Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 40

பாகம் – 40

ஆரவ்விடம் இருந்து போன் வந்த அடுத்த நொடி, இரவு நேரம் என்றும் பாராமல் ஷர்மா அங்கிள் அந்த பங்களாவினை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். ஹாலில் இருந்த பெட் மாடல் ஸோபாவில் பார்பி படுத்திருக்க ஆரவ் அவள் தலை மேட்டில் கூந்தலை வருடியபடி அமர்ந்திருந்தான். காலிங் பெல் சத்தம் கேட்டு ஆரவ் கதவை திறந்ததும் பதறி சிதறிக்கொண்டு உள்ளே வந்த ஷர்மா அங்கிள், “என்ன ஆச்சுடா அவளுக்கு? நான் உன்ன ஜாக்கிரதையா பாத்துக்கோன்னு சொல்லித்தான அனுப்பினேன். என்னடா நீ….” என திட்டிக்கொண்டே அவளை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

 

“திடீர்ன்னு மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு பாத்துட்டேன், ப்ரயோஜனமே இல்ல அங்கிள். பயந்தான்னா வழக்கமா ஆரவ் ஆரவ்னு சொல்லுவா, ஆனா இன்னிக்கி மயக்கத்தில அடிக்கடி அம்மா அம்மான்னே உளறிட்டு இருக்கா.”

 

“எப்டி மயங்கினா? அடி பட்டுச்சா? இல்ல தடுக்கி விழுந்துட்டாளா?”

 

“அதுவா…. அதுவந்து…. அவ… நான்… அவள…” ஆரவ்விற்கு வார்த்தை வரவில்லை.

 

“சொல்லுடா….” அவர் வார்த்தைகள் கோபமாக வரவே, “அது வந்து நான் சும்மா கிஸ் பண்ணேன், பயந்து மயங்கிட்டா” என்றான்.

 

அவன் தலையில் நங்கென கொட்டி, “இவ்ளோதானா, நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். ஏன்டா என் பொண்ண இப்டி பயமுறுத்துர?”

 

அவனும் விதண்டாவாதமாய், “நான் என்ன அடிச்சேனா கடிச்சேனா? ஆசப்பட்டு பாசமா ஒரு கிஸ் குடுத்தேன், அதுக்கே பயந்து மயங்கிட்டா. இப்டியா உங்க பொண்ண பயந்தாங் கொள்ளியா வளப்பீங்க? இப்படி இருந்தா நான் எப்டி குடும்பம் நடத்துறதாம்?”

 

“ஹா… ஹா… உனக்கு அப்டி என்ன அவசரம்? அவளுக்கு உடம்பு சரி ஆனதும் தாராளமா குடும்பம் நடத்து, யாரு வேண்டாம்னா? மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சாறு மாசம்தான இப்டி இருக்க போறா. அதுவரைக்கும் எந்த சேட்டையும் பண்ணாம உன் வால சுருட்டி வச்சிட்டு, அவள கொஞ்சம் குழந்தைமாதிரி பாத்துக்கோ. ”

 

“ஏற்கனவே இங்க வண்டி அப்டித்தான் போய்கிட்டு இருக்கு, இதுல நீங்க வேற தனியா சொல்லனுமாக்கும்.” ஒரு சின்ன இடைவெளி விட்டு, “ஏன் அங்கிள், நான் ஏதாச்சும் செஞ்சா என்ன ஆகும்?”

 

“பாவம்டா இப்போ இருக்குற ஹெல்த் கன்டிஷன்ல அவளோட உடம்புக்கே அவ எனர்ஜி பத்தாது, இதுல குழந்தைய எப்டி தாங்குவா? ஒரு குழந்தைய சுமக்கனும்னா அது நார்மலா இருக்குற பொண்ணுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் தெரியுமா…” என்றதும் அவன் சோகமாய் தலையை குனிந்து கொண்டான்.

 

அவளையே கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டிருந்த ஷர்மா அங்கிள் செக்கப் முடித்த பின், “ஆரவ், இப்போதைக்கு பெருசா பிரச்சினை இல்லன்னுதான் நினைக்கிறேன். எனக்கென்னமோ அவ இருக்குற கன்டிஷன பாத்தா பார்பிக்கு பழசெல்லாம் நியாபகம் வரபோகுதுன்னு தோணுது. எதுக்கும் நாம இப்ப அவள எழுப்ப வேணாம், எவ்ளோ நேரம் தூங்குறாளோ தூங்கி எந்திரிக்கட்டும். நானும் இங்கயே இருக்கவா இல்ல போகவா?”

 

“நீங்க போங்க அங்கிள், மணி பதினொண்ணு ஆக போகுது, ஆன்ட்டி வேற அங்க தனியா இருப்பாங்க. நாங்க நைட் சாப்பிடல, இங்க ஜூஸ தவிர வேற எதும் இல்ல. அதனால நான் இவள என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவளுக்கு எழுந்ததும் எதாச்சும் சாப்பிட குடுக்கனும்” என்று சொல்லி கொண்டே அவளை தன் கைகளில் ஏந்தினான். நள்ளிரவில் இருவரும் தத்தமது வீட்டிற்கு போய் சேர்ந்தனர்.

 

மணி மூன்றை நெருங்கி இருந்த நேரம், பார்பி கண்களை திறக்க முயன்று முடியாமல், ‘அம்மா… அம்மா…’ என முணங்கினாள். அவளை தன் கையால் சுற்றி வளைத்து உறங்கி கொண்டிருந்த ஆரவ் அவளசைவினால் கண் விழித்து, “ஹேய் செல்லம் முழிச்சுட்டயா, பழசு எதாவது நியாபகம் வருதாடா?” என்றான்.

 

“ம்… கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருது…” என்றவள் இன்னும் சரியாக கண் திறக்க முடியாது தவித்ததில், தலைவலியும் உடன் சேர்ந்து கொள்ள தலையை இறுக பிடித்து கொண்டாள். அவள் நிலையை புரிந்து கொண்டு ஆரவ், எழுந்துபோய் பிளாஸ்க்கில் தயாராக இருந்த காபியை எடுத்து கொண்டு வந்து தந்தான். கொஞ்சம் குடித்ததும் அவள் நிதானமாக,

 

“உன்னோட நிஜ பேரு என்னன்னு ஞாபகம் வருதா?”

 

“சந்தனா”

 

“ஊரு”

 

“கோயம்புத்தூர் கிட்ட நெல்லித்துரை கிராமம்”

 

“தாத்தா பாட்டி பேரு, அம்மா அப்பா தம்பி தங்கச்சிங்க பேரு….”

 

“தாத்தா பேரு அமுதன், பாட்டி பாரிஜாதம், அப்பா பேரு கணேசன் அம்மா ரேவதி, அண்ணன் சந்தோஷ். எங்களோடது கூட்டு குடும்பம் அப்பாவோட தம்பி முருகன் சித்தப்பாவும், நந்தினி அத்தையும் குடும்பத்தோட எங்களோடதான் இருக்காங்க. எனக்கு வீட்டுக்கு போய் எல்லாரையும் பாக்கனும் ஆரவ், எப்ப கூட்டிட்டு போவீங்க? ”

 

“இப்ப வேணாம்டா. கொஞ்ச நாள் ஆகட்டும் நாம சேர்ந்தே போகலாம்.”

 

“ஏன்? எனக்கு இப்பவே என் வீட்டுக்கு போகனும். இங்க இருக்கவே பிடிக்கல ஆரவ், உங்க தங்கச்சி இன்னிக்கி என்னை ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க. நான் இதுக்கு மேல இங்க இருக்க மாட்டேன், நீங்க என்னை கூட்டிட்டு போகலன்னா பரவாயில்லை நானே போய்க்கிறேன்…”

 

“இப்போதைக்கு நமக்கு நிறைய பிரச்சன இருக்கு குட்டிம்மா, நீ வெளியில இருக்குறது உனக்கு சேப் இல்ல. சொன்னா கேளு எனக்கு ஒரு மூணு மாசம் டைம் குடு, எல்லாத்தையும் சரி பண்ணிட்டு உங்க வீட்டுக்கு நாம சேர்ந்தே போகலாம்.”

 

“முடியாது, நீங்க ஏமாத்தி என்னை இங்க இருக்க வைக்கிறதுக்காக பொய் சொல்றீங்க. நான் போறேன்” என படுக்கையை விட்டு எழுந்திரித்த பின்புதான் அவள் தான் இருக்கும் அந்த அறையையே கவனித்தாள். அறை என்று சொல்வதைவிட அதை ஒரு குட்டி மஹால் என்றே சொல்லுமளவிற்கு ஒரு மகாராஜாவின் அறையை போல மிகப் பெரிதாக இருந்தது.

 

அவள் இதுநேரம் படுத்திருந்த மேகங்கள் போன்றிருந்த அந்த பெரிய மெத்தை கிட்டதட்ட ஏழுபேர் ஒரே நேரத்தில் தூங்கும் அளவிற்கு சதுர வடிவில் நீண்டு அகன்று இருந்தது. பெட்டின் இடது புறம் ஒரு மினி சுவாமி செல்ப், ஒரு டைனிங் டேபிளும் அதையடுத்து ஒரு கதவும் இருக்க, வலதுபுறம் ஒரு கதவும் அதனை ஒட்டி ஒரு பெரிய டிரஸ்ஸிங் டேபிளும், ஒரு பெரிய கபோர்ட்டும் இருந்தது. டிரஸ்ஸிங் டேபிளுக்கு நேர் மேலே அவன் அம்மா போட்டோ, அது அவள் வரைந்ததுதான். கபோர்டை அடுத்து சிறிய ஜன்னலும், அதோடு சேர்ந்த ஒரு சிறிய ஒற்றை படுக்கையும் இருந்தது. பெரிய பெட்டிற்கு நேர் எதிரில் பெரிய ஸோபா ஸெட் அதில் ஒன்று சாய்ந்து நீண்டு படுக்கும் வசதியுடன் இருக்க அவற்றின் முன்னால் பெரிய டிவியும் அதற்கு கீழே ஒரு மினி பிரிட்ஜ்ம் இருந்தது. அவற்றின் வலதுபுறம் ஒரு வாஷ் பேஷனும் அதை ஒட்டி இன்னொரு கதவும் இருந்தது. ஆங்காங்கே அலங்கார பொருட்களுடன் இருந்த அந்த பிரம்மாண்ட அறையை மாற்றி கட்டினால் இரண்டு டிரிபிள் பெட்ரூம் கொண்ட வீட்டையே கட்டிவிடலாம்.

 

“என்ன பார்பி என்னோட ரூம் உனக்கு பிடிச்சிருக்கா?” என்றதும் அவள் சுயநினைவடைந்து, “எது வெளியில போற டோர்” என்றாள்.

 

ஆரவ், “லெப்ட் ஸைடு இருக்குறது மெயின் டோர், ரைட் ஸைடு இருக்குறது பால்கனி டோர், ஸ்ட்ரெய்ட்டா இருக்குறது பாத்ரூம் டோர். இந்த கபோர்ட்ல ஏற்கனவே உன்னோட டிரஸ்ஸ எல்லாம் கொண்டு வந்து வச்சிட்டேன், வேணும்னா டிரஸ் மாத்திக்கோ.”

 

இப்போதுதான் அவள் தான் அணிந்திருந்தையே கவனித்தாள். அங்கிருந்து நிரந்தரமாக போகவே தான் ஆரவ் தந்ததெல்லாம் தவிர்த்து, வஜ்ரா வாங்கி தந்திருந்த பொருட்களையும், சுடிதாரையும் அணிந்து வந்தது நியாபகம் வர, கூடவே ஆரவ்வின் முத்தமும் அதற்கு முன்னால் அவன் சொன்னதும் நினைவிற்கு வந்தது. உடனே அவனிடம், “ஆரவ் நீங்க பொய்தான சொன்னீங்க” என்றாள்.

 

“இல்லடா நெஜமாவே உன் டிரஸ் எல்லாம் இங்கதான் இருக்கு”

 

“இது இல்ல, அது…”

 

“எது”

 

“அது, அந்த வீட்ல இருக்கும் போது நீங்க சொன்னது”

 

அவனுக்கு புரிந்தாலும் வேண்டுமென்று அவளருகில் சென்று தலைசாய்த்து ஆசையாய், “அங்க நிறைய சொன்னேன், எப்போனு சொல்லு, அப்பத்தான எனக்கு தெரியும்” என்றான்.

 

வெட்கம் பிடிங்கி திங்க அவன் முகத்தை காண முடியாமல் திரும்பி நின்றவள், ஊறலெடுக்கும் உதடுகளை அழுத்தி துடைத்து விட்டு, “ஏதோ… ஏற்கனவே முடிச்சிட்டேன்னு…. சொன்னீங்கள்ள… அது பொய்தான? என்னை ஏமாத்ததான…. அப்டி சொன்னீங்க?” என்றாள்.

 

ஆரவ் மீண்டும் அவள் முன்னால் வந்து நின்று, அவளின் பால்வண்ண முகத்தை கையில் ஏந்தி, “சாரிடா…” என்றான். அவன் சொன்னது உண்மை என புரிய தீயிலிட்ட புழுவாய் துடித்து போனவள், பலம் கொண்ட மட்டும் அவனை தள்ளிவிட இரண்டடி பின்னால் போய் தடுமாறி நின்றவனை பார்த்து கதறி அழத்தொடங்கினாள்.

 

“நான் உங்கள நம்பினேன் ஆரவ். வேற யாரும் என்னை நெருங்காம பாத்துக்க நினைச்ச உங்கள அளவுக்கதிகமா நம்பினேன். கடவுளுக்கு சமம்மா நினைச்சேன், ஆனா நான் உங்களுக்கு பலி ஆடுன்னு என் அறிவுக்கு இப்பத்தான் புரியுது. ”

 

“உணர்ச்சி வசப்பட்டு உளறாதடா. பொறுமையா யோசிச்சு பார்த்தீனா நான் உன்ன எவ்ளோ விரும்புறேன்னு உனக்கே புரியும்.”

 

அவள் பொறுமையைத்தான் ஒரு நிமிடம் முன்னாலேயே இழந்துவிட்டாளே. “போதும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.” என அவள் கதவை நெருங்க, ‘அதுக்கு நான் விட்டாத்தான’ என அவன் அவள் கையை பிடித்து இழுக்க, அவள் மீண்டும் அவனை தள்ளிவிட முயற்சிக்க, திமிறியவளை அவன் தன் ஒற்றை கையால் பின்னாலிருந்து அணைத்து தூக்கி கைக்குள் அடக்கிவிட்டான். ஆரவ் மீதமிருந்த தன் மற்றொரு கையால் அவள் கன்னத்தை வருடியபடி, “நீ குழந்தையவிட மோசம்டா, எத்தன தடவ சொன்னாலும் சொன்ன பேச்சு கேக்கவே மாட்டிக்கிற” என கோலமிட அதை இழுத்து நறுக்கென்று கடித்துவிட்டாள்.

 

“அம்மா….” வென கத்திவிட்டு கடிபட்ட விரலை உதறி ஊதி வலியை குறைக்கும் நேரத்தில் அவள் துள்ளி இறங்கி கதவை இழுத்து திறக்க முயன்று முடியாமல் போகவே கதவை உடைப்பதை போல டம்… டம்… என்று தட்டினாள்.

 

“டேய் செல்லம், கை வலிக்க போகுது, நிறுத்து, நான் சொல்றத கேளு” என்று ஆரவ் கத்தியதை அவள் காதிலேயே வாங்கவில்லை. அவன் பேசுவதை நிறுத்திவிட்டு தன் அருகில் வருவதை பார்த்ததும், படு பயங்கரமாக கதவை தட்டி, “யாராவது வாங்க, சாரதா அம்மா, பிரியங்கா அண்ணி ப்ளீஸ் யாராவது வாங்க” என்றாள்.

 

அவனோ வேகவேகமாக வந்து கதவினை வலுவான உரமேறிய தன் கைகளால் ஓங்கி ஓங்கி அடித்து, “ஆ… ஊ… சூ… பூச்சாண்டி…” என லூசு மாதிரி கத்தினான். அவள் கதவை தட்டுவதையும், தன் அழுகையையும் நிறுத்திவிட்டு அவனை கவனிக்க அவனோ ஸ்டைலாக அந்த கதவில் சாய்ந்து நின்று, “சவுண்ட் ப்ரூப் டோர்” என்றான். அவன் சொல்வது சரிதான், அவளுடைய எலியின் கீச்சினை போன்ற சத்தத்தை விட, நூறு மடங்கு பெரிதான அவனது சிங்கத்தின் கர்ஜனை போன்ற சத்தம் அவள் காதை பிளக்கும் அளவு இருந்தும் கூட, எதிர் திசையில் எவரும் வரவில்லை என அவளுக்கு புரிந்தது. அதனையடுத்து பால்கனி கதவினை தேடி ஓடி அதை திறக்க முயற்சித்து, அதிலும் தோற்க இனி இதை நம்பி பிரயோஜனமில்லை என விழி பிதுங்கி நின்றவளை அவன் பாவமாக பார்த்தான்.

 

அவன் அவளை சமாதான படுத்த அவளிடம் நெருங்கி வருவதை அவள் தவறாக புரிந்து கொண்டு பயந்து ஓட தொடங்கினாள். “ஓடாதடா நில்லு, நான் உன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன், நான் உன்கூட பேசனும்டா…” என எவ்வளவோ சொல்லியும் அவள் பின்னாலேயே நடந்துவரும் அவன் கைகளில் சிக்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தாள்.

 

பத்து நிமிட கபடி ஆட்டத்திற்கு பிறகு ஆரவ் ஓரிடத்தில் நின்று, “பார்பி விளையாடினது போதும் நில்லு, இதுக்கு மேல ஓடுறது உன் உடம்புக்கு நல்லதில்ல”

 

“ஏன் உங்க உடம்புக்கு ஒண்ணும் ஆகாதா….”

 

“உனக்கு அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஓடினா மூச்சுவாங்கும், ஆனா என்னால ஒரு மணி நேரம் முழுக்க மூச்சுவாங்காம ஓட முடியும். இப்ப நான் மூணு சொல்றதுக்குள்ள நீயே என்கிட்ட வந்திடு, இல்ல நானே உன்ன புடிச்சிடுவேன்” என்று சொல்லியும் கேட்காமல் பெரிய பெட்டின் கீழே ஒளிவிடம் தேடி ஓடுபவளை ஆரவ் பெட்டின் மேல் ஏறி வந்து தாவி குதித்து பிடித்தான். மாட்டி கொண்டவளை தூக்கி ஜன்னல் அருகிலிருந்த சிறிய ஒற்றை பெட்டில் படுக்க போட்டு, அவளருகே அமர்ந்து கைகளை பிடித்துக்கொள்ள சில நிமிட துள்ளலுக்கு பிறகு எதுவும் முடியாமல் அமைதியானாள்.

 

ஆரவ் தன் கண்கள் மூடியபடி அவளருகில் குனிந்து, மூக்கோடு மூக்குரசியபடி, “நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன், நீ சரின்னு சொல்லனும். வில் யூ மேரி மீ, ப்ளீஸ்டா” அவளிடமிருந்து பதிலில்லாமல் போக தன் கண்களை திறந்து பார்த்தான், அவள் இன்னும் கண்கள் திறக்காமலேயே இருந்ததால், ஆரவ் அவள் கைகளை விடுதலை செய்ய, அவள் ஜன்னலின் பக்கமாக திரும்பி சுருண்டு படுத்து கொண்டாள்.

 

ஆரவ் அவள் தோள்மேல் சரிந்து விழுந்து காதோரம், “நான் சீரியஸ்ஸா கேக்குறேன் செல்லம், நெக்ஸ்ட் வீக் சிம்ப்பிளா மேரேஜ் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். நெக்ஸ்ட் டூ மன்த்ஸ் எனக்கு எந்த மேச்சும் கிடையாது. நான் உன்ன தனியாவிட்டு எங்கயும் போக மாட்டேன், கூடவே இருந்து பத்திரமா பாத்துக்குறேன். கொஞ்ச நாள் கழிச்சு பிரச்சனை முடிஞ்சதும் உங்க வீட்ல நான் வந்து பேசுறேன், அதுக்கு பிறகு கிராண்டா கல்யாணம் பண்ணுவோம். சரியா”

 

“முடியாது, நீங்க என்னை கொலையே செஞ்சாலும் நான் கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டேன்….”

 

“ம்ச்ச்ச்…. என்ன பேசுற பார்பி? நிலமைய புரிஞ்சுக்கோடா, எத்தன தடவ சொல்றது? உனக்கு உடம்பு சரி இல்ல, இது போக மனிஷ் அண்ணனுக்கு உன்ன பத்தி இப்பதைக்கு தெரியாம இருக்குறதுதான் நல்லது. இப்டி காரணமில்லாம முரண்டு பண்ணாதடா.”

 

“நான் ப்ராமிஸ் பண்ணிருக்கேன் ஆரவ். எனக்கு அலைன்ஸ் பார்க்க ஆரம்பிக்க முன்னாடி என்னோட ஜாதகத்த என் தாத்தா எடுத்துட்டு போய், எங்க குடும்ப ஜோசியர்கிட்ட ஒரு தடவ தனியா காமிச்சாரு. அந்த ஜோசியர் நான் காதல் கல்யாணம் தான் பண்ணுவேன், அதுவும் வீட்ட விட்டு ஓடி போயிடுவேன்னு சொன்னாராம். அதை என் தாத்தாவும் பாட்டியும் யாருகிட்டயும் சொல்லாம மறைச்சிட்டாங்க. ஆனா அவங்க அத நினைச்சு தினம் தினம் ரொம்பவே கவலைபட்டு அழுதிட்டு இருந்திருக்காங்க. நாளாக நாளாக நிம்மதி இல்லாம சரியா சாப்பிடுறதே இல்ல, ஒருநாள் பாட்டியும் தாத்தாவும் தனியா இருக்கும்போது நான் அவங்ககிட்ட பேசினேன், அப்போதான் எனக்கே இது தெரியும். எனக்கு என் தாத்தா பாட்டினா உயிரு, அவங்க கவலைபடுறத என்னால பாக்க முடியல, அவங்கள சமாதான படுத்த நான், ‘எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது என் தாத்தா பாத்து வைக்கிற மாப்பிள்ள கூடதான் நடக்கும். என் பாட்டி எடுத்து குடுக்குற தாலியதான் நான் கட்டிக்குவேன். இது என் பாட்டி மேல சத்தியம்’னு, குல தெய்வம் முன்னாடி பாட்டி தலைல சத்தியம் செஞ்சிட்டேன். அவங்ககிட்ட, ‘நீங்க உங்களுக்கு பிடிச்ச பையன பார்த்து வைங்க, நான் வந்து கழுத்த நீட்டுறேன்’னு சொன்னேன், அதுக்கு பிறகு தான் பழைய மாதிரி சந்தோஷமா ஆனாங்க. என் மேல இருந்த நம்பிக்கைலதான் மாப்பிளை கிடைச்ச பிறகும், கல்யாணத்த நான் படிச்சு முடிச்சதும் வச்சுக்கலாம்னு காத்திருந்தாங்க. இப்ப அவங்க முன்னால போய் நிக்க இஷ்டமும் இல்ல, செஞ்சு குடுத்த சத்தியத்த மீறுர தைரியமுமில்ல. உங்க வீட்டுலயும் என்னை யாருக்கும் பிடிக்கல, என்னால எல்லாருக்கும் கஷ்டம். என்னை சுட்ட அன்னிக்கே நான் செத்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காதுல்ல.”

 

“ஏய்… நான் உயிரோட இருக்குறதே உன் உயிர பத்திரமா பாத்துக்கத்தான். எனக்கு உன் நிலமை புரியுதுடா, பட் நம்ம கல்யாணம் நடந்தே ஆகனும். லீகலா நீ எனக்கு மனைவி ஆனாத்தான் என்னால அடுத்து உனக்கு தேவையான சில விஷயங்கள செய்ய முடியும்.”

 

“முடியாது, எனக்கு என் குடும்பத்த விட வேற எதுவும் முக்கியமில்ல. நீங்க என்னை என்ன செஞ்சாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ”

 

ஆரவ் எழுந்து போய் சுவாமி செல்ப்பில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு வந்தான், “இந்த கல்யாணம், தாலி எல்லாம் நான் லீகல் பார்மாலிட்டிஸ்க்காக பண்றதுதான், மத்தபடி எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. நீ மனைவியா என் மனசுக்குள்ள வந்து ரொம்ப நாள் ஆச்சுடா. உனக்கு உன்னோட குடும்பம் எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு நீ எனக்கு முக்கியம். எனக்கும் உனக்கும் இடைஞ்சலா உன் குடும்பம் இருக்கும்னா அதை என்ன வேணாலும் செய்ய தயங்க மாட்டேன். இது நான் உனக்கு பண்ற சத்தியம் செல்லம்…” என்றபடி எடுத்து வந்திருந்த குங்குமத்தை அவள் நெற்றியின் உச்சியில் வைத்துவிட்டான்.

 

கண்ணே கனியே,

உன்னை கைவிடமாட்டேன்…

சத்தியம் சத்தியம்,

இது சத்தியமே…

மாலை சூடிய,

காலை கதிரின் மேலே…

சத்தியம் சத்தியம்,

இது சத்தியமே…

 

ஒரு குழந்தை போலே!

ஒரு வைரம் போலே!

தூய்மையான,

என் சத்தியம் புனிதமானது!!!

 

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை

சிந்தையிலும் தொடேன்!!!

பிறிதோர் பக்கம் மனம் சாயா

பிரியம் காப்பேன்!!!

 

செல்ல கொலுசின்,

சிணுங்கல் அறிந்து,

சேவை செய்வேன்!!!

நெற்றி பொட்டில்,

முத்தம் பதித்து,

நித்தம் எழுவேன்!!!

 

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்!!!

ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்!!!

Leave a Reply

%d bloggers like this: