Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 7

அத்தியாயம் – 7

ஜெய் காண்பித்த புகைப்படத்தில் அவளது தந்தை மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது கண்கள் ஏதோ ஒரு பயங்கரத்தைக் கண்டதை போல திகிலைக் காட்டின.

 

“ஏன்  உங்கப்பா கண்ணு இப்படி நிலைகுத்தியிருக்கு. மிருகம் ஏதாவது பக்கத்தில் வந்ததா”

 

“நிச்சயம் மிருகமா இருக்க வாய்ப்பே இல்லை… இந்த இடம் வழக்கமா ஆட்கள் நடமாட்டம் குறைவு. பக்கத்தில் ஆறு வேற. அப்பா என்னை சாப்பாட்டை எடுத்து வைக்க சொல்லிட்டு குளிச்சுட்டு வந்தார். வந்தப்பவே அவர் முகம் பேயறைஞ்ச மாதிரிதான் இருந்தது. அப்பத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். உடனே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டுக் கிளம்ப சொல்லி அவசரப் படுத்தினார். ஏன் எதுக்குன்னு கேட்டதுக்கு என்னமோ சொல்லி மழுப்பிட்டார். இது நடந்து ஒரு வாரத்துக்குள்ள அவர் என்னை விட்டுப் போயிட்டார்”

 

“அந்த இடத்தில் என்னவோ நடந்திருக்கு.நம்ம அங்க போனால் இப்ப நடக்கும் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு தோணுது ” என்றான் ஜெய் தீவிரமாக.

 

நடந்த சம்பவங்களைப் படமாக ஓட்டிப் பார்த்த அஞ்சலிக்கு அவள் வாழ்வே மாறிப் போனது அந்த கணத்திலிருந்துதான் என்று தோன்றியது. சந்தோஷத்தைத் தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.

 

“எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரமா கிளம்பலாம்” என்றாள் அஞ்சலி அதே தீவிரத்துடன்.

 

அடுத்த சில நாட்களில் பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் பாதையில் சில்வர் நிற ஹோண்டா சிட்டி விரைந்தது. ஜெய் ஓட்ட அஞ்சலி அவனருகே முன் சீட்டில் அமர்ந்திருந்தாள்.

 

“வழக்கமா பெங்களூர் எப்படி வருவ? பிளைட், கார்?”

 

“ட்ரைவ்”

 

வியப்பில் கண்கள் விரிந்தன.

 

“நீயே ட்ரைவ் பண்ணுவியா”

 

“உன் காரை என்கிட்டே கொடுத்துப் பாரேன். என் டிரைவிங் திறமையைக் காட்டுறேன்”

 

“புது கார்… எதுக்கு ரிஸ்க் விட்டுரு”

 

“எந்த வழியா போறோம்”

 

“பங்காருபேட், குப்பம் வழியா பர்கூர்ல என் ஹச் ரோட்டில் சேர்த்துக்கலாம்” அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அந்த ஆள் அரவமில்லாத ரோட்டில் ஒரு ஸ்கார்பியோ கார் ஒன்று அவர்களது காரை வம்படியாக முந்திச் சென்று வழி மறித்தது. சட்டென பிரேக் போட்டு நிறுத்திய ஜெய்.

 

“குனிஞ்சு படுத்துக்கோ” என்று இரும்புக் குரலில் உத்தரவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீன்ஸிலிருந்து கைத்துப்பாக்கியை உருவினான். கச்சிதமாக அந்தக் காரின் டயரைப் பஞ்சராக்கினான். பதிலுக்கு அங்கிருந்து பறந்து வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனது தோள்பட்டையை உரசிச் சென்றது. மறுபுறம் குனிந்த ஜெய் கார் கதவைத் திறந்து அதனைக் கேடயமாக்கி அதன் பின்னிருந்து அந்தக் காரிலிருந்து சுட்டவனின் தோள்பட்டையில் குறிபார்த்து சுட்டான். அது அவனது தோள்பட்டையைத் துளைக்க, மற்றொருவன் கண்ணாடியை சிதறடிக்க, அவனது மணிக்கட்டு ஜெய் சுட்ட குண்டு பட்டு கீழே விழுந்தது.

 

அந்தப்பக்கமாக ஒரு லாரி வர, அதன் பின்னே சில வாகனங்களும் அணிவகுக்க, ஸ்கார்பியோ விரைந்து மறைந்தது.

 

“அவங்களால ரொம்ப தூரம் போக முடியாது.. க்விக் போயி பிடிச்சுடலாம்” அவசரப்படுத்தினான்.

 

“ஜெய் உன் கையில் ரத்தம்…” கார் கண்ணாடி கிழித்து ரத்தம் வடிந்தது அவனது கைகளில்.

 

“அவனுங்க எப்படியோ தொலையட்டும். இப்போதைக்கு உனக்கு மருத்துவ உதவி தேவை” என்று உறுதியாய் சொன்னாள் அஞ்சலி.

 

ரத்தத்தை நிறுத்த என்ன செய்வது. சற்றும் யோசிக்காமல் அவளது துப்பட்டாவைக் கழற்றி அவனது காயத்தில் கட்டு போட்டாள்.

 

“இங்க பக்கத்தில் ஹாஸ்பிடல் இருக்கா… “ விசாரித்து அழைத்து சென்றாள்.

 

வழியில் அவர்களைத் தாக்கிய ஸ்கார்பியோவை ரோட்டில் அம்போவென நிறுத்திவிட்டு அதில் பயணித்தவர்கள் அப்ஸ்காண்ட் ஆயிருந்தனர்.

 

“வேறு வண்டில போயிருப்பாங்க. இந்த ஸ்கார்பியோ கூட திருட்டு வண்டியா இருக்க வாய்ப்பிருக்கு. எதுக்கும் என் பிரெண்டுக்கு இதை போட்டோ எடுத்து அனுப்புறேன்” என்றபடி வாட்ஸாப்பில் அனுப்பினான்.

 

“காயம் ஆழமா பட்டிருக்கு. அஞ்சாறு தையல் போடவேண்டி வரலாம். ஒரு ரூம் தர்றோம். அவரோட உடல் நிலையைப்  பார்த்துட்டு கிளம்புங்க” என்றனர் மருத்துவமனையில்.

 

“தெப்ட், காயம், ஆக்சிடென்ட் மாதிரி கேஸ்களை நாங்க மறுக்காம ட்ரீட் பண்ணாலும் போலீஸ்ல சொல்றது எங்க மருத்துவமனையின் நடைமுறை. அதனால இந்த கன்ஷூட் பத்தித் தகவல் சொல்லிட்டோம். போலிசுக்கு ஒத்துழைப்பைத் தாங்க” நர்ஸ் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டினாள்.

 

வழக்கம்போல போலிஸ் வந்து விசாரிக்க அஞ்சலி சொன்ன பதில்கள்  குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்று  அவளுக்கே நம்பிக்கை தரவில்லை. சிகிச்சைக்கு முன்பே போலிஸ் விசாரணைக்கு வந்துவிட்டதால் வலியைப் பொறுத்துக் கொண்டு ஜெய்யும்  பதில் சொன்னான்.

 

“ஸ்கார்பியோல  வந்தவங்க திடீருன்னு வழிமறைச்சு துப்பாக்கியால் சுட ஆரம்பிச்சுட்டாங்க. ஏன் எதுக்குன்னு இன்னமும் தெரியல சார். இது மாதிரி முன்னாடி நடந்திருக்கா. ஒரு வேளை கொள்ளை முயற்சியா இருக்குமோ” என்று அவர்களையே திருப்பிக் கேள்வி மேல் கேள்வி கேட்டான் ஜெய்.

 

போலீசார் அந்தக் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தனர். “இருக்கலாம் சார். நாட்டில் கொலை கொள்ளை ஜாஸ்தியாயிடுச்சு. ஆனால் துப்பாக்கி சண்டை நம்ம பக்கம் பழக்கமில்லை. புதுசா வந்த வடநாட்டு ‘க்ரூப்’பா இருக்கலாம். நாங்க அந்தக் கோணத்திலும் விசாரிக்கிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.

 

அஞ்சலி பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் உடைந்த கண்ணாடியை சரிசெய்து, சுத்தப் படுத்தித் தர சொன்னாள்.

 

இடையில் ஜெய்க்கு  செடேட்டிவ் கொடுத்து தையல் போடப்பட்டது. அதன்பின் நன்றாக ஓய்வெடுக்க சொன்னார்கள்.

 

மாலை இருட்டியதும்.“ அவர் காலைல பயணத்துக்கு தயாராயிடுவார்” என்றனர். அஞ்சலி ஜெய் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்க அவளது வாகனமும் பழுது நீக்கப்பட்டு வந்தது.

 

காரை ரிப்பேர் செய்ய மெக்கானிக் கேட்ட பணத்தைப் பார்த்து அதிர்ந்தவள் “ஏன்பா ஒரு கண்ணாடி மாத்தினதுக்கா இவ்வளவு சார்ஜ் பண்ணிருக்க” என்றாள் சற்று கோபத்துடன்.

“நீங்க முன்னாடி உடைஞ்ச கண்ணாடியை மட்டும்தான் பாத்திருக்கிங்க மேடம். ஏன்னா அதுதான் உங்க பார்வையில் பட்டிருக்கும். அதிர்வில் அதுக்குப் பக்கத்துக் கண்ணாடியும் விரிசல் விட்டிருந்தது. ஒரு பக்கம் பெயர்ந்து வேற இருந்தது. அதையெல்லாம் காரில் ஒரே கோணத்துல பார்த்ததால் நீங்க கவனிச்சிருக்க மாட்டிங்க.  காரைவிட்டு இறங்கி வெளிய நின்னு பாத்திருந்தால் தெரிஞ்சிருக்கும் மேடம்” என்றான்.

 

அவன் கேட்ட பணத்தைக் கொடுத்த அஞ்சலிக்கு  அவன் சொன்ன வார்த்தைகள் யோசிக்க வைத்தது.

 

‘பிரச்சனையை தள்ளி நின்னு பார்த்தா தெளிவு உண்டாகுமோ?’ ஜெய் தூங்குவதைக் கண்டு கண்மூடி யோசித்தாள்.

 

போலீஸ் விசாரணையின் போது ஜெய் கொள்ளை முயற்சின்னு சொன்னானே. முதலில் துப்பாக்கியை அவங்க மேல பிரயோகம் பண்ணது கண்டிப்பா ஜெய் தான். ஆனால் அவங்கதான் முதலில் சுட்டதா ஏன் பொய் சொன்னான். இது நிஜமான மறதியா இல்லை எதையோ மறைக்கிறானா…

 

அவன் துப்பாக்கியை எடுத்த லாவகத்தையும் வேகத்தையும் பார்த்தா ஒரு தன்னிச்சை செயல்மாதிரி இருந்ததே.அஞ்சலிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

 

இரண்டுமுறைகள் தந்தையைப் பார்த்தபோது கூட ஜெய் அருகில் இருந்தானே. அது நிஜமாகவே என் தந்தைதானா இல்லை யாரோ என் மனத்தைக் குழப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறாங்களா… அந்த யாரோ ஜெய்யா? தலை சுற்றியது அவளுக்கு….

தன் தந்தை சொல்லியதை நினைவுபடுத்தி மனதுக்கு சொன்னாள்.

‘சில சமயம் உன்னால் முடிவெடுக்க முடியாத நேரத்தில் உன் உள்ளுணர்வை நம்பு. ஆனால் குழம்பிய மனசில் எதுவும் தெளிவா தெரியாது. மனசில் இருக்கிறதை எல்லாம் வெளியத் தூக்கிப் போட்டுட்டு புதுசா பொறந்த மாதிரி கொஞ்ச நேரம் வெளிய நடக்கும் விஷயங்களை கவனி. உன் மனசே ஆட்டோ கரெக்ட் ஆயிடும்’

அமைதியாய் உறங்கி கொண்டிருக்கும் ஜெய்யைப் பார்த்தாள்.

 

இவனை எத்தனை தூரம் நம்பலாம். இப்ப நான் என்ன செய்யணும். இங்கிருக்கணுமா இல்லை எக்கேடோ கெட்டுப் போன்னு கிளம்பிடலாமா?

 

திடீரென மயக்கத்தில் ஜெய் உணர்வில்லாது  அனத்தினான். அவனருகே சென்று என்ன சொல்கிறான் என்று கவனித்தாள்  “அஞ்சலி, அஞ்சலி… “

 

அவன் உணர்வில்லாத அந்த நேரத்திலும் தன் பெயரை சொன்னது என்னவோ செய்ய “ஜெய்… நான் இங்கதான் இருக்கேன். நிம்மதியா தூங்குங்க” தலை முடியைக் கோதினாள்.

 

அவளது ஸ்பரிசம் தந்த ஆறுதலில் ஜெய் அமைதியானான். மெதுவான சீரான மூச்சு அவன் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனதை சொல்ல.

 

அவன் முடிகளை மென்மையாக தந்து பொன் விரல்களால் வருடியபடி அவளது மனம் சொல்வதைக் கேட்டாள்.

‘அஞ்சலி இந்த நிமிஷம் இவனை நம்பலாம். ஆனால் இவன் மேல முழு நம்பிக்கை வைக்கலாமான்னு தெரியல. போலீஸ்கிட்ட என்னமா பச்சபொய் சொல்லி கேசையே திசை திருப்புறான்.

இவன் பொய்யான ஆளான்னு தெரியணும்னா அவன் சொன்ன பூர்வீகம் எல்லாம் உண்மைதானான்னு கண்டுபிடி. அவன் குடும்பம் பத்தின கதை உண்மையா இருந்தா ஒரு வேளை இவனும் உண்மையானவனா இருக்க சந்தர்ப்பம் இருக்கு. நாளைக்கு முதல் வேலையா சந்தானம் அங்கிளை இவன் அசந்த நேரமா கூப்பிட்டு இவனைப் பத்தி விசாரிக்க சொல்லு’

 

ஒரு முடிவுக்கு வந்த நிம்மதியோடு அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்தபடி  நித்திரை கொண்டாள் அஞ்சலி.

2 Comments »

  1. Love story ipidi thrilling ave poikittu iruku.dei jai unaku in the story la romance ku chance ila may be better luck next time.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: