் பதறி சிதறி அவன் கைகளில் இருந்து விடுபட்டு விலகி அமர்ந்து, “பாட்டி எப்பிடி…. எப்போ…” அதற்கு மேல் கேட்க முடியவில்லை.

 

“அவங்களுக்கு நேத்து ஈவ்னிங்ல இருந்து பீவர் இருந்ததாம். இன்னிக்கி மார்னிங் இன்ஜெக்ஷன் போட்டுட்டு வந்து படுத்திருக்காங்க. அசதில தூங்குறதா நினைச்சிட்டு யாரும் எழுப்பாம இருக்க மதியம் வரைக்கும் பாட்டி எந்திரிக்கல. அதுக்கு பிறகு தான் எல்லாரும் போய் பார்த்திருக்காங்க போல. மணி இப்பவே மூணுக்கு மேல ஆச்சு. சீக்கிரமா போனாத்தான் முகத்த பாக்க முடியும், இன்னும் கொஞ்ச நேரத்துல ஹெலிகாப்டர் வந்திடும். ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு, வா டா”

 

“வேணா, நான் வர மாட்டேன்” கட்டிலின் ஓரத்தில் ஒடுங்கினாள்.

 

“இப்ப விட்டா இனிமே பாக்கவே முடியாது புரிஞ்சுக்க, நீ போய் முகம் கழுவிட்டு வா” என்று அவள் கை பிடிக்க, அவனிடம் அகப்படாமல் கையை உருவி கொண்டு அழுகையோடு, “வேணாம் விடுங்க, நான் பாவி ஆரவ், அவங்க முகத்தில முழிக்கிற தகுதிய நான் இழந்து ரொம்ப நாள் ஆச்சு”

 

ஏதோ துக்கத்தில் உளருகிறாள் என இவ்வளவு நேரம் நினைத்தவன், அவள் சொன்ன பதிலால் திகைத்து போனான். “ஏன்டா இப்டி பேசுற? உன் குடும்பத்துக்கு உன்ன பத்தி தெரியாதா? எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சுக்கிறேன். ப்ளீஸ் வாடா…”

 

“ஆரவ்……..”

 

“என்னடா…..”

 

“நான் காலைல வீட்ல இல்லன்ற கோபத்துல நீதான் இப்டி செஞ்சிட்டயா?”

 

அவனுக்கு இந்த கேள்வியை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது. அவள் கண்கள் பயம், கோபம், குற்ற உணர்வு எல்லாம் கலந்து வித்தியாசமான பாவனையில் இருக்க, ஆரவ் அவள் நிலை புரிந்து கொண்டு உயிர் தேய்ந்த குரலில், “இல்லடா…” என்றான்.

 

“ரெஜிஸ்டர் மேரேஜ் பத்தி சொன்னது உண்மையா பொய்யா ஆரவ்?”

 

“நீ சரின்னு சொன்னத்தான் அது முழுசா முடியும், அதுவரைக்கும் முடியாது. அதபத்தி விளக்கமா இன்னோரு நாள் சொல்றேன்டா, இப்ப கிளம்பலாம் வா”

 

ஹெலிகாப்டர் வந்தது தெரிந்த பிறகும் அவள் அழுது புலம்பியபடி அங்கிருந்து நகராமல், முதல் நாளிலிருந்து சேர்த்து வைத்த கோபத்தை அவன்மேல் கொட்ட தொடங்கினாள், “உன்ன நம்பினத தவிர நான் என்ன தப்பு செஞ்சேன் ஆரவ்? நான் செஞ்ச தப்புக்கு அநியாயமா என் பாட்டி செத்துட்டாங்களே. உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிவச்சு, ஏன் என்னை இப்டி கொஞ்சம் கொஞ்சமா கொல்றடா? காதல் கலந்த தாம்பத்தியத்துக்கும் உணர்ச்சி இல்லாத வெறும் உடலுறவுக்கும் வித்யாசம் தெரியாத உன்கிட்ட மாட்டிக்கிட்டு, வாழவும் முடியாம சாகவும் முடியாம இன்னும் எத்தன நாள் நான் இப்டியே இருக்க? எனக்கும் ஒரு மனசு இருக்குன்னு உனக்கு புரியவே புரியாதா? உன்னோட ரூம்ல இருக்குற கட்டில், ஸோபா, டீவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என்ன ப்ளாக் மெயில் பண்ணி உன் கூட வச்சுக்க நினைக்கிறியே இது தப்புன்னு தோணலயா? இதையே தான அந்த தீபாலியும் உனக்கு செஞ்சா? அவள நீ ஏத்துக்கிட்டயா? உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா ஆரவ்? உன் பணத்திமிர காட்ட நான் தான் கிடைச்சேனா? கடைசில உங்க அப்பாவோட ரத்தம்தான் உன் உடம்புலயும் ஓடுதுன்னு நிரூபிச்சிட்டேல…” அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி கீழே விழுந்து கிடந்தாள்.

 

‘இது கனவா?’ என சந்தேகப்பட்டு ஆரவ் தன் கையை கீழே இறக்கி அவளை பார்க்க, பார்பி தட்டு தடுமாறி எழுந்து நின்றாள். அவள் கன்னத்தில் அவன் ஐந்து விரல்களின் அச்சும் தெளிவாய் பதிந்திருந்தது. ‘நான் தானா? என்னோட உயிரை நானே அடிச்சிட்டேனா?’, “சாரிடா… தெரியாம…” என நெருங்க அவள் அடுத்த அடி விழுவதாய் நினைத்து பயந்து கண்களை மூடிக்கொண்டாள்.

 

“பார்பி… நான்…”

 

“வேணாம்… இங்க இருந்து போயிடு… என்ன நிம்மதியா அழவாவது விடு…” என்றதும் அவளைவிட்டு தள்ளி நின்றான்.

 

ஆரவ்க்கு நிதிஷ்ஷிடம் இருந்து கால் வந்தது, “சார், நம்ம கார்ட்ஸ் இப்ப போன் பண்ணினாங்க. மேடம் வீட்ல டெட் பாடிய தூக்குறதுக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம், ஏதாவது சொல்லி நீங்க வர்ற வரைக்கும் நிறுத்தி வைக்கவான்னு கேக்குறாங்க.”

 

ஆரவ், “பார்பி, நீயும் நானும் நிதானமா இல்ல, நாம இத அப்புறமா பேசி தீக்கலாம். வாடி ஊருக்கு போய் பாட்டிய பாப்போம், ப்ளீஸ்…” என்றான், அவள் திரும்பிக்கொண்டு மறுப்பாய் தலையசைக்க நிதிஷ்ஷிடம், “நாங்க போகல நிதிஷ். எதையும் நிறுத்த வேண்டாம், நடக்கட்டும்.”

 

அவள் விடாமல் அழுது கொண்டே இருக்க ஆரவ், “நான் ஒருமணி நேரம் வெளியில போயிட்டு வர்ரேன். நீ இங்கயே பத்திரமா இரு…” அவளிடமிருந்து பதில் வரவில்லை, அவளுக்கு தனிமை தந்து அவன் வெளியேறி விட்டான். அந்த ஒருமணி நேரமும் அடுத்த அறையில் இருந்து கொண்டு அவளை பற்றிய சிந்தனையிலே ஆழ்ந்திருந்தான். ‘இதுக்கு முன்னாலும் அவ சண்டை போட்டிருக்கா, ஆனா அதெல்லாம் பக்குவமில்லாத குழந்தைத்தனமான சீண்டல்களாக இருக்கும். இதே மாதிரி கேள்விகள இதுக்கு முன்னாடி கேட்டப்போ அவள் வார்த்தைகளில் எல்லாம் அன்பு கலந்து இருக்கும், நான் பதில் சொன்னதும் அவள் அடுத்த கேள்விக்கான யோசனையோடு குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்று கொண்டிருப்பாள்.’

 

அன்றொரு நாள் அவள் விழி நீர் ததும்ப ‘எனக்கு என்னோட குடும்பம் வேணும் ஆரவ்’ என்றதற்கு, ‘எனக்கும் கூட என்னோட குடும்பம் வேணும் பார்பி. வர்றியா?’ என்றதும் கையில் கிடைத்ததை தூக்கி என் மேல் எறிந்து விட்டு ஓடினாள்.

 

‘உங்கள யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு தான, நீங்க இப்டி எல்லாம் பண்றீங்க’ என்றதற்கு ‘எவன் சொன்னது? நீ நினைச்சா என்னை என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா?’ என்றேன். யோசிக்காமல் டக்கென்று என் தலையில் ஓங்கி கொட்டிவிட்டாள்.

 

உன்னை மறந்து உன் கோபம் கொப்பளிக்க, ‘உங்களுக்கு நிறைய பொண்ணுங்க கூட பழக்கம் உண்டு போல’ என்றதற்கு நான், ‘நான் சும்மா இருந்தாலும் அவங்களா வந்து என்னை கூப்பிடுறாங்கடா, பேசாம இனிமே நான் எங்க போனாலும் நீயும் என் கூடவே வந்திடு. பொண்டாட்டி கூட இருக்குறான்னு தெரிஞ்சா யாரும் என்கிட்ட வர மாட்டாங்க.’ தான் கேட்க வந்த கேள்வியையே மறந்துவிட்டு அவள் அதிசயமாய் ‘அப்டியெல்லாமா பொண்ணுங்க இருக்காங்க?’ என தாவாங்கட்டையில் கை வைத்து கேட்க, ‘ஆமாங்குறேன்….’ என்றான் அவனும் கிராமத்து கிழவியாய்.

 

பல தடவை என் பதில்கள் அவளுக்கு பாதி புரிந்தும் புரியாமலும் இருக்க அடுத்த கேள்வி கேட்க தெரியாமல் அவளே அவளை குழப்பிக்கொண்டு, ‘அவன் சொன்னது சரியா இருக்குமோ, இல்லையே என் மனசுக்குள்ள ஏதோ தப்புன்னு சொல்லுதே’ என விட்டத்தை பார்த்து யோசிக்கையில் அள்ளி அணைக்க தோணும் கையை நான் கடித்து கட்டு படுத்திய நாட்கள் அநேகம். என்மேல் அவள் கொண்ட காதலை அவளின் செயல்கள் காட்டி கொடுத்தாலும், உதடுகளால் ஒத்துக்கொள்ள மறுத்து முரண்டு செய்து, அதை நிரூபிக்கும் விதமாய் என்னுடன் பேசாமலும் இருந்துகொள்வாள். அந்த கோபமும் ஐந்து நிமிடம்கூட அவளிடம் தாக்கு பிடிக்காது மறந்து போய் என்னிடம் பேசிவிட்டு, ஞாபகம் வந்ததும் மீண்டும் முதலில் இருந்து சண்டையை ஆரம்பிப்பாள். அவளுடன் விதவிதமாக சமரசம் பேசுவதற்காக ஆசைப்பட்டே, எத்தனை முறை வேண்டுமானாலும் சண்டை போட தயாராக இருந்தேன் நான்.

 

அத்தனை காதலை பொழிந்த அதே காதல் மனம் இன்று அவள் முன்னால் செல்ல அஞ்சி நடுங்கி ஒதுங்கி கிடக்கின்றது. அதற்காக அழுது கரைபவளை அப்படியே விட முடியாதே, அவள் கண்ணீருக்கு காரணமே அவனாய் இருந்ததால், அதை கட்டுக்குள் கொண்டுவரும் வழி தெரியாமல், விதி வழி செல்ல தீர்மானித்து அவள் அறையை தேடி நடந்தான். ஆரவ் அவளது அறைக்கதவை திறந்து நுழைந்த அடுத்த நோடி, தூரத்தில் இருந்து ஓடி வந்து அவனை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தான் யஷ்மித். யஷ்மித்திற்கு அவர்கள் இருவரும் காதலிப்பதே ஒரு சில நாட்கள் முன்பு தான் தெரிய வந்தது. இப்போது அவர்களுக்கிடையே நடந்தது எதுவும் தெரியாத யஷ்மித் வழக்கம் போல் தன் விளையாட்டு தனத்தை ஆரம்பித்தான்.

 

ஆரவ் அவனை கதவருகிலேயே தடுத்து நிறுத்தி, “என்னடா பண்ற? என்ன வேணும் உனக்கு?”

 

யஷ்மித், “சும்மாதான் பார்பிய பாக்க வந்தேன். ஆஸ்ட்ரேலியா போயிட்டு வந்ததில இருந்து பாக்குறேன், போன் பண்ணினா கூட பேசவே மாட்டிக்கிறா. இப்போ உன்கூட இங்க வந்திருக்கான்னு கேள்வி பட்டேன். அதான் கொஞ்ச நேரம் அவள பார்த்து பேசலாம்னு வந்தேன், தள்ளு..”

 

“இப்ப அவள பாக்க முடியாது. அவ தூங்குறா, வா நாம ரெண்டு பேரும் வெளிய போய் பேசலாம்”

 

“த்தோடா…. பெரிய கலெக்ட்ரு, தூங்கினா எழுப்ப கூடாதா, போடா…” பேசிக்கொண்டே இதற்குள் யஷ்மித் ரூம்மின் ஹாலைத்தாண்டி உள்ளிருக்கும் பெட்ரூம்க்குள் நுழைந்து விட்டான். பார்பி பெட்டில் தலை முதல் கால் வரை பெட்ஷீட்டால் மூடி சுருண்டு படுத்திருந்தாள்.

 

ஆரவ், “தூங்குறா பாரு, அவள டிஸ்டர்ப் பண்ணாம வாடா…” என யஷ்மித் கையை பிடித்து இழுத்து பார்த்தும், உதறிவிட்டு அவள் தலைப்பக்கமாய் இருந்த ஸோபாவில் அமர்ந்துகொண்டான்.

 

“ஹேய் குட்டிபிசாசு, எழுந்திரி. பியூச்சர் கேப்டன் ஆப் இன்டியன் கிரிக்கெட் டீம் வந்திருக்கேன்.” என்றபடி போர்வையை விலக்க, அழுது சிவந்த கண்களோடு கன்னம் லேசாய் வீங்கி இருக்க கூனி குறுகி படுத்து உறங்கி கொண்டிருந்தாள்.

 

பளார்…. என்ற சத்தம் அவள் காதை பிளக்க, விருட்டென எழுந்தமர்ந்து பார்க்கையில் ஆரவ் தன் கன்னத்தை தடவியபடி நின்றிருந்தான்.

 

யஷ்மித், “உனக்கு ரீஸன் எதுவா வேணாலும் இருக்கட்டும், ஒரு பொண்ண எதுக்காக கை நீட்டி அடிச்சிருக்க? அறிவில்ல? நீ எல்லாம் மனுஷனா?” கண்டிப்பாக அவன் கத்திய சத்தம் அறைக்கு வெளியில் வரை கேட்டிருக்கும், அத்தனை கோபமாய் இருந்தான் யஷ்மித். முதல் நாள் பார்பியை அடிக்க விரட்டிய விளையாட்டு பிள்ளையான யஷ்மித்துக்கும் இன்று அவள் கண் முன்னால் இறுகிப்போய் உடலை முறுக்கி ஆரவ்க்கு சரி சமம்மாக நிற்கும் யஷ்மித்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவிற்கு வித்தியாசம் இருந்தது.

 

ஆரவ், “அவ என்னோட வொய்ப். ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ப்க்குள்ள ஆயிரம் இருக்கும், எங்க விஷயத்துல தேவையில்லாம நீ தலையிடாத, நாங்க பேசி தீத்துக்குவோம்.”

 

“ஆயிரம் பாரதி வந்தாலும் என்ன பிரயோஜனம்? ஒரு பொண்ண கைக்குள்ள அடக்கி வச்சுதான் உங்க வீரத்த காட்டுவீங்க இல்ல? ஆம்பளையாடா நீ…”

 

அடுத்தடுத்து வந்த வார்த்தைகள் வரம்பு மீறி சென்றுவிட அவர்கள் கையால் பேச தொடங்கி இருவருக்கும் தள்ளுமுள்ளு உருவானது. இதுவரை பாட்டி ஞாபகம் தந்த துக்கத்தில் அங்கே நடப்பதை கவனிக்காமல் இருந்தவள், அதன்பின்அவசர அவசரமாக எழுந்து வந்து அவர்களை நிறுத்த முயன்றாள்.

 

“ஆரவ் ப்ளீஸ் அவன விடுங்க… யஷ்மித் வேணாம் நிறுத்து…” அவள் சமாதான வார்த்தைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. ரத்தம் வருமளவு அடிதடி கூடி கொண்டே போக, முட்டி மோதியும் உருண்டு புரண்டும் அவர்கள் சண்டை மேலும் வலுத்தே சென்றது. ஆரவ் பலம் கொண்ட மட்டும் யஷ்மித்தை தள்ளி விட அவன் தூரமாய் போய் விழுந்தான். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆரவ் அருகிலிருந்த கண்ணாடி ஜாடியை கையில் எடுக்க, பார்பி பயந்து போய், “ஆரவ் அவன விட்ரு, நான் மேரேஜ்க்கு ஒத்துக்கிறேன்.” என்றாள். அவள் வார்த்தையை கேட்டதும், ஆரவ் உறைந்து போய் நிற்க அவன் கையிலிருந்த ஜாடி நழுவி விழுந்து உடைந்தது.

 

பார்பி, விழுந்து எழுந்து வந்த யஷ்மித் கையை பிடித்து நிறுத்தி, “நீ இங்க இருந்து போ யஷ்மித்…” என இரண்டு கைகளாலும் தள்ளி வெளியேற்ற முயன்றாள்.

 

யஷ்மித், “அவன இன்னிக்கி நான் சும்மா விட மாட்டேன். என்ன தைரியம் இருந்தா உன்ன அடிச்சிருப்பான் அவன், கேக்குறதுக்கு ஆளில்லன்னு நினைச்சானா? அவன கம்பி எண்ண வைக்கிறேனா இல்லையானு பாரு…”

 

“வேணாம் யஷ்மித் நான் சொல்றத கொஞ்சம் கேளு, போலீஸ் வந்து கேட்டா நான் அவன் சொல்லி தந்ததைதான் சொல்லுவேன். என் குடும்பம் இப்ப அவன் கையில மாட்டியிருக்கு. அவன்கிட்ட பணம், பதவினு நிறைய பவர் இருக்கு, கொலை செய்ற அளவுக்கு துணிஞ்சிட்டான், என்னால அவன் சொல்றததான் கேக்க…..” எனும் முன் அவன் உக்கிரமாக,

 

“அப்டினா…. உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?”

 

தான் உளறிவிட்டதை உணர்ந்த அவள் கேவலுடன், “ஏற்கனவே என்னால நிறைய பேருக்கு பிரச்சனையா இருக்குடா, நீயும் அதுல சேர வேண்டாம். இனிமே இங்கிருந்து தப்பிச்சு போய் நான் காப்பாத்திக்கிற அளவு என்கிட்ட எதுவும் இல்ல. என்னோட விதி இதுதான் போல… இப்போ நம்ம டீம்ல இருக்குறவங்க எல்லாரையும் விட, எதிர்காலத்துல நீ பெரிய ஆளா வருவன்னு நிறைய பேர் ஆசைபடுறாங்க, எனக்கும் அதுதான் வேணும். என்னால உனக்கு எதுவும் ஆகிட கூடாது, இத இப்டியே விட்டுட்டு நீ போயிடு.”

 

யஷ்மித் ஆரவ்வை ஒருமுறை முறைத்து விட்டு பார்பியிடம், “வருவேன், உலகத்திலயே பெஸ்ட் ப்ளேயரா வரமுடியும் என்னால. ஒருநாள் எல்லாத்தையும் என்னோட கன்ட்ரோல்க்கு கொண்டு வந்துட்டு நான் உன் முன்னால வந்து நிப்பேன். அப்போ நான் வந்து கூப்ட்டா என்னை நம்பி நீ என்கூட வருவியா?”

Advertisements

2 Comments »

 1. Super story
  Romba interest a iruku
  Eppo next episode varum endu oru naalaki neraya thadava check panran
  Unga “naan un aruginile” story kooda romba nalla irundhichi
  Film patha madhiri oru feeling
  Manakkan LA apidiye padam ooditu
  Neenga innum neraya stories eludha vazhthukkal

 2. Seriously romba hurting iruku . Please please barbie sikirama purijika vaiga aarav pavam . Elarum aarav against ta irukuradu nala ila.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: