Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 43

பாகம் – 43

 

எப்பொழுது என்னில் கலந்தாய் நீ…!

என் பெயரின் இனிமையை

உன் குரலில் உணர்ந்த பொழுதிலா…

உன் விழி பேச்சினால் என்னை

விழுங்கிய பொழுதிலா…

 

உன் வாசத்தை உணர்ந்தே நீ இருக்கும்

திசையை அறிந்த பொழுதிலா…

தனிமையில் உன் நினைவால்

நான் தவித்த பொழுதிலா…

 

உறக்கத்திலும் உன் உருவத்தையே

கனவாய் கண்ட பொழுதிலா…

கூட்டத்தில் உன்னை மட்டுமே

என் விழிகள் தேடியலைந்த பொழுதிலா…

 

இருவரும் நடக்கையில் இயல்பாய்

நம் கைகள் இணைந்த பொழுதிலா…

உன் காதல் காந்தம் என்னை

ஈர்த்து இறுக்கிய பொழுதிலா…

 

உன் எச்சில் ருசி சுவைத்த பொழுதிலா

எப்பொழுது என்னில் கலந்தாய் நீ…!

 

என் காதலி எப்போதும் எனக்கு இனியவளே, அவள் சிரித்தாலும் முறைத்தாலும் என்னவளின் மேல் நான் கொண்ட காதலில் குறைவின்றி பார்த்துகொண்டேன். இப்போது அவள் உறங்கியதால் என் அறையே அமைதியாகி போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே, முத்தம் தர ஆசையிருந்தும் மூடிக்கொண்டு படுத்திருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. என்ன செய்ய அர்த்த ஜாமத்தில் நான் தப்பி தவறி அவளை எழுப்பினால் எனக்கு அடிதான் கிடைக்கும், அதுவும் ஏற்கனவே அவள் வீட்டை சுற்றி அடியாள் இருப்பதாய் சொல்லி அவள் மூக்குமேல் கோபம் வளர்த்து விட்டிருக்கிறேன். என்னவளின் புன்னகையையும் கோபத்தையும் ஒரு தராசில் வைத்து பார்த்தால், அங்கே தோற்பது என்னவோ நான்தான். என்ன வார்த்தை கொண்டு அதை விளங்க வைக்க? வேண்டுமானால் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தையிடம் வம்பிழுத்து அது கோபப்படுவதை பாருங்களேன்…. பழி சொல்லாத கண்கள், காயப்படுத்தாத வார்த்தைகள், இதுபோக கோபத்தின் போது அவள் புருவங்களின் நெறிப்பையும், சதிராடும் விரல்களின் விளையாட்டிலும் எனக்கு அவள்மேல் கோபத்தை விடுத்து தாபமே மேலோங்கும். ஒவ்வொரு சண்டையின் போதும் அவள் என்னை திட்ட வார்த்தைகளை தேடி தடுமாறுவதும், சில நேரங்களில் காரணத்தையே மறந்து, “ஆமா எதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சேன்?” என வாயில் விரல் வைத்து யோசிப்பதும் எனக்கு சர்க்கரை நிமிடங்கள். அந்த நேரத்தில் சிரிப்பை அடக்கி கொள்ள நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும், ஒருவேளை நான் சிரித்தால் என்னவள் அழத்தொடங்கி விடுவாள். மீதி இருக்கும் நான்கு மாதங்களும் இப்படியே ஊடலும் கூடலுமாய் இருந்தாலே போதும் எனக்கு.

 

ஏதேதோ கற்பனைகளில் மிதந்தவனுக்கு, அருகில் படுத்திருந்தவளிடம் லேசான அசைவு தெரிந்ததும் சமத்தாக கண்ணை மூடி உறங்குவதை போல நடிக்க, அப்படியே உறங்கியும் போனான். பார்பி ஆரவ் அறைக்கு குடி பெயர்ந்த பின் காலையில் அவள் எழும் முன்பே, கீழ்தளத்தில் இருக்கும் கிரவுண்ட்டில் அவன் தனது பிராக்டீஸை முடித்துவிடுவது வழக்கமாகி போனது. பொதுவாக பகல் நேரத்தில் வெளியில் ஏதாவது ஒரு வேலை வைத்திருப்பவன், செக்கப் முடித்து வந்த அடுத்த நான்கு நாட்கள் வெளியே எங்கும் செல்லாமல் அவளுடனேயே இருந்தான். அதற்கடுத்த ஐந்தாம் நாள் முழுவதும் விதி எனும் அரக்கன் அவர்களுடன் விளையாடி தீர்க்க காத்திருந்தது…

 

அடுத்த நாள் காலையில் பார்பி எழும் நேரம் அவன் அவசர அவசரமாக தயாராகி கொண்டிருந்தான். ஆரவ், “செல்லம், இன்னிக்கி ஒருநாள் மட்டும் நீ சமத்தா நீயே சாப்ட்டு நீயே டேப்ளட் போட்டு ரெஸ்ட் எடுத்துக்கனும்டா. எனக்கு இன்னிக்கி நம்ம ஹோட்டல்ல மூணு மீட்டிங் இருக்குது, இனிமே வீக்லி ஒன்ஸ் இப்டி இருக்கும். தனித்தனியா மீட்டிங் வச்சா உன்ன கவனிச்சுக்க முடியலனுதான் மொத்தமா ஒரே நாள்ல வைக்கிறேன். நீ புரிஞ்சுகிட்டு ஒழுங்கா இருந்தா ஈவ்னிங் வேலை முடிஞ்சு வந்ததும் பைக்ல நான் உன்னை அவுட்டிங் கூட்டிட்டு போவேன், ஓகேவா… நீ  ஒழுங்கா சாப்பிடாம சேட்டை பண்ணிணா எனக்கு உடனே தெரிஞ்சிடும், பாய்டா” என்று அவள் புரிந்து கொள்ளும் முன் அவள் நெற்றியில் ஒரு அவசர முத்தத்தையும் தந்துவிட்டு பறந்துவிட்டான்.

 

அவன் சென்றதும் எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து பார்பி சாப்பாட்டில் கை வைத்த நேரம், கதவு படார்.. என்ற சத்தத்தோடு திறந்து கொண்டது. வந்த வேகத்தில் பிரியங்கா பார்பியின் கையை பிடித்து திமிற திமிற இழுத்துக்கொண்டு சென்றாள். பார்பி “வேண்டாம் அண்ணி, ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க. என்னால இப்ப இங்க இருந்து போக முடியாது….” என்று கெஞ்சியதெல்லாம் வீண்.

 

பார்பி பேசியது எதையும் பிரியங்கா கவனிக்காமல், “தயவு செஞ்சு இந்த வீட்ட விட்டு போயிடு. எங்க அண்ணனுக்குனு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குது, அது உன்னால பாழாயிடுமோன்னு எனக்கு பயம்மா இருக்கு. முன்னெல்லாம் அவன் தான் உண்டு தன் கிரிக்கெட் உண்டுன்னு இருந்தான். ஆனா நீ வந்ததில இருந்து அவன் ஏதோ அண்டர் கிரவுண்ட் தாதா மாதிரி மாறிட்டு இருக்கான். போலீஸ், பொலிட்டீசியன்னு நிறைய பேருகூட லிங்க் வச்சிருக்கான், இப்ப புதுசா ரவுடிங்க சகவாசம் வேற. நான் எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சுக்காம அவன் வாழ்க்கைனா காதல் மட்டும்தான்னு நினைச்சுகிட்டு இருக்கான், ஆனா அதுக்கு பிறகு குடும்பம் குழந்தைனு பிரச்சனை வரும்போது வாழ்க்கை இதே மாதிரி இனிக்காது. உன்ன மாதிரி பணத்தாசை புடிச்ச, படிப்பறிவு இல்லாத, மெச்சூரிட்டி இல்லாத, குடும்பம் இல்லாத, ஆம்பளைங்க கூட ஊர் ஊரா சுத்துற பொண்ணு அவன் தகுதிக்கு சரிப்பட்டு வராது. வேணும்னா உன் கால்ல கூட விழுறேன், இதுக்குமேல என்னால கெஞ்ச முடியாது. இந்தா, இந்த பெட்டி நிறைய பணம் இருக்குது, திரும்பி வராத, தயவு செஞ்சு இங்கிருந்து போயிடு….” இதற்குள் வாசல் கேட் வந்திருந்தது.

 

பார்பியை வெளியே தள்ளிவிட்டு கதவை இழுத்து பூட்டி விட்டு சென்றாள் பிரியங்கா. நடுத்தெருவில் காலில் செருப்பு கூட போடாமல் பணப்பெட்டியோடு தலைவிரி கோலமாய் நின்றிருந்தாள், அந்த அரண்மனைக்கு சொந்தக்காரி. ஆம், ஆரவ் தன் உயிருக்கு ஆபத்து என்று என்றைக்கு தெரிந்து கொண்டானோ அப்போதே அவள் எதிர்கால நன்மைக்காக சில முக்கிய சொத்துக்களை அவள் பெயருக்கு மாற்றிவிட்டான், அதில் ஒன்றுதான் இந்த வீடும். ‘இன்னும் எவ்ளோ நேரம் இங்க நிக்கிறது?’ என நினைத்தவள் அந்த பெட்டியை வாட்ச்மேனிடம் தந்து, “இத உள்ள குடுத்திட்டு நான் போயிட்டேன்னு சொல்லிடுங்க….” என்றாள்.

 

ஆரவ்க்கு காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் பதினோரு மணிக்கே முடிந்தது. அவன் ஹோட்டலிலேயே மீட்டிங் நடந்ததால், அதன்பின் தன் பர்சனல் ரூம்க்கு வந்ததும் கண்கள் தானாய் அவள் முகம் காண கெஞ்சிட, லேப்டாப்பை தேடினான். ‘இந்நேரம் சாப்பிட்டுட்டு தூங்கி இருப்பா’ என்று நினைத்தவனுக்கு, கதவு திறந்தபடி கிடக்க அவள் அங்கே இல்லாதது தூக்கி வாரிப்போட்டது. வேகவேகமாக காலை முதல் நடந்ததை ப்ளே செய்து பார்க்க, ஆரவ்க்கு அனைத்தும் புரிந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரியங்காவின் மீது கோபம் எல்லை தாண்டி போக முகம் இறுகிப்போய், மிருகமாய் மாறியவன் மனதளவில் இன்றோடு தங்கை என்ற உறவையே அறுத்தெறிந்து விட்டான்.

 

பகல் நேரமாதலால் டிரைவருடன் வந்திருந்தது வசதியாகிப்போக, வழிநெடுக சாலையின் இரண்டு பக்கமும் கழுகு பார்வையை வீசி அவளை தேடியபடி வந்தான். அவள் தன்னை விட்டு நிச்சயம் போக மாட்டாள் என்று அவனுக்கு தெரியும், தன்னைத்தான் தேடி வந்து கொண்டு இருப்பாள் என்று உறுதியாக நம்பினான். வீட்டின் அருகில் வந்தாகிவிட்டது, இன்னும் அவள் அவன் கண்களில் படவில்லை. இருந்தும் அவன் மனம் தளராமல் இருக்க காரணம் தன்னவள் நிச்சயம் தனக்காக எங்கோ காத்திருக்கிறாள் என்பது மட்டும் அசரீரி போல கேட்டு கொண்டே இருந்ததுதான்.

 

அவன் நினைப்பது சரிதான், காலையில் பார்பி ‘இதுக்குமேல இங்க நின்னா பாக்குரவங்க எதாவது தப்பா நினைப்பாங்க’ என்றெண்ணி அங்கிருந்து நகர்ந்தாள். ‘இதபத்தி தான் அன்னிக்கு குரு எனக்கு சொல்லி இருந்திருக்காரு, என் விதி அன்னிக்கி அவரு அன்பா சொல்லும் போது எனக்கு புரியல. இன்னிக்கி வலிக்க வலிக்க அடிச்சு சொல்லி குடுக்குறதுக்காக கடவுள் இன்னொரு ஆள அனுப்பிட்டாரு போல. இப்ப நான் புரிஞ்சுகிட்டு என்ன பிரயோஜனம்? எல்லாமே என் கட்டுப்பாட்டை மீறி போயிடுச்சே… அவன மீறி போக தைரியம் இல்லாத கோழை நான்…’

 

குடும்பம் குழந்தைகள் என்ற வார்த்தைகள் அவளுக்கு இதுவரை தான் யோசிக்காத புதிய கோணத்தில் வாழ்க்கையை முன் நிறுத்த, முதன் முறையாக பார்பி யோசிக்க தொடங்கினாள். எத்தனை முறை முயன்றாலும் அவள் யோசனையின் முடிவு ஒரே புள்ளியில் வந்து நிற்கும் படி ஆனது. ‘ஒருவேள நான் கர்ப்பமா இருக்குறேனோ? எப்டியும் அது நடந்து ஒரு மாசம் ஆகிருக்கும். பீரியட்ஸ் வேற வரவே இல்ல. ஆரவ் வேற எனக்கு உடம்பு சரி இல்லன்னு அடிக்கடி சொல்றான். ப்ளட் டெஸ்ட் எடுத்த அன்னிக்கி அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான், கிப்ட் கூட குழந்தைங்க ஐட்டமாவே குடுத்தான். என் வீட்டுக்கு நாலு மாசம் கழிச்சு குழந்தை நல்லா வளர்ந்த பிறகு கூட்டிட்டு போனா, அவங்கள ஈசியா சமாளிச்சிடலாம்னு நினைக்கிறானோ?’

 

யோசனையோடு தெருமுனை வரை வந்தவள் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைவாக நின்றாள். அவளுக்கு பசி, சோர்வு அனைத்தையும் மறக்கடிக்கும் வகையில், மனதில் மீண்டும் மீண்டும் குழந்தை என்ற வார்த்தை ரீங்காரமிட்டது. ‘இதுநாள் வரைக்கும் என் குடும்பத்த பத்தி மட்டுமே யோசிச்சேனே தவிர என் குழந்தைய பத்தி யோசிக்கலயே… வாழ்க்கை இதே மாதிரி இருந்தா ஒருநாள் என் குழந்தையும் இப்டி தெருவுல நிக்க வேண்டி வருமே… வளர வளர குழந்தை எங்களோட வாழ்க்கைய பத்தி கேள்வி கேட்குமே… மத்தவங்க எதாச்சும் தப்பு தப்பா சொன்னா என்ன ஆகுறது? நான் இப்ப என்ன முடிவெடுக்குறதுன்னு தெரியலயே’ எதிர்காலம் சிக்கலான பாதையாக தோன்ற, கை பிசைந்து நின்றிருந்த நேரம் ஆரவ் கார் வந்தது.

 

ஆரவ் கண்களுக்கு இன்னும் அவள் தென்படவில்லை. அடுத்த தெருவில் வீடும் வந்துவிடும். எங்கே போனாள் அவள்? கார் தெருவை நெருங்கும் நேரம் மரத்தின் மறைவிலிருந்து அவள் வெளிப்பட்டதும், ஆரவ் கொஞ்சமும் யோசிக்காது ஓடும் காரிலிருந்து இறங்கி ஓடிச்சென்று அவளை தாவி அணைத்து கொண்டான். அவன் இறங்கியதை கவனித்த டிரைவர் வேகமாக நிறுத்தியும் கார் அவர்களை விட்டு பத்தடி தள்ளியே நின்றது.

 

“ஏன்டி இங்க நிக்கிற? என்னை பார்க்க ஹோட்டல்க்கு வந்திருக்கலாம்ல? நான் உன்ன வர்ற வழி எல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்றதுக்கு பதில் சொல்லாமல் குனிந்து அவள் டிரஸ்ஸை பார்த்தாள். ஒரு டீ ஷர்ட்டும் 3/4த்தும் அணிந்திருந்தாள். ஆம், இதோடு அவன் இருக்கும் இடம் வரை வந்திருக்க முடியாது என புரிந்ததும், “சரி வா வீட்டுக்கு போகலாம்.” என்றான். அவள் தத்தி தத்தி நடந்து வர, ஆரவ் அவளின் காலை கவனித்தான். செருப்பில்லாமல் நடந்து வந்ததால் ஏதோ பாட்டில் குதி காலை லேசாய் குத்தி கிழித்திருந்தது.

 

பார்பி, “தப்பு என் மேலதான், ஏதோ ஞாபகத்தில கவனிக்காம மிதிச்சுட்டேன். லேசா குத்திடுச்சு…” என்றாள். ஆரவ் அலுங்காமல் அவளை தூக்கி காரில் ஏற்றி தானும் ஏறியதும் கார் சத்தமின்றி வீட்டிற்குள் நுழைந்தது. வீடே அமைதியாக இருக்க பிரியங்கா சாரதாம்பாள் இருவரும் ஹாலில் டீவி பார்த்து கொண்டிருந்தனர். ஆரவ் பார்பியை தூக்கி வந்து ஹாலில் இருந்த ஸோபாவில் படுக்க வைத்தான். ஆரவ்வின் கோபம் நிறைந்த முகத்தை பார்த்ததும் பிரியங்கா பயந்து தானாக எழுந்து நிற்க, சாரதாம்பாள் சட்டமாய் அமர்ந்திருந்தார்.

 

ஆரவ் அவர்களின் முன்னால் வந்து நின்று, “ஏன் பிரியங்கா இப்டி செஞ்ச?” என்றான்.

 

“நான் எதுவும் பண்ணல, அவ உன்கிட்ட வந்து என்ன வத்தி வச்சா?”

 

பார்பி ‘எனக்கும் இங்கு நடப்பதுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று தலையை குனிந்தபடி இருந்தாள். ஆரவ் ஒரு நெடிய பெருமூச்சை விட்டு திரும்பி நடந்த அடுத்த நொடி, அந்த பெரிய டீவி விழுந்து உடைந்து சல்லி சல்லாயாக நொறுங்கியது. பார்பி அரண்டு போய் அவனை பார்க்க, சாரதாம்பாளும் பயந்து எழுந்து ஒதுங்கி நின்றார். பிரியங்கா தன் பயத்தை மறைத்து, “ஆமா, நான் தான் அவள வீட்டை விட்டு வெளியில அனுப்புனேன். எனக்கு அவ இந்த வீட்ல இருக்குறது புடிக்கலன்னு எத்தன தடவ சொல்றது? நான் கண்டிப்பா அவ உன்ன கல்யாணம் பண்ண விட மாட்டேன்.”

 

ஆரவ் மிரட்டும் குரலில், “எனக்கும் அவளுக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகி பத்து நாள் ஆச்சு. என்னோட சொத்தை எல்லாம் நான் அவ பேருக்கு எப்பவோ மாத்திட்டேன். இது பார்பியோட வீடு, நான் பார்பியோட ஹஸ்பெண்ட். உனக்கு இந்த வீட்டு மேலையோ என் மேலையோ துளி கூட உரிமையில்ல. நீ இந்த வீட்டுக்கு வர்றது இதுவே கடைசியா இருக்கனும், இத்தனைக்கு அப்புறமும் நான் பேசிட்டு இருக்க ஒரே காரணம் நீ இன்னொருத்தருக்கு சொந்தமானவங்கிறது மட்டும்தான். பார்பி இதுவரைக்கும் உன்ன பத்தி என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல, சொல்லி இருந்தா நான் அவ சொல்றபடிதான் நான் நிச்சயமா கேட்டு இருப்பேன். ஒருவேள இப்ப, இந்த நிமிஷம், அவ இந்த வீட்ட விட்டு நீ வெளிய போகனும்னு சொன்னா கொஞ்சம் கூட யோசிக்காம நானே உன் கழுத்த பிடிச்சு வெளியில தள்ளிடுவேன்.”

 

அவன் முதலில் ரெஜிஸ்டர் மேரேஜ் பற்றி சொன்னதையே நம்ப முடியாமல் பிரமை பிடித்து இருந்த பார்பியிடம் பிரியங்கா, “இதுதான உனக்கு வேணும்? இதுக்குத்தான நல்லவ மாதிரி நடிச்சு எல்லாரையும் ஏமாத்தின? எங்களோட சொத்த புடிங்கிட்டு எங்களையே விரட்டுறேல. உனக்கு உதவி செஞ்சவன் குடும்பத்தையே இப்டி குழி தோண்டி புதைக்க பாக்குரியே, நீ எல்லாம் ஒரு பொண்ணா?” என்றாள்.

 

பார்பி ஒரு விரக்தி புன்னகையோடு ஆரவ் முகத்தை பார்த்தாள், அதில் ஆயிரம் பொருள் புரிந்தது அவனுக்கு. இந்த கேள்விகளெல்லாம் அவனுக்கும் பொருந்தும் இல்லையா…

 

பிரியங்கா ஆரவ்விடம், “இவ பேச்சை கேட்டு ஆடாத, உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னுதான் நான் இப்டி எல்லாம் செய்றேன், புரிஞ்சுக்கோ…”

 

ஆரவ் இன்னும் பார்பியிடம் இருந்து பார்வையை விலக்காமல் இருக்க, பிரியங்காவின் கண்களுக்கு ஆரவ் சூனியக்காரியிடம் மாட்டிய இளவரசனாக தெரிந்தான். அவள் அழுது அரற்றியபடி, “முடியாது… என்னால உன்ன இப்டியே விட்டுட்டு போக முடியாது. நான் போய் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுக்க போறேன். இவ உன்னை ஏமாத்தி சொத்தை எழுதி வாங்கிட்டான்னு சொல்லுவேன். இவ உன்னை கொலை பண்ண பாக்குறான்னு சொல்லுவேன். அப்பவும் எதுவும் மாறலன்னா நானே இவள கொன்றுவேன். ஒரு தங்கச்சியா என்கூட பொறந்த அண்ணன என்னால அம்போன்னு விட முடியாது.”

 

ஆரவ் வலி நிறைந்த குரலில், “நீ என் கூட பொறக்கல பிரியங்கா… உன் அம்மாவ கூட்டிட்டு என் வீட்டை விட்டு வெளியில போ..”

 

பார்பி, “ஆரவ் வேணாம்…” என தடுக்க நினைத்தாள், ஏற்கனவே தலைக்கு மேல் வெள்ளம் போனபின் அவள் தடுத்தும் பிரயோஜனம் இல்லை. ஆரவ் சொன்னதை கேட்ட பிரியங்கா சில நிமிடங்கள் சிலையாகி உறைந்து போனாள்.

 

பார்பியை கையில் தூக்கி கொண்ட ஆரவ், “உதவி செஞ்ச குடும்பத்த குழி தோண்டி புதைச்சது யாருன்னு உன் அம்மாவ கேட்டு தெரிஞ்சுக்கோ…” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றான். பார்பி காலுக்கு மருந்திட்டு விட்டு, சாப்பாடும் டேப்ளட்டும் தந்தான். இடையே பார்பி பேச முயற்சித்தாலும் அவளை தவிர்த்து விட்டான். அவளை டிரஸ் சேஞ்ச் செய்ய சொல்லி தன்னுடனே அழைத்து செல்லும் எண்ணத்தில் தூக்கி கொண்டு கீழிறங்கி வர, ஹாலில் பிரியங்கா ஓய்ந்து போய் கிடந்தாள்.

 

ஆரவ் பிரியங்காவிடம், “உங்க அம்மா உனக்கு எவ்ளோ தூரம் உண்மைய சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. நீ ஷர்மா அங்கிள்கிட்ட மத்த டீடெயில்ஸ் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கோ. உங்க தகுதிக்கி நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்குள்ள இருக்குறது எனக்கு பிடிக்கல. நைட் நாங்க வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் வீட்டை காலி பண்ணிடனும், அன்ட் முக்கியமா எந்த காஸ்ட்லியான திங்சும் உங்க லக்கேஜ்ல இருக்க கூடாது…” என்றான். இடையிடையே பார்பி அவன் வாயை மூடி பேசாமல் இருக்க செய்ய முயன்றாலும், அவன் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

 

‘அத்தனையும் அன்னிக்கி நான் பார்பிய சொன்ன அதே வார்த்தைகள், அத இன்னிக்கி என் மேலயே திருப்பி எறிஞ்சுட்டு போறான்…’ என புரிய பிரியங்கா தலை குனிந்து நின்றாள்.

 

ஹோட்டலை அடைந்ததும் தயாராக இருந்த வீல் சேரில் அவளை அமர வைத்து தன் பெர்சனல் ரூமிற்கு அழைத்து சென்றான். அவளை அங்கேயே இருக்க வைத்துவிட்டு தேவையான ஜீஸ் வகைகளை வரவைத்தான். அவளுக்கு அவனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருப்பது புரிந்த போதிலும், நேரம் ஆகிவிட மதியம் இருக்கும் இரண்டாவது மீட்டிங்கை அட்டர்ன் செய்ய அவன் சென்றுவிட்டான்.

 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து வந்தவன் வழக்கம் போல் இல்லாமல் பயங்கர டென்ஷனோடு இருப்பதாய்பட்டது அவளுக்கு. நிதிஷ்க்கு போன் போட்டு ஈவ்னிங் மீட்டிங்கை வேறொரு நாள் மாற்றி வைக்க கேட்டு கொண்டிருந்தான்.

 

“என்ன ஆச்சு ஆரவ்? பிரியங்காவுக்கு ஒண்ணுமில்லையே….”

 

“இல்ல.. அவளுக்கு ஒண்ணுமில்ல..”

 

ரூம்க்கு ஜீஸ் வந்தது, அதை அவள் புறம் நீட்டி “இத முதல்ல குடி அப்புறமா சொல்றேன்….”

 

அவள் குடித்து முடித்ததும், ஆரவ் தன் போனை அவளிடம் தந்தான். அவள் கிராமத்து வீட்டை சுற்றி ஒரே கூட்டமாக இருக்க, புரியாமல் அவள் அவனை பார்த்தாள். ஆரவ் அவள் தோள்களை இறுக அணைத்து கொண்டு, “ஐ ஏம் சாரி பார்பி, உன் பாட்டி இன்னிக்கி காலைல இறந்து போயிட்டாங்க……” என்றான்.

 

விஷம சிரிப்போடு அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விதியோ, ‘பாவம் உங்களுக்கான இந்த நாள் இன்னும் முடியலையே…’ என நினைத்து இன்னும் கோரமாய் சிரித்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: