Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 6

அத்தியாயம் – 6

ஞ்சலிக்கு விழிப்பு தட்டியபோது தலையெல்லாம் கனத்தது. மெலிதாகக் கண்ணைத் திறந்தாள் வெளிச்சத்துக்குக் கூசிய கண்கள் பின்னர் இயல்புக்கு வந்தது. தலை விண்னென்று வலியால் தெறித்தது. கைகளால் தொட்டுப் பார்த்தபோது தலையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டிருந்ததை உணர்ந்தாள்.

 

“அஞ்சலி, இப்ப நான் எங்கிருக்கேன்னு வழக்கமா கேக்குற கேள்வியைக் கேளு”

 

“ஜெய்  ஏன் என் ரூமில் உக்காந்திருக்க?” என்றவள் படுக்கையில் அமர முயன்றாள்.

 

“குட்… உன் ரூம், என் பெயர் எல்லாம் நினைவிருக்கே. சோ, தலைல பட்ட அடியால்  மூளைக்கு ஒரு சேதாரமும் இல்லை”

 

“நேத்து அந்தத் திருடனப் பிடிச்சாச்சா…”

 

உதட்டைப் பிதுக்கினான் “தப்பிச்சுட்டான்”

 

“ச்சே…” அலுத்துக் கொண்டவள் தான் இரவு உடையில் இருப்பதைப் பார்த்து தூக்கி வாரிப் போட நிமிர்ந்தாள்.

 

“நான் எப்படி நைட் ட்ரெஸ்ஸில். …” சந்தேகக் கண்ணோடு அவனைப் பார்த்தாள்.

 

கூறும்போது சிரித்தவாறு சொன்னான் “யூ க்நோ… எனக்கு சேவை மனப்பான்மை அதிகம்தான். அதனாலேயே உன் உடையை  மாத்த நான் உதவி செய்றேன்னு கூட சொன்னேன். ஆனாலும் மாயா என் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிட்டு அவளேதான் மாத்திவிட்டா. ஜஸ்ட் மிஸ்…” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

 

நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அஞ்சலி. அவள் எழுந்து அமர முயற்சி செய்ததைக் கண்டு

 

“தலைல அடிபட்டிருக்கு. நீ ஒரு வாரமாவது நல்லா ஓய்வெடுக்கணும். அப்பத்தான் உன் மண்டைல இருக்கும் கிராக் எல்லாம் சரியாகும்”

 

யோசனையில் ஆழ்ந்தாள்

 

“என் வீட்டுக்கு ஏன் திருடன் வரணும். நீயே பார்க்குறேல்ல இங்க விலையுர்ந்த  பொருள் எதுவுமே இல்லை. கட்டில், மேஜை, டிவி, பிரிட்ஜ் இதைத் திருட எதுக்கு இவ்வளவு பெரிய ரிஸ்க்?” குழப்பத்தோடு அவனிடம் கேட்டாள்.

 

“முதலில் சாப்பாடு எதுவும் கொண்டு வரட்டுமா. அன்னைக்கு நான் சமைச்ச ப்ரேக்பாஸ்ட்டிலேயே அய்யாவோட கைவண்ணம் தெரிஞ்சிருக்குமே”

 

“நான்தான் அதைக் கீழே கொட்டிட்டேனே”

 

கண்ணை சுருக்கி செல்லமாக முறைத்தவண்ணம் “நான் கஷ்டப்பட்டு சமைச்சத்தைக் கீழே கொட்டிட்டியா.அதுக்கு தண்டனை தரணுமே” என்றவனின் பார்வை சென்ற திசையைக் கண்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

 

“தண்டனை என்னண்ணா… உடம்பு சரியாகுற வரை உனக்கு என் சமையல்தான்” என்றான்.

 

அஞ்சலி அவனது விளையாட்டை ரசிக்க இயலாவண்ணம் சோர்வு அவளை தாக்கியது “எனக்கு சாப்பாடு கூட வேண்டாம். தலை வலிக்குது”

 

போர்வையை அவளுக்குப் போர்த்தியவன் “கொஞ்ச நேரம் தூங்கு அஞ்சலி. நான் வேணும்னா தாலாட்டு பாடட்டுமா”

 

“தாலாட்டா… நீ நல்லா பாடுவியா”

 

“ம்ம்… பொணத்தைக் கூட எந்திரிச்சு உட்கார வைக்கும் சக்தி என் தாலாட்டுக்கு உண்டுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. வேணும்னா ஆரம்பிக்கட்டுமா… ”

 

“ஐயோ.. இதைக் கேட்டும் பாட சொல்லுவேன்னு நினைக்கும் உன் தன்னம்பிக்கையைப் பாராட்டுறேன். ஆனாலும் இப்போதைக்கு அந்த ரிஸ்க் எடுக்க மூட் இல்லாததால… நான் கொஞ்சம் தூங்குறேன். லைட்டை நிறுத்திட்டு வெளிய போ… “

 

“நல்ல மரியாதை” அலுத்துக் கொண்டே சென்றவனை புன்னகையுடன் பார்த்தபடியே உறங்கினாள்.

 

அடுத்த சில நாட்களில் அஞ்சலியின்  உடல்நிலை தேறியது. போலீஸில் திருட்டு முயற்சி தொடர்பாக புகாரளித்திருந்தார்கள். இருந்தாலும் ஒரு துப்பு கூடக் கிடைக்கவில்லை. ஜெய் அஞ்சலி இருவராலும் அவர்களைத் தாக்கியவனைப் பற்றிய அடையாளம் சொல்ல முடியவில்லை. மின் வெட்டு சமயமாதலால் அவன் ஏறிச்சென்ற வண்டியின் எண்ணை யாரும் பார்க்கவில்லை. நிறம் கூட சரியாக சொல்ல இயலவில்லை. இருந்தாலும் அவள் வீடு இருந்த பகுதியில் அவ்வப்போது ரோந்து வந்து காவல் அதிகமானது போல ஸீன் போட்டார்கள்.

உடல் நடக்கும் அளவுக்குத் தேறியதும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் காலாற நடந்துவிட்டுத் திரும்பியவள் உள்ளே நுழையும்போதே ஜெய்யின் காலணியைக் கண்டாள்.

 

“நிஜம்மாவே இந்தப் பகுதியில் காவல் அதிகமாயிருக்கா ஜெய். நேத்து ஒரு திருட்டைத் தடுத்திருக்காங்க போலிருக்கு. இவ்வளவு நல்லவங்களா நம்ம போலீஸ்காரங்க”

 

“என் நண்பன் ஒருத்தன் தனியார் செக்கியூரிட்டி நடத்திட்டு வர்றான். அவன்கிட்ட கொஞ்ச நாளுக்கு உன் வீட்டைப் பாதுகாக்க கான்டராக்ட் கொடுத்திருக்கேன்”

 

“ என் ஹோட்டல் சமையலறையை பாதுகாக்கவும் அவங்களைக் கூப்பிடு. அத்துமீறி நுழையுறவங்க ஜாஸ்தியாயிட்டாங்க”.

 

“அதுக்கு நானே போதுமே… லைஃப் டைம் கான்டராக்ட்”

வீடு முழுவதும் பெட்டிகள் திறந்து கிடப்பதைக் கண்டவன் “என்ன இது” என்றான்.

 

“அன்னைக்கு திருடன் எதை எடுத்துட்டுப் போனான்னு தெரியல. அதனால மாயா பெட்டி எல்லாத்தையும் வீடு பூரா பரப்பி  செக் பண்றேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா”

 

“நல்லதுதானே… நானும் ஹெல்ப் பண்றேன்” என்று அஞ்சலியின்  உதவியோடு எல்லாவற்றையும் அலசினான்.

 

ஒரு மணி நேரம் கழித்து “யாராயிருக்கும்னு ஊகிச்சுருக்கேன்” என்றான் தீவிரத்துடன்.

 

“யாரு ஜெய்?” ஆர்வமாகக் கேட்டாள்.

 

“கைல ஒத்தை காசு கூட இல்லாத ஒரு கும்பல், அழகு சாதனங்கள் விக்க ஆசைப்பட்டிருக்கு. அதுக்குத் தேவையான மூலப் பொருட்களை எடுக்க மாயா ரூம்ல திருட வந்திருக்கணும்.  ஆனால் அன்னைக்கு கரண்ட் கட்டானத்தில் தவறிப் போய் உன் ரூமில் நுழைஞ்சுட்டாங்க. ரஸ்க்கு சாப்பிட ரிஸ்க் எடுத்தவன் கண்ணில் நாய் பொறை பட்ட மாதிரி உன் குட்டி மேக்கப் செட் படவும் காண்டாயிட்டாங்க…” என்று அவன் யோசித்து சொன்ன காரணம் கூட சரியாக இருக்கிறார்போலத்தான் தெரிகிறது.

 

சோஃபாவிலிருந்து பெட்டியை நகர்த்தி அவள் உட்கார இடம் செய்தான்.

 

“உன் ஊகம் சகிக்கல ஜெய்…  பால்கனி சேர்ல காத்தாட  உக்காரு. நானும்  வந்துட்டேன்”

 

ஐந்து நிமிடத்தில் இருவருக்கும் டீயும், மாரி பிஸ்கட்டுகளையும் எடுத்து வந்தாள்.

 

பால்கனியின் சேர் ஒன்றில் ஆல்பம் இருப்பதைப் பார்த்தவன் “இதென்ன ஆல்பம்… நான் பார்க்க அனுமதி உண்டா”

 

“பச்… ஒண்ணும் ஸ்பெஷல்னு இல்லை.  நானும் அப்பாவும் கடைசியா போன ட்ரெக்கிங் ட்ரிப் போது எடுத்த போட்டோ”

 

“எங்க போனிங்க”

 

“நாகலாபுரம். சென்னைக்குப் பக்கத்தில் இருக்கு. குட்டி ஆறு, இயற்கை கொஞ்சும் காட்சிகள்னு அழகா இருக்கும். எனக்கும் அப்பாவுக்கும் ரொம்பப்  பிடிச்ச இடம்”

 

அவன் ஒவ்வொரு போட்டோவையும் கவனமாகப் பார்த்தான். நடுவே அவளிடம் திரும்பி

“அழகான இடம்… என்னை இங்க கூட்டிட்டுப் போறியா” என்றான்.

 

“ஏற்கனவே எங்கப்பா திடீர் திடீர்னு கண்ணு முன்னாடி நிக்கிறார். இங்க போனா அவ்வளவுதான்…” என்று அலுத்துக் கொண்டபடியே காலி டீ கப்புகளை சமையலறைக்கு எடுத்து சென்றாள்.

 

“அஞ்சலி இந்த போட்டோவைப் பாரு…. “ என்று அவளை அவசர அவசரமாக அழைத்தான் ஜெய்.

 

அவனது குரலில் தெரிந்த பரபரப்பு தொற்றிக் கொள்ள பால்கனிக்கு விரைந்தாள் அஞ்சலி.

3 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: