Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 5

அத்தியாயம் – 5

 

ந்த வாரக் கடைசியில்  பெங்களூரின் பிரசித்தி பெற்ற டிராஃபிக் ஜாமில் சிக்கிக் கொண்டனர் ஜெய்யும் அஞ்சலியும்.

 

“நீ இவ்வளவு சீக்கிரம் என் கூட வெளிய வருவன்னு நினைக்கவேயில்லை” அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னான்.

 

“அதே மாதிரி இவ்வளவு சீக்கிரம் தொரத்திவிடுவேன்னும் நினைக்க மாட்ட” என்றாள்  அதே நக்கலுடன்.

 

“உன் கூட இருக்கும்போது நேரம் போறதே தெரியல” என்று சொன்னாலும் அவனது கண்கள் எல்லா பக்கமும் ஜாக்கிரதையாக பார்த்தபடியே இருந்தது. மிகக் கவனமாய் வண்டி ஓட்டினான்.

 

“ரூட்டைப்  பார்த்தா லால்பாக் மாதிரி தெரியலையே”

 

“இந்த டிராபிக்ல லால்பாக் போக முடியாது அதுக்கு பதில் வேற இடத்துக்குப் போகலாம். என்கூட தனியா வர பயம்மாயிருந்தா சொல்லிடு”

 

“ஹலோ மிஸ்டர்… சந்தானம் அங்கிள் ஜிபிஎஸ்ல என்னை டிராக் பண்ணிட்டே உட்காந்திருப்பார். வண்டி மட்டும் லால்பாக் ரூட்டைத் தாண்டி வேற எங்காவது போணுச்சு…  உடனே போலீஸைக்  கூப்பிட்டுடுவார்”

 

“இதுக்குத்தான் என் பேங்க் பாஸ் புக், வீட்டு சாவி எல்லாத்தையும் அடமானமா வச்சுட்டு உன்னை அனுப்பினாரா”

 

சந்தானத்துக்கு அவனைப் பிடித்தும் இருந்தது. அதே சமயத்தில் அஞ்சலியைஅவனுடன் தனியே அனுப்பத் தயக்கம் கூட. அதனால்தான் முடிந்த அளவு இடையூறு செய்தே அனுப்பினார்.

 

“என்னை பத்திரமா திருப்பி ஒப்படைச்சுட்டு உங்க பொருள்களை எல்லாம் வாங்கிக்கோங்க” அசால்ட்டாய் சொன்னவள் அப்பொழுதுதான் லால்பாக் செல்வதாக தானும் எண்ணிக் கொண்டு இவனுடன் வந்ததை உணர்ந்தாள்.

 

“லால்பாக் போலையா… வேற எங்க போறோம்”

 

“ஹே… தோஸ்த்தி….  “ என்று முணுமுணுத்தவன்

“இந்தப் பாட்டை அமிதாப்பும் தர்மேந்திராவும் அந்த இடத்தில்தான் பாடிட்டே பைக்கை ஓட்டிட்டு வந்தாங்க.

 

ஷோலே புகழ் ராம்நகர்தான் நம்ம போகப் போகும் இடம்”

 

கண்கள் ஆச்சிரியத்தில் விரிய “அது மௌன்டென் ஹைக்கிங் பிளேஸ் தானே”

 

“எஸ்”

 

“நான் ட்ரெக்கிங் தேவையானது எதுவும் எடுத்துட்டு வரலையே”

 

“இன்னைக்கு மேலோட்டமா சுத்திப் பாத்துட்டு வந்துடுவோம். அடுத்ததடவை வரும்போது எடுத்துட்டு வரலாம்”

 

“நோ அடுத்த தடவை எடுத்துட்டு வருவேன். நீ என் கூட வரபோறது இன்னைக்குத்தான் கடைசி”

 

“அதையும் பார்க்கலாம்”

 

பெங்களூருவிலிருந்து இரண்டு மணி நேரடி தொலைவிலிருந்த ராம்நகரை எப்படிக் கண்டுபிடித்து ரமேஷ் சிப்பி படம் எடுத்தாரோ  தெரியவில்லை. இயற்கை அழகு கொஞ்சும் அந்த இடத்தை அடைய ஹைவேசிலிருந்து கிராமத்துக்கும், படப்பிடிப்பு நடந்த இடங்களுக்கும்  ரோடு போட்டதாய் சொன்னான். படப்பிடிப்பாக தொலைபேசி லைன்கள் போடப்பட்டதையும், தேவையான உள்கட்டமைப்பினை அந்த கிராமத்து மக்களுக்கு செய்ததையும் சொன்னான்.

 

பாறைகள் நிறைந்த இடத்துக்கு வந்தபோது அந்த இயற்கை அழகில் தன்னையே மறந்தாள் அஞ்சலி.

 

“இந்த இடத்தில்தான் கோவில், தண்ணி தொட்டி மேல தண்ணியடிச்சுட்டு தர்மேந்தரா கலாட்டா பண்ணுவாரே அது இங்கதான்” ஒவ்வொரு இடத்தையும் விளக்கினான்

 

“நீ எப்ப கைடா மாறின?”

 

“நீ இன்னைக்கு வர சம்மதிச்சதிலிருந்து….

 

அப்பறம் இந்த இடத்திலதான் மெஹபூபா மெஹபூபா சாங் ஷூட் பண்ணிருக்கணும்னு நினைக்கிறேன்”

 

“அது என்னது நினைக்கிறேன்… நீ எங்க பாட்டு சிச்சுவேஷனை பாத்திருக்கப் போற”

 

“கள்ளி… ஆனால் இப்ப சொல்லப் போற ஸீன்  நூறு சதவிகிதம் உண்மை…

 

இங்கதான் தர்மேந்திரா ஹேமமாலினிக்கு ஷூட்  பண்ண கத்துத் தந்தாராம். அந்த சமயம் ஹேமமாலினி மேல அவருக்கு லவ்வோ லவ்வாம். அதனால அந்த சீனை வேணும்னே சொதப்பி டேக் மேல டேக் வாங்குனாராம்…

 

அப்பறம் அந்த காதல்ஜோடிகள் கல்யாண ஜோடியானது இந்தியத் திரையுலகமே பாத்துச்சு”

 

ஆர்வமாய் கேட்டான் “உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா இல்லை நான் கத்துத் தரட்டுமா… “

 

“அதை கப்பார் சிங் கிட்ட கத்துக்க விரும்பல”

 

“நான் ஹீரோம்மா ஏன் என்னை மறுபடி மறுபடி வில்லனாக்கப் பாக்குற”

 

மெலிதாய் தூறல் ஆரம்பிக்க பொருட்படுத்தாது இருவரும் குளிர்பானத்தை அருந்தியபடி அங்கிருந்த பாறையில் அமர்ந்தார்கள்.

 

“சில இடங்களில் பாறை ஏத்தமாவே இருக்கு. கவனமா நடக்கணும். ட்ரெக்கிங் ஷூ இருந்தால் நல்லாருக்கும். இல்லைன்னா வழுக்கிவிட வாய்ப்பு அதிகம்”

 

“ட்ரெக்கிங் பிடிக்குமா உனக்கு”

 

“ரொம்ப… எங்கப்பா கூட அடிக்கடி போவேன். “ பெருமூச்சு விட்டாள்

 

“உன்னைப் பத்தி சொல்லு ஜெய். உன் சொந்த ஊர் என்ன? இங்க என்ன பண்ற?”

 

“என் சொந்த ஊர் சேலம். அப்பா பேரு  விநாயகமூர்த்தி. தியேட்டர் வச்சிருக்கோம். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. நான் படிச்சுட்டு பெங்களூர்ல வேலை பார்க்குறேன்”

 

“இப்பத்தான் சில மாசமா உன்னை பார்க்கிறேன். இதுக்கு முன்னாடி எங்கிருந்த”

 

“ஆன்சைட் போயிருந்தேன். எங்க வேலைல இது அடிக்கடி நடக்கும். சரி உன்னைப் பத்தி சொல்லு”

 

“நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பிறந்தவுடனே அம்மா இறந்துட்டாங்க…. “

 

சொல்லிக்கொண்டே இருந்தவளின் பார்வை அதிர்ச்சியோடு ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது.

 

“அப்பா… அப்பா.. “ என்று கத்திக் கொண்டே எழுந்தவளது கால் தடுக்கி உருண்டு விழப் போனாள். அதிர்ச்சியுடன் ஓடி வந்த ஜெய் தன் பலத்தை எல்லாம் திரட்டி அவளைத் தடுத்தான்.

 

“அங்க எங்கப்பா நின்னுட்டிருந்தார். இப்ப காணோம்…அப்பா அப்பா.. “ அதிர்ச்சியுடன் பாறைகளுக்கு நடுவே இருந்த பகுதியை சுட்டிக் காட்டினாள்.

 

அவளை அமரவைத்துவிட்டு அந்தப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்று தலையாட்டினான் ஜெய். ஆனால் வேறு யாராவது அங்கு நின்றிந்தாலும் கூட அவன் கவனம் கீழே விழுந்தவளிடமிருக்கும் பொழுது மனதில் பதிந்திருக்காது.

 

“உங்கப்பா மாதிரி யாரைவாது பார்த்திருப்ப. உனக்கு சந்தேகமாயிருந்தா அவருக்கு  போன் பண்ணிக் கேளு”

 

“எங்கப்பா இறந்து ஒண்ணரை வருஷமாச்சு” என்றாள் மரத்த குரலில்.

 

“என்ன சொல்ற” அதிர்ச்சியுடன் கேட்டான்.

 

கண்களில் கண்ணீர் வழிய தந்தையின் நினைவில் தேம்பினாள் “ அவரை ஒருத்தன் சுட்டுக் கொன்னுட்டான் ஜெய்… எங்கப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா… யாரையும் திட்டி அடிச்சுக் கூடப் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவரை அந்தப் பாவி கொன்னதுக்கான காரணத்தை இன்னை வரைக்கும் என்னால ஜீரணிக்க முடியல.

எங்கப்பாவை  அடக்கம் பண்ணப்ப நானும் கூட இருந்தேன். என் கையால மண்ணெடுத்து போட்டேன்… “ அந்தக் கைகளைக் கொண்டு முகத்தில் அறைந்துக் கொண்டவள், அந்த சூழ்நிலையை நினைத்து தாங்க மாட்டாமல் தேம்பினாள்.

 

அஞ்சலியைக்  கூர்மையுடன் கவனித்து வந்தவனின் கண்களில் இளக்கம்.

அவளருகில் அமர்ந்து  தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

 

“ஐ அம் சாரி. நீ தயக்கத்தால் விலகி இருக்கன்னு நினைச்சேன். அதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய சோகம் மறைஞ்சு இருக்கும்னு தெரியாம போயிடுச்சு”

 

அமைதியாய் அந்தப் பாறைப் பகுதியை வெறித்தாள்.

 

“உங்கப்பாவை ரொம்ப மிஸ் பண்ற அஞ்சலி… அதனாலதான் பாக்குற இடத்தில எல்லாம் அவர் நிக்குற மாதிரியே ஒரு பிரமை”

 

பிரமையா இருந்தாலும் இன்னொரு தரம் தந்தையைப் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் அவளது விழிகளில்

 

“இல்ல ஜெய்… ரெண்டு மூணு  நாள் முன்னாடி கூட ஹோட்டல் வாசலில்  ராத்திரி அவரைப் பார்த்தேன்” பதற்றத்துடன் சொன்னாள்.

 

“அந்த இருட்டில் அதே மாதிரி சாயல்ல யாரும் இருந்திருக்கலாம்”

 

“என்ன உளறுற… தூரத்தில் என்னையும் மாயாவையும் பாக்குற… உனக்கு வித்யாசம் தெரியாதா”

 

“கண்டிப்பா தெரியும். உன்னோட ஒவ்வொரு மேனரிஸமும் எனக்கு அத்துப்படி. சில சமயம் நீ அடுத்து என்ன செய்யப்போறேன்னு கூட என்னால ஊகிக்க முடியும்”

 

“சில மாசம் மட்டுமே அறிமுகமான என்னோட மேனரிசம் எல்லாம் உனக்கு அத்துப்படின்னு நம்புற. ஆனால் என்னோட ஒவ்வொரு நிமிஷமும் வாழ்ந்த எங்கப்பாவை என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றது எத்தனை பெரிய முரண்பாடு”

 

“என் வார்த்தைகளை வாபஸ் வாங்கிக்கிறேன். நீ சொல்றது மட்டும் உண்மையா இருந்தா மறைஞ்ச  ஒருத்தரை வச்சு விளையாடக் கொடூர மனம் கொண்டவங்களால்தான் முடியும். ஆனால் சிலர் அந்த மாதிரி இருக்குறதை மறுக்க முடியாது..”

 

“நிஜம்மா அன்னைக்கு அப்பா அந்த மழைல நனைஞ்சுட்டே   நின்னுட்டிருந்தார். அப்பகூட அவர் கண்ணு என் மேலதான் இருந்தது. என்னையே பார்த்துட்டு இருந்தார். இதெல்லாம் கற்பனை இல்லை… நான் பைத்தியமும் இல்லை… என்னை யாராவது நம்புங்களேன்” கைகளால் முகத்தை மூடி விசும்பியவளின்  தலையைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

 

“நம்புறேன்… கண்டிப்பா நம்புறேன்… இப்ப இருட்டிடுச்சு வீட்டுக்குக் கிளம்பலாமா?”

 

இருவரும் கிளம்பினார்கள். வரும்போது இன்னையோட உன்னைத் தலைமுழுகிடுறேன் என்று சூளுரைத்து வந்தவளது கரங்கள் ஏதிலிருந்தோ தப்பிப்பது போல் தனது கரங்களை இறுக்கப் பற்றியிருப்பதையும் அவள் முகத்தில் இருந்த கலக்கத்தையும் கண்ட ஜெய் மனதில் சொல்லிக் கொண்டான்

 

‘அஞ்சலி உன் மனசிலிருக்கும் கலக்கத்தை போக்குறதுக்காகத்தான் நான் உன் வாழ்க்கையில் வந்திருக்கேன். அதை கண்டிப்பா நிறைவேத்துவேன்’

 

அஞ்சலியின்   வீட்டை நெருங்கிய பொழுது அந்தப் பகுதியே இருண்டிருந்தது.

 

“பவர் கட்” அலுத்துக் கொண்டான் ஜெய்.

 

“தெருவிளக்கு எரியுது. எங்க வீட்டுப் பக்கத்தில் கொஞ்சம் வெளிச்சமிருக்கும்”

 

ஆனால் அவள் வீட்டருகேயிருந்த தெரு விளக்கு கூட ஓய்வில் இருந்தது.

 

“ஏன்  இவ்வளவு இருட்டாருக்கு” சொல்லியவண்ணம் கீழே பார்த்தவள் நடைபாதை விளக்கு உடைந்து கீழே சிதறியிருப்பதைக் கண்டு.

 

“லைட்டு பியூஸாகிருச்சு. ஜெய் டார்ச் எதுவும் இருந்தா எடுத்துட்டு வாங்களேன். வீட்டுக்குள்ள எமர்ஜென்சி லைட் இருக்கு எடுக்கணும்” என்றவள் உதட்டில் கை  வைத்து ‘உஷ்’ என்றான் ஜெய்.

 

அவளது முகத்தைத் திருப்பி அவளது வீட்டின் மாடியைச் சுட்டிக் காட்டினான். அங்கே சிறிய டார்ச் வெளிச்சம் அங்கும் இங்கும் அலைந்தது.

 

“அது உன் ரூமா…” ரகசியமாய் கேட்டான் ஜெய்.

 

“ம்… திருடனா” என்றாள் பதட்டக் குரலில்.

 

“எஸ்… பால்கனி கதவு திறந்திருக்கு போலிருக்கே” இருட்டிலும் அவனது பார்வைக் கூர்மையை மெச்சாமல் இருக்க முடியவில்லை அவளால்.

 

 

“நீ இங்கயே சேஃப்பா இரு… நான் போயி பார்க்குறேன்” அவளை அங்கே நிறுத்திவிட்டு விறுவிறுவென்று காம்பவுண்ட் அருகிலிருந்த மரத்தில் ஏறி சத்தம் எழுப்பாமல் பால்கனியில் குதித்தான். பூனை போல அடியெடுத்து  திறந்திருந்த கதவை நெருங்கினான். மின்னல் வேகத்தில் திருடனை நெருங்கி கிடுக்கிப்பிடி போட்டான். எதிர்பாராத தாக்குதலால் தடுமாறிய அவனும் நல்ல ஆஜானுபாகுவாகவே இருந்தான். ஜெய்யை உதறித்தள்ளியவன் வேகமாக பால்கனி வழியாக இரண்டு ஜம்புகளில் கீழே குதித்தான்.

 

“திருடன் திருடன்” என்று கத்தியபடியே அவனைப் பிடிக்கப் போனாள் அஞ்சலி. அக்கம் பக்கம் நடந்து சென்றவர்களும், டூ வீலர் காரர்களும் எங்கே என்று குரல் கொடுத்தவாறு அஞ்சலியின் வீட்டை நெருங்கினர்.

 

அதற்குள் அவளை நெருங்கியிருந்த அந்தத் திருடன் ஓங்கி ஒரு அறை விட, ஐந்தடி தள்ளி விழுந்து எதிலோ இடித்து ‘அஞ்சலி, அஞ்சலி’ என்ற ஜெய்யின் பதற்றக் குரலைக் கேட்டபடியே மயங்கினாள்.

 

மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் திருடனை பிக் அப் செய்து கொண்டு அங்கிருந்தவர்கள் கண்களில் மண்ணைத் தூவி இருளில் மறைந்தது.

 

9 Comments »

  1. Appa our valiya mathura vida site la unga stories vanthiruku.thanks pa.story semmaya poguthu. Romancea ilina ithu thriller story a.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: