Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 32

பாகம் – 32

மும்பை நகர மக்கள் அனைவரும் அங்கே ஆர்வத்தோடு குழுமி இருக்க, வண்ண வண்ண நிறங்களில் ஆடை அணிந்திருந்த நடிகர், நடிகைகளின் ஆட்டமும் பாட்டமும் வரிசையாக நிகழ்ந்தேற, விண்ணை தொடும் வாழ்த்தொலியோடு கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல். வரிசையாக நின்ற எட்டு அணியின் கேப்டன்களிடமும் நிருபர் ஒருவர் சில கேள்விகள் கேட்டு கொண்டு வர, ஆரவ் முறை வந்ததும், அவன் குரலே கேட்காத அளவிற்கு ‘ஆரவ்.. ஆரவ்..’ என ஆசையாக கத்திய ரசிகர்கள் குரலே அங்கே பெரிதாய் இருந்தது. அடுத்து எட்டு அணியின் கேப்டன்களும் ஒருவர் பின் ஒருவராக கிரவுண்ட்டை வலம் வர ஆரம்பித்ததும், மக்கள் மத்தியில் மற்றவர்களை புறந்தள்ளி ஆரவ் பெயரே ஓங்கி ஒலித்ததை கண்டு பார்பியின் மகிழ்ச்சி ஸ்கார்ப்பையும் தாண்டி கொண்டு வெளியே தெரிந்தது.

 

ஆரவ்வோ ‘வரவர நான் என்ன பண்றேன்னு எனக்கே புரியல. நேத்துல இருந்து என் கண்ணுக்கு உன்ன தவிர வேற ஒண்ணும் தெரிய மாட்டிங்குது. இப்பவும் பாரு எனக்கே தெரியாம நான் உன்னை தேடிட்டு இருக்கேன். இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்? அன்பே அன்பே’ என பாடலை முணுமுணுத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். விஐபி பிரிவில் நிதிஷ்ஷுடன் இருந்த பார்பியை கண்டதுமே சுற்றி இருக்கும் ரசிகர்களை மறந்து விட்டு அவளை பார்த்து அவன் கை அசைத்து ஹாய் சொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் அவன் தனக்கே சொன்னதாக நினைத்து உற்சாக கூச்சலிட்டனர்.

 

அன்றைய நாள் இறுதியாக மும்பை சென்னை அணிகளுக்கான போட்டி நாளை மாலை இங்கே நடைபெறும் என்ற அறிவிப்போடு பங்ஷன் இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்கள் அனைவரும் கலைந்து செல்ல நாளைய போட்டிக்கான ப்ளேயர்ஸூம் சில செலபிரிட்டிஸூம் அங்கேயே இருந்தனர். ரசிகர்கள் அனைவரும் போன பிறகு நிதிஷ் பார்பியை ஆரவ்விடம் அழைத்து செல்லும் போது, திடீரென ஒருத்தி முன்னால் வந்து நின்று வழியை மறைத்தாள்.

 

“ஹாய், ஐ ஏம் தீபாலி, பாலிவுட் ஆக்டரஸ். உன்கூட கொஞ்சம் தனியா பேசனும், உன்னோட ஸ்கார்ப்ப கழட்டுறியா”

 

நிதிஷ் இருவருக்கும் இடையில் வந்து, “ஸாரி மேம், யாரும் இவங்க கூட அப்பாயின்மெண்ட் இல்லாம பேச முடியாது.”

 

தீபாலி, “ஓ… அவ்ளோ பெரிய விஐபியா… அட்லீஸ்ட் இவங்க பேரு என்னனாவது நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றவளின் குரலில் கேலி தொணித்தது.

 

நிதிஷ், “அவங்க நேம் பார்பி”

 

தீபாலியோ வேண்டா வெறுப்பாக, “இதுதான் இவங்க ஒரிஜினல் நேம்மா? என்ன பேரு இது?” என்றாள் முகம் சுழித்து.

 

நிதிஷ் “இது அவங்களோட பெட் நேம், ஒரிஜினல் நேம் யாருக்கும் சொல்ல கூடாதுன்றது ஆரவ் சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.”

 

பார்பி அவர்களிடையே திருதிருவென முழித்து கொண்டு நடப்பது எதுவுமே புரியாமல் நிற்க, எங்கிருந்தோ ஓடிவந்த ஆரவ் பார்பியை இழுத்து தன் பின்னால் ஒளித்து கொண்டான். “இங்க என்ன பண்ற தீபாலி. ஐ அல்ரெடி டோல்டு யூ, டோன்ட் டிஸ்டர்ப் மீ” என்றதும் அவள் கோபமாக, “இவ முகத்த நான் பாக்கனும். இது யார்னு எனக்கு தெரிஞ்சாகனும்” என்றாள்.

 

தனக்கு பின்னால் இருந்தவளை இழுத்து தன் மார்போடு சேர்த்தணைத்து கொண்ட ஆரவ், “என்னை நம்பி என்கூட வந்திருக்கிறவ, போதுமா?”

 

அவன் முகத்தில் இருந்த கடுமை, விட்டால் தன்னை அறைந்து விடுவான் போல் இருக்க, “ஆல் த பெஸ்ட் மிஸ்டர் ஆரவ், குட் பை” என கோபத்தோடு சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள் தீபாலி.

 

ஆரவ், “நிதிஷ் எங்க லக்கேஜ் ஹோட்டலுக்கு போயிடுச்சா?”

 

நிதிஷ், “ஈவ்னிங்கே போயிடுச்சு சார். நம்ம கார்கூட என்ட்ரன்ஸ்ல ரெடியா இருக்கு. நீங்க சரின்னு சொன்னா இப்பவே கிளம்பிடலாம்.”

 

ஆரவ், “சரி நாங்க கிளம்புறோம். வா பார்பி”

 

அணியினருக்காக ஒதுக்கி இருந்த நட்சத்திர ஹோட்டலை நோக்கி கார் பயணிக்க தொடங்க, பார்பியோ ‘அது யாருன்னு இவன்ட்ட கேட்கனும்… ஆனா இப்ப ரொம்ப கோவமா இருக்கானே… கேட்டா திட்டுவானோ? அந்த பொண்ணு நேத்து சினிமால பாத்த நடிகை மாதிரியே இருந்தாங்க, அவங்க ஏன் என்கிட்ட இவ்ளோ கோபமா பேசிட்டு போறாங்க? நாம வீட்ல தங்காம ஏன் இன்னிக்கில இருந்தே ஹோட்டலுக்கு போறோம்?’ என்று இல்லாத மூளையை கசக்கி யோசித்து கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

 

இதற்குள் ஹோட்டல் வந்துவிட இருவரும் விஐபி என்ட்ரன்ஸ் வழியே உள்ளே நுழைந்தனர். ஆரவ் இப்போதும் தனக்கு அடுத்த அறையையே அவளுக்கு புக் செய்திருந்தான். ஆனாலும் தற்சமயம் தன் அறைக்கே அவளையும் அழைத்து சென்றான். உள்ளே நுழைந்ததும் இருவருக்குமென ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு சோபாவின் மேல் சாய்வாக அமர்ந்தான். இன்னமும் குழப்பத்தோடு தன்னை ஓரப்பார்வை பார்த்து கொண்டு வரும் அந்த மைவிழி அழகினை திகட்ட திகட்ட அனுபவித்து முடித்துவிட்டு சாவகாசமாக, “என்கிட்ட ஏதாவது கேக்கனுமாடா?” என்றான்.

 

இந்த கேள்விக்காகவே இத்தனை நேரம் காத்திருந்தவள் போல, “யாரு அந்த பொண்ணு?” தெரித்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

“அவங்க ஒரு ஆக்ட்ரஸ்டா”

 

“அது தெரியும். அவங்க கூட உங்களுக்கு எப்டி பழக்கம்?”

 

“சும்மா பழக்கம், அவ்ளோதான்டா”

 

“எனக்கு புரியுர மாதிரி சொல்லுங்க ஆரவ்…” கைகளை கட்டிக்கொண்டு கண்களை சுருக்கி அவள் கேட்க,

 

‘ஓகோ… மேடம் ரொம்ப கோபமா இருக்காங்களா… அப்போ உனக்கு நான் வேற பொண்ணுகிட்ட பேசினா கோபம் வருது… இதுதான எனக்கும் வேணும்.’

 

ஆரவ், “இங்க வா, வந்து உக்காரு….” தன் அருகிலேயே அமர்த்தி, “இப்போ சொல்லு உனக்கு தீபாலிய பத்தி என்ன தெரியனும்?”

 

“நான் பாத்தேன்… அவங்க முதல்ல உங்ககிட்ட பேசிட்டு இருந்தாங்க, நீங்க என்னவோ சொன்னதும் ரொம்ப டென்ஷனா ஆயிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்கள காணும்… லாஸ்ட் மினிட்ல திடீர்ன்னு என்கிட்ட பேச கோபமா வந்தாங்க, ஆனா நீங்களும் நிதிஷ்ம் அவங்கள பேச விடாம அனுப்பிட்டீங்க. எனக்கு இப்போ நீங்க முதல்ல இருந்து என்ன நடந்துச்சுனு சொல்லுங்க…” என மூக்கு முந்திரி பழமாக சிவக்க பேசி முடித்தவளை, அவன் மெய் மறந்து முழுங்கும் பார்வையோடு பார்த்திருந்தான்.

 

“சொல்லுங்க ஆரவ்….” என்ற பிறகு அவன் சுதாரித்து,

 

“தீபாலி என்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணா”

 

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

 

“எனக்கு இஷ்டமில்லனு சொன்னேன்.”

 

“அதுக்கு ஏன் என்னை முறைக்கிறாங்க?”

 

“உன்ன என்னோட லவ்வர்னு நினைச்சிருப்பா”

 

பார்பி எந்தவித உள்நோக்கமுமின்றி வெள்ளை மனதிலிருந்து கேட்டாள், “ஓ… ஏன் ஆரவ், அவங்க அழகா இருக்காங்க, உங்கள மாதிரியே பெரிய செலபிரிட்டி, ரொம்ப புத்திசாலியும் கூட… அப்புறம் ஏன் அவங்கள உங்களுக்கு பிடிக்கல?”

 

“அவ என்ன விரும்பலடா, என் வேலைய தான் விரும்புறா. தவிர எனக்கு அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் காதலியா வேண்டாம், ஒரு சாதாரணமான பொண்ணுதான் வேணும். என் கூடவே இருக்கனும்… எனக்காக ஒவ்வொரு விஷயமும் பாத்து பாத்து செய்யனும்… என் முன்னாடி எப்பவும் சிரிச்ச முகமா இருக்கனும்… அப்பப்போ செல்ல சண்டை போடனும்… ஷார்ட்டா சொன்னா உன்ன மாதிரி இருக்கனும் அவ்ளோதான்.”

 

“இது தப்பில்லையா? பொண்ணுங்க உங்களவிட புத்திசாலியா இருந்தா, ஏதாவது சாதிச்சா ஏன் புடிக்கல?”

 

“நான் அப்டி சொல்லல. எனக்கு எது தேவையோ அத சொன்னேன். இதுவரைக்கும் நான் தனியாவே இருந்துட்டேனா. என்கூடவே இருக்குற மாதிரி பொண்ணா இருந்தா எனக்கு நல்லா இருக்கும். நான் ப்ரீயா இருக்கும்போது அவ பிஸியா இருந்தா நான் என்ன செய்ய? என் காதலி பெருசா சாதிக்க எல்லாம் தேவை இல்ல, மக்கு பொண்ணா இருந்தாலும் போதும், அவளுக்கும் சேத்து நான் என் புத்திய யூஸ் பண்ணிக்குவேன்”என்றான். அவன் தன்னை குறிப்பிட்டு பேசுவது கூட தெரியாமல், அந்த மக்கு அவனை பாராட்டி கைதட்டி ஈஈஈஈ என இளித்து கொண்டிருந்தது.

 

இருவரும் இரவு உணவை உண்டு முடித்ததும் அவள் தன்னறைக்கு உறங்க செல்ல, பெட்டில் விழுந்தவன் லேப்டாப்பில் வழக்கமாக பார்க்கும் அவள் முகம் இன்று இல்லாமல் தவித்து போனான். எத்தனை முறை புரண்டு படுத்தாலும் அவனால் அவள் அருகாமை இல்லாமல் தூங்க முடியவில்லை. போனில் இருந்த போட்டோக்களையும் ஏற்கனவே பெர்சனல் லேப்டாப்பில் ஏற்றி விட்டிருந்ததால் அதிலிருந்த காலியான வெறும் போல்டர் அவனை பார்த்து சிரித்தது. அவளை பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்ந்தபிறகுதான் அவள் எவ்வளவு தூரம் தன்னை பாதித்திருக்கிறாள் என ஆரவ்விற்கு புரிந்தது. நீளும் இரவு விரைவில் முடியாமலும், உறக்கமும் வராமல் அவள் நினைவுகள் பாடாய் படுத்தியது. மனம் அவளை தேடி ஏங்கிட நள்ளிரவை தாண்டிய பிறகே அவன் உறங்கியதால் அடுத்த நாள் காலையில் தாமதமாகவே எழுந்தான். எழுந்ததும் நேராக அவளை தேடி செல்ல, அவளோ தன்னறை கதவை திறந்து வைத்துக்கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் கோபமாக நடந்து கொண்டிருந்தாள்.

 

நகம் கடித்து கொண்டு நடைபயிலும் அழகை பார்க்கும்படி சோபாவினில் வாகாக படுத்து கொண்டான் ஆரவ். ஐந்து நிமிடத்திற்கு பின் ஒரு பெரிய கொட்டாவியை தொடர்ந்து, “என்னடா ஆச்சு? ஏன் இவ்ளோ கோபமா இருக்க?” என்றான்.

 

“ஒண்ணுமில்ல”

 

“என்னன்னு சொன்னாதான நான் ஏதாச்சும் செய்ய முடியும்.”

 

அவளோ பதில் சொல்லாமல் யோசனையோடு நடந்து கொண்டே இருக்க, அவளின் மௌனமும் ஆயுதமாகி தன்னை கொல்லும் என்று அவனுக்கு இன்று புரிந்தது.

 

அவனது நிலை அறியாதவளோ அங்கே உள்ளுக்குள் எரிமலையாய் பொருமி கொண்டிருந்தாள், ‘இந்த யஷ்மித்துக்கு எவ்ளோ தைரியம்? நான் அவனவிட்டு விலகி போனாலும் மறுபடி மறுபடி தேடி வந்து என்கிட்ட வம்பிழுக்குறான். என்னை பாத்து சண்டை போட தைரியமில்லாத அழு மூஞ்சினு சொல்லிட்டான்ல. இன்னிக்கி நான் பண்ற விஷயத்தால இனிமே என்கிட்ட அவன் வாலாட்டவே கூடாது.’

 

அவள் அறைக்கு ஓடி வந்த ரிஷி அவளிடம் ஒரு போனை கொடுத்தான். உடனே படபடவென அதிலிருந்த கான்டாக்ட் எல்லாம் டெலிட் செய்தாள், சில பல போட்டோக்களை தன் மொபைலுக்கு ஏற்றினாள். இன்டர்நெட் ஹிஸ்ட்ரியையும் தன் போனில் போட்டோ எடுத்துக்கொண்டு அதை ரிஷியிடம் திருப்பி கொடுத்தாள்.

 

ரிஷி, “பார்பி பாவம்… வேண்டாமே… விட்ருவோமே…” என்றதற்கு முறைப்புடன் “உங்களுக்காகதான் இவ்ளோ கம்மியா செஞ்சிருக்கேன்” என்றாள்.

 

ஆரவ் “என்ன ஆச்சு?”

 

பார்பி, “சாரி ஆரவ் உங்ககிட்ட சொல்ல கூடாதுனு என்கிட்ட பெட் கட்டி இருக்காங்க” என்றாள் தலை குனிந்தபடி.

 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா என்ன? அவள் முக பாவங்களே அவனுக்கு யார் என்ன செய்திருப்பார் என புரிந்து போக, தான் என்ன செய்தால் அவளுக்கு மகிழ்ச்சி தரும் என்றும் தெரிந்தவனாதலால் தற்சமயம் ஆரவ் அமைதியாக இருந்தான்.

 

குளித்து முடித்து ஆசையாக போனை எடுத்து பார்த்த யஷ்மித், ‘அடிப்பாவி… என்னவிட பெரிய கேடியா இருப்பா போல. என்ன திருப்பி அடிச்சிருந்தாலும் பரவாயில்ல, இப்டி கான்டாக்ட், வாட்ஸ் அப் எல்லாம் டெலிட் பண்ணிட்டாளே…. இப்ப நான் எது எவளோட நம்பர்னு தெரியாம எப்டி சாட் பண்றது…’ என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். பின்னே அவனுக்கு ரெண்டு மூன்று கேர்ள் பிரன்ட்ஸ் இருந்திருந்தால் பரவாயில்லை, இருபது முப்பது கேர்ள் பிரன்ட்ஸ் கூடல்லவா கடலை போட்டிருக்கிறான், சிலரிடம் அதற்கும் மேலேயே போயிருக்கான். அதன்பின் வந்த பிரேக்பாஸ்ட், லஞ்ச், பிராக்டீஸ் என அனைத்திலும் பார்பி யஷ்மித் கண்களில் படாமல் சுற்ற ஆரவ்விடம் கேட்க பயந்து இதை இத்தோடு விட்டுவிட்டான் அவன்.

 

அன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பர்ஸ்ட் பேட்டிங் எடுக்க மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய யஷ்மித்தை வேண்டுமென்றே ஆரவ் சுற்றி வளைத்து ஆட்களை நிறுத்தினான். ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் யஷ்மித் திணர, ஆரவ் பீல்டிங்கில் மேலும் சில மாற்றங்களை செய்து காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் யஷ்மித் 2 ரன்களிலேயே ஆரவ் கைகளால் அவுட் ஆனான். மும்பை அணியின் பேட்ஸ்மேன் ஆதலால் இந்த அவுட்டை எதிர் பாராத, ஸ்டேடியம் முழுதும் நிறம்பி இருந்த மும்பை ரசிகர்கள் அமைதியாக இருக்க, ஆரவ் உணர்ச்சி பெருக்கோடு ‘யெஸ்…’ என ஆக்ரோஷமாக ஸ்டேடியம் முழுதும் கேட்கும்படி கத்தினான். ரிஷி, மற்ற ப்ளேயர்ஸ், ரசிகர்கள் என அனைவரும் அவன் முகத்தில் இருந்த குரூரத்தால் மிரண்டு போயினர். காரணம் என்னவென்றால் இதுவரை ஆரவ் கிரிக்கெட் விளையாடும் நேரத்தில் எங்கேயும் எப்போதும் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டியதே இல்லை.

 

ஆரவ் வழக்கமாக நான்காவது பேட்ஸ்மேனாக இறங்குபவன், இன்று செகன்ட் பேட்டிங்கில் ஓப்பனிங்கிலேயே இறங்கி 103 ரன்கள் எடுத்து சென்னை டீம்மை அட்டகாசமாக வெற்றி பெற வைத்தான். ஆட்ட நாயகன் விருதும் பெற்றான். ஹோட்டலுக்கு வந்த பிறகு பார்பி யஷ்மித் அவுட் ஆனதை பற்றி பேசி வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற, தன்னை நேரடியாக அடித்தால் பொறுத்துக்கொள்ளும் யஷ்மித் சதி செய்து அவுட் ஆக்கியதில் இப்போது அடிபட்ட புலியானான். தன் முதல் ஐபிஎல் மேச் இத்தனை கேவலமாய் ஆனதால், அதற்கு அவள்தான் காரணம் என்ற அதீத கோபத்தோடு, அடுத்து அவள் தன்னிடம் மாட்டும் தருணத்திற்காக காத்திருந்தான்.

 

அதிர்ஷ்டம் யஷ்மித் பக்கம் இருக்க, சென்னை ஸ்டேடியம் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக மூட பட்டது. அங்கு நடைபெற இருந்த மேச் எல்லாம் மற்ற இடங்களுக்கு மாற்றப்பட யஷ்மித்தை ஆரவ்வும் பார்பியும் மீண்டும் டெல்லியில் சந்திக்க நேர்ந்தது. சென்னை vs பஞ்சாப் முதல் மேச்சாகவும், மும்பை vs டெல்லி இரண்டாவது மேச்சாகவும் அங்கே நடக்க இருந்தது. குரு டெல்லி அணியிலும், வஜ்ரா பஞ்சாப் அணியிலும் இருந்ததால் அனைவரும் இன்று ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்தது.

 

இன்று காலையிலேயே ப்ராக்டீஸ் ஆரம்பிக்க இருப்பதால் நான்கு அணியினரும் கிரவுண்டுக்கு வந்து சேர்ந்தனர். யஷ்மித்தும் பிரித்வியும் கூடிகூடி பேசிக்கொண்டு வர, பிராக்டீஸ் ஆரம்பித்த சில நிமிடங்களில் பிரித்வி ஆரவ்விடம் தானாகவே வந்து, “ஆரவ்ஜி நான் உங்களுக்கு பவுலிங் போடட்டுமா?” என்றான். தூரத்தில் போனில் கேம்ஸ் விளையாடும் பார்பியை ஒருமுறை பார்த்துவிட்டு, “சரி போடு” என்று ஆட ஆரம்பித்தான்.

 

ஆட்டம் சூடு பிடிக்க ஆரவ் அதில் மூழ்கிய நேரம், ரிஷி சத்தமில்லாமல் பார்பி பின்னால் வந்து, அவள் போனை வெடுக்கென்று பிடுங்கி, “ரிஷி சொன்னான், இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, இதுல என்னோட போன் ஹிஸ்ட்ரி வரைக்கும் நீ போட்டோ எடுத்து வச்சிருக்கன்னு, ஆரவ் என் மேல ரொம்ப கோவமா இருக்கான்னு, இன்னும் என்னென்னவோ சொன்னான். ஆனா அடுத்தவங்க சொல்றத நான் கேக்கனுமா என்ன?” என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து கொண்டு மூன்றாவது தளத்திற்கு ஓட, அவளோ போனை பறிகொடுத்த கோபத்தில் யோசிக்காமல் அவன் பின்னாடியே ஓடி வந்தாள். மொட்டை மாடியாக இருந்த அந்த இடத்தில் அவன் அவளுக்காகவே உறுமும் புலியாக காத்திருந்தான். அவள் வந்ததும், “வா.. பார்பி.. வா.. பரவாயில்ல நீ பயந்துகிட்டு வராம போயிடுவன்னு நினைச்சேன். நான் விரிச்ச வலையில இப்டி தனியா வசம்மா வந்து மாட்டிக்கிட்டயே”

 

“நான் ஏன் பயப்படனும்? நீதான் பயப்படனும் யஷ்மித். கீழ ஆரவ், ரிஷி, வஜ்ரா, குரு எல்லாரும் இருக்காங்க. என்கிட்ட எதாச்சும் வம்பு பண்ணா அதுக்கப்புறம் உன்ன சும்மா விட மாட்டாங்க தெரியும்ல.”

 

“ஐயோ… பயம்மா இருக்குது… சிக்கினா என்னை தூக்குல போட்ருவானுங்க இல்ல… ஹா.. ஹா..”

 

“என் போனை குடு யஷ்மித் நான் போகனும்”

 

“என்னோட பர்ஸ்ட் ஐபிஎல் மேச்ச நான் எவ்ளோ ஆசையா எதிர் பாத்துட்டு இருந்தேன் தெரியுமா? ஆரவ்கிட்ட என்னை போட்டு குடுத்து, வேணும்னே அந்த மேச்ச ஒண்ணுமில்லாம செஞ்சிட்டு, இப்ப உனக்கு போன் வேணுமா… இந்தா புடி” என அவன் தூக்கி போட்டான்.

 

“நான் எதுவும் ஆரவ்ட்ட சொல்லல” என சொல்லிக்கொண்டே அதை சரியாக கேச் பிடித்தவள், ‘என்னதிது போன் மாதிரியே இல்லையே. வழுவழுனு இருக்கு’ என நன்றாக அதை பார்த்தபின், “ஆ…. ஆ… பாம்பு… ஆரவ்… ஆரவ்” என கத்திக்கொண்டே கண்களை மூடிக்கொண்டு துள்ள, கால் இடறி மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தாள்.

 

2 Comments »

Leave a Reply

%d bloggers like this: